Up! – ஒரு படி மேலே!

up

இந்த முறை ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப்புப் பட்டியலைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் கிடைத்திருக்கும். ஒரு திரைப்படம் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படத்துக்காகப் பரிந்துரைப்புப் பட்டியலில் இருந்தது. அது பிக்ஸார் நிறுவனம் தயாரித்த ‘Up!’ என்ற அனிமேஷன் திரைப்படம். சிறந்த திரைப்படங்களுக்கான பொதுப்பட்டியல், சிறந்த அனிமேஷன் திரைப்படங்களுக்கான பட்டியல் என இரண்டிலும் இடம் பிடித்த Up! திரைப்படம், சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை வென்றது. அது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் இசையமைப்பு இந்த வருடத்தின் சிறந்த இசையமைப்பாகவும் விருதை வென்றுள்ளது. (இப்பிரிவில் அனிமேஷன், பொதுப்பிரிவு என்ற வேறுபாடுகள் இல்லை). அனிமேஷன் திரைப்படங்களுக்கு என்று தனியான விருது இருந்தாலும், அவதார், ஹர்ட் லாக்கர் போன்ற திரைப்படங்களோடு பொதுப்பிரிவிலும் இடம் பிடிக்க வேண்டுமென்றால் Up! எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக இருந்திருக்க வேண்டும்? வருங்காலத்தில் அனிமேஷன் திரைப்படங்கள் திரையுலகை ஆளப்போகின்றன என்று பல திரை வல்லுநர்களும் கருதுகிறார்கள். Weclome to the Animation Age!

பொதுவாக, அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான். அனிமேஷன் திரைப்படங்களில் வள, வள வென்று பேசி சிரிக்க வைக்க முடியாது. விஜயின் ஷூவை முன்னும் பின்னும் காட்டி ஜல்லியடிப்பது, விக்ரம் கண்களை க்ளோஸப்பில் காட்டி மிரட்டுவது அனிமேஷன் திரைப்படத்தில் செல்லாது. 2011-இல் முதல்வர் என ஓப்பனிங் சாங் வைக்க முடியாது. ஹீரோ இமேஜ் குழி தோண்டிப் புதைக்கப்படும். கணினியில் அசைவிக்கப்படும் உருவங்களோடு சுவாரசியமாகக் கதை சொல்வது மனித நடிகர்கள் நடிக்கும் படங்களை விடப் பல மடங்கு கடினமானது. காட்சிதான், இசைதான் எல்லாமே.

பொதுவாக அனிமேஷன் திரைப்படங்கள் குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. டாம் & ஜெர்ரி பார்க்காத நகரத்துக் குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். தாய்மார்கள் சோறூட்டுவதற்கு உபயோகிக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம் இந்த அனிமேஷன் காட்சிகள். டாம் ஜெர்ரியை துரத்தும் காட்சிகளுக்கான இசை குழந்தைகளுக்கு அத்துப்படி. ஸ்காட் ப்ராட்லியின் பின்னணி இசை பியானோ கற்றுக் கொள்பவர்கள் ஆரம்பத்தில் பயிலும் ஜாலி இசை!

2002 ஆண்டு முதல் அமெரிக்க அகாடமி அனிமேஷன் படங்களுக்கென்று தனியான ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ என்ற விருதுக்காக தேர்வு செய்யத் தொடங்கியது. ‘ஷ்ரெக்’ என்ற திரைப்படம் முதன் முதலில் இந்த விருதை வென்றது. இந்த வருடம் பரிசு வென்ற Up! திரைப்படம் பண்டிதர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படம் என் நினைக்க வேண்டாம். பிக்ஸார் (Pixar) நிறுவனத்தின் மிகப் பெரிய வசூல் படங்களில் இரண்டாம் இடத்தை பெற்றது. 723 மில்லியன் டாலர்கள் குவித்தது. ’Finding Nemo’ என்ற திரைப்படம் ஒன்றுதான் இதைவிட அதிகம் ஈட்டியது.

