kamagra paypal


முகப்பு » சிறுகதை

திகிரி

1

திக் நாட் கான் (இந்தப் பெயரை தமிழில் எழுதுவது ஏறக்குறைய ஒரு குற்றம். ஏனெனில் நமது மொழிக்குள் வராத உச்சரிப்பு) ஒரு வியட்நாமியத் துறவி. அவரது தர்மா உரைகள் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஜனவரியில் சாவை நேரில் பார்த்தபிறகு எதிலும் ஒரு அச்சம் தோன்றிவிட்டது. என்னவென்றே தெரியாது, பின் மலேரியா, அதுவும் மூளைக்கு ஏறிவிட்டது என்று கண்டு பிடித்தார்கள்.

நான் சாவை கைத்தொடும் தூரத்தில் அசையும் ஒரு திரை போல பார்த்தேன். இன்னும் ஒரே ஒரு அசைவு என் சாவு பூரணமாகிவிடும் என்பது போல. ஆனால் சாவென்றால் நின்று போவது என்று நான் நினைத்திருந்தேன். அப்படியில்லை போலிருக்கிறது. சாவென்பது வெகுவேகமாக அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுவது. மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஒரு கயிறறுந்த பட்டம் ஒன்றை அடுத்த முறை காண்கையில் சொல்லிக்கொள்ளுங்கள். “இதுதான் சாவு”.

ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும் தொந்திரவுகள் இருந்து கொண்டே இருந்தன. சாவின் தொந்திரவுகள். இருள் எனது வீட்டின் எல்லா மூலைகளிலும் படர்ந்திருந்தது. ஆட்டோவிலிருந்து கைத்தாங்கலாக இறக்கப்பட்டு வீட்டுக்குள் நுழையும்போது ஒரு முறை இதயம் எதிர்பார்ப்பில் விம்மி அடங்கியது. அம்மாவால் என்னை தூக்க முடியவில்லை. சித்தப்பா ”அவளுக்குப் போன்பண்ணினேன். எடுக்கலை” என்றார், ”ஆனா அவளுக்குத் தெரியும்”

2

சிதறால் மலைக்கு மேலே வருடக் கணக்கில் ஒரு மனிதரைக் கூட காணாது சமணத்துறவிகள் இருந்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு எனக்கு அங்கே ஒரு இரவாவது தங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு ஒருநாள் தனியாகத் தங்கினேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மாலை அடர்ந்ததும் கீழிறங்கிப் போவதைப் பார்த்தேன். குரல்கள் ஒவ்வொரு படியாக புறாக்களை போலத் தத்தி தத்தி இறங்கின. பின்னர் எதிர்பாரா ஒருகணம் காற்றால் உந்தப்பட்டு பறந்து உங்கள் அருகே மீண்டும் வந்து உங்களைத் திடுக்கிடச் செய்தன. மேற்கே ஒரு கண நேரம் சூரியன் ஒரு பிரமாண்டமான ரத்தப் பொட்டு போலத் தயங்கி நின்றுவிட்டு உதிர்ந்தோடியது. பறவைகள் நிதானமாக கிழக்கே பறந்து போயின. குழல்விளக்கு திக்கும்போது மின்விசிறியின் இறக்கைகளைப் பார்க்க முடிவது போல அவற்றின் இறகுகளை பார்க்கமுடிந்தது. காவலாளி ஒருமுறை மலைப்படிகளில் பாதி வழிவரை கழியைத் தட்டியவாறு ஏறி பின்பு சலித்துத் திரும்பினான். பின்னர் அடிவாரத்தில் அவ்வப்போது துளிர்க்கும் ஒரு பீடிக்கங்காக மாறினான். அந்தி முற்றிலும் அணைந்தபோது ஒரு குளிர்ந்த காற்றை அனுப்பியது.

