’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்

சொல்வனத்தின் சமீபத்திய வெளியீடான ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் குறித்து மூத்த படைப்பாளிகளின் கருத்துகள்.

வாசகர் மறுவினை

விவல் அக்கா கதையின் சிறப்பு கடைசி பாராவில் நிகழும் காலமாற்றமும் முடிவும்தான். திட்டமிடப்பட்ட முடிவு வாசகனை ஒரு முட்டுச்சந்தில் விட்டுவிட்டு கதைசொல்லி காணாமல் போவது இயல்பாக நிகழ்கறது. திருமலைராஐன் ஆதாமிண்ட மகன் அபுவில் குரலுயர்த்தாமல் நிறைய தகவல்களைத் தந்திருக்கிறார். வணிக கவனமிருந்தாலும் கூட கிரீடம் (திலகன் மோகன்லால் நடித்தது) போன்ற நல்லபடங்களை (குறைந்த பட்சம் பேத்தலில்லாத்து)மலையாளத்தில் வருகின்றன. தமிழில் அதேபடம் அசிங்கமானது.

வாசகர் மறுவினை

யானைகளுடன் பேசுபவன் நூல் அறிமுகக்கட்டுரையைப் படித்தேன். ஒரு புனைகதையைப் படிக்கும்போது கிடைக்கக்கூடிய மன எழுச்சியை இக்கட்டுரை வழங்கியது. அருணகிரி விவரிக்கும் துண்டுதுண்டான சம்பவங்கள் புத்ததகத்தைப் படிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

வாசகர் மறுவினை

பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் பொதுவாக தமிழ் இதழ்களில் காணக்கிடைக்காதது. அப்படியே அத்தகைய கட்டுரைகள் வெளியானாலும் மிக மேலோட்டமாகவும், வாசகர்களுக்கு அந்நியமான மொழியிலும் இருக்கும். இவரின் கட்டுரைகள் அப்படியில்லாமல், வாசகனை முன்வைத்து எழுதப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் குறித்த வரலாற்றுப் பார்வையை இவரது கட்டுரைகள் முன்வைக்கின்றன.

வாசகர் மறுவினை

தெரிந்தவர்களைக் கதாபாத்திரமாக ஆக்குவதில் இருக்கிற சிக்கல் குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொன்ன யாரும் ”அம்மா வந்தாள்” மாதிரி ஒரு கதை எழுதியதில்லை. மரப்பசுவைக் குறித்த ஜானகிராமனின் அந்த ஒருவரித் தீர்மானம் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது. இறுதிவரை திறக்கப்படாத அவர் மனத்தின் இன்னொரு பெரும் அறையை மானசீகத்தில் திறந்து பார்க்கத் தூண்டிய பத்தி அது.

வாசகர் கடிதங்கள்

என் அப்பாவே ஆசிரியராகப் பணியாற்றியிருந்தாலும், குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர்கள் மீது பொதுவாகவே கோபம் இருந்தது. ஒருமுறை ஒரு மாணவன் எல்லா கேள்விகளுக்கும் விடையாக பானிபட் போரைப் பற்றியே எழுதியிருந்தான் என்று சொல்லியிருக்கிறார். அந்த விடைத்தாளில் பின்குறிப்பாக, “நான் 12 மைல்கள் நடந்து பள்ளிக்கு வருகிறேன். வீட்டுக்குத் திரும்பியபின் எனக்கு படிப்பதற்காக மிகக் கொஞ்சமே நேரம் இருக்கிறது” என்று எழுதியிருந்தானாம். அவனுக்குக் குறைந்தபட்ச பாஸ் மார்க் வழங்கி அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட்டேன் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

வாசகர் மறுமொழி

ப.கோலப்பன் எழுதிய ‘வெறுமை’ சிறுகதை மிக அருமை. பொதுவாகத் தமிழில் நல்ல சிறுகதைகள் அருகி வரும் காலத்தில் இது ஒரு ஆசுவாசமளிக்கும் நல்ல எழுத்து, நல்ல கதை. வெறுமை சிறுகதை சங்கீத வெறுமையை வெகு அழகாகச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சங்கீதம் ரசிப்பவர்களுக்கு, முக்கியமாக நாதஸ்வர ரசிகர்களுக்கு இச்சிறுகதை ஒரு பொக்கிஷம். தி.ஜா எழுத்துகளைப் போல அரிதான சங்கீதப் புனைவு.

