kamagra paypal


முகப்பு » உலக அரசியல், கட்டுரை, நிகழ்வு

சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்

மொஹம்மது பொய்ஸீசி

2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொஹ்ம்மது பொய்ஸீசி (Mohamed Bouazizi) என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். ஒரு ஊடகச் செய்திப்படி, அவருடைய அப்பாவின் மீது வசை பொழியப்பட்டு அவமானம் தொடர்ந்தது. அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியைத் திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொஹம்மது  பொய்ஸீசி அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபு ‘வசந்தத்தின்’ முதல் கதிரொளி அது. (இது குறித்த அல்ஜஸீராவின் செய்திக் காணொளி இங்கே: யூட்யூப் )

இதையடுத்துத் துனிசியாவில் வெடித்த போராட்டம், அங்கும் லிபியா, எகிப்து, ஏமன், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலும் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமானது.  மொராக்கோ, பஹரேன், அல்ஜீரியா, இரான், லெபனான், ஜோர்டான், குவைத், ஓமன், சூடான் ஆகிய நாடுகள் சாலைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஜனநாயக உரிமைகளை மீட்க மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சைப் போராட்டம் என்பதால் இது அரபிய வசந்தம் என்று வரவேற்கப்பட்டது. ஆனால், இதைத் தொடர்ந்து, சிரியா, இராக், லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி சட்டம் ஒழுங்கைக் ‘கட்டுப்படுத்தி’ இருக்காவிட்டால் எகிப்தும் பலியாகி இருக்கலாம். இவை போக பிற தேச அரசுகள் இரும்புக்கரம் கொண்டு இரண்டே  ஆண்டுகளில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கின. இன்று, துனிசியாவில் மட்டுமே ஜனநாயக உரிமைகள் ஓரளவு கிடைத்துள்ளன- அரபிய வசந்தத்தின் கருகிய மலர் என்று துனிசியாவைச் சொல்லலாம். பிற தேசங்களில் அந்த அளவுகூடச் சுவடின்றி வசந்தம் கடந்து கோடையும், அதன்பின் இன்று பனிக்காலமும் நிலை கொண்டு விட்டது.

ஆனால் துனிசியாவிலும்கூட நிலவரம் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்று நியூ யார்க் டைம்ஸில் வந்துள்ள இந்தக் கட்டுரை கூறுகிறது. மொஹ்ம்மது பொய்ஸீசி தீக்குளித்துத் துவக்கி வைத்த அரபிய வசந்தத்துக்குப் பின், துனிசியாவில் ஐந்தே ஆண்டுகளில் தீக்குளிப்பு மரணங்கள் மும்மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக எண்பது பேர் தீக்குளிக்கின்றனர். சென்ற ஆண்டு நூற்று நான்கு பேர் தீக்குளித்திருக்கின்றனர். ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், தற்கொலை முறைகளில் தீக்குளிப்பு இரண்டாம் இடம் வகிக்கிறது. பொருளாதார நெருக்கடியும், அதிகாரத்துக்கு எதிரான கண்டனமும் பெரும்பாலான தீக்குளிப்புகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் அது மட்டும் காரணமல்ல.

வகுப்பிலிருந்து மீண்டும் மீண்டும் நீக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் தீக்குளித்த மாணவன் ஒருவன் குறித்து நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையில் இப்படி உள்ளது: ““அவனால் அதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியவில்லை,” என்கிறான் விஸ்ஸம் ஹதீதி (Wissem Hadidi), என்கிற பத்தொன்பது வயதான பால்யகால நண்பன். “அவன் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது சுயநினைவோடுதான் இருந்தான். அப்போதும் அவன் சிரித்துக் கொண்டிருந்தான், மீண்டும் மீண்டும், ‘அநீதி’ என்ற சொல்லைக் கூறிக் கொண்டிருந்தான்.

இதையேதான் நத்யா பென் சலாமா (Nadia Ben Slama) என்ற உளவியல் மருத்துவரும் சொல்கிறார். இவர் பென் ஒரூஸ் (Ben Arous) மருத்துவமனையில் பணியாற்றுபவர். “தீக்குளிப்பு முயற்சியில் பிழைத்துக் கொண்டவர்களில் பலரும், இதற்கு மேல் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார்கள். அவர்கள் அரபி மொழியில் உள்ள இரு சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்: எல் காஹ்ரா (el kahra), இதன் பொருள் இயலாமை, அல்லது ஒடுக்கப்பட்ட உணர்வு; இன்னொரு சொல், ஹோக்ரா (hogra), இதன் பொருள் பிறரால் ஏளனம், அல்லது கேவலப்படுத்தப்படுதல்

““தீக்குளிப்பு என்ற பொதுவெளி சமிக்ஞையில் ஒரு குறியீட்டுத் தன்மை உள்ளது,” என்கிறார் அவர். “அது பொதுவாய் அநீதியை, அல்லது ஒடுக்குபவனைக் கண்டிக்க மேற்கொள்ளப்படுகிறது. அது தவிர அடுத்தவரை, அநீதியைக் கண்டும் எதுவும் செய்யாமல் இருந்தவர்களை, குற்ற உணர்வுக்கு ஆளாக்குவதையும் நோக்கமாய்க் கொண்டுள்ளது. அந்த அடுத்தவர் என்பது பொதுவாய்ச் சொன்னால் இந்தச் சமூகம்தான்”.

