சீனா குட்டி

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

எஸ்.ஜானகி – பத்மபூஷன் இழந்த கெளரவம்

ஜானகி பாடிய பல்வேறு முக்கிய பாடல்களை/ ஒவ்வொருத்தரின் தனி விருப்பபாடல்களை நான் சொல்லாமலே விட்டிருக்கிறேன். காரணம் ஜானகி என்பவர் ஒரு சகாப்தம்/ சரித்திரம் என்றெல்லாம் மார்பு தட்டுவதோ அல்லது அவரின் வாழ்க்கை/தொழில் வரலாற்றை அலசி ஆராய்வதோ இது வரை வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதோ இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தியாவின் இரண்டாவது பெரிய கௌரவத்தை புறக்கணிக்கும் அளவிற்கு அவருக்கு இருக்கும் நேர்மையான நிலைப்பாட்டை அங்கீகரிப்பது மட்டுமே.

குழலினிது யாழினிது என்பார்… (2012 மார்கழி இசை விழா அனுபவம்)

இசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம்.

பாஸ் கிடார் தில்லானா

பாடலின் மைய மெலடிக்கு இணையான முக்கியத்துவத்தை பாஸ்கிடாருக்குக் கொடுத்தார் இளையராஜா. இத்தனைக்கும் பாடல்களில் பாஸ்கிடாரின் உபயோகத்தைக் கவனித்துக் கேட்டு ரசிப்பவர்கள் வெகு சொற்பமானவர்களே. இன்று இணையதளங்களில் கிடார் வாசிக்கத்தெரிந்தவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னதாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறும் பல இசைக்கலைஞர்கள் வெகுவாகப் பரிந்துரைத்ததாலுமே ஓரளவுக்கு இளையராஜாவின் பாஸ்கிடார் பகுதிகளைப் பலர் கவனிக்க ஆரம்பிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்னும் வெளியே தெரியாமல் ஒளிந்திருக்கும் பாஸ்கிடார் பகுதிகளுக்குக் கணக்கேயில்லை.

2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்

மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.

கர்ணனுக்கு வழங்கியவர்கள்

‘கர்ணன்’ திரைப்படத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் மனதைக் கவர்ந்து வந்திருக்கிறது. சிறுவயதில், ‘கர்ணன்’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கும் சிவாஜி கணேசன், தன் மாமனாரிடம் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று கர்ஜிக்கும் ஒரு இடத்துக்காகக் காத்திருந்து கைதட்டியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த ஒரு காட்சி போக, இந்திரன் மாறுவேடத்தில் வந்து கர்ணனிடம் கவச குண்டலத்தைக் கேட்டவுடனே, சிவப்பு, மஞ்சள் ஒளிவெளிச்சத்தில் சிவாஜி கணேசன் பற்களைக் கடித்து வலியைப் பொறுத்து சதையைப் பிய்த்துக் கொண்டு கவசகுண்டலங்களை அறுக்கும் போது உடம்பு பதறி அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.

இளையராஜாவின் ஜாஸ் வால்ட்ஸ்

‘உன் பார்வையில்’ என்ற பாடலும் இந்திய இசைக்கருவிகளில் உருவாக்கப்பட்ட ஜாஸ் வால்ட்ஸுக்கு உதாரணம். ஹார்மோனியத்தால் நிறைக்கப்பட்டிருக்கும் பாடலின் ஆரம்ப இசை ஜாஸ் வால்ட்ஸை கற்பனைக்கெட்டாத இடங்களில் பயன்படுத்துவதில் இளையராஜாவுக்கு இருக்கும் ஆளுமையைக் காட்டுகிறது. இப்பாடலின் ஹார்மோனியப் பகுதிகள் இளையராஜாவே வாசித்திருப்பவை. அருமையான ஹார்மோனியமும், தேர்ந்த குரல் வெளிப்பாடும் இப்பாடலின் இனிமையைப் பலமடங்கு கூட்டுகின்றன. இதைப் போலவே கேட்பதற்கு இனிமையான பாடலுக்கான இன்னொரு உதாரணம், எண்பதுகளில் வெளிவந்த ‘கீதம் சங்கீதம்’.

கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

இளம் வித்வானாய் இன்றைக்கு சீஸன் சர்க்கியூட்டில் உள்ளே வருவதும் கடினமே. பாரம்பர்யம்மிக்க சில சபாக்களே திறமையை மட்டுமே வைத்து அழைப்புவிடுக்கின்றனர். பல சபாக்கள் இங்ஙனம் செயல்படுவதில்லை. இளம்கலைஞர்கள் மேலெழும்ப ஆரபி, தேவகாந்தாரி என்று மட்டும் சஞ்சரிக்காமல், இவ்வகை நுண்ணரசியல், நரஸ்துதி, முகஸ்துதி என்று நிஜத்திலும், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அநேகர் “லைக்” செய்ய இணையத்திலும் சஞ்சாரம் செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. போதாததற்கு, பொதுவில் வைக்கமுடியாத சில தேவைகளும் உள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள வியாஸர்பாடி கோதண்டராமனை இவ்விடத்தில் மீண்டும் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

இந்த டிசம்பர் சீஸனில் (2011 -12) கேட்ட ராகம்-தானம்-பல்லவிகளைப் பற்றி விரிவான அலசலைத் தருவதோடு, ராகம்-தானம்-பல்லவியின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்குகிறார் அருண் நரசிம்மன்:

தமிழிலேயே பாடினாலும், இசையாய் கேட்கையில் மனதிற்கு ரம்யமூட்டுவதற்கு பொருள் செறிவின் பங்களிப்பும் முக்கியம் என்றுணர முடிந்தது. வருடாவருடம் உழைத்து எதையாவது வித்தியாசமாய் செய்யமுனையும், இன்றைய முன்னனி வித்வான்களான கிருஷ்ணா சஞ்சய் இருவருக்கும் இடையே நிலவும் ஆரோக்யமான போட்டியில், இவ்வருட அகதெமி வின்னர் சஞ்சய். சரி இதுதான் 2011 சீசனுக்கு சூப்பர் கச்சேரி என்று நினைத்திருந்தேன். வேதம் சிரித்தது. என் பாட்டியின் வயதையொத்த வல்லியின் உருவில்.

பேரிசையின் பின்னணி: தவில் கண்ட மாற்றங்கள்

நாஞ்சில் வீட்டுத் திருமணத்தைப் பொறுத்தவரை, எழுத்தாளர்கள் ஒருவரோடு ஒருவர் அளவளாவதற்கான வாய்ப்பை தவில் சத்தம் கெடுத்து விட்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆகவே ஒவ்வொருவராக வெளியேறி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் உரையாடலில் பங்கெடுத்தாலும், என் காதுகள் என்னை அறியாமல் மண்டபத்திற்கு உள்ளே சென்று கொண்டிருந்தன. அதே சமயத்தில் தவில் ஒலி குறித்த எண்ணமும் வளர்ந்தது. தவில் மிகு ஒலியை எழுப்பும் ஒரு வாத்தியம். ஒரு காலத்தில் கோயிலில் பூசை தொடங்குவதையும் சுவாமி புறப்பாடு தொடங்குவதையும் மக்களுக்கு அறிவிக்க அதற்கு ஒரு தேவை இருந்தது. “தொம் தொம்” என்று அலாரிப்புடன் மல்லாரிக்காக தவில் வாசிக்கும் போது, அது இசை இரசிகனிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை இன்னவென்று சொல்லி விட முடியாது. மலைக்கோட்டை பஞ்சாமி என்று அழைக்கப்படும் பஞ்சாபகேசபிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவபிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசன் என கடந்த காலத்து வித்வான்கள் தொடங்கி, இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் வலையபட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம், ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், திருவாழபுத்தூர் கலியமூர்த்தி, திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி என மாபெரும் தவில் கலைஞர்கள் வரிசை நீள்கிறது. ஆனால் இவர்கள் எல்லோருடைய வாசிப்பையும் தொடர்ந்து கேட்கும் ஒரு இரசிகன், காலந்தோறும் தவில் வாத்தியத்தின் சத்தத்திலும் வாசிப்பிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் புரிந்து கொள்வான்.