வாசகர் கடிதங்கள்

இந்த சொல்வனம் இதழில் வந்த கணியான் கூத்து கட்டுரை அபாரம். நான் மிகவும் ரசித்துப் படித்தேன். திருச்செல்வன் இதை ஒரு கலை வடிவம் என்று மட்டுமில்லாமல், தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து எழுதியிருப்பது மிகவும் அற்புதமானதாகவும், அவர் ரசனையின் உண்மையைச் சொல்வதாகவும் இருந்தது. இதைப் போன்று அழிந்து, நசிந்து வரும் நாட்டார் கலைகளைக் குறித்து சொல்வனம் வெளியிடவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் எதிர்வினை

புத்தகத்தைப் பற்றி பேசும் போது, அதன் வடிவமைப்பையும் பற்றி சிலாகிப்பது அவசியமாகிறது. முன் அட்டை முதல் பின் அட்டை வரை நல்ல வடிவமைப்பு. சிரத்தை கண்கூடாக தெரிகிறது. வண்ணதாசன் சாருடைய அணிந்துரை அம்சமானது. ஏக்நாத்தின் ‘ பூடம் ‘ சிறுகதைத் தொகுப்பிற்கு பிறகு, தன் வளமான மொழியை விடுத்து அச்சு அசல் திருநெவேலி தமிழில் அவர் எழுதி தந்திருக்கிற அணிந்துரை இதுவாக தான் இருக்க வேண்டும்.

வாசகர் மறுமொழி

சொல்வனத்தில் சென்ற இதழில் பிராந்து சிறுகதை படித்தேன். ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மீண்டுமொரு முறை ரசித்துப் படிக்கும்படி தந்ததற்கு நன்றி. இந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? சொல்வனம் ஆரம்பிக்கப்பட்டபோதிருந்ததைக் காட்டிலும் இப்போதெல்லாம் இலக்கியத்துக்கு நிறைய முக்கியத்துவம் தருவதும் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், வெ.சா, ஆ.மாதவன் போன்றவர்களின் படைப்புகளை அடிக்கடி படிக்க முடிவதும் சொல்வனத்தின் தகுதியை வெகுவாக உயர்த்துகிறது.

வாசகர் மறுமொழி

இன்றைய இலக்கியச்சூழலில் வெங்கட் சாமிநாதன் குறித்து ஒருவரால் பாராட்டாக எழுதமுடிகிறது என்றாலே அவர் தமிழில் வடிகட்டி எடுக்கப்பட்ட தேர்ந்த, நேர்மையான இலக்கியவாதி என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற அலட்டலில்லாத, தேர்ந்த படைப்பாளிகள் – வெங்கட்சாமிநாதனை நெருங்கமுடியக்கூடியவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனின் கட்டுரை மிகவும் நிறைவாக இருந்தது.

‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை

சொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதல்.

வாசகர் மறுவினை

தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

வாசகர் மறுமொழி

காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, மிக அழகாக எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை. எத்தனை தகவல்கள். முற்றிலும் புதியது.நானும் காந்தளூர்ச்சாலை குமரி எல்லை என்று நினைத்திருந்தேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆய்வு. நான் அறிந்த சரித்திரத்தின் படி திருவனந்தபுரம் என்பது வெகு சமீபத்திய நகரம். ஒரு நானூறு ஆண்டுகள் இருக்கலாம் எனபதுதான். அதிலும் வேணாடு அரசர்கள்தான் அதை தலைநகராக கொண்டு ஆண்டனர்.

வாசகர் மறுமொழி

சொல்வனத்தில் வரும் தொடர்கள் சிறப்பாகவே இருக்கின்றன. நான் மிகவும் விரும்பிப்படித்த நாஞ்சில்நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, அருண் நரசிம்மனின் ‘ராகம் தானம் பல்லவி’ இரண்டும் திடீரென்று நின்றுபோனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. தொடர்கள் இடைவெளியில்லாமல், திடுதிப்பென்று நிறுத்தப்படாமல் வெளிவருவது ஒரு இதழின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். தொடரிலும் தொய்வில்லாமல் இருக்கும். ஆசிரியர் குழு கவனிக்கும் என நினைக்கிறேன்.