அதன் தொடலில் பார்சுவநாதரின் கோவில் முன்பிருந்த குளம் சிலிர்த்தது. கோவிலின் உள்ளே யாரோ ஏற்றிவிட்டுப் போயிருந்த தீபம் ஒரு கணம் பிடித்தமான அடவில் உறைந்து நிற்கும் நாட்டியப்பெண் போல நிலைத்து நின்றுவிட்டு அணைந்தது. இருள். தூய இருள். ஆனால் உண்மையில் தூய இருள் என்று ஒன்றுமில்லை. நேரம் செல்ல செல்லஇருளுக்குள் நிறைய இடைவெளிகள் இருப்பது நமக்கு தெரிய ஆரம்பிக்கிறது. நீங்கள் கதை கவிதை எழுதுகிறவராக இருந்தால் இரண்டாவது வாசிப்பில் உங்கள் படைப்புகளில் தெரியக் கூடிய இடைவெளி. அல்லது ஒரு நெசவாளராய் இருந்தால்உங்கள் பாவில் நீங்கள் உணரும் ஒரு இடைவெளி.

எனக்குத் தோன்றியது, இருட்டு தன்னை யுகம் தொடக்கத்திலிருந்து நெய்துகொண்டே இருக்கிறது. தன்னைச்சுற்றித் தானே ஒரு சேலையைத் தன் உடம்பிலிருந்தே நெய்துகொண்டு ஒரு பெண்போல. அதை முழுக்க நெய்ததும் உலகம் உறைந்துவிடும். பிறகு ஒரே அமைதி. அமைதி என்றும் யாரும் உணரமுடியாத பெரும் அமைதி. ஆனால் அதுவரை முழுமையான மவுனம் என்பது எதுவுமில்லை. சிறிய சத்தங்களை உங்கள் காதுகள் மெதுமெதுவாக கேட்கத் துவங்குகின்றன. கோவிலின் உள்ளே இறுக்கி அமர்ந்திருந்த ஆசனங்களை திகம்பரர்கள் களர்த்திக்கொள்கின்றனர். அவர்கள் பெருமூச்சு விடுவதைப் போல உங்களுக்குத் தோன்றுகிறது. அவர்கள் மூட்டுகள் விடுபடும் ஓசை உங்களுக்கு கேட்கிறது அல்லது தோன்றுகிறது. இல்லை தோன்றவில்லை. உண்மைதான். மொத்த கோவிலும் பெருமூச்சு விடுகிறது. பாறைகள் கூட நெகிழ ஆரம்பிக்கின்றன. அவற்றின் இடுக்குகளில் இருந்து பூச்சிகள் தங்களது இருப்பை அவிழ்க்கின்றன. ஒரு இரவுப்பறவையின் ஏக்கமான ஒற்றைக் கேவல். அது ஒற்றையாய் இருப்பதுதான் உங்களுக்குத் தாங்க முடியாத ஒரு துயரத்தை அளிக்கிறது. அது பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கவில்லை. அது தனது துயரத்துக்குப் பதிலே இல்லை என்பதை அறிந்திருக்கிறது. அது தனது துயரத்தைக் காற்றில் ஒரு தூபப்புகை போல விட்டுவிட்டு பறந்துவிட்டது.

நான் கோவிலின் படிகளில் அப்படியே அமர்ந்திருந்தேன். என் கரங்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. என் உடல் ஒருமுறை முழுமையாக இருளுக்குள் சென்றுவிட்டு திரும்பவும் புலப்பட்டு வந்தது. குகைக்குள் போய்விட்டுத் திரும்பும் ஒரு விலங்குபோல. ஒவ்வொரு விரலாக. ஒவ்வொரு கணுவாக நான் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே என் பார்வையை சட்டென்று மீண்டும் ஒரு நிழல் மூடியது. நான் ஏறக்குறைய இறந்தவன் போல உணர்ந்தேன். இப்போது இம்மலையில் நானிருப்பதை அறிந்தவர் எவருமில்லை. இம்மலையில்நானிருப்பதை உணர்ந்தவர் எவருமில்லை. உண்மையில் என் இருப்பை இவ்வுலகில் இருப்பதை நிறுவுவது எது? ஆனால் ஏறக்குறைய இறந்தவன் என்ற சொல்தான் எவ்வளவு விஷம் பொருந்தியது! என் கண்கள் என்னையறியாமல் இளகிச் சொட்டின. என் வாழ்வு ஒரு பெரும்தோல்வி என்று பட்டது. இல்லை. பெரும்தோல்வி கூட இல்லை. பெரும்தோல்வி பெரு முயற்சிகளுக்குப் பிறகு வருவது. என் வாழ்வில் பெரியதாக பொருட்படுத்தத்தக்கதாக எதுவுமே இல்லை.

