சமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார். அவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.
Category: இதழ்-191
மதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்
சென்னை என்னும் மெட்ராஸ், எவ்வாறு கர்நாடக இசையின் மையமாக இருந்தது, இருக்கிறது என்பது குறித்த வி ஸ்ரீராமின் பேச்சு:
மறக்கப்பட்ட ரஷ்ய கிளாசிக் நாவல்- அபுலோமாஃப் (Oblomov)
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல்கள் ஏறத்தாழ எல்லாமே கள்ளக் காதலுடன் விளையாடி, அல்லது, அதற்கு பலியாகும் பெண்கள் நிறைந்தவை என்றால், ஓல்கா விரக்தியோடு விளையாடும் பெண். வாழ்க்கைதான் என்ன? அதன் நோக்கம் என்ன? அதை எவ்வாறு வாழ்வது? அவளிடம் அரசியல் பிரக்ஞை இல்லை- அவள் குண்டு வீசும் அரசின்மைவாதியாகப் போவதில்லை. அவளைச் செலுத்துவது அறிவோ கலையோ அல்ல – அவள் ஒரு George Sand அல்ல. சமூக இலட்சியங்கள் கொண்ட பெண்ணின் நேர் எதிர் அவள்.
ஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு
குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?
தனித்தலைந்தது நிலவு
‘கடலே,உன் வயிற்றில் ஏதோ நெருப்பு இருக்கிறதாமே? மண் கொண்டா அதை போக்குகிறாய்? இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு? உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம்?கண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்தது?நாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா? பாண்டியும், நண்டுப்பிடியும் கடற்கரையில் நாங்கள் ஆடியது பெருங்குற்றமா?
புரியாதவர்கள்
நேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்றத்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…
எம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23
ஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான். “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார். அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்
என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…
அறிவிப்புகள்
சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.
புதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்
செல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.
பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?
ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.
சுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்
இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை.
ஒரு CIT மாணவனின் சிற்பம்
இன்று மாலை CIT வளாகத்திற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரு வினோதமான ஆசை எழுந்தது. CIT-யிலிருந்து நான் வெளியேறி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘இந்த 37 ஆண்டுகளையும் ஒரு Back Space விசையால் பின்னோக்கி அழித்துவிட்டு மீண்டும் ஒரு CIT மாணவனாக ஆக முடியுமா?’ என்று. அது முடியாது. கால இயந்திரங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக் கூடியவை. காலம் முன்னோக்கி மட்டுமே செல்லும். பாரதி சொன்னான்: ‘சென்றதினி மீளாது’. இந்தக் குகைக் கோயிலை உருவாக்கிய சிற்பிகளுக்கு முன்னால் இருந்த சவாலும் அதுதான்.
சாதாரணச் சூழ்நிலைகள்
நாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”
“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.
“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”
அலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.
“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.
“நீங்க ஒரு போக்கிரி.”
நாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு!” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.
பிப்பல மரம்…
அண்டவெடிப்பின் ஆதி நொடி துவங்கி, யாதொரு இயக்க நேர்தலின் நிமித்தம் நிலைகுலைவா ஒழுங்கமைவா என்று ஆராய்வது அறிவியல். அதையும் கடந்து உயிர்களின் உருபுகளில் மேல் காலத்தின் திரிபுகளால் ஊழ் வந்தமர்ந்து உலா போவதன் ரகசியம் உணர முயல்வது ஆன்மீகம். ஆன்மீக ஊஞ்சலில் முன்னும் பின்னுமாய் ஊனை இயக்குகிறது வயது. அந்த ஆட்டத்தில் அனுபவம் பெறுகிறது மனது. அனுபவங்களை ஒன்றன் மீது ஒன்றாய் அகத்தின் மீது அடுக்கி வைத்துக் கொண்டே போவதனால் தான் வயதுக்கு அகவை என்ற சொல் ஏற்பட்டதோ?