வாசகர் எதிர்வினை

ஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை.

வாசகர் எதிர்வினை

பத்ரியின் கருத்துகள் சிலவற்றில் நான் மாறுபடலாம். மாறுபடும் கருத்துகளைக் கடுமையாகவே நான் முன்வைக்கவும் செய்யலாம். ஆனால் பத்ரி என்கிற தனிமனிதர் மீதும் அவரது ஆளுமை மீதும் எனக்கு மிகுந்த மரியாதைதான் இருக்கிறது. அவர் தமிழ்ப்பதிப்புத்துறையில் செய்து வரும் சாதனைகள் குறித்து எனக்கு என்றைக்குமே வியப்பும் மதிப்பும் உண்டு.

வாசகர் எதிர்வினை

திரு.நரசய்யா எழுதிய சிட்டி நினைவுமலர் வெளியீட்டு விழாவைக் குறித்துப் படித்தேன். மிக்க நன்றி. வீரராகவன் போன்றவர்கள்தான் நம் இலக்கியத்தின் தூண் போன்றவர்கள். வெளியீட்டுவிழாவின்போதே புத்தகத்தில் எச்சில் துப்பும் எழுத்தாள மேதைகளும், எழுத்தாளன் இருக்கும் வரை அவன் ரத்தத்தை ஒரு பைசா காபிரைட் காசு தராமல் உறிஞ்சிக் குடித்துவிட்டு செத்தபின் விழாவெடுப்பவர்களும் இல்லை.

வாசகர் எதிர்வினை

பல புத்தகங்கள், மனிதர்கள் சொல்லாத தகவல்களையும் ஒரு மரம் சொல்லிவிடும் என்பார் என் தாத்தா. என் இளவயது நினைவுகள் கிராமத்து மரங்களையும், செடிகளையுமே சுற்றிவருபவை. பவளமல்லியும், சங்குப்பூவும், தும்பைப்பூவும், அந்தி மந்தாரையும் குறித்து நினைக்கும்போது ஏதோ கனவு காண்பது போல்தான் இருக்கிறது. என் நினைவுகளை மீட்டுத்தந்த நாஞ்சில்நாடனுக்கும், சொல்வனத்துக்கும் நன்றி.

வாசகர் கடிதம்

இளையராஜா சமீபத்தில் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது – ‘இயக்குனர்களுக்கு உள்ள ஒரே ப்ரச்னை – ஹீரோ போல இமேஜ் பிரச்னை. ஒரு ஃபார்முலா வேலை செய்து விட்டால், அதையே மாற்றி போட்டு, மாற்றி போட்டு கதை சொல்வதையே மறந்து விடுகிறார்கள்”.

வாசகர் மறுமொழி

பத்து நாள் பயணம் போய் எழுதுகிற டூரிஸ்ட் எழுத்து இல்லை நான் சொல்வது. பால் தொரொ செய்வது அதைத்தான். அவருடைய கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் தில்லி – சென்னை பயணக் கட்டுரையைப் படித்தால் புரியும். தி கிரேட் ரயில்வே பஜார் புத்தகத்தில் உள்ளது. பார்த்ததை நாடகீயத் தன்மையோடு சொல்ல அவர் கற்பனை உரையாடல்களையும் கலப்பார் என்று கேள்விப்பட்டேன். இன்னொரு பயண எழுத்தாளரும் நகைச்சுவையாளரும், அறிவியலாருமான பில் ப்ரைஸன் சொன்னதாக நினைவு.

வாசகர் எதிர்வினை

தொடர்ச்சியாக வரலாறு, அறிவியல் புனைவு போன்றவற்று நீங்கள் இடமளிப்பது முக்கியமானது. நீங்கள் எப்படி எழுத்தாளர்களை கண்டுபிடித்து எழுத வைக்கிறீர்கள் என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. சொல்வனம் தமிழ் தீவிர எழுத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது என்பது எனது ஊகம்.

