நசுக்கப்படும் குரல்வளைகள்

என் தாத்தா பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டு, அவருக்குப் பென்ஷனும் மறுக்கப்பட்டிருந்தது. அது சில அரசியல் காரணங்களுக்காக, அவர் சொன்ன கருத்துகளுக்காக. அவர் மொழியியல் துறையின் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவர். 23 மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தது. கடும் உழைப்பாளி. எப்போதும் அவரை மாணவர்களும், நண்பர்களும் சூழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர் ஒரு ‘அரசியல் துரோகி’யாக அறிவிக்கப்பட்டபின் அவரை ஒருவர் கூட வந்துபார்க்கவில்லை. ஒருவரும் அவர் உதவிக்கு வரவில்லை. தனிமை சூழ்ந்த வருடங்களில் கொஞ்ச கொஞ்சமாக அவர் மனநிலை சிதையத் தொடங்கியது.

நான் எழுத்தாளனான கதை

பாரதி கவிதைகளைப் பற்றி நிதானிக்குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாராவாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்குமேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-இல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவமாயிற்று.

மோகமுள் – நாவல் பிறந்த கதை

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

போர் – நினைவுகள், சாட்சியங்கள்

என்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். நாஞ்சில்நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத்தான் எழுதுகிறார். அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத்தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ்நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப்போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது? புதிர்தான். விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதிதாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப்பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம்.

புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’

காஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.

காஞ்சனை – ஓர் அனுபவம்

புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன.

நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை' முன் வைத்து…

1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – இறுதிப்பகுதி

தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 3

“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா – தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது.

ஜெயமோகனின் கதைக்களனும், நகுலனின் நாவல் நடையும்

அக்கால சிறுபத்திரிகைகளில் நிறைய உருப்படியான விவாதங்களும், எண்ணப் பரிமாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நிறைய அக்கப்போர்களும் இருந்திருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் அதையும் மீறி அங்கே பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இன்றைய சிறுபத்திரிகைகளைப் பார்க்கும்போது எங்கே போயின அந்தக் காலங்கள் என்றே ஏங்கத் தோன்றுகிறது. ஜெயமோகனுடனான கலந்துரையாடலும், இரா.முருகனின் எதிர்வினையும் ஒரு சிறு நம்பிக்கையை மெல்ல எழுப்பியிருக்கின்றன.

எழுத்தாளர்கள் என்னும் மனிதர்கள் – ஜோசே சாரமாகோவை முன்வைத்து

தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்?

‘வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட் சாமிநாதன்’ – நேர்காணல் – பகுதி 2

என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம்.

பாகிஸ்தானிய ஆங்கில இலக்கியம் – ஒரு பார்வை

தானியால் முயுனுதீன் மேற்கத்திய மீடியாவில் ஆர்.கே.நாராயணனோடு ஒப்பிடப்படுகிறார். இருவரின் கதைகளிலும் எளிய நகைச்சுவை, அறம் சார்ந்த கேள்விகள் இருக்கும். இருவருமே பெரும் அகச்சிக்கல்களையோ, சமூக அரசியல் குறித்தோ பேசுவதில்லை என்பது குறையாகப் பட்டாலும், இத்தகையான எளிய நேர்மையான எழுத்தே பாகிஸ்தானிய ஆங்கில எழுத்தில் படிக்கக் கிடைப்பதில்லை என்பதால் தானியாலின் எழுத்து முக்கியமான ஒன்றாகிறது. அது மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்புகளைக் குறித்த நுணுக்கமான வர்ணனைகள் தானியாலின் எழுத்துகளில் படிக்கக் கிடைக்கின்றன.

அரபு இலக்கியம் – அரசியலும், அகவெளியும்

கனவும், நடைமுறை வாழ்வில் இருக்கும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பின் தடைகளையும் பிரித்துப் பார்க்க இயலாத புனைவுகளே அரபு இலக்கியத்தின் பிரதான கருவாக வெளிவருகின்றன. சொல்லப்படும் கதைகளும் தனியொரு மனிதனின் போராட்டங்களை மையமாக கொண்டுள்ளன. பெண்களுக்கான அதீதக் கட்டுப்பாடுகள், சமூகத்தில் உலவும் சர்வாதிகார ஆண்கள்/ஆட்சியாளர்கள், மதத்தின் பெயரால் அடையாளங்கள் உருவாக்கி தனிப்பட்ட மனிதனிடம் திணிக்கும் மதவாதிகள் சர்வசாதாரணமாக வலம் வருகின்றனர். மேலும் சமூக ஏற்றத்தாழ்வு, மதப்பற்று, பெண்களின் ஊமைக்காயங்கள் ஆழமான விவரணைகளால் வெளிப்படுகின்றன.

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்

நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர். கவிதை எனச் சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது.

நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க காலக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

தொடரும் பயணம்

அத்தொடக்க காலத்தில், இலக்கிய பூர்வமாக எனக்கு மிக அருகில் இருந்தவர்கள் க.நா.சுப்ரமண்யமும், செல்லப்பாவும் தான். இருவரும் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை, இல்லை பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்கள். இந்த இருவரும் சேர்ந்து அமைத்த பாதையில் தான் நான் என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இருவரிடமும் நான் கொண்ட கருத்தொற்றுமையும் நிறைய. கருத்து வேறு பாடுகளும் நிறைய.

வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை

வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது. வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது.

பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்

பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள்
நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு
என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.

