தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை

ராமையா எழுதிய அடைக்கும் தாழ் சிறுகதை படித்தேன். கதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. பேசாமலே இருந்த ப்ரியா மறதி நோய் உள்ள பாட்டியின் மூலம் அவர்கள் வீட்டிற்குச் சென்று மாமாவின் அன்பால் பேசத் தொடங்குகிறாள். ஆனால் தன் குழந்தைக்குப் பிராமண பாஷை வந்துவிடுமோ என எண்ணிய சரவணன் ப்ரியாவை அங்கு அனுப்ப மறுத்துவிடுகிறான்…

நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி

‘விஞ்ஞானம் என்றால் என்ன?’ எனக் கேட்டால், நம்மில் பலர், புதிய கண்டுபிடிப்புகளைச் செய்பவர்கள் என்போம்.  நாம் யார் எனத் தொடங்கி, நம்மையும், நம் சுற்றத்தாரையும், நாம் வாழும் பூமி தொடங்கி பிரபஞ்சம் முழுமையையும் அறியும் துடிப்பு மிகுந்த ஒவ்வொருவரையும் ஒரு விஞ்ஞானி என சொல்லலாம்.  ‘என்னடா! விஞ்ஞானிகளைப் பற்றி “நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி”

நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

நாஞ்சில் நாடனின் இந்தக் கட்டுரைக்குள் ஒவ்வொரு பாட்டையும் சொல்வனம் இணையதளத்தார் இடைச் சொருகியே தந்திருக்கிறார்கள். இசை கேட்கக் கேட்க மயிர் சிலிர்க்கிறது. பத்தாததுக்கு கட்டுரையில் நாஞ்சில் நாடன் திரட்டித் தருகிற புலனனுபவம். அது ஒரு களவுச் சொப்பனம் போல ஆளை ஆழ்த்தும். கூடவே யாழ்பாணத்துச் சித்தர் யோகரின் பத்து கண்ணியில் வரும் பவனம், பருதி, பரவை ஆழி எல்லாமும் தாண்டி அதிலுள்ள ‘எடி’ என்கிற தொனியையும் விட்டுவிடாமல் ஒரு பிடி பிடித்து வைக்கிறார்…

‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’

இமயம் எவ்விதம் இமய மலையைக் குறித்த சொல்லோ, அவ்விதமே மலயம் என்பது பொதிய மலையைக் குறித்த சொல்லாகும். பொதிய மலையை, அதாவது மலயத்தை, அதுவும் ஒரு மலை என்பதால் மலையம் என்று குறித்தால் தவறில்லை என்றாலும், மலயம் எனும் சொல் பொதிய மலையை மட்டுமே குறிக்கிறது, அல்லது செழுஞ் சீதச் சந்தனத்தை. மலயம் எனும் சொல்லின் இரண்டாவது பொருள் சாந்து, சாந்தம் அல்லது சந்தனம். மலையில் பிறந்த சந்தனம் என்பதால் மலைச் சந்தனம். ஆனால் மலயம் என்றாலே சந்தனம்.

அம்பை – குறிப்புகள்

தமிழ் இனி 2000 கருத்தரங்கின் தன்னிச்சையான ஒரு நிகழ்வாகக் கடைசி நாளன்று இரவு ஒன்பது மணிக்குப் பெண்கள் அமர்வு ஒன்று நடந்தது. இலங்கையிலிருந்து வந்திருந்த பெண்களும், சென்னைப் பெண்களும் வேறு இடத்திலிருந்து வந்த பெண்களுமாய்க் கூடினோம். எதைப் பேசுவது அது பற்றிப் பேசுவது என்று திட்டம் ஏதுமில்லை. ஒரு சிறு அறையில் உட்கார்ந்து கொண்டும் சாய்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் பக்கத்தில் உள்ள தோளில் தலை வைத்தும் இருந்தபடி பேசுவது ஒரு இதமான அனுபவம்.

வாசகர் மறுவினை

இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல் துறைகள். இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.

வாசகர் மறுவினை

இந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்சு நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி …

வாசகர் மறுவினை

நீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…

வாசகர் மறுவினை

உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.

வாசகர் மறுவினை

பாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.

மானுடத்தை ஆராயும் கலைஞன்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.

வாசகர் மறுவினை

இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

காளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து

ஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாத்திலயும் அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் வேசி/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரினுள் இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியன் இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும்…

வாசகர் மறுவினை

வெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …

எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்

மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே? மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே?

