தேடல்

“சந்தேகம் வரமாதிரின்னா? எப்படி?” – தட்டைத் திரை மானிடரைப் பார்த்தபடியே, தலையைத் திருப்பாமல் சுனில் கேட்ட போதுதான் ஹரிக்குப் புரிந்தது. தான் எவ்வளவு முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறோம் என்று.

அவனுக்கு வேறு எப்படி கேட்பது என்றும் தெரியவில்லை. ‘என் பர்சைக் காணவில்லை. அதை திருடிக் கொண்டு சென்றவனைப் பார்த்தாயா?’ என்று கேட்பது மட்டும் தெளிவான கேள்வியோ? இங்கே திருடன் என்று தனியாக யார் இருக்கிறார்கள்… தன் சட்டைப்பையில் பெயரோடு தான் ஒரு திருடன் என்ற வாசகம் எழுதிவைத்து யார் இங்கே நடமாடுகிறார்கள்…கேட்டவுடன் சுட்டிக்காட்ட? ‘பார்க்கவில்லை என்றால் “இல்லை” என்று சொல்லிவிட்டு போயேன். என் கேள்வியை ஆராய இப்போது என்ன அவசியம்?’- ஹரிக்குக் கொஞ்சமாக கோபம் எட்டிப் பார்த்தது. அதைக் காட்டவில்லை. கோபத்தை ஒருவரிடம் வெளிப்படுத்தக் கூட அந்த உறவில் ஒரு குறைந்தபட்ச நெருக்கம் தேவை. ஹரி-சுனில் உறவில் அது இன்னமும் வரவில்லை.

உண்மையில் அவன் சுனிலை சந்திப்பது இது மூன்றாவது முறையே! பசங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் போது இரண்டு முறை பார்த்திருக்கிறான். பெயர் சுனில், தமிழ் பேசுபவன், கம்ப்யூட்டர் சயின்ஸில் எம்.எஸ்., இடக்கை வேகப்பந்து வீச்சாளன் என்பது மட்டுமே தெரியும்.

அந்த அளவிற்கான அறிமுகம் கூட ஹரிக்கு அங்கே இருந்த மற்றவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நூலகத்தின் முதல் தளத்தில் அப்போது அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் அவர்களுள் இந்த சுனில் ஒருவன் மட்டுமே பரிச்சயமான நபர்.

மற்றவர்கள்?

தெற்கு ஓரத்தில்… ஒரு குழுவை கூட்டிக் கொண்டு, மடிக்கணிணியில் எதையோ தட்டிக்கொண்டு, அவ்வப்போது வேகமாக வார்த்தைகளை கடித்துத் துப்பி கிசுகிசுக்கும் சீன (கொரிய?) மாணவர்கள். மேற்கு மூலையில்… மற்றுமொரு குழு, மறுபடியும் மடிக்கணினி, அடிக்கடி மெதுவாக (ஆனால் வாய்விட்டு நீளமாக) சிரிக்கும் கருப்பு மாணவர்கள். தொப்பியோடு கூடிய ஸ்வெட்ஷர்ட்டும், தொடை தெரியும் குட்டி கால்சட்டையும் அணிந்து கொண்டு, கருமமே கண்ணாயிரமாக, கணினியின் விசைப்பலகையை  விரல்களால் வன்முறைக்கும் வெள்ளைத்தோல் மாணவிகள். பெரிய அட்டை டம்ப்ளரில் ஸ்டார்பக்ஸ் காப்பியோடு, புத்தகத்தைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே! என்பது போல எப்போதும் தலை கவிழ்ந்த வெள்ளைக்கார மாணவர்கள். மற்றும், அங்குமிங்குமாய் சில்லரையாக சிதறி கிடந்த முகம் தெரியா இந்திய மாணவர்கள்.

