ராஜேஷ் கன்னா

ராஜேஷ் கன்னாவை பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் நான் முதலில் கவனித்தேன். இத்தனைக்கும் எனக்கு உடனே முன்னால் இருந்த வரிசையில் தான் இருந்தான். மூன்று நாற்காலிகளும் மூன்று பெஞ்சுகளுமாக ஒவ்வொரு வரிசையும் இருக்கும். நான் நடைபாதையை ஒட்டிய நாற்காலி என்றால், அவன் என் முன் வரிசையில் சுவரை ஒட்டிய நாற்காலி. எங்கள் வரிசைகளே வகுப்பின் ஓரத்தில் இருந்தன. அவனுக்கும் இரு பெஞ்சுகள் முன்னாடி தான் ஜன்னல் இருந்தது என்றாலும், அங்கு பார்க்கும்போது கூட அவனை கவனித்தது இல்லை.

பின்தொடரும் காலம்

பந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாக கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், அழைத்துச் செல்கிறேன் என்றார். அழைத்து வருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும் வரையில் இருந்தது.

பரிசு

பாட்னாவில் இருந்து கமிஷனர் வில்லியம் டெய்லர் துரை ஒவ்வொரு முறை லகிசராய் வரும்போதும் கங்கு சிங்குடன் வேட்டைக்குப் போவது வழக்கம். இருவருக்குமிடையே இருந்த வேட்டை ஆர்வம் ஆழமான நட்பை ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்த ஒவியராகவும் இருந்த டெய்லர் துரை வரைந்த கங்கு சிங்கின் உருவப்படம் வரவேற்பறையை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. டெய்லர் துரையின் முயற்சியால் முங்கேர் நகரின் கமிஷனரின் கீழ் இருந்த லகிசராய் மற்றும் சுற்றியிருக்கும் இருபத்தி ஐந்து கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமை கங்கு சிங்கின் குடும்பத்திற்கு கிடைத்தது.

அப்பா

ராதிகாவின் பொறுப்பில் இருந்த ப்ரொஜெக்டில் பெரிய குளறுபடி ஒன்று ஏற்பட்டு அதனால் எங்கள் நிறுவனத்திற்கும் அந்த செல் போன் கம்பனிக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது. ராதிகா முகம் சில நாட்களுக்கு பேய் அறைந்தது போல் இருந்தது. அந்த தவறுக்கு அவள் இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவாள் என்று பரவலாக பேசப்பட்டது. ராஜ் எங்களுடன் மதிய உணவிற்கு வருவதை நிறுத்தினார். மிகுந்த சோர்வுடன் சென்று கொண்டிருந்த தினங்கள் அவை. குறிப்பாக ராதிகாவிற்கு.

நிர்வாண நடிகன்

அசோகன் தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு, மனதளவில் பால்சனுடன் ஒரு நெருக்கத்தை எற்படுத்திக்கொண்டு, “பால்சன் நீ வெறும் நடிகன் அல்ல. மிகச் சிறந்த உண்மை நடிகன். அதிலும், மிகச்சிறந்த உண்மை நிர்வாண நடிகன்” என்றார். பால்சனுக்கு அசோகன் கூறியது புரியவில்லை. அசோகன் தொடர்ந்தார். “ரேகாகூட, அங்கீகாரம்தான் ஒரு நடிகனை நடிகனாக தொடரச் செய்கிறது என்றார். ஆனால் நீயோ எந்த அங்கீகாரமும் இல்லாமல், நடிப்பதை விட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டபின்னும், தொடர்ந்து நடிக்கிறாயே, நீதான் உண்மை நடிகன்” என்றார்.

‘ஸீன்’ பிச்சையும், சில மலையாளப் படங்களும்

பிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ’’இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…’ என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ‘‘இப்ப பாரு குளிக்கிற ஸீன…” என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.

நிலை

அவர், அவனை கூர்மையாக பார்த்தார். “உண்மைதான் தம்பி, பழக்கமான பாதையில் தொடர்ந்து இடைவிடாது போறதில் உள்ள நிறைவு, புதிய பாதையில் கிடைக்காது. ஏற்கனவே பார்த்த இடங்கள், பார்த்த மனிதர்கள், பேசிய பேச்சுக்கள், இதுக்கெல்லாம் உள்ளே புகுந்து பார்க்கும்போது பிடிபடும் விஷயங்கள், புதிய இடத்திலும், புதிய மனிதர்களிடமும் கிடைக்கும் என்று நான் நம்புவதில்லை”.