கனேடிய தேர்தல்

கனேடிய தேர்தல் பற்றிய கட்டுரையை ‘சொல்வனத்தில்’ படித்தேன். நல்ல நகைசுவையோடு எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் ஆங்கிலம் தூக்கலாக இருந்தது மட்டுமே குறை. முதலில் , அட நம் நாட்டைப் பற்றி கூட ‘சொல்வனம் போன்ற பத்திரிக்கைகள் கட்டுரைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருந்தது. சில முக்கிய கனேடிய அரசியல் விஷயங்கள் ,சமீபத்திய லிபரல் கட்சி வெற்றிக்கு வழி வகுத்தது. ஹார்பர் ஒரு கனேடிய பிரதமராக இயங்கியதை விட, ஆல்பர்டாவின் (கனடாவில் எண்ணெய் வளம் மிக்க மாநிலம்) தலைவர் போலவே இயங்கினார்.

வாசகர் மறுவினை

தமிழ் இசை மரபு கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும்.

வாசகர் மறுவினை

சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும். சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம்…

வாசகர் மறுவினை

கடலின் மையங்களில் எண்ணைத் தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படி பணிபுரிகிறார்கள், வெற்றி யினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டுவருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தை பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் …

வாசகர் மறுவினை

ஆனால் வாசிக்கும் சில நூறு பேரில் பலர் இதையெல்லாம் இங்கிலிஷில் சுலபமாகப் படித்து விடலாமே எதற்குத் தமிழில் எழுதுவது என்று கூட நினைப்பாராயிருக்கும். நம்மில் பலருக்கு இதையெல்லாம் தமிழில் கொணர்வதின் சமூகக் கட்டாயம் என்னவென்று இன்னும் தெளிவாயில்லை. மாணவரும், இளைஞரும் இரட்டை மொழிப் பரிச்சயம் உள்ளவரென்பதால் அதில் உலகளாவிய ஒரு மொழி இன்னொன்றை அடித்துப் போட்டு விடுகிறது. அந்த மனத் தடையையும் நாம் உடைத்து முன்னேக வேண்டி இருக்கிறது.

வாசகர் மறுவினை

இரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு…

வாசகர் மறுவினை

தமிழ்நாட்டு இலக்கியங்களில் காணப்படும் மைதுன உறுப்புகளை இந்தப் பதிவு பட்டியலிடுகிறது. ஆனால், மைதுன உறுப்புகளின் பெயர் ஏன் “கெட்ட” வார்த்தையானது என்பது பற்றி பெருமாள் முருகனோ, இப்பதிவின் ஆசிரியரோ யோசிக்கவில்லை. கிராமங்களில் நடைமுறையில் சகஜமாகப் பேசப்படும் பாலியல் சொலவடைகள் பற்றி கி. ராஜநாராயணன் உட்படப் பல உண்மையான இலக்கியவாதிகள் பேசி இருக்கிறார்கள்.

வாசகர் மறுவினை

எதை நோக்கிச் செல்கிறோம் என்ற நினைவாவது உள்ளதா? மனித உணர்வுகளும், உறவுகளும் மாறி – வெறும் பணம் பண்ணும் ஜடங்கள் மட்டுமே மிஞ்சும்.

வாசகர் மறுவினை

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு வாசித்தமை குறித்து……
வியந்து படிக்க ஆரம்பித்த நான் வியப்போடவே முடித்தேன்.
சகோதரி அம்பையை மெச்ச எனக்கு இலக்கிய அனுபவம் போதாது. ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

வாசகர் மறுவினை

சுகாவின் ஜெயகாந்தனைப் பற்றிய கட்டுரை படிக்க சுளுவாக இருந்தது. பேரமைதி கவிதை நன்றாக இருந்த்து. மைத்ரேயனின் அர்சுலா லெ குவின் பேட்டி, ஜைன்சன் அனார்க்கியின் சிறுகதை போன்றவை நன்றாக இருந்தன்.

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான் – மறுவினை

சொல்வனத்தில், “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்” என்று சுந்தர் வேதாந்தம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர், அதில் இருந்த சில கருத்துக்களைக் குறித்து என்னுடைய கருத்துக்களையும் கேட்டார். அப்படித் தான் நான் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுந்தர் அவர்கள் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், சுந்தர் அவர்களின் கட்டுரை, சட்டம் பற்றியது. அதில் சில முக்கியமான கருத்துப் பிழைகள் உள்ளதால், அதனை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.

