kamagra paypal


முகப்பு » அரசியல், உலக அரசியல், மொழிபெயர்ப்பு

எண்பதுகளின் சீனா

(நிகில் சாவல் எழுதிய லாங் எய்ட்டீஸ் என்ற கட்டுரையின் தழுவல்.)

 

சீனாவிலுள்ள அறிவுஜீவிகளிடம் நீங்கள் இன்று பேச்சுக்கொடுத்தால், 80களின் நினைவலைகளில் அவர்கள் மூழ்கிப்போவதைக் காணலாம். “எங்களது எண்பதுகள் உங்களது அறுபதுகளைப் போன்றது” என்று ஒருவர் கட்டாயம் சொல்லக்கூடும். ஒரு பெரிய அரசியம் மாற்றம் நிகழும் வேளையில், அது அடக்கப்பட்டு, நாடு மீண்டும் பின்னோக்கிச் சென்ற தருணம் அது.

சீனாவின் ஒரு புதிய தலைமுறை தாங்கள் “80களுக்குப் பின்வந்த தலைமுறை” என்று அதை ஒரு அளவுகோலாக வைத்துச் சொல்லிக்கொள்கிறது. மேற்கில் 60களின் நினைவுகள் ஒரு மந்தமான, மகிழ்ச்சியான நினைவுகளைத் தூண்டுவது போல் அல்லாமல், சீனாவின் 80களின் நினைவுகள் வலிகள் நிறைந்தவை. இன்று அந்த நாட்டின் நிலைமைக்கான ஆதார வேர்களை அந்த ஆண்டுகளில் கண்டெடுக்க முடியும். ஒருபுறம் ஜனநாயகத்திற்கு ஆதரவான மக்கள் இயக்கம், மறுபுறம் சந்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப நிலை என்று இருந்த அந்த நிலை எப்படிப்பட்ட மாற்றங்களை இன்று சந்தித்திருக்கிறது?

ஜனநாயக இயக்கம் கொடூரமாக நசுக்கப்பட்டுவிட்டது, பொருளாதாரம் வேகமாக முன்னேற்றமடைந்துவருகிறது. 1989களில் கிழக்கு யூரோப்பில் ஏற்பட்ட புரட்சி அலைகள் கம்யூனிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச்செய்தது மட்டுமல்லாமல், அந்நாடுகளைச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச்சென்றது. மேற்கில் இணைந்து வெற்றியடைந்த இவை இரண்டும், சீனாவைப் பொருத்தவரை வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன.

80களின் ஏற்பட்ட இந்த எழுச்சி எத்தகையது என்பதை, சீனாவின் அதிகாரபூர்வ செய்திக் கோப்புகள் அந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். அண்மையில் பீஜிங் காபிடல் அருங்காட்சியகத்தில்   பண்டைக் காலத்தில் இருந்து தற்போதைய காலகட்டம் வரை டினாமென் சதுக்கம் அடைந்த மாற்றங்களைப் பற்றிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஒவ்வொரு வருடத்தைப் பற்றியும் ஒரு புகைப்படம் இடம்பெற்றது.

1950களில் நகரத்தின் நுழைவாயிலில் ஒல்லியான மாவோவின் தோற்றமும், விவசாயப் புரட்சியின் போது, நாட்டின் விவசாயம் 300, 400, 500 சதவிகிதம் உயர்ந்த போது, நடைபெற்ற அணிவகுப்புகளும், கலாச்சாரப் புரட்சியின் அடையாளங்களும் அதில் காணப்படுகின்றன. மாவோவின் உருவமும் மாற்றமடைந்து, பருமனான தலை வழுக்கை விழுந்தவராக அவர் பல படங்களில் காட்சியளிக்கிறார். 80களை நெருங்கும்போது உங்கள் இதயம் துடிப்பதை நீங்கள் உணர முடியும். ஆனால், 1989ல் நீங்கள் பார்ப்பது ஒரு சிறிய புகைப்படம்தான். சீனக் குடியரசின் 40ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் அடுக்கப்பட்ட ரோஜாக்களின் படமே நீங்கள் காண்பது. அதன் பின்னணியில் சதுக்கம் வெறுமையாகக் காட்சியளிக்கிறது.