பொது விவகாரங்களில் தொடர்புடைய தனி மனிதச் செயல்கள் எல்லாமே சமூகத்துடன் நிகழ்த்தப்படும் உரையாடல்கள்தான். தீக்குளிப்பு போன்ற தற்கொலை மரணங்கள் ஒரு சமூகத்தில் எவ்வாறு பேசப்படுகின்றன, அதன் சமூக மதிப்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான விடை காணத் தவறினால் அது மேலும் பல மரணங்களுக்கு காரணமாகும் ஆபத்தும் உண்டு. பொய்ஸீசி  எதிர்கொண்ட அதே சூழலில் தெருவோர வியாபாரியான அடில் டிரிடியும் (Adel Dridi) அவரைப் போலவே தீக்குளித்தார்- “நான் பொய்ஸீசியைப்  போல் செய்ய விரும்பினேன்,” என்கிறார் அவர். அவர் தெருவோரம் வைத்திருந்த கடை சேதம் செய்யப்பட்டது, அதிலிருந்த பழங்கள் தெருவில் சிதறின, அவரைக் காவலர்கள் காருக்குள் கொண்டு சென்று அடித்தனர். “அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே வந்ததும் என் கண்ணில் கேஸ் ஸ்டேஷன்தான் பட்டது. அதன்பின் நான் வேறெதுவும் யோசிக்கவில்லை,” என்கிறார் அவர். பம்ப்பிலிருந்து பெட்ரோலை நேரடியாகத் தன் மீது ஊற்றிக் கொண்டு ஒரு லைட்டரால் கழுத்தில் கொளுத்திக் கொண்ட அவரை ஒரு பஸ் டிரைவர் நெருப்பு அணைக்கும் கருவி ஒன்றைப் பயன்படுத்திக் காப்பாற்றினார்.

நியூ யார்க் டைம்ஸில் உள்ள கட்டுரை புகைப்படங்களுடன் இவர்களைச் செய்தியாக்கும்போது, இவர்கள் நாயகர்கள் ஆகின்றனர். இது போன்ற சர்வதேச அங்கீகாரம், மேலும் பல தீக்குளிப்புகளுக்கு காரணமாகலாம். ஊடகங்கள் தற்கொலை குறித்த செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அமெரிக்கன் பவுண்டேஷன் ஃபார் ஸூயிஸைட் ப்ரிவென்ஷன் போன்ற அமைப்புகள் நெறிமுறைகள் அளித்துள்ளன. ஆனால் நியூ யார்க் டைம்ஸின் இந்தச் செய்தி பரிந்துரைகளை முழுமையாகவே புறக்கணித்திருப்பது வருந்தத்தக்கது.

அரபு வசந்தம் சமூக ஊடகங்கள் எவ்வளவு விரைவாக மக்களைத் திரட்ட முடியும் என்பதன் சான்று. போராட்டக்காரர்கள் தம் உந்துதலையும் உற்சாகத்தையும் இணைய ஊடகங்களைக் கொண்டே பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களால் தங்கள் உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை, தொடர்ந்து எந்த ஒரு கொள்கையையும் வலியுறுத்திப் போராட முடியவில்லை. சமூக ஊடகங்கள் மக்களைத் திரட்டிப் போராட்டங்களுக்கு வேகம் அளிக்கும் அளவு அவற்றுக்கு வலுவூட்டுவதில்லை, அங்கு கொள்கைக்கும் கேளிக்கைக்கும் இடைவெளியில்லாமல் போகிறது. உறுதியான கொள்கை, ஆழமான புரிதல், மாற்றுத் தரப்பினருடன் இணைந்து செயல்படும் பரந்த மனப்பான்மை, இவையே போராட்டங்களை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக, சமூக ஊடகங்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையிலுள்ள உறவை விவாதிக்கும் ‘டிவிட்டரும் கண்ணீர்ப்புகையும்” என்ற நூல் முக்கியமான ஒன்று. அதை இங்கு இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். சமூக ஊடங்களைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெற முடியும் என்பதை மேற்கண்ட நூலை எழுதிய ஜெய்னப் டுஃபெக்ச்சி (Zeynep Tufekci) வலியுறுத்தவே செய்கிறார். ஆனால் போராட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவது, கோரிக்கைகளைப் பெரிய அளவில் கொண்டு செல்வது, பெருவாரியான மக்களின் கவனத்தைக் கைப்பற்றி புகழடைவது போன்றவை மிக எளிதில் சாத்தியமாவதால், நேரடி நடவடிக்கைகளால் போராட்டங்களை உடைப்பது, பிழையான தகவல்கள் மற்றும் ஊடக இயந்திரங்களைக் கொண்டு கோரிக்கைகளை நீர்க்கச் செய்வது, கவனக்குலைவு, திசைதிருப்புதல் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி படிநிலை அமைப்போ தீர்மானமான தலைமையோ இல்லாத இயல்பு கொண்ட போராட்டங்களைச் சிதறடிப்பது போன்றவையும் அரசால் எளிதில் செய்யக்கூடியதாய் உள்ளன. (ஜெய்னெப் டுஃபெக்ச்சியின் ஒரு உரையை இங்கே காணலாம்: டெட்.காம்)