எந்தவொரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் நூலகத்திலும் ஒரு ஃபால் (இலையுதிர் காலம்) செமஸ்டரின் மாலைப் பொழுதில் இப்படியொரு காட்சியைப் பார்க்கலாம். ஹரி படிக்கும் இந்த பல்கலைக்கழகத்திலும் பார்க்கலாம்.

இப்படியொரு சூழலில் தான் ஹரி தன் பர்சை தொலைத்தான். தொலைத்தான் என்பது சரியா? யாராவது பர்சை வேண்டுமென்றே தொலைப்பார்களா? யாரோ அவனுடைய பர்சை திருடிவிட்டார்கள் என்று சொல்வது ஓரளவு பொருந்தும்.

அறுபது பேரில் ஒருவனாக ஹரியும் அந்த நூலகத்தில் மதியத்திலிருந்தே ஐக்கியமாகிவிட்டான். அவன் இந்த செமஸ்டரில் எடுத்துக்கொண்டிருக்கும் பாடங்கள் மூன்று. அதில் ஒன்றில் நாளை மற்றுமொரு இடைப்பருவத் தேர்வு. அதற்கு தயார் செய்யவே இங்கு பழியாகக் கிடக்கிறான். பாடமும் லேசு பட்டதில்லை. இதுவரை நடந்த தேர்வுகளில் அவன் வாங்கிய மதிப்பெண்கள் சராசரிக்கும் கீழே. இப்படியே தொடர்ந்தால் ‘சி’ கிரேடு தான் கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். ‘சி’  கிரேடின் விளைவுகள் எல்லாம் பயங்கரம் என்பதும் தெரியும். அதற்காகத்தான் இப்படி புரியாத பாடத்துடன் மல்லு கட்டுகிறான்.

“ஒரு ஆம்பிளிபியரிடமிருந்து வெளியே வரும் சிக்னலை மீண்டும் அதற்கு பின்னூட்டமாகத் தரும் போது, அந்த ஆம்ப்ளிபியர் தன்னிலை தவற வாய்ப்புள்ளது. அதை தடுக்க, ஒரு கபாசிட்டரை இடையே செருகி ஈடுகட்ட வேண்டும்”.

கிட்டத்தட்ட அவன் நிலையும் அதேதான். இதுவரை எடுத்த மதிப்பெண்களால் அவன் நிலை ‘சி’யை நோக்கி தடுமாறிக் கொண்டிருக்கிறது. இனி வரும் தேர்வுகளில் எப்படியாவது நல்ல மதிப்பெண் வாங்கி சமன் செய்ய வேண்டும். ரொம்ப கஷ்டம்! பாடமோ சுத்தமாக புரியவில்லை. ஊரில் இருந்தது போல எதையாவது கடம் அடித்துக் கொண்டு கொட்டிவிட்டு வரலாம் என்றால், கருமம்… கருத்தை அடிப்படியாகக் கொண்ட டிசைன் கணக்குகளை கேட்டுத் தொலைக்கிறார்களே!

இதற்கு முன் ஹரி படிப்பிற்காக இப்படி சலித்துக் கொண்டதேயில்லை. பி.ஈ. படிக்கும் பொது கூட மெனக்கட்டதெல்லாம் இல்லை. ‘ஸ்டடி ஹால்ஸ்’சின் பொது மட்டும் திட்டம் போட்டு படிப்பான். அலட்டிக்கொள்ளாமல் எழுபது, எண்பது வந்துவிடும். ஒரே செமஸ்டரில் எட்டு பாடங்களெல்லாம் படித்திருக்கிறோம். இங்கே மூன்றுக்கே முழி பிதுங்கும் என்று பயமூட்டுகிறார்களே என்று வந்த புதிதில் வியந்தான். இப்போதுதானே புரிகிறது! அப்பப்பா… மாற்றி மாற்றி வீட்டுப்பாடமும், ப்ரோஜெக்டும், தேர்வும் கொடுத்து கழுத்தை நெறிக்கிறார்கள். நிம்மதியா ஒரு நல்ல தூக்கத்தை அவன் தொலைத்து வாரங்கள் ஆகிவிட்டன. அப்படியொரு தூக்கம் ஆம்பிளிபியரைப் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவன் கண்களோடு வந்து ஒட்டிக்கொண்டது. அதிகமில்லை… பத்து பதினைந்து நிமிடங்கள்தான் தூங்கியிருப்பான். விழித்துப் பார்க்கும் போது பர்ஸ் காணோம்!