1989ம் ஆண்டு, ஜூன் 3, 4ம் தேதிகளில் சீன பொலிட்பீரோவின் மத்தியக் கமிட்டியின் ஆணைப்படி  மக்கள் விடுதலை ராணுவம் டினாமென் சதுக்கத்தில் நுழைந்தது. அங்கு ஜனநாயகத்திற்கு ஆதரவாகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களை ‘அப்புறப் படுத்தியது’.  ராணுவத்தின் இந்தக் கொடுமையான நடவடிக்கை, பத்து வருடங்களுக்கு முன் டெங் சியோபிங்கினால் அறிமுகப்படுத்த நாட்டின் ‘திறந்த கதவுக்’ கொள்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஜார்ஷ் புஷ் இந்த நடவடிக்கையைக் கண்டித்தது மட்டுமல்லாமல், சீனாவுக்கான அமெரிக்க தூதரை விலக்கிக்கொள்ளப்போவதாகவும் மிரட்டினார், இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவிலிருந்த தங்கள் தோழர்களிடம் படுகொலைகள் கம்யூனிச இயக்கத்தால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்று அறிவுரை கூறினார்கள்; பிரஞ்சு அதிபர் மிட்டாரெண்ட், தங்கள் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் நாடுகளுக்கு எதிர்காலமே இல்லை என்று கூறினார். ஆனால், ஓய்விலிருந்து மீண்டுவந்து மாணவர்களை நசுக்கிய டெங் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. “இந்தச் சிறிய சலசலப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாது” என்று இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்தில் அவர் முழங்கினார். “நாம் யாரையும் துன்புறுத்த விரும்பவில்லை, நம்முடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நம் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட விரும்பவர்கள் வெறுங்கையுடன் தான் திரும்பவேண்டியிருக்கும்” என்றும் அறிவித்தார் அவர்.

ஆனால் அவர் அப்போது இருந்த நிலைமை அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். 1989ம் ஆண்டு, அந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் அவர் கொண்டுவந்த சீர்திருத்த முறைகள் பலனளிக்க மறுத்தன. மாவோவின் ஆட்சியில் நகர்ப்புறப் பணியாளர்களை ஆதரிப்பதற்காக, கிராமப்புறத்திலிருந்த விவசாயிகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 1956லிருந்து 1958வரை ஒரு கடுமையான பஞ்சத்தினால் அவர்கள் அவதிக்குள்ளாயினர். டெங் இந்த நிலைமையை மாற்றியமைக்க முன்வந்தார். ஊரகக் குழுக்கள் கலைக்கப்பட்டன, நிலங்கள் குடும்பங்களுக்குச் சமமாக விநியோகிக்கப்பட்டன. இதனால் விவசாய உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்லாமல், விவசாயிகள் அதிக விலைக்கு தங்கள் விளைச்சலை விற்பனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தவிர சீனாவின் கிராமப்புறங்கள் மற்ற ஒரு வகையிலும் செழுமையடைந்துவந்தது. அந்தப் பகுதிகளில் தொடங்கப்பட்ட சிமெண்ட், உரம், இரும்பு, விவசாய உபகரணங்கள் ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகள் மத்தியக் குறுக்கீடு இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டன. இப்படி தொழில் மற்றும் விவசாய உற்பத்தி அதிகரித்ததால், கிராமப்புறச் சீனர்களின் செல்வ வளம் உயர்ந்தது. இதன் காரணமாக நகரம் மற்றும் கிராமப்புறங்களிடையே செல்வ வளத்தில் இருந்த வேறுபாடு குறையத்துவங்கியது.

இந்தச் சீர்திருத்தங்களை டெங் மிகுந்த ஆர்வத்தோடு மேற்கொண்டார் என்று சொல்லலாம். எது சரியாக வேலை செய்கிறதோ அதை முன்னெடுத்துச்செல்வது என்பது அவருடைய சித்தாந்தமாக இருந்தது. சீனப்புரட்சிக் காலத்திலிருந்து பல களங்களைக் கண்டவராக அவர் இருந்தாலும், மாவோவின் ஆத்திரத்தையும்  சம்பாதித்துக்கொண்டதால் சில காலம் ஜியாங்ஷேயில் அவர் வசிக்க வேண்டியிருந்தது. அவருடைய மகன் செம்படையினரால் தள்ளப்பட்டுப் படுகாயமுற்று, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இது அவரை ஓரளவு பயமுறுத்தியது என்றே கூறவேண்டும். பின்னால் அவர் ஒரு வயதான அதிபராக ஜிம்மி கார்ட்டரின் அமெரிக்காவிற்குச் சென்ற போதும், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற போதும், அவற்றின் வளமையால் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக செல்வவளத்தை அதிகரிக்கவேண்டும், அதற்கான செயல்முறை நிபுணத்துவத்தைப் பெறவேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

