கருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்

 
 

Internet_of_things
இந்தத் தொழில்நுட்பத்தை ஆராய்கையில், பல புதிய விஷயங்கள் கிட்டியதோடு, சிறு ஏமாற்றங்களும் எனக்கு இருந்தன. அதே நிலை, இக்கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு, ஆராய்ச்சிக்கு முன் என் பார்வையில்,

  1. கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் பல பொருட்களை அடுக்கி நம்மை திக்கு முக்காடச் செய்து விடுவார்கள். – முதல் ஏமாற்றம் இது.
    பல அதிரடி யோசனைகளை உருவாக்கும் நிறுவனங்கள் புதிய, பெயரெடுக்காத நிறுவனங்களே. கூகிளோ – ஒரு நெஸ்ட், ஆப்பிளோ – ஒரு வாட்ச் என்று ஜல்லியடிக்கும் நிறுவனங்கள். புதிய நிறுவனங்கள் வெற்றி அடைந்தவுடன் அவற்றை விழுங்கத் மட்டுமே கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
  2. புதிய தொழில்நுட்பத்தில் குறைகள் இருந்தாலும், பெரிதும் சோதனை செய்யப்பட்டு, நுகர்வோருக்குத் தக்கவாறு அறிமுகப்படுத்தப்படும் மிகவும் சரியான கருவிகள் இவை– இரண்டாம் ஏமாற்றம் இது.அதிகம் சோதிக்கப்படாமல் நுகர்வோரைச் சென்று அடையும் கருவிகள் இன்று பெருகி விட்டன. பாதுகாப்பு காமிராக்களின், கார்களின் குறைகள் பற்றியச் செய்திகள் ஊடகங்களில் ஏராளமாக வரத் தொடங்கிவிட்டன.
  3. கம்பியில்லாத் தொழில்நுட்பம் ஏராளமாக வளர்ந்துள்ளதால், இக்கருவிகள் சமுதாயத்திற்கு உடனே பெரும் பயன் அளிக்க உள்ளன – மூன்றாம் ஏமாற்றம் இது.இந்த நம்பிக்கையை உடைத்தது சற்று ஆழமான ஆராய்ச்சி.அவசரமாக வளர்ந்த செல் தொழில்நுட்பங்கள் ஒன்றோடு ஒன்று இணையத்துடன் இணைவதில் பல சமரசங்கள் செய்து, கடைசியில் புதிய கருவிகளை இணையத்தோடு உறவாடுவதை மிகவும் சிக்கலாக்கி விட்டன.அவசரத்திற்கு உதவிய தொழில்நுட்பம், எதிர்காலத்தில் உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
  4. அடித்துப் பிடித்து எப்படியோ தொழில்நுட்ப நியமங்கள், கருவிகள் இணைய உலகிற்கு உதவிவிடும். – நான்காம் ஏமாற்றம்.இந்த நம்பிக்கை முழுவதும் போய்விடவில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப நியமங்கள் மற்றும் அதன் பின் உள்ள தொழில் அரசியல் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
  5. பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சமுதாயத்திற்கு பெரிதும் உதவும் கருவிகள் இதோ இன்னும் 2 ஆண்டுகளில். – ஐந்தாம் ஏமாற்றம் இது.புதிய சோப்பு விளம்பரம் தரும் நம்பிக்கை போல இந்த நம்பிக்கையும் இருந்தாலும்,  மிகக் குறைவான, செயல்திறன் (processing speed) மற்றும் மின்கலன் (battery) சக்தி வாய்ந்த கருவிகளுக்குள் எப்படி சரியான பாதுகாப்பையும் அளிப்பது என்பது மிகப் பெரிய பிரச்னை.
  6. அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் நாளைய கருவி இணைய (Internet Of Things – IoT) துறையை இன்றே பார்க்கலாம் – ஆறாம் ஏமாற்றம்.இந்தத் துறைகளின் இன்றைய நிலை மிகவும் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்தது. குறிப்பாகக் கல்வித்துறையின் பின்தங்கிய நிலை நான் சற்றும் எதிர்பார்க்காதது.