என் வாழ்வில் என் மரணம் கூட பொருட்படுத் தத்தக்கதாக இருக்கப் போவதில்லை. கரையான்கள் கட்டி எழுப்பியது போன்று எழுப்பப்பட்டது என் வாழ்வு அதே போல உதிர்ந்து கொண்டிருக்கிறது. நான் வேதனை தாங்காது வாய்விட்டு அழுதேன். பூச்சிகள் ஒருகணம் திகைத்து தங்கள் புலம்பலை நிறுத்தின. மெல்ல ஒரு நீர்ப்பரப்பை விலக்குவது போல இருளை விலக்கிக்கொண்டு நிலவு மெல்ல எழுந்து வந்தது. ஓய்வுநாள் படுக்கையிலிருந்து எழும் ஒரு அரசி. நான் எழுந்து மலையின் முகவாயில் நின்றுகொண்டு கீழே பார்த்தேன். ஒருஎளிய கிராமத்தின் சிறிய ஒளி நகைகள். உணவு தயாரிக்கும் வாசனைகள். சிறிய சிரிப்புச் சத்தங்கள். ஒரு பெண்ணின் பாடல் கூட. மரணம். எவ்வளவு இனிமையாக இருக்கக் கூடும் என்று நினைத்துக்கொண்டேன்அப்போது. பூரண மரணம். நான் என்னையுமறியாது என் கால்கள் கீழே குதிக்கத் தயாராவதை உணர்ந்தேன்.

மலைக்காற்றில் என் கால்கள் மூங்கில் குச்சிகள் போல நடுங்கின. காற்று ஒருமுறை வாயைக் குவித்துக்கொண்டு ‘ஹூம் ”என்றது. அப்போதுதான் அந்த உச்சாடனத்தைக் கேட்டேன். அல்லது பாடலை. கோவிலுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தது. நான் கோவிலுக்குள்ளிருந்து ஒரு ஒளிக் கீற்று வீசுவதைக் கவனித்தேன். பின்னர் அது இறங்கி வருவதை. அது என்னை நோக்கி வந்தது. அந்த ஒளிப்பந்துக்குள் ஒருவர் திகம்பரராகநின்றுகொண்டிருந்தார் அவரிடமிருந்துதான் அந்தத் தோத்திரம் எழுந்து கொண்டிருந்தது. நமோகார் மந்திரம் அது என்று பின்னர் அறிந்து கொண்டேன். சமணர்களின் முக்கிய தோத்திரங்களில் ஒன்று. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக உச்சரிக்கப்பட்டுவரும் மந்திரம்.

நமோ அரிஹந்ததனம்

அரிஹதர்களுக்கு வணக்கம்

நமோ சித்தானம்

சித்தர்களுக்கு வணக்கம்

நமோ அயாரியனாம்

ஆச்சார்யர்களுக்கு வணக்கம்

நான் அவரது கண்களை உற்றுப்பார்த்தேன். அவர் ”ஆம்”என்பது போல் தலையசைத்தார். ஒரு நாற்காலி மடிக்கப்படுவது போல என் கால்கள் மடிந்தன.

3

கிராமம் அமைதியாக இருந்தது. சற்றே வேறுபட்டிருந்தது. முழுக்க சுடாத செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்ட வீடுகள். உள்ளே மாத்திரமே நீறிட்டசுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வீடுகளில் மனிதர்கள்இல்லை. ஒரே ஒரு வீட்டின் திண்ணையில் மட்டுமே ஒரு சிறுமி மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டிருந்தாள் அவளது பாவாடையை முகர்ந்தபடி ஒரு நாய்க்குட்டி இருந்தது. தீபங்கள் மாடங்களில் ஏற்றப்பட்டு அசையாது ஞானியர் நெற்றியில் தீட்டிய செந்தூரம் போல துலங்கின. ஒரு பெரிய கரண்டி போல நின்றிருந்த வேப்பமரம் ஒன்றில் ஒரு ஆட்டுக்குட்டி கட்டப்பட்டிருந்தது. அவ்வப்போது அதன் பேதைமை மிக்க குரல். மரம் அதன் இலைகளையும் அணைத்துவிட்டு உறங்கி கொண்டிருந்தது. தூரத்தில் இருந்து சில குரல்கள் மிதந்து வந்தன. அது கேட்டதும் ஆடு மவுனமாகி சிலைத்தது. தீப்பந்தங்களின் குமிழ்கள் துலங்கித் தெரிந்தன. பிரிந்து பிரிந்து எண்ணிக்கையாகி நிலைத்தன. மவுனம். அது ஒரு சிறிய ஊர்வலம். பிண ஊர்வலம். தென்னை மட்டைகளால் கட்டப்பட்டபாடையில் ஒரு இளம்பெண் கிடந்தாள். அவளை சுற்றி எருக்கம் பூ மாலைகள். அவள் கூந்தல் ஒரு வலை போல அவள் முகத்தை மூடியிருந்தது. அல்ல ஒரு சர்ப்பத்தைப் போல. அவள் வயிறு பெருத்து வீங்கி எழும்பியிருக்க அவர்கள் வழியெங்கும் மஞ்சள் அரிசிகளை இறைத்தபடி வேகமாக சென்றார்கள்.

“நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி…”

கூட்டத்தின் நடுவில் ஒரு சிறுமி ஒரு தீச்சட்டியைத் தூக்கியபடி வந்தாள். அவள் நெஞ்சு முழுவதும் சாம்பல் பூசியிருந்தது. திண்ணையில் இருந்த சிறுமி கையிலிருந்த குழந்தையிடம், ‘ஆற்றுக்குக் கொண்டு போகிறார்கள்” என்றாள், ”ஆறு சொர்க்கத்துக்குப் போகிறது”

குழந்தை வாயிலிருந்து விரலை நீக்கி விட்டு ”ம்மா..” ஊர்வலத்தைக் கைகாட்டிஅழைத்தது. கடந்து போன ஊர்வலத்திலிருந்து ஓராள் பிரிந்து வந்து ஆட்டுக்குட்டியை அவிழ்த்துக்கொண்டு இழுத்துப் போனான். அது புழுக்கைகளை உதிர்த்தபடி போனது. சிறிய மண்பானைகள் வழியெங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றின் மேல்வாடாமல்லிப் பூக்கள் கிடக்க கருப்புமண்ணினால் ஆன ஒரு பெரிய சாடிசாய்ந்து கிடந்தது. அதிலிருந்து ஒரு திரவம் இறங்கி மண்ணுள் கசிந்து கொண்டிருந்தது. சூழல் மொத்தமும் ஒரு குருதி வீச்சம் இருந்தது. எனக்குப் பசித்தது.

4

வீட்டின் நடுவில் ஹோமம் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இரவில் அக்கினி வளர்ப்பவர்கள் நிச்சயம் தேவர்களை அழைக்கப்போவதில்லை என்று நான் நினைத்துக்கொண்டேன். எந்த துர்த்தேவதைகளை இவர்கள் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? தூண்களின் மறைவுகளில் பெண் சத்தங்கள் கேட்டன. சத்தங்களில் ஒரு வாழையிலைக் குழைவு. ஆனாலும் அவர்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அக்கினி சடசடத்து எழுந்து அவர்களை எச்சரித்தது. வளையல்கள் கேலி செய்வது போல சிரித்தன. வட்ட தாம்பாளத்தில் ஒரு குழந்தையின் தலை நறுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் திடுக்கிட்டுப் பார்க்க அவை ரோஜாப்பூக்களாகமாறின.

‘மூலாதாரம் மிகப் பலவீனமாக இருக்கிறது இவனுக்கு” என்று யாரோ சொன்னார்கள்.நான் பொதுவாக சுற்றிப்பார்த்து ‘பசிக்கிறது ”என்றேன். அவரது புஜங்களில் நாக வளையங்கள் கட்டப்பட்டிருந்தன. செப்பு நாகங்களின் கண்களில் ரத்தினக் கண்கள். அக்கினி திருப்தியுறாத பெண் போல பேசிக்கொண்டே இருந்தது. பழுத்த நெய்யின் வீச்சம் வீடெங்கும் நிறைந்திருந்தது. தரைகள் வழுக்கின. மரப்படிகள் இருளுக்குள் உயர்ந்து மறைந்தன. கூரையில் குங்குமம் படர்ந்திருந்தது. அது சதா எல்லார் தலையிலும் சொட்டிக்கொண்டே இருந்தது.