ஒன்றுமே புரியாமல் சுற்றி முற்றி பார்த்தபோது அகப்பட்டான் சுனில். வரிசையாக உட்கார்ந்திருந்த கணிப்பொறிகளுள் ஒன்றோடு ஒன்றிருந்தான். ‘இவனைக் கேட்கலாமா? எதாவது தெரிந்திருக்குமா?’. ஹரி சந்தேகத்துடன் தான் சென்றான். அதைத் தொடர்ந்தது மேலே உள்ள உரையாடல்.
‘ஆக, இவனுக்கு ஒன்றும் தெரியாது’- என்று எண்ணியபடியே திரும்பியவனை நிறுத்தியது சுனிலின் குரல், “சர்குலேஷன் டெஸ்க்குல கேட்டுப்பாரு”. உபயோகமான யோசனைதான்!

சர்குலேஷன் டெஸ்க் நூலகத்தின் நுழைவாயிலுக்கு இடப்புறம் இருந்தது. மூன்று கணிப்பொறிகள் அடுத்தடுத்து இருந்தன. இரண்டாவதுக்குப் பின்னால் ஒரு இளம் பெண். அவளுக்குப் பின் ஐந்தாறு இரும்பு அலமாரிகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள். பெண்ணின் கையிலும் ஒரு புத்தகம். “BARE BONES: A SURVEY OF FORENSIC ANTHROPOLOGY” என்று அதன் அட்டையில் எழுதியிருந்தது. இவளும் இங்கு படிப்பவளே. அண்டர்கிராட். சோஃபோமோரா? ஜூனியரா? – ஹரியால் யூகிக்க இயலவில்லை. ஆந்த்ரபாலஜி படிக்கிறாள். அது என்ன படிப்பு? கலையா? அறிவியலா? இப்படியொரு படிப்பு இருப்பது இதுவரை அவனுக்குத் தெரியாது. சியர்லீடர்களுக்கு எல்லாம் கோர்ஸ் இருக்கிறது என்று கார்த்திக் முன்பொருமுறை சொன்னபோது அவன் நம்பவேயில்லை. இப்போது நம்பிவிடுவான்.

“ஹாய் தேர்!” சூயிங் கம்மை பல்லில் அடக்கிக் கொண்டு கேட்டாள், “ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”
மெல்லிய ஒரு ‘ஹாய்’யுடன் தொடங்கி ஹரி தன் கதையைச் சொன்னான். தலையாட்டிய படி கேட்டாள்.
“ஹாங் ஆன் ஃபார் எ செகண்ட். பீ ரைட் பேக்” என்று புத்தகத்தை மேஜை மேலே வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

மஞ்சள், பச்சை, ரோஸ் வண்ண ஹை-லைடர்களால் மாற்றி மாற்றி வாக்கியங்களை அடிக்கோடிட்டு, புத்தகத்தின் பக்கங்களில் ரங்கோலி வரைந்திருந்தாள். கூடவே கோடிட்ட தாள்களில், ஒற்றையாய்த் தொங்கும் எழுத்துக்களாலான வார்த்தைகளும், கோணிக்கொண்டு செல்லும் வாக்கியங்களும் நிரம்பிய குறிப்புகள். இவளுக்கும் நாளை பரீட்சையோ?  தேர்வை வைத்துக்கொண்டா இன்று வேலைக்கு வந்திருக்கிறாள்? தைரியமான பெண்தான்! ஒருவேளை முந்தைய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்கி இருப்பாளோ? இல்லை, அந்த ஆந்த்ரபாலஜி பாடம் ரொம்ப சுலபமோ?

