ஆலவித்தில் ஆல் ஒடுங்குதல்: ’இந்திய அறிதல் முறைகள்’

Aravindhan_Neelakandan_Saandhini_Ramasamy_india_arithal_Muraigal

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தூர்தர்ஷனில் வெளியான நல்ல நிகழ்ச்சிகளில் ’டர்னிங் பாய்ண்ட்’ என்பது முக்கியமான இடம் பிடிக்கும். சுரத்தில்லாத பாடப்புத்தக அறிவியலின் சலிப்பிலிருந்து பல இந்திய மாணவர்களை நடைமுறை அறிவியல் பக்கம் திருப்பியதில் இந்நிகழ்ச்சிக்குப் பெரிய பங்கு உண்டு. முக்கியமாக மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஆய்வாளர் யஷ்பால் அவர்கள் அளிக்கும் விடை அடுத்த நாள் எங்கள் வகுப்பில் நண்பர்களிடையே விவாதிக்கப்படும். ஜன்னல் இடைவெளி வழியே வெளிச்சம் நுழைவதுபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவியலின் சாத்தியங்களும் பிரம்மாண்டமும் எங்களுக்கு புலனாயின. குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய அறிவியல் பாய்ச்சலான குவாண்டம் அறிவியல், சார்புக்கொள்கை போன்ற கடினமாகத் தத்துவங்களுக்கு சிக்கலற்ற திறப்புகள் கிட்டும். ஒரு முறை மாணவன் ஒருவன் கேட்ட கேள்வி என்னை அடுத்த பல வருடங்கள் காலம்-நேரம் பற்றிய அறிவியலை அறியத்தூண்டின. அவனது கேள்வி இதுதான்: அடிப்படையான நான்கு சக்திகளில், ஈர்ப்புச் சக்தி வலு குறைந்தது எனக்கூறியிருந்தீர்கள். ஆனால் ஆகப்பெரிய அண்டங்களையும் மலை கடல்களையும் நிலைத்திருக்க வைக்க அதிக வலுகொண்ட சக்தி வேண்டாமா? ஈர்ப்பு விசை போதாதே?
யஷ் பால் அளித்த பதில் முழுவதுமாக நினைவில்லாவிட்டாலும் அதில் ஒரு வரி “அறிவியலில் நாம் அறிந்திருப்பது கைவிரல்நுனியளவுதான். அறிய முடியாததை திறமையாக யூகிக்கவும், தத்துவார்த்தமாக அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப்பார்ப்பதும் கூட அறிவியலின் வழிமுறைதான் என இந்த நூற்றாண்டில் நாம் உணர்ந்திருக்கிறோம்.” அவர் ஐன்ஸ்டைனின் சார்புத் தத்துவம், குவாண்டம் இயற்பியலின் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும்போது மேற்சொன்ன பதிலைத் தெரிவித்தார். அறிவியல் என்றால் நிரூபணவாதம் மட்டுமே என நினைத்துவந்த எனக்குப் புதிய உலகம் திறந்தது போலத் தோன்றியது. கணிதம் வழியே அறிவியல் கணிப்புகளைச் சென்றடைவதும், கடவுளைத் தத்துவத்தில் தேடும் வழிமுறையாகவும் அறிவியலை அணுகும் விதத்தை ஸ்டீபன் ஹாக்கிங்கின் ’அ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ எனும் நூலைக் கொண்டு அறிமுகப்படுத்தினார். சிறு வயதில் இப்படிப்பட்ட பார்வைக் கோணம் எனது பெளதிக மற்றும் வானியல் ஆர்வத்தைத் தக்கவைப்பதற்கும் கற்பனையைத் தூண்டிவிடுவதற்கும் வலுவான காரணமாக அமைந்தது. யஷ்பால் சொன்ன வரி எங்கோ சென்று உட்கார்ந்து இன்றுவரை அறிவியலின் சாத்தியங்களையும் எல்லைகளையும் கூர்ந்து கவனித்து வரச்செய்கிறது.
அரவிந்தன் நீலகண்டனும், சாந்தினிதேவி ராமசாமியும் இணைந்து எழுதியிருக்கும் “இந்திய அறிதல் முறைகள்” எனும் புத்தகம் நாம் அறிவியல் என அறிந்த பல்துறைகளை இந்திய அறிதல் முறையான சமன்வயப்பார்வையை முன்வைத்து இணைத்துக்காட்டுகிறது. சூழியல், நீர் வேளாண்மை, வானியல், மருத்துவம், மரபணு என இக்காலத்தில் நடந்துவரும் பல அறிவியல்/தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் முட்டி நிற்கும் சிக்கல்களை நிரூபண அறிவியலைத்தாண்டி, விரிவாக எப்படி புரிந்துகொள்ளலாம் என குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டுகிறது.
