kamagra paypal


முகப்பு » ஆன்மீகம், இலக்கியம்

பவளவாய் முறுவல் காண்போம்

மேற்குத்திசையில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டான். புழுதிபெருகிக்கிளம்ப ஆயர்கூட்டம் மாடுகளை விரட்டிக்கொண்டு ஓடோடி வந்துகொண்டிருக்கிறது. மாடு மேய்த்துக் கன்றுகாலிகளை ஓட்டிக்கொண்டு திரும்பிவரும் கண்ணனின் அழகு- மயில்பீலிகளைத் தொங்கவிட்டுக்கொண்டுவரும் தனியொரு அழகு- இளம்பெண்களின் கண்களுக்குப் பெரும்விருந்தாகிறது. பக்கத்திலொரு இடைச்சிறுவன், மத்தளத்தை முழக்கியபடி பாடுகிறான். கிருஷ்ணனும் அதற்கேற்ப நடனம் ஆடியபடியே தனது புல்லாங்குழலை ஊதிக்கொண்டு வருகிறான். இந்தச் சப்தம் தெருவெங்கும், அச்சிறு ஊரெங்கும் எதிரொலிக்கிறது. மழைதான் வருகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

கனகா உணவு உண்பதை விட்டுவிட்டுக் கையைக்கூடக் கழுவாமல் இக்கோலாகலத்தைக்காணத் தன் வீட்டுப் பலகணியிடம் ஓடோடுகிறாள். ஏற்கெனவே அங்கு வசந்தி, மதுரா ஆகியோர் நிற்கின்றனர். முழங்கையால் அவர்களைத் தள்ளியவண்ணம் இவளும் தலையை நுழைத்து கண்ணன்வரும் அழகைப்பார்த்து ரசிக்கிறாள். மூன்று பெண்களிடமிருந்தும் நீண்ட ஏக்கப்பெருமூச்சு எழுகின்றது!! கன்றின்பின் ஓடும் அவன்பின்பு இவர்கள் உள்ளங்கள் ஓடுகின்றன!

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
                தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
        குழல்களும் கீதமும் ஆகிஎங்கும்
                கோவிந்தன் வருகின்ற கூட்டம்கண்டு
        மழைகொலோ வருகின்றது என்றுசொல்லி
                மங்கைமார் சாலகவாசல் பற்றி
        நுழைவலர் நிற்பனர் ஆகிஎங்கும்
                உள்ளம்விட்டு ஊண்மறந்து ஒழிந்தனரே.
                (பெரியாழ்வார் திருமொழி- 3.4)

“அடி! பாரடி, மேகலா, அந்த வாள் அவன் இடையிலிருந்து தொங்குவது ஒரு பல்லி சுவரைப் பற்றிக்கொண்டு கிடப்பதைப்போல உள்ளது,” என ரசிக்கிறாள் ஒரு கோபிகை. “காட்டிலிருந்து திரும்பும் வழியிலேயே மலரும் முல்லை, வேங்கை மலர்களைப்பறித்து மாலைகட்டி அணிந்துகொண்டு வருகிறானடி! எந்தப்பெண் இவனுக்கு அவற்றினைத் தொடுத்துக் கொடுத்தாளோ?” எனப் பொறாமைகொண்டு புலம்புகிறாள் வாருணி. தனது தோட்டத்திலிருந்து தட்டுநிறைய முல்லை, செண்பக மலர்களைப் பறித்துவைத்துக்கொண்டு மாலைகட்டிக்கொண்டிருந்தவள் அதனை அப்படியே போட்டுவிட்டு  கண்ணன்வரும் அழகைக்காண வந்திருக்கிறாள். ரகசியமாக அவனுக்கு அதனைக்கொண்டு கொடுக்க எண்ணியிருந்தாள் அவள்.

கனகாவிற்கு இயலாமையால் சினம் எழுகின்றது. “வாடி, போய் நம் வேலைகளைப்பார்ப்போம். அவனையே பார்த்துக்கொண்டு நின்றால், வேலையும் நடக்காது; வீணே உடம்புதான் மெலியும்; கைவளைதான் கழன்றோடும். அவனைப் பார்க்காமலிருப்பதே நமக்கு நல்லது,” என்றபடி போக எத்தனிக்கிறாள்.