அவளுக்கு எப்படியோ? ஆனால், ஹரி இன்று வேலைக்குச் செல்லவில்லை. பல்கலைக்கழகத்தின் பர்சேசிங் பிரிவல் அவன் ஒரு டெலிவரி பாய். ஆர்டர் செய்யப்பட பொருட்கள் வந்தவுடன், அவற்றை உரிய நபர்களிடம் சேர்ப்பதே அவன் வேலை. கட்டிடத்துக்கு கட்டிடம் மாறி மாறி ஓட வேண்டிய அலைச்சலான வேலை. பிடிக்கவில்லைதான். ஆனால், ஒரு மணி நேரத்திற்கு ஏழரை டாலர்கள் கிடைக்கிறதே! வாரத்தில் இருபது மணி நேரம் இந்த வேலையிலே கழிவதால் தான் படிப்பில் சுணங்குகிறோமோ என்ற ஐயம் வேறு அவனுக்கு உண்டு. ஆகவே, நாளைய தேர்வுக்காக இன்றைய வேலை மட்டம்!

ஒரேயடியாக விட்டுவிடலாம் என்றாலும் முடியவில்லை. கைச்செலவுக்கு வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் பெற்றோரை கேட்பதாம்? வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவன் நோகாத நாளேயில்லை. தன் நான்காண்டு பி.ஈ. படிப்பால் ஒரு டெலிவரி பாய் வேலையைத் தான் ஈட்ட முடியுமா என்று வருந்தினான். மெல்ல, தன் நண்பர்கள் பலர் மேஜை துடைப்பதையும், தட்டு கழுவுவதையும், தரையை வாக்கியூம்  செய்வதையும் அறிந்து சமாதானம் அடைந்தான்.

புத்தகத்தில் கோலம் போட்ட பெண் திரும்பி வந்தாள். கூடவே இன்னொருத்தியும்.

“ஜெஸ்! ஹி இஸ் தி ஒன்” என்றாள்.

“ஓ… ஹனி! ஐயம் சாரி தட் யூ லாஸ்ட் யுவர் வாலட்!” என்று ஜெஸ் ரொம்பவும் அக்கறையுடன் விசாரிக்கத் தொடங்கினாள். அவள் குரலில் இருந்த கனிவும், குழைவும் ஹரியை உறுத்தியது. எங்கே, எப்படி போனது போன்ற சம்பிரதாயமான கேள்விகளில் கூட ஒரு கரிசனம் தொனித்தது. யார் இவள்? ஏன் இப்படி உணர்ச்சி பொங்க வருந்துகிறாள்? யாரோ ஒருத்தி தன் பர்ஸ் களவாடப் பட்டதற்காக இந்த அளவிற்கு வருந்துவது அதிகமாகத் தெரிகிறதே? ஜெஸ் மட்டுமல்ல. ஹரி சந்தித்தவரையில் அமெரிக்காவில் பலர் இப்படித்தான். அதீதமான உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். சிரிப்போ, பாராட்டோ, அனுதாபமோ, எதுவானாலும் இங்கே ஜாஸ்தியாகக் கிடைக்கிறது!

இந்த வாரத்தில் இதுவரை ஒரு பர்சும், ஒரு லேப்டாப்பும், இரண்டு ஐ-பாடுகளும் திருடு போய்விட்டதாகச் சொன்ன ஜெஸ், கிடைத்தால் சொல்கிறோம் என்றாள். கூடவே, அவனை பல்கலைக்கழக காவல் நிலையத்திற்குச் சென்று முறையிடும் படி அறிவுரைத்தாள்.

“காவல் நிலையம் எங்கே இருக்கிறது?”