சமூகப் போக்குகள், புதிய தொழில்நுட்பங்களின் பயனை வழிப்படுத்தும் சக்தி படைத்தவை. பாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது என்பது என் கருத்து.
இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன.
இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. குறிப்பாக, வீடுகளில், கார்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், மற்றும் அணியப்படும் கருவிகளில் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது. இவற்றை வாங்கும் நுகர்வோர்கள் தங்களுடைய திறன்பேசியில் உள்ள பயன்பாடுகளைப் போலவே இவையும் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாதுகாப்பின்றி எதிர்காலத்தில் இவர்கள் படப் போகும் கடும் இன்னல்கள் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை.
இன்னொரு முக்கிய தொழில்நுட்ப விஷயம் அதிகம் பேசப்படுவதே இல்லை. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா? மூச்!
வழக்கமான, வந்தபின் பார்த்துக் கொள்வோம் என்ற அணுகுமுறைதான். ஏராளமான கணினிகளின் பல லட்சம் கோடித் தரவுகளைச் சமாளிக்க வேண்டும் என்று 90–களின் கடைசியில் இணையத்திற்கான பல இழை ஒளியியல் (Fibre Optics) முன்னேற்றங்கள் இன்று வரை தாக்கு பிடித்துள்ளன. ஆரம்பத்தில் வெறும் வார்த்தைகள் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்பட்டன; பிறகு படங்கள், வீடியோக்கள் என்று தேவைகள் மிக அதிகமாகிவிட்டன. பல கோடிக் கோடி கருவிகள் இந்த இணையத்தில் இடைவிடாமல் சேர்ந்து கொண்டால், அதன் வேகம் வெகுவாக பாதிக்கப்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இவை ஏராளமாக இணையத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக, இணைய வேகத்தைக் கூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இத்துறை முன்னேறாமல் இல்லை. பல முயற்சிகள் போர் வேகத்தில் நடந்து வருவது உண்மை. ஆயினும், எப்படியோ முழுவதும் சோதிக்கப்படாத பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து, பிறகு சமாளிக்கலாம் என்ற செல்பேசி மற்றும் கணினி மென்துறை அணுகுமுறைகள் இந்தத் துறைக்கு அதிகம் உதவுவதில்லை.
புதிய செல்பேசி  வரவுகளில் பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவலைப்படாது, அபாயங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை நுகர்வோர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், ஒரு புதிய இணையத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் போது, அந்த செல்பேசிக் கருவியின் பாதுகாப்புக் குறைகள் சில நாட்களிலேயே தெரிந்து அதன் தொழில்நுட்பத்தையே கேள்விக் குறியாக்கிவிடலாம்.
உதாரணத்திற்கு, க்ரைஸ்லர் செரோக்கி (Chrysler Cherokee) ஜீப்பின் கணினிகள் எளிதில் தாக்கப்படலாம் என்ற செய்தி வெளியானவுடன், இந்த ஊர்தியின் விற்பனை சரியத் தொடங்கியது. (பார்க்க: https://www.wired.com/2015/07/hackers-remotely-kill-jeep-highway/)
கருவி இணையப் போக்குகள்
IoT-Expectations
புதிய கருவிகளைப் பற்றியோ அல்லது புதிய நிறுவனங்களைப் பற்றியோ இங்கு நாம் அலசப் போவதில்லை. இத்துறையின் பிரச்னைகள், முன்னேற்றங்கள் போன்றவற்றை ஏற்கனவே முன் வைத்து விட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் (2016-2020) பற்றி சற்று அலசுவோம்.

