தொல்வெளியிலிருந்து தொடரும் இசை

1

இதை உலகம் நம்பப் போகிறதா என்கிற நெட்டுயிர்ப்பு எழுந்து கொண்டேயிருந்ததால் இந்தக் கதையை நான் இத்தனை நாளும் எழுதப் புகவில்லை. அந்த நெட்டுயிர்ப்பையும் மீறி நான் இப்போது எழுத முனையக் காரணம் இந்தக் கதையையும் இதன் காரண கர்த்தனாகிய என் மகனையும் உலகம் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடப் போகிறதே என்கிற ஆதங்கம்தான்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு அம்மையார் வாசிக்கின்ற வீணையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கல்யாணியில் ‘நிதி சால சுகமா’ வாசித்துவிட்டு மத்யமாவதியில்  “கற்பகமே” வாசித்துக் கொண்டிருக்கிறார் – என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.

இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும். அதற்கு என் மனைவியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவளுடைய பெற்றோர் பற்றியும் சொல்ல வேண்டும். அதனூடே என்னைப் பற்றிச் சொல்ல வேண்டும். என்னைப் பற்றிச் சொல்வதென்றால் என் தாய் தந்தையரைப் பற்றியும் என் சகோதர சகோதரிகளைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும்.

இதை இப்படிப் பார்க்கும்போது நான் யார் என்கிற கேள்வி எழுகிறது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே எழுப்பிக் கொண்டிருக்கிற கேள்வி போன்றதல்ல இது. நான் என்றால் ஒரு நபரையும் தாண்டி ஒரு மகன் – ஒரு சகோதரன் – ஒரு கணவன் – ஒரு தகப்பன் – ஒரு உத்யோகஸ்தன் – ஒரு நண்பன் – ஒரு பகைவன் – ஒரு பொது ஜனம் – சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு மனிதன் என்கிற எல்லாமும் கலந்ததுதான் நான். இதில் காமம், ஆசை, நட்பு, பெருந்தன்மை, பொறாமை, கோபம், ஆற்றாமை, இயலாமை, பகை, துரோகம், அன்பு, ஆளுமை, கல்வி, ஒழுக்கம், ஒழுக்கமீறல், பழியுணர்ச்சி, வஞ்சகம் எல்லாமும் கலந்திருக்கின்றன. எல்லாவற்றிலும் கலந்து கொண்டு அதே சமயத்தில் ஒரு பார்வையாளனாகவும் நாமெல்லோரும் வாழ்க்கையை அவதானிக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.

இப்படிப் பார்க்கும் போது ஒரு மனிதனைக் கட்டமைக்கின்ற கூறுகள் அவனிடம் மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள உறவு முறையும் குடும்பமும் சமூகம் சார்ந்த உலகமுமாகத்தான் இருக்கின்றன. ஜெயகாந்தன் பாணியில் இதைச் சொல்வதென்றால் ஒரு மனிதன் – வீடு – உலகம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

2

“டாக்டர்! இந்தப் பிள்ளை பேசவே மாட்டேங்கறது டாக்டர்!” தன்னைப் பரிசோதிக்க வந்தருந்த டாக்டரிடம் என் தாயார் பிரலாபித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது ஆதித்யாவுக்கு வயது மூன்று முடிந்து நான்கு நடந்து கொண்டிருந்தது. மூன்று வயது முடிந்திருந்தாலும் இது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரிய விஷயமாகப் படவே இல்லை. நான் அப்போதெல்லாம் பாடிக் கொண்டேயிருப்பேன். பாடிய வாய் மூடாது. நான் ஐந்து வருடங்கள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்ததால் சுமார் நூறு கீர்த்தனைகள் போலப் பாடம் எனக்கு. என் மனைவி மும்பையைச் சேர்ந்தவள் – சில தலைமுறைக்கு முன் மும்பையில் குடியேறிய தமிழ்க் குடும்பம் – தெய்வ சங்கல்பத்தாலா – விதி வசத்தாலா – எங்கள் திருமணம் நிகழ்ந்தது.

