மொழி மயக்கத்தில் கட்டுண்டு, பண்பாட்டுப் பெருமிதங்களில் சிறைப்பட்டு, ஆதாரமற்ற- அதனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப கைக்கொள்ளவும் கைவிடவும் தக்க கருவியாய் பயன்படும் தன்மை கொண்ட – பகைமைகளால் பிளவுபட்டு, இயல்பு நிலை என்னவென்பதை அறியாத காரணத்தால் இலக்கற்ற திசையில் தமிழகம் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் சாதாரண மொழியில் சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை உள்ளபடியே எழுத முற்பட்டவர் அசோகமித்திரன். பெருங்கூட்டமாய் உரத்து ஒலித்த ஆரவார கோஷங்களுக்கு இடையில் சன்னமாய், தனித்து ஒலித்த அவரது குரல் முகமற்ற, நாவற்ற தனி மனிதர்களுக்காக பரிந்துரைத்த குரல், அவர்களுக்குரிய நியாயத்தை எடுத்துரைத்த குரல். எவ்வளவு மென்மையானதாக இருந்தாலும் அவர் முன்வைக்கும் விமரிசனத்தை தமிழகம் எதிர்கொண்டாக வேண்டும் – நீதிக்கான தேவை இருக்கும்வரை அவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
எளிய மனிதர்களின் எளிய வாழ்வை அகலாது உற்று நோக்கிய அசோகமித்திரனின் பார்வைக்குரிய தீர்க்கம் அவர் தலைமுறையில் மிகச் சிலருக்கே இருந்திருக்கிறது. இன்று அவரை நாம் இழந்திருக்கிறோம், ஆனால் இனி அவரது அக்கறைகள் நம்மோடிருக்கும், அவரது எழுத்துக்கும் பொருளிருக்கும்.
சொல்வனம் அசோகமித்திரனின் பங்களிப்பை தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. அதன் நூறாவது இதழை ‘அசோகமித்திரன் சிறப்பிதழ்‘ என்றே கொண்டாடியிருக்கிறது. தொடர்ந்து அவரையும் அவரது பங்களிப்பையும் நினைவுகூர்ந்து சொல்வனம் ஊக்கம் பெறும்.