  1. முதலில், அடிப்படை கருவியளவு பாதுகாப்பிற்கு புதிய முறைகள் – வழக்கமான Deffie Hellman போன்ற குறிமறையாக்க (Cryptography) முறைகள் கருவி இணைய உலகிற்கு ஒத்து வராதவை. குறைந்த செயலித் திறன் (processing power) மற்றும் மின்கலன் (battery) சக்தியில் வேலை செய்யும் புதிய முறைகள் தேவை.சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், Algebraic Eraser (AE) போன்ற புதிய முறைகள் மேலும் மெருகூட்டப்பட்டு இந்தத் துறையில் பெரிதாக உதவலாம்.
  2. அடுத்தபடியாக, கருவி இணைய கட்டமைப்பு நியமங்கள் (IoT Architecture Standards) மிகவும் முக்கியம் – பல முயற்சிகள் காரசாரமாக விவாதத்தில் இருந்தாலும், முடிவாக இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஒன்று அல்லது இரு நியமங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் உள்பூசலிலேயே இந்த முக்கிய தொழில்நுட்பம் தோற்றுப் போகும் வாய்ப்புண்டு.
  3. சும்மா கையில் அணியப்படும் கருவியை வைத்து அழகான வரைபடம் ஒன்றை உருவாக்கி இதோ கருவி இணையம் என்று அலட்டிக் கொள்வது இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் தாங்காது.நிறுவனங்கள் மேகக் கணிமைத் (Cloud Computing) துறையில் பல்வேறு கருவிகளிலிருந்து உருவாகும் தரவுகளைக் (Stored Data)க்களைக் கையாளும் முறைகளை உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான், பயன்பாட்டாளருக்கு உண்மையான பயனை உருவாக்க முடியும். இந்தத் தரவுக் கையாள்மை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  4. விளிம்புக் கணிமை (edge computing) என்பது, கருவிகள் இருக்கும் இடத்தின் அருகே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகே கணிமை நிகழ வேண்டும். பொதுவாக, இது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளில், சிறப்பாக, பல விதக் கருவிகளுடன், புதிய பல பயன்பாடுகளில் நிகழ வேண்டும். இதைப் பற்றித் தொழில்நுட்பப் பகுதியில் நாம் விரிவாகப் பார்த்தாலும், இன்று வெகு சில பயன்பாடுகளில் மட்டுமே இது நடக்கின்றது.
  5. இத்தகைய கருவி இணைய அமைப்புகளை வழங்கும்/ பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வலையமைப்பு சக்தியைக் (Network power)ஐக் கூட்டுதல், அடுத்த இரண்டு வருடங்களில் அவசியம்.
  6. மேகக் கணிமை போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள புதிய வியாபார முயற்சிகளில் இறங்குவதை இன்னும் ஒரு வருடத்தில் நாம் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களுக்கு பல புதிய மேகக் கணிமை முறைகள், குறைந்த விலைகள் சாத்தியமாகும்.
  7. கட்டமைப்பு உலகில், இன்னும் இரண்டு வருடங்களில், மேற்குலகில், இந்தத் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டு, புதிய பல சேவைகள் உருவாகும். இதனால், புதிய பல வியாபாரங்கள் உருவாகும்.
  8. இன்னும் இரண்டு ஆண்டுகளில், திறன்பேசியா அல்லது அணிக்கருவியா (Connected Devices) என்ற சர்ச்சை அவசியம் உருவாகும். நுகர்வோரே இந்தச் சர்ச்சையின் முடிவை முடிவு செய்வார்கள். இதில் எந்தத் தொழில்நுட்பம் நிலைக்கும் என்று சொல்வது கடினம்.
  9. மிக முக்கியமாக ‘திறன் நகரங்கள்’ (smart cities) இந்தத் தொழில்நுட்பத்தின் மிக முக்கிய தூதுவர்களாகும் நிலை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் உருவாகும்.நாம் இதுவரை நினைத்துப் பார்க்காத புதிய கருவி இணையப் பயன்பாடுகள், கருவிகள், உணர்விகள் (sensors) இரண்டு வருடங்களில் சாத்தியம்.

சில தடைகள் இருந்தாலும் இந்தத் துறை இன்னும் அடுத்த சில ஆண்டுகளில் பயங்கர வேகத்தில் முன்னேறும் என்பது உறுதி. இதை உறுதியாகக் கூறுவதற்கு முக்கிய காரணங்கள் இவை:

    • இந்தத் துறையில் புரளப் போகும் பல்லாயிரம் கோடி டாலர்கள் மிகப் பெரிய பிரச்சினைகளையும் தீர்க்க வழி செய்யும்.
    • இந்தத் துறையில் உருவாகப் போகும் பல்லாயிரம் புதிய வியாபார சாத்தியங்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
    • இந்தத் துறையில் இயங்கவிருக்கும் பல லட்சம் புதிய இளைய தலைமுறைகளின் புதிய அணுகுமுறைகள் பல பிரச்சினைகளைத் தீர்க்க வழி செய்யும்.

***
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.