இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”
Series: கங்கா தேசத்தை நோக்கி
Haridhwar, Rishikesh and Utharakhand
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
பர்கோட்
முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
யமுனோத்ரி
யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?
உத்தரகாசி
பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.
கங்கோத்ரி
வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.
உத்தரகாசி -குப்தகாசி
இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
கேதார்நாத்
மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!
குப்தகாசி – பத்ரிநாத்
கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
பத்ரிநாத் – ரிஷிகேஷ்
பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம்.
ரிஷிகேஷ்
விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…
காசி
காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.