5

வீடு இப்போது அமைதியாக இருந்தது. யாரோ வீட்டை நீரால் அலம்பிக் கொண்டிருந்தார்கள். அது நுரைத்து நுரைத்து தன அழுக்கைக் குமட்டித்தள்ளியது. நடு முற்றத்தில் நீளமாக ஒரு சிகப்புத் துணி கிடந்தது. ஒருவர் அதைஅணைத்தபடி படுத்துக் கிடந்தார். அவரது நகங்கள் ரத்தச் சிகப்பில் சாயமிட்டது போல் இருந்தன. மாடிப்படிகளில் உயரத்தில் இருளில் இரண்டு கால்கள் அமர்ந்திருந்தன. பாத அணிகள் பெண்ணென காட்டின. சிங்கம் போல வாய் திறந்திருந்த நீர்ப்போக்கிகளிடமிருந்து மெலிய முனகல்கள் வந்து கொண்டிருந்தன. என் முன்னே பெரிய சிகப்பு அரிசிச் சோறு அம்பாரம் போல குவித்துவைக்கப்பட்டிருந்தது. நான் குந்தி அமர்ந்து என் நெற்றியிலிருந்து வியர்வைஅதன்மேல் விழ தின்றேன். அது அந்த அன்னத்துக்கு வினோத சுவையைஅளித்தது. ‘தானே தனது உப்பு’ என்று ஒரு குரல் எங்கிருந்தோ ஒலித்தது. நான் மறுபடியும் அந்த ஊர்வலத்தின் ‘நாராயண நாராயண ஹரி’யைக்கேட்டேன். கூரையிலிருந்து ஒரு பல்லி சொட்டியது.

”அவர்கள் திரும்ப வருகிறார்கள். அப்போது அவன் வீட்டில் இருக்கக் கூடாது. வெளியே அனுப்பு” என்றார் அவர்.

6

நான் நதிக்கரைக்குப் போனேன். நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய் பூத்துக் கொண்டிருந்தன. நதிக்கரையில் எதோ எரிந்துகொண்டிருந்தது. நெருப்புப்பொறிகள் நாய்க்கொண்டை உதிர்க்கும் விதைகள் போலப் பறந்து வந்து தங்கள் நிலங்களைத் தேடின. அவற்றில் ஒன்று கிழக்கு பாகத்தில் விழுந்து புதைந்து வளர்வதை நான் பார்த்தேன். ஒரு செம்பருத்திச் செடி ஒன்று மரமளவு வளர்ந்திருந்தது. அதன் மலர்களின் மடல்கள் கணிகையரின் பெரிய கீழுதடுகள்போலத் தொங்கின. நதிக்கரையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளது கால்களை நதிக்குள் கரைய விட்டிருந்தாள். அவள் மேலிருந்து புகை எழுந்துகொண்டிருந்தது. நான் உற்றுப்பார்க்க அது அவள் ஆடையென மாறியது. அவளது வயிறு விம்மி விம்மித் தணிந்துகொண்டிருந்தது. அவள் ஒரு பெரிய மீனைப் பிடித்துப் பிளந்துதின்றுகொண்டிருந்தாள். மீனின் செவுள்கள் படபடவென்று துடித்தன. அதன் கண்களில் ஒன்றை அவள் பிடுங்கி மென்றாள். அதன் மற்ற கண் அவளையேபார்த்துக்கொண்டு இருந்தது. அவள் அதையும் பிடுங்கித் தின்றாள். அவளதுமுலைகள் விம்மி வான் பார்த்துத் திமிர்ந்திருந்தன. அவற்றிலிருந்து மஞ்சள்ப்பால் மீறித் திமிங்கில மீன்களின் நீர்கீழ் மூச்சு போலப் பீச்சிஅடித்துக்கொண்டிருந்தது. அவள் என்னைக் கண்டதும் ”இந்த ஆறு சொர்க்கத்துக்குப் போகவில்லை” என்றாள்.

