இருமை

Two_Birds_Mirror_Reflection_Look_Outdoors_Sparrows

இருள்மை அல்லது இருண்மை எனும் சொல்லைக் குறிக்க, ‘இருமை’ என்று பயன்படுத்துபவர் உண்டு. ‘Pessimistic’ என்னும் பொருளில், இருள் நோக்குச் சிந்தனை என்று பொருள் படும். எனில் Optimistic என்பதற்கு ஒளி நோக்குச் சிந்தனை என்று சொல்லலாம். அருமை எனும் சொல்லுக்கு எதிர்ப்பதமாக இருமை எனும் சொல்லைப் பயன்படுத்துவார் சிலர். அருமை என்றால் rare, அற்புதம் என்ற பொருளில் ஆள்கிறார்கள். நாஞ்சில் நாட்டில், ‘அவன் எல்லார்ட்டயும் அருமையா இருப்பானே’ என்பார்கள். மிகவும் அன்புடனும் பாசத்துடனும் இருப்பவன் என்ற பொருளில்.
அகராதிகள் அருமை எனும் சொல்லுக்கு அபூர்வம், பெருமை, கடினம், துன்பம், எளிதில் பெற இயலாதது, நுண்மை, இன்மை என்றும் பொருள் தருகின்றன. என்னின் மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அண்ணாச்சி, ஒருவருடைய எழுத்தைப் பாராட்டிச் சொல்ல வேண்டுமானால், “என்னா அருமையா எழுதுகாரு?” என்பார். கம்பன், அயோத்தியா காண்டத்தில், தைலம் ஆட்டுப் படலத்தில், ‘கான்புறம் சேறலில் அருமை காண்டலால்’ என்கிறார். காட்டின் புறத்தே செல்வதால் உண்டாகும் துன்பத்தை நினைத்து என்பது பொருள்.
அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம், சதுரம், மும்மை எனும் எண்கள் பற்றிய கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை இதுவென்பதால், இருமை என்ற சொல்லை இரண்டு என்ற பொருளில் இங்கு ஆள்கிறேனேயன்றி, அருமைக்கு எதிர்ப்பதமாகவோ, இருண்மை எனும் பொருளிலோ நான் ஆளவில்லை. இருமை எனும் சொல்லுக்கு பெருமை, கருமை என்றும் பொருள் இருப்பது உண்மைதான். சீவக சிந்தாமணி, பதுமையார் இலம்பகப் பாடல் ஒன்றில் ‘இரு மலர்க் குவளை உன் கண்’ என்கிறது. இங்கு இரு எனில் கருமை. கருமை நிறமுடைய குவளை மலரின் நிறத்தை உண்ட கண் என்பது பொருள். இன்னொரு பொருள், குவளை மலரின் நிறத்தை உண்ட இரு கண்கள் என்பது.
இருமை என்ற சொல்லின் அடுத்த பொருள் இரண்டு என்பதாகும், ‘நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்துக் குறள்,

‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு’

என்கிறது. இந்தக் குறளை நாம் மும்மை என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையிலும் கையாண்டோம். இங்கு இருமை எனில் நன்மை, தீமை என்ற இருவகை என்கின்றன உரைகள்.

‘உரிமை மைந்தரைப் பெறுகின்றது
உறு துயர் நீங்கி,
இருமையும் பெறற்கு’

என்பது கம்பனின் மந்திரப் படலத்துப் பாடல் வரி. அனைத்து உரிமைகளையும் உடைய மைந்தரை ஒருவர் பெறுவது என்பது, மிக்க துயரத்தில் இருந்தும் விலகி, இம்மை மறுமை எனும் இரண்டு இன்பங்களை அடைவதற்காகும் என்பது பொருள்.
இரு எனும் சொல்லுக்கே பெரிய என்றும், கரிய என்றும் பொருள் சொல்கிறார்கள். இருள், இருட்டு, இருண்ட எனும் சொற்கள் ‘இரு’ எனும் சொல்லின் பிறப்புக்கள் ஆகலாம். பண்புடைமை அதிகாரத்துக் குறள், ‘மாயிரு ஞாலம்’ என்கிறது. மாபெரும் உலகம் என்ற பொருளில்.

‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்’

என்பது முழுப்பாடல். எல்லோரிடமும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்த மாபெரும் உலகமானது பட்டப் பகலிலும் நட்ட நடு இரவாகவே இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். பெரியாழ்வார்,

‘இரு மலை போல எதிர்ந்த மல்லர்
இருவர் அங்கம் எரி செய்தாய்’

என்கிறார். இங்கும் இரு மலை எனில் மாபெரும் மலை என்றே பொருள்.
நாமிங்கு இரு எனும் சொல்லை இரண்டு எனும் பொருளில் முன்னெடுகிறோம். இனி, சில சொற்களைக் காணலாம். பிரம்மனில் தொடங்கலாம் முதற்சொல்லை:
இருக்கன்: பிரம்மன். One who recites Vedha.
ரிக் வேதம்: இருக்கு வேதம் – இருக்கன்
இருக்கால்: இரண்டு. இருகால். இரண்டு தரம்.

‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்’

என்றொரு பாடல், சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் நான் ஆயிரம் முறை கேட்டிருப்பேன்.
இருக்காழி: காழ் எனில் விதை. இருக்காழி எனில் இரண்டு விதைகளை உடைய காய். பனம் பழத்தில் மூன்று, இரண்டு, ஒன்று என விதைகளையுடைய பழங்களைக் காணலாம்.
இருக்கு: இருக்கு வேதம். முதல் வேதம்
இருக்குவேள்: கொடும்பாளூர் சிற்றசர்கள். கல்கியின் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள். பொன்னியின் செல்வன் நாவலில்.
இருக்கை: இருப்பிடம், ஆசனம், ஊர், குடியிருப்பு
இருகண்: ஊனக்கண், ஞானக்கண் எனும் இரண்டு கண்கள். சீவக சிந்தாமணியின் கனகமாலையார் இலம்பகத்துப் பாடல் சொல்கிறது…

‘வினைப் பெருந் தச்சன் நல்லன்
மெய்ம்மை நாம் நோக்கலுற்றால்
எனகுற்றுக் கிடந்த தென்று
அங்கு இருகணும் புதைத்து வைக்கும்’

என்று. படைப்பு வினை ஆற்றும் பெருந்தச்சனாகிய பிரம்மன் நல்லவன். உடம்பின் உண்மைத்தன்மையை நாம் உற்று நோக்குவோம் என்றால், எனக்கு உள்ளே கிடந்தது என்று காணும்படியாக ஞானக் கண்ணையும் ஊனக்கண்ணையும் புதைத்து வைத்திருக்கிறான்.
இந்தச் செய்யுளில் வரும் பெருந்தச்சன் எனும் சொல், மலையாளத்தின் விருது பெற்ற திரைப்படம் ஒன்றின் பெயராக அமைந்திருந்தது நினைவிருக்கலாம்.
இருகரையன்: Double minded person. இரண்டு நோக்கம் உடையவன்
இரு குரங்கின் கை: முசுமுசுக்கை எனும் தாவரம். முசு என்றால் குரங்கு
இரு குறள் நேரிசை வெண்பா: – நேரிசை வெண்பா வகை
இருங்கோ வேள்: வேளிர் தலைவர்களில் ஒருவன். புறநானூற்றில் கபிலர் பாடலாக இருங்கோவேள் குறித்து இரண்டு பாடல்கள் உண்டு.
இருங்கரம்: இரு குறுணி. பதக்கு
இருசகம்: மாதுளை
இருசமய விளக்கம்: சைவ, வைணவ சமயங்களை ஆராயும் நூல்
இருசால்: தண்டல் பணம் செலுத்துதல், கருவூலத்துக்கு அனுப்பும் பணம்
இருசி: Woman destitute of menstruation ருதுவாகும் தன்மை இல்லாத பெண். ஒரு பெண் பேய்க்கு இருசி என்று பெயருண்டு.
இருசுடர்: சந்திரனும் சூரியனுமாகிய இரண்டு சுடர்கள். ‘இரு சுடர் ஞாலத்து’ என்றொரு பாடல் வரி. ஞாலம் எனில் உலகம்.
இரு சுழி: இரட்டைச் சுழி. ‘இரு சுழி இருந்தும் தின்னும், இரந்தும் தின்னும்’ -சொலவம்
இருஞ்சிறை: இருமை, நரகம், நகரம் என்றும் இன்று சொல்லலாம்
இருட்சரன்: இருளில் திரிபவன், அரக்கன்.
இருட்சி: இருட்டு, சொல்லாக்கத்தை உண்ணும் போது,
மருட்சி: மருட்டு, வெருட்சி – வெருட்டு, திரட்சி – திரட்டு, புரட்சி – புரட்டு என்ற சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். புரட்டு எனும்போது புரட்டிப் போடுதல் என்ற நல்ல பொருளில்தான் நானிங்கு        பயன்படுத்துகிறேன்.
இருட்டறை: இருட்டு அறை. வரைவின் மகளிர் அதிகாரத்துக் குறள் பேசுகிறது,

‘பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையுள்
ஏதில் பிணம் தழீஇ அற்று’

இந்தக் குறளின் அளபெடை நயத்தைக் கவனிக்கவும். இன்று விலைமகள், வேசி, தேவடியாள் என்று மலிவாக்கப்பட்ட சொற்களுக்கு, அன்று வள்ளுவம் பயன்படுத்திய சொல் பொருட்பெண்டிர். Sex worker என்பதை விடவும் அருமையான சொல் இது. இருமனப் பெண்டிர் என்பான் கம்பன். பொய்மை எனில் போலி, முயக்கம் எனில் தழுவல், கலவி. பொருட் பெண்டிரின் பொய்மையான முயக்கமானது, இருட்டறையில் முன்பின் அறிந்திராத பெண்ணின் பிணத்தைத் தழுவது போன்றது என்பது குறளின் பொருள்.
இருட்டு: இருள், அறியாமை
இருட்டுதல்:  இருட்டு, இருளடைதல், வானம் மப்பும் மந்தாரமுமாக இருத்தல்.
இருட்பகை: சூரியன். ‘இருட்பகை மண்டிலம்’ என்கிறது சூரிய மண்டலத்தைக் கல்லாடம்.
இருட்படலம்: இருட்தொகுதி
இருட்பூ: ஒருவகை மரம்.
இருடி: இருள், ஆந்தை, முனிவன், ரிஷி -இருஷி-இருடி என்பது
தொல்காப்பியத்தின் தற்பவம் இலக்கணப்படி தமிழாதல். ‘எயினர் தங்கும் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த’ என்பார் கம்பர். எயினர் – வேடர், ஏய்ந்த – ஒத்தன
இருடீகேசன்: திருமால்
இருண்டி: சண்பகம்
இருண்மதி: இருள் + மதி = இருண்மதி. கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அமாவாசை, New Moon
‘குணமுதல் தோன்றிய ஆரிருண் மதியின் தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம்’ என்கிறது மதுரைக் காஞ்சி. தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை, மாங்குடி மருதன் பாடியது.
குணம் = கிழக்கு, ஆரிருண் மதி = ஆர்+இருள்+மதி, அதாவது அம்மாசி எனப்படும் அமாவாசை. தெவ்வர்  – பகைவர். [என் ஐ முன் நில்லன்மின் தெவ்வர் பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் – குறள்]
ஆக்கம் = செல்வம். செல்வம் என்றால் பொன், பொருள் என்று மட்டும் பொருள் இல்லை. பாடலின் பொருள், ‘உனது பகைவரது செல்வம், கிழக்கே தோன்றும் இருள் மதி போன்று தேய்பிறையாகி அழிக’ என்பது
இருண் மலம்: ஆணவ மலம்
இருண்மை: இருண்டிருக்கும் தன்மை
இருணம்: உவர் நிலம், கடன்
இருணாள்: இருள் நாள், கிருஷ்ண பட்சத்து நாள்
இருணிலம்: இருள் நிலம், நரகம்
இருத்தல்: முல்லைத் திணையின் உரிப்பொருள். தலைவரைப் பிரிந்து வாழ்தல்.
இருத்தி: ‘இருப்பாயாக’ என்று வாழ்த்தும் சொல். ‘சிரஞ்சீவி பவ’ என்று சொல்வதை ஒத்தது.
இருத்திப் பேசுதல்: அழுத்திச் சொல்லுதல்.
இருத்திப் போடுதல்: நிலைக்கச் செய்தல். அசையாமல் செய்தல். தன்கீழ் பணிபுரியும் ஒருவரை முன்னேற விடாமல் தடுத்தல்.
இருத்தினன்: Priest who officiates at a Sacrifice
இருத்துதல்: உட்காரச் செய்தல். தாமதிக்கச் செய்தல். அழுத்துதல், அடித்து இறுக்குதல், நிலைபெறச் செய்தல், கீழிறக்குதல்.
இருத்து: வைரத்தின் குற்றங்களில் ஒன்று
இருத்தை: சேங்கொட்டை மரம்
இருதலை: இருமுனைகள், இரு பக்கங்கள், மறுதலை என்றால் மறுபக்கம்,  Inverse, ஒருதலை எனில் ஒருபக்கம் மட்டுமே சார்ந்திருப்பது. One sided.