முக்கால் மைல் தூரத்தில் இருந்தது காவல் நிலையம். ஹரிக்கு எதிர்பாராத அந்த மாலைப் பொழுதின் சம்பவங்கள் எல்லாம் அச்சத்தையும், சலிப்பையும் தந்தன. ஆம்பிளிபையரைப் பற்றி படிக்க வந்தவன், காவல் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதெல்லாம் ஒரு கனவாக இருக்கக் கூடாதா? தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து மீண்டும் கபாசிடரை டிசைன் செய்ய மாட்டோமா?

நிச்சயமற்ற தருணங்களால் நிரம்பிய இந்த வாழ்க்கையில் நம்மால் எவ்வளவு திட்டமிட முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. திட்டமிட்டா எல்லாமும் இங்கே நிகழ்கிறது? பொறியியல் சேர்ந்ததிலிருந்து, அமெரிக்கா வந்து, பர்ஸ் போனது வரை எதுவுமே அவன் திட்டமிடவில்லை. யாரோ பி.ஈ. படி என்றார்கள். ஈ.சி.ஈ.க்கு நல்ல மதிப்பு என்றார்கள். ஜி.ஆர்.ஈ. எழுது என்றார்கள். வி.எல்.எஸ்.ஐ.க்கு உடனே வேலை என்றார்கள். இவன் இங்கே இருக்கிறான்… ஆம்பிளிபியரோடும், டெலிவரி பொருட்களோடும், தொலைந்த பர்சோடும் போராடிக்கொண்டு!

“மச்சான்! உன் லைஃப் செட்டில்டு டா” என்று விசா கிடைத்த அன்று கொடுத்த ட்ரீட்டில் நண்பன் சுதாகர் சொன்னது நினைவுக்கு வந்தது. வாழ்க்கை எப்போது செட்டில் ஆகிறது? இதையெல்லாம் பார்த்த பின்னும் தான் சொன்னது சரி என்பானா சுதாகர்? மென்பொருள் எழுதி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கும் அவனிடம் செட்டில் ஆகிவிட்டாயா என்று கேட்டால் அவன் பதில் என்னவாக இருக்கும்? ஹரி தன்னுடைய தற்போதைய சிக்கலிலிருந்து விடுபடும் முயற்சியாய் என்னன்னவோ யோசித்தான். அதற்குள் கார்த்திக் கூப்பிட்டான்.

“மச்சான்! பர்ஸ் தொலைஞ்சு போச்சா?”

“ஆமாம். லைப்ரரில. எப்படி தெரியும்?”

“சுனில் மூலமா. ஃபேஸ்புக்ல போட்டுருந்தான். கம்ப்ளைன்ட் கொடுத்திட்டியா?”

“இன்னும் இல்லை. இப்போ போலீஸ் ஸ்டேஷன் தான் போறேன்.”

“ஓ! சரி…கவலை படாதே. கிடைச்சிடும். லைட் தீஸ்கோரா! லேட் ஆனா கூட பரவாயில்லை. நைட் குக்கிங் நாங்க யாராவது பண்ணிடறோம்.”

கார்த்திக்கு தாய்மொழி தெலுங்கு. அடிக்கடி பேச்சில் வந்து விழும். ஹரியுடன் வசிக்கும் மூவரில் ஒருவன். வாராந்திர சமையல் சுற்றை ஹரியின் கஷ்டத்துக்காக சுமக்கத் தயாராக இருக்கிறான். ஆனால் செய்தியை அறிந்து கொண்ட விதம்தான் சரியில்லை.