7

அவள் ஒரு கதை சொன்னாள். திருமணத்துக்கு மறுநாளே அவன் போருக்குப் போகவேண்டியிருந்தது. உலகின் மிகக் குறைந்த நேரத் தேனிலவு. ஆனால் அதற்கு முன் அவர்கள் ஆயிரம் வருடங்கள் காதலித்திருக்கிறார்கள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு ஒரு இரவு மட்டுமே அவர்களுக்குஅளிக்கப்பட்டது. அது ஒரு குடும்ப சாபம் என்று அவனது முன்னோர்கள் சொன்னார்கள். அவன் அவளிடம் தனது இறுதி முத்தத்தை அளிக்க வேண்டினான். அவன் போவது மிகக் கடுமையான, நம்பிக்கையே அற்ற ஒரு போருக்குள். அவர்கள் இவ்விதம் தங்கள் செவுள்களை கரையில் விட்டுவிட்டு படகேறினார்கள். வாழ்வென்றும் மரணமென்றும் உறுதியாகச் சொல்ல முடியாத நாள்கள். முகமே அறியாத மனிதர்களை அவன் கொன்றான். முகமே முளைத்திராத மனிதர்கள் அவனைக் கொல்ல முயன்றார்கள். ஒவ்வொருநாள் மாலையும் அவன்அவர்களுக்கு நீத்தார் கடன்களைச் செய்தான். ஆனால் கர்மங்கள் “பெயரில்லாதமனிதர்களிடம் நாங்கள் எப்படிப் போய்ச் சேர்வது?”என்று கேட்டன. ஒருநாள் போர் உக்கிரமாக நிகழ்ந்துகொண்டிருக்குபோது அதன் நடுவில் அவனுக்கு ஒரு காட்சி தோன்றியது. வானத்திலிருந்து பூமி மீது உருட்டப்படும் சோழிகள் போல அவன் அந்தப் படுகளத்தைக் கண்டான். சோழிகள் அங்குமிங்கும் சிதறி ஒன்றை ஒன்று வெட்ட முயன்றன. ‘மனிதன் தெய்வங்களின் சூதுக் காய்களா?’ என்று அவனுக்குத் தோன்றியது. பகடைகள் அவர்கள் பக்கம் திரும்பிய நாளொன்றில் அவர்கள் வீடு திரும்பினார்கள், பகடை விரும்பாத பல்லாயிரக்கணக்கான ஆவிகளைச் சுமந்துகொண்டு. அவர்கள் போரை வென்று விட்டார்கள் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள் அவர்களுக்காக கரையில் காத்திருந்தார்கள். அவள் காத்திருந்தாள் அவன் மகளைப் பிடித்தபடி. அவன் இறங்கி அவளை அணைத்துக்கொண்டான். குலவை ஒலி எழுந்தது. எல்லோரும் முன்னோர்களை வாழ்த்தினார்கள். அவளது கண்கள் அவனது முகத்தை விட்டு விலகவேயில்லை. அவள் அவனது ஒவ்வொரு உறுப்பாய்த் தொட்டுப்பார்த்தாள் அவனது தழும்புகள் அவளது உதடுகளாயின. எவ்வளவு தழும்புகள். எவ்வளவு உதடுகள். ஊர் கூடி வந்து அவர்களை வாழ்த்தியது. அவர்கள் இரவு முழுக்கக் கூடினார்கள். அவன் தன்னைக் கரைத்து அவளுள்நிரப்பினான். அவள் அடிவாரம் அற்ற ஒரு பாத்திரம் போல விரிந்துகொண்டேஇருந்தாள். அவன் தான் கொன்ற வீரர்களின் உடலெல்லாம் உதிரமெல்லாம் தனக்குள் நிரம்பியுள்ளது என்று நினைத்தான், உணர்ந்தான். அவள் அவன் முடிப்பற்றி இழுத்து அவன் காதில், ”ஆயிரம் நாட்களையும் சேர்த்து வைத்துக் கூடுகிறாய்”என்றாள். அவன் ”ஆயிரம் உயிர்களின் சுக்கிலம் என்னுள் இப்போது உள்ளது”என்றான். மறுநாள் அவன் முன்னோர் பூசைக்காக மலர் வாங்க கடைவீதி போனாள்.அவன் இப்போது தனது மகளிடம் பேச முனைந்தான்.

ஆனால் அவள் கண்கள் ஏன் தூரத்தில் இருக்கின்றன? அவை கூடு திரும்ப விரும்பாத பறவைகள் போலிருந்தன.அவன் அவளை அணைக்க முயல மகள் விலகி “நீ யார்?”