வடூவூரார் படைப்புகள்

வடூவூராரின் நாவல்கள் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் பின்னர் அறுபதுகள் வரையிலும் கூட தமிழ் நாட்டில் நிலவி வந்த தேவதாசி முறையும், தாசிகளும் எழுத்தாளர்களின் நினைவுகளையும் கதைகளையும் பெரும் அளவில் ஆக்ரமித்திருக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் தாசிகளின் நிலை குறித்தும், தாசிகளினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் இழிவுகள், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் என்று தாசிகளைச் சுற்றியே அந்தக் காலத்தில் நிறைய நாவல்களும் நாடகங்களும் புனையப் பட்டுள்ளன.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி

யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.

யுவனின் பகடையாட்டம் – ஒரு பார்வை

வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.

சொற்களின் நடனம்

குழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது.

புத்திசாலியான முட்டாள்-II

1970களில் யூரி கெல்லர் ஒரு மகத்தான நிகழ்வாக அலையடித்தார். “மன சக்தியால்” அவர் கரண்டிகளை வளைத்தார். முத்திரையிடப்பட்ட உறைகளிலிருந்த சித்திரங்களை “ஞானப்பார்வையால்” கண்டறிந்து வரைந்தார். பிரிட்டனின் மிகச்சிறந்த அறிவியலாளர்கள் அவருடைய அதீதமன ஆற்றல்களுக்கு சான்று பகர்ந்தனர். ஜேம்ஸ் ராண்டி என்கிற தொழில்முறை மாயாஜால நிபுணர் கெல்லரை போலவே கரண்டிகளை வளைக்கும் வரை. ஆனால் ராண்டி அந்த வித்தைக்கு அதீதமனசக்தி தேவையில்லை என்பதையும் தேர்ந்த கையசைவுகளும் பார்ப்பவர்களின் கவனத்தை சிதறடித்து அதனை செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்பதுமே அவசியம் என விளக்கிய போது அறிவியலாளர்களின் முகங்களில் ஈயாடவில்லை.

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் ’வித்யா சாகரம்’

நாவலில் இருந்து அந்தக் காலக் கட்டத்தில் நிலவிய பல சமூகச் செய்திகளை நாம் ஊகித்து அறிய முடிகிறது. முக்கியமாக, ஜமீன்தார்கள் போன்ற பணக்காரர்களிடமும், ஆதிக்க ஜாதிகளிடமும் தாசிகளின் செல்வாக்கு, தாசிகளின் ஆதிக்கத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றன இந்த நாவலின் மூலம் தெரிய வருகின்றன.

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூரார் ஒரு வினோதமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். ஃபேரோக்கள் என்ற எகிப்திய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து எகிப்து என்ற மிசிர தேசத்திற்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிறுவி, தி லாங் மிஸ்ஸிங் லிங்க் என்றொரு 900 பக்க ஆராய்ச்சி நூலை எழுதி அவரே பதிப்பித்து வெளியிட்டதாகவும், அந்த நூல் விலைபோகாதபடியால் தன் சென்னை வீட்டை விற்று விட்டு கிராமத்துக்கே திரும்பி விட்டதாகவும் க. நா. சு நினைவு கூறுகிறார்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.

வள்ளுவரும் ஒழுக்கமும்

திருவள்ளுவர் காலம் வரையிலும் சமூகத்தில் பெருவழக்காக, அரசியல் வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக பரத்தையர் தொழில், கள் வணிகம், சூதாடல், மருந்து போன்றவை இருந்து வந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இவற்றை ஊக்குவிப்பது, கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதென்பது அரச அதிகாரம் சார்ந்தது.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2

அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல.

அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – ஓர் அறிமுகம் – பகுதி 1

மனிதர்களை ஒரு பொதுவான தளத்தில் வைத்து எடை போடும் போது இரண்டு நிலையினராக பிரிக்க முடியும். அறிவு சார்ந்து இயங்குபவர்கள், உணர்வு சார்ந்து இயங்குபவர்கள். பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் பல்வேறு விகிதாசாரங்களில் இயங்குகிறோம்.

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் சிவராம காரந்த் கன்னடத்தில் எழுதிய நாவல் இது. காலம் கடந்து வந்திருந்தபோதிலும் இன்றைய சமூகத்தின் கரிய நிழல் நாவலில் படிந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். தீர்வில்லாத அக்கேள்விக்குச் சமூக விடுதலை மட்டுமே சரியான தீர்வை வழங்கமுடியும். ஒடுக்கப்பட்ட தலித்துகளை முதன்முதலாகப் பிரதானமான கதைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு என்று இந்த நாவலைச் சொல்லலாம்.

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.

அக்ரகாரத்தில் பூனை

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது…

ஒலிக்காத குரல்கள்

கோபிகிருஷ்ணனின் இந்த நூலை வாசிக்கும் எவர் ஒருவரும் நிச்சயம் ஒரு கட்டத்தில் நாமும் மனநோயாளிதானோ என்று யோசித்தே தீரவேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சாதாரண விஷயங்கள் முதல், அதிர வைக்கும் விஷயங்கள் வரை இந்நூலில் மனநோயாக நடமாடுகின்றன.

திலீப்குமாரின் இலக்கிய உலகம்

தனது வாழ்வில் நிகழ்ந்த பலவிதமான அனுபவங்களையும் மிக நுட்பமான நகைச்சுவை உணர்வுடன் தீலீப்குமார் சித்தரிக்கும் பொழுது நம் மனதில் அந்தச் சிறுகதைகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவரது ஒவ்வொரு சிறுகதையும் மனிதாபிமானத்தையும் சிக்கலான மனித உறவுகளையும் தொட்டுச் செல்பவை.