பக்கத்துவீட்டு ரச்மி, “என்பெண் என்னவோ எல்லா ஊர்ப்பெண்களையும்போல, கிருஷ்ணனும் மற்ற ஆயச்சிறுவர்களும் வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டாள். உடனே இவ்வூரார் ‘அவனிடம் அவளுக்கு எவ்வளவு ஆசைபார்!’ எனப்பழிக்கின்றனரே! என்ன ஊரோ, ஜனங்களோ,” என அலுத்துக்கொள்கிறாள்.

கிருஷ்ணனுக்கு இது பாலப்பருவம் முடிந்து வாலிபப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும் வேளை. அழகன்; குறும்பன்; சமர்த்தன்- வேறென்ன வேண்டும் எல்லார் உள்ளங்களையும் கொள்ளைகொள்வதற்கு? அதுவும் இளம்பெண்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். தங்கள் வெட்கம், நாணம் அத்தனையையும் விட்டு அவன்பால் காதல் வயப்பட்டுவிட்டார்கள். அவனிடம் செல்லவும், பார்க்கவும், பேசவும் அவனை அடையவும் துடிக்கிறார்கள்.

gopis_welcome_krishna_balarama_and_their_companion_wk53

 

அவன் தன்னைச்சுற்றி நிற்கும் ஆயர்சிறுவர்களுக்கு வெயில்படாமல் பீலிக்குடை பிடிக்கிறான். அவனுடைய அந்தக்காருண்யம் ஒருத்தியின் மனதைக்கவர்கிறதாம். மயில்பீலியைத் தன் தலைக்கொண்டையில் அலட்சியமாகச் சொருகிக்கொண்டுள்ள அழகு இன்னொருத்தியின் கண்களுக்கு விருந்தாகுகிறது. அவள் மனதில் எண்ணிக்கொள்கிறாள்: ‘வாழ்ந்தால் இந்த ஒருஅழகனுடன்தான் வாழவேண்டும்; இந்தத் திருமாலிருஞ்சோலை மாயனுக்கல்லாது வேறு எவருக்காவது நீங்கள் என்னை மணம்பேசினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இவனுக்கே உரியவள்,’ எனக்கூறுகிறாளாம்.

சுற்றி நின்று ஆயர்தழைகள் இடச்
                சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
        பற்றி நின்று ஆயர் கூடத்தலையே
                பாடும் ஆடக்கண்டேன்; அன்றிப்பின்
        மற்று ஒருவர்க்கு என்னைப் பேசவொட்டேன்
                மாலிருஞ்சோலை எம்மாயற்கு அல்லால்
        கொற்றவ னுக்குஇவள் ஆம்என்று எண்ணிக்
                கொடுமின்கள்; கொடீராகில் கோழம்பமே.
                (பெரியாழ்வார் திருமொழி- 3.4)

இவர்கள் கிருஷ்ணனுக்கிணையான குறும்புப்பெண்கள்தான்! கேளுங்கள் இவர்கள் உரையாடலை!

“பாரேன் தோழி, நெற்றியில் சிந்தூரத்திலகம். அவனுக்கென்றே செய்தாற்போன்ற ‘திருக்குறம்பம்’ எனும் அந்த ஆபரணம், தலையின் அந்தச் சுருட்டைமயிருடன் கூடி கண்ணைப்பறிப்பதைப்பார்! அவன் நடை என்ன! வளைகோலை வீசும் ஒயிலென்ன? தடிகளை வீசி மற்ற பிள்ளைகளுடன் ஆடிவரும் அழகென்ன! உள்ளம் என்வசம் இல்லையே, என்னசெய்யலாம்? ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு அவனுடன் பேசவேண்டுமே! உனக்குத்தான்  புதுப்புது உபாயங்கள் தோன்றுமே, ஒன்றுகூறேனடீ,” எனத் தவிக்கிறாள் வசந்தி.

“வசந்தீ, நாம் என்ன பண்ணவேண்டும் தெரியுமா? பார் அந்தக்கும்பலில் நடுவில் வருகிறான் அல்லவா நம்கண்ணன். ‘இவன் எங்களுடைய விளையாடும் பந்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான்,’ எனப் பொய்க்குற்றம்சாட்டி அவனைத் தடுத்துநிறுத்துவோம்; அவன் நமக்கு ஒரு மறுமொழிசொல்லாமல் மேலே போகமுடியாது இல்லையா? அதனால்- நம் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை அறிந்துகொண்டு- ஒரு புன்னகைசெய்வான் பாரடி! அதுபோதுமே! அதனைக்கண்டு மகிழலாமே,” என்கிறாள் அந்தச் சாமர்த்தியக்காரியான தோழி.