‘ஒரு தலையான் இன்னாது காமம் காப்போல
இரு தலையானும் இனிது’

என்பது திருக்குறள். ஒருதலைப் பட்சமான காமம் துன்பமானது. காவடி போல இரண்டு உள்ளங்களும் காமம் நிறைந்திருப்பதே இனிது என்பது பொருள். இங்கு காமம் என்பது காதலுக்கு ஆதிச் சொல்.
இருதலைக் கபடம்: விலாங்கு மீன்
இருதலைக் கொள்ளி: இருமுனைகளிலும் நெருப்புள்ள கட்டை. ‘இருதலைக் கொள்ளி எறும்புபோல்’ என்பது தமிழில் பல்லாயிரம் முறை கையாளப்பட்ட உவமை. முத்தொள்ளாயிரத்தில் அருமையான காதல் பாட்டு ஒன்று, வெண்பாவில் அமைந்தது.

‘நாண் ஒருபால் வாங்க, நலன் ஒருபால் உள்நெகிழ்ப்பக்
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற – யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேரும் என் நெஞ்சு’

‘நாணொரு பால்’ என்பதை நான் ‘நாண் ஒரு பால்’ என்று பிரித்துத் தந்தேன். பாடலின் பொருளானது :
‘ஒரு பக்கம் நாணம் என்னைத் தடுக்கிறது. ஊடல் நீங்கினால் வரப்போகும் நலனைக் கருதினால் மனதை அது இளக்குகிறது. அழகிய தோள்களை உடைய சோழன் காரணமாக உறக்கம் வராமல் என் கண்கள் துன்புறுகின்றன. இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போல என் நெஞ்சு அங்கும் இங்குமாகப் பரிதவிக்கின்றது. நான் என்ன செய்வேன்!
நீத்தல் விண்ணப்பத்தில், மாணிக்க வாசகர்,

இருதலைக் கொள்ளியினுள் எறும்பு
ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேன்’

என்கிறார். விரிதலை என்றால் பிரிந்து அங்குமிங்குமாகத் திரிந்த அலைச்சலால் சிதறிய தலைமயிர் என்று பொருள்.
இருதலை நோய்: கடுமையான தலைவலி
இருதலைப் புடையன்: சின்னத் தலையுடன் கூடிய குருட்டுப் பாம்பு வகை.
இருதலைப் புள்: இரண்டு தலைகளுடைய பறவை. புராணக் கதாபாத்திரமாக இருக்கலாம்.
இருதலை மணியம்: நண்பன் போல் நடித்து இருவருக்குள் கலகம் செய்பவன். கோள் சொல்பவன். கோள் மூட்டுதலுக்கு மற்றுமோர் சொல் ‘குறளை’ என்பதாம். ‘தீக்குறளை சென்று ஓதோம்’ என்பார் ஆண்டாள், திருப்பாவையில். தீக்குறளை என்பதைத் திருக்குறள் என்று மூடத்தனமாகப் பொருள் கொண்டு ஆண்டாளை வைது கொண்டிருந்தார் இங்கு ஒரு சாரார்.
இருதலை மணியன்: இரண்டு பக்கமும் தலை இருப்பது போலத் தோற்றம் தரும் ஒருவகைத் தாமிர நிற மண்ணுள்ளிப் பாம்பு.
இருதலை மாணிக்கம்: சைவ மந்திரம். தொடக்கத்தில் இருந்து அல்லது முடிவில் இருந்து வாசித்தாலும் ஒன்று போல் ஒலித்து, பொருளும் மாறாத சொல். எடுத்துக்காட்டு, ‘சிவாயவாசி’.
இருதலை விரியன்: நான்கடி வரை நீளமுள்ள பாம்பு வகை.
பாம்பாட்டிகள், வாலைத் திருத்தி, தலைபோல் செய்து வித்தை காட்டுவார்கள். மண்ணுள்ளிப் பாம்பு இனம். ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்று எனது முதல் கவிதைத் தொகுப்பின் தலைப்பு (2001).
இரு திணை: உயர்திணை, அஃறிணை என்பன.
தொல்காப்பியத்தின் சொல்லதிகார கிளவியாக்கம் நூற்பா,

‘உயர் திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல பிறவே’ என்கிறது. மேலும்,
‘ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம்முப்பால் சொல் உயர் திணை அவ்வே!’