வாசகர் மறுவினை

கதையைப் படித்து முடித்ததும், அவர் இளமையில் வசித்த ‘லான்சர் பாரக்’ சென்று தற்போதைய நிலையைப் பார்த்து எடுத்த சில புகைபடங்களை சொல்வனத்திற்காகப் பகிர்ந்து கொள்கிறேன். பழைய கட்டிடங்கள் அடுக்கு
மாடிகளாக ஆகியிருந்தன. காலனியிலுள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய படி இருந்ததைப் பார்த்ததும் 18 ம் அட்சக்கோடுகளில் அவ்ர் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதைப் படித்தது நினைவில் வந்தது.

வாசகர் மறுவினை

சொல்வனம் 100 வது இதழ் நல்ல கட்டமைப்போடு வெளிவந்திருக்கிறது. அசோகமித்திரனின் படைப்புகளைக் குறித்த கட்டுரைகள் முக்கியமானவையாக தோன்றுகிறது. ஒரு இலக்கிய இதழ் நூறாவது பிரதி காண்பது மகிழ்ச்சியான விசயம் தான்.

வாசகர் மறுவினை

அவள் அதை வைத்துக் கொண்டு காய்கறிகள் மட்டுமா நறுக்குவாள்,
தான் யார் யாரோடு என்ன பேச வேண்டுமென்று நினைக்கிறாளோ அந்தந்த மனிதர்கள் அந்த அருவாமணையாக உருவெடுத்து அவள் அன்பை, வசவுகளை, எரிச்சலை, சில வேளைகளில் அபூர்வமாக மன்னிப்பைத் தலை குனிந்து நின்று கேட்டுக் கொள்வதை அருகே இருந்து பார்த்திருக்கிறோம் இளவயதில்…

வாசகர் மறுவினை

பைரப்பா பற்றிய குறிப்பிடத் தகுந்த நாவல் அறிமுகம். வம்ச விருட்சாவோடு இவருடைய ‘பருவம்’ நாவலும் பேசப்பட வேண்டியது. பைரப்பாவின் அரசியல் நிலைபாடு குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும் அவருடைய எழுத்து நிராகரிக்க முடியாதது.

வாசகர் மறுவினை

தற்போது இந்தக்கலை முற்றிலுமாக அதன் தொன்மையை இழந்து நிற்கிறது. எல்லா வகை ஒலிகளையும் CD, DVD மற்றும் கணினியில் ஏற்றி கொண்டு வந்துவிடுகிறார்கள். அன்று காட்சிக்கு தேவையான ஒரு குறிப்பிட்ட ஒலியை ஒலிக்கலைஞன் ஏதோ ஒரு வழியில் உருவாக்கி தந்துவிட்டால் அவனுக்கு அந்த படத்தின் இயக்குனரும், ஒலிப்பதிவாளரும் தரும் “வாசகர் மறுவினை”

வாசகர் மறுவினை

வைரம் பட்டை தீட்டப் படுவதைப்போல் என் கட்டுரையும் சிறப்பாக படங்கள் சேர்க்கப்பட்டு மிக அழகாகிவிட்டது.
முகப்பில் அந்த டிராகனின் கோர முகமும், முடிவில் அந்த சதுரங்கப் பலகையில் எதிரெதிராக நிற்கும் குதிரைகள் படமும் அருமை.
ரசனை மிக்க ஆசிரியர் குழுவுக்கு என் வந்தனங்கள்.

வாசகர் மறுவினை

ஆரவார அரசியல், பகட்டான அடிமைத் தொழில் மோகம் என்று பலரும் சிந்தையற்றுக் கிடக்கையில் சிந்திக்க வைக்கின்ற கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

வாசகர் மறுவினை

சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ‘மணியம் செல்வன்’ சிறுகதை மிக நன்றாக இருந்தது. வர்ணணைகள் அனைத்தும் அருமை. மன ஓட்டத்தை அப்படியே படம் பிடித்து அவருடன் கூடவே பயணம் செய்தவர்போல உணர வைத்துவிட்டார். படைப்புகள் தொடர்ந்து எழுதவேண்டும்.

