தமிழில் இருக்கிற மிக முக்கியமான படைப்பாளியாக அவரைக் கருதுவதற்கு என்ன காரணம் என்றால், பாரதி சொன்ன மாதிரி எட்டுத்திக்குகளில் இருக்கும் கலைச் செல்வங்களை அவர் தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த இரண்டாவது வகைக் கதைகள் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கிற கதைகள். அது காபூலாக இருக்கலாம். இஸ்லாமாபாத்தாக இருக்கலாம். டொராண்டோவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் தமிழ்ப்பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். கதைசொல்லியோ, கதையிலுள்ள பிரதானப் பாத்திரங்களோ தமிழராக இருப்பார்கள். இது அவரது இரண்டாவது உலகம். அவரது பெரும்பாலான படைப்புக்களை இரண்டாவது வகைக்குள்ளே கொண்டு வந்துவிடலாம்.
மூன்றாவது வகைக் கதைகளும் வெளிநாடுகளில் நடக்கிற கதைகள்தாம். வெளிநாட்டு மண்ணில் வெளிநாட்டு கலாசாரப் பின்புலத்தில் நடைபெறும் கதைகள். ஆனால் இந்தக் கதைகளிலே ஒரு தமிழ் கதாபாத்திரமும் இராது. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ்க் கதைகளாக அவை இருக்கும். இரண்டாவது வகைக் கதைகளில் தமிழ்ப் பாத்திரங்கள் எனும் ஒரு சின்னப் பாலம் இருக்கிறது. இதில் அதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை வைத்து நமக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் நிகழும் கதைகளை தமிழ் வாசகனுக்கு நெருக்கமான குரலில் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. இந்தக் கதைகளின் வழி மனித மனத்தினுடைய ஆசாபாசங்கள் அடிப்படையிலே ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கலாசார வேறுபாடுகளை அவர் கொண்டு வந்து சேர்க்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிரமமான வேலையை அவர் லாவகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.