என்கிறது. ஆடூஉ – ஆண், மகடூஉ- பெண், பல்லோர் – பலர், என முப்பால் சொற்கள் உயர்திணைச் சொற்கள்.
இருது:  ருது. இருமாதப் பருவம். மகளிர் பூப்பூ. முதற் பூப்பு. Season of two months.
இருது காலம்: மாதவிடாய்க் காலம். கருத்தரிக்கும் காலம்.
இருது சங்கமனம்: இருது காலத்தில் நாயகன், நாயகியை முதன்முதலாகக் கூடுவதற்குச் செய்யும் சடங்கு.
இருது சந்தி: Junction of two Seasons. இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம்.
இருது சாந்தி: சாந்திக் கல்யாணம்
இருது நுகர்வு: பருவங்களுக்கு உரிய அனுபவம்.
இருதுப் பெருக்கி: ருதுப் பெருக்கி. சூதகம் வெளியேற்றும் மருந்து. Medicine which promotes menstrual discharge.
இருதுமதி: Girl who attained puberty. Woman during her periods; Woman after her periods, being then in a condition favorable for conception
இருதுவலி: பூப்புக்கால வலி. Painful menstruation.
இருதுவாதல்: பூப்படைதல், to attain Puberty
இருது ஸ்நானம்: முதற் பூப்பில் நடத்தும் நீராட்டச் சடங்கு.
இருந்த திருக்கோலம்: திருமாலின் அமர்ந்த கோலம்.
இருந்து: ஐந்தாம் வேற்றுமைச் சொல் உருபு.
இருந்தையூர்: மதுரையின் திருமால் தலம்.
இரு நிதிக் கிழவன்: சங்க நிதி, பதும நிதி என்னும் இரண்டு நிதிகளுக்கு அதிபதி. குபேரன்.
இருநிலம்: பூமி
இரு நினைவு: இரு மனது. அலைபாயும் மனது. Double mindedness
இரு நூறு: Two Hundred
இருப்பவல்: ஒரு மருந்துப் பூண்டு வகை.
இருபத்து நாலாயிரப் படி: நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை.
இருபது: இரண்டு பத்து.
இருபன்னியம்: இருத்தை. சேங்கொட்டை. வண்ணார் வெளுக்கும் துணிகளில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனிக் குறியிடப்பயன்படுத்தும் கொட்டை.
இருபா இருபஃது: வெண்பாவும் அகவற்பாவும் மாறி மாறி வரும் பிரபந்த வகை. மெய்கண்ட சாத்திரத்தில் ஒன்று.
இருபான்: இருபது
இரு பிறப்பாளன்: பிராமணன்
இரு பிறப்பு:  பிராமணனின் இரு பிறப்புகள்
இரு பிறவி: இரு சாதி சேர்ந்து பிறக்கும் பிராணி இனம்.
இருபுடை மெய்க்காட்டு: ஒன்றே இருவேறு வகையாகத் தோற்றுவது.
இருபுரியாதல்: இரண்டு கயிறுகளை ஒன்றாகத் திரித்தல்
இருபுனல்: தேங்கும் நீரும், ஓடும் நீரும் இருபுனல் எனப்படும்.

‘இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு’

என்பது நாடு அதிகாரத்துக் குறள். இருபுனலும் உயர்ந்த மலையும் பொழியும் மழையும் வலிமையான அரண்களும் நாட்டின் உறுப்புகள் என்பது பொருள்.
இரு புலன்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, பெருவாயின் முள்ளியார் இயற்றிய, தற்சிறப்புப் பாயிரம் உட்பட 101 வெண்பாக்கள் கொண்ட, ஆசாரக் கோவை, இருபுலன் எனும் சொல் பயன்படுத்துகிறது. இரு புலன் என்பதற்கு மலமும் சிறுநீரும் என்று உரை எழுதுகிறார்கள்.
இரு புலன் எனும் சொல் ஆளும் பாடல் சுவையானது.

‘புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன்நிலை, வெண்பலி, என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர் வுடையார்’

புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாட்டுக் குழி, வழி, தீர்த்தம், தேவாலயம், நிழல், பசு மந்தை நிற்கும் இடம், சாம்பல் எனும் பத்துப் பொருட்கள் அல்லது இடங்களில் உமிழ் நீர் துப்ப மாட்டார்கள், மலம் சிறுநீர் கழிக்க மாட்டார்கள் உணர்வுடையவர்கள் என்பது பொருள். அடுத்த பாடலிலேயே பகல் பொழுதில் தெற்கு நோக்கியும் இராப்பொழுதில் வடக்கு நோக்கியும் இருந்து மலசலம் விடுத்தல் ஆகாது என்கிறார். பாவம் அடுக்ககங்களில் வாழ்வோர் என்ன செய்வார்கள்?
இருபுறவசை: வசை போன்ற வாழ்த்து. நிந்தைத் துதி. எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல். யாத்த புலவரை எவரும் அறியார். மீனாட்சி அம்மை மீது நிந்தாஸ்துதி.

‘மாப்பிட்டு எனும் சிறு தூள் பிட்டுக்காக மண்ணைச் சுமந்தே
ஆப்பிட்டுக் கொண்டு அடிபட்ட சொக்கேசருக்கு ஆசைப்பட்டுச்
சேப்பிட்டு மையிட்டு பூமாலை கந்தம் நிமிர்ந்து மஞ்சள்
காப்பிட்டு வாழ்க்கைப் பட்டாள் கூடல்வாழும் கயற்கண்ணியே !’

