மரி

ஸ்பீடாமீட்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது வண்டி நூறுக்கு மேல் போய்க் கொண்டிருப்பதை. உள்ளே சிறு குலுக்கலும் இல்லை. காரினுள் முழுவதும் பரவியிருந்த ஏ சியின் குளிர்ச்சியையும் மீறி ஒரு கசகசப்பு கழுத்தில் உறுத்தியபடியே இருந்தது. வெளியே பார்த்தேன். மரங்கள் கட்டிடங்கள் என்று எந்த உருவமும் சரிவரப் பிடிபடாமல் இருளில் வெகு வேகமாய்க் கரைந்து நழுவியபடியே இருந்தன.

கண்களை மூடிக் கொண்டேன். “ அவன் வொய்ப் போன் பண்ணாங்கடா. ஏன் அவர் கிட்ட யாருமே பேச மாட்டேங்கறீங்க. நீங்கள்லாம் பேசினா அவர் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவாருன்னு சொன்னாங்க.அப்போ பேசினேன். அதுக்கப்புறம் இந்த வாரம் டயமில்லாம போச்சு. இந்தா பேசணும் அந்தா பேசணும்னு நெனச்சிட்டே இருந்தேன். அதுக்குள்ள இப்படிஎன்று பார்த்தி சொன்ன போது கமறிக் கட்டிப் போயிருந்த அவன் குரல் ஞாபகம் வந்தது.

அவனாவது போன வாரம் பேசியிருந்தான். நான் ரமேஷிடம் பேசிப் பல மாதங்கள் ஆகி விட்டிருந்தன. செய்தி கேட்டதிலிருந்து, வந்த செய்தியை விடவும் நான்  அவனை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரிக்காமல் இருந்து விட்டது மிகப்பெரிய விஷயமாய்த் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு வேலையைச் செய்யும் போதும் ஊடுபாவாக அந்த க் குற்றவுணர்ச்சி பின் மனசில் இழையறாமல் ஓடிக் கொண்டே இருந்தது.

ஏனோ சட்டென்று பார்த்தியிடம் பேச வேண்டும் போலிருந்தது. பார்த்தி முன்னே சென்று கொண்டிருந்த காரில் இருந்தான். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஜோவின் தோளில் லேசாய்த் தட்டி ஏதேனும் தேனீர்க்கடை தென்பட்டால் நிறுத்தச் சொன்னேன். போனை எடுத்து பார்த்திக்கும் அழைத்துச் சொன்னேன்.

முன்னே சென்று கொண்டிருந்த வண்டி சாலையோரம் வேகம் குறைந்து தயங்கி நின்றது. ஜோவும் வண்டியை நிறுத்தினார். ஒரே ஒரு மஞ்சள் குண்டு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்த கடையில் வயதான தாத்தா அமர்ந்து தூக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே போராடிக் கொண்டிருந்தார். நாங்கள் அருகே போகவும் விழித்துக் கொண்டார்.

shadow

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாரையும் எதுவும் கேட்காமல் நானேஎட்டு டீஎன்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளி நின்று சோம்பல் முறித்துக் கொண்டிருந்த பார்த்தியருகே போய் நின்றேன். எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். கையைக் கட்டிக் கொண்டு இருளை வெறிக்கத் துவங்கினான். மெல்ல அவன் தோளில் கை போட்டேன். அமைதியாய் இருந்தான். நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் ராட்சச சப்தத்தையும் மீறி அங்கே தொடங்கி சாலையிலிருந்து விலகி நீண்டிருந்த புதர்க்காட்டிலிருந்து ராப்பூச்சிகளின் சப்தம் கனமாய் ஒலித்தபடியிருந்தது. காற்றில் லேசான மூத்திர வீச்சம் கலந்திருந்தது.

இதுவ்ரை நடந்த எதுவுமே நடவாதது போல் அந்தத் தேநீரின் முடிவில் சகஜமாய்ப் பேசியபடி ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடித் திரும்ப கிளம்பிய இடத்தை நோக்கியே பயணப்பட்டு விட மாட்டோமா என்று அதீதக் கற்பனையை மனம் விரும்பியது.