சிந்துரம் இலங்கத் தன்திரு நெற்றிமேல்
                திருத்திய கோறம்பும் திருக்குழலும்
        அந்தரம் முழவத் தண்தழைக் காவின்கீழ்
                வரும்ஆய ரோடுஉடன் வளைகோல்வீச
        அந்தம் ஒன்று இல்லாத ஆயப்பிள்ளை
                அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
        பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
                பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ!
                (பெரியாழ்வார் திருமொழி- 3.4)

தாய்மார்களும் என்ன செய்தார்களாம்? தாமும் அவனுடைய எழிலில் மயங்கி, ‘இப்படி ஒரு பிள்ளைபெற்றாளே இவள்,’ என யசோதையிடம் பொறாமைகொண்டவர் சிலர். ‘தன் பெண்ணை அவனுக்கு மணம் முடித்துவிடலாமோ? இதற்கு யசோதை ஒப்புவாளோ,’ என வருந்தும் சிலர். ‘இச்சிறுவயதிலேயே இவ்வாறு பெண்களின் மனதை அலைக்கழிக்கிறானே, காமுகனோ,’ என குதர்க்கமாக எண்ணுபவரும் ஒருசிலர். ஒருத்திக்குத் தன்மகள் உள்ளம் அழிந்ததுகண்டு மிகுந்த துயரம் உண்டாகிறது: ‘கிருஷ்ணனோ பெரிய வீட்டுப்பிள்ளை; இவள் என்னடாவென்றால் அவனைக்கண்டு மயங்கித் துவண்டேவிட்டாள்; நான் என்னசெய்வேன்,’ எனப்பதறுகிறாள்.

………..பல் ஆயர் குழாம் நடுவே
        கோலச் செந்தாமரைக் கண்மிளிரக்
                குழல்ஊதி இசைபாடிக் குனித்து ஆயரோடு
        ஆலித்து வருகின்ற ஆயப்பிள்ளை
                அழகுகண்டு என்மகள் அயர்கின்றதே!

இன்னொருதாயோ, “வலக்காதிலே செங்காந்தள்பூ சூடிக்கொண்டிருக்கிறான்;  மல்லிகை, வனமாலை ஆன துளசிமாலை ஆகியவை மார்பில் புரள, புல்லாங்குழலில் மயக்கும் இனிய இசையை எழுப்பியபடி வருபவன் எவ்வளவு அழகாகஇருக்கிறான்,” எனத்தானும் அவனை வர்ணித்தபடிக்கு நின்று மயங்குகிறாள். பக்கத்து வீட்டுக்காரியிடம், “என்மகளை இதனால்தான் அவனெதிரில் போகாதேயடி என்று சொன்னேன்; கேட்டாளோ? இல்லை! அவன் வரும்வழியில் ஓடிப்போய் நின்றாள். அவள் கையிலிருந்து சங்குவளைகள் கழன்றுவிட்டன; உடலும் மெலிந்துவிட்டதம்மா,” எனப்புலம்புகிறாள்.

இவர்கள் இப்படியெல்லாம் வருந்துமாறும், கண்டுகளிக்குமாறும், ஏங்குமாறும் செய்த கிருஷ்ணன் எனும் கண்ணன் அன்றிலிருந்து இன்றுவரை அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளைகொண்டவன்.

சமீபத்தில், இக்கட்டுரையை எழுதும்போது ஒரு அழகானபாடலை – காலஞ்சென்ற திரு. ஜி. என். பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியதை- கேட்க வாய்ப்புக்கிட்டியது.
‘கண்ணனே என் கணவன்- வேறு
        கருத்துமில்லை மனப் பொருத்தமுமில்லை,‘ என்ற அழகான சொற்கள். அவருடைய சொந்தசாஹித்யம் போலுள்ளது. எப்போது ஒருவருக்குக் கிருஷ்ணனைப்பற்றிய எண்ணம் எழும்போது ‘அவன் தனக்கே உரியவன்’ எனும் சொந்தம், அன்பு, காதல், பக்தி எல்லாம் எழுகின்றதோ, அது எண்ணிப்பார்த்து நிகழ்வதல்ல; எதேச்சையாக உண்டாகும் எண்ணமே! ஒருகாலத்தில் பெண்கள் திருமணத்தின்பின் கணவனேஎல்லாம், அவனே தன்உலகம் என இயங்கியவண்ணம் இருந்தனர். (சில கணவர்மார்களும்கூட மனைவியே தன்னுலகம் என இருந்ததும் உண்டு!). அந்தநிலையில் நின்று, அந்த எண்ணத்தைமட்டுமே கொண்டவொரு தன்னைமறந்த நிலையில் எழுந்த பாடல் இது.