ஹிஸ் ஹைனஸ் ரவீந்திரன்

‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தை திருநெல்வேலியின் ‘சிவசக்தி’ தியேட்டரில் ஒரு மாலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு முன்புவரை அந்தத் திரைப்படத்தின் மேல் எனக்கிருந்த ஒரே ஈர்ப்பு, மோகன்லாலும், வயல்கள் சூழ்ந்த ‘சிவசக்தி’ திரையரங்கின் திறந்து கிடக்கும் கதவுகளைத் தாண்டி வந்து நம்மை வருடும் மாலைநேரக் காற்றும்தான். ஒரு கமர்ஷியல் சினிமாவுக்குரிய விறுவிறுப்பான அம்சங்களுடன் கூடிய கதையை சங்கீதப் பின்னணியில் அமைத்து லோகிததாஸ் எழுதியிருந்த திரைக்கதைக்கு மோகன்லாலுடன் இணைந்து நெடுமுடி வேணு, திக்குரிசி சுகுமாரன் நாயர், சுகுமாரி,….போன்றோர் வலு சேர்த்திருந்தார்கள் என்றாலும், ’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ திரைப்படத்தின் ஆதார ஸ்ருதி என்னவோ அதன் இசையமைப்பாளர், அமரர் ரவீந்திரன் அவர்கள்தான்.

ஹிந்தித் திரையிசையில் கஸல்

கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்த பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.) இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரைசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல.

செண்பகத்தக்காவின் குரல்

தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ‘இதயம் போகுதே’, ‘அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.

இரு மணிகள்

மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.

மதுர மணி

கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஏழு

இதே வேகமாற்ற விஷயத்தை, தாளத்தின் காலப்பிரமாணம் மாறாமல், பல்லவியை மட்டும் ஸ்பீடு குறைத்து, தாளத்தின் இரண்டு ஆவர்தத்திற்கு ஒருமுறையோ நான்கு ஆவர்தத்திற்கு ஒரு முறையோ முழுவதும் வருமாறு, ”ஸ்லோ” மற்றும் ”ஸ்லோ ஸ்டாப்” வகை சுருள் பந்துவீச்சாளராகி பல்லவி பந்து வீச முடியும். இப்படி மத்தியகாலத்தில் அமைந்த பல்லவியை, அதற்கு இரண்டு குறைவான வேககாலத்தில் பாடுவதும் அனுலோமம்தான். ஆனால் இதற்கு பெயர் கீழ்கால அனுலோமம் அல்லது விலோம அனுலோமம்.

‘கான வன மயூரி’ – கல்பகம் சுவாமிநாதன்

தஞ்சாவூர் பாணியின் மிகச் சிறந்த கலைஞர். தஞ்சாவூர் பாணியில் வீணையைப் பொருத்தவரையில் கமகங்களின் சுத்தம், கமகங்களை வாசிக்கும் வழிமுறைகள், உத்திகள் இவற்றை அனுபவபூர்வமாக நன்கு கற்றறிந்தவர். அவர் வாசிக்கையில் பல முறை அவரே பாடியும் வாசித்திருக்கிறார். பல சமயம் அப்படிப் பாடாமல் இருக்கும் நேரத்திலும் நமக்கு யாரோ உடன் பாடுவது போலவே தோன்றும். ‘காயகி முறை’ எனப்படும் வாத்தியத்தில் வாய்ப்பட்டைப் போன்றே ஒலிக்க வைக்கும் நேர்த்தியை அவர் செவ்வனே அறிந்திருந்தார்.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஆறு

நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாகப் பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதை மனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.

