நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்

gnanakoothan300

கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். அவரது மறைவு தமிழ் கவிதை உலகுக்குக் கணிசமானதோர் இழப்பு. 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர்.
60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை திட்ட வட்டமாக மரபுப் பார்வையை உதறி சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி.
தனது 20களிலேயே அப்படி ஒரு தாக்கத்தைத் தமிழ் கவிதைகளில் நிகழ்த்திய ஞானக் கூத்தன் ஒரு பேட்டியில் தான் 20 வயதிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டதாகச் சொல்லி இருக்கிறார். 78 வயதில் இறந்திருக்கிற ஞானக் கூத்தனின் கடைசி ஆண்டுகளின் குரலில் அவரது 20 வயதுகளில் இருந்த குரலே ஒலிக்கிறதா என்றால் அனேகமாக அப்படித்தான் என்று நாம் சொல்ல முடியும். எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கையுணர்வு அன்றிலிருந்து தொடர்கிறது.
அதற்கொரு சான்றாக இந்த இதழில் 2010 ஆம் ஆண்டு இருவாட்சி ஆண்டு மலரில் பிரசுரமான அவரது கட்டுரை ஒன்றை (ரூபம் பிரதிரூபம் மற்றும் பாவனை) மீள் பதிவு செய்திருக்கிறோம். மரபு இலக்கியத்தை விமர்சனம் செய்யலாம், ஆனால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சுட்டும் வகையில் அமைந்த கட்டுரையில் ஞானக் கூத்தனின் நீண்ட காலத்து இயக்கத்திற்குப் பின்னே இருந்த ஒரு நெறி புலப்படுகிறது.
விமர்சனம் என்பது தக்கதை ஏற்றுத் தகாதது என்னவென்று சொல்லி, அதற்கான தர்க்கப் பாதையையும் கொடுத்து, மாற்று விமர்சனம் என்னவென்றும் யோசித்து அதையும் கருதிப் பின் சில முடிவுகளுக்கு வருவது என்று ஒரு பொதுவான வழிமுறையை நாம் முன் வைக்கலாம். அந்த வழிமுறையை ஞானக் கூத்தன் தன் விமர்சனக் கட்டுரைகளில் மட்டுமல்ல, கவிதையிலேயே கூடக் கடைப்பிடித்திருக்கிறார்.
அவரது கவிதைகளின் அன்றைய குரல் போலவே நேற்றும் இன்றும் குரல் புதிதாகவும், நுட்பமானதாகவும், அழகுணர்வைத் தத்தம் செய்யாததாகவும் உள்ளதை நாம் பார்ப்போம், ஆனால், எதைச் சொன்னாலும் சுயத்தன்மை புலப்படுவதாகவும் உள்ளமை அவருடைய தேர்வு என்பதையும் அவரது விமர்சனங்கள் நமக்குச் சொல்கின்றன. பொதுவாக பக்தி இலக்கியங்கள் என்றால் விழுந்து தெண்டனிடுவதை விதந்தோதும் பண்பாடு நம்முடையது. அந்த வழி முறையிலிருந்து விலகிய நோக்குள்ளவர் ஞானக் கூத்தன்.
ஓர் உதாரணமாக ’கவிதைக்காக’ என்னும் கட்டுரைத் தொகுப்பில்[1], குந்தகர் பற்றிய அவரது கட்டுரை ஒன்றில் உள்ளதைப் பார்க்கலாம்.

‘இறைவன் இறைவியரைப் புகழ்ந்து கூப்பிடும் ஸ்தோத்திரங்களைக் குந்தகர் கவிதைகளாகக் கருதவில்லை….வெறும் விளிப்புகளின் தொகுப்பு கவிதையாகாது என்று குந்தகர் கூறும்போதுதான் முனிவர்களின் ஸ்தோத்ர மந்திரங்களும் கவிதையாகாது என்று குறிப்பிடுகிறார்….

