மகரந்தம்

57216-1ஒரு தொழில்நுட்ப-அரசியல் சூதாட்டத்தின் நாடகம்

அறிவியல் ரொம்ப பெரிய சாதக பாதகங்கள் உள்ள விஷயம்தான். ஆனால் அதிலும் கூட இந்த விஷயத்தில் சின்ன தவறு நேர்ந்தாலும் ப்ராஜக்டில் இருக்கிற ஆளே போய்விடக் கூடிய நிலை. ஏனெனில் பதப்படுத்தி என்றென்றைக்குமாக பத்திரப்படுத்த வேண்டி அந்த அறிவியலாளர்களிடம் கொடுக்கப்பட்ட உடல் தோழர் விளாதிமீர் இலியுச் லெனினுடையது. கரணம் தப்பினால் மரணம். செத்த உடல் கொஞ்சம் அழுகியது தெரிந்தாலோ தொலைந்தார்கள் அவர்கள் இருவரும். இப்போது அதிபர் அவர். அவர் என்றால் அகில உலக பாட்டாளி வர்க்கத்தின் ஏகோபித்த சர்வாதிகாரி தோழர் ஸ்டாலின். போதாக்குறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அறிவியலாளர்களும் யூதர்கள் வேறு. அந்த இருவரின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும்? அவர்கள் மனதில் பத்திரிகை தலைப்புகள் தோன்றி மறைகின்றன: “இரண்டு யூதர்கள் லெனினின் உடலை பதப்படுத்துகிறார்கள்” “இரண்டு யூதர்கள் உப்பு சுரங்கத்தில் மடிந்தார்கள்” இந்நிலையில் அவர்கள் மற்றொரு பயங்கர விஷயத்தை கண்டு பிடிக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும் நிரந்தரமாக உடலை பதப்படுத்தி அப்படியே கெடாமல் வைப்பது இயலாது (குறைந்தது அன்றைக்கு இருந்த தொழில்நுட்பத்துக்கு) ஆறுமாதத்துக்கு ஒருதடவை அதனை மீண்டும் எடுத்து சுத்தம் செய்து பதப்படுத்த வேண்டும். என்ன செய்வது இந்த போராட்டங்களை அன்றைய பாதுகாப்பற்ற சூழலை, அரசியலை எல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட நாடகம்தான் “Lenin’s Embalmers”. மேலதிக விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்குங்கள்.

ரஷ்ய ரயிலும், இந்திய அரசும்: secondரஷ்யாவும் இந்தியாவும் பல விதங்களில் ஒரே போலத் தெரிகின்றன.  அதிகாரத்தில் திருடர்கள், கேட்பாரற்ற ராணுவம், யாருக்கும் பதில் சொல்லாத போலிஸ் அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக இயங்குவது, நீதியற்ற நீதிமன்றங்கள், பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாத வழக்குகள், பணமுள்ளவர்கள் எதையும் செய்யும் ஒரு சமூக அமைப்பு, வர வர வாடிக்கைக் குற்றவாளிகள் சமூகத்தில் அந்தஸ்தும், அதிகாரமும், சொத்தும் குவித்திருக்க, உழைக்கும் மக்கள் தொடர்ந்து வாடிவருவது. இன்னும் எத்தனையோ ஒப்புமைப் புள்ளிகள் உண்டு.  ரஷ்யாவில் இல்லாத ஒன்று பெரும் மக்கள் தொகை.  இல்லாத இன்னொன்று போதுமான விளைநிலங்கள்.  இல்லாத ஒன்று வெற்றிகரமான விவசாயம். என்றுமே இல்லாத ஒன்று ஜனநாயகம். இருக்கிற சில – ஏராளமான காலி நிலங்கள், குறைந்து கொண்டே வரும் மக்கள் தொகை, கடுங்குளிர் வருடத்தில் பாதி நாட்கள், சொல்லி அடங்காத நிலப்பரப்பில் நல்ல தண்ணீர், காடுகள், எடுகக எடுக்கத் தீராத பெட்ரோலிய எண்ணெய், ஏதேதோ அற்புதமான கனிமங்கள். இன்னொன்றும் உண்டு.  அதிவேக ரயில்கள்.  இந்தியாவில் இவை இன்னும் வரவில்லை. வர வெகு காலம் ஆகும்.  ஆனால் ஒன்று இரண்டு நாடுகளிலும் உண்டு- வேக ரயில்கள் மீது சாதாரண மக்களும், சிற்றூர்க் குற்றவாளிகளும், பெருநகரக் கொள்ளையரும்  ரயில்கள் கடக்கும்போது அவற்றின் மீது கல்லெறிவது.  ரஷ்யாவில் ஐஸ்கட்டிகளையும் எறிகிறார்கள். நாச வேலை செய்வதில் எத்தனை ஒற்றுமை பாருங்கள் இரு நாடுகளிலும்.  அதே நேரம் காரணம் என்ன என்று பார்த்தால் மக்கள் நலன்களை அதிகாரி வர்க்கம் கவனிக்காது அலட்சியம் செய்து பணமுதலைகளுக்கு மட்டும் ரயில் என்றாக்கியது ஒரு முக்கியக் காரணம் என்று தெரிகிறது.  இதை மாஸ்கோ டைம்ஸ் சுட்டுகிறது, இங்கே.