தேநீரைக் குடித்து முடித்து மீண்டும் காருக்கு நடந்தோம். எப்போதும் போல் ஜோ அந்த நடு இரவிலும் ஒரு பிஸ்கட்டைக் கடித்தபடி வந்தார். காரைக் கிளப்பிக் கொண்டு பயணம் தயங்கித் தொடர்ந்தது.

ஜோவுக்கு அமைதியாய் இருப்பது சங்கடமாய் இருந்தது போலிருந்தது. காரில் இருந்த அந்தச் சிறிய இடத்தில் அமைதியை எங்கேயாவது கண்ணுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்து விட முயற்சிப்பது போல எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார். தன் அம்மாவுக்கு வந்த பக்கவாதம் பற்றியும் தன் பயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பயணம் முடிந்து அடுத்த நாளே திரும்ப வேண்டுமெனவும் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

நடுநடுவே சன்னமாக ஒலித்தபடியிருந்த பாடல்களைப் பற்றிப் பேசி, அது அந்த நடிகர்களைப் பற்றியும் திரைப்படங்கள் பற்றியுமென பேச்சு இலக்கில்லாமல் தலையில் சட்டி கவிழ்க்கப்பட்ட நாய் அலைவதைப் போல அலைந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் இருந்த இரண்டு பேரும் தூங்கி விட்டிருந்தனர்.

சாலையிலிருந்து சற்றே கவனம் தவிர்த்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். அழைப்புகள் ஏதும் வந்திருக்கவில்லை. திடீரென்று தோன்றியவனாய் கைப்பேசியிலிருந்த புகைப்படங்களைப் பார்க்கத் துவங்கினேன். நண்பர்கள் எல்லாரும் வெவ்வேறு சுற்றுலாக்களில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்க்கையில் தான் பெரும்பாலான புகைப்படங்களில் அவன் என் அருகிலேயே நின்றிருப்பதை உணர்ந்தேன்.

ஏற்கனவே உள்ளே அங்குமிங்கும் அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்த லேசான குற்றவுணர்வு மேலும் வலுப்பெற்று சஞ்சலம் அதிகமாகியது. இரண்டரை மணியளவில் சேலத்தை அடைந்து ரமேஷின் மனைவி கொடுத்திருந்த விலாசத்தைத் தேடத் துவங்கினோம். கொஞ்சம் வழி தெரியாமல் சுற்றவே, வாசவி மகால் இருந்த பகுதிக்கு வந்து விட்டோம். அதைப் பார்த்ததும் நான்கைந்து வருடங்களுக்கு  முன் ரமேஷின் திருமணத்துக்கு இதே இடத்துக்கு வந்ததும், சின்னக் கடைவீதியில் நடந்து திரிந்து அலைந்ததும் ஞாபகம் வந்தது.

அந்தப் பகுதியிலேயே சற்று அலைந்து விலாசத்தைக் கண்டுபிடித்து விட்டோம். வாசலிலிருந்த ஷாமியானா பந்தல் அகாலமாய் வண்ணங்களை இறைத்தபடியிருந்தது. அருகிலிருந்த மின் கம்பத்தின் விளக்கொளியில் ஈசல் பூச்சிகள் ஒன்றிரண்டு சுற்றியபடியிருந்தன. பந்தலின் கீழ் கிடந்த நாற்காலிகளில் அங்குமிங்குமாக ஓரிருவர் அமர்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர்.

கடைசி நிமிடத்தில் உள்ளே செல்லாமல் தவிர்த்து விட ஏதேனும் வழியிருக்கிறதா என்று மனம் யோசித்துச் சலித்தது. இரண்டு கார்களையும் இடம் பார்த்து நிறுத்தி விட்டு மெல்ல கேட்டைத் திறந்து அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.எல்லாரும் தயங்கி நின்று யார் முதலில் உள்ளே செல்வதென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஜோ ஏதோ யோசித்தவராக உள்ளே நுழைந்தார்.

அவர் பின்னேயே எல்லாரும் நுழைந்தோம்.  ஆண்கள் யாரையும் கூடத்தில் காணவில்லை. தளர்ந்து கிடந்த பெண்கள் சுதாரித்து எழுந்து நின்றனர். குளிர்ப்பெட்டியில் ரமேஷ் வைக்கப்பட்டிருந்தான். அதீத வெண்மையாய் இருந்தான். நோமியயின் போராட்டச் சுவடுகள் முழுவதுமாய் அவனிடமிருந்து அகன்று விட்டது போலவும் அற்புதமான ஒரு நிம்மதி படர்ந்திருப்பது போலவும் அவன் படுத்திருந்தது தோற்றமளித்தது.