ராதேஷ்யாம்

வெளியே சற்று குளுமையாக இருந்தது. வாகனங்கள் இரைச்சலும், புகையுமாகப் போனது கூட அவரை எரிச்சல் படுத்தவில்லை. அனுராதாவின் சிறப்பு குணாதிசயங்களை எடை போட்டு இவள் ஏன் ராதையின் அம்சமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விடை தேடிக் கொண்டே நடந்தார். தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட பணிகளை திறம் பட கையாண்டு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளம், விடுப்பு மருத்துவச் செலவு போன்ற பலதரப்பட்ட பணிகளை தாமதம், மற்றும் பேதமில்லாமல் சிரித்த முகத்துடன் செய்து கொண்டிருந்த அவளும் ராதையின் ஒர் அங்கம்தான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்.

நீரில் கரையாத கறைகள்

ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…

நம்பிக்கை

காசியில் கங்கை புரண்டதைப் பார்க்கவும் பாட்டியின் கண்களில் நீர். எதோ இத்தனைக் காலம் பிரிந்த ஒருவரைப் போல்.. பேசவேயில்லை. அங்கும் ஒரு படகுக்காரன். அவன் தான் விளக்கியவாறே வந்தான். சார் இங்கே காக்க கத்தாது, பூ மணக்காது, பொணம் வாடையடிக்காது. கொஞ்சம் காட் லே குளிக்கலாம் மத்த இடம் எல்லாம் பொணம் எரிக்கத்தான் என்று தொடர்ந்தான். படகில் சென்றவாறே பார்த்த போது அவன் கூறுவதின் நிதர்சனம் தெரிந்தது.

மஹாபலியின் வருகை

அறையின் மரத்தடுப்புகளில் பொருத்தபட்டிருந்த கண்ணாடி பேனல்களின் வழியாக கிளையின் ஊழியர்கள் மற்றும் பல கஸ்டமர்களின் முகங்கள் தெரிந்தன. சில முகங்களில் வியப்பு, சில முகங்களில் வருத்தம், சில முகங்களில் கோபம் என்று மாறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள். இவற்றில் எது தன்னை மையப்புள்ளியாக கொண்டது என்று பாலுவிற்கு புரியவில்லை. ஆனால், இனம் புரியாத ஒரு வித அச்ச உணர்வு முதன் முறையாகத் தோன்றியது. இது நாள் வரை இருந்த கலக்கம், அழுத்தம், குழப்பம் எல்லாம் இந்த அச்ச உணர்வின் முன்னோடிகளோ!

ஜன்னல்கள்

காரின் ஏ சி யை அணைக்க வேண்டாம் என்று சொன்னேன். சீட்டில் சாய்ந்து கண்ணை மூடி கிடந்தேன். யாரோ என்னப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரக்ஞை! கண்ணைத் திறந்தால், நேற்று சந்தித்த கிழவனும் கிழவியும் கார் ஜன்னலுக்கு வெகு அருகில் நின்று கண் மூடிக் கிடந்த என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெகுளாமை

பெரியசாமிக்கு இந்தத் துறையில் கிட்டதட்ட பதினோரு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம்.`பொய்` அனுபவ வருடங்கள் கலக்காமல் முறையாக கேம்பஸ் இண்டர்வியுவில் நுழைந்து முதல் ஐந்து வருடங்கள் புரோக்ராமராகவே இருந்தார், கடுமையாக, அதிகம் பேசாமல் உழைத்தார். மாடுல் லீட், டீம் லீட், ப்ராஜெக்ட் லீட் என்று படிப்படியாக ப்ராஜக்ட் மேனேஜராக மௌன உழைப்பு. இப்போதா, துறைக்கு வருபவர்கள் இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டால் போதும் லீட் பொசிஷன் எதிர்பார்க்கிறார்கள். கோட் (code) அடிக்க மாட்டார்களாம். வளர்ந்துவிட்டார்களாம். மேற்பார்வைதானாம். ராஸ்கல்கள்!