வாசகர் மறுவினை

திரு பிரகாஷ் சங்கரனின் கட்டுரை தெளிவான மொழியில் மிகக் கடினமான ஒரு பொருளை திறமையுடன் தந்திருக்கிறது.
தமிழில் இத்தகைய கட்டுரைகள் தேவைகள் அதிகம், ஆனால் அரிதாகவே வருகின்றன. சமீபத்தில் ஒரு புத்தகத்தில் moving bodies என்ற ஆங்கிலச் சொற்கள் ‘இயங்கும் உடல்கள்’ என மொழிபெயர்க்கப்பட்டிருந்தன!
‘அடியிலிருந்து ஒளியூட்டுவது’ என்பது மிகப் பொருத்தமான சொற்றொடர். மொழிக்கும் அடியிலிருந்து ஒளியூட்டுவது மிகவும் அவசியம்.

வாசகர் மறுவினை

குமரன் எழுதிய “இசைபட வாழ்…”,அவரே குறிப்பது போல், நினைவுகளில் தோய்ந்த வண்ண ஓவியம் இதையே மீண்டும் மீண்டும் வாசிக்கையில், இதன் வடிவும் வண்ணமும் புதுப்புது முகம் காட்டும்.

வாசகர் மறுவினை

உயிரின் அடிப்படை அலகான செல்கள் புதிய செல்களைத் தோற்றுவிப்பதற்காகப் பிளந்து பெருகுவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. புற்றுநோய்களில் செல்கள் இந்த ஆதாரமான கட்டுப்பாட்டை மீறி முடிவற்று பிளக்க ஆரம்பிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களில் இந்த கட்டற்ற செல் பிளவு உண்டாகும் போது அது இரத்தப் புற்றுநோய் எனப்படுகிறது.

வாசகர் மறுவினை

நான் இங்கிலாந்தில் பார்த்த கிளப் மாட்சுகளிலும் செம்ஸ்போர்ட் மைதானங்களிலும் இந்த மாதிரி காட்சிகள் ஏராளமாக காணக் கிடைக்கும். கையில் புத்தகங்கள், சூரிய ஒளி க்ரீம்கள் பூசிக்கொண்டு, வழிய வழிய பீர் கோப்பைகள், குடும்பத்துடன் மாட்ச் பார்க்க வருவார்கள். தாத்தாக்களும் பாட்டிகளும் மதிய உணவு இடைவேளை பின் ஆட்டத்தில் அரைக்கண் மூடி… கிரிக்கெட் பார்ப்பது என்பது ஒரு நாள் அனுபவம். இந்த கட்டுரையின் மூலம் சித்தார்த் வைத்தியநாதன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், அவருக்கு எனது அன்பைத் தெரிவியுங்கள்!

வாசகர் மறுவினை

அண்மையில் சொல்வனம் இதழில் நான் படித்தவற்றில் ஆகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. இணையம் மற்றும் அச்சு ஊடகங்களால் பரபரப்பிற்காக திரிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிவியலின் தற்கால நிலையையும், அறிவியல் துறையில் இல்லாமலேயே அறிவியலைப் பற்றி எழுதும் அரைபண்டிதர்களைப் பற்றியும் அறிவியல் இயங்கும் விதம் பற்றிய அறிவு இல்லாமல் அங்கலாய்ப்பவர்களைப் பற்றியும் நகைச்சுவையுடன், அண்மைய உதாரணங்களோடு சாட்டையடியாக எழுதியிருக்கிறார் அருண்.

வாசகர் மறுவினை

நீங்கள் எடுத்துப் பேசும் பொருள் தமிழ் மொழியில் அதிகப் புழக்கம் இல்லாதது. எல்லா பொருளியச் சிந்தனைகளையும் ஆங்கிலத்தில்தானே நாம் வெளிப்படுத்துகிறோம்! ஆனால் இதனை மிக அழகாகத் தமிழில் கையாண்டுள்ளீர்கள். பல புதிய மொழிபெயர்ப்புக்களைக் கற்றுக்கொண்டேன். “முதலாளித்துவம்” என்ற பயனீடு பொருத்தமற்றது என முன்பே அறிந்து கொண்டு “மூலதனத்துவம்” எனப் பயன்படுத்தி வந்தேன். உங்கள் “முதலியம்” மேலும் பொருத்தம்.

வாசகர் மறுவினை

இன்று வெளியான சொல்வனத்தில் க.நா.சு. பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன். மைத்ரேயன் கட்டுரை படித்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. மிக நன்றாக எழுதி இருக்கிறார். அந்த தஞ்சை பிரகாஷ் மேற்கோள்கள் மிக அருமை. என்ன ஒரு ஆளுமை.