இந்திய அறிதல் முறைகளிலும், பண்டைய ஞானத்திலும் இன்றைய அறிவியல் சிக்கல்களுக்குத் தீர்வு இருக்கிறது எனும்படியாக இதைப் புரிந்துகொள்ளக்கூடாது. ராவணன் சீதாதேவியைக் கடத்திச்சென்ற ஊர்தி இன்றைய விமானத் தொழில்நுட்பத்தின் அடிப்படை என்றோ, அண்டத்தின் ஒலி ஓம் எனும் பிரணவமந்திரத்தை ஒத்திருப்பதையோ, நாசா வெளியிட்டிருக்கும் புகைப்படம் கட்டாயம் ராமர் பாலம் தான் எனவோ இந்நூல் நிரூபிக்க முனையவில்லை. சொல்லப்போனால் இந்த புத்தகத்திலேயே இது போன்ற அதீத செய்திகளுக்கான கடும் கண்டனங்கள் காணப்படுகின்றன.
இந்திய அறிதல் முறைகள் என்பதோடு, கீழத்திய தத்துவ இயலாக தாவோ, பெளத்தம், சாங்கிய தரிசனம் போன்றவற்றில் அமைந்திருக்கும் தத்துவங்கள் பண்டைய கால ஞானம் என ஒதுக்காமல் அவற்றின் துணையோடு இக்காலத்திய அறிதல் முறைகளை எப்படி விரிவாக்கிப் புரிந்துகொண்டு முன்னெடுத்துச் செல்லலாம் என ஒரு வரையறையை இந்த புத்தகம் அளிக்கிறது. தத்துவங்களிலிருந்தும் கலையிலிருந்தும் பெறப்படும் முழுமை நோக்கிய பார்வையை நாம் இன்றைய அறிவியல், மானுடவியல், சமூகவியல் போன்ற துறைகளுக்கு போட்டுப்பார்க்கும்போது அவை செல்லும் தூரத்தை உணர்வதற்கான ஆரம்ப முயற்சி மட்டுமே இந்த புத்தகத்தின் நோக்கம்.
கலை இலக்கிய விமர்சகரான வெங்கட் சுவாமிநாதன் ’கலை ஒரு முழுமைக்கான விழைவு’ எனும் பார்வையைக் கொண்டிருந்தார். இந்திய மெய்யியலைக்கொண்டு அறிவியலின் சாத்தியங்களை அலசும்போது வரும் முழுமை நோக்கிய பார்வை எவ்விதத்தில் நமக்கு உதவும்?
இந்த புத்தகத்தில் முன்வைத்திருக்கும் இணைப்பு முறையிலான அறிதல் முறை புதுவிதமான சிந்தனையைக் கோருகிறது. யஷ்பால் முன்வைத்த தத்துவ இணைப்பைப் போல நிரூபணவாத அறிவியல் இன்று செல்லும் திசைக்கு மேலும் வலுவை அளிப்பதற்கு நாம் உள்முகத் தேடலை அதனுடன் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. அகத்திலும் புறத்திலும் சமவயமாக இணையும் ஒரு உயிரியக்கத்தை நாம் உணரும்போது பண்டைய ஞானம் கூட நவீன வாழ்வுக்குப் புதிய அர்த்தத்தை அளிக்கும்.
“பிரபஞ்சம் எனும் புத்தகத்தில் மானுடனின் வாழ்வு ஒரு அடிக்குறிப்பு மட்டுமே,” எனும் விதியை மதிக்கும் பன்முகப் பண்பாடு காலத்தைத் தாண்டி தனது ஞானத்தை விரிவாக்கம் செய்ய இயலும். மனிதமுதல்வாதத்தைக் கொண்ட மதங்களில் புற அறிவியல்களான வானியல், இயற்பியல் நிகழ்வுகளையும் அக அறிதல்களான உளவியல், சாக்த தரிசனம், பிரக்ஞாபூர்வ நிலைகள் போன்றவற்றை இணைப்பது கடினம். ஸ்டீபன் ஜெ கெளல்ட் எனும் அறிவியலாளர் “இந்தப் பிரபஞ்சம் எத்தனை சிக்கலானது என உணரத் தொடங்கிய நாளிலிருந்து நாம் நம் அகமும் எத்தனை ஆழமானது என்பதை உணர்ந்துவிட்டோம்” , என தனது ’கான்வர்ஸேஷன் அபௌட் தி எண்ட் ஆஃப் டைம்’ புத்தகத்தில் எழுதுகிறார். நம் புற உலகின் பரிமாணங்கள் விரிய விரிய நமது அக இயக்கத்தின் ஆழம் சிக்கலாகிக்கொண்டே போவதாகக் குறிப்பிடுகிறார்.இருப்பை உணர்வதற்குத் தேவையான கருவிகளென நமது மொழி, கலை, இலக்கியம், புராணங்கள், தத்துவங்கள், தொன்மங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் நூலாசிரியர்கள் அறிவியல் நிகழ்த்திய பாய்ச்சலைத் தீவிரமாக ஆராயவும் ஆழமாக அறிந்துகொள்ளவும் கூட அவை உதவும் என்கிறார்கள். தத்துவத்திலிருந்து கிளை பிரிந்து புற உலகின் அமைப்பை உணர்ந்துகொள்ள உருவான அறிவியல், மீண்டும் பண்டைய தத்துவத்தையும், மெய்யறிவையும் தேடித் தன்னை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இதற்கு கீழத்திசை அறிதல் முறைகளை மேலதிகக் கருவிகளாகக் கொண்டு நம் கேள்விகளை ஆழமாக அணுக முடியும். இதை நூலாசிரியர்கள் எழுதிய ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர முடிகிறது.
Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஇந்திய அறிதலும் உயிரியலும்” எனும் கட்டுரையில் நமது அடிப்படை கட்டுமானமான உயிர் பற்றிய விவாதத்தை, அது பற்றிய அறிவியல் கோட்பாடுகளை நமது பாரத மெய்ஞான தரிசனங்களின் ஒளியில் ஆராய்கிறார்கள். நீர் என்பது இரண்டு பகுதி ஹைட்ரஜனும், ஒரு பகுதி ஆக்ஸிஜனும் எனப் பிரித்துக் கூறுவது போல உயிரின் பகுதிகளைப் பற்றி அறிவியல் விளக்கும் காலம் வெகு தூரம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் நினைத்திருந்தனர். ஒரு உயிரினத்தை உடைத்துப்பார்த்து அதன் பகுதிகளை அறிந்துகொள்ளமுடியலாம் எனும் முனைப்பில் தோன்றிய அறிவியல், ஒரு முழுமையானப் பார்வையைக் கைக்கொள்ள தத்துவத்தின் ஆழத்தை அறிய வேண்டியதிருக்கிறது. உயிர் என்பது ஒரு கூட்டு இயக்கம். கோடானு கோடி நுண்ணுயிர்களின் தன்னடையாளத்தின் (self-identity) அடையாளமாக ஒரு உயிர் அமைந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு நுண்ணுயிரும் தனக்குள் ஒரு பேரியக்கமாக இருக்கிறது. உயிரின் அடிப்படைகளை ஆராயப்புகும்போது சிறு உலகங்களின் தொகுப்பாக அவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு நுண்ணிய துளியில் உயிரின் ஒட்டுமொத்த சாத்தியங்களை அறியும் தன்மை. இது அறிவியலாளர்களுக்கு மிகப் பெரிய தாவல். இருபதாம் நூற்றாண்டின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் இப்படிப்பட்ட பார்வையைக் கொண்டு தன்னையே விரிவுபடுத்திக்கொண்டது.
இதற்கு உதாரணமாக, ஜகதீஷ் சந்திர போஸின் ஆய்வுகளை நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என, ஜ.ச. போஸ் லண்டன் ராயல் சொசைட்டியில் தன் கருத்துகளை முன்வைத்தபோது கேலிக்கு உள்ளானார். இதேபோல சந்திரசேகருக்கும், ராமானுஜனுக்கும் நடந்திருப்பதையும் படிக்கிறோம். ஒரு சாதாரண இயற்பியலாளராக மட்டும் இருந்தால் போஸ் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியாது. தாவரங்கள் புறச்சூழல்களுக்கு ஏற்றாற்போல மின்னழுத்த எதிர்வினைகளைக் கொண்டிருக்கும் என போஸ் அறிவித்தபோது அவர் இயற்பியலிலிருந்து உயிரியல் ஆய்வாளராக தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். தொட்டால்சுருங்கும் செடியில் மின்னழுத்தம் பற்றி ஆராய்ந்தவர் “எந்த இடத்தில் பெளதிகச் செயல்பாடு நிற்கிறது எந்த இடத்தில் அது ஓர் உயிரியக்கச் செயல்பாடாக மாறுகிறது என ஒரு தெளிவான வரையறையை நம்மால் வகுக்க முடியாது,” என்கிறார். ஒரு தத்துவ ரீதியான சிக்கலாக தன் ஆராய்ச்சியை மாற்றிக்கொண்டபோதுதான் அவரால் ஒரு தெளிவான பார்வையை முன்வைக்க முடிந்திருக்கிறது. அதற்கான எந்தத் தடையுமில்லாது வழியமைத்தது போஸின் இந்திய அறிதல் முறை பற்றிய ஞானம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியப் பண்பாட்டில் உயிர் என்பதற்கான வரையறை காலாகாலமாக மிக விரிவானத் தளத்தில் வைத்து விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். அண்டமும் பிண்டமும், அனைத்திலும் ஒடுங்கும் ஆன்மா, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என உயிரின் எல்லை என்பது நமது பெளதிக இருப்பைத் தாண்டிய விஷயமாக அனைத்திலும் ஒடுங்கும் தன்மையுடையதாக இந்திய மெய்யறிவு உருவகித்திருக்கிறது. ஒரு அறிவியலாளராகத் தன்னை உணர்பவர் செடிக்கு அருகே உருவாகும் மின்னழுத்தத் தன்மையை அதன் பிரத்யேகத்தன்மையாக ஆராய்வார். அவரால் உயிரை, மனித பெளதிக இருப்பைக் கடந்ததாக நினைத்துப்பார்க்க முடிந்தது. அந்தத் தடை ஏதுமற்று தனது உயிரியல் ஆய்வை மிக விரிவான தளத்தில் வைத்துப்பார்த்த போஸ் தாவரங்களுக்கு இருக்கும் உணர்ச்சி பரிணாமத்தைக் கண்டடைந்தார்.