”நான் உன் அப்பா”

”இல்லை”அவள் பின் வாங்கினாள். ”நீ என் அப்பா இல்லை. என் அப்பா இரவு வருவார். ஒவ்வொரு இரவும் அம்மா அவரிடம் மட்டுமே சிரிப்பாள். அவர் வந்தால் மட்டுமே பேசுவாள். நீ என் அப்பா இல்லை. உன்னிடம் வேறு மனிதர்களின் வாசனை உள்ளது”அவன் உடைந்துபோனான். வீட்டை விட்டு வெளியேறி குடிக்க ஆரம்பித்தான். வீட்டுக்கு வரவேயில்லை. இணைமுகம் பார்க்கவே இல்லை. முன்னோர் பூஜையில் அவளை விலக்கி வைத்தான். ஊர் விசாரிக்கவந்தது. ஊர் மன்றலில் வைத்து ‘இது என் குழந்தை இல்லை,’ என்று சத்தியம் செய்தான். அவள் மனம் வெதும்பி நிலவு துளிர்க்காத ஓரிரவில் வெளிக்கிளம்பிப் போய் நதியில் மூழ்கி இறந்து போனாள்.அன்றிரவு அவன் திரும்பவும் தனது வீட்டுக்குப் போனான்.அவன் மகள் அவர்கள் அறையில் படுக்கையில் தனியாக இருந்தாள். உடைக்கப்பட்ட ஒரு கிளைபோல மடிந்துறங்கிக் கொண்டிருந்தாள். அவள் கன்னங்களிலிருந்து இன்னமும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. அறை மூலையில் ஒரே ஒரு தீபம் அசையாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு கணம் அவனுக்கு அது தனது இணையின் கண் போலத் தோன்றியது. அவன் அவளை உலுக்கி எழுப்பி, ”எங்கே உன் அப்பா, அவனை எனக்குக் காட்டு நான் அவனைக் கொல்வேன். என் பாத்திரத்தில் தனது தண்ணீரை நிரப்பியவன் எவன்?”

அதைக் கேட்டு சிறுமி நடுங்கினாள். அப்போது அறையில் காவல் நின்றிருந்த கேதவிளக்கு அவளைப் பாதுகாக்க முனைவது போலக் குதித்து எழுந்தது. அதில் அவன் நிழல் நீண்டு சுவரில் வீழ்ந்தது. சிறுமி சொன்னாள், ”இதோ என் அப்பா. அம்மா இவருடன்தான் ஒவ்வொரு இரவும் பேசுவாள். சிரிப்பாள். ஆம் இவரே மாலைவீழ்ந்ததும் தினமும் என் வீட்டுக்கு வருகிறவர்”

8

நான் திக்கித்துப் போய் நின்றிருந்தேன். அவள் சொன்னாள் ”இதுவே நான் இறங்கி இறந்துபோன நதி,”என்றாள். ”நீ என்னைச் சந்தேகித்த அந்த படைவீரன்”

நான் ”இல்லை,” என்றேன். ”நீ…. நீ ஒரு கதை. நான் உன்னைப்படித்தேன். அவ்வளவுதான் தவிர அது வேறொரு காலம்.”அவள் சொன்னாள், ”இல்லை எல்லாம் ஒன்றுதான். நீயே அவன். அவன் ஒழுகி ஒழுகி இன்று உன்னிடம் இன்று வந்து சேர்ந்திருக்கிறான். நான் திரும்பத்திரும்ப உன்னைக்கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறேன்”

அவளது கை என்னை நோக்கி நீண்டது. நான் அது என் மனைவியின், மகளின், தாயின், செவிலியின், குல தெய்வத்தின், தோழியின், காதலியின் கை என்று கண்டுபிடித்தேன். என் பெண்கள் எண்ணற்றவர். என் பெண்கள் ஒருவர். என் காலம் வேறானது. என் காலம் ஒன்றே. என் வாழ்வில் மரணம் உள்ளது. என் மரணம் இதோ இந்த கேதவிளக்கு போல ஒற்றைக்கண்ணால் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

9

”எங்கே கிடந்தார்?”

”மலை மேலே”

”எப்படித் தனியாக விட்டீர்கள்?”