வாசகர் மறுவினை

சொல்வனம் படித்து வருகிறேன்.பல தரப்பான படைப்புகளை நல்ல முறையில் வெளியிடுகிறீர்கள். வாழ்த்துகள். ரமணியின் கவிதையைப் படித்தேன். கற்பூர புகையில் அசையும் அம்மன் படிமம் அருமை. பின்னிருந்தவர்கள் முன்னங்கால்களால் பார்த்ததை சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

வாசகர் மறுவினை

சென்ற இதழில் பிரகாஷ் சங்கரன் எழுதியிருந்த கட்டுரை மிக உபயோகமுள்ளதாக இருந்தது. அறிவியல் ரீதியாக துல்லியமான தகவல்கள் மட்டுமல்ல, இந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம், பக்க விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அலசியதும் நன்று.

வாசகர் மறுவினை

பிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

வாசகர் மறுவினை

இது என்ன எல்லாரையும் போல சொல்வனமும் பின்னே ஞானும் என்று தலைப்புப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளத் தரம் தாழ்ந்து விட்டதே என்று ஒரு கணம் துணுக்குற்றேன். ஆனால் பார்த் சுயம் உட்பட அனைத்தையும் பிரதி வாசிப்பாகப் பார்த்தவர் என்று தொடங்கி, போர்ஹே அனைத்து பாத்திரங்களிலும் வாசகன் தன்னைப் பார்ப்பதான புரிதலைத் தருகிறார் என்று சொல்லி, டயர் பார்த் இருந்த இடத்திலிருந்து போர்ஹேவின நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை மைத்ரேயன் எவ்வளவு அழகாக விவரிக்கிறார்.

வாசகர் மறுவினை

கடந்த பல பத்தாண்டுகளில், உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதப் படும் எல்லா வரலாற்று நூல்களிலும் பொதுயுகம் என்று தான் குறிப்பிடுகிறார்கள். தமிழில் இது பற்றிய அறிதல் இன்னும் வந்து சேரவில்லை போலும். அதனால் பழைய பெயர்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கி.மு, கி.பி, என்பதற்குப் பதிலாக பொ.மு, பொ.பி. என்ற வழக்கை நாம் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். வரலாறு குறித்த எனது கட்டுரைகள் எல்லாவற்றிலும் அப்படித்தான் நான் எழுதி வருகிறேன்.

வாசகர் மறுமொழி

திரு.லலிதா ராம் எழுதிய “துருவ நட்சத்திரம் – காலம் சென்ற பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கைக் கதை” என்ற புத்தகத்தை என் அபிமான புத்தகக்கடையில் காண நேர்ந்தது. அந்த இளம் எழுத்தாளரின் பெயரைக் கண்டவுடன் நான் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டேன். புத்தகத்தைப் படிக்கத் துவங்கிய இரண்டே மணி நேரத்தில் 224 பக்கங்கள் அனைத்தையும் படித்து முடிக்கும் வரை நேரம் போனதே எனக்குத் தெரியவில்லை.

சாமத்தில் முனகும் கதவு – சிறுகதை குறித்து…

காற்றில் சரியாக அண்டக் கொடுக்காத கதவின் ‘க்றீச்சிடலும்’ சம்போக உச்சத்தில் மனைவியின் முனகலும் ‘கற்பனை இன்பத்தில்’ சுகமாய் வாழும் கூத்தையனுக்கு ஒன்றாகப் போகின்றன. கற்பனையின் மீது ஓரளவாவது இருக்கும் ‘கன்ட்ரோல்’ அவனுக்குக் (யாருக்குமே) கனவு-நனவுக் கலப்பின் மீது இல்லை. கனவின் நடுவில் நிகழும் விழிப்புலகச் செயல் கனவில் ஒரு தர்க்க ரீதியான செயலாவதை நாமனைவரும் அனுபவித்து இருக்கிறோம். காலிங் பெல், தட்டப்படும் கதவு போன்றவை கனவுக் காட்சியின்சரியான இடத்தில் வேறாகத் தெரிந்து நாம் தெளிவது அனைவருக்கும் தெரிந்தது. அதை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

‘ஆற்றேன் அடியேன்’ கட்டுரைக்கு இரண்டு மறுவினைகள்

தமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும், சிறிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாக ஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம். ஏராளமான படங்கள், மிக அரிய ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பது அதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும்.