டார்வின் தனது புகழ்பெற்ற உயிரினத்தின் தோற்றம் பற்றிய ஆய்வில் இந்த முடிவை எட்டியிருக்க முடியும் ஆனால் அவரது நம்பிக்கை இத்திசையில் அவரைச் செலுத்தவில்லை என்கிறார்கள் நூலாசிரியர்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருப்பது போல மிக உயரிய நரம்பியல் இயக்க இழை தாவரங்களுக்கும் இருப்பதை போஸ் கண்டுபிடித்தார். இப்படிப்பட்ட அறிதல் இருப்பதற்கான சாத்தியத்தைக் கூட டார்வின் நம்பியிருக்க மாட்டார். இந்திய மெய்யறிவு மறைமுகமாக நமது படைப்பில் தடைகளை உடைத்து ஆய்வாளர்களின் சிந்தனைகளை விரிவாக்குவதை போஸ் வாழ்விலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒரு சிந்தனையாளர் எவ்விதமான தடைகளுமற்று தனது கற்பனையை விரித்து ஆய்வு செய்ய அவரது தத்துவ மற்றும் மெய்யியல் ஞானம் துணை நிற்கும் என்பதற்கு இது பட்டவர்த்தமான உதாரணம். அவருக்கு இருக்கும் சிந்தனைச் சட்டகம் எத்தனை விசாலமாக அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமைகிறதோ அத்தனை சுதந்திரமாக அவரால் பல தளங்களை ஆராய முடியும்.
அதே போல நூலாசிரியர்கள், நகரங்கள் உருவாக்குவதற்கு பேட்ரிக் கெடிஸ் எனும் வடிவமைப்பாளருக்கு காஞ்சிபுர நகரம் எப்படி ஒரு மக்கள் உயிரியக்கமாகத் தோற்றம் அளித்தது என்பதையும் விவரிக்கிறார்கள். இதன் ஆதாரமாகக் கொண்டு அவர் டெல் அவிவ் நகரத்தை உருவாக்கினார். நகரம் என்பது நமது உடலின் நரம்பு மண்டலம் போல என்கிறார். சுத்தப்படுத்தும் இயக்கம் ஒரு புறம், அழுக்குகளை வெளியேற்ற முனையும் இழை மறுபுறம், அதே நேரத்தில் பழசைக் களைந்து புது செல்களை உருவாக்கும். இதுபோன்ற ஒரு அமைப்பை பண்டையகால காஞ்சிபுற நகர்புற வடிவமைப்பில் பேட்ரிக் கெடிஸ் கண்டிருக்கிறார். எறும்பு முதல் யானை வரை, அண்டம் முதல் பிண்டம் வரை என நமது வாழ்வின் சகல பரிமாணங்களும் முழுமை நோக்கிய பயணமாக இருந்ததையே அவர் காரணமாகக் காட்டுகிறார். கோயில் எனும் அமைப்பும் அதைச் சுற்றி அமையும் சமூக வட்டங்களும் மனிதனின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காத ஒரு அபாரமான பேரியக்கமாக அவனை உயர்த்தியதை மெய்யறிவின் கொடை என்கிறார் ( இதே உதாரணத்தை மார்க் சூக்கர்பர்க்கும் குறிப்பிட்டதை நூலாசிரியர்கள் சுட்டியிருக்கிறார்கள்)
இந்திய அறிதல் சட்டகங்கள்” எனும் கட்டுரை மெய்ஞான சட்டகங்கள் எப்படி ஒரு மாபெரும் வலைப்பின்னலாக ஒன்றை ஒன்று தொடர்புறுத்தி அமைந்திருக்கின்றன எனபதாக அமைந்துள்ளது. இன்றைய இணைய வெளியில் கூட இத்தனை தொழில்நுட்பச்சாதனங்கள் பெற்றிருப்பவர்கள் மத்தியில் கூட இந்த கேள்வி இருக்கும். அதாவது, பண்டைய இந்தியாவில் உருவான புராணக் கதைகளும், தொன்மங்களும், புரியாத பாஷையில் ஓதப்பட்ட வேத மந்திரங்களும், உபநிஷதங்களும் மறை ஞானங்கள் போன்ற பலவும் இன்றைய வாழ்வுக்கு என்ன தருகின்றன? அவை தேவையற்றவை எனவும் நம்மை பின்னுக்கு இழுக்கும் வல்லமை கொண்டவை என்பதே அவர்களது வாதம்.மெய்ஞானத்தைப் பற்றிப்பேசும்போது அவர்கள் பண்டைய சமூகத்தில் நிலவிய சதி எனும் உடன்கட்டை ஏறுதலுக்காக கோபப்படுவார்கள், உபநிஷத கதைகளைக் கூறும்போது பிராமணீயத்தின் ஆக்டோபஸ் கரம் இப்படிப்பட்ட கதைகளின் மூலமே இன்னும் நம்மைத் தாழ்த்திவைத்திருக்கிறது என்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நவீன அரசியல்/சமூக சட்டகங்கள் கூட ஏமாற்றமானதாகவும் தேவையற்றதாகவும் இருக்கும். ஏதோ ஒரு உடோபிய கொள்கைக்காகச் சேவை செய்பவர்களாக மாறியிருப்பவர்கள். ஆனால், இந்திய ஞானம் என்பதை ஒரு சத்திய வாக்ககாகவோ, திட்டவட்டமான உண்மை எனவோ பாராமல் அதை ஒரு அறிதலுக்கான சாதனம் எனப்பார்க்கும்படி நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள்.
