இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்

இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.

நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்

ஜமீலா நிஷாத் ஒரு கவிஞர். பல வண்ணங்களிலும் வேறுபட்ட வடிவங்களிலும் கனவுப்படிமங்களாகக் கவிதைகள் தன்னிடம் உருக்கொள்வதாக அவர் கூறுகிறார். அவரது கவிதைகளில் காணப்படும் கனவுத்தன்மை இது சாத்தியம்தான் என்று நமக்கு உணர்த்துகிறது. தன்மீது 1992க்குப் பிறகு திணிக்கப்பட்டதாக அவர் கருதும் முஸ்லிம் அடையாளத்தை பரிசீலனை செய்யும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக அவர் இறங்கியுள்ளார். கோயில்களுக்குச் செல்வது, தர்கா விழாக்களில் கலந்து மகிழ்வது என்ற தோழமையும் பகிர்வுணர்வும் நிறைந்த சூழலில் வளர்ந்த அவரால் ஹைதராபாதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிவரும் வெறுப்பையும் பகைமையுணர்வையும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

நான்காவது வகுப்பிற்குமேல் அவளை படிக்கவிடாத, கராச்சியைச் சேர்ந்த குடும்பத்தின் இளம் பெண் ; தினசரிகளை படித்து புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்துகொண்ட ஆர்வம்மிக்க பெண் ; தான் மேலே படிக்கா விட்டால் அறிவியலில் தான் கண்டுபிடிப்பதற்கென்று எதுவுமே இல்லாமல் போய்விடுமா என்று கவலை கொண்ட பெண் ; பிரிவினைக்குப் பின், இருபத்தியிரண்டு வயதில், ஐந்து சகோதரிகளும் ஐந்து சகோதரர்களும் கொண்ட தன் குடும்பம் பிழைக்க ஏதேனும் ஒரு வழி தென்படாதா என்று பம்பாய் தெருக்களில் தன் சகோதரனுடன் அலைந்து திரிந்த பெண் ; ஆராய்ச்சிக்கூடத்தில் அலுப்பே கொள்ளாமல் உழைத்த ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி; அறிவியல் அறிவு மூலமாக தான் அறிந்து கொண்டதெல்லாம் புறவுலகம் பற்றியதுதான் என்பதால் சுயத்தின் தன்மையை அறிய முயலும் ஒரு சந்நியாசி – சாந்தூ குர்னானியின் கதையிலிருந்து உருவாகும் பலமும் உறுதியும் கொண்ட பிம்பங்கள் இவை. இந்த வாழ்க்கைக் கதையிலிருந்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பெண்களின் கல்வித் தேர்வு பற்றியும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல்துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் நாம் அறிகிறோம்.

சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.