http://www.themoscowtimes.com/news/article/high-speed-sapsan-has-locals-up-in-arms/402563.html

பீஜிங் to பிரிட்டன் – ஒரு ரயில் பயணம்: சீனா முழுவதையும் ஏற்கனவே அதிவேக ரயில்களால் இணைத்திருக்கும் சீன அரசு, இப்போது சீனாவிலிருந்து பிரிட்டன் வரை அதிவேக ரயில் போக்குவரத்தை நிறுவப் போகிறதாம். அதைப் பற்றியதொரு சுவாரசியமான கட்டுரையை இங்கே படிக்கலாம். சீனா என்ன செய்தாலும் அதை மனமுவந்து ஆதரிக்கும் இந்திய மாவோயிஸ்ட்டுகளோ, இந்தியாவிலிருக்கும் ரயில் இணைப்புகளை குண்டு வைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்களின் தலைவிதியில் விளையாடும் முரண்நகை.

நஞ்சாகும் கடல்: beachtrashசென்ற இதழில் கடல் நீர் அமிலமாவதைப் பற்றி எழுதியதைப் படித்திருப்பீர்கள்.  சூழல் நசிவு என்பது உலகம் மேலும் மேலும் இணைப்பு பெறுவதன் விளைவு என்பதை அதில் சுட்டி இருந்தோம்.  உலகச் சந்தை பெருக்கையில், உலக மக்களிடையே பொருட்களின் பரிவர்த்தனை கூடுகிறது.  இதற்குக் கப்பல்கள் ஏராளமாகப் பயன்படுவதோடு அவை மேன்மேலும் அளவிலும் பெரிதாகின்றன. கப்பல்களின் அளவும், பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க கடல்நீர் மாசுபடுவதும் அதிகரிக்கிறது என்பது வரை பொதுவாக நம் எல்லாருக்கும் தெரியும்.  ஆனால் போக்குவரத்தினால் மட்டும்தான் கடல்நீர் மாசுபடுகிறதென்று இல்லை.

உலகெங்கும் பொருட்களை அனுப்ப உதவியாக எடை குறைப்புக்கு எல்லாத் தளங்களிலும் முயற்சி நடக்கிறது.  இதன் பொருட்டு, பொருட்களிலும், பயணச் சாதனங்களிலும், ரயில், விமானம், பஸ், கார் என்று மட்டுமல்ல, அன்றாடப் புழக்க சாதனங்களிலெல்லாம் ப்ளாஸ்டிக் பரவுகிறது.  போதாக்குறைக்கு உலகெங்கும் குடிநீர் சேமிக்கவும், எடுத்துச் செல்லவும், ஏன் குழந்தைகளுக்குப் பால் புகட்டக் கூட பாட்டில்களில் இப்போது பிளாஸ்டிக்.  இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பரிமளித்து விட்ட ப்ளாஸ்டிக்குக்கும் கடலுக்கும் என்ன சம்பந்தம்?

பிஸ்ஃபீனால் ஏ (Bisphenol A – BPA) எனப்படும் ஒரு ரசாயனம் எளிதில் உடையாமல் இருக்க, உறுதித்தன்மை கூட்டவென ப்ளாஸ்டிக் பாட்டில்களில் சேர்க்கப்படுகிறது.  நிறைய ரெஸின் எனப்படும் சாந்துகளிலும் இது உண்டு (Epoxy Resin). இது இப்போது உலகின் கடல்களில் கலந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.  உப்புத் தண்ணீரில் மென் பிளாஸ்டிக் எளிதில் உடைந்து கரைகிறது என்றும், அதனால் நிறைய நச்சுப் பொருட்கள் கடல் நீரில் கலக்கின்றன என்றும் ஒரு அறிக்கை சொல்கிறது.