மாப்பிட்டு என்னும் உதிர்ந்த பிட்டுக்காக மண்சுமந்து, அகப்பட்டு, அடிவாங்கிய சொக்கேசருக்கு ஆசைப்பட்டு, சிவந்த திலகமிட்டு, கண் மையிட்டு, வாசம் நிறைந்த மஞ்சள் காப்பிட்டு வாழ்க்கைப் பட்டாள் நான்மாடக் கூடல் நகரில் வாழும் அங்கயற்கண்ணியே ! – பொருள்.
இருபுற வாழ்த்து: வாழ்த்துப் போன்ற வசை. எடுத்துக்காட்டுச் செய்யுள் தேடிக்கொண்டிருக்கிறேன். தெரிந்தால் கூறுங்கள்.
இரு பூ: இரு போகம். நாஞ்சில் நாட்டில் கன்னிப் பூ, கும்பப் பூ என்பர்.
இரு பூலை: பூலா எனும் சிறு தாவரம். எனக்கு பூலாத்தி என்றொரு சிறு தாவரம் தெரியும். இரண்டும் ஒன்றா என்று தெரியாது.
இரு பெயரொட்டு ஆகுபெயர்: ஆகுபெயர் வகை. மேல் விபரம், தமிழறிந்த தமிழாசிரியரிடம் கேட்கலாம்.
இரு பெயரொட்டு: மார்கழி ஆகிய திங்களை மார்கழித் திங்கள் என்று குறிப்பிடுவது இருபெயரொட்டு. அஃதே போல் தமிழ் ஆகிய மொழி என்பதைத் தமிழ்மொழி என்பது, வீட்டுப் பாடமாக மேலும் சில இருபெயரொட்டுகளை அறிய முயலலாம்.
இருபொருள்: கல்வியும் செல்வமும்
இருபோது: காலையும் மாலையும் இருமடி ஆகுபெயர்    -ஒரு ஆகுபெயர் வகை. சாமி சத்தியமாக எனக்குத் தெரியாது.
இரு மண்: ஒரு வகை மண்
இரு மரபு: தாய்வழி மற்றும் தந்தை வழி. ‘இரு வழியும் தூய வந்த என்பார் மூத்த தமிழ் எழுத்தாளர் ஈழத்து எஸ்.பொ.
இரு மருந்து: சோறும் தண்ணீரும்.
புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்’ என்கிறார். புலவர் கோவூர் கிழார். ‘தேஎம் தீம்தொடைச் சீற்யாழ்ப்பாண!’ என்று தொடங்கும் பாடலில், அவனுடைய வயநகர், அடு தீ அல்லது சுடுதீ அறியாது‘ என்கிறார். உணவை ஆருயிர் மருந்து என்கிறார் மணிமேகலை ஆசிரியர்.
இரு மனம்: வஞ்சகம்.

‘இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு’

என்பது வரைவின் மகளிர் அதிகாரத்துக் குறள்.
‘இரு மனப் பெண்டிரும் கள்ளுண்டு கவறாடும் இறை முறை பிழைத்த அரசும்’ என்பான் கம்பன்.
இருமா: ஒரு பின்னம். பத்தில் ஒன்று. 1/10.
இருமா வரை: ஒரு பின்னம். பத்தில் ஒன்றும் நாற்பதில் ஒன்றும், அதாவது 5/40. அது 1/8, அரைக்கால்.
இருமான்: எலி வகை
இரு முது குரவர்: தாய் தந்தையர்.
இரு முற்று இரட்டை: செய்யுளில் ஓரடி முற்று எதுகையாய், மற்றை அடி மற்றொரு முற்று எதுகையாய் வருவது.
இரு மூடம்: தானாகவும் அறியாது, பிறர் அறிவிக்கவும் அறியாத மூடர். ‘தன்னாலும் தெரியாது, சொன்னாலும் தெரியாது’ – சொலவம்.
இரு மோட்டு வீடு: மச்சும் அதன்மேல் கூரையும் உள்ள வீடு.
இருவணக் கட்டை: வண்டியின் முகவணை.
இருவாட்சி: ஒரு பறவை. ஒரு சிறு தாவரம்.
இருவாட்டித் தரை: மணலும் களியுமான நிலம்.
இருவாடி: இருவாட்சி
இருவாம்: நாம் இருவரும்.
இருவாய்க் குருவி: ஒரு வகை மலைப் பறவை
இரு வாய்ச்சி: இரு வாட்சி
இருவாரம்: மேல் வாரமும் குடி வாரமும். Two shares.
இரு வினை: நல்வினை. தீவினை.

‘இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு’