காவல் நிலையமும் பல்கலைக்கழகத்தின் இன்னபிற கட்டிடங்கள் போலவே காட்சி அளித்தது. இங்கேயும் முகப்பில் ஜெச்சைப் போல ஒருத்தி. அன்போடு விசாரித்து, அதிகாரி வரும் வரை உட்காரச் சொன்னாள். ஹரிக்கு மெல்ல பசிக்கத் தொடங்கியது. கால் மணிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழடி உயரத்துக்கு அதிகாரி வந்தார். தொப்பை இருந்தாலும், நல்ல கம்பீரமான தோற்றம். பெயர் ரிச்சர்ட்சன் என்றார். மீண்டும் அதே கேள்விகள். எங்கே? எப்போது? என்ன இருந்தது?… சலிக்காமல் பதில் சொன்னான். “இப்போதெல்லாம் நிறைய திருடுகிறார்கள். நீங்கள் தான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விசாரிக்கிறோம். எதாவது தகவல் வந்தால் தெரிவிக்கிறோம்” என்றார். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. வெறுமனே தலையை ஆட்டிவிட்டுப் புறப்பட்டான்.

பசி இப்போது நன்றாக வளர்ந்துவிட்டது. நூலகத்திற்கு வரும் முன் சாப்பிட்டது தான். ஏழு மணி நேரங்கள் ஆகி விட்டன. எதையாவது வாங்கி வாயில் போட்டுக் கொள்ளலாம் என்றால் பர்சை திருடிவிட்டார்கள். டெபிட், கிரெடிட் கார்டோடு, அதிலிருந்த முப்பது டாலரும் காலி. ஹும்… முப்பது டாலர்கள்! அவனுடைய நான்கு மணி நேர சம்பளம். அதை வைத்து ஒரு வாரத்திற்கு டாகோ பெல்லில் லஞ்சை முடித்திருக்கலாம்.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. பசியோடு பரீட்சையும் பயமூட்டியது. ஆம்பிளிபியர் சர்க்யூட் எல்லாம் விஸ்வரூபம் எடுத்து அவன் முன்னே ஆட ஆரம்பித்தன. வேகவேகமாக நூலகத்தை நோக்கி நடந்தான். அந்தக் குளிரிலும் வேர்த்தது. முகமெல்லாம் நீர்த்துளிகள். கண்களில் கூட. வீட்டிற்கு அழைத்து பேசலாமா என்று தோன்றியது. வேண்டாம்! விடியற்காலை அவர்கள் கேட்கும் முதல் செய்தி இதுவாக இருக்க வேண்டாம். அப்படியே சொன்னாலும் அவர்களால் தான் என்ன செய்துவிட முடியும்? “சதுரத் தேங்காய் உடைக்கிறேன்” என்பாள் அம்மா. “பணம் அனுப்பட்டுமா?” என்பார் அப்பா. வீண் தொந்தரவு தான் அவர்களுக்கு. தேவையில்லாத மன உளைச்சலைத் தர வேண்டாம்.  இரண்டு நாள் கழித்து பொறுமையாக சொல்லலாம் என்று முடிவு செய்தான்.

நூலகத்தில் இப்போது நிறைய பேர் இல்லை. கருப்பு மாணவர்களைக் காணவில்லை. சுனில் போய்விட்டான். ஜெஸ்சும், அந்த ஆந்தரபாலஜி பெண்ணும் கூட இல்லை. சீனர்கள் இன்னமும் இருந்தார்கள். மறுபடியும் புத்தகத்தை திறந்து கொண்டு அமர்ந்தான். பசியைப் பொறுத்துக் கொண்டு படிக்க வேண்டும். எப்படியும் நூலகம் மூடும் (இரவு ஒரு மணி) வரை இந்த இடத்தை விட்டு எழக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டான். இரண்டு மணி நேரங்களுக்குப் பின் முடியவில்லை. தலை வலித்தது. புத்தகத்திலிருந்து எழுத்துகள் ஒவ்வொன்றும் வெளியே வந்து உதைப்பதைப் போல இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். பத்து மணி. மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

இருட்டும், குளிரும், அமைதியும் அந்த இரவை அலங்கரித்திருந்தன. சீரான தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் விளக்குகளின் உபயத்தால் உருவான தன் நிழலின் துணையோடு ஹரி தன் வீட்டை நோக்கி நடந்தான்.