பைரவன்

அவன் மனம் நாய்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயம் தனக்கு எப்படி வந்தது என்று யோசித்தான். அவனின் ஆழ்மனம் முதலில் அந்த இடது முழங்கால் நாய்க்கடி கதையை அவனிடமே சொன்னது. கொஞ்சம் வெறுப்பாய்த் தனக்குள் புன்னகைத்துவிட்டு உண்மையான காரணத்தைத் தன் நினைவுகளில் தேடினான். சரி வர ஒன்றுமே புலப்படவில்லை. அறியாத வயதில் வெகு சாதாரணமாய் என்றோ ஒரு நாள், “சரி நாளையிலிருந்து நாம் நாய்களுக்குப் பயப்படுவோம்” என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது!

புளியந்தொக்கு

சில நொடிகள் நின்று யோசித்தவன் ஒற்றையடிப் பாதை நோக்கி நடக்கத் தொடங்கினான். மகேஷும் செண்பாவும் ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர்ந்தார்கள். முட்புதர்கள் தாண்டி தெருவைக் கடந்து மூவரும் செண்பாவின் வீட்டை அடைந்தார்கள். முத்து படிக்கட்டிலிருந்தபடியே மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான். அவன் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். உதட்டின் முன் ஆட்காட்டி விரலை வைத்து செண்பாவிடம் சப்தம் ஏழாமல் பின் தொடருமாறு சைகை செய்தான். வீட்டின் பக்கவாட்டிலிருந்த அம்மிக் கல் அருகே சென்றவன் காற்சட்டைப் பையிலிருந்த புளியங்காய்களை எடுத்தான்.

மஷி பேனா

ஆங்கிலமும், வரலாறும் தான் அவர் பாடங்கள். அவர் இந்தியா வரைவது மிக வித்தியாசமாக இருக்கும் கீழே இருக்கும் தெற்குப் பகுதிக்கு ஆங்கிலத்தில் எழுத்தான ஒரு ’வி’ யைப் போடுவார். மேலே இருக்கும் வட இந்தியா ஒரு கெளபாய்த் தொப்பி. அந்த தொப்பியின் ஒரு புறத்தில் இருந்து ஒரு கோடு வரும். அந்த வளைந்த கோட்டில் மிஸோரம், நாகாலந்து, அஸ்ஸாம் மணிப்பூர் எல்லாம் அடங்கிவிடும். மேறகுப் பகுதி அம்போ…

பெண்கள், பெண்கள்!

“பின்னாடி பாத்தீங்களா அந்த மூணு வூடும் கட்டுனது எங்க அப்பாதான். அப்போல்லாம் நான் குட்டிப் பாப்பாவா இருந்தேன். அந்த வீட்டு மாமா மூணு பேருமே ஏரோப்ளேன் ஓடுமே அங்க வேலை பாக்கறாங்க. அந்த வீட்டுல கூட நான் வெளையாடியிருக்கேன்.”, நாங்கள் கேட்கிறோமா என்கிற அக்கறையின்றி அவள் சொல்லிக் கொண்டே போனாள்.

கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை

பதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் என தெரியாமல் மீண்டும் உள்அறைக்கு சென்று அமர்ந்துகொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது என சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தக‌த்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக‌ லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.

சிறுகதை

ஓ!! அந்த வீட்டுக்குள் கதை நுழைந்தே விட்டது. போர்வையை நனைத்தது வியர்வை…வாய் ஒட்டிக் கொண்டது. பேய்க்குப் பயப்பட்டால் கூடத் தாயத்தோ, திருநீறோ, மந்திரமோ…கதைக்குப் பயப்படுவதை என்ன சொல்லிப் புரிய வைக்க.. என்ன செய்து தடுக்க முடியும்.

ஒற்றை ரோஜாச்செடி

பூத்திருந்த ஒரு ஜோடி மலர் உதிர்ந்த பிறகே அடுத்த ஜோடி மலர் பூத்தது. ஒரே சமயத்தில் ஒரு ஜோடிக்கு மேல் பூப்பதில்லை. செடியில் மலர்கள் இல்லாத நாட்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதில்லை. அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் எங்கு போகின்றன, எப்படி ரோஜாக்கள் மலர்ந்தவுடன் தோன்றுகின்றன என்பது பெரும் புதிராக இருந்தது.

பிச்சி

சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.

விடுதலையாதல்!

