பனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்

ஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும்? காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே.

பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா – இரு காந்தியர்கள்

பி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும்? ஒன்று, சி.சு. செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை.

குழந்தை மனம் : ஆலிசன் கோப்னிக் நேர்காணல்

குழந்தை உளவியல் பற்றி பல கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியிருக்கும் ஆலிசன், குழந்தைகளின் அகவுலகைப் புரிந்துகொள்வதன் மூலம், நமது ஆழமான தத்துவக் கேள்விகளுக்கு விடை காண முடியும் என்று வாதிடுகிறார். குழந்தைகள், சீர்திருத்தப் படவேண்டிய சிறிய மனிதர்கள் எனும் மேற்கத்திய பார்வை மாறிவரும் அதே நேரத்தில், குழந்தைகளை சிறிய தெய்வங்களாகக் கொண்டாடும் இந்திய மரபார்ந்த பார்வையும் சிதைந்துவிட்டதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது.

தரம்பால் எழுதிய ’காந்தியை அறிதல்’

‘காந்தியை அறிதல்’ எனும் தரம்பாலின் புத்தகத்தில் ஏழு கட்டுரைகள் உள்ளன. எப்படிப்பட்ட சுயராஜ்ஜியம் காந்தியின் லட்சியமாக இருந்தது? தொழில்நுட்பம் குறித்த எத்தகைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் காந்தியின் சிந்தனையின் அடிப்படையாக இருந்தன? காந்திய லட்சியம் எப்படிப்பட்டது? காந்தியின் வாழ்வு நமக்கு உணர்த்தும் படிப்பினைகள் எத்தகையவையாக இருக்கின்றன? எதிர்காலத்தில் காந்தியம் எவ்வகைப்பட்ட வளர்ச்சி காண்பதாக இருக்க முடியும்? இந்நூலில் காந்தியம் குறித்த பல முக்கியமான, அடிப்படை கேள்விகளை விவாதிக்கிறார் தரம்பால்.

பகத்சிங்கின் மரணம் – மறைக்கப்பட்ட உண்மைகள்

பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

அகிம்சையின் வெற்றி

வன்முறையைத் தவிர்க்கும் அமைதிவழி எதிர்ப்புகள், குடிமக்கள் சமுதாயத்தின் எழுச்சிகள், ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகியன வரலாற்றில் என்ன பங்கு வகித்திருக்கின்றன, என்ன மாறுதல்களைக் கொணர்ந்திருக்கின்றன என்பனவெல்லாம் முறையான சோதனைக்கோ, ஆய்வுக்கோ ஆட்படுத்தப்படவில்லை. மாறாக ஆயுதப் புரட்சிகளெல்லாம் இறுதியில் வெல்கின்றன என்பது போன்ற ஒரு கருத்து சகஜமாக வன்முறை எழுச்சிகளையே அரசியலாகக் கொண்டவர்களிடமும் இருப்பதை நாம் எங்கும் காண்கிறோம். அது தற்செயல் இல்லை.

ஆதவனுக்காக…

சாலையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொள்ளும் ஆணும் பெண்ணும், உரையாடுகிறார்கள். தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றொருவரை எடை போடுகிறார்கள். ஒன்றாக நீந்துகிறார்கள். நடன விடுதிக்குச் செல்கிறார்கள். காமத்தைப் பற்றி எழுதுவதும் காமத்தை தூண்டுவதுபோல் எழுதுவதும் ஒன்றல்ல. ஆதவன் பின்னதைச் செய்யவில்லை.

