அதெல்லாம் மாறியபோது – 2

வாயில் முற்றத்தில் ஒரு நபர் நின்றான். அந்த இன்னொரு உயரமான மனிதன். சில நிமிடங்கள் அவனைக் கவனித்தேன் – வேண்டும் போது என்னால் கொஞ்சமும் ஒலியெழுப்பாமல் நகர முடியும்- அவன் என்னைக் கவனிக்கிற மாதிரி நான் நின்ற போது, அவன் தன் கழுத்தில் இருந்த ஒரு சிறு எந்திரத்துடன் பேசுவதை நிறுத்தினான், மிக உயர்ந்த தரமுள்ள ரஷ்யனில் பேசினான், “ பாலினச் சமத்துவம் பூமியில் மறுபடி நிலைநாட்டப்பட்டு விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?”

பாலையில் துவங்கிய நெடும் பயணம்

ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.

சந்தை என்னும் கடவுள்

ஒரு ப்ரசெண்டேஷனுக்கு ஆறு கோடியா? சொக்கா என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த 45 நாட்களுக்குள் 1000 டன்னையும் வாங்கி ஒரு பெரிய எண்ணெய் டாங்கில் சேமித்துவைத்தோம். மே மாதம் துவங்கி, ஊர் எல்லை மைல்கல்லில் காத்திருக்கும் பாரதிராஜாவின் கதாநாயகி போல் ஓணம் வரக் காத்திருந்தேன். ஓணம் முடிந்தபின் விலைகள் எகிறும் என்பதே எங்கள் தாரக மந்திரம். 60 ஆண்டுகளின் புள்ளிவிவரம் எங்களுக்குச் சொன்னது அஃதே. ஓணம் வரை விலை 60லிருந்து 63க்கு எழுந்தது. எங்களுக்கு லேசான பெருமிதம். நாங்க யாரு?

சாபம்

சிறிது நேரம் தன் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். திடீரென்று ‘உங்கள் காரில் எங்கே சேதம்?’ என்று வினவினார். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. அவரிடம் கதைகொடுத்து நேரத்தை நீட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் இருந்தேன். காரில் இருந்து இறங்கி காரின் பின்பக்கத்தை காட்டினேன். யாரோ உயிருள்ள பெண் ஒருவரின் பின்பக்கத்தை ஆராய்வதுபோல நீண்ட நேரம் கூர்ந்து கவனித்தார்.

அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்

எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 9

கட்டிடங்களில் நுணுக்கமும் சிக்கலும் கூடிய வடிவங்களை படைக்க பரோக் பாணிதான் பொருந்தி வந்தது. ரொகோகோ பாணியின் நுழைவால் அத்துடன் கீழை நாட்டுப் பாணி, இசைவுப் பொருத்தமில்லாத வடிவக் கட்டு மானம் உள்ளிட்ட பல உத்திகளின் தாக்கம் மேலோங்கியது. ஜெர்மனி, போஹிமியோ, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கத்தோலிக கிருஸ்துவர் வசித்த பகுதிகளில் இப்புதிய பாணி விரும்பி ஏற்கப்பட்டது. முன்பு இருந்த பரோக் பாணியுடன் கலந்து ஒரு புதிய கலைப்பாணி தோன்றியது.

வைரம் தேடிய மண்

மண் அனைத்தையும் வெற்றி கொள்ளும். மண், காலத்துடைப்பான். மண்ணின் நீரினும் சீரிய ஆற்றொழுக்குக்குக்கு கரைகள் கிடையாது, அணைபோட்டு மாளாது. மண்ணில் பிறந்தோம், மண்ணில் இருந்தோம், மண் நமக்கு இல்லிடமும் ஆகும். நம் காலடியில் கிடக்கும் மண்ணினும் வலியது எதுவும் இல்லை- அதன் உறுதியான வெற்றியைச் சுட்டுகிறது நமீபியாவின் கோல்மான்ஸ்கோப் “வைரம் தேடிய மண்”

இலவச இணையம் – எப்படி சாத்தியம்?

முதலில் ஹாட்மெயில், பிறகு யாஹூ மற்றும் ஜிமெயில் மின்னஞ்சல் வந்து இன்று பல கோடி மக்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வியாபார சம்மந்தப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல கோடி மக்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படங்களை சேகரிப்பதற்கு ராட்சச வழங்கி கணினி வயல்கள் (server farms) தேவை. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எதற்காக இலவசமாக இவர்கள் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள்? இவர்களுக்கு வருமானம் எப்படிக் கிடைக்கிறது?

வெங்கட் சாமிநாதன்

தமிழின் மூத்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களைக் குறித்ததொரு திறனாய்வு நூல் வரும் 30-ஆம் தேதியன்று (30-04-2011) தேவனேயப் பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணியளவில் வெளியிடப்படவிருக்கிறது. பல மூத்த படைப்பாளிகளும் இப்புத்தகத்தில் வெ.சா அவர்களின் எழுத்துலகைக் குறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றவுமிருக்கிறார்கள். இத்தருணத்தில் வெ.சா அவர்களைக் குறித்து ச.திருமலைராஜன் எழுதியிருக்கும் சிறப்புக்கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மகரந்தம்

ஜப்பானியர்கள் அண்மையில் சந்தித்த பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்த ஆழிப் பேரலையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உயிரிழப்பு, பொருளாதார இழப்பு என்ற அளவில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் ஜிஷுக்கு என்ற சுய கட்டுப்பாடு கடைபிடிக்கும் வகையில் அனைத்து தளங்களிலும் ஆரவாரங்களைத் தவிர்க்கிறார்கள்.