அப்பாவுக்கு பக்கவாதம் என்று சொன்னார்கள். குழறிக் குழறிப் பேசினார். வலது பக்கக் கையும் காலும் உணர்ச்சியற்றுப் போயின. இடது பக்கத்தில் உணர்ச்சிகள் இருந்தன. ஆனால் மருத்துவர்கள் அதற்கு மருந்துகள் உண்டு என்றார்கள். கொஞ்ச காலம் ஆனாலும் பேசுவார், நடப்பார் என்றார்கள். அதெற்கெல்லாம் ஏராளமாகப் பணம் வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப சில நாட்களில் அப்பா தெளிவாக இருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அசையவும் புரளவும் செய்தார். அவள் நம்பிக்கைகள் வேர் பிடிக்கத் தொடங்கும்போது மீண்டும் சாய்ந்து விடுவார். ஆறு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.

திரவ ஒளி தேவதை

நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது.ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன்.

சதி பதி

வைகாசி பிறந்தால் மாரியம்மாளுக்கு முளைப்பாரிக் கும்மி. வானம் பொய்த்தால் மழைக்கஞ்சிக் கும்மி. வாழ்க்கையை முழுக்க முழுக்க சந்தோசமாக அனுபவிக்கப் பிறந்தவள் மாதிரி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தாள். மரம் ஏறித் தேங்காய் பறிப்பவளா இப்படிப் பூக்கட்டுகிறாள் என்று தோன்றும்படிச் சரம் தொடுப்பாள். சாமிக்குக் கலக்கமாகக் கட்டி சடைக்கு வைக்க நெருக்கமாகக் கட்டும்போதே நூலில் ஐந்து முடிச்சுப் போட்டுக் குஞ்சாரமாக்கி விடுவாள்.

பர்த் டே

அந்த வருடத்தில் வந்த ஓவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவ்வொருவரும் செய்த புதுமைகள், புதுமைகளாகக் காட்ட முனைந்த சிறுமைகள் என எல்லாம் அன்றைய இரவு சபையில் தாமனால் விவரிக்கப்படும். அதற்கு செவி சாய்ப்பது குடும்பத்தினரின் கடமை. அவன் விழிகள் விரிய ஓவ்வொன்றையும் சொல்லுவான். அதோடு அதனைப் பற்றிய தனது அடிக்குறிப்பையும் சேர்த்துக் கொள்வான்.

எட்டணாவில் உலக ஞானம்

மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையைச் செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள்.

மொழியின் கடைசிப்பெண்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம்தான் என்பதுபோல் இருந்தது. கடற்கரை மணலில் நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.

நாய்கள் பூனைகள்

தீர்ப்பு வந்த அதே மாலை, போலிஸ் வந்து அஷுவின் வீட்டை தட்டியது. குர்த்தா பைஜாமாவுடன் இருந்தவரை விலங்கிட்டு கைது செய்து சிறைக்கு கூட்டிக்கொண்டு போனது. நிறுவனத்திலிருந்து ஒரு மில்லியன் திர்ஹம் களவாடினார் என்று அஷுவின் மீது பொய்க்குற்றம் சாற்றியிருந்தார் சுலைமான்.

தானம்

நாம் விளையாடித் தான் பார்க்க வேண்டும் வாழ்க்கை விளையாட்டு. பேச வைக்க வேண்டும். சிரிக்க வைக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்பவர்களுக்கு அதெல்லாம் எதற்கு என்பது தான் என் பதில். இப்படிப் பட்டவர்களை தொடாமல் விட்டுச் செல்வது யாருக்கும் நல்லதில்லை. நாமாக முந்திக் கொண்டு எங்கோ திறந்திருக்கும் துவராத்தைக் கண்டு பிடித்து கசிவுண்டாக்க்கி கடலைக் கொண்டு வந்து விட வேண்டும்.