சரணத்தின் அடிகள் இதனை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

அன்றிற்பறவைபோலே ஆட்டமெல்லாம் அடங்கி
        அந்தக்கரணமவன் சிந்தையிலே ஒடுங்கி
        பந்தவினைகளெல்லாம் சிந்தத்தவம் புரியும்
        பரிசுத்ததினன் அந்த கிரிதர கோபாலன்.
                        (கண்ணனே என் கணவன்)

உறவுகளுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளாய் அவனிடம் பக்தி செலுத்துவதனைவிட, ஒரு உறவுக்குள் பிணைத்துக்கொண்டு அன்புசெலுத்துவது நமக்கு எளிதாக இருக்கிறது. எத்தனை சுளுவான வழி! பலபொழுதுகளில் தோன்றும்- குழந்தையாய், காதலனாய், கணவனாய், அன்னையாய், தந்தையாய் அன்புசெலுத்தும்போது, கடவுள் என்பவர் நமக்கு எட்டாதபொருள் அல்ல. நம்மைச் சுற்றி இந்தப் பலவிதமான உறவுகளில் இருப்பவர்களிடம் நாம் கொள்ளும் அன்புதான் இவ்வாறெல்லாம் பரிணமிக்கின்றது என்றும் அதற்குத்தான் கடவுள் எனப்பெயரிட்டுள்ளோம் எனவும்!

krishna

பாரதியாரும் இதற்கு விதிவிலக்கல்ல என முன் அத்தியாயங்களில் கண்டோம். இன்னும் அவருடைய ஓரிரு அழகான பாடல்களைப் பார்க்கலாமா? ஜி. என். பி. அவர்கள் இவற்றை மிக இனிமையாகப் பாடியுள்ளார்.

‘திக்கு தெரியாத காட்டில் உன்னை
        தேடித் தேடி இளைத்தேன்,’ எனும் பாடலில், ‘நான் கண்ணனுக்கே உரியவள், என்னைப் பிறர் விரும்பலாமோ?’ என ஒருபெண் கேட்பதாகப் பாடியுள்ளார். இதற்கும் முன்பே கூறியபடி, அவரவர் மன ஓட்டங்களுக்கேற்பப் பொருள் கொள்ளலாம்.

இன்னும் பாரதியாருடைய

‘ஆசை முகம் மறந்து போச்சே- இதை
        ஆரிடம் சொல்வேனடி தோழி?’ எனும் பாடலில்

‘தேனை மறந்திருக்கும் வண்டும்- ஒளிச்
                சிறப்பை மறந்துவிட்ட பூவும்
        வானை மறந்திருக்கும் பயிரும்- இந்த
                வைய முழுதுமில்லை தோழி! 
        கண்ணன் முகமறந்து போனால்- இந்தக்
                கண்களிருந்தும் பயனுண்டோ?
        வண்ணப்படமுமில்லை கண்டாய்- இனி
                வாழும் வழியென்னடி தோழி?’

என ஒருபெண் காதலில் நெகிழ்வதாக அமைத்துள்ளார். இங்கு உளவியலைக் கொஞ்சம் மாற்றிப்போட்டு யோசிப்போமா? இப்பாடலில் கிருஷ்ணனைக் காந்தனாக, காதலனாகக் கருதுவதை, நிஜவாழ்வில் ஒருபெண் காதலனை எண்ணி மயங்குவதாகக் கருதலாமே! அப்போது காதலன் என்ன, கணவனென்ன, குழந்தையென்ன, எல்லாரும் பரம்பொருளின் வடிவம்தான் எனவும் தெளியலாம். இது என் சிற்றறிவின் எண்ணஓட்டம்!!