[இங்கு ராமச்சந்திரக் கவிராயரின் இரு பாடல்களைச் சொல்லி, அவற்றில் ஒன்று வெறும் பெயர்ச்சொல் தொகுப்பு, இன்னொன்றின் வரிகளில் கவிதை உள்ளது என்பதைச் சொல்கிறார் ஞானக்கூத்தன்.]

… குந்தகர் கருத்துப்படி ஸ்தோத்திரங்கள் கவிதைகள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ள முடிந்தாலும் நமது ஆழ்வார் நாயன்மார்களின் இலக்கியங்களை ஒட்டு மொத்தமாகத் தள்ளி விட முடியாது. முற்றிலும் இசையை நம்பியே எழுதப்பட்டவை கவிதைகளாக நிலை பெற முடியவில்லை, அதற்குக் கவிதைகளாகும் நியாயமும் கிடைக்கவில்லை. ஆனால், பக்தி இயக்கப் புலவர்கள் பாடல்கள் கவிதையாகாது என்ற குந்தகரின் கருத்து மறுக்க முடியாதது.’

இன்னோரிடத்தில் கவிதை என்பதன் லட்சணத்தை விரிப்பதாகச் சில கருத்துகளை முன்வைக்கிறார்.

‘சம்ஸ்கிருதமும், தமிழும் செய்யுள் இயற்றலைத் தொழிலாகத்தான் கருதுகின்றன. செய்யுள் என்பதே தொழிற்பெயர். யாந்திரிகமான தொழில்களிலிருந்து இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம் முதலானவை வேறுபடுவதால் இவை தனியே லலித கலைகள் என்று வகைப்பட்டன. பாரதியார் வரைக்கும் கூடக் கவிதை தொழில்தான். ”நமக்குத் தொழில் கவிதை” என்றவர்தானே அவர். ஆனால் இன்று கவிதை அந்தத் தகுதியை இழந்து விட்டது. செருப்பு தைப்பது, பாவனை செய்வது, பன்றி மேய்ப்பது போன்ற ஊதியம் தரும் தொழில் அல்ல கவிதை.” (ப-228)