வேசி வீட்டுத் திண்ணை

வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

இடும்பைக்கூர் வயிறே…

இந்தியா கேட்.ராஷ்ட்ரபதி பவனைக் கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு பார்வை. நாடாளுமன்றம். வெளியே இருந்த குரங்குகள், உள்ளே போய்க் கொண்டிருந்த அரசியல்வாதிகள், வட்ட நீர்க் கொப்புளிப்பைச் சுற்றிப் பறக்கும் பறவைகள் ..எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நாங்கள் ரயில் ஏறும் போது தான் உறைத்தது குளிர் மட்டுமல்ல செலவும் நாங்கள் எதிர்பார்க்காததை விட அதிகம் ஆகியிருந்தது. அதிகம் என்ன ஒன்றும் இல்லாமல் ஆகி இருந்தது. ஆசிரியரிடம் போய்க் கடன் கேட்கலாம் என் நினைத்திருந்ததை ஏதோ தடுத்தது. கொஞ்ச நேரத்தில் பசி அந்த ஏதோவைத் தள்ளிவிட்டு அவரிடம் போய்க் கேட்டபோது அவரிடமும் பணம் இல்லை. பரிதாபமாக விழித்தார்.

சாமத்தில் முனகும் கதவு

வாசுகியை நினைக்கும் தோறும் அவன் உடல் இறுக்கம் கொள்வதை அறிந்திருந்தான். அவள் ஸ்பரிசத்தின் மென்மை ஒரு பெண்மையை கையாள்வது இத்தனை எளிதானதா என்ற எண்ணம் ஓடுவதை தவிர்க்கமுடியவில்லை. போகத்தில் ஒவ்வொரு சமயமும் அவள் இளகுவது எந்த உண்மையை அறியும் பொருட்டு என்று கடையின் இருண்ட அறையில் அமர்ந்து யோசித்திருக்கிறான். உச்சத்தில் அவள் கண்களில் தெரிவது வெறிகொண்ட மிருகத்தின் கண்கள் என்பதை பிறகு உணர்ந்து பயந்திருக்கிறான்.

முகங்கள்

நீங்கள் ஓமானியா என்று தெரியாமல் கேட்டு விட்டேன். நம்பர் ஒன் ஓமானி என்றார். அப்படியே விட்டுவிட முடியுமா ? அப்படியானால் நம்பர் டூ ஓமானி யார் என்று கேட்டேன். ரிங்பாரி என்று ஏதோ சொன்னார். நிச்சயம் கெட்ட வார்த்தையாக இருக்க வாய்ப்புள்ளது.

அம்மா

மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார்.

டபுள் டாக்டர்

சில புதிர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்ததால் அவரைப் பற்றிய எங்கள் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர் யார் ? எங்கிருந்து வந்தார் ? பிள்ளைகள் உண்டா ? தம் அடிப்பாரா ? ஏன் டிபார்ட்மெண்ட் ஆசிரியர் அறையில் போய் உட்கார்வதில்லை. எப்பொழுது பார்த்தாலும் லைப்ரரிக்கே போய் விடுகிறார். ஏன் டூருக்கு வரமாட்டேங்குறார். ஏன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படி முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம் தான். இருக்கட்டும் . பாடம் நன்றாக எடுக்கிறார் அல்லவா?

இருப்பு

உண்மையில் நான் இருப்பது கற்பனை செய்யமுடியாத அதிமகத்தான ஒரு மனித மூளையின் எண்ணற்ற மடிப்புகளுக்கிடையில் ஏதோ ஒரு இடுக்கில் என்று அறிந்தேன். மேலே கவிழ்ந்த அரைக்கோளமாய் மண்டை ஓடு தொட்டுக்கொண்டிருப்பதையும் மங்கலாகக் காணமுடிந்தது. இது என்னால் கொஞ்சம்கூட ஊகிக்கப்படவே முடியாதது என்று புரிந்தபோது மெல்ல என் திண்மையழிந்து, எடையிழந்து நான் இல்லாமலாவதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். மூளைக்குள் நானிருக்கிறேன் என்றால் என் உடல் எங்கே என்று கேட்டுக்கொண்டேன். அல்லது நான் என்பதே வெறும் எண்ணம் தானா?

கதைப் புத்தகம்

நேற்று வரை கதவு அங்கிருந்த ஞாபகம் இல்லை. எதுவரை நேற்று வரை என்பதே வெறும் மனக்கணக்கு தான். ஞாபகம் பற்றி கேட்கக்கூட வேண்டாம். ‘காலம்’ என்பது கட்டுப்படுத்தப்பட்டு, தண்ணீர், மின்சார விநியோகம் போல, தினப்படி வழங்கப்படும் போது, ‘காலக்கிரமமான நிகழ்வுகளின் தொகுப்பான ஞாபகம்’ என்பதற்கு அர்த்தமேயில்லை. உச்ச செயல் துறையிடம், ‘நேற்றை’ ‘நாளை’யாகவும், ‘ இன்றை’ ‘நேற்றா’கவும, ஒன்றை என்றாகவும் மாற்றும் தனிப்பிரிவு இருந்தது.