மோகமுள் – நாவல் பிறந்த கதை

“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு தவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.

பகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை

சொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.

வாசகர் மறுமொழி

ப.கோலப்பன் எழுதிய ‘வெறுமை’ சிறுகதை மிக அருமை. பொதுவாகத் தமிழில் நல்ல சிறுகதைகள் அருகி வரும் காலத்தில் இது ஒரு ஆசுவாசமளிக்கும் நல்ல எழுத்து, நல்ல கதை. வெறுமை சிறுகதை சங்கீத வெறுமையை வெகு அழகாகச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது. சங்கீதம் ரசிப்பவர்களுக்கு, முக்கியமாக நாதஸ்வர ரசிகர்களுக்கு இச்சிறுகதை ஒரு பொக்கிஷம். தி.ஜா எழுத்துகளைப் போல அரிதான சங்கீதப் புனைவு.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஆறு

நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாகப் பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதை மனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.

உதிரம்

கும்மிருட்டுக்கு மனித உருவம் கொடுத்தது போல் நிற்கிறாள். கூந்தல் பின்காலைத் தொட்டுப் புரள்கிறது. பத்து கைகள். நெருங்க நெருங்க இன்னும் உருவம் தெளிவானது. கழுத்தில் போட்டிருக்கும் செவ்வரளி மாலை விம்மி நிற்கும் முலை மேடுகளில் லேசாக மடிந்து கால் முட்டுகளைத் தொடுகிறது. சூலம், அம்பு, சூரிக்கத்தி என எட்டு கைக்கும் ஒவ்வொரு ஆயுதம். ஒரு கையில் கொப்பரையில் குங்குமம். தரை வரை நீளும் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையை முடியைப் பிடித்து தூக்கி வைத்திருக்கிறாள். எந்த யுகத்தில் கொல்லப்பட்ட எந்த அரக்கனோ? அறுபட்ட கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. கைகளில் எல்லாம் சீமந்தம் முடிந்த சூலிக்கு அடுக்கியிருப்பது போல் வளையல்கள். இன்னும் நெருங்கிய போது அந்த கருமையான முகத்தில் செவ்வரியோடிய வெள்ளை விழிகள் பளிச்சென தெரிகின்றன. முகத்தில் சாம்பிராணி தைலம் பூசப்பட்டிருந்தது. அதன் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கில் பேசரி பளிச்சென மின்னுகிறது. காதுகளில் குண்டலங்கள். இரத்த சிவப்பில் வாய். உக்கிரமான பத்திரகாளி வந்து விட்டாள். உலகம் அழியப் போகிறது. தன்னையறியாமல் கையை எடு்த்துக் கும்பிட்டார். கண்ணில் நீர் தாரை தாரையாகப் பாய்ந்தது.

லாட்டரி

மிசர்ஸ் ஹட்சின்சன் கூட்டத்தினூடே பார்க்க முனைந்தவளாய் தன் கழுத்தை நீட்டி தன் கணவனும் குழந்தைகளும் முன்புறத்தில் நின்றுக் கொண்டிருப்பதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டாள். தான் விடைபெறுவதைக் குறிக்கும் வகையில் மிசர்ஸ் டெலாக்ரோவின் கரத்தில் தட்டிவிட்டு கூட்டத்தின் உட்புகுந்து தனக்கு வழி செய்து கொள்ளத் துவங்கினாள். சிரித்த முகத்துடன் அவளுக்கு வழி விட்டுப் பிரிந்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்

அக்கூ குருவி

யாழ்பாணத்தில் கலவரம் ஆரம்பித்தது. எல்லாம் பாழாய் போச்சு. ஒரு நாள் ராஜன் ஊரில் இல்லை. எங்கள் ஊரில் ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்துகிறார்கள் என்று செய்தி. இதற்கு முன்னால் இதுபோல் நடந்த சில இடங்களில் ராணுவம் நுழைந்தபோது நடந்திருந்த பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருந்த்தினால் ஏதும் தவறு செய்யவில்லை என்றாலும் கூட ரொம்ப பயந்து போனேன்.

கல்

பார்வைக் கோட்டின் ஓரத்தில் கட்டிடங்கள் தெளிவற்ற சிறிய உருவங்களாக எழும்ப ஆரம்பித்தன. பிறகு நெருங்க நெருங்க அவை பிரம்மாண்டமாக உயர்ந்தெழுந்தன. செயற்கை புல்வெளிகள் திடீரென வெண்பரப்பில் பச்சை கோடுகள் காட்டின. பெரும்பாலான கட்டிடங்கள் அரை வட்ட கோளமாக இருந்தன. மேலே சூரிய ஒளியை சேமிக்கும் வளைந்த கண்ணாடிகள் இருந்தன. ஆங்காங்கே சத்து மண் படுகைகளில் ராட்சத மரங்கள் வளர்ந்திருந்தன.