கவிதைகளை மேற்கோள் காட்டுவதை விடுத்து விமர்சனக் கட்டுரைகளை மேற்கோள் காட்ட ஒரு காரணம் உண்டு.
அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை.
பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான்.
ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.
விமர்சகரான ஞானக் கூத்தனின் வலிமை அவர் எப்படிச் சமகாலத்தின் பெரும் போக்குகளை ஒதுக்கித் தன் தனிப்பாதையை வகுக்கிறார் என்பதில் இருக்கிறது.
சமகாலத்து விமர்சகர்களில் பெரும்பாலானோர் மேற்கின் கருத்தியல்களையும், தத்துவச் சாய்வுகளையும், அழகியல் கோட்பாடுகளையுமே நம்பிப் பிழைப்பு நடத்துபவர்கள்.
பிழைப்பு நடத்துவது என்று சொல்லக் காரணம் அதில் ஊதியம் வருவதால் என்ற பொருளில் அல்ல. தமிழில் ஒரு ஸ்தானத்தைத் தமக்கு ஏற்படுத்திக் கொள்ள மேற்கின் அழகியல் கோட்பாடுகளை அவற்றின் பண்பாட்டுப் புலம் என்ன, அவற்றின் வரலாற்றுப் பாதை என்ன, என்ன சமூகத்தின் தன்மைகளை நம்பி அவை பேசப்படுகின்றன என்பதை எல்லாம் அறியாது, அல்லது அறிந்திருந்தாலும் அவற்றின் தமிழ்ப் புலப் பொருத்தம் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாது, அப்படியே தமிழிலக்கியத்தின் பால் அவற்றைச் சுமத்திப் பெரும் ‘கண்டு பிடிப்புகளை’ நிகழ்த்திக் களிப்பவர்கள் நம் விமர்சகர்கள்.
இவர்களுக்கு மானுடவியல், சமூகவியல், அரசியலியல், வரலாற்றியல், தத்துவம், ஏன் பண்பாட்டியல் கூட எல்லாமே மேற்கிலிருந்து இறக்குமதி செய்தால்தான் திருப்தி. ஏதோ ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்து அவற்றிற்குப் பயிற்சியும் கொடுத்து இந்திய ராணுவத்தை நிமிர்த்தி வைத்திருப்பது போன்ற பாவனை தமிழ் இலக்கிய விமர்சகர்களுக்கு. அண்டைப் புலமான இந்தியாவின் பகுதிகள் பகைமைப்புலம்.
ஆனால், உலகெங்கும் பெரும் கொள்ளையையும், சுரண்டலையும் நடத்தி ஆசிய ஆஃப்ரிக்க நிலங்களில் பல கோடி மக்களைப் பெரும் வறுமையில் ஆழ்த்திப் போன யூரோப்பியத்தின் ‘தத்துவச் சிந்தனைகளும்’ ‘அரசியலியலும்’ இந்த விமர்சகர்களுக்கு கருப்பட்டிக் கட்டி போல. அதில்லாமல் ஒரு பானமும் உள்ளிறங்காது. தமிழ் இலக்கியம் கூட.
இவர்களுக்கு மாறான ஒரு பாதையில் ஞானக்கூத்தன் நடக்கிறார். பெருமளவும் இது அவரே வகுத்து வருவது என்று கூட நாம் சொல்லலாம். ஏனெனில், இந்த வகை அணுகல் தமிழில் அத்தனை அருகியது !
இத்தனைக்கும் இதன் கோட்பாடு எளியதுதான். மக்களின் அன்றாட வாழ்வில் எத்தனையோ தளங்களில் உலகத் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது கண்கூடு என்றாலும் அத்தனை தாக்கங்களையும் இந்தியரும், தமிழரும் தம் பண்பாட்டின் தொடர்ச்சிகளாகவே அணுகிப் பயன்படுத்துகிறார்கள் என்ற புரிதல் அது. வேறெப்படியும் இது இருந்திருக்க வழி இல்லை.
உலகின் பெரும்பாலான நாடுகளிலும் இந்த வகை அறுதலும் ஒட்டுதலும் மக்களால் தன்னியல்பாகக் கடைப்பிடிக்கப்படுவதுதான். தம் நாட்டுக்கோ, பண்பாட்டுக்கோ தனித் தன்மை இருக்கின்றது என்று நம்பாத அடையாளக் குழுக்களை உலகில் காண்பது அரிது. அப்படி இருக்கையில் தம் பண்பாட்டுக் கூறுகளை அழித்த உலகப் பொதுக் கோட்பாடுகளை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும் என்று நம்பும் விமர்சக அணுகல் பேதமை அன்றி வேறில்லை.
அந்தப் பேதமையை ஞானக் கூத்தன் தவிர்க்கிறார். ஒரு கவிதையில் அவர் சொல்வது இது.

“காப்பியர்க்குக் குளிரும் மெய்வருத்தமும் போகக்
கள்ளைக் குடிக்கச் சொல்லி வேண்டினர் பலர்.
கள்ளை மறுத்தார். காய்ச்சிய பால்
உண்டென்று சொல்லி முன் வைத்தேன்
கொஞ்சம் பருகினார். மீதி வைத்தார்.

….[காப்பியர் மறுபடி இறந்த பின் கவிதை தொடர்கிறது.]

ஏட்டுச் சுவடிகளைப் புலவருக்குத் தந்தேன்.
மாடுகளை விட்டு விட்டு மன்றங்கள் தேடினேன்.
முட்டுப் படாமல் புலவர்கள் ஏதேதோ
பட்டி மன்றங்களில் பேசுவதைக் கேட்டேன்.
அவர்கள் நெற்றியில்
காப்பியர் போல் கண்கள் இரண்டில்லை.”