ஒரு மரம்; தனி மரம்

என் அறையில் நான். உறாலில் அவள். உள் அறையில் அவன். வீடே ஒரு நூலகமாய்த் தோன்றுகிறது. ஏகாந்த அமைதி. பல மணி நேரங்கள் இந்த வீடு இப்படி இருப்பதற்கு அனுபவப்பட்டிருக்கிறது. என் வீட்டிற்குப் பெயா; சாந்தி இல்லம். அது என் மனதை ஈர்த்த ஒரு ஏழைப் பெண்ணின் ஞாபகமானது. முட்டி முட்டிக் கேட்டிருக்கிறாள் சத்யா அது யார் என்று? அது என்னோடு தோன்றி என்னிலேயே அழியக் கூடிய ரகசியம்.

மானிடர்க்கென்றுப் பேச்சுப்படில்!

சித்தி பெயருக்கேற்ற கோதைதான், 75 வயதிலும் அழகும் மெருகும் குலையாமல், சிக்கென, சின்னப் பெண்போல காரியங்களைக் கண்ணும் கருத்துமாகச் செய்வாள். எப்போதும் யாராவது உறவினர் வீட்டு கல்யாண கலாட்டா நிரம்பிய சமையலறையிலோ, இல்லை குழந்தைப் பேற்றுக்காக அழைத்து வரப்பட்ட உறவினர் வீட்டுச் சமையலறையில் பத்திய உணவு தயாரிப்பதிலோ, பிறந்த குழந்தையைக் குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டுவதிலோ தன்னை மறந்திருப்பாள்.

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

மொட்டை மாடி அழகாகவே இருந்தது. யாராலும் மொட்டை மாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை, சிறியதோ, பெரியதோ அது அடைசலும் புழுக்கமும் அற்ற திறந்த வெளியில் நம்மை நிறுத்திவிடுகிறது. நிச்சயம் காற்று இருக்கும். பளிச்சென்று நம்மைச் சுற்றி வானம் வெள்ளையும் நீலமுமாக இறங்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும் மேகமாக இருப்பது நம்மை என்னவோ செய்யாமல் இராது. மொட்டை மாடியில் வைத்து யாராவது கோபப்பட்டிருக்க முடியும் என்று தோன்றவில்லை. மேலும், மழையும் வெயிலும் அடித்து அடித்து இந்தத் தளச் செங்கல்களுக்கு நேர்ந்திருக்கிறதை உற்றுப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடவும் கூடும்.

கைகழுவப்பட்டவன்

பாவம் டாக்டர் இன்னாசு. மருத்துவ விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இவரா பைத்தியம்? வெளியில் இருக்கும் படித்த பெரிய டாக்டர்கள்தான் பைத்தியம், என்ற உறுதியான எண்ணம் தெரசாவிற்கு ஏற்பட்டது. அதே நேரம் டாக்டரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்று வந்த ஒரு டாக்டரே இவரைக் கேலி பேசியபோது கிட்டத்தட்ட அவர் கழுத்தை நெறிக்கவே செய்து விட்டார் டாக்டர் இன்னாசு; இரண்டு மூன்று காவலாளிகள் சேர்ந்து அவரை எப்படியோ பாடுபட்டு அடக்கினார்கள்.

லீலை

தங்கள் மூதாதையர், காலத்தை வெல்ல, காலமே இல்லாத ஓரிடத்தில் வந்து நிலைபெற்றனர் என்பது மெல்ல மெல்லப் புரியும் தோறும் தேஜாவின் உடல் ஒளி வெப்பமாக அடங்காத அலைகளாக வெளியேறியது. தனக்கு முன் யாரும் இவற்றை உணர்ந்திருக்கிறார்களா என்று தேடி தன் ஆழ்மன அடுக்களில் இறங்கி தங்கள் ஒளிர்கிரகத்தின் நியமங்களில் நகர்ந்தான். அறிந்தவர்களின் மன அலைகள் இன்னும் ஆழத்தில் கிடப்பதை அவன் மனம் கண்டுகொண்டது. ஒருவேளை அவர்கள் எல்லாம் மனவிலக்கம் அடைந்து பிலத்திற்குள் சென்று விட்டார்களோ என்று நினைத்துக் கொண்டான்.