~oOo~

பில்வமங்களர் இளமைபொருந்திய கிருஷ்ண வடிவத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். இடைப்பிள்ளைகளின் கூட்டத்திற்கு கிருஷ்ணன் ஒரு அணிகலனாக விளங்குகிறானாம். எப்படி? குளிர்ச்சியை – கருணையைப்பொழிந்து சுற்றுமுற்றும் பார்க்கும் கண்கள் கொண்டவன்; முழுநிலவு போன்றமுகத்தில் தவழும் மயக்கும் புன்முறுவல்; இந்த முகத்தின் காந்தி பார்ப்பவர்களைக் கவர்ந்திழுத்துத் தன்வயமாக்கிக் கொண்டுவிடுகின்றதாம்; அவர்களுடைய மனதில் ஆழப்புகுந்து விளங்குகிறானாம் கண்ணன்.

பசுபால-பால-பரிஷத்விபூஷணம்

                சிசுரேஷ சீதல-விலோல-லோசன
        ம்ருதுல-ஸ்மிதர்த்ர-வதனேந்து-சம்பதா
                மதயன்மதீய-ஹ்ருதயம் விகாஹதே
                (ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-1.71)

இப்போது நமக்கு ஒருவாறு புரிகிறது- ஏன் கோபிகையர் இவன்பால் தம்மையும் அறியாமல் ஈர்க்கப்பட்டனர் என்று! இதே லீலாசுகர் (பில்வமங்களர்) இன்னொரு ஸ்லோகத்தில் (3.99) ராஸக்ரீடை புரியும் கிருஷ்ணனை விவரிக்கும்போது, மூவுலகங்களையும் தன் அழகான உருவத்தால் ஈர்ப்பவன்- ஆகர்ஷிப்பவன்- எனப்பாடுகிறார். மாலைநேரத்தில், வனத்திடையில், நிலவொளியில், மூவுலகையும் தன்னிடம் ஈர்க்கும் அதிசயமான உருவம் படைத்தவன்; ஆயிரக்கணக்கான கோபகன்னிகைகளால் சூழப்பெற்ற ஆநிரை மேய்க்கும் கண்ணன்- கோபாலகிருஷ்ணன்.

ஸாயங்காலே வனாந்தே குஸுமிதஸமயே
                ஸைகதே சந்த்ரிகாயாம்
        த்ரைலோக்யாகர்ஷணாங்கம் ஸுரநர-கணிகா-
                மோஹனாபாங்க-மூர்த்திம்
        ஸேவ்யம் ஸ்ருங்காரபாவைர்- நவரஸ பரிதைர்-
                கோபகன்யா சஹஸ்ரைர்-
        வந்தேஹம் ராஸகேலீர- மதிஸுபகம்
                வச்ய கோபால-கிருஷ்ணம்.
                (ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-3.99)

நாரயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரி, உபநிடதங்களே கோபகன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். ‘அக்ரே பச்யாமி,’ எனத்துவங்கும் நாரயணீயத்தின் கடைசி தசகம்.

குழந்தைகள் பாலப்பருவத்திலிருந்து யௌவனப்பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது அலாதிஅழகு படைத்தவர்களாகக் காணப்படுவர். குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கில்லை! இந்தப்புதிய எழில் தோற்றத்தை ‘ஆர்த்ர யௌவனவனம்’– புதியதான இளமை எழில் எனப்போற்றுகிறார். ‘அது மன்மதனை வெல்லக்கூடிய அழகுடையது; மேகக்கூட்டங்களின் தொகுப்பு போன்றது;  பிருந்தாவனப் பெண்களிடத்தில் அன்புபூண்டு விளங்குவது; ஆபரணங்களை அணிந்து புன்முறுவல்கொண்ட தாமரைபோன்ற முகத்தையுடையது; கோவைப்பழம்போன்ற உதட்டை உடையது; அதனை நான் வணங்குகிறேன்,’ என்கிறார்.

கந்தர்ப்ப-ப்ரதிமல்ல-காந்தி-விபவம்
                காதம்பினீ-பாந்தவம்
        ப்ருந்தாரன்ய-விலாசினீ-வ்யஸனினம்
                வேஷேண பூஷாமயம்
        மந்தஸ்மேர-முகாம்புஜம் மதுரிம
                வ்யாம்ருஷ்ட-பிம்பாதரம்
        வந்தே கந்தலிதார்த்ர-யௌவன-வனம்
கைசோரகம் சார்ங்கிண
                (ஸ்ரீ க்ருஷ்ண கர்ணாம்ருதம்-3.5)

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

Series Navigationகன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!கோவர்த்தனமென்னும் கொற்றக்குடை

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.