இந்த வருடத்துக்கான சிறந்த அனிமேஷன் திரைப்பட விருதை வென்ற Up! திரைப்படத்தைத் தயாரித்தது “பிக்ஸார்” என்ற மிகப் பெரிய அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். இன்று இந்நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பகுதி. இவர்களுடன் போட்டி போடுவது டிரீம்வர்க்ஸ் என்ற ஸ்பீல்பர்க் நிறுவனம். பிக்ஸாரின் முதல் அனிமேஷன் திரைப்படம் ‘டாய் ஸ்டோரி’ என்ற 1995 ஆம் ஆண்டு திரைப்படம். அனிமேஷன் திரைப்படத்துறையை மேம்படுத்துவதில் அதிசிரத்தை எடுத்துக்கொண்டது பிக்ஸார் நிறுவனம். பிக்ஸார் நிறுவனத்தின் தலைவரான ஜான் லாஸட்டருக்கு 1996 ஆம் ஆண்டின் விசேஷ சாதனைப் பரிசு வழங்கி கெளரவப்படுத்தியது ஆஸ்கர் அகாடமி. பிக்ஸார் நிறுவனத்தின் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு புதுமையை எதிர்பார்க்கலாம். வருடம் ஒன்று அல்லது இரண்டு திரைப்படம் வெளியிடுகிறார்கள். Up! ல் என்ன புதுமை? Up! பிக்ஸாரின் முதல் முப்பரிமாண அனிமேஷன் திரைப்படம்.

meganb0208இப்படத்தின் கதை சற்று நீளமானது மற்றும் சிக்கலானது. ஆனால் இயக்குனர் பீட்டர் டாக்டெர் சொன்ன விதம் எல்லோரையும் கட்டிப் போட்டுவிட்டது. படத்தின் கதாநாயகன் கார்ல். முண்ட்ஸ் என்ற ஆய்வாளர் மீது அவருக்கு பெரு மதிப்பு. முண்ட்ஸ் ஒரு அபூர்வப் பறவையின் பெரிய எலும்புக்கூடு ஒன்றை தென் அமெரிக்காவில் உள்ள பாரடைஸ் நீர்வீழ்ச்சி அருகே அமைத்ததாக குற்றம் சாட்டப்படுவதை கார்ல் அறிகிறார். இடையே எல்லி என்ற பென்ணை காதலித்து மணம் புரிகிறார். எல்லிக்குத் தன் வீட்டை பாரடைஸ் நீர்வீழ்ச்சி அருகே உள்ள மலையின் மேல் அமைப்பதாக வாழ்நாள் கனவு – அதை பலூன் விற்று பிழைக்கும் கார்லிடம் சொல்கிறாள். எல்லி வயதாகி கனவு நினைவாகாமலே இறந்து போகிறாள்.

இறந்த மனைவியின் கனவை நிறைவேற்ற தன் வீட்டையே பலூனில் கட்டிய ஒரு காற்றுக் கப்பலாக மாற்றுகிறார் கார்ல். பறக்கத் தொடங்கும் அந்த வீட்டில் ரஸ்ஸல் என்ற இளம் ஆய்வாளர் மாட்டிக் கொள்கிறார். பறக்கும் வீடு பாரடைஸ் நீர்வீழ்ச்சி அருகே இறங்குகிறது. அங்கு கார்லுக்கும் ரஸ்ஸலுக்கும் ஏற்படும் சுவாரசியமான அனுபவங்கள் படத்தின் பின் பகுதி. எப்படி பாரடைஸ் நீர்வீழ்ச்சியிலிருந்து மீண்டு ரஸ்ஸலின் தந்தை ஸ்தானத்திற்கு கார்ல் உயர்த்தப்படுகிறார் என்பது படத்தின் இறுதிப்பகுதி.

முப்பரிமாணத்தில் இப்படக் காட்சிகள் பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை. அழகான சின்ன வசனங்கள். சோகக் காட்சிகள், மற்றும் பக்கத்தில் முப்பரிமான முக அமைப்புகள்- கணினிக் காட்சிகள் என்ற உணர்வே இல்லாமல் செய்து விட்டார்கள்.

