நான்கு கவிதைகள்

ஓட்டம்

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
சூரியனை நோக்கி கிழக்கு திசையில் நகரத்தைவிட்டு நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
பனி படர்ந்த புற்கள் மீது
உருளைச் செடியின் அகன்ற இலைகள் மீது வந்து விழும் ஒளி அவைகளுக்குத் தரும் உற்சாகத்தைக் கொஞ்சம் உள்வாங்கிக்கொண்டு
ஒரு கிராமத்தைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்
சாலையோரத்தில்
புதிதாக உழுத நிலத்தின் வாசனையை நுகர்ந்தபடி
தொலை மேட்டில் என் வேகத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் அந்த ராட்சத ட்ராக்டரோட்டிக்கு நன்றி சொல்லி
ஒரு கிராமத்தைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்
சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த
ஒரு தொட்டிச்செடியின்
மஞ்சளும் சிவப்புமான மலர்களிடையே
‘லூகாஸ்-2004’ என பொறிக்கப்பட்ட சிலுவையைக் கடந்து
யூகமும் பதட்டமுமாய் எதிர்ப்படும் கார்களைக் கடந்து ஒரு கிராமத்தில் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
இலையுதிர் காலத்துப் பழுத்த ஈர இலைகளில் ஷூ உராயும் ஒலிக்கு
லாயத்திலிருந்து எட்டிப்பார்க்கும் அந்தக் குதிரைகளின் திறனைக் கொஞ்சம் மனதிலேற்றி
இன்னுமொரு கிராமத்தைக் கடந்து நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
அந்நிய முகத்தைப் பார்த்துச் சற்று மறுதளித்து விலகும் அந்தக் கிராமவாசி மூதாட்டிக்கு ஒரு ஸ்னேகப் புன்னகையை நழுவவிட்டு ஒரு கிராமத்தைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்
கண்களில் இறங்கும் வியர்வையின் எரிச்சலும்
வெய்யில் வாட்டிய வறண்ட முகத்தின் பிசுபிசுப்புமாய் மாறிமாறிப் பல கிராமங்களைக் கடந்து நான்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
மெழுகைக்கொண்டு இறகைக்கொண்டு சூரியனை நோக்கிப் பறந்த அந்த இகாரசைப் போல பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள என் கிராமத்தை நோக்கி பல கிராமங்களைக் கடந்து
நான் அந்நிய நிலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறேன்..

அருண் காந்தி

~oOo~

வட்டங்கள்

உங்களுக்கான
வட்டத்தை
நீங்கள் வரைந்து கொண்டீர்கள்
வட்டத்தில் வசித்துப்பின்
அவையே உங்கள்
அடையாளமென
அறிவித்தீர்கள்

பிறிதோர் வட்டத்தை
பிறிதொருவர் வரைய
பிறந்தன பல வட்டங்கள்

பின்
வட்டத்தின்
எல்லைகளை விரிவாக்க
எத்தனிக்கிறீர்கள்
அவரவர் வட்டத்தை
வலைகளாக்கி
கடல் முழுதையும்
கைது செய்ய
கனவு காண்கிறீர்கள்

வட்டங்கள் பொய்யென்று
விலகிச் சென்றவர்கள்
விடுதலை பெற்றதாய் அறிவித்தனர்
விலகியும் கடந்தும்
செல்வதாய் நினைத்து
வேறு ஒரு வட்டத்தை வரைகிறார்கள் அவர்கள்
பின் அவர்களுக்கான
மதில்களால்
சூழப்படுகிறார்கள்

நீள் வட்டமாய்
குறுவட்டமாய்
விதவிதமாய்
விரிந்து விரிந்து
தொடரும் வட்டங்கள் தமக்குள்
ஒன்றை ஒன்று விழுங்கமுயல்கின்றன
விழுங்கியிருக்கும்
பெரு வட்டமொன்றில்
வயிற்றுக்குள்
அடங்கிவிடும்
அனைத்து வட்டங்களும்.

நிலாரவி

~oOo~

வீங்கிய கை

விபத்தில் வீங்கிய கை
அடிபட்ட நாயைப்போல
எப்போதும் அழுகிறது
“டேய், சும்மா இரு” என்று
செல்லமாக அதட்டினாலும்
உடம்பைக் குறுக்கி
பிருட்டத்துக்கு அடியில்
வாலை இழுத்துக் கொண்டு நடுங்கி ஓடுகிறது
இந்த வாய்ப்பில்
பெரும் இலைகளை வளைத்து
நார்களால் தைத்து
கூடு கட்டும் தையல்சிட்டுப்போல
அடிபடாத கை
அதன் வேலைகளோடு
முடிந்த அளவு எக்கி எக்கி
மறுகையின் வேலைகளையும்
புலம்பாமல் செய்கிறது
அப்போதும்
வீங்கிய கை சும்மா இல்லை
“என் அன்புக் கையே,
உன்னைத் துண்டித்து
எறிந்துவிடுவேன் என்றா-
உன்னைப் பயன்படுத்தாமல்
காய்ந்த புடலங்காயாய்
தொங்கவிடுவேன் என்றா-
பயப்படுகிறாய்
என் செல்லக் கையே,
நீ இல்லாமல் எனக்கு வாழ்வு ஏது” என்றும்
சொல்லிப் பார்க்கிறேன்
அது கேட்பதாய் இல்லை
வீங்காத கை
முகத்துக்குச் சோப்பு போடும்போது
அதுவும் மேலே உயர்ந்து வந்து
முடியாமல்
“அய்யோ, அம்மா
வலிக்குது, வலிக்குது” என அழுகிறது.

த.அரவிந்தன்

~oOo~

டாலியின் ரோஜாவும் நியூட்டனின் விதியும்

பந்தை
உயர
உயர
எறிந்து
பிடிக்கும்
விளையாட்டை
பொழுது
சாய
அவர்கள்
விளையாடினார்கள்

மேலே
போய்
போய்
வந்த
பந்து
திடுமென
டாலியின்
தியான ரோஜாவாக
அந்தரத்திலேயே
நின்றுவிட்டது

பிடிப்பதற்காக
கைகளைப்
பந்துபோல விரித்து
காத்திருந்தவன்
அது
மேலேயே நின்றுவிட்டது என்றான்

நியூட்டனின்
ஈர்ப்பு விதி அறியாதவனே
பந்து
கீழேதான் கிடக்கும்
நன்றாகப் பார்
என்றான் குனிந்திருந்தவன்

புதர் புதராகத்
தழைகளை விலக்கி
மற்றவர்கள் தேடினார்கள்.

த.அரவிந்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.