இங்கு அவர் சொல்லும் இரு கண்கள், இந்தியப் பெருமொழிகளில் இரண்டாகிய தமிழும், சம்ஸ்கிருதமும்தான். மேற்சொன்ன விமர்சகப் பெருந்தகைகளில் பெரும்பாலாருக்கு சம்ஸ்கிருதம் என்றால் எட்டிக்கனி. எட்டிக் கனியைக் கூட உண்பார்கள், சம்ஸ்கிருதத்தைக் கேட்பதும் கொடுமை என்று நினைக்கும் அரிய மாந்தர் அவர்கள்.
இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து வாழாமல், வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறைத்தண்டனை போல என்று வெள்ளையர் விநியோகித்துப் போன பிரிவினை விஷத்தை அறிவியல் என்று மாந்திக் குடிக்கும் அற்புதர்கள் இங்குண்டு. அதையே இன்று மாநிலத்தை ஆளும் கோட்பாடாக்கியும் மகிழ்கிறோம் நாம். இந்தச் சூழலில் ஞானக் கூத்தன் காலத் தொடர்ச்சியில் பண்பாட்டு மாறுதல் என்பது சகஜம், அது தொட்டே புதுமைக்கு ஓர் அர்த்தமும் பிறக்கிறது. எனவே தடயமில்லாது போகும்படி அழிக்காமலே, தக்க மாற்றங்கள் வழியே வளர்ச்சி கிட்டும் என்று கருத்தை முன் வைக்கிறார்.
அதே போல அனைத்தும் ஏற்கும் என்ற சர்வ சமரசப் போக்கில் ஈடுபாடு இல்லாதவர் ஞானக் கூத்தன். தரப்பிரிப்பு இல்லாத நாகரீகம் ஏதும் இல்லை, தரப்பிரிப்பு இல்லாத வாழ்க்கையே இல்லை என்பதைச் சொன்னால் ‘என் தோல் உரிக்கப்படுமானாலும்’ அதையே செய்பவன் நான் (ப 230) என்று அழுத்திச் சொல்கிறார். அந்தக் கட்டுரையே தரம் என்பது எதனால் எப்படிப் பிரிக்கப்படுகிறது, அது தனிநபர் அடையாளங்களை வைத்து இல்லை என்பதையும் காட்டி விடுகிறது. ஒரு நபரிடமே ஓரிடத்தில் தரமும், இன்னோரிடத்தில் தரமின்மையும் எழும், தரம் என்பது தொடர்ந்த தேடலாலும், அதற்கான முயற்சி, கற்பனை வளம் ஆகியவற்றால்தான் கிட்டும் என்பதையும் சொல்லி விடுகிறார். சுட்டல்தான் அவர் வழி, பாடம் நடத்துவதல்ல.
ஏற்பியல் என்றொரு சொல்லை உருவாக்கி அதன் வழியே தன் கருத்து நிலையைச் சுட்ட விரும்பும் ஞானக் கூத்தன் இன்னொரிடத்தில் சொல்வது இவை:

“சொல், கருத்து, நடத்தை, குழு நம்பிக்கை, தத்துவம், அரசியல், கலை நிர்மாண வகை இன்ன பிறவற்றோடு ஒரு காலம் கூட ஏற்பியலுக்குப் பகுதி ஒத்தும், பகுதி ஒவ்வாமலும் போய்விடலாம். இல்லையென்றால் புதுமைக் கவிஞரான பாரதியாரின் கவிதையில் ஏன் ஒரு முறை கூட ரெயில் புகை விடவில்லை. தந்தி அடிக்கவில்லை. ஒரு முறை தொலைபேசியிருந்தாலும் அவர் ஏற்பியலில் பத்திரிகையும், பழம் பாயும் வென்றவிடத்தை இவை ஏன் பெறவில்லை.
இன்று பல ஏற்பியல்கள் உள்ளன. …
கடைசியாக வெளிநாட்டுச் செய்திகளும் இலக்கியங்களும் நம் ஏற்பியலைப் பாதிக்கத்தான் செய்கின்றன. சிலவற்றைக் குறிப்பிடலாமென்றால் என் ஏற்பியல் இடந்தரவில்லை.
புதுக்கவிதைகளுக்கு ஏற்பியல் உண்டா?
உண்டு. அது கலை நிர்மாணத்தைப் பொறுத்தது. கருத்து, சமயம், அரசியல் இவற்றைப் பாராட்டாதது.” [கவிதைக்காக- பக்66]

இப்படிச் சொல்பவர், இன்னோரிடத்தில் தன் அழகியல் என்ன பாதைகளில் பயணிப்பதை விரும்புவது என்று சுட்டுகிறார்.