என்பது இறைவணக்கம்  அதிகாரத்துக் குறள். இறைவனுடைய மெய்யான புகழை உணர்ந்து அறிந்தாரை நல்வினையும் தீவினையும் நண்ண மாட்டா.
இரு வேலி: வெட்டி வேர்
இருளி: பன்றி. கறுப்புப் பன்றியாக இருக்கலாம்.
இருளுலகம்: நரகம்
இருளுவா: இருண்ட வாவு. மலையாளம், முழுமதியை வெளுத்த வாவு என்னும்.
இரட்டுதல்: இரட்டித்தல்.
இரட்டிப்பு: இருமடங்கு, இரட்டி
இரட்டித்துச் சொல்லுதல்: To repeat
இரட்டு: இரட்டைக் கிளவி. ‘பாம்பு, பாம்பு’ என்பது.
இரட்டுறக் காண்டல்: Hypothetical Knowledge. Indistinct perception. ஐயக்காட்சி.
‘திரியக் காண்டலும் இரட்டுறக் காண்டலும் தெளியக் காண்டலும் எனக் காட்சி மூவகைப் படும்’ என்பர்.
இரட்டுற மொழிதல்: Making intentionally a statement capable of being interpreted in two ways. ஓர் மொழிதல் உத்தி.
இரட்டுறல்: சிலேடை
இரட்டுறுதல்: இரு பொருள் படுதல். ஐயுறுதல். மாறுபடுதல்.
இரட்டை: Pair. தம்பதிகள். Twins. இரண்டு ஒன்றானது. Even Numbers. மிதுனம். ஆனிமாதம்.
இரட்டைக் கத்தி: இரண்டு அலகுள்ள கத்தி
இரட்டைக் கதவு: இரு பிரிவாக உள்ள கதவு.
இரட்டைத் தூண்: பக்கம் பக்கமாக இரண்டு கற்களால் அல்லது மரங்களால் ஆகிய தூண்.
இரட்டைக் கிளவி: இரட்டையாக நின்றால் மட்டுமே பொருள் தரும் தொடர். சுறுசுறுப்பு, புறுபுறுப்பு, பரபரப்பு…..
இரட்டைக் குண்டு அட்டிகை: கழுத்து அணிவகை.
இரட்டைக் கை: Gesture with both hands
இரட்டைக் கொடி அடுப்பு: அடுப்பு வகை. தீ போட மத்தியில் அடுப்பு இருக்கும். அந்த அடுப்பின் இருவசமும் தொடராகச் சிறிய அடுப்புகள் இருப்பது.
இரட்டைச் சிரட்டை: இரட்டைக் கொட்டாங்கச்சி
இரட்டைச் சுழி:  இரு சுழி. ஐகார ஒலியைக் குறிக்கும். ‘ை ‘ எனும் குறி.
இரட்டைத் தவிசு: இருவர் அமர்வதற்கான ஒரே ஆசனம். இன்றைய நீள சோபா போல.
இரட்டை நாக பந்தம்: சித்திரக் கவி வகை
இரட்டைத் தொடை: ஒரு சொல்லே ஒரு அடி முழுவதும் வருவதாகத் தொடுப்பது.
இரட்டை நாடி: பாரிய உடல்
இரட்டைப் படை: இரட்டிப்பு. Even Numbers. ஒற்றைப் படை எனில் Odd numbers.
இரட்டைப் பாக்கு: இரு கண்ணுள்ள பாக்கு
இரட்டைப் பிள்ளை: Twins. ஒரே கர்ப்பத்தில் இருந்து, தனித்தனியாக, ஒரே சமயத்தில் பிறந்த இருவர். இரட்டையாகக் கிளைக்கும் தென்னை, பனை, கமுகு ஈந்து.
இரட்டைப் பூட்டு: இருமுறை திருப்பும் பூட்டு.
இரட்டைத் தாழ்: கதவின் மேல் பக்கம் ஒரு தாழ்ப்பாள். கீழ்ப்பக்கம் ஒரு தாழ்ப்பாள் என இரண்டு. ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்றொரு கதை உண்டு.
இரட்டை மணிமாலை: 96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. முதலில் வெண்பா பிறகு கட்டளைக் கலித்துறை என்று அந்தாதித் தொடையில் அமைந்த 20 பாடல்கள்.
இரட்டையர்: Twins. நகுல சகாதேவர். 15ம் நூற்றாண்டில் சேர்ந்தே வாழ்ந்த இரு புலவர்கள். ஒருவர் முடவர், மற்றவர் குருடர். இரட்டைப் பிள்ளைகளாக இளஞ்சூரியர், முது சூரியர் என வேறு இரு புலவர்களும் வாழ்ந்திருந்தனர்.
குருடரும் முடவருமான புலவர்களில், குருடர் சுமக்க, முடவர் தோள் மீதிருந்து வழி சொல்ல நடந்து, பாடல்பாடி, உணவு தேடி வாழ்ந்தவர்கள். செங்குந்த இனத்தில் பிறந்தவர்கள் என்றும் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்றும் அறிஞர் கூறுவர். கலம்பகத்துக்கு இரட்டையர்கள் என்பார்கள். திருவாமாத்தூர் கலம்பகம், தில்லைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம் என்பன இவர்கள் இயற்றிய நூல்களாம். பல பட்டடைச் சொக்கநாதர் இயற்றிய பாடல் ஒன்று இரட்டையர் சிறப்பை மெய்ப்பிக்கும். பாடல் கீழ் வருமாறு. பொருள் சொல்ல அவசியமற்ற பாடல்.

‘வெண்பாவில்  புகழேந்தி, பரணிக்கோர்
சயங்கொண்டான், விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர் கம்பன், கோவை உலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்,
கண்பாயக் கலம்பகத்திற்கு இரட்டையர்கள்,
வசை பாடக் காளமேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காசு அலால்
ஒருவர் பகர ஒணாதே!’

இரட்டையர்களில், வெண்பாவின் முதல் ஈரடி ஒருவர் எடுக்க, இரண்டாம் ஈரடிகள் மற்றவர் பாடி முடிப்பாராம். எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடல். முதலாமவர் எடுக்கிறார், திருவாங்கூர்ச் சிவபெருமானை வணங்கி –

‘தேங்கு புகழ் ஆங்கூர்ச் சிவனே! அல்லாளியப்பா !
நாங்கள் பசித்திருக்க ஞாயமோ?’