கண்ணாடி அணிந்தே அவனைப் பார்த்துப் பழகி விட்டிருந்ததால் கண்களை மூடிக் கிடந்தாலும் கண்ணாடி இல்லாதது வினோதமாகவே இருந்தது. உள்ளறையின் முகப்பில் குழந்தைகள் தூக்கத்தில் சத்தம் கேட்டுப் புரளுவது தெரிந்தது. அவன் பையனுக்குக் கொஞ்சம் மாறுகண் என்று ரமேஷ் சொல்லியிருக்கிறான். சில புகைப்படங்களையும் காட்டியிருக்கிறான்.

ஏனோ திடீரென்று அந்தக் குழந்தையின் கண்களைப் பார்க்க வேண்டுமென்று பேராவல் எழுந்தது. அழுதழுது சோர்ந்து போய்க் கிடந்த பெண்கள் கூட்டத்தினிடையே எங்கள் வருகை மீண்டும் ஒரு விசும்பலைத் துளிர்க்கச் செய்திருந்தது.மீண்டும் அவனைப் பார்த்தேன். நாங்கள் எப்போதும் கேலி பேசிச் சிரிக்கும் அவனின் கட்டை மீசை அடங்கி அமிழ்ந்திருந்தது.குளிர்ப்பெட்டியின் அருகே அகல் விளக்கு சிறு தீபத்துடன் படபடத்துக் கொண்டிருந்தது.

பெட்டி மேல் போட்டிருந்த சாமந்திப்பூவால் ஆன மாலைகள் வாடிப் போய் அதன் மணம் அறையெங்கும் பரவியிருந்தது. கூடவே  அப்போது தான் எரிந்து முடித்திருந்த ஒரு ஊதுபத்தியின் மணமும் கலந்து விரவியிருந்தது. சட்டென்று ஒரு நொடியில் அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. அகன்று விட வேண்டும் என்று தோன்றியது.

அவன் மனைவி மெல்லிய குரலில்பாத்தீங்களா உங்க ப்ரெண்டஎன்று புகார்த் தொனியில் மெல்லிய குரலில் கூறினார். அதற்குள் சட்டென்று ஆவேசமான மற்றொரு பெண்மணி, வேகமாக எழுந்து கூந்தலை முடிந்தபடியே, “ என்னத்தப் பாக்குறது. அவரே தான் இதுக்கெல்லாம் காரணம். ஒரு ட்ரீட்மென்டுக்கும் ஒத்துழைக்காம படுத்தினாரு. கடைசில இப்படி ஆகிருச்சுஎன்று பெருமூச்சுடன் கூறிக் கொண்டே அகன்றார். அவர் நடந்து போகும் போதும் எதையோ அவர் உதடுகள் முணு முணுத்தபடியே இருந்தன. ஜாடையைப் பார்க்க, ரமேஷின் மாமியார் அதுவென்று ஊகிக்க முடிந்தது.

அதற்குள் சப்தம் கேட்டுக் குழந்தைகள் விழித்து விட்டன. அந்த இரண்டரை வயதுப் பையன் மலங்க மலங்க விழித்தபடி எழுந்து அமர்ந்து கொண்டிருந்தான். எந்த நிமிடத்திலும் அழுவதற்கு ஆயத்தமாய் இருந்தான். அவன் முகத்தைப் பார்க்க இயலாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். சில நிமிடங்கள் முன்பு கூட அந்தக் குழந்தையின் மாறு கண்ணைப் பார்க்க வேண்டும் என்று யோசித்து விட்டு இப்போது இப்படித் தலையைக் குனிந்து கொண்டிருப்பது விசித்திரமாக இருந்தது.

அழுது அரற்றிக் கொண்டிருந்த எல்லாரும் ஆசுவாசப் படுத்திக் கொள்ள சட்டென்று ஒரே நிமிடத்தில் அழுகையை நிறுத்த, கூடவே பேச்சுக் குரல்களும் நின்று விட, திடீரென்று அணை உடைபட்டதும் பொங்கிப் பிரவாகித்து நிறையும் நீர் போல், அந்த அறை முழுவதும், மிகத் தற்காலிகமான, ஆனால் வலுவான அமைதி நிறைந்தது.