சகபரிணாமம் எனும் கருதுகோளைப் புரிந்துகொள்வதில் அறிவியலாளர்களுக்கு ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றி கட்டுரை பேசத்தொடங்குகிறது. “வலியது வாழும்” எனும் டார்வினின் கொள்கையைப் புரிந்துகொள்ள இந்த இணைய பரிணாமம் எனும் அமைப்பு உதவும். இன்னும் சொல்லப்போனால் இது டார்வினின் கொள்கையை இன்னும் விரிவான தளத்தில் பேசி முன்னகர்த்தியுள்ளது.
“குதிரையின் பரிணாம வளர்ச்சியையும் அது தின்னும் புல்லின் பரிணாம வளர்ச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். பரிணாம அடைந்தது குதிரையோ அது தின்னும் புல்லோ அல்ல. அவை இரண்டுக்கும் இடையில் இருந்த உறவே பரிணாம மாற்றம் அடைந்தது”
மேற்சொன்ன கோட்பாட்டை நோக்கி ஆராய்ந்த க்ரெகொரி பேட்ஸன் எனும் மானுடவியலாளர் உயிரியலின் பரிணாம வளர்ச்சிக்குத் தத்துவார்த்தப் பார்வையைத் தந்தவர். தத்துவ நோக்குக்குச் செல்லும்போது ஒரு விரிவான சட்டகத்தில் பல்துறை பின்னணியில் ஆராயவேண்டியுள்ளது. பரிணாம வளர்ச்சி சார்ந்த ஆய்வுகள் சூழலியலை சந்தித்தது இப்படித்தான். ஒட்டுமொத்த பூமியே ஒரு கூட்டு உயிரினம் எனும்போது வலியவை, எளியவை என்பதன் எல்லைகள் நெகிழ்ந்துவிடுகின்றன. ஆலவித்தில் ஆல் ஒடுங்கி இருப்பதைப் போல காரண-காரியத்தொடர்பில் இரு பக்கங்கள் ஒன்றுக்குள் ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன. காரணமில்லாமல் காரியமில்லை. ஆனால் காரணத்தில் செயலுக்கான விதை உறங்குவதாக நாம் சிந்திக்கும்போது காரியத்தின் விசாலம் நம் கற்பனையையும் தாண்டுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையில் நம்மால் தொடர்பில்லாத பல விளைவுகளைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. நமது மரபில் இப்படிப்பட்ட சிந்தனையினாலேயே நம்மால் அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்க முடிகிறது. அண்டத்தின் புரதப்பொருட்கள் நம் பிண்டத்தையும் அடைத்திருப்பதை அறிவியல் வளர்ச்சியில் நாம் கண்டுகொண்டுவிட்டாலும், நம் மரபில் இந்த இரு தொடர்பற்ற காரணங்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி இருப்பதை உணர்ந்திருந்தார்கள். அதனாலேயே அவர்களால் உயிர் எனும் கூட்டியியக்கத்தின் அமைப்பில் எவ்விதமான எளிய உயிர்களையும் கூட விலக்க முடியவில்லை. அது தாவரங்களாயினும் கூட.
சத்காரியவாதம் எனும் மெய்யறிவில், காரணத்துக்கும் காரியத்துக்கும் இருக்கும் அடிப்படையான தொடர்பு வேறொரு கோணத்தில் அணுகப்படுகிறது. செயல் நடப்பது ஏதோ ஒரு காரணத்தால் என நினைப்பதை வேறொரு ஆழத்துக்குக் கொண்டு சென்று காரணத்திலேயே காரியத்தின் விதை அமைந்திருக்கிறது என யோசிக்கமுடிகிறது. இவற்றை விரிவாக விவாதிக்கும் நூலாசிரியர்கள், அரிஸ்டாட்டிலின் இயக்க விதிகளை மறுதலிப்பதல்ல தங்கள் நோக்கம். மாறாக, சத்காரியவாதத்தினால் அவ்விதிகளை மேலும் ஆழமாகச் சிந்திக்கலாம் என்பதே ஆகும் என்று குறிக்கிறார்கள்.