மனித இன உற்பத்திக்கே ஆபத்து விளைவிக்கும் நச்சுப் பொருட்களை கடல்நீரில் கலக்கும் ரசாயனங்கள், குறிப்பாக ப்ளாஸ்டிக் நசிவால் வெளிப்படும் கழிபொருட்கள், நம் உடல்களுக்குள் கொணர்கின்றன.  BPA உடலில் கொழுப்பு சத்தில் சேமிக்கப்படுவது.  இது ஒரு அளவு கடந்தால் என்னென்ன சேதங்கள் நேரும் என்று நாம் அறிய வேண்டும் என இந்த அறிக்கை சொல்கிறது.  அறிக்கையின் கீழே வாசகர்களின் சர்ச்சைகளையும் பாருங்கள். பிஸ்ஃபீனால்-ஏ  என்று விக்கிபீடியாவில் தேடினால் கிட்டுவதையும் படித்துப் பாருங்கள்.

http://www.wired.com/wiredscience/2010/03/ocean-bpa/#ixzz0jBmM9wVF

நிறைய அமெரிக்க மாநிலங்கள் இந்த பிஸ்ஃபீனால்-ஏ உள்ள பொருட்களையோ, அல்லது இந்த கூட்டுப் பொருளையே கூடவோ தடை செய்ய வேண்டும் எனக் கருதத் துவங்கி விட்டன.  இதோ இரு செய்திகள் அதுபற்றி

http://content.usatoday.com/communities/greenhouse/post/2010/02/bans-sought-for-chemical-bpa-in-baby-toddler-products/1

http://www.huffingtonpost.com/edison-de-mello-md-phd/the-water-bottle-lie-and_b_506523.html

உடலினை உறுதி செய்: boost-metabolismஇந்தியாவிலும், சீனாவிலும், பல ஆசிய நாடுகளிலும், ஏன் ஆப்பிரிக்க நாடுகளில் கூட முதியவர்கள் தொகை அதிகரித்து வருகிறது.  முதியோர் அதிகரிப்பதால் அவர்கள் நலமுடன் வாழ்வதும் அதிகரிக்க வேண்டும் என்பதை நாடுகளும், குடும்பங்களும் உணரத் துவங்கி இருக்கின்றனர்.  எப்படி இளமையிலும், முதுமையிலும் அறிவு சுடர் விட வாழ்வது என்பதுதான் ஒரு முக்கியக் கேள்வி.  நம் உடலில் உள்ள செல்களின் ஒரு பகுதியான மைடோகாண்ட்ரியாவில் உள்ள சக்தியே நம் உடலை வலுவாக வைத்திருக்கிறது. அதை நன்னிலையில் வைத்தால் நம் உடலும் அறிவும் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  உலோகம் துருப்பிடிப்பது போல, நம் உடலில் அணுக்களும் சீரழிந்து குலைகின்றன.  இந்தக் குலைவு, உடலில் சக்தி நீடிக்க விடாமல் ஆக்குகிறது.  இதைத் தடுக்க நம் உடலின் இயங்குதிறன் (metabolism) நல்ல நிலையில் வைப்பது அவசியம் என்கிறது இந்த அறிக்கை.  சரி, எப்படி அதைச் சாதிப்பது?

இனிப்புகளால் சேரும் பயனற்ற கலோரிகளைக் குவிக்காதீர்கள் என்பது ஒரு அறிவுரை. உடலில் வீக்கம் (Inflammation), உப்பல் ஏற்பட சர்க்கரை ஒரு காரணம். கொலஸ்ட்ரால் சேர்ந்து இதய நோய் வராமல் தடுக்க ஸ்டாடின் என்ற மருந்து வகைகளை ஏராளமான இந்தியர்கள் உண்கிறார்கள்.  அந்த கொழுப்புச் சேர்ப்பு என்பதே கூட உடலில் வீக்கம் பல இடங்களிலும் ஏற்படுவதால் நிகழ்கிறதோ என்று யோசிக்கத் துவங்கி இருக்கிறது மேலை இதய மருத்துவக் கூட்டம்.

உடலியங்கு திறன் கூட முதல் படி நடவடிக்கை என்ன, எப்படி ஆரோக்கியத்தை வளர்ப்பது என்று சொல்கிறார் இந்த மருத்துவர், இக்கட்டுரையில்.

http://www.huffingtonpost.com/dr-mark-hyman/how-to-give-yourself-a-me_b_506431.html?view=print