நியாயமான கோரிக்கைகளுக்காக கொள்கைப் பிடிப்புள்ள தொண்டர்களைத் திரட்டி நீடித்து நடத்தப்பட வேண்டிய போராட்டங்களுக்கு சமூக ஊடகங்கள் பரபரப்பான கோஷங்களில் மயங்கும், அரசியலின் அடிப்படை புரிதலற்ற ஆரவாரக் கூட்டத்தை வெகு விரைவில் திரட்டித் தருவதுதான் பிரச்சினை.  கள்ளப்பணம் நல்ல பணத்தையும் சேர்த்து கொள்ளை கொண்டு போய்விடுகிறது. உலக அளவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகப் போராட சமூக ஊடகங்கள் சுதந்திரமான உரையாடல்களுக்கான தளங்களாகவும் ஆற்றல் வாய்ந்த கருவிகளாகவும் பயன்படுகின்றன. ஆனால் அவற்றின் எளிய வசீகரங்கள் எளிய வெற்றிக்கான உத்திரவாதங்கள் அல்ல. எப்போதும் போலவே இப்போதும் உண்மையான சுதந்தரம் அதற்குரிய விலையை கோரவே செய்கிறது. அதற்கான அவசியம் இல்லை என்ற தோற்றத்தில் மயங்குவதே இணையப் போராளிகளின் ஏமாற்றமும் தோல்வியுமாகிறது.

‘பதின்ம வயதினரைக் குறி வைத்து நீங்கள் உருவாக்கும் விளம்பரங்கள் பதினான்கு வயது சிறுவர்கள் உட்பட, அறுபத்து நான்கு லட்சம் இளைஞர்கள் மனதளவில் தொய்வடைந்த கணங்களில் – “வீணாய்ப்போன” “பாதுகாப்பற்ற” “அழுத்தம் நிறைந்த” “கவலைக்குள்ளான” “தோற்றுப்போன” உணர்வுகள் நிறைக்கும்போது அவர்களைச் சென்று சேரும்”, என்று சொல்லும் வகையில் பேஸ்புக் தயாரித்த ஆவணம் ஒன்று அண்மையில் செய்திகளில் அடிபட்டது – Wired. இந்த விளம்பரங்கள் இளைஞர்களை கோக்கும் பிட்ஸாவும் வாங்கத் தூண்டுகின்றனவா அல்லது அவர்கள் உள்ளத்தில் குறிப்பிட்ட விழுமியங்களுக்கும் சமூகத்தவருக்கும் எதிரான வெறுப்பைத் தூண்டுகின்றனவா என்பது குறித்து இந்த நிறுவனம் யோசிப்பதில்லை.

அடிப்படையில் சமூக ஊடக நிறுவனங்கள் லாப நோக்கில் இயங்குபவை, அரசு அமைப்புகளின் ஆதரவைச் சார்ந்திருப்பவை. சமூக ஊடகங்கள் அளிக்கும் விடுதலைச் சாத்தியங்கள் எவ்வளவு இருப்பினும் அவை தம் பயனர்கள் குறித்த தகவல்களை விலைக்கு விற்பவை. இத்தகவல்கள் வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது குறித்தோ, அரசு அல்லது அரசுக்கு எதிரானவர்களின் செயல்திட்டத்துக்கு பயன்படுத்தப்படுவது குறித்தோ இவற்றுக்கு அக்கறையில்லை. எது ஆர்ப்பாட்டக்காரர்களின் குரல்களுக்கு வலு சேர்த்து ஆள் திரட்டித் தருகிறதோ, அதுவே அவர்களின் காலடித்தடங்களை அரசுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் அளிக்கவும் செய்கின்றன. இன்று உலக அளவில் தனி மனிதர்கள் குறித்து தரவுகள் திரட்ட ஃபேஸ்புக் கட்டமைத்துள்ள தகவல் அமைப்பு, திறன் வாய்ந்த தேசீய உளவு அமைப்புகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. சமூக ஊடகங்கள் வணிகமயக்காப்பட்ட உளவு அமைப்புகள் என்றே சொன்னாலும் தவறாகாது.

 

***

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.