தவறான அணுகுமுறைகள்” என்ற கட்டுரை பண்டைய மறைஞானங்களை நாம் பொதுவெளியில் விவாதிக்கும்போது கவனம் கொள்ள வேண்டியிருப்பதைப் பேசுகிறது. நவீன அறிவியலின் விளைவுகளுக்கான காரணத்தை நம் மரபில் தேடும்போது களைய வேண்டிய முன்முடிவுகளைப் பற்றிய கட்டுரை. திட்டவட்டமான விதிகளைக் கொண்டு நாம் பண்பாட்டு அடையாளங்களை அளக்க முடியாது. தொன்மையான சடங்குகளையும், பண்டைய கதைகளையும் நாம் இணைக்கத்தொடங்கும்போது நமது தற்காலத்திய விழுமியங்களை அவற்றில் போட்டுப்பார்ப்பது அபத்தத்திலேயே முடியும். வரலாற்றை நாம் காலமெனும் நதியாக உருவகப்படுத்துகிறோம், ஆனால் அதன் அடியாழத்தில் நன்னீரும் கண்ணுக்குத்த்தெரியாத ஊற்றுகளும் பலதிசைகளில் பெருகி ஓடுகின்றன. ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மோதி ஒரு பிரவாகத்தை நமக்குத் தெரியாதவாறு உருவாக்கிச் செல்கின்றன. இப்படிப்பட்ட சமன்வய நோக்கு இந்திய தத்துவ மரபையும் மதங்களையும் இணைக்கின்றது. மனித முதல்வாதத்தைக் கொண்டு விலங்குகளை வென்றெடுத்த வரலாறாக மனிதகுல வரலாற்றை ஒருவர் எழுதமுடியும். ஆனால் அதில் பரிணாம வளர்ச்சியும், சூழியல் மாற்றங்களும் நிலை பெற்ற சக்தியாக அமைந்திருந்ததை மறைக்கும்போது குறுக்கல்வாதமாகவே அமையும்.
அதேபோல, சிறுதெய்வ வழிபாடும் வைதிக மரபும் சமன்வயமாக இந்திய மரபில் நிலைத்திருந்தன என்பதற்கு இளங்கோவின் சிலப்பதிகாரப்பாடலைக் கொண்டு நூலாசிரியர்கள் விவரிக்கும் இடம் உண்மையில் தமிழறிந்தவர்களுக்கு இந்திய மெய்யறிவு பற்றிய மிகப்பெரிய கண்திறப்பாகிறது.

ஆனத்தோல் போர்த்துப் புலியின் உரியெடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்

எனும் வேட்டுவச் சடங்கில் உக்கிரமான சிறுதெய்வ வழிபாடும் வேதாந்தப் பெண் வழிபாடும் இணைந்திருந்த சித்திரத்தைக் காட்டுகிறது. இதன் வழியே புறப்பட்டு ஒரு சிந்தனையாளர் ஆரிய – திராவிட ஆதிக்கக் கருத்தாக்கத்தை எதிர்க்கும் சிந்தனைக்குள் சென்றுவிடமுடியும். சமன்வயத்தின் உச்சத்தில் உன்னதமாக்கம் (submilation) மூலம் இந்திய மரபு ஆழமான படிமங்களை உருவாக்கியுள்ளது என்பதை உணர முடிகிறது. பண்பாட்டு வரலாற்றை “நிரூபிக்கும்” வழிமுறைகள் குறுக்கல்வாதத்திலும், எதிர்ப்பு நிலைகள் உருவாக்குவதிலும் சென்று சேர்வன. மாறாக, சமன்வய சிந்தனை தரும் சித்திரம் நமது தொன்மமரபை மேலும் நெருக்கமாக உணரச் செய்கிறது.
பண்டைய பண்பாடுகளை மீட்டுருவாக்கும்போது புராணக்கதைகளின் அகக் குறியீடுகளைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் வருவது மிக இயல்பானது. நோவாவின் படகு எனும் கதையாக்கம் மூலம் நிறுவப்படும் மனிதமுதல்வாதமாகட்டும், நதியைப் பிளக்கும் மோஸஸ் கதையாகட்டும், மலையைத் தூக்கி நிற்கும் கிருஷ்ணனின் புராணமாகட்டும் நேரடியான அர்த்தத்தைக் கொண்டு புரிந்துகொள்வது மிகப்பிழையான வாதமாகப் போகும் என்பது நூலாசிரியர்களின் அடிப்படை வாதம். புராணக்கதைகளுக்கென ஒரு திட்டவட்டமான புற வரலாறும், அதன் வழியாக வளர்ந்த தொன்மமும் மையதரிசனமாகின்றன. மையதரிசனங்களை தத்துவங்களாக மாற்றுவதன் மூலம் கர்ணபரம்பரைக் கதைகளில் நிலைபெறச்செய்துவிடமுடியும். ஆனால், காலப்போக்கில் அக்கதைகள் சுட்டி நின்ற அகதரிசனங்கள் அர்த்தமிழந்து கதாநாயக பிம்பங்களை முன்னிறுத்தும் கதைகளாக நிலைகற்களாக மாறிவிட்டன. தகவல் சுனாமிகளுக்கிடையே வாழும் இக்காலத்தில் நாம் புராணங்கள் சுட்டி நின்ற அக உலகை உணர்ந்துகொண்டால் மட்டுமே அவற்றிலிருந்து அறிதல் சாத்தியமாகும். இல்லாவிட்டால் கதைகளின் வழியே ஒரு வலுவான ஆதிக்க சக்திகளின் புராணங்கள் மட்டுமே எஞ்சும். முப்புரம் எனும் புராண மரபு தோன்றிய விதத்தைக் கூறும் இக்கட்டுரை நமக்கு பண்படை மரபின் ஆன்மாவை தொட்டு உணரும் வழியைக் காட்டுகிறது. இதில் பெறப்படும் அறிதல் நமது சமகால வாழ்க்கைப்பார்வையை ஆழமாக்கும். “ராமர் பாலமும் மருந்துவாழ் மலையும்” பற்றி தற்போது நிலவும் கட்டுக்கதைகள் புராண மரபைப் புரிந்துகொள்வதில் நமக்கு இருக்கும் சிக்கல்களைக் காட்டுகின்றன.