ஆதித்யா பிறந்தது 1992ல். என் மனைவி பிரசவத்திற்காக மும்பை சென்று குழந்தை பிறந்து ஒரு எட்டு ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் என் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தாள். அவள் வந்தபோது ஆதித்யா நல்ல அழகான குழந்தை. எல்லாவற்றையும் நிதானமாய் கவனித்துக் கொண்டிருப்பான் – வழக்கமாய் அந்த வயதுக் குழந்தைகளுக்கு இருக்கும் துள்ளலோ பெரிய விளையாட்டுத் தனங்களோ அவனிடம் இல்லை. “உன் பிள்ளை நிதானமாக இருப்பாண்டா!” என்பார் என் தந்தை.

குழந்தையை என் அன்னை முன் பாயில் கிடத்தியிருப்பாள் என் மனைவி. குழந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார் என் அன்னை. ஏழு குழந்தைகள் பெற்றவர். அதில் நிறைய பறி கொடுத்தவர் – வாழ்க்கையில் கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு நிறைய துன்பப்பட்டவர் – அனுபவப்பட்டவர். “உன் பிள்ளை பாயில் இருக்கிற வர்ணத்தையெல்லாம் கவனிக்கறதுடா” என்பார். வித்யாசமான குழந்தையாக இருக்கிறது என்பதை என் பெற்றோர் உணர்ந்தார்களே தவிர எந்த மாதிரிக் குழந்தை என்று புரிந்து கொள்ளத் தடுமாறினார்கள் என்றுதான் கூறவேண்டும்.

என் மனைவி ஆதித்யாவுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டால் போதும். அமைதியாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டு பாலைக் குடிப்பான். என் மனைவி அந்தப் பாலில் ஏலக்காயைப் பொடி செய்து கலப்பது வழக்கம். ஆதித்யா பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போது வாயில் ஏலக்காய்த் தோல் தட்டுப்பட்டால் நிதானமாக பாட்டிலில் இருந்து உறிஞ்சுவதை நிறுத்தி வாயில் சிக்கியிருக்கும் தோலைக் கையால் எடுத்துத் தூக்கியெறிந்துவிட்டுப் பின்னர் பால் குடிப்பதைத் தொடருவான். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் எங்களுக்கு. ஒரு வயது நிரம்பாத குழந்தைக்கு இவ்வளவு விபரம் தெரிகிறதே என்று வியப்பாக இருக்கும்.

இதுபோல் வளர்ந்த குழந்தை சாதாரணமாய் குழந்கைள் செய்வது போன்ற குப்புறுத்திக் கொள்வது தவழ்வது போன்றவற்றைச் செய்யவில்லை. அதது காலாகாலத்தில் நடக்க வேண்டுமென்பார்களே அது நடக்கவில்லை. இந்த சமயத்தில் என் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கும் குணம். ஒரு நிமிடம் கூடச் சும்மா இருக்க முடியாது அவளால். எப்போதும் மனக்குறைகள் – மனத் தாங்கல்கள் – தேவையில்லாத மனக்கிலேசங்கள். நடக்க ஆரம்பிக்கிற வயதில் குழந்தை படுத்துக் கொண்டிருக்கிறது – தவழக்கூட ஆரம்பிக்கவில்லை. சும்மா இருக்க முடியுமா அவளால்? பிரலாபித்துத் தள்ளி விட்டாள்.

எனக்கு இந்த சமயத்தில் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அப்போதெல்லாம் பாட்டு பாட்டு பாட்டுத்தான். ஆதித்யாவிடம் எப்போதும் பாடிக் கொண்டிருப்பேன். ஆதித்யா தூங்குவது எப்போதும் என் பாட்டைக் கேட்டு விட்டுதான். ஒரு பாட்டு முடிந்தவுடன் அவன் வாயிலிருந்து “ம்…ம்…” என்று ஒரு சத்தம் கிளம்பும். அதன் பொருள் அடுத்த பாட்டைப் பாடு என்பதுதான். சில ராகங்களைப் பாடும்போது அவன் விக்கி விக்கி அழுவதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு பயமாய் இருக்கும். பாட்டை நிறுத்திவிடுவேன். அவனும் அழுகையை நிறுத்துவான்.

