யூத இன அழிப்பும் இசையின் வரலாறும்

பெரும் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகள் மூலமாக உலக சமூகங்கள் மீது தம்முடைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். உலக மக்களிடையே இந்த கலைஞர்கள் குறித்த மனபிம்பங்கள் அவர்களின் படைப்புகள் மூலமாகவே ஏற்படுகின்றன. பல சமயங்களில் அந்த பிம்பங்கள் வாசகனின் வெற்றுக் கற்பனையாக மட்டுமே எஞ்சும். படைப்பாளிகள் சார்ந்திருக்கும் கருத்தியல், அவர்களின் நம்பிக்கைகள், மனிதகுலம் குறித்த அவர்களின் பார்வைகளை நாம் தரிசிக்கும் தருணத்தில், அது நாள் வரை அம்மனிதர்கள் பற்றி ஒருவர் கொண்டிருக்கும் பிம்பங்களை முற்றிலும் சிதறடிக்கும். அந்த தருணம் மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கும். தன் கதைகளின் மூலம் வாழ்வின் அபத்தங்களை முன்னிருத்திய சகி-யின்(Saki) மெளனப்புன்னகையின் பின்னால் மறைந்திருந்த யூத வெறுப்பு மற்றும் ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை எவரும் அவ்வளவு எளிதாக அறிந்துவிடமுடியாது. தங்கள் எழுத்துக்கள் மூலம் “அறிவுஜீவி” தோற்றம் கொண்ட சில எழுத்தாளர்கள் நிச்சயம் தங்கள் பதிப்பாளர்களிடமிருந்து வரவேண்டிய பணத்தை எப்படி வசூல் செய்வது என்று தெரியாமல் முழித்திருப்பார்கள். குறிப்பாக தமிழ் சூழலில் இந்த சாத்தியத்தை மறுக்கமுடியாது.

மிக அரிதாக ஒரு சில எதிர்மறை தருணங்களும் நிகழ்ந்துவிடும். பெய்தோவனின் இசைக்கோர்வைகளை கேட்டு, அதன் அழகில் லயித்து, அதன் பிரம்மாண்டத்தின் முன் தன்னை சிறுமையாக உணரும் எந்த ஒரு இசை ரசிகனும், அவரின் உடல் குறைபாடுகளை அறியவரும் போது, தன்னுள் இருக்கும் பெய்தோவனின் பிம்பம் இன்னும் விரிவடைவதை உணரமுடியும். அந்த பிம்பத்தின் முன் தன்னை இன்னும் சிறியவராக உணர நேரும் தருணம் அது, ஏனெனில் ஒப்பீட்டில் அவருடைய சாதனைகள் இன்னும் உருப்பெருக்கித் தெரிகின்றன. ஆனால் இத்தகைய தருணங்கள் மிகவும் சொற்பம். பிம்பங்கள் உடைந்து சிதறுவதுதான் அனேக நேரம் நடக்கக் கூடியது.  காரணம், நம் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் எப்போதுமே அசல் வாழ்வை விட அதீதமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

இசையுடனான மனிதகுலத்தின் உறவை அறுதியிட்டு சொல்லிவிட முடியாது. மனித மூதாதையான சிம்பான்ஸிகளின் நெருப்பு நடனத்தின் ஆதாரமாக நிச்சயம் இசை இருந்திருக்கும். இசைக்கருவிகளின் வடிவம் குறித்த கவலை இங்கு அவசியமில்லை. தாங்கள் வளர்த்த அக்னியின் நாவசைவுகளில் அவர்கள் அடைந்த மனஎழுச்சியை தங்கள் நடன அசைவுகளில் வெளிப்படுத்தினர். அதன் ஆதார தாளம் நிச்சயம் அவர்கள் அகத்தில் ஒலித்திருக்கும் தானே! பரிணாம வளர்ச்சியின் ஊடாக மனித குலத்தின் அழகியல் திறனின் உச்சமாக இசை திகழ்கிறது. இன்றைய உலகின் எந்த ஒரு மனிதனும் இசையை விட்டு எந்த கணத்திலும் விலகி நிற்கவில்லை. இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் குறைந்தபட்சம் ஒரு திரையிசை பாடலாவது உங்கள் நினைவுகளை தொட்டிருக்கும்.