“சங்க இலக்கியத்தில் இயற்கையும் மனித வாழ்க்கையும் ஒன்றைத் தொட்டு ஒன்று இருந்தது. நாடகத்திலும் திரைப்படத்திலும் நிகழ்வுக்குப் பின்புறமாக உலகம் இருந்து கொண்டே வருவது போல சங்கக் கவிதையில் இயற்கை உலகம் இருக்கும். இதைத் ‘திணை’ என்ற பெயரால் அழைத்தார்கள். இத்தன்மை இன்று புதுக்கவிதையில் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ இருக்கிறது. தெய்வம், சமயம், இடம் பெறுவது கிடையாது. தெய்வம் இடம்பெறும்போது அதனிடத்தில் கவிஞனுக்குப் பயமும், பக்தியும் இருப்பதற்குப் பதிலாக கேள்வி கேட்கும் உரிமையும், அவநம்பிக்கையும் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தின் திணைத் துறைக் கோட்பாடுகளை அறிந்திருப்பவர்களுக்கு இவை இரண்டும் செயல்படும் விதம் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.” [பக்.218]

அதே கட்டுரையில் மேற்கொண்டு, துறை, மெய்ப்பாடு, சுவை என்று மேலும் சில கருத்துகளைப் பயன்படுத்தி கவிதைகளை அணுகலாம் என்பதை விளக்குகிறார். இவை எதுவும் தனி மனிதரின் சாய்வுகளை முற்றாக விலக்குபவை அல்ல, அதே நேரம் அவற்றையே முழுதும் நம்புபவையும் அல்ல. இலக்கிய விசாரங்கள் அறிவியல் போல ஏதோ புறநிலைக் கறார்த் தன்மையைக் கொண்டவை என்பது போன்ற பாவனை யூரோப்பியத்தின் சிப்பாய்களாக இந்தியாவில் உலவுவதைத் தம் அறமாக, அரசியல் கட்டாயமாக, ஏன் அறிவுத் துலக்கத்தின் சாட்சியமாகக் கூடக் கருதும் மேதைகளிடம் காணப்படுகிறது. இந்தப் பாவனையை ஞானக் கூத்தன் லட்சியம் செய்வதில்லை. அவரோ இப்படிச் சொல்லிப் போகிறார்.

“கவிதை என்பது படைப்பு. இலக்கியம் என்பது சாகித்ய கர்த்தாவின் சொற்பொழிவு. இதிலும் கவித்துவம் இருக்கக் கூடும். மனித வாழ்க்கையை கவிஞன் அழகான அவதானிப்புகளாக எழுதலாம். இவை நல்ல மேற்கோள்களாக அமையும். ஆனால், அவ்வளவு சிறப்புடையது அல்ல இது. கவிதையை நாம் நேசிப்பது அது வாழ்க்கையை எதிர்பாராத தருணத்தில் துண்டம் செய்து நமக்குத் தருவதால்தான். புதுக்கவிதை, கோஷங்களை ஜிங்கிள்ஸ் வரிகளை வெறுப்பது போலவே உபதேசங்களை வெறுக்கிறது. …அனேகமாகத் தமிழ்க் கவிதை அதன் பிதுரார்ஜிதமான நிலபுலன்களுக்குத் திரும்புவது என்பது மகிழ்ச்சிக்குரியது.” [பக் 220]

