பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

நீங்கள் திடுக்கிடுவீர்கள், திகைப்பீர்கள்; கணினியின் அத்தனைத் தகவல்களையும் மீள் கட்டமைப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல; கேட்பதைக் கொடுத்துவிட்டால் உங்கள் தொழில் தேங்காது முன்னே செல்லும். ஆயினும் நீங்கள் மன்றாடிவிட்டு, பிட்காயினாகவோ வேறேதும் கிரிப்டோ கரன்ஸியாகவோ, அனேகமாகப் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்த அந்தக் கொந்தர்களுக்குத் தருவீர்கள். இந்த விவகாரத்தை நீங்கள் காவல் துறையில் கூட பதிவு செய்ய மாட்டீர்கள்- உங்களுக்குத் தெரியும் அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக பல நேரங்களில் ஆகிவிடும்…

பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள்

1800 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருப்பதாக 2018-ல் வெளிவந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பிட்காயின் என்ற வலை நாணயங்கள் (Bitcoin). கிரிப்டோகரன்ஸிகளின் தற்போதைய சந்தை மதிப்பு $1.5 டிரில்லியன். உருவற்ற ஒரு பொருள் (!), கணினியின் நிரலன்றி வேறு ஒன்றுமில்லை, ஆயினும் அதன் மதிப்போ மலைக்க வைக்கிறது.

ஜராசந்தர்கள்

உலகக் கணினிக்குற்ற ஆயுதங்களின் வர்த்தகம் பற்றிய பெர்ல்ராத்தின் இப்புத்தகம் தெளிவாகவும், தூண்டும் வகையிலும் புலப்படாத இந்த எதிரிகளைப் பற்றிப் பேசுகிறது. இதன் தலைப்பு சற்று அதீதமோ என்று நினைத்தாலும், இக்கருவிகள் செய்யக் கூடுவன பற்றிய புரிதலினால், அவ்வாறு சொல்ல முடியவில்லை.-முக்கியக் கட்டுமானங்களான அணு ஆலைகள், மின்னாற்றல் நிலையங்கள், தொழிற் சாலைகளிலுள்ள காப்பான்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீர் மேலாண்மை மற்றும் விநியோகம் போன்றவற்றை குறைந்த செலவில் தாக்கவும் அதிக சேதத்தினை ஏற்படுத்தவும் கொந்தற்கருவிகளால் முடியும். பேரழிவு ஆயுதங்களை விட அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தும். இவைகளுக்கான சந்தை, துடிப்போடு செயல் படுகிறது- கண்களுக்கு அப்பாற்பட்டு, செல்வம் படைத்தவருக்குத் தேவையெனில் இந்தச் சேவையை இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று சிறப்பாக செய்து கொடுத்து… இவர்களின் சந்தையின் இலக்கணம் இது தான். இதில் சுநீதி, அநீதி என்பதெல்லாம் இல்லை.

வலைப்புறா

தீவிரவாத அச்சுறுத்தும் சக்திகளும், வெள்ளாட்டுக் கூட்டத்தில் கலந்து மறையும் மறி ஆடுகளைப் போல, கண்காணிப்பிலிருந்து தப்பி விடுகிறார்கள். அரசு தனக்கு இதில் அதிக ஈடுபாடுகளில்லை எனக் காட்டப் பார்த்தாலும், அதை நம்ப ஆட்களில்லை.

ஜீ பூம்பா

பரவலாக்கப்பட்ட, மைய அதிகாரமற்ற ஒன்று என்று சொல்லலாம். இடைநிலை அமைப்பாக(Intermediary), இடைத்தரகர்கள் எவருமே இல்லாமல், அதாவது, அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் வால்ஸ்டீர்ட் நிதி நிறுவனங்கள் போலில்லாமல், இணையப் பணச் சேமிப்பு, கடன் வழங்குதல், வணிக வர்த்த்கத்தை எளிதாக்குதல் போன்றவற்றை கணினிக் குறி மொழி கொண்டு நடத்துவது டிஃபை எனப்படுகிறது.