இசை குறித்த பார்வைகள், அதன் வடிவங்கள், அதை மனித குலம் உள்வாங்கும் விதம் இவையாவும் வெகு வேகமாக மாறிவரும் இந்த யுகத்தில் இசை குறித்த புரிதல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இசையை எதற்காகப் புரிந்து கொள்ளவேண்டும்? ”இசையை ரசிக்க தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவழிக்கும் ஒரு இசைக் காதலர், ஒரு ரசிகனாக மட்டுமில்லாமல் இசை குறித்த சிந்தனைகள் வழியேயும் அதை எதிர்கொள்ள முடியும்” என்று கூறுகிறார் ஹன்ஸ் ஹெய்ன்ரிஹ் எக்ப்ரைஷ்ட் (Hans Heinrich Eggebrecht). இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இசை விமர்சகர் மற்றும் இசை வரலாற்றாய்வாளராக திகழ்பவர் ஹன்ஸ். உலகின் அற்புதமான இசைக் கலைஞர்களான பாஹ், பேய்தோவன், மா(ஹ்)லர் (Mahler) ஆகியோரின் படைப்புகளை குறித்த அவரது ஆராய்ச்சி முக்கியமானது. இசை மற்றும் மனம், இவை இரண்டுக்குமிடையே உள்ள உறவை மிகத் துல்லியமாக அளிக்கிறது ஹான்ஸின் ஆய்வு. இசையுடனான ஒரு ரசிகனின் உறவு, இசையின் பன்முகத்தன்மை வெளிப்படுத்தும் அர்த்தங்கள், இசையைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகள், இசையை புரிந்துக்கொள்வதில் உள்ள தடைகள் மற்றும் அதற்கு அப்பாலும் இசையின் வெளி குறித்த பல ஆய்வுகள் ஹன்ஸின் புகழை இன்றளவும் உலகுக்கு எடுத்துரைக்கின்றன.

ஆனால், மனித குலத்தின் மெல்லிய உணர்ச்சிகளுடன் உரையாடி, தனது உச்சத்தின் ஏதேனும் ஒரு புள்ளியின் மீது மனித குலத்தை அமர்த்தி அழகு பார்க்கும் இசையை ஆய்வு செய்த ஹன்ஸின் இன்னொரு முகம் அருவருக்கத்தக்கது.

ஹன்ஸ், ஜெர்மானியர். தீவிர கிறிஸ்துவ மதப் பின்னணியில் வளர்ந்த ஹன்ஸ், தன்னுடைய இளவயதிலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். ”தேசிய சோசியலிச ஜெர்மன் மாணவர் கூட்டமைப்”பில் தன்னை இணைத்துக் கொண்டார். நாஜி கட்சியின் இளைஞர் பிரிவான “ஹிட்லரின் இளைஞர் படை”யில் பணியாற்றிய ஹன்ஸ் அந்த இயக்கத்தின் மீது கொண்டிருந்த பற்றால் அரசு ஆணைப்படியான கட்டாய பணிக்காலம் முடிந்த பிறகும் அதிலேயே பணியாற்றினார். “ஹிட்லரின் இளைஞர் படை”யின் இசை ஆலோசகராகப் பணியாற்றிய அவர் மிகுந்த துடிப்புடன் செயல்பட்டார். இரண்டாம் உலகப்போரை ஒட்டி 1939-ல் அமைக்கப்பட்ட ஃபெல்ட்ஜொண்டார்மரி (Feldgendarmerie) படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