பூனை கறுப்பாக இருந்தாலும் சரி, வெள்ளையாக இருந்தாலும் சரி, அது எலியைப் பிடித்தால் போதும் என்பது அவரது கொள்கை. (1961ம் ஆண்டு அவரது யதார்த்தமான விவசாயக் கொள்கையைப் பிரகடனப்படுத்தியபோது அவர் உதிர்த்த பொன்மொழி இது). கம்யூனிச சித்தாந்ததிற்கு நேரெதிரான கொள்கையாக இது தோன்றினாலும்,  இந்தச் சீர்திருத்தங்கள் ஜனநாயகத்தை எந்த வகையிலும் உள்ளே நுழையவிடப்போவதில்லை என்ற  மறைமுகமான உறுதியை அவர் கட்சிக்கு அளித்திருந்தார். வளர்ச்சியை அளிக்கும் சீர்திருத்தங்கள், கட்சியின் அதிகாரத்தை உயர்த்தி, மேலும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை அதற்கு அளித்தது.

கிராமப்புறங்களைக் குறிவைத்துச் செய்யப்பட்ட ஆரம்ப கால சீர்திருத்தங்கள் வளர்ச்சியை உயர்த்தினாலும், அவை போதுமானதாக இல்லை. 1985ல் அரசு சீர்திருத்தங்களை நகர்ப்புறங்களின் பக்கம் திருப்பியது . முதலில் அது அரசுத் துறை நிறுவனங்களிலிருந்து துவங்கியது. அதுவரை அரசுத்துறை நிறுவனங்கள் மத்தியத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் செயல்பட்டு, அதன் உற்பத்திகளை அரசுக்கே குறிப்பிட்ட விலையில் விற்றுவந்தன. இது மாற்றப்பட்டு, உள்ளூர் மேலாளர்களின் பொறுப்பில் இந்நிறுவனங்கள் விடப்பட்டன. உற்பத்தியையும் அரசு தீர்மானிக்காமல், அவர்கள் தீர்மானித்து அதனால் கிடைக்கும் லாபங்களை அந்த நிறுவனங்களே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப் போலச் செயல்பட ஆரம்பித்தன. இதன் காரணமாக இந்த மேலாளர்களும் தொழில்முனைவோர்களும் கட்சிக்கு இணையாக வளர ஆரம்பித்தார்கள்.

ஊழல் முன்னெப்போதும் இருந்திராத வரையில் எல்லாத் துறைகளுக்கும் விரிவடைந்தது. கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பொருட்களை வாங்கி சந்தை விலைக்குப் பலர் விற்க ஆரம்பித்தனர்.  கிராமப்புற சீர்திருத்தங்களைப் போல வறியவர்களின் வருமானத்தை அதிகரிக்காமல், நகர்ப்புறச் சீர்திருத்தங்கள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தன. கம்யூனிசக் கட்சியைப் பொருத்தவரை, பணியாளர்களின் ஏழ்மைதான் நாட்டின் சொத்தாகக் கருதப்பட்டது. 1980களுக்கு முன், சீனத் தொழிற்சாலைகள் உள்நாட்டுத் தேவைகளுக்காக மட்டுமே உற்பத்தி செய்தன, ஆனால் 80களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சீனாவின் தென்பகுதியில் தோன்ற ஆரம்பித்தன, வரிச்சலுகைகளும் மூதலீட்டுக்கான ஊக்கங்களும் வழங்கப்பட்ட இந்த இடங்கள் உலகச்சந்தைகளுக்கான பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கின. வளர்ந்த நாடுகளின் பணியாளர் செலவை விட பல மடங்கு குறைவான சீனப் பணியாளர் செலவால், இந்தப் பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு உலகச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கின. ஆனால், அதிகரித்து வந்த பணவீக்கம் நாட்டை பல வகைகளிலும் பாதித்தது. டினாமன் சதுக்க நிகழ்வுக்கான ஒரு காரணமாகவும் அது இருந்தது.

அந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட எல்லோரும் ஆத்திரமடைந்திருந்தார்கள். மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மாணவர்கள் குரலெழுப்பினார்கள்; பொருளாதார நிபுணர்கள் ஊழலையும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பற்றிக் கவலை கொண்டிருந்தார்கள்; வளர்ந்துவந்த ஏற்றத்தாழ்வுகளால் பணியாளர்கள் ஏமாற்றமடைந்திருந்தார்கள். கிராமப்புற சீர்திருத்தங்களால் பயனடைந்திருந்த விவசாயிகள் மட்டும் விதிவிலக்காக, அமைதியைக் கடைப்பிடித்தனர்.