மொழி என்பது அடக்குமுறை ஆட்சியின் முதல் பலி எனும் ஆர்வெல்லிய தடத்திலிருந்து மொழி என்பது பரிணாம வளர்ச்சியின் கருவியாகப் பார்க்கும் பார்வையை முன்வைக்கிறது “புராணங்களின் மொழி” கட்டுரை. இதற்கு அடிப்படையாக ஜோசஃப் கேம்ப்பெல்லின் தொன்மம் பற்றிய சட்டகங்களைக் கொண்டு ஆராய்கிறார்கள் நூலாசிரியர்கள். புராண மனிதரில் தொடங்கித் தற்கால மனிதர்கள் வரை வந்த அகப்பயணத்தில் மொழியின் பங்கு பற்றி நமது சிந்தனைகளை இந்திய மெய்யறிவு மேலும் விரிவாக்குகிறது. இதைப் புரிந்துகொள்ள நாம் ஆதி மனிதனின் பிரக்ஞை பற்றி அறிந்திருக்க வேண்டும். இதற்காகப் பல நாடுகளின் ஆதி நாகரிகங்களில் இருக்கும் ஒற்றுமையை நூலாசிரியர்கள் ஆராய்கிறார்கள். ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் ஷாமன் நடனம், கில்காமேஷ் புராணத்தின் மரணமில்லா நிலையை எட்டச் செய்யும் பயணம், காளியின் உக்கிரம், கபாலாவின் சுயமறியும் ஞானம் எனத் தொடர்பில்லாத பல இனக்குழுக்களின் பழக்கங்களில் பல ஒற்றுமைகளைக் காண்கிறோம். ஆதி மனிதனின் மனதில் உருவான குறியீடுகளும், மனதின் இயங்கு முறையும் பிரக்ஞாபூர்வமாக உறைந்திருக்கின்றன. நமது புராணங்களாகவும், தொன்மங்களாகவும் இவை வடிவுகொள்ளும்போது சற்றேறக்குறைய ஒரேவிதமான திசையில் இவை அனைத்தும் செல்வதை நம்மால் உணர முடிகிறது. மொழியிலும் இதன் பாதிப்பு கிடப்பதால் ஆதி மொழியாக ஒன்று இருப்பதைக்கொண்டு மொழியியல் துறை தனது அலசலை விரிவாக்குகிறது.
“வேற்றுகிரகவாசி உலகுக்கு வந்தால் சற்றேறக்குறைய அனைத்து மொழிகளும் ஒன்றைப்போலவே ஒலிப்பதை உணர்வார்” எனும் கூற்றுக்கேற்ப, மொழி எனும் வடிவம் பல வடிவங்களாக சிதறிக்கிடந்தாலும் அடிப்படை அக மொழி ஒன்றாக இருக்கும் வாய்ப்புள்ளதா? ஒரு செயலைச் செய்வதற்கு முடிவெடுக்கும் தருணம், அதே செயலைச் செய்யத்தொடங்கும் நேரம் போன்றவற்றைக் கணக்கு கொண்ட போது இவற்றிற்கெல்லாம் முன்னரே சுரப்பிகள் சுரப்பதற்காக மூளையில் மின்னியக்கம் தொடங்கிவிடுகின்றது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஆக, மனதின் மொழி வேறாகவும் நமது பேச்சு மொழி வேறொன்றாகவும் இருப்பதில் மானிடருக்கெல்லாம் அகமொழி ஒன்றாகவே இருக்க வாய்ப்புள்ளதா என அறிவியல் ஆராய்ந்து வருகிறது. இந்திய மெய்யியலில் மொழியின் பல அடுக்குகளாக பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி போன்ற அனைத்தும் பிரக்ஞையின் பல நிலைகளான ஜாக்ரத, ஸ்வப்ன, ஸுஷுப்தி, துரியம் போன்றவற்றோடு கொண்ட தொடர்பைக்கொண்டு மொழியின் தோற்றத்துக்கும் தன்னுணர்வுக்குமான இணைப்பை பத்மா சுதி எனும் ஆய்வாளர் ஆராய்வதை நூலாசிரியர்கள் விவரிக்கிறார்கள்.