பண்டிட் பாலேஷுடன் ஒரு மாலை

பிஸ்மில்லா கானின் ஷெனாய் இசையைத் தொடர்ந்து கேட்டுக் கேட்டு அந்த வாத்தியத்தை திரையிசையில் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். திரையிசையில் வாசிக்கும் பல வாத்தியக்கலைஞர்கள் ஒப்பற்ற மேதைகள். அவர்களில் ஒருவர் முப்பது வருடங்களாகத் தமிழ்த்திரையிசையில் ஷெனாய் வாசித்து வரும் பண்டிட் பாலேஷ். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் மாணவர். சாலிகிராமத்தில் என் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரம்தான் பாலேஷின் வீடு. அவ்வப்போது சாலிகிராமத்து வீதிகளில் நாங்கள் சந்தித்துக் கொள்வதுண்டு. பார்க்கும்போதெல்லாம், இருவரும் சாவகாசமாக அமர்ந்து இசை குறித்து நிறைய பேச வேண்டும் என்று சொல்லிக் கொள்வோம். பல நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் ஒருநாள் அது அமைந்தது. அவரது வீட்டின் மாடியிலுள்ள ஓர் அறையில் அவரது குருமார்களின் புகைப்படங்களுக்கு அருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். பாலேஷின் மகன் கிருஷ்ணா பாலேஷும் உடனிருந்தார்.

தம்புராவின் மெளனம்

தஞ்சை இசைச்சூழல் தமிழகத்தின் தொன்மையான கலாசாரப் பின்னணியை உயிர்ப்போடு வைத்திருந்த ஒன்று. தஞ்சை இசைச்சூழலில் எஞ்சியிருந்த வளமான இசைக்கலைஞர்களில் ஒருவரான தஞ்சை வெங்கடேசய்யங்கார் சென்ற வாரம் தன்னுடைய 85-ஆவது வயதில் மறைந்தார். அவரைக் குறித்தும், தஞ்சை இசைச்சூழலைக் குறித்தும், தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட தஞ்சை K.சிவசுப்ரமணியன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டோம்.

முக்தாம்மாவுடன் ஒரு மணி நேரம்

2004-ஆம் ஆண்டு தொண்ணூறு வயது இருக்கும் முக்தம்மா கீழே விழுந்ததில் அவர் தலையில் அடிபட்டு நினைவிழந்து இருந்தார். எங்களை யார் என்று அறிந்து கொள்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அனால் அந்த நிலையிலும் அந்த பந்துவராளி பதத்தின் ஒரு சங்கதியும் அவர் நினைவைவிட்டு அகலவில்லை. எந்த ஒரு பிழையுமில்லாமல் பாடினார்.

அண்ணன்களின் பாடகன்

வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான்.

பீம்சென் ஜோஷி

எனக்கு நினைவு தெரிய முதன்முதலாய் நான் கேட்ட ‘ஹிந்துஸ்தானி’ குரல் பீம்சென் ஜோஷியுடையதாகத்தான் இருக்கும். ‘மிலே ஸுர் மேரா தும்ஹாரா’ என்ற குரலைக் கேட்கும்போதுதான் ஞாயிறு காலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானதாக அர்த்தம். பல இந்திய மொழிகளும் “பீம்சென் ஜோஷி”

தெலுங்கு மக்கள் மனதில் கே.வி.மகாதேவன்

தெலுங்குக் கவிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்கள் சாஹித்யதிற்கு மேலும் மெருகூட்டியது, கே.விஸ்வநாத், பாபு போன்ற சிறந்த இயக்குனர்களின் பார்வையைப் புரிந்து கொண்டு அவர்கள் படங்களை தன் இசையால் சிறப்பித்தது, நாட்டார் இசை, மரபிசை இரண்டிலும் சிறந்த பாடல்களைத் தந்தது போன்ற காரணங்களால் கே.வி.மகாதேவன் தெலுங்கு மண்ணில் பெரிதும் கொண்டாடப்பட்டதொரு இசையமைப்பாளராகத் திகழ்ந்தார்.