கட்சியின் பொதுச்செயலாளரும் சீர்திருத்தங்களை ஆதரித்தவருமான ஹூ யௌபாங் 1987ல் எழுந்த மாணவர் எழுச்சிக்கு உடந்தையாக இருந்ததாகக் காரணம் கூறி கட்டம் கட்டப்பட்டார்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார், 1989ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் டினாமென் சதுக்கத்தில் அதிகாரபூர்வர்மற்ற அவரது இறுதி ஊர்வலத்தை அனுசரிக்க 50000 மாணவர்கள் திரண்டனர். அவர்களது கோரிக்கைகளின் அடையாளமாக அவர்கள் ஹூவைக் கருதினர். அதிகாரபூர்வமான துக்கத்தை அனுசரிக்கக் கோரிக்கை ஒன்றை அவர்கள் வைத்தனர். அவர்களது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. போக்கிடம் இல்லாமால் அங்கேயே அவர்கள் தங்க முடிவுசெய்தனர்.

போலந்தில் ஏற்பட்ட சாலிடாரிட்டி இயக்கம் போல, 1989 போராட்டக் குழுவினர் அரசுக்கு எதிராக கருத்தாக்கங்களை, கம்யூனிஸ்ட் கட்சி மறந்து போன ஜனநாயக முறை பிரதிநிதித்துவம், பேச்சுரிமை, அதிகாரவர்க்கத்தின் தனியுரிமைகளை ஒழிப்பது போன்றவற்றை,  எழுப்பினர். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியினர் கட்சியை எதிர்க்காமல் ஜனநாயகத்தை நோக்கி முன்னேற விரும்பினர், மற்றொரு பகுதியினர் கட்சியையே ஆட்சியிலிருந்து நீக்க விரும்பினர். இரண்டு குழுக்களிலும் பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்த விரும்புபவர்கள் இருந்தனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் ஜனநாயகத்தை விரும்பினர்.

ஆனால்,  அந்த இயக்கத்தில் பங்கேற்றிருந்த வாங் ஹூய் பின்னாளில் கூறியது போல், அந்த இயக்கம் பல முரண்களைக் கொண்டிருந்தது. மாணவர்கள் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொடுத்த அழுத்தத்தை முதலாளித்துவ வர்க்கம் பயன்படுத்திக்கொண்டது. பொருளாதாரத்தை மேலும் தனியார்மயமாக்க அதுவே தக்க தருணம் என்று உணர்ந்து அதற்கான முயற்சிகளை எடுக்கத்துவங்கியது.   புதிய தாராளமயவாதிகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், இடதுசாரிகளின் சமத்துவ சித்தாந்தத்தை நிந்தித்தனர். அவர்கள் விரும்பிய ஜனநாயகம், முதலாளிகளுக்கு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடும் அதிகாரம் அளிப்பதாக இருந்தது. இயக்கத்தில் ஏற்பட்ட ஆகப்பெரிய முரண், நகருக்கும் கிராமத்திற்கும் இடையில் இருந்தது. “விவசாயமே பொருளாதாரத்தின் அடிப்படையாக இருந்தது, பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லையென்றால், விவசாயிகள் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்திருப்பார்கள். ஆனால் கிராமப்புறங்கள் பாதிப்படையாமல் இருந்தன” என்றார் டெங்.

ஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை,  அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார். அந்த நிலைத்தன்மையை அசைத்துப்பார்க்கும் எதனையும் சீனர்களும் சரி, வெளியிலிருந்தவர்களும் சரி, விரும்பவில்லை. அதனால், பொருளாதார தாரளமயமாக்கல் வாதிகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்குமான கூட்டணி முறிந்தது. 1991ல் சீனக் கம்யூனிசக் கட்சியின் 72000 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்களின் அனுதாபிகளாகக் கருதப்பட்டனர்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் திசையும் 1989க்குப் பின் மாற்றமடைந்தது. கைவிடப்பட்ட கிராமப்புறச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாக,  உலகமயமாக்கலின் சாதகங்களை அறிந்த, கடற்கரை நகர்களிலிருந்து வந்த,  தொழில்நுட்ப நிபுணர்கள்  ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றனர். அதனால் நகரங்களின் பக்கம் அவர்கள் பார்வை திரும்பியது.  அன்னிய முதலீடுகள் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் நகர்களான ஷாங்காய் போன்றவற்றை குறிவைத்து வரத்தொடங்கின.