கூந்தப்பனை – வேர்களின் நீரூற்று

சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன். […] இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாக்குகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

ஒரு மகாராணியின் நினைவுக் குறிப்புகள்

மகாராணியும், அவர் குடும்பமும் வருடத்தின் பாதியை ஐரோப்பாவில் கழிக்கின்றனர். அவர்களது பேச்சுகள் முழுக்க Bentley கார்களும், சூதாட்ட விடுதிகளும், விருந்தினர்களுக்கான முடிவிலா கேளிக்கைகளும் நிறைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் அவர்களுக்கென்று விருந்தினர்கள் யாரும் இல்லாதபோது இந்தியாவிற்குத் திரும்பி இங்குள்ள விருந்தினர்களை உபசரிக்கின்றனர். தனி விமானத்திலோ அல்லது தங்களுக்கென்றே பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட P&O நிறுவனத்தின் கப்பலிலோ பயணிக்கின்றனர். இந்த களேபரங்களுக்கிடையே தங்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ள அவர்களுக்கு எப்படி நேரமிருந்திருக்கும்?

முறுக்கேறும் உண்மைகள் – அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்

கல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள்.

இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்

ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள்.

பூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

என் நண்பர் ஆத்மாநாம் – ஸ்டெல்லா புரூஸ்

‘என் நண்பர் ஆத்மாநாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இக்கட்டுரைகளில் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு விதத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரணம் வந்து போகிறது. தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை எந்தப் பாசாங்கும் இல்லாமல், நேரடியாகச் சொல்லிச் செல்லும் எளிமையும், ஆன்மிக நாட்டமும், தீவிர இலக்கிய வாசிப்பும், வெகுஜன இலக்கியவாதிகளிடம் நாம் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள். ஒருவேளை ஸ்டெல்லா புரூஸ் வெகுஜன இதழ்கள் பக்கம் செல்லாமல், தீவிர இலக்கியம் பக்கமே நின்றிருந்தால், தமிழுக்கு ஒரு சிறந்த இலக்கியவாதி கிடைத்திருப்பாரோ என எண்ண வைக்கிறது இப்புத்தகம்.

ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்

ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான்(ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.

இரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்

நித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;

இரு புத்தகங்கள்

பொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று வளர்கின்றன: அவரது கற்பனை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது.

யானைகளுடன் பேசுபவன்

யானைகளின் அதிசய தொலை தொடர்பு திறமையை அடிக்கோடிடும் இன்னொரு சம்பவம் சூடானில் நடந்திருக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இருபது வருடங்களாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் யானைகள் தந்தக்களுக்காகவும் மாமிசத்திற்காகவும் கொடூரமாக வேட்டையாடப்படுகின்றன. இதன் விளைவாக பெரும் திரளாக யானைகள் சூடானிலிருந்து பல நூறு மைல் தொலைவிலுள்ள கென்யாவிற்கு இடம் பெயர்கின்றன. ஆனால் போர் நிறுத்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி மீண்டும் சூடானுக்கு வந்து விடுகின்றன. சூடானில் அமைதி திரும்பியது என்பது எப்படியோ அந்த ஒட்டுமொத்த யானைக்கூட்டத்துக்கும் தெரிந்து விட்டிருக்கிறது!

நடந்தாய் வாழி காவேரி – காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி

எந்த பயணத்துக்கும் இருக்கும் கிளைப் பயணங்கள் போல், இவர்களது பயணம் காவிரியின் பல தாத்பரியங்களை பூவிதழ் போல் விரித்துக் காட்டுகிறது. காட்டாறு போல் பாறையைப் பிளந்து விரையும் தலைக்காவிரி, சிவசமுத்திர பகுதியாகட்டும்,வறண்டுப் போன தமிழ்நாட்டுப் பகுதிகளாகட்டும் நதியின் போக்கை மட்டும் இவர்கள் ரசிப்பதில்லை. பயணத்தின் பல முகங்களாக நதிக்கரை ஓரம் வாழும் மக்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் பிரயோகங்கள், இயற்கை வளங்கள், காவிரியின் செழிப்பு என எல்லாவற்றையும் ரசித்திருக்கிறார்கள். அவற்றை பயணக்கட்டுரைகளில் மிக விரிவாகப் பதிந்திருக்கிறார்கள்.

