சுரண்டல்

அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான்.

ஆச்சரியம்

கோப்புகளின் மேல் மட்டையில் ‘அவசரம்’ ‘மிக அவசரம்’ ‘உடனே’ போன்ற ஒட்டுப்பேப்பர் குறிப்புகளை அவரே ஒட்டி அனுப்புவார். அவருடைய கட்டளைகளை ஊழியர்கள் அவர் விதித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டுமானால் அவர்கள் அன்று வீட்டுக்கு போக முடியாது. அடுத்தநாளும் முடியாது. அவர்கள் கோப்புகள் கைகளில் கிடைத்ததுமே ஒட்டுப்பேப்பரை அகற்றிவிடுவார்கள். உடனே அவை சாதாரண கோப்புகளாக மாறிவிடும்.

பஸ் ஸ்டாண்ட்

எந்த ஊர் சென்றாலும் அவ்வூரின் பஸ் ஸ்டாண்டை தாண்டி அவன் சென்றதில்லை. சினிமா பார்ப்பதற்காக வெளியே செல்வான், அதிகபட்சம் அவ்வளவுதான். மீண்டும் வந்துவிடுவான். ஒரு ஊரில் கிடைக்கும் நண்பன் அந்த ஊரோடு சரி. அவன் எந்த ஊர் சென்றாலும் வாழ்விடமாக எப்போதும் நினைப்பது பஸ் ஸ்டாண்டைதான். வாழ்வில் காணும் சுகதுக்கங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் பஸ் ஸ்டாண்டிலே கண்டுவிட முடியும். ஒரு நல்ல அனுபவத்தை தேடும் ஒருவன் பஸ் ஸ்டாண்டை புறக்கணிப்பதில்லை என்பது அவன் கண்டுபிடிப்பு.

புதுக்கூடு

வீட்டுக்குப் போனதும் சொல்ல வேண்டியிருக்கிற சமாதானங்கள் குறித்து இப்போதே அவன் மனதிற்குள்ளாக கோர்வையாக்கி வைத்துக் கொண்டான். அவனது பொய்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். பொய் சொல்வதற்கேயுரிய சாமர்த்தியமும், மனதின் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் இருப்பதும் அவனுக்கு வாய்க்கவில்லை.

வாழ்க்கையின் அர்த்தம்

நசிக்கு சமீபகாலமாக வாழ்க்கையில் அதிருப்தி. மற்றவர்களின் விருப்பத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக எதாவது செய்ய ஆசை. ஆனால், அன்றுகாலை விழித்ததிலிருந்தே அது நடக்கவில்லை. ‘காப்பகத்திற்கு வரும் மற்ற பெண்கள் பார்ப்பதற்குத் தங்களுடைய அம்மாக்களைப்போல இருக்கும்போது நான் ஏன் வித்தியாசமாக இருக்கிறேன்?’ என்று படுக்கையில் படுத்தபடி யோசிப்பதற்குள் அவளப்பா கிளப்பிவிட்டார். பான்கேக் தின்பதற்குமுன் அதற்குக் கண், மூக்கு, வாய் வைத்து அழகுபார்க்க அவளம்மா நேரம்தரவில்லை.

ஆடுகளம்

முரளிக்கு பொதுவாகவே விளையாட்டுகளில் ஆர்வமில்லை. சிறுபிள்ளையிலிருந்த அப்படித்தான். நாடே கொண்டாடும் கிரிக்கெட்டைக் கூட அவன் அதிகம் பார்த்ததில்லை; விளையாடியதுமில்லை. இதுவரை அவன் வாழ்க்கையில் மூன்றே முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறான். மற்ற விஷயங்களில் எல்லாம் சகஜமாக பழகுபவன், விளையாட்டு என்று வரும் போது ஒதுங்கிவிடுவான். சில நேரங்களில் ஒதுக்கிவிடுவார்கள். அப்போது மட்டும் கொஞ்சமாய் வலிக்கும்.