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தின் வினாடி முள் ஓசை பெருஞ்சத்தமாய் எதிரொலித்து அதன் பக்கம் கவனம் திருப்பியது. அது ரமேஷ் திருமணத்தின் போது அன்பளிக்கப் பட்டதாக இருக்கக் கூடுமென்று எண்ணினேன். அவனும் அவன் மனைவியும் சேர்ந்து புன்னகைத்தபடியிருக்கும் ஒரு புகைப்படம் அந்தக் கடிகாரத்தில் பதிக்கப்பட்டிருந்தது. அதில் கோட் சூட்டுடன் இருந்தான் ரமேஷ். யாவுமே அர்த்தமற்றுப் போன ஒரு சூனியத்தை வெறிப்பது போல் சட்டென்று ஒரு நொடி மனப்பிரம்மை உண்டாகி அகன்றது.

சுற்றிலும் நடப்பவைகளை அவஸ்தையாய் கவனித்துக் கொண்டிருந்ததில் ஜோ அங்கில்லாததை கொஞ்ச நேரம் கழித்துத் தான் கண்டு கொண்டேன். தேடத் துவங்கிய தருணத்தில் வாசலிலிருந்து வந்தார். வரும்போதே கதவில் இடித்துக் கொண்டார். கண்கள் நிலையில்லாமல் அலைந்து என் மீது குத்தி நின்றன. நிறைய வியர்த்திருந்தார்.

என் மேல் பதித்த பார்வையை விலக்காமலே வேகமாக வந்தார். தோளைத் தொட்டு அவரை நிறுத்தி என்னவாயிற்று என்பதாய்ப் பார்த்தேன். “ கொஞ்சம் வெளிய வாஎன்றார். அவர் சொல்வதை மற்றவர்களும் கேட்டு விட, எல்லாரும் மெதுவாக வெளியேறினோம். வெளியே வந்ததும்அம்மாவுக்கு ரொம்ப சீரியசா இருக்காம்டாஎன்றார் ஜோ. சட்டென்று எல்லாருக்கும் புரிந்து போனது.

அவருக்குமே கூடப் புரிந்திருக்கும் என்பது தான் எங்கள் அனுமானமாக இருந்தது. இருந்தும் அந்தச் சூழ்நிலையில் அவர் சீரியஸ் என்ற வார்த்தையையே விரும்புவது புரிந்தது.

ஜோவைத் தனியே அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு காரை எடுத்துக் கொண்டு எட்டுப் பேரில் நாங்கள் நால்வர் மட்டுமே கிளம்பினோம். கிளம்பும் முன் ஒரு முறை ரமேஷைப் பார்க்க வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை நிராகரித்து சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினேன்.

காரில் சிறிது தூரம் கடந்ததும் ஜோவின் பதற்றம் தணிந்து இயல்பு நிலைக்கு வந்திருந்தார். அவரே வண்டியை ஓட்டுகிறேன் என்று கேட்டு வாங்கிக் கொண்டிருந்தார். வரும் போது போலவே பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டும் நடிகர்களைப் பற்றிப் பேசிக் கொண்டுமிருந்தார். அம்மாவைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். அல்லது அது தானாகவும் நிகழ்ந்திருக்கக் கூடும்.

பேச்சின் நடுநடுவே இப்போது ரமேஷ் வந்து போனான். அலுவல் ரீதியாக அவனுடன் நடந்த சம்பாஷணைகளை நினைவு கூர்ந்தார். செல்லும் போது  போலவே இப்போதும் எதிர்த்திசையில் ஒரு தேநீர்க் கடையில் வண்டியை நிறுத்தினோம். “டீ நல்லாருக்குல்ல?” என்றார் ஜோ. எதுவும் பேசாமல் தேநீரைப் பருகியபடி நின்றிருந்தோம்.விடியலுக்குண்டான அறிகுறிகள் தெரியத் துவங்கின.