இப்படத்தின் பலூன் காட்சி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

Up இசையமைப்புப் பணியில் Michael Giacchino. பின்னணியில் இயக்குநர் பீட் டாக்டர்.
Up இசையமைப்புப் பணியில் Michael Giacchino. பின்னணியில் இயக்குநர் பீட் டாக்டர்.

இத்திரைப்படத்தின் இசையமைப்பு திரையிசை உச்சங்களில் ஒன்று. மைக்கேல் கியாசினோ (Michael Giacchino) Up! திரைப்படத்தின் இசையமைப்பாளர். 2010 ஆம் ஆண்டின் ரஹ்மான் இவர். Up! திரைப்படத்தின் இசையமைப்புக்காக சிறந்த இசையமைப்பாளர் ஆஸ்கார் விருதை வென்றவர். ‘சும்மா நேரத்தை வீணாக்காதே!’ – அடிக்கடி பெற்றோர் தன் குழந்தைகளிடம் சொல்லும் வார்த்தைகள்தான். ஆனால் மைக்கேலைப் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் அப்படிக் கட்டுப்படுத்தவே இல்லை. இத்தனைக்கும் சிறுவன் மைக்கேல் 8 மிமி காமெராவுடன் கண்டதை எல்லாம் படம் பிடித்தபடி இருந்திருக்கிறான். பிறகு இசை மேல் ஆர்வம் ஏற்பட்டுப் பல இசை வகைகளைப் பயில ஆரம்பித்த போதும் யாரும், ‘சும்மா நேரத்தை வீணாக்காதே!’ என்று கட்டுப்படுத்தவில்லை.

இன்று மைக்கேலுக்குக் கை வலிக்கும் அளவுக்கு விருதுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாஃப்டா விருது முதலில் இங்கிலாந்தில் கொடுத்தார்கள். ஆஸ்கரைப் போலவே சிறந்த படமாகவும் பாஃப்டா Up! ஐ தேர்ந்தெடுத்தது. கோல்டன் குளோப் மைக்கேலுக்கு இன்னொரு விருது கொடுத்தார்கள். சிறந்த படமாக பீட்டர் டாக்டெர்க்கு (இயக்குனர்) அவர்களும் கொடுத்து மகிழ்ந்தார்கள். 2009 க்ரிடிக்ஸ் சாய்ஸ் விருதும் அப்படியே (எனக்கும்தான் எழுதி கை வலிக்கிறது!). இதற்கு மேலாக 2010 கிராமி விருதுகளில் இரண்டு மைக்கேலுக்கு கொடுத்தது இன்னும் சிறப்பானது. இந்த படத்தின் இசைக்கும், ’Married Life’
என்ற இசைக்கருவி இசைக்கும் விருது.

புதிதாகத் தோன்றிய திடீர் இசையமைப்பாளர் அல்ல மைக்கேல். இவர் பிக்ஸாருடன் ஏற்கனவே சில படங்களில் கலக்கியுள்ளார். பிக்ஸாருடன் இவரது உறவு மிகவும் நீண்ட ஒன்று. இவர் இசையமைத்த, பிக்ஸாரின் ‘ராட்டாடூலே’ என்ற 2008 அனிமேஷன் திரைப்படம் ஆஸ்கர் இசை பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இவர் இசையமைத்த இன்னொரு அருமையான பிக்ஸார் அனிமேஷன் திரைப்படம் ‘இன்கிரெடிபிள்ஸ்’ (2004). இப்பொழுது வேலை செய்து கொண்டிருப்பது இன்னொரு பிக்ஸார் வருங்கால (2012) அனிமேஷன் திரைப்படம் – ’நியூட்’.