கோமாளி

கோமாளி என்று என்னைக் கூப்பிடுவது சிரமமாக இருக்கிறது கோமு என்று கூப்பிடுகிறேன் என்று ஜெ. ஊர்மிளா என்னிடம் வேண்டிக்கொண்டாள். முதல் ராங் வாங்கும் உஷா என்னை ஒரு நாள் அழைத்து ஊர்மிளா எதாவது சொன்னால் அல்லது அடித்தால் நன்றாகத் திருப்பிக்கொடுத்துவிடு என்று கோபமாகச் சொன்னாள். நான் அவளிடம் இருந்து நோட்டு பென்சில் எதுவும் வாங்கினதேயில்லையே எதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றேன். தலையில் அடித்துக்கொண்டு உனக்கு கோமாளி பெயர் பொருத்தம்தான் என்றாள்.

மழை

மழை ஆனந்தம். காயங்களையும் சூட்டையும் எரிமலைகளையும் ஆதரித்து அரவணைக்கும் அரு மருந்து. மழை தாய். மழையின் நாதம் சுகம். மழையில் எல்லா பயத்தின் கங்குகளும் நனைந்து போய் விடுகின்றன. அப்பாவும் அவனும் எல்லா வீட்டுக்கும் பொதுவான மொட்டை மாடியில் எத்தனையோ தரம் மழையில் ஆடி இருக்கிறார்கள். அந்த வாசனை. அதன் வண்ணம். கண்களை மூடிக் கொண்டு மழையின் வாசனையை அனுபவித்துக் கொண்டு அதன் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

தோசை

எப்போதும் போல அன்று பள்ளிக்கு சென்றேன். எல்லோரும் ஏதோ பரீட்சைக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். ஸ்கூல் மணி அடித்த போது தான் இயற்பியல் வகுப்பு தேர்வு என்று முந்திய வாரம் வாத்தியார் சொன்னது என் மண்டையில் ஒலித்தது. வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்றால் முடியாது. மயக்கம் வந்தால் தான் அனுப்புவார்கள். மயக்கம் வருவதற்குள் தேர்வு ஆரம்பித்துவிடும்!

வரம்

ஜெயப்பிரகாஷையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவன் நிறைய கெட்ட வார்த்தை பேசுவான். அவனை மாதிரி யாராலும் குத்துச் சண்டை போட முடியாது. அவன் சட்டை எப்போதும் கிழிந்தே இருக்கும். அதன் வலது புறக் காலர் அவன் வாயில்தான் இருக்கும். அவன் அருகில் சென்றாலே அந்த எச்சில் வாடை அடிக்கும்.

பில்லா

மெதுவாகத்தான் படியில் ஏறினேன். ஏறும் போது காலுக்கடியில் என்னவோ இருக்கிறதே என்று நினைப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. வாலை மிதித்திருக்கிறேன். பில்லா அப்படியே ‘குபீர்’ என்று என் மீது பாய்ந்தபோது நான் “ஐயோ” என்று கத்திக்கொண்டு ஓடப் பார்த்தேன். பயத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். பில்லா கடித்துவிட்டது.

தேடல்

நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!

தந்தைக்குக் கடன்

“சூதாட்டம் என்று இந்தக்காலத்தில் தனியாக எதுவுமில்லை. ஆனந்த் ஒரு கம்பெனி ஆரம்பிக்கப்போகிறான். அதில் வெற்றி நிச்சயமா? இல்லையே. வெள்ளிக்கிழமை காலையில் நீ தூக்கத்தைக்கெடுத்து, குளிரில் இரண்டுமணிநேரம் நின்றாய். குறைந்த விலைக்கு வாஷர்-ட்ரையர் கிடைக்காமல் போயிருந்தால்… இழப்பைத் தவிர்க்க நினைத்தால் எந்த முயற்சியிலும் இறங்கமுடியாது.”

மறுபடி

பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்டெல்லாவுக்கு காலையில் ஒரு கடிதம் வந்தது. கவுன்ஸிலரை சந்திக்க வரவேண்டும் என்று கோடிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் ஒரு மாதிரியான அந்நியத்தனத்தை உணர்ந்திருந்தாள் ஸ்டெல்லா. அவள் காலத்து இந்திய பள்ளிக்கூடங்கள் போல ஒட்டடையே அடிக்காத, குப்பை எங்கும் வெளியில் கிடக்க, அழுக்கும் அசிங்கமுமாய் இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ ஒரு அன்னியத்தன்மை வந்ததாக ஸ்டெல்லா உணர்ந்திருந்தாள்.

இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்

அவருக்கு திடீரென்று சென்னையில் மகனும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டுமே என்ற கவலை வந்தது. இது வழக்கம்தான். நான்கைந்து முறை குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கையில் யாருக்காவது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கூட அலைக்கழித்ததுண்டு. ஒரு தரம் சின்ன வயசில் டெல்லிவரை போனவர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லையோ என்று தோன்றியதால் மறு நாளே திரும்பி வந்தார். அப்பாவுக்கு அப்போது ஒன்றும் இல்லை. இந்த சம்பவத்தை நினைத்து மனதில் திடீரென்று தோன்றும் பயத்தை தர்க்கரீதியாக விட்டுவிட முயற்சிப்பார்.

வினை

வயது வித்யாசம், வேலை வித்யாசம், கல்யாணம் ஆன பெண்மணி போன்ற பகுத்தறிவின் பாற்பட்ட நினைவுகள் அவனுக்கு எழாமலில்லை. ஆனாலும் தான் ரொம்பப் பாதுகாப்பான இடத்திலிருந்து குறி பார்க்கிறோம் என்ற நிச்சயமும், அடிப்படையில் ஒரு இளைஞனான தனக்கு இருக்கும் அட்வான்டேஜ்களும், இது போன்ற சூட்சுமமான வாய்ப்பைக் கண்டு பிடித்த தன் திறனும் அவனை கர்வம் கொள்ள வைத்தன.

பூவா தலையா

ஒருவழியாக ராத்திரி பத்து மணிக்கு பேனரில் இருந்த தலைவர் உயிர்பெற்றுப் பேசத் தொடங்கினார். பேனரில் இருந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபின், “தாய்மார்களே, பெரியோர்களே… அலைகடலென திரண்டு வந்திருக்கும் அன்பு நெஞ்சங்களே… வாழ்த்துச் சொன்ன.. ” என்று ஆரம்பித்துவிட்டு, எதிர்கட்சிக்கு ஏகப்பட்ட சவால் விட்டு, ஏதேதோ பேசிவிட்டு இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்” என்று சொன்னபோது பதினொன்றை. கூட்டம் மெல்ல கலையத் தொடங்கிய போது, கோயிலுக்குப் பின்புறம் பிரியாணி வாசனையை சாராய வாசனை அடிக்கத் தொடங்கியது.

அதனால்தான்…

‘பப்ளிக் ஸ்கூல் போனப்புறம் கூட்டு, ரசம்னு நம்ம சாப்பாடு எதையும் தொடமாட்டான், பாத்திண்டே இரு!’ என்று அனுபவப்பட்ட சரோஜா எச்சரித்தது சரிதான் போலிருக்கிறது. சூரன் கின்டர்கார்டன் போகத்தொடங்கி ஒருமாதம்கூட ஆகவில்லை, அதற்குள் இட்லி தின்ன முரண்டுபிடிக்கிறானே.

குற்றம்

இறந்த காட்டுப்பன்றிகளின் கொழுப்பில் நானும் நிலாவும் உயிர்வாழ்ந்தோம். பிறகு பாம்புகளை வேட்டையாடி உண்டோம். அந்த கோடைக்காலத்தின் முடிவில் நிலா ஒரு நல்ல வேட்டைக்காரியாக ஆகியிருந்தாள். நிரந்தரமாக இடுப்பில் தொங்கும் கத்தியும் கையில் இருக்கும் ஈட்டியுமாக காணாமல் போன வன தேவதை போல உருமாறியிருந்தாள். அவளது நிறம் வெயிலில் அலைந்து கருத்திருந்தது.