அரசுத்துறை நிறுவனங்களை நடத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தாததால், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருந்தது. அதற்கான ஒரு தீர்வாக இந்த அன்னிய முதலீடுகள் இருந்தன. இந்தப் புதிய கட்சி-முதலாளித்துவ கூட்டணி முறையின் கீழ், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருந்தது, அதன் ஜிடிபி குறியீடுகள் புதிய உச்சங்களைத் தொட்டன. சந்தைப் பாதுகாப்பில்லாத இடங்களில் சீனத்தொழிற்சாலைகள் தங்கள் பொருட்களைக் கொண்டு குவித்தன. நகரங்களில் பொருளாதார வளர்ச்சியோடு சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் வளர்ந்தன. தனது இளைஞர்களைக் கொன்ற அரசு வளர்ச்சியடையாது என்ற மிட்டரெண்டின் வாக்குப் பொய்யானது.

சீனக்கலைஞர்களால் சித்தரிக்கப்படும் சீனா, மேற்கத்திய ஊடகங்களால் வர்ணிக்கப்படும் சீனாவிற்கு முற்றிலும் மாறானது. சீனக் கலைஞர்கள் தொழில்வளர்ச்சியின் தேக்கம், நுகரும்தன்மை அதிகரிப்பு, அரசியல் மந்தத்தன்மை ஆகியவற்றைப் பற்றியே கவலைப்படுகின்றனர். உலகின் முதன்மைப் பொருளாதாரமாக விளங்கக்கூடிய சீனாவில் இன்னும் தன்னம்பிக்கையின்மை அதிகம் தென்படுகிறது. இது சீனாவின் ஒரு பகுதியினர் இடையே நிலவும் அதீதமான நம்பிக்கைக்கு எதிர்வினையாக இருக்கலாம் அல்லது தற்போது சீனா தேர்ந்தெடுத்திருக்கின்ற பாதை நீண்டகால நோக்கில் நிலைக்காது என்ற புரிதல் கம்யூனிச இயக்கத்தினருக்கும் அறிவுஜீவிகளுக்கும் ஏற்பட்டதன் விளைவாகவும் இருக்கலாம்.

இதைப் பற்றி விவரமாக அறிய, நாம் நிழலுலகுக்குச் செல்லவேண்டும். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழத்தல், நகர்ப்புறங்களில் குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுதல், அவர்கள் குடியிருந்த வீடுகள் நீர் நிரம்பிய அணைகளாக மாறுதல், குடியானவர்களின் மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுதல் என்று புதிய சீனாவின் பல நுணுக்கமான பிரச்சனைகளை திரைப்படக் கலைஞர்கள் தொட்டுச்செல்கிறார்கள். ஆனால், இந்தத் திரைப்படங்கள் சென்சாருக்குக்கூட வருவதில்லை.

சீனாவின் ‘கலாச்சாரப் புரட்சி’ இப்போதெல்லாம் எந்த ஒரு மக்கள் இயக்கத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக டினாமென் சதுக்கக் கொடூரத்தைக் கூட இது குறிக்கிறது. மாவோவின் காலகட்டத்தை மீண்டும் எழுப்பச் செய்யும் முயற்சிகள் டெங்கின் காலகட்டத்தைப் பற்றிய நினைவலைகளை எழுப்புகின்றன. டினாமென்னிலும் மற்ற நகரங்களிலும் என்ன நடைபெற்றது என்பது பற்றிய நினைவுகள் இப்போது மௌனமாகிவிட்டன, ஆனாலும் முற்றிலும் அகற்றப்படவில்லை. நகரின் சுவர்களுக்கு வெளியே, புறநகர்ப்பகுதிகளில், தொழிற்சாலைகளில் போராட்டங்கள் எழுகின்றன. ஆனால் இவை அடக்கப்படுகின்றன, மக்களின் குறைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. மக்களைத் திருப்பி அனுப்பும்போது, அவர்கள் நின்று போராடத்துணிந்துவிட்டால் என்ன செய்வது என்பதே கட்சியின் அச்சமாக இருக்கிறது.

***

மூலக் கட்டுரையைக் காண இங்கே செல்க: http://bit.ly/2wwC0sS

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.