அவன் இப்படியாக வளர்ந்து வந்து முதல் வருடப் பூர்த்தியில் அவனுக்குக் காது குத்த முடிவு செய்தேன். காது குத்து வைபவத்தில் பிரமாதமாக ஒன்றும் நிகழவில்லை. என் மூத்த சகோதரன் காது குத்தும்போது ஆதித்யாவைத் தன் மடியில் இருத்திக் கொண்டார். காது குத்து எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்கும்? வைபவம் முடிந்த பின்னும் ஆதித்யா என் அண்ணன் மடியில் இருந்ததை மறக்கவேயில்லை. அவர்தான் அதற்குக் காரணம் என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது. அவர் முகத்தை அதன் பின் அவன் பார்க்கவேயில்லை. “என் மேல விரோதம் வந்துடுத்துடா உன் பிள்ளைக்கு” என்றார் என் அண்ணன் சிறு புன்னகையுடன்.

3

குழந்தை தவழவில்லை எழுந்து நிற்கவில்லை என்கிற விஷயம் பூதாகாரமாக எழுந்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு ‘டென்ஷன்’ தாங்க முடியவில்லை. எனக்கா பிடுங்கல் தாங்க முடியவில்லை. அங்கே கேட்டு இங்கே கேட்டுக் கடைசியில் சைக்கிள் கடையில் போய் ‘வாக்கர்’ ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அந்த வாக்கரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் குழந்தை. ஒருநாள் நடந்து கொண்டிருந்தவன் அப்படியே போய்ப் படியில் விழுந்துவிட்டான். வாயில் ரத்தம். நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை.

அதிலிருந்து அவன் நடை பழகுவதைக் கண்காணிக்க வேண்டியிருந்தது. கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறானோ என்று தோன்றியது. அவன் தன் போக்கில் இருந்து கொண்டு தனியுலகில் சஞ்சரிப்பதாய்த் தோன்றியது. அப்போதெல்லாம் அவனை ஓரளவு கட்டுக்குள் கொண்ட வந்தது இசையும் ஸ்லோகங்களும் மட்டுமே. இசை கேட்டால் மகுடி முன் நாகம் போல மயங்கி விடுவான். அவனுக்கு இசையிலும் ஸ்லோகங்களிலும் ஈர்ப்பு பிறந்த பின்தான் ஆரம்பித்தது என்று சொல்ல முடியாது என்றுதான் இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றுகிறது.

இதை விளக்குவதற்கு அவன் பிறந்த சூழ்நிலைகளையும் என் குடும்ப நிலவரங்களையும் ஓரளவு கூறுவது உதவும் என்று நினைக்கிறேன். எனக்குத் திருமணம் என் மனைவியுடன் நடந்ததே தற்செயலாகத்தான் – அது தற்செயலா தெய்வாதீனமா கூற முடியாது. என் மனைவி குடும்பத்தினர் மும்பையிலிருந்து க்ஷேத்ராடனம் சென்றுவிட்டுத் திருச்சியில் என் மனைவியின் அத்தை வீட்டில் தங்கியிருந்தனர். அவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருந்தவர் என் அண்ணனின் நண்பர் – அவர் அவர்களிடம் போய் என்னைப் பற்றிப் பிரஸ்தாபிக்க அவர்களும் வந்த இடத்தில் பையனைப் பார்த்து விட்டுப் போய்விடலாம் என்று தீர்மானமாகி பெண் பார்க்கும் படலம் ஏற்பாடாகியது. அப்போது என் தந்தைக்கும் தாய்க்கும் முதிர்ந்த வயது. சகலத்தையும் பார்த்து சுக துக்கங்களை அனுபவித்த அவர்கள் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

இதை எழுதும்போது “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை” என்கிற நீலமணியில் அமைந்த பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மதுரை சோமு இப்பாடலை மனமுருகப் பாடுவார். என் பெற்றோர் பாடுவதற்கு மிகவும் பொருத்தமான பாடல். உலகில் சாதாரண மனிதர்கள் பட்ட கஷ்டங்கைள விட அதிகக் கஷ்டங்கள் அனுவித்தவர்கள் அவர்கள். ஒரே பெண்ணை சாகக் கொடுத்துவிட்டு மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட என் சகோதரனுடன் வேதனையை அனுபவித்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் அந்த நிலையிலும் வயதிலும் என் திருமணம் முக்கியத்துவம் பெறாது இருந்தததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் அவர்கள் குடும்பமும் இருந்தது. மூத்த பெண் திருமணமாகி இரண்டாவது பெண் (என் மனைவி) திருமணத்துக்கு இருந்த நிலையில் என் மாமனார் ஓய்வு பெற்றிருந்த வேளை. பிள்ளை படித்துக் கொண்டிருந்தான். வேலைக்குப் போகவில்லை. என் மாமனாரும் தனியார் துறையில் பணியாற்றி வந்தவர் – ஓய்வூதியம் கிடையாது. இந்த சமயத்தில் இரண்டாவது பெண் திருமணச் சுமை அவரை அழுத்திக் கொண்டிருந்தது. எங்கள் திருமணம் நடந்தது. ஏதோ தானோவென்றுதான் நடந்தது. இது நடந்தபோது நடந்த ஒரு சோககரமான நிகழ்வைப் பின்னர் கூறலாம் என்று நினைக்கிறேன்.

வயதான பெற்றோருடன் கூட்டுக் குடும்பம். புதிதாக மணமாகிவரும் எந்தப் பெண்ணுக்கும் இது சவாலாகத்தான் அமையும். இது போதாதென்று மும்பை போன்ற பெரிய நகரத்திலிருந்து வந்து சிறிய ஊரில் வாழ்க்கைப் பட்டவள் என் மனைவி. காலை எழுந்திருந்ததிலிருந்து மாலை வரை ஓய்வில்லாத வேலை. என் அன்னை அச்சமயம் காலை உடைத்துக் கொண்டு விட்டார். படுத்த படுக்கையாகிவிட்டார். இது போன்ற சமயங்களில் பெண்களின் ஆகாத்தியத்திற்கு பலியாகிறவர்கள் அவர் தம் கணவர் தாமே! இது எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

இந்த சமயத்தில் இருக்கின்ற பிரச்னைகள் போதாதென்று என் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. அதுவரை என் குடும்பத்தையும் என் வீட்டுச் சூழ்நிலையையும் சகிக்கப்பழகி வந்த அவள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோதனையான காலம். என்ன செய்வதென்று புரியாத நிலையில் திருப்பதி சென்று வரலாம் என்று கிளம்பினோம். திருப்பதி சென்று ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி காஞ்சிபுரம் சென்றோம். காமாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சங்கரமடம் சென்று பரமாச்சாரியாரைத் தரிசனம் செய்தோம்.

4

பரமாச்சாரியார் என்று அழைக்கப்பட்ட பெரிய சங்கராச்சாரியாரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே அவரைப் பற்றி எப்படி எழுதப் போகிறேன் என்கிற மலைப்பும் ஆயாசமும் ஏற்படுகின்றன. என் தாய் மிகவும் பக்தியும் ஆன்மீகப் பற்றுதலும் உள்ளவர். ஆசார அநுஷ்டானங்களில் மிகவும் நம்பிக்கை உள்ளவர். என் தந்தைக்கு எதுவும் பொருட்டு கிடையாது. நம்பிக்கை கிடையாது என்று அர்த்தமில்லை. மரியாதை உண்டு. ஆனால் கட்டிக் கொண்டு அழுகிற வழக்கம் கிடையாது. ஆனால் மிகவும் ஒழுக்க சீலர். நேரான பேச்சும் சீரான அணுகுமுறையும் கொண்டவர்.

அதனால் என் அன்னைக்கு அதீத ஆர்வமிருந்தாலும் தந்தையார் முனைப்பு காட்டாததால் மிகவும் இதிலெல்லாம் இறங்க முடியாத நிலை. ஊருக்கு சங்கராச்சாரியார் வந்தால் போய்ப் பார்ப்பார். தேடிப் போயெல்லாம் பார்த்ததில்லை. மற்றபடி என் தந்தை இதற்கெல்லாம் பெரிய மறுப்பும் சொன்னதில்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

இதைத் தவிர சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்ட என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றும் உண்டு. என் பாட்டி வழியில் உள்ள பெரிய தாத்தா பெரிய வேத விற்பன்னர் – திருவிசரநல்லூர் என்கிற ஊர்க்காரர் – ராமசுப்பா சாஸ்த்ரிகள் என்று பெயர் – இன்றைக்கு கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன மீமாம்ஸம் என்கிற ஒரு ஆன்மீக வழித் தேடலில் கரை கண்டவராம். அவர் ஒருமுறை சங்கராச்சாரியார் பல்லக்கில் வந்தபோது, “பல்லக்கில் ஏறிய சாமியாரைப் பார்க்க மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்து விட்டாராம். எங்கள் குடும்ப வகைகளில் பெரிதாகப் பேசிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட பின்னணி இருந்த போதி£லும் எங்கள் குடும்பம் காஞ்சி மடத்துக்குக்  கட்டுப்பட்ட, சங்கராச்சாரியாரைக் குல குரு என்று ஏற்றுக் கொண்ட, குடும்பம்தான். திருமணப் பத்திரிக்கைகளில் “காஞ்சி சங்கராச்சாரியார் அநுக்ரஹத்துடனும்…” என்றுதான் அச்சடிக்கிற வழக்கம்.

மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் சகோதரன் அவர் அண்மையிலேயே காஞ்சி மடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஒரு நாளைக்கு திடீரென்று ‘பையனைக் கூட்டிக் கொண்டு போய் விடும்படித்’ தந்தி வந்தது என் தந்தைக்கு. என் தந்தை போய்க் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அவன் வியாதி சொஸ்தமாகாமலேயே பின்னால் மிகப் பரிதாபமாய்  இறந்து போனான். அவன் கதையை விவரிப்பதென்றால் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும்.

இதை சொல்லும் போது சங்கராச்சாரியார் மேலேயோ சங்கர மடத்தின் மேலேயோ எள்ளளவும் மரியாதை குறையவில்லை என் பெற்றோருக்கு. அவர்கள் படும் கஷ்டங்களுக்கு யார் மீதும் அவர்கள் பழி சுமத்த விரும்பவில்லை. தங்கள் வினைப் பயன் என்று இருந்து விட்டார்கள்.

என் வரையில் கூட சங்கராச்சாரியார் தொடர்பான சிறு நிகழ்ச்சி உண்டு. எனக்கு அப்போது மூன்று வயதிருக்கலாம். சங்கராச்சாரியார் வந்திருக்கிறார் என்று என்னையும் தூக்கிக் கொண்டு என் அன்னை போயிருக்கிறார். அந்த இடம் எங்களூர் பழைய அரண்மனை. என் வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. இருக்கலாம். அங்கு கூட்டத்தில் நான் காணாமல் போய் விட்டேனாம். தேடு தேடு என்று தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் – அகப்படவில்லை. அலமலந்து போய் என்ன செய்வதென்று அறியாது என் அன்னை வீடு திரும்பியதும் திகைத்துப் போனாராம். வீட்டில் நான் இருந்திருக்கிறேன். மூன்று வயதுக் குழந்தை எப்படித் தனியாக நடந்து வீடு திரும்பியது என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இதை ரொம்ப நாட்கள் என் குடும்பத்தினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நான் வளர்ந்து ஆளாகி படித்து வேலைக்குப் போன பின்தான் சங்கராச்சாரியாரைப் பார்க்கக் காஞ்சிபுரத்துக்குப் போனேன். அப்போதெல்லாம் அவர் யாருடனும் பேசாமல் மௌனத்திலேயே இருந்தார். ஒரு கண்ணில் பூ விழுந்துவிட்டது. தடுமாறிய படியே இரண்டு பேர் வழி நடத்த நடந்து வந்தார். எந்திரத் தனமாக கையை உயர்த்தி ஆசி வழங்கினார். கூட இருந்தவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து உரத்து அவரிடம் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அவர் ஏதோ மோனத்தில் இருந்ததாகத்தான் பட்டது. யாரையும் குறிப்பிட்டு கவனிப்பதாய்த் தெரியவில்லை. ஏதோ பொதுப் படையாகப் பார்த்துக் கொண்டிருந்தது போலதான் தெரிந்தது. தெய்வத்தின் குரல் உரைகளைச் செய்த ஞானப் பிழம்பு போலில்லாமல் சாதாரணமாய் நாம் வீடுகளில் பார்க்கும் வயதானவர்கள் போல்தான் இருந்தார். வெளியே அற்புதங்கள் அவர் நடத்துவதாய்க் கட்டமைத்திருந்த பிம்பத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாது தானிருந்தது அவர் தோற்றம்.

அதன்பின்னர் இப்போதுதான் குடும்பத்துடன் விஜயம் செய்கிறேன். அப்போது அவரை சந்நிதியில் கடவுளை வைத்திருப்பது போல் ஒரு சிறிய அறையில் பிரம்புச் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவர் காலை குந்திட்டவாறு உட்கார்ந்திருந்தார். பெரிய பூதக் கண்ணாடி போன்ற சாளேஸ்வரக் கண்ணாடிகளை அணிந்திருந்தார். யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல் எங்கோ வெறித்தவாறு அமர்ந்திருந்தார். என் மனதில் என் பெற்றோரும் குடும்பத்தினரும் – பட்ட – படுகின்ற கஷ்டங்கள் நிழற்படமாய் ஓடிக் கொண்டிருந்தன. உலகில் எல்லோருக்கும் சுக துக்கங்கள் இருக்கின்றன. அவை சாதாரணமான சுகதுக்கங்கள். பணக்கஷ்டமாக இருக்கலாம்; அல்லது வியாதியாக இருக்கலாம். எல்லாக் குடும்பங்களும் ஒரு சந்தர்ப்பத்தில் இவற்றிலெல்லாம் மீண்டு எழுந்து விடுகின்றன. என் வீட்டைப் பொறுத்தமட்டில் இது நடக்கவில்லை.

ஏன் ஏன் என்று அவரிடம் மானசீகமாய்க் கேள்வி எழுப்பிக் கொண்டிருநத்து என் மனது. எல்லோரும் நன்றாக இருக்கிறார்களே என் பெற்றோர் மட்டும் இதுபோன்ற துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்களே என்ன காரணம் என்று அவரிடம தன்னிச்சையாக வினவிக் கொண்டிருந்தேன். அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் உண்மையென்றால் என் கேள்விகள் அவரை நிச்சயம் சென்றடைந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை; ஏனென்றால் அது அவரைச் சென்றடைந்ததா என்கிற சமிக்ஞை அவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் என் ஒரு வழிப்பாதை சம்பாஷனை அவருடன் நடந்து கொண்டிருந்தது. நான் மெதுவாக ‘முந்து வெனு காயிரு பிரக்கலதோடை’ என்கிற தர்பார் ராக தியாகராஜ கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் குரல் கனிந்து காற்றில் வியாபிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கனமான பாடல் – கனமான ராகம்கூட. அடித்துப் பாட வேண்டும். தியாகராஜருக்கு ஒரு தனவந்தர், நிறையப் பொன்னும் பொருளும் பரிசளிக்கிறார். தியாகராஜர் அந்த செல்வத்துடன் திருவையாறை நோக்கிப் பல்லக்கில் வந்து கொண்டிருக்கும்போது கள்வர்கள் அச்செல்வத்தைக் கவரும் நோக்குடன் தியாகராஜரை அணுகுகிறார்கள். அணுகியவர்கள் பயந்து போய் தியாகராஜரின் காலில் விழுகிறார்கள். அவர் என்ன காரணம் என்று வினவியபோது ‘இரண்டு வீரர்கள் கையில் வில்லுடன் காவலுக்கு நடந்து வருகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து காப்பாற்றும்படியும்’ கள்வர்கள் தியாகராஜரிடம் இறைஞ்சுகிறார்கள். அப்போது நெகிழ்ந்து போய் தியாகராஜர் “என்னைக் காக்க லட்சுமணனுடன் கையில் வில்லுடன் இரு பக்கமும் நடந்து வந்தாயா?” என்று பாடிய பாடல்தான் இப்பாடல்.

நான் சங்கராச்சாரியாரையே பார்த்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தவன் சரணத்திற்கு வந்து விட்டேன். அப்போது அவரிடமிருந்து கையால் “போ! போ!” என்கிற சமிஞ்ஞை வந்தது. என்னை நிறுத்திவிட்டுக் கிளம்பச் சொன்னார் என்று நினைக்கிறேன். அவர் என்னைப் “போதும் உன் ரோதனை. நிறுத்திக் கொள்” என்று சொல்வதுபோலிருந்தது. அகலாத அதிர்ச்சியுடன் பாட்டை நிறுத்திவிட்டு அங்கிருந்து என் மனைவியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன். வரும்போது சங்கர மடத்தில் இருக்கும் ‘ப்ரோட்டோகால்’ பற்றிய சிந்தனை என் மனதில் ஓடிக் கொண்டிருநத்து. மற்ற மடங்கள் போலில்லாது சங்கர மடத்தில் யாரும் நம்மைச் சீந்த மாட்டார்கள். சங்கராச்சாரியார்களைப் பார்க்கலாம். அவ்வளவே. நெருங்க முடியாது. அவர்கள் பக்கத்தில் செல்லவோ அந்தரங்க ஆசி பெறவோ என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு புரியாத புதிர்தான்.

சில பிரபலங்களுக்கு விழுந்து விழுந்து சேசை சாதிப்பார்கள். அதற்காக சாதாரண மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. வயதான சுமங்கலிகள் கையில் விளக்குடன் நின்றுகொண்டிருப்பார்கள் – அவர்கள் மாலை கோத்து எடுத்து வந்திருந்தால் அதைக் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள். குடும்பப் பின்னணியா ஜாதியா அந்தஸ்தா பணமா பிரபலமா எது என்று சொல்ல முடியாது என்பதே உண்மை.

இந்த சிந்தனைகளுடன் என் ஊரில் இருந்த சில குடும்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். ஒன்றிரண்டு குடும்பங்கள் சங்கர மடத்துடன் பின்னிப் பிணைந்தவை. அவர்கள் குடும்பத்துப் பெண்களின் கனவில் பெரிய சங்கராச்சாரியார் அடிக்கடி வருவார். ஒருமுறை ஒரு பெண் அவரிடம் வந்து பார்க்க வேண்டும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டபோது, அவள் கனவில் சங்கராச்சாரியார் “இந்த முறை வேண்டாம்; வீட்டிற்கு விலக்காகி இருப்பாய்; அடுத்த முறை வா” என்று கட்டளையிட்டதாய்ப் பிரபலமாய்ப் பேசிக் கொள்வார்கள். இது போன்ற ஏராளமான சம்பவங்கள் அற்புதங்கள் ‘யூ ட்யூப்’ பூராக் கொட்டிக் கிடக்கின்றன. பரணீதரன், ராகணபதி உள்ளிட்ட பலர் இதுபற்றி வரிந்து கட்டிக்கொண்டு ஏராளமாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். இதுபோன்றெல்லாம் என் குடும்பத்துக்கு ஏன் நடக்கவில்லை என்கிற கேள்வியுடன் நான் மனைவியுடன் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அங்கே காமாட்சியம்மன் சந்நிதியில் ‘பாலின்சு காமாட்சி’ என்கிற ச்யாமா சாஸ்த்ரிகளின் மத்யமாவதிப் பாடலைப் பாடினேன். என் குரலால் கவரப்பட்ட குருக்கள் உள்ளே அம்பாள் அருகாமையில் உள்ள வெளி மண்டபத்தில் அநுமதித்து மேலும் சில பாடல்களைப் பாடச் சொன்னார். அம்பாள் சந்நிதியில் இன்னும் சில பாடல்களை பாடிவிட்டு மன நிறைவுடன் புதுக்கோட்டை திரும்பினேன்.

புதுக்கோட்டை திரும்பிய சில நாட்களில் என் மனைவி கருத்தரித்தாள். அவள் கருத்தரித்தபோது நடந்த ஒரு விநோதமான அனுபவத்தை அவள் இன்றும் நினைவு கூறுகிறாள். அது….

5

என் மனைவி கூறுவதாவது…

“நான் புதுக்கோட்டையில் உங்கள் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். உறக்கமும் விழிப்பும் இல்லாத நிலையில் என் மீது கருப்பாக யானை போன்றதொரு உருவம் இறங்குவதை உணர முடிந்தது. பயந்துபோன நான் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தேன் – நீங்கள் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள்”

இது பிரமையா உண்மையா கனவா என்னவென்று இதுநாள் வரை எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் படித்தவரை ராமகிருஷ்ண பரமஹமஸருக்கு இது நடந்ததாகப் படித்திருக்கிறேன் – அவரது அன்னை பரமஹம்ஸர் பிறக்குமுன்பு இதே போன்ற ஒரு அநுபவத்தைப் பெற்றதாகவும் அதன் பின்னர் ராமகிருஷ்ணனை ஈன்றெடுத்ததாகவும் அவர்தம் வரலாறு பகருகிறது.

இது போன்ற நிகழ்வுகள் அல்லது நிகழ்ந்ததாய் நம்புவது பல்வேறு கேள்விகளை நம் மனதில் எழுப்புவது தான் நிஜம். ஆன்மீகத் தேடலில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு அதில் பல வருடங்கள் விடா முயற்சி செய்பவர்களுக்கு ஒருவேளை இவை புரியலாம். மறுஜென்மம், பூர்வ ஜென்மம், முன்னோர் உலகம், ஆவி உலகம், தேவர்களின் உலகம், எதிர்காலம் பற்றி முன் கூட்டியே உய்த்துணரும் ஆற்றல், சித்த புருஷர்களின் சித்து விளையாட்டுகள், தெய்வம் தரிசனம் கொடுப்பது போன்றவைகள் என்போன்ற சாதாரணர்களுக்கு புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் மற்றவர் சொல்பவைகளிலிருந்துமே காணக் கிடைக்கின்றன. நேரடியான அநுபவம் கிடையாது. அனதால் இதனை இப்படியே விட்டுவிட்டு மேலே தொடருவது சிறந்தது என்ற தோன்றுகிறது.

என் பிள்ளை நல்ல கோடையில் பிறந்தான். பிறந்தநாள் 5.5.1992. மிருகசீரிஷ நட்சத்திரம். அக்ஷய்ய திருதியை அன்று பிறந்தான். அன்று பரசுராமர் பிறந்த நாளாம். மிகவும் பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். என் ஒன்றுவிட்ட அண்ணனிடம் பிறந்த நேரம் கொடுத்து ஜாதகம் கணிக்கச் சொன்னதில் அவர் “நல்ல அருமையான ஜாதகம் – கவிபாடும் திறமை இருக்கும்“ என்று கணித்துச் சொன்னார்.

எல்லாம் விளையாட்டாகத்தான் இருந்தது. எங்களுக்கு அவ்வப்போதைய கவலைகள்தான் இன்று நாள் ஓட வேண்டும். பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும். பிரமோஷன் கிடைக்க வேண்டும் என்பது போன்ற சாதாரணப் பொருளாதாரக் காணரங்கள் தான் – பிள்ளையைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்

நான் எப்போதும் போல் பாடிக் கொண்டிருந்தேன். என் பிள்ளை கேட்டுக் கொண்டிருந்தான். அதைத் தவிர ஸ்லோக காஸட்டுகள் ஒன்றிரண்டு வைத்திருந்தேன். என் பிள்ளை அங்கும் இங்கும் நடந்து கொண்டு ஓடிக் கொண்டிருப்பவன் அந்த காஸட்டுகளை ஒலிக்க விட்டால் மகுடி ஊதியதைக் கேட்கும் பாம்பு போல மயங்கி நின்று விடுவான். நாளாக நாளாக அவனைச் சற்று உட்கார்த்தி வைக்க வேண்டுமென்றால் காஸட்டை ஒலிக்கவிட்டால் தான் முடியும் என்று ஆகிவிட்டது.

தவிரவும் என் மனைவியின் கர்ப்ப காலத்தின்போது விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் அவளை உட்கார்த்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவள் மனம்  சாந்தியாக இருக்கவும் குழந்தை நல்லபடியாகப் பிறக்கவுமாக யாரோ சொன்னார்கள் என்று இதைச் செய்து கொண்டிருந்தேன்.

என் பிள்ளை நடக்கவும் ஆரம்பித்து ஒரு வயது பூர்த்தி ஆனபின் எனக்குப் ப்ரமோஷனும் மும்பை மாறுதலும் வந்தன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.