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

அவன் அப்பா எடுத்த எடுப்பிலேயே நம்ப ஜாதி என்ன அவங்க ஜாதி என்ன, நம்ப தெய்வம் என்ன அவங்க தெய்வம் என்ன என்று ஆரம்பித்து நம்ப அந்தஸ்து என்ன அவங்க அந்தஸ்து என்ன என்று வந்து நின்றார். தமிழின் அம்மா இராமலிங்க சுவாமிகளின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. மீன் என்று சொன்னால் வாந்தி எடுத்து விடுவாள். ஆனாலும் தன் ஒரே மகனுக்காக அவன் சந்தோஷத்துக்காக
எதையும் செய்ய சித்தமாயிருந்தாள். கணவரையும் அவள் ஆதியோடந்தம் அறிவாள். அவர் மனசின் பாசம் எப்பேற்பட்ட ஊற்றினது என்பது அவளுக்குத் தெரியும்.

மணம்

பீட்டரின் அப்பா யார் என்று தெரியாது. ஆனால் லூர்தின் கணவனைத்தான் அப்பன் என்று பீட்டர் சொன்னான். லூர்தின் கணவன் மாற்றாந்தந்தை என்றும் கிடையாது. அவன் ஊர்மேய்பவனும் கிடையாது. லாரியில் கிளீனர் வேலை. முன்பு லாரி டிரைவராக இருந்தவன். கிளீனர் வேலை என்பது கொஞ்சம் தொந்தரவு இல்லாத வேலை அவனுக்கு. லாரி ஓட்டும் டென்ஷ்ன் இல்லை. டிரைவர் தூங்காமல் இருக்க பேச வயசானவனாய் அருகே கிளீனர் வேலை ஸ்தானம்.

செய்தி

“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!”

கல்யாணி

வயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது.

எழுத்தோவியம்

ஆப்பிரிக்காவின் எல்லையற்ற பாலைவனங்களின் நடுவே திடீரென்று அதிசயங்கள் தோன்றுகின்றன. உள்ளே ஓடும் நதி கசிகிறது என்பார்கள். சிலர் ஆண்டவனின் அருட்கொடை என்பார்கள். விளைவு என்னவோ, நாற்புறமும் முகத்தில் அடிக்கும் வெண்மையான வெய்யலின் நடுவே ஒரு குளமும் அதனை சுற்றி மரங்களும் கொண்ட பாலைவனச் சோலை. குளம் பெரியதாகவோ அல்லது ஆழமானதாகவோ இருந்துவிட்டால் அதனை சுற்றி நகரம் உண்டாகிவிடுகிறது. நகரத்தில் மக்கள் நெருக்கமும் உண்டாகிவிடுகிறது.குளம் போதாமல் ஆகிவிடுகிறது. அடர்ந்த வீடுகளுக்கு நடுவே குறுகிய ஓடை போல தெரு ஓடுகிறது. இந்த பக்கத்து ஜன்னலிலிருந்து கையை நீட்டினால், எதிர்ப்புறத்திலுள்ள வீட்டை தொட்டுவிடலாம். மேலே நிழலாக துணிப்படுதா. அது போன்றதொரு தெருவில்தான் ஜன்னம் பிறந்தான்.

ஆடு

மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென்று திரும்பி நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புசாதம் சாப்பிட்டுட்டு சண்டை போடப்போவானா என்று கிழத்தி நாகம்மையை கேட்டாள்.

உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்

உடனே எதுவும் பதிலளிக்க முடியாமல் சிறிது நேரம் மகள் உள்நாக்கு அமைதியாக இருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “”ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாத, இவர்தான் தலைவர் என்று ஒருவரைக் காட்டமுடியாத எந்தக் கூட்டமும் எதிலும் வெற்றிப்பெற்றதாக சரித்திரம் இல்லை. நம்மில் தலைமைக்கே சாத்தியம் இல்லை என்கிறபோது, நமக்கான தேவைகளை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும்?”