ஃபெல்ட்ஜொண்டார்மரிப் படை ஆயுதம் தாங்கிய ராணுவப் போலிஸ் போன்றது. வரலாற்றில் மிகக் கோரமான பக்கங்களை நிரப்பிய பெருமை இந்த படையை சேரும். ஹிட்லரின் ஆளுகைக்குள் இருந்த அனைத்து நாடுகளில் உள்ள யூதர்களை தேடிப் பிடித்து அவர்களை கொடூரமான முறையில் கொன்றழித்தது இந்தப் படை. ஃபெல்ட்ஜொண்டார்மரிப் படைக்கிருந்த உயர்வான அந்தஸ்து ஜெர்மனியின் பல கல்லூரி மாணவர்களை ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளுக்காக அறியப்பட்ட இந்த படையில் சேர வீரர்களின் ”நிபந்தனையற்ற அரசு விசுவாசம்” அவசியமாக இருந்தது. சட்ட ஒழுங்கு அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளில் ஈடுபட்ட இந்த படை, யூதர்கள் மற்றும் பிற மக்கள் கூட்டங்கள் மீது தனது அராஜகங்களை அரங்கேற்றியது. அரசுக்கு எதிரான எந்த ஒரு சிறு நடவடிக்கையும் நிகழாத வண்ணம் செயல்பட்டது. இந்த படையில் ஒரு பிரிவான “683”-ல் ஹன்ஸ் பணியாற்றினார்.

ஜெர்மனிய ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த இந்த படை எல்லா வித பாதுகாப்பு சார்ந்த துரித எதிர்வினைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஜெர்மனிய ராணுவத்தின் 11-ஆவது பிரிவின் ஒரு அங்கமாக இருந்த இந்த படை ”ஐன் ஜாட்ஸ் கொஹப்பெ டி” (Einsatzgruppe D) எனும் படையுடன் இணைந்து யூத இன ஒழிப்பில் முக்கிய பங்கு வகித்தது. 30 ஜூன் 1941 அன்று, சோவியத் ரஷ்யா மீது தாக்குதல் ஆரம்பித்து ஏழு நாட்கள் ஆகியிருந்தன. கிரிமியன் தீபகற்பத்தைக்(Crimean peninsular) கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்ட இந்தப் படை 14 நவம்பர் 1941-அன்று சிம்ஃபெரொபோல்(Simferopol) வந்தடைந்தது. இந்தப் படையில் இரண்டு கம்பனிகள் மட்டும்(மொத்தம் 150 வீரர்கள்) சிம்ஃபெரோபொலில் தங்கினர். இந்த 150 பேரில் ஹன்ஸும் ஒருவர். சிம்ஃபெரோபொலை வந்தடைந்த உடனேயே இந்தப் படை யூதர்கள் மீதான தன்னுடைய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. யூதர்களின் நிறுவனங்களைக் கைப்பற்றினர். யூதர்கள் கடைகளில் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் யூதர்களை உயிருடன் வதைப்பது அவர்களின் திட்டம். மேலும் யூதர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் திட்டமும் அவர்கள் கைவசம் இருந்தது. ஆயினும் போதுமான வீரர்கள் இல்லாததால் அவர்களால் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.

ஆனாலும் சில நாட்களில் மேலும் இரண்டு கம்பனி படைகள் அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டனர். நாஜிகளின் கொலைகள் ஆரம்பமாயின. அந்த பகுதியில் இருந்த யூதர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு  வதை முகாம்களுக்கு அனுப்பபட்டனர். சில சமயங்களில் வன்முறையின் உச்சத்தை தொட்ட இந்தப் படை, யூதர்களை இரும்பு தடிகளால் தாக்கியது. ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் யூதர்கள் மீது ஏவப்பட்டன. எந்த யூதரேனும் சற்றும் முரண்டு பிடித்தாலோ அவர்கள் உடனடியாக அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த கொலைத்திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் செவ்வனே நடந்து முடிய இந்த படைகளின் சீரிய செயல்பாடு துணை புரிந்தது. சிம்ஃபெரோபொல் பகுதியில் வாழ்ந்த அனைத்து யூதர்களும் கொல்லப்பட்ட செய்தியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது இந்தப்படை.