‘உதய சூரியன்’ – தி.ஜானகிராமனின் ஜப்பான்

நாங்கள் போன சமயம் இலையுதிர் காலம். செர்ரி போன்ற மரங்கள் எல்லாம் தகதகவென்று எரியும் பொன் போலச் சுற்றிலும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. இலைகள் அப்படித் தங்கமாக மாறி, தாமிரமும் ஆரஞ்சும் மஞ்சளும் சிவப்புமாகப் பல வர்ணத் தீயைப் போல மைல் கணக்கில் அடி வானம் வரையில் பரந்து ஜொலிக்கும் அந்த வனப்பை நான் கண்டதில்லை. உயரமும் அந்த வர்ண நெடும் பரப்பும், தனிமையும் மெல்லிய பட்சியோசையும் புறக் கண்ணை ஊடுருவி, ஒரு அமானுஷ்யமான அந்தராத்மாவில் ஆழ்ந்து தோயும் அனுபவமாக, மறதியாக, மேலும் மேலும் ஆடிச் சென்றுகொண்டே இருந்தன. வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. திறந்தால் அந்த அமைதி, ஆனந்தம், லயம் எல்லாம் கெட்டுவிடும் போலிருந்தது.

வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும், புத்தக வெளியீட்டு விழா

“வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்தத் தொகுதி அவரது பங்களிப்பை அனைத்து கோணங்களிலும் அணுகி, அதன் நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஐம்பது ஆண்டு கால விமரிசனக் குரலை அதன் எதிர்வினைகளின் வழியாக அடையாளப்படுத்தும் இந்த நூல் இவ்வாண்டு மட்டுமல்ல, தமிழில் இதுவரை வெளிவந்த எந்த நூலுக்கும் இணையான முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இதைத் தொகுத்த திரு பா.அகிலன், திலீப் குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.

‘மரணம் மற்றும்…’ கன்னடச் சிறுகதைகள்

இக்கதைத் தொகுப்பில் பாராட்டப்பட வேண்டியது அதன் சரளமான அம்சம். சரளம் என்றால் தன்னிஷ்டத்துக்கு மொழிபெயர்த்து மூலக்கதையைக் காணாமலடிப்பது அல்ல. தீவிரமான கதைகளில் உரையாடல்களைத் தூயத் தமிழிலும், கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த கதைகளில் ‘இயல்பான’ பேச்சுத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார் நஞ்சுண்டன். கெளடர் என்பதாலேயே கொங்குநாட்டுக் கவுண்டர் வட்டாரவழக்கில் உரையாடல்களை அமைத்துவிட்டு அதை ‘மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம்’ என்றெல்லாம் நஞ்சுண்டன் சொல்லியிருக்கலாம்.

ஆர்தர் ஆஸ்போர்னின் ரமணர்

ஆஸ்போர்னின் இப்புத்தகத்தில் எழுதியுள்ள மொழி மிகப் புதிதாய் இன்றும் இருக்கிறது. ஒரு காலமின்மையை (timelessness) எவரும் உணர முடியும். சுத்தானந்த பாரதியின் மொழி இன்றில்லை. இன்று படிக்கும் ஒரு மனிதருக்குச் சலிப்பு தட்டும் நடை. ஆனால், ஆஸ்போர்னைப் படிக்கும் எவரும் அதன் ”இன்றைய” மொழிநடையினால், மிக எளிதாகப் படித்துச் செல்லமுடியும். அதே போல் வாக்கியங்களின் அமைதியும் அவரின் மொழியாளுமைக்குச் சான்று.

வரலாற்றின் துணையோடு ஒரு பயணம்

பண்டைய இந்தியாவில் புதியவர்களைச் சந்திக்கும்போது `தாங்கள் எந்த நதியுடன் தொடர்புடையவர்?’ எனக் கேட்கும் வழக்கம் இருந்ததாம். தண்ணீரை வணிகமாக மாற்றியதில் அரசுக்கும், பல நாட்டு தொழிற்சாலைக்கும் இருக்கும் தொடர்பை விளக்குகிறார். பல தகவல்களுக்கு நடுவே தினம் 6,350 லட்ச லிட்டர் கங்கை நீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பப்படுகிறது எனும் தீற்றல் செய்தி திடுக்கடைய வைக்கிறது.