வாசகர் மறுவினை

ஆரிய – திராவிட மாயை குறித்த அவரது விளக்கம் தெளிவாக இருந்தது. மானுடவியல் அறிஞர்கள், மொழியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் செய்ய வேண்டிய பணியை, சரித்திர நிபுணர் என்ற பெயரில் ஆர்.எஸ்.ஷர்மா போன்ற அரைகுறைகள் செய்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள் ஏராளம். சரித்திரத் திரிபுவாதிகளும், ஆங்கிலேய தாசர்களும் அவ்வாறு பதித்துச் சென்ற பிதற்றல்களே இன்றும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வெட்கக்கேடு.

வாசகர் எதிர்வினை

இதுவரை ராமன் ராஜாவின் கட்டுரைகளை படித்து படித்து மகிழ்ந்து வந்தேன். எனக்கு ராமன்ராஜா அறிமுகம் ஆனதே சொல்வனத்தில்தான். இந்த வார கட்டுரை அவரது நகைச்சுவைத் திறனுக்கும் அவரது அறிவியலை ஜனரஞ்சகமாய் சொல்லும் பாங்குக்கும் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு என்பேன்.

வாசகர் எதிர்வினை

சொல்வனத்தில் டேவிட் ஷெப்பர்ட் பற்றின அஞ்சலி படித்தேன். அருமையான கட்டுரை. போலியான பாவனைகள் இல்லை என்பதே இக்கட்டுரையின் முக்கிய சிறப்பு. அடுத்து ஒரு புன்னகையுடனான மீள்பார்வையாக உள்ளது இதன் உத்தேசம். இழப்பைப் பற்றி பேசுகையில் சமநிலைக்கு இந்த நகைச்சுவை நல்லது. உங்கள் நினைவுகளிலிருந்து ஆரம்பித்து குறிப்பான புறவய தகவல்கள் தந்து அருமையாக ஒருங்கிணைத்துள்ளீர்கள்.

வாசகர் எதிர்வினை

சுகா அவர்களின் கட்டுரை சூப்பர். அவருடைய அக்மார்க் நகைச்சுவை கொண்ட சிறப்பான ஆக்கம். மேலும், சென்ற இதழில் வெளியான ராமன் ராஜா அவர்களின் கட்டுரை மிக அருமை. சுவாரஸ்யமாக எழுதுகிறார். பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பருந்துப் பார்வையை அளிப்பதாக இருந்தது.

வாசகர் எதிர்வினை

இன்றைய சலிப்பின் காரணம், எதையெல்லாம் படிக்கிறோமோ அவற்றிலெல்லாம் நம் பங்கு இருப்பதாய் எண்ணுகிற ஒரு மாயையே. அது தான் எல்லாவற்றையம் மேய்ந்து பார்க்கச்சொல்கிறது.

வாசகர் எதிர்வினை

சாம்.ஜி.நேதனின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சென்ற இதழில் அவர் கட்டுரை இடம் பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளை, முக்கியமாக அறிவியல், இசை குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வாருங்கள்.

வாசகர் எதிர்வினை

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நேரடி வாசிப்பில் சிறிய புன்னகையையும், தொடர்ந்த யோசிப்பில் வாழ்க்கையின் பெரிய குரூரத்தையும் ஒரு சேர முன்வைத்தன. சொல்வனம் இதழில் திரு.விக்கி எழுதிய இளையராஜாவைக் குறித்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. சாம்.ஜி.நேதன், ராமன்ராஜா இருவரும் ஆழமான கருத்துகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறார்கள்.

வாசகர் எதிர்வினை

நமது பாரம்பரியம், நமது சொத்து என எண்ணாத மக்களிடம் இருக்கும் ஒரு கலை புரவலரின்றி அழியும். அதன் நீட்சியே இன்று நாம் காணும் மல்லர்கள். சென்ற இதழில் வெளியான சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி என்ற திரு வைத்தியநாதனின் கட்டுரை நிதர்சனங்களை முன்வைக்கிறது. நம்மால் ஆகாத காரியத்தை சீனா செய்வதன்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பட்டியலிடுகிறார்.

வாசகர் எதிர்வினை

பொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.