நம்பிக்கை, நாணயம், நடப்பு

டேவிட் பாஸ்டர் வாலசின் (David Foster Wallace) நீர் அறியா மீன்களைப் போல இன்றைய நவீனப் பொருளாதரத்தில் மக்களின் நம்பிக்கை இருக்கிறது. எதுவுமே இருப்பில் கணிக்கப்படுகிறது. ‘ஒரு எலும்புத் துண்டை தன் இனத்திடம் எந்த நாயும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்வதை நாம் யாரும் பார்த்ததில்லை’ என்று சொன்ன ஆடம் ஸ்மித் ‘நம்பிக்கை என்பது மனிதத்தன்மையின் சிறப்பான அம்சம்’ என்று சொன்னார். நோபெல் பரிசு வெல்வதற்கு சற்று முன்னால் கென்னத் ஆரோ (Kenneth Arrow) நம்பிக்கை என்பது போற்றுதலுக்குரியது, அது சமூகச் சக்கரங்களின் மசகெண்ணய், நல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் அது இன்றியமையாதது என்றார்.

உருவன்று அருவன்று

NFTவலைத் தளங்களில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல முயற்சிகள்- அப்பங்கள் நாய்களாகின்றன, இலான் மஸ்கைக் கலாய்க்கும் மனப்பிறழ்வுப் படங்கள், நிர்வாணமாக உலா வரும் கவர்ச்சிகள். தேவை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாங்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதுதானே விளம்பரத்தின் நோக்கம்! கலை விமர்சகர் டீன் கிஸ்ஸெஸ்,(Dean Kissick) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த NFTஉலகை ‘இளைஞர்களின் பரவசம்’ என்று சொல்கிறார்.

மெடாவெர்ஸ் எனும் ‘ஹோல்டால்’

MV சந்தை $800 பில்லியன் என்று ப்ளும்பர்க் ஊடக நிறுவனம் அனுமானித்துள்ளது. MV இப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தாலும், சூட்டிகையான தொழில் நுட்ப நபர்கள் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், நன்கு வளர்ச்சிபெறக் கூடிய தொழில் தொடங்கு நிறுவனக் குறியீட்டு நாணயங்களில் (Digital tokens of High growth start-ups) வர்த்தகம் செய்பவர்களாகவும் செயல்படுவார்கள். எனவே இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று இவர்கள் பந்தயம் கட்டுகிறார்கள்.

கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்

க்ரிப்டோ, அரசின் நிதி மேலாண்மைக்கும், அரசின் நாணயத்திற்கும் விடப்பட்டுள்ள சவால்தான். ஆனால். இத்தகைய க்ரிப்டோ நாணயங்களுக்கு அடிப்படை மதிப்புகொண்ட இணைச் சொத்துகள் கிடையாது. மேலும், முகமறியா வணிகத்தில் அரசு இழக்கும் வரி அதிகம்; முக்கியமான அரசுத் துறைகள் கொந்தர்களுக்குப் பலியாகிச் சந்திக்கும் இழப்புகளும் அதிகம். இதை முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது, இதனால் ஏற்படும் சூழலியல் நட்டங்களை எவ்விதம் ஈடுகட்டுவது என்பவை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.

வெப் -3 (Web-3)

க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம்.

யாயும் ஞாயும்

தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”

பொன்மான்

பிட் ஃபைனெக்ஸ் (Bitfinex) என்ற நிகர்நிலை தளத்திலிருந்து 2016-ல் 1,19,754 பிட் காயின்கள், சுமார் 2000 பரிமாற்றங்களில் திருடப்பட்டன. அப்போது அவற்றின் மதிப்பு $71 மில்லியன். நம் ஸ்ரீகி சொல்கிறார்: ‘அந்தப் பங்கு வர்த்தகத் தளம் இருமுறை கொந்தப்பட்டது; அதையும் முதலில் செய்தவன் நானே. இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் இருவர் பின்னர் அதே தளத்தில் களவாடினார்கள். அப்போது ஒவ்வொரு பிட்காயினின் மதிப்பு $100- $200 வரை. பின்னர் மற்றொரு பிட் காயின் பரிவர்த்தனைத் தளமான பி டி சி-ஈ. காமைக் (BTC-e.com) கொந்தி 3000 பிட் காயின்கள் திருடினேன்.