புதியதோர் உலகம்

முதல் வாரத்திலேயே ஒருநாள் அம்மாவிடம், “ஏம்மா நீங்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப இப்டி தான் எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பீங்களா?”, என்று கேட்டேன். அம்மா இல்லையென்று சொன்னதை நம்பாதவனாக, “நிஜமாவா?”, என்றதும், “அடப் போடா, வீட்ல அஞ்சி பிள்ளைங்க. நாந்தான் மூத்தவ. அம்மா வேற எப்பயும் சீக்கு. கேக்கணுமா? அடுப்படியிலையோ இல்ல தம்பிதங்கச்சியப் பார்த்துக்குறதோன்னு,.. எப்பயும் வேலையிருக்கும். அதுக்கிடையில தான் நான் பள்ளிப்பாடத்தை எழுதவும் படிக்கவும் செஞ்சிக்கணும்.

நடுக்கடலுக்குப் போனாலும்…

– எங்க தலைவர அவன் இவண்ணு சொல்றான் மாமா.
– விடு வேணு. இதென்ன புதுசா, எல்லோருமே அப்படித்தான் சொல்றோம். நீ மத்த நடிகருங்களை அப்படி சொல்றதில்லையா?
– இப்ப அவரு ஒரு கட்சிக்கு தலைவரு.
– எந்தத் தலைவராக இருந்தாலும், அப்படித்தான் நாம ஏக வசனத்தில் அழைக்கிறோம். மரியாதை கொடுக்கிறமாதிரி அவங்க நடந்துக்கணும், இல்லைண்ணா சொல்லத்தான் செய்வாங்க.

முற்றுப்புள்ளி

நளீம் நானா கொடுத்தனுப்பிய கொய்யாப்பழத்தினை அவர் பார்க்க, அறை ஜன்னலருகிலிருந்து புன்னகையுடன் சுவைப்பார் நுஸ்ரத் ராத்தா. இங்கு புளித் திராட்சைகளைக் கடிக்கும் நளீம் நானாவின் முகத்தில் நவரசங்களும் மிளிரும். புன்னகை, அஷ்டகோணலாகி உடல் சிலிர்க்கும். இருந்தும், தலைவியின் அன்புக் கட்டளையென்பதால் கருமமே கண்ணாக முழுக் குலையையும் உள்ளே தள்ளுவார் அவர்.

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

ஒரு நாள் அந்த குழந்தை இரவில் என் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அழுதபோது அதை எடுத்துக்கொண்டு திருமதி ஸெட்டியே வந்திருந்தாள். ஒரு அரை மணிநேரம் இருந்துவிட்டு குழந்தை போனது. இத்தனைக்கும் அம்மாவிற்கு அதனோடு பேசவே தெரியாது. அம்மை தமிழும், மலையாளமும் கலந்து பேசுவாள். அது ஏதோ இந்தியில் கனைக்கும். ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த சின்ன வானரம் அம்மா மடியிலேயே தூங்கிப்போயிற்று.

வேலையற்றவனின் பகல்

அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல ‘மழையில் நனையாதே’ எனச் சொல்லி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிக்கச் செய்திருக்க வேண்டும்.

நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன்

புத்தகம் படிக்கிறபோது ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துப் போட்டுக்கொண்டே வருவான். புதிதாகப் பார்ப்பவர்கள் அவனுக்கு மனச்சிதைவு நோய் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை. கிழித்துப் போட்ட பக்கங்கள் எல்லாம் அவன் மனதில் அச்சாகிவிட்டது என்று அர்த்தம். எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்டாலும் ஒரு வரி தவறாமல் சொல்வான். அதற்காகப் புத்தகத்தைக் கிழித்துப் போட வேண்டுமா? என்று யாரும் அவனை இதுவரை கேட்டதில்லை.

நதிக்கடியில் மனிதர்கள்

“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!”

உயிரிழை

“நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே” கதவைத் திறடா” “அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே.” “டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்” என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது. வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.

அலை

பெரியம்மையிடம் கேட்டேன். ஏன் சொல்லாம கொள்ளாம போயிட்டீங்க? இருபது வருஷம் இருக்குமா என்றாள். நான் ரொம்ப யோசித்து இருக்கும் என்றேன். இப்ப வந்து ஏம் போனீங்கயேங்கேல. நினைப்பு தட்டமாட்டேங்கே என்றாள்.

எமன்

எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான்.

அக்ரகாரத்தில் பூனை

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது…