நிறைவடையத் தவறிய மாபெரும் சாத்தியங்கள் – சோ. தர்மனின் ‘சூல்’

 

சோ. தர்மனின்  சூல் நாவலைப் பற்றி எழுதப்போனால், அதன் முன்னுரையில் அவர் அந்த நாவலைப்  பற்றிக் கூறுவதை ஒரு வழிகாட்டியாகக் கொள்வது அவசியம். அதில் அவர் ரஷிய அதிபர் ப்ரியெஸ்னேவ் (Brezhnev) சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ப்ரியெஸ்னெவ் காலத்தில், சரியாக இன்னமும் 10 நாட்களில் மழைக்காலம் துவங்க இருப்பதால் இன்ன பயிருக்கான விதையை இவ்வளவு ஆழத்தில் விதைக்க வேண்டும் என்று சோவியத் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. விவசாயிகள் அப்படியே செய்கிறார்கள்.

ஆனால், எதிர்பார்த்தது போல் பத்து நாட்களில்  துவங்க வேண்டிய மழை, தாமதித்துப் பெய்கிறது. அதற்குள் எல்லா பயிர்களும் காய்ந்து விடுகின்றன. அதை அதிபர் விமானத்திலிருந்து பார்வையிடும்போது  ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயிர் விளைந்திருப்பதைப் பார்க்கிறார். உடனே அந்த உழவரை அழைத்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு அவர் சொல்கிறார், ’நீங்கள் 10 நாட்களில் மழை துவங்கும் என்பதால், 4 அங்குல ஆழத்தில் விதைக்கச் சொன்னீர்கள். ஆனால், எங்கள் பாரம்பரிய அறிதல் முறைகளின்படி நீங்கள் சொன்ன தேதியிலிருந்து 10 நாட்கள் கழித்தே மழை துவங்கும் என்று உணர்ந்து விதைகளை ஆறு அங்குல ஆழத்தில் விதைத்தேன். அது முளைத்து வருவதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்ததால் கருகவில்லை, 4 அங்குல ஆழத்தில் விதைத்தவை முன்கூட்டியே முளைத்து வருகையில் மழை இல்லாமல் கருகிவிட்டன’ என்கிறார்.

ப்ரியெஸ்னேவ்  அந்த விவசாயியின் பாரம்பரிய அறிவு தன் அறிவியல் ரீதியான ’பகுத்தறிவு’க்கு எந்த வகையிலும் குறையவில்லை என்று உணர்கிறார். இந்தச் சம்பவத்தை விவரிக்கும் சோ.தர்மன், இம்மாதிரியான நுண்ணறிவு நமது விவசாயிகளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டுணர்ந்து, அவற்றைப் பதிவு செய்யப் பேராவல் கொண்டதாகவும், அதன் பயனே இந்த நாவல் என்றும் குறிப்பிடுகிறார். அதை எழுத முனையும்போது, பசுமைப்புரட்சி தந்த நவீன வேளாண்மையும் பகுத்தறிவுப் புரட்சி தந்த கோட்பாட்டு அறிவும், ‘சம்சாரிகளான’ விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததா என்ற கேள்வியையும் இந்நாவல் முன்வைக்கிறது என்கிறார்.

ஆகையால், இந்த நாவல் இயல்பாகவே இரண்டு இழைகளைக்   கொண்டுள்ளது. ஒன்று, நம் கிராமப்புறத்தில் சுமார் 100 ஆண்டுகள் முன்புகூட இருந்த  வாழ்க்கை முறையும், அதன் சீதனமான நமது விவசாயிகளின் பாரம்பரிய அறிவும், சூழ்நிலத்தை வெவ்வேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்காமல், ஒவ்வொன்றும் ஒரு மகத்தான முழுமையின் பகுதிகளே என்று பார்க்கும் பண்பும் வெளிப்படும் முதற்பகுதி. இந்தப் பகுதி அபாரமாக வந்திருக்கிறது. நினைத்து வியந்து சிலிர்க்க வைக்கும் பகுதிகளைக் கொண்டிருக்கிறது. காந்தி வர்ணிக்கக்கூடிய ஒரு ஆதர்ச இந்திய கிராமமாக உருளைக்குடி கிராமத்தைக் கொண்டுவந்து நம்  கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர். பாசன முறை, அதைப் பொறுப்பில் வைத்திருக்கும் நீர்ப்பாய்ச்சி, அவனது நம்பிக்கைகள், கண்மாயின் சாமிகள், அவை சத்தியத்துக்கு கட்டுப்படும் தன்மை, ஊர்க்குடும்பனுக்கும் நீர் பாய்ச்சிக்குமுள்ள உறவு, மழையையும், வெயிலையும் அவர்கள் எதிர்நோக்கும்/ எதிர்கொள்ளும் விதம் என்று எத்தனையெத்தனை சுவையான தகவல்கள். சில தகவல்களைச் சொல்லியே ஆகவேண்டும்.

ஊர்க்கண்மாய் நிரம்புமா என்பதற்கு, கண்மாய்க்குள் உள்ள கருவேல மரங்களில் வலசைப் பறவைகள் கூடு கட்டும் இடத்தை வைத்து எடைபோடும் அறிவு. மரத்தின் உச்சியில் கட்டினால் அந்த ஆண்டு கண்மாய் முழுவதும் நிரம்பும், பாதியில் கட்டினால் அவ்வளவாக நிரம்பாது, மழை குறைவாகவே  இருக்கும் என்று அறிவதும், தூக்கணாங்குருவிகளின் கூட்டின் வாசல்கள் அமையும் திசையை வைத்து எந்தப்பருவத்தின் மழை நன்றாக இருக்கும் என்று அறிவதும், நாமக்கோழியின் வருகை,  நீர்ப்பாய்ச்சியின் குடும்பத்துக்கே பரம்பரைச்  சொத்தாகக் கலுங்கலுக்குள் மூச்சடைத்து இறங்கித் தண்ணீரை மடை மாற்றி முறை வைத்து விடும் நுண்ணறிவு, உருளைக்குடி வெற்றிலைக்கும், ஆத்தூர் வெற்றிலைக்கும் காரத்தில் உள்ள வித்தியாசத்துக்குக் காரணமாக அமையும் பாசன முறை, போதுமான மழை பெய்துவிட்ட பருவங்களில் மழையை நிறுத்தித் திருப்பி அனுப்பி வைக்கச் செய்யப்படும் பூசை முறைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இம்மாதிரியான விஷயங்களின் உச்சம், கிராமங்களில் அன்றிருந்த நீதி பரிபாலன  முறை. இதை விவரிக்குமிடத்து இரண்டு மறக்க முடியாத கதாபாத்திரங்களைக் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். ஒன்று, கணவனும் இல்லாமல் வேறு உ றவும் இல்லாமல் அந்த ஊரிலதன் காமத்தையே மடைமாற்றித் தான் வளர்க்கும்  பசுக்களின் மீதும், மரங்களின் மீதும் மக்களின் மீதும் அன்பு சொரிந்து வாழ்ந்து வரும் கொப்புளாயி அம்மாள். இன்னொருவர், மன்னரே அழைத்தாலும் அதற்கான நேரம் வந்தால்தான்  வரமுடியும் என்று மறுத்துக் கூறும், மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கீழ்நாட்டுக் குறிச்சி ஜோஸ்யக்கார அய்யர். தன்னிடம் தஞ்சமடைந்து, தன்  குற்றங்களைக் ஒப்புக்கொண்டு,  தண்டனையை அனுபவிக்கத் தயாராக இருக்கும் நங்கிரிக்கு அவர் சொல்லும் கழுவாய் பிரமிப்பூட்டும் ஒன்று. அதன் வழியே குற்றத்துக்கு தண்டனை உண்டு, ஆனால் பாபத்துக்கு தண்டனை இல்லை, பரிகாரம் மட்டுமே உண்டு என்று பாரம்பரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதம் அபாரமானது.

இன்னொரு மறக்க முடியாத பாத்திரம்,  நீர்பாய்ச்சியின் உற்ற தோழராக இருந்து தன் மரணத்  தருணத்தை முன்கூட்டியே   அறிந்து  தன்  சமாதியைத் தயாராய் கட்டி வைத்திருக்கும் அந்த குப்பாண்டி சாமி பாத்திரம். தற்சார்புள்ள கிராம வாழ்க்கை முறை மாறும் நிலைமை வரப்போகிறது என்றே எச்சரித்துக் கொண்டேயிருக்கும் அவர், கிராமத்தின் மனசாட்சி போல படைக்கப்பட்டிருந்தாலும் அதில் சில குழப்பங்களும் உள்ளன, அவற்றைப் பின்னால் பார்ப்போம். குப்பாண்டி சாமி போலவே வருவதை முன்னறிவிக்கும் மலையாள  மந்திரவாதி குஞ்ஞான் பாத்திரமும் அவன் எட்டையபுர மகாராஜாவின் சிறையில் அடைபட்டுக் கிடக்கும்போது எதிர்காலத்தைக் கண்டு பாரம்பரிய அதிகார பீடங்கள்  அசையப்போகும் காலம் வருவதை எச்சரித்துக் கூறுவதும் எழுச்சிமிக்க இடங்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். . இந்திய கிராம வாழ்க்கை, அதில் சாதி செயல்பட்டுக் கொண்டிருந்த விதங்களையெல்லாம் பற்றி முன்முடிவாக ஒருவர் கொண்டிருக்கும் தீர்மானங்கள் இந்த நூலைப் படிக்கும்போது கேள்விக்குள்ளாகின்றன. கதை பள்ளர் சமூக மக்களின் பார்வை வழியாகவே சொல்லப்பட்டு வரும்போது பசுக்கொலை என்பது வெறும் குற்றமல்ல பெரும் பாவம் என்று வருவது பெரும் வியப்பைத் தருகிறது. இந்த நாவலின் பெரும் விவாதத்துக்குரிய பகுதிகளாக  இது போன்ற பகுதிகள் பலவற்றைச் சொல்லலாம். அறிந்தோ அறியாமலோ சோ. தருமன் இந்நாவல் வழியே அளிக்கும் தகவல் குறிப்புகள், சாதி அமைப்பென்பது ஒரு பெரும் சுரண்டல் முறை என்ற எண்ணத்தை மாற்றும் சித்திரத்தைத் தருகிறது.

உருளைக்குடி கிராமத்தின் சக்கிலிய குடிமக்களின் குல தெய்வமான இருளப்ப சாமியால்தான் எட்டயபுர ராஜாவைப் பீடித்திருக்கும் அனுமன் முனியிடமிருந்து காக்க  முடியும் என்று சொல்லி அந்த இருளப்ப சாமியை அரையாடை மட்டுமே அணிந்து இந்திய மக்களை வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட மகாத்மா காந்தியோடு உருவகப்படுத்தும் இடங்கள், மற்றும் இருளப்ப சாமியை உருளைக்குடி கிராமத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்ய முயற்சி செய்து ராஜாவின் ஆட்கள் தோல்வியடையும் இடங்களெல்லாம் மிக நன்றாக வந்திருக்கின்றன. அதே போல வெள்ளைக்காரரிடமிருந்து தப்பிச் செல்லும் வீரபாண்டிய கட்டபொம்மன் தன்  குதிரை லாடத்தைச் சரி செய்ய உதவும் பிச்சை ஆசாரிக்கும் பனையேறிக்கும் தன்  நகைகளைப் பரிசளித்தும் அவற்றை அவர்கள் மூன்று தலைமுறைகளாக அனுபவிக்காமலேயே மறையும் இடங்களெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

ஆவண மதிப்புமிக்க தகவல் குறிப்புகள், உயிரோட்டமுள்ள பாத்திரப் படைப்பு, கிராமிய வாழ்க்கை முறை குறித்து இன்றைய சமூக அரசியல் பார்வையால் திரிக்கப்படாத சித்தரிப்பு என்று பல நேர்மறையான அம்சங்கள் இருந்தும் நாவல் ஒரு முழு நிறைவை அளிக்க முடியாமல்தான் முடிகிறது. இதற்கு முக்கியமான காரணம், நாவலின் இரண்டாம் இழையான  வரலாற்றை விவரிக்கும் தன்மையில் இருக்கும் குழப்பங்களும் சீரற்ற தன்மையும்தான். மூன்று நூற்றாண்டுகள், கிட்டத்தட்ட 250 ஆண்டுகளின் கால ஓட்டத்தை, மாற்றத்தைச் சொல்லும்  நாவலில் ஒரு  சீரான தன்மை இல்லை என்பதே ஒரு பெரும்  குறை. குப்பாண்டி சாமி பாத்திரத்தை எடுத்துக் கொண்டால், ஒரே ஆளா 250 ஆண்டுகள் வாழ்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. நீர்ப்பாய்ச்சி கதாபாத்திரமும் அப்படித்தான். கட்டபொம்மன் தப்பி ஓடும் காட்சிக்குப்பின் ரயில் வண்டி அறிமுகமாகும் காட்சி வருகிறது. அதற்குப் பின்னரே, கட்டபொம்மன் கொல்லப்படும் செய்தியும் ஊமைத்துரையின் போரும் விவரிக்கப்படுகின்றன. இந்தியாவின் முதல் ரயில் 1853ல் இயக்கப்படுகிறது, அதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன், கட்டபொம்மன் 1799ல் தூக்கிலிடப்பட்டு விடுகிறார்.

நாவலில் காலம், முன்பின்னாக மாறி கதை சொல்லும் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது என்றாலும் அது தெளிவாக இல்லை. பாத்திரங்களும் காலத்தில் குழப்பமாக முன் பின் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கியபின் உருளைக்குடி கிராமத்தை முன்வைத்து தமிழக வரலாறு மாறுவதை சொல்லுமிடத்து, முதல் 20 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி எதுவுமே இல்லை.  நேரடியாக திராவிட இயக்க ஆட்சிக் காலத்துக்கு வந்துவிடுகிறார் ஆசிரியர். கடவுள் நம்பிக்கையற்ற, கடவுளை வசைபாடும், சுச்சி நாயக்கர் (ஸ்விட்ச் போலச் செயல்படுவதால்) எனும் ராமசாமி நாயக்கர், அவரது வாரிசான சின்னாத்துரை, அவருக்கு அடுத்து வரும் மூக்கா என்ற  அரசியல்வாதி, இவர்களெல்லாம் யாரைக் குறித்து என்று எளிதாகவே தெரிகிறது.

அவர்கள் காலத்தில் தொடங்கிய ஊழல்கள், புறம்போக்கு நிலங்களை வளைத்து தம்  பெயருக்கு அவற்றை  மாற்றி, முறையற்ற முறையில் பாசன வசதி செய்து கொள்வது, அதற்கு வளைந்து கொடுக்காத நீர்ப்பாய்ச்சி போன்ற பழைய பரம்பரைப் பதவிகளை ஒழித்து தம் கையாட்களை அங்கு நியமிப்பது, அவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டிய வசதிகளை உருவாக்கிக் கொள்வது போன்ற அவலங்களைக் காட்டுவது என்று ஒரே தாவாகத் தாவி விடுகிறார். காங்கிரஸ் ஆட்சி புரிந்த காலத்தில் நீர்நிலைகள் அமைக்கப்பட்டது, மின்வசதி பரவலான கிராமங்களைச் சென்று சேர்ந்தது போன்ற விவசாயத்தில் தாக்கம் ஏற்படுத்திய பல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் சொல்லப்படாமல் போகின்றன. பழமையான  கிராமங்களையும் ஏராளமான  வன  நிலங்களையும் தம்முள்அடக்கிக் கொண்ட பெரிய அணைக்கட்டுகள், மின் உற்பத்தி நிலையங்கள் எல்லாமே காங்கிரஸ் காலத்தில் கட்டப்பட்டவை.

இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த இருபது ஆண்டுகளில் விவசாயம், கல்வி, பாரம்பரியத் தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் நிலவமைப்பில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களைப் பேசாமல் நவீன தமிழக வரலாற்றைப் பேச முடியாது.   காங்கிரஸ் ஆட்சிக்காலம் முழுமையாய் தவிர்க்கப்படுவதால் தமிழகத்தில் புதிதாக அறிமுகமான சீமைக்கருவேல மரங்கள் குறித்தும் அது உள்ளூர் நீர்நிலைகளையும் சூழலையும் கெடுப்பது பற்றியும் நாவலில் வந்தாலும் அந்த மாற்றம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், காமராஜ் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படுவதில்லை. ஒருநாவல் அது நிகழும் காலத்தின் ஒவ்வொரு சம்பவத்தையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது அல்ல பிரச்னை. இது போன்ற ஒரு சமகால வரலாற்று நாவலில் முக்கியமான சில மாற்றங்களும் போக்குகளும் பேசப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது. அவற்றை விட்டுவிடுவது ஆசிரியரின் பார்வையைக் கேள்விக்குள்ளாக்கும்.

இன்னொரு முக்கியமான விடுதல் அல்லது முரண், தலித் சாதிகளின் முக்கியமான மூன்று பிரிவுகளைக் குறிப்பிடும் நாவல், தமிழக கிராமங்களின் சாதிய மோதல்கள் குறித்தும் சுரண்டல் குறித்தும் முழுமையான மௌனம் சாதிப்பது. சாதிய நடைமுறை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வன்முறையின்றி நடைமுறையில் இருந்த ஒரு அமைதியான வழக்கமாக இந்நாவல் சித்தரிப்பது விவாதத்துக்குரியது.

நாவலின் முற்பகுதி மிக நீளமான ஒன்றாகவும், பிற்பகுதி அவசர அவசரமாக, சுருக்கமாக எழுதி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தோன்றுகிறது. தர்மன் அவர்களின் கூகை நாவலிலும் இந்தத் தன்மையைக் காண முடிந்தது.  இந்த இடத்தில்தான் பதிப்பாளர்களின் பங்கு என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.  அடையாளம் பதிப்பகத்தார், இவ்வளவு விரிவான வரலாற்றுத் தகவல்களையும் மண்சார்ந்த விஷயங்களையும் சொல்லும் திறன் கொண்ட நாவலாசிரியரிடமிருந்து இன்னும் மேலதிக உழைப்பையும் கவனத்தையும் வலிந்து கோரிப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் அதை செய்யத் தவறிவிட்டார்கள். மேற்கில் தரமான நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் இப்படிப்பட்ட சீரற்ற படைப்பை மேம்படுத்தாமல் பதிப்பிக்க முன்வர மாட்டார்கள். கடந்த காலத்தைக் குறித்த ஒரு விரிவான சித்திரம் இருக்குமளவு நிகழ் காலத்தில் கவனமோ அதன் போக்குகள் குறித்த புறவயமான அலசலோ இல்லாமல் வயதானவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, ‘இனிமே எல்லாம் அவ்வளவுதான், உலகமே நாசமாய் போயிடும்,’ என்று வறட்டு அவநம்பிக்கையை வெளிப்படுத்திக் கொள்வதுபோல்  முடிந்து விடுகிறது, ‘சூல்’. அதனாலேயே மிக முக்கியமான நாவலாக வந்திருக்க வேண்டிய ஒன்று, குறைபட்ட படைப்பாகவே நின்று விடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.