”கேட்காமல் போய் விட்டார்”

”மாத்திரைகளையும் நிப்பாட்டிவிட்டார் போலிருக்கிறது”

”ஆம்”

”கடினம். மருந்துகளுக்கு எதிர்வினை இல்லை. பிரியமானவர் யார்?” சற்று தயக்கத்துக்குப் பிறகு ”மகள்.””மனைவி?””’இவருடன் இல்லை””ஏன்?””….. இவருக்கு அவள் மேல் சந்தேகம்”

”சில நேரம் இவர் எடுத்த மாத்திரைகளின் விளைவாக இருக்கலாம். வேறு எவரும்பிரியமானவர்கள் இல்லையா?””மகள் உண்டு.””மகளை இவர் அருகில் வந்து பேசச் சொல்லுங்கள்””அவளுக்கு இவர் மேல் கடும் பயம். இவர் அவளைத் துன்புறுத்துவதைக்கண்டு கொஞ்ச நாள் பேச்சு வராமல் போய்விட்டது”

“ஓ!”

10

அவனுக்கு காலம் தெரியவில்லை. இங்கே எல்லாம் ஒரே காலம். இங்கே காலத்தை மாத்திரைகளே நிர்ணயிக்கின்றன. விழிக்கும் காலம் காலை. வீழும் காலம் அந்தி. அந்தியில் மகள் வந்தாள் என்பதை உணர முடிந்தது. சிறிய சத்தங்கள். அவன் மீண்டுமொரு முறை அவளிடம் கேட்டான் ”மகளே உனது அப்பா யார் ?””அவள் என் படுக்கையில் மீது கிடந்த மெலிந்த நிழலைக் காட்டினாள். ”இதுவே என் அப்பா. இரவானதும் என் காதருகே வந்து பாடுகிறவர், உறங்கும்வரை என் பாதங்களை பிடித்து விடுகிறவர். பள்ளிவாகனம் வரும்வரை வாசலிலேயே காத்திருப்பவர். எனக்கு மலர்களுக்குப் பெயர்களும் நிறங்களும் அளிப்பவர். இவரை அவர்கள் தங்கள் மருத்துவத்தால் இப்படி மாற்றினார்கள். ஒரு எண்ணாகவும், நிழலாகவும், ஒரு கோடாகவும், ஒரு மருந்தின் பக்க விளைவாகவும் மாற்றினார்கள். அவர்கள் மாற்றும் முன்பு இவரே எனது அப்பாவாக இருந்தார்”

11

நான் அழுதுகொண்டிருந்தேன். அவர் புன்னகைத்தார்.”அறியாமையை வழிபடுகிறவர்கள் இருளில் ஆழ்கிறார்கள்”என்றார்.

”அறிவை வழிபடுகிறவர்கள் இன்னமும் ஆழ்ந்த இருளில்” என்றார். ”உங்கள் ஈசோபநிஷதம்”

மழைத்துளிகள் கோபமடைந்தது போல, புதர்களிலிருந்து சிதறி ஓடுகிற முயல்குட்டிகளைப் போல கலைந்து என் மேல் சொட்டின. அவர் மெல்ல தனது ஒளியைச் சுருக்கிக்கொண்டு ஆலயத்தினுள் மறைந்தார்.

One Comment »

 • ramjiyahoo said:

  பாழடைந்த கட்டிடங்களில்
  உறவு கொள்வதில்
  உனக்கிருந்த விருப்பம்
  எனக்கு என்றுமே புரிந்ததில்லை
  ஒரு கடும் காட்டுக்குள்
  மர வீட்டில்
  கீழே கொடும்புலி ஒன்று
  கண்கள் மின்ன நின்றிருந்தபோது
  நீ கலவிகொள்ள காட்டிய அவசரமும்
  ஒரு அபத்தமான விபத்தில்
  நீ இறந்த அன்று
  பிணவறைக்கு வெளியே காத்திருந்தபோது
  ஒரு கணம் புரிவதுபோல் தோன்றியது
  நீ எந்தக் கணமும் எழுந்து
  என்னைக் கூடலுக்கு அழைப்பாய்
  என்று அன்று
  முழுமையாக நம்பினேன். – Bogan

  அற்புதம், பூர்ணமாக வந்து இருக்கிறது படைப்பு – அரிஹதர்களுக்கு வணக்கம் , சித்தர்களுக்கு வணக்கம், ஆச்சார்யர்களுக்கு வணக்கம்.

  # 9 July 2017 at 6:39 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.