நான்கு கவிதைகள்

ஞா.தியாகராஜன் கவிதைகள்

பெரிய பொறாமைக்காரன் நான்
எந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக
அத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு
இதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை
“நீயெப்போதும் எனக்கு கீழாக இருக்க வேண்டும்” என்ற நிர்தாட்சண்யத்தை
இதற்குள்ளிருந்து அப்பட்டமாக உடைத்தால்
பெரிய நாடகமாடுவேன் மறுத்து
உறவுகளை இதற்காக துறப்பதெனினும் ஒரு பாடலை அதற்கு பதிலியாக கொள்வேன்
யார் சொல்லியும் பிடிவாதம் கலையாத மனதை ரணப்படுத்தி கொள்வதிலும்
உங்களுக்கு வேண்டாத சத்ருவானேன்
பொறாமையின் தொடக்க கண்ணி இயலாமை என்பதாயினும்
உண்மைகளை கடைபிடிப்பத்தில் இருக்கும் ஐயங்கள் தெளிந்த பின்
விரிவாக இது குறித்து பேசுவோம்.

2.இரண்டு பெக் அடித்தேன்
உங்களை கொல்ல இரவல் கத்தியை
உங்களிடமே கேட்டேன்
ஒரு பிணத்திடம் சுற்றி சுற்றி என்ன தேடினாலும்
ஒன்றும் கிடைக்காதென நினைக்கிறேன்
சிறு பிரியங்களையும் தட்டிவிட துணிபிருந்தால்
உங்களை வெறுப்படையச்செய்யும் கதாபாத்திரமாக இருக்கமாட்டேன்
வெறுமைக்கு திரும்பும் பாதைகளை இன்றிரவோடு மூடி விட நினைத்தேன்
பிறகெனக்கு பகல்கள் கிடையாதென அசரீரிகள் சொல்கின்றன
பின்னிரவு மழை பயணமாக நாட்கள் எப்போதும்
நடுக்கம் மிகுந்ததாய் இருப்பதாக சொன்னதற்கு
தூக்கமாத்திரைகள் எழுதி தரப்பட்டன
பசித்த இரவு நிலவை விழுங்குகிறது
நிலவை தொலைத்த இருட்டு வெறுக்கும் என் பிரபஞ்சத்தின் சாயலில் இருக்கும்.

ஞா.தியாகராஜன்

~oOo~

இரு கிளைகளில் இரு பறவைகள்

இருளென்று வெருளாதே.
மாயையென்று மருளாதே.
மேற்கிளையில் அமர்ந்து என்ன கோட்டை கட்டுகிறாய்?
நிலவு
நட்சத்திரங்களை மாயை என்று சந்தேகிக்கிறாயா?
அல்லது
ககன வெளிக் கற்பனையில் கோடி கோடிக் கோள்களும் நீ என்று கற்பிக்கிறாயா?
கீழ்க் கிளைக்கு வா.
கீழின்றி
மேலில்லை.
மேலின்றிக்
கீழில்லை.
கீழ்
காய் கனிகளுண்டு.
புசி.
இனிக்கிறதா?
புளிக்கிறதா?
சுகமும் துக்கமும் என்று முகம் சுளிக்காதே.
சுகம் துக்கம் எல்லாமே
சுழல் தான்.
உயர நீ சிந்தித்த கோள்களும்
சுழலில் தான்.
தினம் தினம் வைகறையில் உதிக்கும் சூரியனைப் பார்த்து இரசித்தாயா?
ஏன் தயக்கம் ?
தினம் தினம் மாலையில் சூரியன் மறையுங்கால் சோகம் கொண்டாயா?
ஏன் மயக்கம்?
ஒளி போய்
இருள்.
இருள்
போய்
ஒளி.
எது
எதிரெதிர்?
எல்லாம்
சுழல்.
காட்சி உலகில் மீட்சி இல்லையென்று எண்ணுகிறாயா?
அநேகமல்ல
ஏகம்
உண்மை என்கிறாயா?
ஒன்று
உண்மையென்றால்
ஒன்று பலவாக பல உண்மையில்லையா?
ஏன்
மோதிக் கொள்ள வேண்டும் நாம்?
நிலவும்
சூரியனும் மோதிக் கொள்வதில்லை.
அங்கு பார்!.
ஒரு வேடன் வருகிறான்.
குறிவைத்து கணை தொடுக்கப் போகிறான்.
உன்னையா?
என்னையா?
அல்லது
ஏகமாய் உன்னையும் என்னையுமா?
‘ஏகம் நீ’ என்று அறிந்த உன்னை ’அவன் நீ’ என்று அவன் அறியானா?
மேற் கிளையில்
தவம் செய்தது போதும்
தப்பி விடுவோம்.
மேற்கிளை கீழ்க்கிளையா இங்கு விவகாரம்?
மரணம்
தீர்த்து வைக்கும்
உனக்கு உன் பிரம்மத்தையும்
எனக்கு என் இகலோகத்தையும்.
வா
இங்கிருந்து
பறந்து விடுவோம்.
உயிர் வாழ்தல் மோட்சத்தை விட
இனிது.

மழைத் துளிக் குறிப்புகள்

(1)
தீரும்
மழைத் துளிகளில்
சேரும்
மழை.

(2)
ஒரு
மழைத்
துளியென்றாலும்
ஒரு துளி
மழை
தான்.

(3)
ஒரு
மழைத் துளி
தான்.

புல்
மேல்
ஒரு
சமுத்திரம்.

(4)
சில
மழைத் துளிகளே
விழும்.

மண்ணுக்குள் உறங்கும் ஒரு சிறு விதையின் மா மரமாகும் கனவுகள்
சிலிர்க்கும்.

(5)
விழும்
ஒரு
மழைத் துளி குடித்து
தாகம்
தீரும்
பொங்கு நீர்க்கடல்.

(6)
முதல் மழைத் துளிக்கும் கடைசி மழைத் துளிக்கும் இடையில்
கொட்டித் தீர்க்கும்
மழைத் துளிகளின்றி அமையாத மழை.

கு.அழகர்சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.