ப்ளூகிராஸ் இசை – ஓர் அறிமுகம்

இது வெறும் நடன இசை கிடையாது. குறிப்பாக நடன இசை என்று இப்போதெல்லாம் நம்முன் வைக்கப்படும், நாம் வெறும் பழக்கத்தால் தலையசைக்கும், அழுத்தி வாசிக்கப்பட்ட தாள இசை கிடையாது. இது இசைக்கருவியின் அற்புதமான ஒலியையும், அதை வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் மேதைமையையும் கூட தாண்டிய ஒன்று. நாள் முழுக்க கடினமான உடலுழைப்பில் உழன்றுவிட்டு, மாலையில் திறந்தவெளியைத் தேடிப்பிடிக்கும் ஆத்மாவின் அக வெளிப்பாடு இந்த இசை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை

காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.

கமகம்

அசைவோ, இயக்கமோ இல்லாமல் ஒரு ஸ்வரத்தைத் தனித்துத் தட்டையாக இசைப்பதையே சங்கீத பரிபாஷையில் “மொட்டை ஸ்வரம்” என்கிறார்கள். இந்திய மரபிசையில் ஸ்வரங்கள் தனித்தனியான, தட்டையான, வரையறுக்கப்பட்ட அதிர்வெண்ணில் (frequency) ஒலிப்பவை அல்ல. ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் அது இசைக்கப்படும் ராகத்தையும், அமைப்பையும் பொருத்து அசைவு உண்டு. இந்த அசைவையே ‘கமகம்’ என்று மேலோட்டமாக வரையறை செய்யலாம். முதல்முறையாக இந்திய மரபிசையைக் கேட்கும் மேற்கத்தியக் காதுகளுக்கு எடுத்தவுடனே தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் தெரிவது நம் மரபிசையின் கமகங்கள்.

நந்தலாலா – பின்னணி இசை

‘Ilaiyaraaja musical’ என்று சொல்லத்தக்க வகையில் நந்தலாலா திரைப்படத்தின் பின்னணி இசை, காட்சி உணர்வுகளின் மெலடிக்கேற்ப நடனமாடுவதாக இருக்கிறது. மிஷ்கின் இளையராஜாவின் பின்னணி இசையை விஷுவல் காட்சிகளுக்குப் பின்னணியாக மட்டுமில்லாமல் கதை சொல்லும் ஒரு கருவியாகவே உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்; வெளிப்படையாகச் சொல்லமுடியும் கதையை விஷுவல் காட்சிப்படுத்தல் மூலம் சொல்லிக்கொண்டே, பின்னணியில் வெவ்வேறு கதை இழைகளை இளையராஜா மூலம் சொல்லியிருக்கிறார்.

கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்

மேற்கத்திய இசையின் பல கூறுகளை இசையமைப்பாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றைத் திரையிசையில் புகுத்துவது வழக்கமானது. இக்காலகட்டத்தில்தான் கே.வி.மகாதேவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக இசையின் ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசைச் சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகும் வகையில் அவர் பாடல்கள் அமைக்க ஆரம்பித்தார்.

இசைவழி ஓடும் வாழ்க்கை – 3

சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த நிலைகளில் தம்மிடையே அவரவர் மொழிப் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். உரக்கப் பாடினால் தண்டனை கிட்டும், என்று ஒலி ஒடுங்கிய முனகலிசையும், தாளங்களும், சொல்லொடுங்கிய இசையும் அவர்களிடம் நிறைய பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சொற்கள் பேசிப் பழக ஒரே பகுதி மக்கள் இல்லாத காரணத்தால் பொருளிழந்து, தலைமுறைக்குத் தலைமுறை மாற்றிக் கொடுக்கப் படாமல் பாஷை ஞானம் அழிந்த பின்னும் எஞ்சுவன தாளங்களும், பாட்டுகளுடைய இசைப் பாணியும் மட்டுமே. இப்படி ஒரு வினோத பண்பாட்டுத் தொடர்ச்சி அமெரிக்கக் கருப்பர் இசையில் நீடிக்கிறது.