இதை தவிர, இவர் மனிதர்கள் நடித்த வழக்கமான திரைப்படங்களிலும் கலக்கியுள்ளார். 2009 ல் வெளிவந்த ’ஸ்டார் டிரெக்’ இவர் இசையில் உருவானது. 2006 ஆம் ஆண்டு வந்த டாம் க்ரூஸ் நடித்த ‘மிஷன் இம்பாசிபிள் 3’ இவர் இசையமைத்தது. பல்வேறு விடியோ விளையாட்டுக்களுக்கு இசையமைத்துள்ளார். அனிமேஷன் துறையில் விடியோ விளையாட்டுக்களுக்கும் இதைப் போன்ற திரைப்படங்களுக்கும் நிறைய சம்மந்தம் உள்ளது. ‘சொல்வனத்தில்’ இதைப்பற்றியும் இத்தொழில்நுட்பம் பற்றியும் எதிர்காலத்தில் கட்டுரைகள் எதிர்பார்க்கலாம்.

மைக்கேலைத் தவிர இத்துரையில் இன்னும் சில சிறந்த இசையமைப்பாளர்கள் உள்ளனர். ராண்டி நியூமேன் என்பவர் பிக்ஸாரின் பல படங்களில் அருமையாக இசையமைத்தவர். ‘கார்ஸ்’, ‘டாய் ஸ்டோரி’, ’பக்ஸ் லைஃப்’ போன்ற படங்களின் வெற்றிக்கு பின்னால் இசைத்தவர்.

பொதுவாக அனிமேஷன் திரைப்படத்தின் வேகத்தை நிர்ணயிக்கும் விஷயங்கள் இரண்டு – இசை மற்றும் நறுக்கென்ற காட்சியமைப்பு. என் பார்வையில் மைக்கேலின் மிகப் பெரிய சாதனை திரைப்படத்தின் முதல் 30 நிமிடங்கள். முன்னரே சொன்னது போல அனிமேஷன் திரைப்படங்களைக் குழந்தைகள் அதிகம் பார்க்கிறார்கள். காதல், சோகம், இறப்பு இவை குழந்தைகள் சமாச்சாரம் இல்லை. எப்படிக் குழந்தைகளுக்கு சுவாரசியமாக கதை சொல்வது? எல்லாம் மைக்கேல் சாகசம். பிண்ணிவிட்டார். இவர் இல்லையேல், இப்படிப்பட்ட கதையை ஆனிமேஷனில் சொல்வதற்குள் குழந்தைகள் தூங்கி விடுவார்கள்.

கிராமி விருது பெற்ற ’Married Life’ இங்கே..

கார்ல் எல்லியின் பழைய படங்களை பார்த்து நினைவுகூரும் சோகக் காட்சி
இங்கே..

இப்படத்தின் ஓ எஸ் டி என்று அழைக்கப்படும் திரையிசை இங்கே..

இந்தியாவிலும் அனிமேஷன் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டாலும் இன்னும் அமெரிக்கத்தரம் இல்லைதான். அத்துடன் இவை டிவிடிக்களோடு சரி. தியேட்டருக்குச் சென்று ‘சிவாஜி’ யோடு போட்டி போட பல வருடங்கள் ஆகும். நம்மிடம் உள்ள புராணக் கதைகள் அனிமேஷன் திரைப்படங்களாக மிகவும் உகந்தவை. மகாபாரதக்கதையை அடிப்படையாகக் கொண்டு, சென்னை பெண்டாமீடியாவில் தயாரான ‘பாண்டவாஸ்’ திரைப்படம் இந்தியாவில் உருவான குறிப்பிடத்தக்க முழுநீள அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று. சர்வதேச அனிமேஷன் திரைப்படங்களைப் போலவே ‘பாண்டவாஸ்’ திரைப்படத்துக்கு இளையராஜா செய்திருந்த இசையமைப்பும் மிக நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. அத்திரைப்படத்திலிருந்து ஒரு இசைக்கோர்வையை இங்கே கேட்கலாம்:

இந்திய அனிமேஷன் திரைப்படத்துறை மேலெழுந்து தரமான அனிமேஷன் திரைப்படங்கள் உருவானால், பஞ்ச் டயலாக் பேசி அலட்டல் செய்யும் ஹீரோக்களிடமிருந்து நமக்கெல்லாம் விடுதலை கிடைப்பது உறுதி.