என்று.
மற்றவர் முடிக்கிறார்,

‘-  போம் காணும்
கூறு சங்கு, தோல் முரசு, கொட்டோசை அல்லால்
சோறு கண்ட மூளி யார் சொல்? ‘

சிவபெருமானுக்கே முழங்கும் சங்கொலியும் தோல்முரசின் ஒலியும் கொட்டின் ஓசையும் அல்லால் சோற்றுக்கு வழியில்லை. நமக்கு எங்கே, எவர் ஈயப் போகிறார்கள் என்று பொருள்.
இரட்டை விருத்தம்:    –    பதினோரு சீர்க்கு மேற்பட்ட சீர்களால் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இரண்டகம்: துரோகம். ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம்
நினையாதே: சொலவம்.
இரண்டறக் கலத்தல்: ஒன்றாதல் முக்தி அடைதல்.
இரண்டாகுதல்: இரு துண்டுகளாதல்.
இரண்டாம் கட்டு: வீட்டின் இரண்டாம் பகுதி.
இரண்டாட்டுதல்: இரு நெறிப் படுதல். To be double minded.
இரண்டாந்தரம்: இரண்டாவது கல்யாணம். இடைவேளை உணவு. Secondary.
இரண்டா நிலம்: மேன்மாடம்.
இரண்டாம் பட்சம்: Secondary, உறுதி இல்லாதது.
இரண்டாம் பாட்டன்: பாட்டனின் தந்தை. எனில் முப்பாட்டன் அவர் தந்தையாக இருத்தல் வேண்டும்.
இரண்டாம் போகம்: மனைவியை ஒரே இரவில் இரண்டாந்தரம் புணர்வது அல்ல. இரண்டாம் பூ. Second Crop.
இரண்டாம் வேளை: Second meal during the day. பலருக்கு மூன்றாம் வேளையும் உண்டு. சிலருக்கோ ஒருவேளையே திண்டாட்டம்.
இரண்டில் மூன்றில்: இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை.
இரண்டு: இரண்டு என்ற எண்: ‘2’. Two.
‘எட்டினோடு இரண்டும் அறியேனையே’ என்கிறார் மாணிக்க வாசகர். எட்டு என்ற எண்ணின் தமிழ் வரிவடிவம் ‘அ’. இரண்டு என்ற எண்ணின் தமிழ் வரிவடிவம் ‘உ’. அகரம் சிவன், உகரம் சக்தி. ‘சிவனையும் சக்தியையும் அறியேன் நான்’ என்பது பொருள். ‘எட்டும் இரண்டும் அறியாதவன்’ என்றொரு பழமொழி உண்டு.
இரண்டுக்குப் போதல்: மலம் கழித்தல்
இரண்டுக்குற்றது: இதுவோ அதுவோ என்ற நிலை.
இரண்டுங் கெட்ட நேரம்: பகலும் இரவும் இல்லாத இடைப்பட்ட நேரம். அந்திப் பொழுது. சந்திப் பொழுது.
இரண்டுங் கெட்டான்: நன்மை தீமை அறியாதவன். ஒரு வழிக்கும் வராதவன்.
இரண்டு நினைத்தல்: துரோகம் நினைத்தல்
இரண்டு படுதல்: பிரிவு, பிளவு படுதல், ‘ஊர் ரெண்டு பட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ பழமொழி. சாதிப் பிளவு இருந்தால் அரசியல்வாதிக்கும், முற்போக்குக் கட்டுரை எழுதுபவருக்கும் கொண்டாட்டம்
இரண்டு எட்டில்: சீக்கிரத்தில்
இரண்டொன்று: சில
இரட்டையில் ஒற்றை: இரட்டைப் பிள்ளைகளில் ஒருவர். இரண்டு என்னும் எண், ‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு மாமா’ என்று கதாநாயகி நெஞ்சை நிமிர்த்திக் காட்டி நிற்பதல்ல. தேர்வு முடிவுகள் வரும்போது, விளையாட்டின் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும்போது, இரண்டு விரல்களை நீட்டி ஒன்றைத் தொடச் சொல்வார்கள் மாணவர். ‘ரெண்டுல ஒண்ணு பாத்திரலாம்’ என்றால் ‘ஒண்ணுல அப்பிடி, இல்லாட்டா இப்பிடி’ என்று பொருள். அல்லது ஆகும் அல்லது போகும். மலையாளத்தில் ‘ரெண்டும் கல்ப்பிச்சே எறங்ஙி’ என்பார்கள். அதாவது ஒன்றில் வாழ்வு அல்லது சாவு.
சபரிமலை சாஸ்தா தரிசனத்துக்கு 41 நாள் விரதம் இருந்து, பெருவழிப்பாதையில் நடந்து, எரிமேலியில் பேட்டை துள்ளி, கரிமலை ஏற்றம் நடந்து, பதினெட்டுப் படிகள் சமுண்டி ஏறுகிறவர்கள் தலையில் சுமந்து போகும் கட்டு, இருமுடி. அந்தக் கட்டின் ஒரு முடிச்சினுள் சொந்த சாப்பாட்டுக்கான பொருட்களும், இன்னொரு முடிச்சினுள் சாமிக்குச் சேரவேண்டிய அரிசி, சர்க்கரை, நெய்த்தேங்காய், சூடம், சாம்பிராணி போன்றவையும் இருக்கும்.
‘இரண்டாட்டில் ஊட்டிய குட்டி’ என்றொரு சொலவம் உண்டு. சொந்தத் தாயாட்டிலும் குட்டி செத்துப்போன மற்றொரு தாயாட்டிலும் மாற்றி மாற்றிப் பால் குடித்துக் கொழுக்கும் ஆட்டுக்குட்டி. கொழுப்பான சிறுவர்களைக் கேலி செய்யப் பயன்படுத்தும் பழமொழி. அரசியல் ஆதரவும் சினிமா ஆதரவும் கொண்டவர்களைச் சொல்லலாம் இன்று.
இரண்டு என்பதோர் சமநிலைப்படுத்துதல். இரட்டைக் காளை வண்டி, இரண்டு எருது பூட்டிய ஏர், கமலை, செக்கு. ஆண்பெண் என சகல உயிரினங்களிலும் ஆண் பெண் இணை இரண்டுதான். இணையாக இருக்கும் அதே வேளையில் தனித்தனியானவையும் ஆகும். ஆண், பெண் என்போரை இருபாலர் என்கிறோம். இவ்வுலகத்தின் தன்மையே இரண்டு வகையானது. திருக்குறள் சொல்கிறது,

‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதல் வேறு’

என்று. உலகத்தின் இயற்கை இரண்டு வகையானது. செல்வம் என்பது ஒன்று, தெளிவு என்பது மற்றொன்று.
இருபால் இணையை மிதுனம் என்கிறது வடமொழி. அதாவது மிதுன். அஃதோர் ராசியின் பெயரும் கூட. மிதுனம் எனில் இரட்டை என்று பொருள் தருகிறது பேரகராதி. இணை பிரியாததும் இசையில் வல்லமை உடையன என்று கருதப்படும் பறவை இனத்தை மிதுனம் என்கிறது பிங்கல நிகண்டு. கலவி, இனச் சேர்க்கை, புணர்ச்சி, உடலுறவு, முயக்கம் எனும் நல்ல தமிழ்ச் சொற்களுக்கு மாற்றுச் சொல் மிதுனம். அதாவது ஆணும் பெண்ணும் பாலியல் உறவுக்கு இணைதல். Sex வைத்துக் கொள்வது என்கிறார்கள் கற்றோர். டொக்கு வைப்பது, மேட்டர் போடுவது என்னும் தமிழ் சினிமா.
Mercury அல்லது புதன் எனும் கோளை மிதுனன் என்றனர். மிதுன் சக்கரவர்த்தி என்ற வங்காளத்தைச் சேர்ந்த இந்தி நடிகரின் முகம் உங்கள் நினைவுக்கு வரலாம். மைதுனம் என்னும் சொல்லுக்கும் புணர்ச்சி என்று பொருள் தருகிறது பிங்கலம். அதாவது Copulation, Sexual Union. மிதுனம் எனும் சொல்லில் பிறப்பாக இருக்கலாம் மைதுனம். மைதுனத்துக்கு விவாகம் என்று பொருள் சொல்கிறது யாழ்ப்பாண அகராதி. மைதுனம் எனும் சொல்லில் இருந்துதான் சுயமைதுனம் எனும் சொல்லைக் கண்டோம். அது Masturbation எனும் ஆங்கிலச் சொல்லுக்கு மாற்று.
இரு நோக்கு என்றொரு சொல்லைக் காண்கிறோம். திருக்குறளில் ஒரேயொரு இடத்தில். குறள் எண் 1091. இன்பத்துப் பாலில் குறிப்பறிதல் அதிகாரம்.

‘இரு நோக்கு இவளின் கண் உள்ளது ; ஒரு நோக்கு
நோய், நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’

பொருள் விளங்க வேண்டும் என்பதற்காகவே சொல் பிரித்து, Punctuation போட்டு எழுதியுள்ளேன். என்றாலும் மனது பொறுக்கவில்லை. அத்தனை நயம் மிக்க திருக்குறள் இது. மையுண்ட இவள் வேல் போன்ற, வாள் போன்ற, மீன்போன்ற கண்களுக்கு இரண்டு நோக்குகள் உண்டு. ஒரு நோக்கு காதல் அல்லது காம நோய் செய்யும். மற்றொரு நோக்கு அந்நோய்க்கு மருந்தும் ஆகும். ஒரு பாடல் காலம் கடந்து வாழ்வதற்கு இந்தச் செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு. மையுண்ட கண்கொண்ட பெண்களுக்கு என்றில்லை, பொய்யுண்ட கண்கொண்ட அருள் விற்பனை செய்யும் சாமியார்களுக்கும் இரு நோக்கு உண்டு. செல்வந்தர்களுக்கு என்று பொன்னோக்கு. அற்ப மானிடர்க்கு என்று புண்ணோக்கு.
மைதுனம் பற்றிப் பகர்ந்தபின், காமத்துப் பாலின் இன்னொரு குறள் சொல்லாமல் கட்டுரையை முடிப்பதா என இருமனதாக இருக்கிறது. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறள், காதலர் இருவர் சம்மந்தப்பட்ட குறள் அது. காதலன் என்ற சொல்லுக்கு பகரமாக நீங்கள் தோழன் – தோழி, தலைவன் -தலைவி, நாயகன் – நாயகி, கணவன் – மனைவி, Partner, Pair, Mate, சேர்ந்து வாழ்பவர் என்று எதையும் பொருத்திக் கொள்ளலாம்.

‘வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு’

எப்போதுமே அளபெடை பயன்படுத்தப்படும் திருக்குறள் உச்ச பட்சக் கவித்துவத்துடன் இருக்கும். வளி என்றால் காற்று. போழப்படா என்றால் புக முடியாத, முயக்கு என்றால் மைதுனம். காமத்தில் வீழ்ந்த இருவருக்கு, வளி இடை போழப் படா முயக்கு இனிதே. காற்றுக்கூட இடை புகமுடியாதபடி உடல்களின் நெருக்கம் கொண்ட கலவி இனிது. யாருக்கு அந்தக் கலவி இனிது? காதலில் வீழ்ந்த இருவருக்கு இனியது. காதலில் வீழ்ந்த நாயகி – நாயகன் இருவருக்கும் நுண்ணிய மெலிய தென்றல் காற்றுக்கூட இடையே நுழைய முடியாத அளவிலான இறுக்கமான உடற்சேர்க்கை மிக இனிமையானது. அப்போது அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். அந்தக் கலவி நிலை இருமையல்ல, ஒருமை.
ஒருமை என்பதை வேறொரு கட்டுரையில் காண்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.