1942 ஜூலைக்கு பிறகு இந்தப்படைகள் பல்வேறு யுத்த முனைகளுக்கு அனுப்பப்பட்டன. ஹன்ஸ் தனக்கு ஆணையிட்டபடி ஒரு யுத்த களத்தில் போரிட்டார். போரின் முடிவில் மிகுந்த மோசமான காயங்களுடன் உயிர் பிழைத்த ஹன்ஸ், மீண்டு குணமாகி யுத்தத்திற்கு முந்தைய தனது கல்விப் பணிக்கு திரும்பினார். 1945-க்கு பிறகு இசை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஹான்ஸ் முனைவர் பட்டம் பெற்றார். அவர் புரிந்த குற்றங்களுக்கான எந்த தண்டனையும் அவருக்கு வழங்கப்படவில்லை. எந்தவித சீர்திருத்த சிறைகளுக்கும் அவர் அனுப்பப்படவில்லை. எப்படி?

யுத்தம் முடிந்தபின் கல்விப்பணிக்கு திரும்பிய ஹன்ஸ் பல்கலைக்கழகங்களில் பொய்யான தகவல்களை அளித்து தன்னுடைய கடந்தகாலத்தை முற்றிலுமாக மறைத்துவிட்டார். அவர் அளித்த விண்ணப்ப படிவங்களில் தான் யுத்தமுனைகளில் பணியாற்றியதை குறித்து எந்த ஒரு சரியான தகவலையும் அவர் மறந்தும் அளிக்கவில்லை. ஹான்ஸ் தன்னுடைய அற்புதமான எதிர்காலப் பயணத்தில் எந்தவித கடந்தகாலத்தின் குறிக்கீடுகளையும் விரும்பவில்லை.

இது நாள் வரை உலகம் அறியாத ஹன்ஸின் இன்னொரு முகத்தை போரிஸ் ஃபான் ஹாகன் (Boris Von Haken) எனும் இசை வரலாற்றாய்வாளர்  “இன அழிப்பும் இசை வரலாறும்”(Holocaust and Musicology) எனும்  புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க, குறிப்பாக ஹன்ஸின் இன்னொரு முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர அவர் எடுத்திருக்கும் முயற்சி அபிரிதமானது.

நுண்கலைகளுடன் தொடர்புடையவர்கள் யாவரும் தவறிழைக்காதவர்களாகவும், கலைகளின்பால் உள்ள அவர்களின் காதல் எந்தவித குறைபாடுமின்றி மனிதர்களை நோக்கியும் பாயவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது தான். கலைஞர்கள் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனையுமே கூட அந்த கண்ணோட்டத்தில் நாம் பார்த்துவிட முடியாது. மனிதன் குறைப்பட்டவனே. ஆனால், இது போன்ற நிகழ்வுகள் நம்மை கலங்க வைக்கின்றன.  மானுடம் தவிர்க்க முடியாத கசப்புகளை சந்தித்த தருணங்கள் யாவும் சரிந்து விழுந்த மனித நேயத்தின் கணங்கள் தான். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த காலகட்டம் ஒரு உதாரணம். மானுடத்தின் ரணம். ரணங்கள் சீழ் வடியும் புண்ணாக மாறி ஆறிவிட்டதாக நினைக்கையில், தோலின் மேல் உள்ள காய்ந்த சிதல்களை பிளந்தபடி வெளியே வந்து விழும் ஒரு புழு, அந்த ஒரு தருணம் மானுடத்தை மீண்டும் பெரும் நரகத்திற்க்குள் தள்ளிவிடும். ஹான்ஸ் குறித்த இந்த புத்தகம் அத்தகைய ஒரு தருணத்தையே நமக்கு முன் எடுத்து வைக்கிறது.

ஹன்ஸ் இறுதி வரை தன் பெருங்குற்றங்களுக்கு எந்தப் பொறுப்பும் ஏற்காததோடு, மதிப்போடு பல்கலைச் சூழலில் போதனையாளராகவும் இருந்தார் என்பது ஜெர்மனியின் சமூகத்துள் என்னென்ன மர்மங்கள், கசப்பான உண்மைகளெல்லாம் புதைந்திருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது.  இனவெறி என்பது ஒரு நாட்டிலோ, சமூகத்திலோ பரவலாக இருந்தால் அதைக் களைய எத்தனை ஆழ்ந்த முயற்சிகள் தேவை என்பதையும் சுட்டுகிறது.