இசைவழி ஓடும் வாழ்க்கை – பகுதி 2

ஒளரங்கசீப் தன் சபையிலிருந்த சங்கீத மேதைகளைப் பாடவிடாமல் பல்லாண்டுகள் தடை விதித்திருந்தான். நாஜிக்கள் ஐரோப்பியரல்லாத மற்ற அனைவரின் இசைக்கும் தடை விதித்திருந்தனர். கம்யூனிஸ நாடுகளில் ‘இயக்கப் பாடல்கள்’ தவிர மற்ற அனைத்து இசைவகைகளையும் தடை செய்திருந்தனர். தண்டிப்பும், சிறைச்சாலைகளும், கட்டாய உழைப்பு முகாம்களும், நொறுக்கப்பட்ட பியானோக்கள், வயலின்கள், உடைக்கப்பட்ட விரல்கள், அறுக்கப்பட்ட குரல் நாண்கள் – எதுவும் இசையை ஒழிக்க முடியவில்லை.

மான்பூண்டியா பிள்ளை

கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.

இசைவழி ஓடும் வாழ்க்கை

சுமார் 20 வருடங்கள் முன்னால் நண்பர் எனக்கு பீட்டர் காப்ரியேலை அறிமுகப் படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தப் பாட்டை, இந்த இசைத் தொகுப்பை அவர்தான் எனக்கு ஒரு ஒலிநாடாவாக வாங்கிக் கொடுத்திருந்தார். சூழலில் நிறைய தொழிலாளர்கள் என்பதால் இந்தப் பாட்டு அன்று உடலுக்குள்ளெல்லாம் பயணித்து மனதைப் பிழிந்தது.

ராகம் தானம் பல்லவி – பாகம் ஐந்து

மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.

மிருதங்கம் – தஞ்சாவூரும் புதுக்கோட்டையும்

மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”, கூறியுள்ளனர்.

இசைமேதையின் புகைப்படம்

பிற்பாடு இசைவகுப்புகளில் ஹார்மோனியம் வாசிக்கும் போது ராகங்களை இனங்கண்டு எளிதாக பயில முடிந்ததற்கு சிறுவயதிலிருந்தே கேட்டுக் கேட்டுப் பழகியிருந்த ஜி.ராமனாதனின் பாடல்களே காரணமாயிருந்தன. குறிப்பாக சாருகேசி. ’ஆடமோடிகலதே’ என்னும் தியாகராஜ கீர்த்தனையை பாடமாக எழுதிக் கொண்டு மலைத்தபடியே சாருகேசியை வாசிக்க முயலும் போது மெல்ல பிடிபட ஆரம்பித்தது. என்ன ராகமென்றே தெரியாமல் ஏற்கனவே வாசித்துப் பழகியிருந்த ‘வசந்தமுல்லை போலே வந்து’ பாடலின் ஸ்வரங்களுக்குள் விரல்கள் சென்று திரும்பின. வெற்றிலை புகையிலையைத் துப்பிவிட்டு வந்து உட்கார்ந்த இசையாசிரியர் கிருஷ்ணன்ஸார் சொன்னார். ‘அப்பிடியே மன்மதலீலையை வென்றாரும் வாசிச்சுரு. வெளங்கிரும்.’ நிமிர்ந்துப் பார்க்க தைரியமில்லாமல் ஹார்மோனியத்திலேயே தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தேன்.

மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்

இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.

கீதம், சங்கீதம், தேசியகீதம்

சென்றவாரம் கொண்டாடப்பட்ட 64-ஆவது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை:
“பெரிய ஆகிருதியைக்கொண்டதொரு மனிதருக்குப் பொருத்தமில்லாத மெல்லிய குரலில் பாடத் தொடங்கினார் தாகூர். அந்தப்பாடலின் முதல் பகுதியில் இந்தியாவின் மாநிலப் பகுதிகளைக் குறித்தும், மலைகளை, நதிகளைக் குறித்தும் ஒரு புவியியல் குறிப்பைத் தந்தார். அடுத்த பகுதியில் இந்தியாவின் பல்வேறு மதங்களைக் குறித்துப் பாடினார். அப்பாடலின் முதல் பகுதியின் கோஷம் எங்கள் காதுகளைத் திறந்தது. இரண்டாம் பகுதியின் கோஷம் எங்கள் தொண்டைகளைச் சரிசெய்ய வைத்தது. அவரை மீண்டும் மீண்டும் அப்பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டோம். இறுதியில் நாங்களும் பெருமிதத்தோடு ’ஜயஹே, ஜயஹே!’ என்று வாய்திறந்து பாடினோம்”.

ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று

இப்படியாப்பட்ட கர்நாடக சங்கீத கலைஞர்கள் சாதாரணமாய் அப்படி ஆட்டோவில் வந்திறங்கி அலட்டிக்கொள்ளாமல் பாடிவிட்டு கொடுப்பதை வாங்கிகொண்டு போவார்கள். உழைக்கத்தெரிந்த பிழைக்கத் தெரியாதவர்கள். உழைக்கசோம்பும் பிழைக்கத்தெரிந்த பல அல்பசங்கதிகள் அரைமணி (ஏதோ ஒரு) மேடையேற ஆங்கிலத்தில் பேரம்பேசி ஆயிரக்கணக்கில் முன்பணமாய் கேட்கிறது. கொடுக்கிறோம். பாரம்பர்யம்மிக்க ப்ரத்யேகமான கலையின் உண்மையான உன்னதமும், அதை நாம் இன்று போஷிக்கும் விதமும் நிதர்சனமாகுகையில் கண்களில் ஜலமும் மனதில் ஆங்காரமுமே மிச்சம்.

ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு

முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார். ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும்.

இந்திய இசையில் முதல் சிம்பொனி?

சிறுகதை ஆசிரியன் நாவல் எழுத முயற்சிக்கும்போது சந்திக்கும் தடைகளுடன் இதை ஒப்பிடலாம். மற்ற இசை வடிவங்களை விட சிம்பொனிக்கு விரிவான மற்றும் ஆழமான படைப்புத் திறமை தேவை. இசைக்கோவைகள் எழுதுவதால் மட்டும் சிம்பொனி படைத்துவிட முடியாது. பல கருவிகளைப் பற்றிய அறிவு, அவற்றில் உண்டாகும் ஒலி அமைப்புகள், வாத்தியக்கருவிகள் ஒன்றாக ஒலிக்கும்போது உண்டாகும் ஒத்திசைவு, அரங்கின் ஒலிக்கட்டுப்பாடு (Hall acoustics) என பல்துறை பற்றிய விரிவான அறிவு அவசியமாகிறது. இது தொழில்நுட்பம் சார்ந்த சவால்.

விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை

சடங்குக்காய் திருமதி வித்யா சங்கரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையை அமைக்காமல், அவர் மறைந்த இவ் வேளையில் அவர் எழுதியுள்ள அற்புத புத்தகங்கள் இரண்டினைப் பற்றி பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யக் கூடிய சிறந்த அஞ்சலி என்றெண்ணுகிறேன்.

வித்யா சங்கர் – ஒரு பேட்டி

நான் வீணை கற்றுக் கொள்ள துவங்கியபோது என் வயது எட்டு. ஒரு சுவாரஸியமான சம்பவம் இருக்கிறது. ஒரு முறை, ”எளியேனே” எனும் ஆனய்யாவின் கீர்த்தனையை சபேச ஐயர் பாடப்பாட, என் தந்தை ஸ்வரப்படுத்த முயன்றார். சரணத்தில், ஒரு குறிப்பிட்ட வரியை ஸ்வரப்படுத்துவதில் என் அப்பா சற்று திணறினார். நான் என் உள்ளுணர்வு சொன்னபடி உடனடியாக ஸ்வரப்படுத்தினேன். உடனே சபேச ஐயர் என் தந்தையிடம் நான் பாடிய விதமே ஸ்வரப்படுத்தும்படி சொன்னார்.