சுருக்கமாகச் சொன்னால், இந்திய அழகியலும், தமிழ் அழகியலும் பகைமை உடையன அல்ல, எப்படி இந்தத் துணைக்கண்டத்தில் தனித்துவமும், அண்மையும், ஒட்டுறவும், பரிமாற்றங்களும் பல்லாயிரம் வருடங்களாக ஒரு பெரும் கூட்டுப் பண்பாட்டை உருவாக்கினவோ அதே போல காவியமும், கலைகளும் நம்மிடம் பரந்து விரிந்த பொதுத்தன்மையைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதைத் தொடர்ந்து பேசுகிறார்.
பலபண்பாட்டியம் என்று மேற்கின் கருத்தியலைப் பேசிய வண்ணமே குறுங்குழு வாதத்தையும்,  பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்திருக்கிற பண்பாட்டையும், சிந்தனை மரபுகளையும் உடைப்பதையும் அழிப்பதையுமே தொடர்ந்து முன்வைக்கும் குருட்டுத்தனத்துக்கு ஞானக் கூத்தனின் நீண்ட காலப் பயணத்திலிருந்து சில மாற்றுமருந்துகள், சிகிச்சைகள் கிட்டுகின்றன.
இதை விளக்கும் வகையில் அவரது கவிதையிலிருந்து சில வரிகள்….

சில கோரிக்கைகள்
கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய்.
நன்றி சொல்கிறேன். நன்றாகக் கட்டு.
தாமதமானாலும் குற்றமில்லை.
 
ஜன்னல்கள் பலப்பல எல்லாத் திசையிலும்
அகலமாய் இருந்தால் நல்லது.
இந்த மாளிகை எனக்கெனச் சொல்வதனால்
இதனை உனக்குச் சொல்கிறேன்.
கிழக்கு நோக்கிய ஜன்னல்களில்
கரிய மேகங்களைத் தொங்க விடு.
மேற்கில் சூரியனின் பரத வாக்கியம்
படிப்பதைக் கேட்க வேண்டும்.  எனவே
முகில்கள் அங்கே வெள்ளியாய் இருக்கட்டும்
 
நட்சத்திரங்கள் போதிய அளவு
பத்திரப்படுத்தினாய் என்று நம்புகிறேன்
மன்றத்தின் மையத்தில் நட்சத்திரங்கள்
சரங்களாகத் தொங்க வேண்டும். நினைவிருக்கட்டும்.
இன்னும் நிறையச் சொல்ல வேண்டும்.
தூண்கள் பற்றி… கூரை பற்றி…
இன்னும் முக்கியம் தரையைப் பற்றி.
 
ஆனால்
 
இப்போதைக்கென்று சொல்கிறேன்.
பொத்துப் பொத்தென்று நம்பிக்கை
மூட்டைகளை இப்படித் தட்டாதே
மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில்.
(1998)
[ஞானக் கூத்தன் கவிதைகள்-விருட்சம் வெளியீடு: 2001 ]

கவிஞர் எப்படி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறாரென்று பார்த்தால் அதற்கும் ஓர் வருணனைச் சித்திரம் கிட்டுகிறது.

“நாட்கள் சில செல்ல இறந்தேன் நானொரு நாள்.
பெற்றோர்
தாழியில் என்னைப் படுக்க விட்டுக்
காப்பியர் தீண்டியப் பால்கலத்தை
என்னோடு சேர்த்துப் புதைத்து விட்டுப் போனார்கள்.
 
இரட்டை நிழலெனக்கு
இரண்டுக்கும் இடையில்
தாழை மடல் போல் இருந்தேன்
நான்.
(இரட்டை நிழல்- 1985)

தாழம்பூவை மறைத்து வைப்பது கடினம். எங்கு வைத்தாலும் வீடு முழுதும் மணம் நிரப்பும் ஒரு அபூர்வ வஸ்து அது.
***
[1] ’கவிதைக்காக’ : ஞானக் கூத்தன்  கட்டுரைகள், மதிப்புரைகள்.  விருட்சம் வெளியீடு. முதல் பதிப்பு 1996/ இரண்டாம் பதிப்பு 2009.  ரூ 150; பக்.264.  [தேவைக்குத் தொடர்பு கொள்ள: navina.virutcham@gmail.com]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.