நீ கொஞ்ச நேரம் ஓட்டுடா என்றார். ஓட்டுனர் இருக்கையில் நான் ஏறிக் கொண்டதும் கிளம்பினோம். இரவு முழுவதும் உறங்காததால் கண்கள் கனத்து எரியத் துவங்கியிருந்தன. தலைப்பாரமாக இருந்தது.ஏதேதோ பேசியபடியிருந்த ஜோ எப்போது எனத் தெரியாமல் கண்ணயர்ந்திருந்தார்.

சட்டென்று காரில் நால்வர் இருந்தும் தன்னந்தனியே இருப்பது போல் தோன்றியது. கழிவிரக்கம் பொங்கியது. குற்ற்வுணர்ச்சியும் கூடச் சேர்ந்து கொள்ள இம்சித்தது. வண்டியைச் செலுத்துவதில் கவன செலுத்த முடியாமல் தடுமாறினேன். முன்னே நிதானமாய்ச் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் மேல் மோதுகிறாற் போல் சென்று கடைசி நொடியில் ப்ரேக்கிட்டு நிறுத்தினேன். குலுக்கலில் கண் விழித்த ஜோ, எதுவும் கேட்காமலே நடந்ததைப் புரிந்து கொண்டார்.

போதும்டா கண்ணா. இட்ஸ் ஓகே. நான் ஓட்டிக்கிறேன் விடு என்றார். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு கதவைத் திறக்கையில் அதிவேகமாகக் கடந்த லாரியின் ஹாரன் அலறலில் விதிர்த்தேன். பின் சுதாரித்து இறங்கி இருக்கைகளை மாற்றிக் கொண்டோம். ஜோ இருக்கும் நிலைமையில் அவரை வண்டியோட்டச் சொல்வதற்கே கூச்சமாக இருந்தது,

பொழுது வேகமாகப் புலரத் துவங்கியிருந்தது. சென்னையின் எல்லைக்குள் நுழைந்ததும் வண்டியின் வேகம் கணிசமாய்க் குறைந்திருந்ததை , அல்லது ஜோ குறைத்திருந்தார். எதற்கோ அவர் சேருமிடம் சேரத் தயங்கி மெதுவே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தது புரிந்தது.

சென்று சேர வேண்டிய நிர்ப்பந்தமும் சூழ்நிலையை எதிர்கொள்ள விரும்பாத அசூயையும் ஒரு சேர வாய்க்கப் பெறுவது வாழ்வின் ஆகச் சிறந்த சாபங்களில் ஒன்று. வீட்டை அடைந்து காரை நிதானமாக அதற்குரிய பார்க்கிங்கில் நிறுத்தி ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றி , பூட்டி விட்டு என்று ஒவ்வொரு செயலையும் படு நிதானமாய்ச் செய்தார் ஜோ..

லிப்ட் வேண்டாம் படிக்கட்டுகளில் ஏறலாம் என்றார் . ஒன்றும் சொல்லாமல் அவர் பின்னே ஏறினோம். வீட்டு வாசலை நெருங்கும் போதே சாமந்திப் பூவின் மணமும் எரிந்து முடித்திருந்த ஊதுபத்தியின் மணமும் சூழ்ந்தது. ஆனால் அதே மணம் நடு நிசியில் கொடுத்த உணர்வுக்கும் அதிகாலையில் தந்த உணர்வுக்கும் ஏதோ இனம் பிரிக்கவியலா வித்தியாசம் இருந்தது. அது விடியலின் வாசனையாய்த்தான் இருக்கக் கூடும்.

குளிர்ப்பெட்டியைப் பார்த்ததும் ஜோ கதறி அழ ஆரம்பித்தார். என்ன செய்வது என்று புரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றேன். சில நிமிஷங்கள் கடந்த பின் அழுகையினூடே ஏற்கனவே அலைபேசியில் கேட்டிருந்த நிகழ்வுகளில் வரிசைக்கிரமத்தைத் தன் தந்தையிடம் கேட்கத் துவங்கினார் ஜோ. “ என்னாச்சு? என்ற கேள்வியிலிருந்து அந்த உரையாடலைத் தொடங்கியிருந்தார்.

