“நீங்கள் நம்பாத மூலப்பொருள் எது?”
“சிலிக்கான் தான், வேறென்ன! பிராணவாயுவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இருப்பதும் அதுதான்; அது இல்லையெனில் ட்ரான்ஸிஸ்டர்களோ, ட்ரான்ஸ்ஃபார்மர்களோ இருக்காது. அது புதுவகைக் களிமண், செயல்பாட்டுக்குத் தக்கபடி உரு மாற்றப்படக் கூடிய பொருள். இன்று ஒரு மதம் கொண்டுவரப்பட்டால், அதில் கடவுள் சிலிக்கானிலிருந்து மனிதர்களைப் படைத்தார் என்று சொல்வார்கள்.”
Series: நோயாளி எண் பூஜ்யம்
நோயாளி எண் பூஜ்யம்- 2
தேசத்தந்தை, உயிரிகள் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்கிய பிறகு, தேசக் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ள இதயமின்பதிவுத் தொழில்நுட்பம் தேவை. யாரும் கார்பன் உணர்விகளைத் தம் உடலில் பொதிந்து கொள்ள அச்சப்படவில்லை, அவை இதயத்தின் மின் அதிர்வுகளை வரைபடமாகக் கொடுத்து அவற்றைத் தகவல் மையங்களுக்கும் ஒலிபரப்பின. அவற்றை உடலில் பொருத்துவது சுலபம், ஆனால் மூளைப் புரணிகள் அவற்றை அவ்வளவுத் திறமையாக ஏற்றுக் கொண்டு விடுவதால், அகற்றுவது கடினமாகி விடுகிறது. என்னுடைய அந்த நுண்கருவிகளை அகற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியே இருக்காது. ஃபாங்கின் இருப்பிடத்தில் இருந்த ‘ஸ்டோன் ஆஃப் மேட்னெஸ்’ ஓவியம் என் நினைவில் எழும்பியது, அந்த ஓவியம் இப்போது எனக்கு சதி வேலையாகத் தெரிந்தது.