வம்ச விருட்சம்

தலைவர் வீட்டின் முற்றத்தில் உள்ள சாவடியில் அம்மாவையும் , அப்பாவையும் கட்டி வைத்துவிட்டார்கள். அண்ணன் சொன்னது மாதிரிச் செய்து விட்டான். அவனுக்கு எங்கள் சாதி மீது வெறுப்பா சாதிகள் மீதே வெறுப்பா என்று தெரியவில்லை. எங்கள் பக்கம் ஜாதியைச் சொல்லும் போது பிள்ளைமார் , நாய்க்கமார் , தேவமார் என்று மார் சேர்த்துச் சொல்வோம். அண்ணன் எல்லாவற்றையும் சொல்லி, எல்லாம் விளக்கமாறு என்பான். அப்பொழுது சிரித்தோம்.

விவல் அக்கா

அப்போதெல்லாம் நவராத்திரிக்கு எங்கள் அரைகுறை அக்ரஹாரத்து சிறுவர் சிறுமியர் அலங்கரித்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று தெரிந்தது தெரியாதது அறிந்தது அறியாதது என்ற பாகுபாடற்று சொல்லியும் பாடியும் சுண்டல் அள்ளிக் கொண்டு வருவோம். இப்படி இருந்த அக்ரஹாரத்தில் ஒரு தென்றல், ஆடவர் அனைவரையும், ஏன் பெண்டிரையும், மௌனமாக, ஆனால் ஒரு ஆழிப் பேரலையின் தீவிரத்துடன் தாக்கியது.

திறப்பு

சுருதி சுத்தத்தை கவனிக்கப் பழக்கப்பட்ட ஜெயந்திக்கு பாடுபவரே இசையாக மாறிய விந்தையை நம்ப முடியவில்லை. பக்தி பாவத்தை உணரப் பிரயத்தனப்பட்ட அவளது பயிற்சிகள் தன் முன் சிதறுவதைக் கண்டாள். பக்தியையும் தாண்டி அவரது பாடல் வேறெங்கோ சஞ்சாரிப்பதை உணர்ந்தாள். பாடலைக் கொண்டு நிறுத்தியிருந்த நிலையில் ஒவ்வொரு ஸ்வரமும் தனி இசைவெளியாக ஒலிக்கத் தொடங்கியது. எத்தனை அன்பையும், உணர்ச்சியையும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பாடகர் செலுத்தியிருக்க வேண்டும் என நினைக்க நினைக்க ஜெயந்தியின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் சுரந்தது.

ரிஸ்க்

கார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள். தொலைவில் நீலநிறக்கோடு. வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக்கு அது இனிய காட்சி. உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும். அதில் சற்று தாமதம். அதற்குள் நசிக்கு அவசரம். இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும். நழுவிச் செல்கிறாள். வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம். யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓகிறாள். ஆறு தெரியவேண்டுமே. எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை. அதை ஒதுக்குகிறாள். அங்கும் மேஜை நாற்காலிகள்.

இயலாமை

என்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.

வயிறு

உடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.

தர்ப்பணம்

அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான். சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும்.

மேகமூட்டம்

உண்மையில் பெரிய கவலை இருந்தது. இரண்டு வயது அஷ்வினை ஆஸ்பெர்கர் மையத்தில் விட்டு அரை மணி ஆகிவிட்டது. அதற்குள் விளையாட்டு, பேச்சு, பார்வைத் தொடர்பு என்று பன்னிரண்டு கோணங்களில் அவனை சோதித்திருப்பார்கள். சில நாட்களுக்கு முன், அஷ்வினின் பதினாறாவது க்ரோமோசோமை சோதித்தபோது ஒருசில உயிரணுக்கள் சாதாரணத்திலிருந்து அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன. அந்த வேறுபாடு ஆடிசத்துக்கு அடையாளமாக இருக்கலாம் என்பது சரவணப்ரியாவின் கருத்து.