என்னாச்சு என்ற வார்த்தையில் அந்த உரையாடல் துவங்கியது எனக்கு உவப்பாயில்லை. வேறு என்ன சொல்லில் அந்த உரையாடல் துவங்கியிருக்க வேண்டும் என்றும் எனக்கு யோசனையேதும் ஏற்படவில்லை. ஒரு வேளை என்னப்பா ஆச்சு என்று கேட்டிருந்தால் நான் திருப்திப் பட்டிருக்கக் கூடும்.

வீட்டின் வெளியே குழந்தைகள் சிரிப்புச் சத்தம் கேட்டது. அந்த நேரத்துக்கு அவர்கள் இருக்குமிடம் எனக்கு மிகுந்த நிம்மதியளிப்ப்தாய் இருக்கக் கூடும் என்று தோன்றியது. மெல்ல நழுவி வெளியேறினேன். பக்கத்தில் காலியாயிருந்த வீட்டை துக்கத்துக்கு வரும் கூட்டத்துக்காக வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அங்கு தான் ஜோவின் பெண்கள் இரண்டு பேரும் ஒடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

மெல்ல அந்த வீட்டில் நுழைந்து நாற்காலியொன்றில் அமர்ந்து கொண்டு குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கத் துவங்கினேன். சிறிது நேரம் வரை என்னைக் கவனிக்காத குழந்தைகள் என்னைப் பார்த்ததும் என்னிடம் ஓடி வந்தன. “ அங்கிள் வரீங்களா மாடிக்குப் போய் வெளாடலாம்என்றது பெரியது. உடனே சின்னதுஆமா அங்கிள். பெரியவங்க இல்லாம மாடிக்கி போகக் கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க. வாங்க அங்கிள்என்றது.

எதுவும் பேசாமல் புன்னகைத்து அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு நடந்தேன். இன்னொரு மாடியைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தோம். காற்றில் லேசாய்க் குளிர் கலந்திருந்தது. தலைப்பாரம் கொஞ்சம் குறைந்தாற் போலிருந்தது. குழந்தைகள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடத் துவங்கினர்.

எங்கிருந்தோ திடீரென்று ஒரு விநோதமான ஓசை கேட்டது. அழுகுரல் போலவும் இருந்தது. ஆனால் இறப்பு வீட்டிலிருந்து வருகிற அழுகை போலில்லை. குழந்தைகள் இருவரும் ஒரு நொடி நின்று நிதானித்து அந்தச் சத்தத்தைக் கேட்டு விட்டு தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தனர். “அவர்களைத் தொந்தரவு செய்யாமல் அருகில் போய்பாப்பா அது என்ன சத்தம்?” என்றேன்.

அவர்களும் விளையாட்டை நிறுத்தாமலே ஓடிக் கொண்டிருந்தார்கள். பெரியவள் தான் பதில் சொன்னாள். “ அதுவா இங்க மூணாவது ப்ளோர்ல இருக்கற ஆண்ட்டிக்கு சோனா பாப்பா பொறந்திருக்கு. அது தான் அழுவுதுஎன்று சொல்லி விட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தனர். எதற்கென்றே தெரியாமல் உடல் சோர்வையும் மீறி மனசில் அமைதி கரைந்து வழிந்து படரத் துவங்கியது.

சட்டென்று பக்கத்தில் ஏதோ ஒரு வீட்டினின்றும் கடுகுத்  தாளிப்பின் மணம் காற்றில் பரவித் தீண்டியது. அப்போது தான் இரவிலிருந்து தேநீரைத் தவிர எதுவுமே சாப்பிடவில்லை என்பது ஞாபகம் வந்தது. கண்கள் மூடி மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். அயர்ந்திருந்த கண்ணிமைகள் ஒன்றையொன்று இறுகப் பற்றிக் கொண்டன.எரிச்சல் குறைந்து இதமாயிருந்தது. வாசனை நுரையீரலை நிறைத்து வாய் வழியே புன்னகையாய் வெளி வந்தது.

மூடியிருந்த கண்களுக்குள்ளும் எழுந்து கொண்டிருந்த மஞ்சள் சூரிய வெளிச்சம் மென்மையாய்ப் பாயத் துவங்கியிருந்தது. கீழே துக்க வீட்டினின்றும் அழுகைச் சத்தம் வலுப்பெற்று ஒலிக்க்த் துவங்கியிருந்தது. யாரேனும் தொலைவிலிருந்து வந்திருக்கக் கூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.