வண்ணநிலவனின் தந்தைகள் எப்போதுமே பிரியத்திற்குரியவர்கள். பெண் பிள்ளைகளுக்கான அவர்களின் வாஞ்சை ஒளி பொருந்தியது. தாவணி அணிந்த மகளைக் கல்லூரி விடுதிக்கு அழைத்துப்போய், மனம் கலங்கி விட்டுவிட்டு வரும்போதும், கல்யாணம் செய்துவைக்கத் தெம்பில்லாத தந்தையைவிட்டு, விருப்பமானவனுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போகும் மகளுக்கு, பேருந்து நிலையத்தில்தான் இன்னும் இருப்பாள் என்று தான் விருப்பமாய் வாங்கி வந்த காதணிகளை மகனிடம் கொடுத்துவிடும் தந்தை… என அவரின் தந்தை மனத்தின் அபூர்வ அன்பைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். பெண் குழந்தைகளின் மீதான கூடுதல் பிரியமென்றோ, வழமையான அன்பென்றோ வண்ணநிலவனின் தந்தையன்பைக் கடந்து போய்விட முடியாது. பெண்மையை ஆராதித்த ஆதித் தந்தைமையின் தூய்மையை அந்த அன்பிற்குள் பார்க்கலாம்.
Series: வண்ணநிலவன் நாவல்கள் பற்றி
வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து- பாகம் -2
சூழல் உண்டாக்கிக் கொடுக்கும் நெருக்கத்தின் பாலியல் விழைவா? நான்கு ரதவீதிகளுக்குள், ஊருக்குத் தென்கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிற தாமிரபரணியின் கரைக்குள் ஒடுங்கி, இரவில் தண்ணீர் பிழிந்துவிட்டு, வெறும் சோறு சாப்பிடுகிற மக்களின் வாழ்க்கைக்குள் என்ன விடாப்பிடித்தனம் வந்துவிட முடியும் என்ற பக்குவமா? நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, வேறொரு நபர்களாக உருமாறி நிற்கிறார்கள். ஆறு என்பது நீரை மட்டுமா குறிக்கிறது? அது குணத்தின் எதிரொலியும் அல்லவா என்று கேட்பது போலிருக்கிறது வண்ணநிலவனை வாசிக்கையில்.