கல்வியும் களமும்” கட்டுரை பேசும் சிக்கல் நமது மனோபாவம் சார்ந்த ஒன்று. மக்காலே கல்வி திட்டத்தை நம்மீது சுமத்தியதில் இந்தியர்கள் இழந்த பாரம்பரியக் கல்வி குறித்தானது. பாரம்பரியக் கல்வியை இழந்ததால் நாம் இழந்தது பன்முகப் பண்பாடு உருவாக்கித்தந்த வேளாண்மை அறிவு, சூழியல் ஞானம், நீர்வேளாண்மை முறைகள், நமது தத்துவ அடிப்படை மீது எழும்ப வேண்டிய சிந்தனைச் சட்டகங்கள் எனப் பற்பல இழப்புகள். இக்கட்டுரை மேலும் அதிக தகவல்களோடு ஆழமாக எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த மெய்ஞான அறிவும், நமது பாரம்பரியக் கல்வி முறையும் இருநூறு ஆண்டுகளில் அழிந்த சித்திரம் வெளிப்பட்டிருக்க வேண்டும். புத்தகத்தின் பேசுபொருளை மீறிப்போவதாக இருந்தாலும் இச்சித்திரம் இந்திய அறிதல் முறைக்கான அவசியத்தை மேலும் வலியுறுத்தி இருக்கும் எனத் தோன்றியது.
இந்த நூலை பெரும் உவகையோடு படித்து முடித்தேன். யஷ்பால் பதிலை ஆழமாகப் புரிந்துகொள்ள பெளதிக அறிவியலை ஆழக்கற்று கேள்விகளின் தொடர்சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இளமைக்கால வாசிப்புக்குப் பிறகு பல்துறை ஞானங்களை இணைத்துப்பார்க்கும் பெரிய வாசலை எனக்கு இந்த புத்தகம் திறந்து விட்டிருக்கிறது. இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையின் மேல்வாசிப்பிலும் ஒரு வாழ்நாளையே செலவழிக்க முடியும். இந்த நூலின் ரெண்டாம் பாகங்களாக ஒவ்வொரு அறிதல் முறைகளையும் விரிவாக அறிமுகப்படுத்த வேண்டியதை நூலாசிரியர்களிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். அரவிந்தன நீலகண்டனும் சாந்தினிதேவி ராமசாமியும் தமிழ் அறிவுலகத்துக்கு பெரும் திறப்பை அளித்துள்ளனர். கூறுமுறையில் ஒரு சிந்தனைத் தொடர்ச்சியை தீவிரமாக முன்வைத்துள்ளதால் சில இடங்களில் கவனச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த எளிய சிக்கலைத் தாண்டி மீண்டும் அணுகும்போது நமது மூளையில் சில பகுதிகளைப் புதுப்பித்த சந்தோஷம் உருவானது.
பிளவுபடுத்தும் கருத்தாக்கங்களும், குறுக்கியல்வாதங்களும், பிரிவினையைத் தூண்டும் சித்தாந்தங்களும் இருக்கும் சூழலில் இந்த நூல் மிக ஆரோக்கியமான சிந்தனையை முன்வைப்பது புத்துலகை சுவாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது. நூலாசிரியர்கள் கூறுவது போல, “நம் இயற்கை வளங்களும் நம் பண்பாட்டு வளங்களைச் சரியான விதத்தில், எல்லாத் தளங்களிலும் இணைப்பது எவ்வாறு என்பதற்கான ஒரு மிக எளிமையான அறிமுகக் கையேடு” எனும் விதத்தில் இந்த நூலை மிகப்பெரிய கோட்டையின் கதவைத் திறக்கும் கதவாகக் காண்கிறேன். மானுடத்தின் வரலாற்றையும், அவன் கடந்து வந்த பண்பாட்டையும் ஒருங்கிணைத்து சிந்திக்க வேண்டிய அவசியத்தையும், வழிமுறையையும் விவாதிக்க வழிவகுத்த நூலாசிரியர்கள் நமது பணிவான வணக்கங்களுக்கு என்றென்றும் உரித்தானவர்கள். அவர்கள் இதைத் தொடர்ந்து பல விரிவான தலைப்புகளில் புத்தகங்களை எழுத வேண்டியது தமிழ் சூழலுக்கு மிக மிகத் தேவையான ஒன்றாகும்.

தொடர்புள்ள பதிவு: நூல் வெளியீட்டு நிகழ்வு
இணையத்தில் வாசிக்க: இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள
எழுதியவர்கள்: அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி ராமசாமி
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு: 2016
விலை: ₹ 225.00

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.