புத்தகப் பரிந்துரைகள் – 2011

சென்னையில் வருடந்தோறும் நடைபெறும் புத்தகக்கண்காட்சி இந்தமுறையும் சென்ற வாரம் ஜனவரி 4-ஆம் தேதியிலிருந்து நாளை மறுநாள் 17-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சியைச் சுற்றியதிலும், நண்பர்களின் பரிந்துரையின் பேரிலும் கிடைத்த சில குறிப்பிடத்தக்க படைப்புகளின் பட்டியல் இது. கடைசி இரு தினங்களில் கண்காட்சிக்குச் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் மிக மிக நிறைவான விஷயம் தேர்ந்த இலக்கியவாதிகளின் சில புத்தகங்கள் நல்ல முறையில் விற்பது.

விட்ட ஷட்ஜம்

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் – இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை.

அக்கமகாதேவியின் வசனங்கள்

நிலையான வாழ்வுக்கு மல்லிகார்ஜூனனே அடைக்கலம் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அவ்விதமான எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்கொள்வது எளிதான செயலல்ல. வேதனையானது. நெருப்பில்லாத சூட்டில் வெந்து கருகுவதுபோல. வடுவில்லாத காயத்தல் நொந்து கலங்குவதுபோல. எவ்விதமான புவியியல் இன்பமும் இல்லாமல் வாடிவதங்குவதுபோல.

ஆழியிலிருந்து ஆகாயத்துக்கு

இமயமலை மீதிருக்கும் தீராத காதலாலும், தன் முந்தைய பயணங்கள் வழியே இந்தியாவைக் குறித்து நன்கு அறிந்திருந்ததாலும், கங்கை நதி ‘இந்தியாவின் இதயம்’ என்பதையும், அவர் மேற்கொள்ளும் சாகசப் பயணம் ஒருவிதத்தில் ‘கலாசார யாத்திரை’ என்பதும் ஹிலரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அப்பயணத்தில் யாருக்குமே எளிதாகக் காணக் கிடைக்கும் அழுக்கடைந்த வாழ்க்கையைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லவில்லை அவர். ஆனால் அதே நேரத்தில், பெரும்பாலான மேற்கத்திய எழுத்தாளர்கள் போல இந்த அழுக்கையும், துயரத்தையும் மிகைப்படுத்தாமல், இந்தியாவைக் குறித்து இழிவாகப் பேசுவதில் மகிழ்ச்சியடையாமல், ‘இது இப்படியிருக்கிறது’ என்று தன்னுடைய பார்வையை மட்டுமே பதிவு செய்கிறார் ஹிலரி.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை' முன் வைத்து…

1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.

தமிழரும், தாவரமும்

‘தமிழரும், தாவரமும்’ என்றொரு புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. கண்ணில் பட்ட இடம் பொது நூலகம், தற்செயலாக. நூலகர் என் வாசகர், உறவினர், நண்பர். எனவே அவர் பெயரில் பதிவு செய்து எடுத்துக்கொண்டு வந்தேன். அந்தப் படியின் முதல் வாசகன் நான். பெரும்பாலும் இதுபோன்ற நூல்கள், கிராம நூலகங்களில் ஒரு வாசகனால் கூட எடுத்துப் புரட்டிப் பார்க்கப்படும் யோகமற்ற சோகத்தில் வெறிதே உறங்கிக் கிடக்கின்றன. இன்னொரு வாசகரால் படிக்கப்படாமலே போய்விடும் சாத்தியமே அதிகம்.

விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்

பெருஞ்சொல் அகராதி தொகுதி இரண்டும் நான்கும், சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் தொகுதிகள் ஒன்றும், இரண்டும், நான்கும் வாங்கினேன். விற்பனை செய்யும் ஊழியர் பெருந்தன்மையுடன் இருபத்தைந்து விழுக்காடு கழிவு செய்து பில் கொடுத்தார். மேலதிகம் தகவல் ஒன்றும் சொன்னார். பேரறிஞர், மாமேதை, இன்னாட்டு இங்கர்சால், தென்னாட்டு பெர்னாட் ஷா என்றெல்லாம் அறியப்பட்ட அண்ணாதுரை பிறந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஐம்பது சதமானம் தள்ளுபடி என்று. வேறு எந்தத் தமிழ்க் கொம்பன் பிறந்த மாதமானாலும் இருபத்தைந்து விழுக்காடுதான். வரும் செப்டம்பரில் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

க.நா.சுப்பிரமணியன் பற்றிய புதிய நூல்

க.நா.சு தொகுத்து வெளியிட்ட நூல்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய விரிவான அறிமுகக் கட்டுரை இருக்கும். இலக்கியக்கட்டுரைகள் என்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்று ஒரு சம்பிரதாயம் ஏற்பட்டுவிட்டது. க.நா.சு இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் அனைவரும் அந்த
விவாதத்தில் பங்கு பெறவேண்டும் என்று நினைத்தவர். ஆதலால் எளிய நடையில் அவருடைய கட்டுரைகள் இருக்கும்.

வரலாற்றில் அடியோட்டம் தேடும் பழமலய்

பண்பாட்டுக்கலகங்களை தனி வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இலக்கியத்திலும் கேட்கிறார்கள்.அந்த வாழ்க்கை நோக்கும், அந்த மொழிநடையும் தான் செல்வாக்கில் இருக்கின்றன. அது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. இது இங்கே மட்டுமில்லை. உலகமெங்கிலும் தென்படுகிற சமாச்சாரம் தான். நமது வாழ்க்கையே பின்நவீனத்துவமாகத்தானே மாறிப்போறிப்போயிருக்கிறது? இது பழமலய்க்குப்புரியாது. புரியாமலிருப்பதே பழமலய்யின் பலம்.

வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை

வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது. வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது.

கந்தர்வ கானம் – G.N.B நூற்றாண்டு மலர்

2009-ஆம் வருடம் ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் நூற்றாண்டு. அதை முன்னிட்டு ஒரு ‘கந்தர்வ கானம்’ என்றொரு சிறப்பிதழ் ஜனவரி முதல் வாரத்தில் வெளிவருகிறது. இசை ஆர்வலர், எழுத்தாளர் லலிதா ராமும், ஸ்ருதி இதழின் எடிட்டர் V.ராம்நாராயணன் இருவரும் இணைந்து இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள். இப்புத்தகத்தில் இதுவரை ஜி.என்.பி எழுதி வெளிவராத மூன்று கட்டுரைகளும், அவர் ஒரு ரசிகருக்காகப் பாடிய இறுதிக்கச்சேரியின் குறுந்தகடும் இடம்பெறுகின்றன.

‘குருவே சரணம்’ – கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜன்

அப்போது எனக்கு சுசீந்தரத்தில் வாசிக்க ஒரு வாய்ப்பு வந்திருந்தது. அங்கு நான் இருக்கும் போது ஒரு தந்தி வந்தது. அதில் டிசம்பர் 25ம் தேதி ராஜரத்தினம் பிள்ளையின் இடத்தில் அதாவது இரவு 9.30 மணிக் கச்சேரியில் மியூசிக் அகாடமியில் என்னை வாசிக்கச்சொல்லி. முக்கியமான நேரம், இரவுக் கச்சேரி, அதுவும் குருநாதர் வாசிக்கயிருந்த இடத்தில். என் மனதில் துயரமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது. குரு இறந்துவிட்ட வருத்தம் ஒருபுறம் என்றால், அவரின் இடத்தில் என்னை வாசிக்கச் சொல்லும்போது கிடைக்கும் ஒரு பெருமை.

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.