நெய்யும் சர்க்கரையும்

honey-ghee-jaggery-sugar-carbon_Milk_Cashew_Pista_Dhaal_Grams_Raisins_Sweets

ழாவது வகுப்பு என நினைக்கிறேன்.  அறிவியலில் தனிமங்கள் பற்றிய பாடம்.  உலகின் அத்தனை பொருட்களும் தொண்ணூற்றியிரண்டு தனிமங்களால் ஆனவை.  எல்லா பொருட்களுமா?  மேஜை, செங்கல், மணல், நாய், நான், அமராவதி ஆறு, அணு குண்டு.  எல்லாமுமா?  ஆமாம்.  நம்பமுடியவில்லையே.  சரி அது போகட்டும்.  அடுத்தது, சர்க்கரை நெய் இரண்டும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூன்று மூலகங்களால் செய்தவை.  இதை என்னால் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை.  இரண்டும் எனக்கு அப்போது மிகவும் பிடிக்கும்.  (இப்போதும்தான், சாப்பிடத்தான் மனம் வருவதில்லை.)  கார்பன் என்றால் கன்னங்கரேல் என்ற அடுப்புக்கரி, மீதி இரண்டும் கண்ணுக்கு தெரியாத வாயுக்கள்.  மூன்றும் சேர்ந்து எப்படி சர்க்கரையோ, நெய்யோ ஆக முடியும்?  அப்படியே வைத்துக்கொண்டாலும், சர்க்கரை நெய் இரண்டும் ஏன் ஒன்றுபோல் இல்லை?  சர்க்கரை தண்ணீரில் கரையும், இனிக்கும், வாசனை கிடையாது, உருகாது, பாகாக உறைய வைக்கலாம்.  நெய் உருகி, தண்ணீரில் கலக்காமல் (ரசத்தில், ம்ம்ம்) மிதக்கும், என்ன வாசனை, அதற்கென தனி ருசி.  ஒப்புதல் இல்லாவிட்டாலும் பாடப் புத்தகத்தில் போட்டிருப்பதால் நம்ப வேண்டி இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் (கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் இவற்றோடு சில கனிமங்களும் கலந்த) தோசை.  தொட்டுக்கொள்ள…  சர்க்கரையும் நெய்யும் குழைத்து இரண்டின் நல்ல குணங்களையும் கலந்து…  தின்னும்போது கரி, வாயு எதுவும் என் ஆனந்தத்தில் குறுக்கிடவில்லை.
இந்த கட்டுரையின் சாரமும் அதுதான்.  உப-நுண்துகளில் (sub-atomic particles) தொடங்கி பொருளின் கட்டுமானம் அதிகரிக்க, புதுப்புது குணங்கள் உண்டாகின்றன.  அதற்கேற்ப விஞ்ஞான அறிவு பல மட்டங்களில் அறியப்படுகிறது.  செல்;லின் குணங்களை ஆராய்வது செல் பயாலஜி, பல உயிரினங்கள் அமேஸான் மழைநீர்க்காடு போன்ற ஒரு குறிப்பிட்ட இடத்தில் பின்னிப் பிணைந்திருப்பதை புரிந்துகொள்;ள சூழலியல்.  இரண்டிற்கும் வித்தியாசமான வழிமுறைகள்.  ஒரு மட்டத்தை புரிந்துகொண்டு அதன் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும்போது மற்ற மட்டங்களில் சேகரித்த உண்மைகள் பயன்படுவது இல்லை.
சில கனமான கேள்விகளுக்கு (Big questions) விஞ்ஞானத்தால் பதில் அளிக்க முடியாது, புனித நூல்களால்தான் முடியும் என்று சமயவாதிகள் வாதிடுவது உண்டு.  அப்படிப்பட்ட சில கேள்விகளை சேர்த்திருக்கிறேன்.  அவற்றின் பதில்களை ஒவ்வொருவரும் தாமாகவே தேடுவதில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இருப்பதாக காட்டுவதும் என் நோக்கம்.

Science_Theory_Space_big_bang

னித அனுபவத்துக்கு எட்டாத முன்னொரு காலத்தில், அளவிடமுடியாத அடர்ந்த சக்தி மற்றும் வளைந்த காலவெளி.  நம் அறிவுக்கு புலப்படாத ஒரு நிலை.  பதினான்கு பில்லியன் (1.37 ஆயிரம் கோடி) ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த மாபெரும் வெடிப்பில் (Big Bang) உண்டான மிகுவெப்பத்தில் (எத்தனையோ கோடி டிகிரி சென்டிக்ரேட்) உப-நுண்துகள்கள் அண்டவெளி எங்கும் சிதறின.  இவை ஒன்றுடன் ஒன்று மோதி புதுப்புது துகள்களை உருவாக்கின.  வெப்பம் சற்று தணிந்ததும் (ஐயாயிரம் டிகிரி), அவற்றில் ஒரு சில இரண்டுவிதமான துகள்களாக இணைந்தன.  இவையே மிக கனமான (நுண்துகள்களைப் பொறுத்தவரையில்) ப்ரோடான், நியுட்ரான்.  இவை சேர்ந்து அணுவின் நடுக்கோளத்தை அமைத்தன.  பிரபஞ்சம் முழுவதும், சூரியன் மற்றும் கோள்கள் உள்பட, அணுவில் இருந்தும், அதை இறுக்க கட்டிவைத்திருக்கும் சக்தியில் இருந்தும் உருவானவை.  நம் பூமியில் படிந்த அணுக்களில் இருந்து உயிர்கள் தோன்றி காலப்போக்கில் மாறுபாடுகள் அடைந்தன.  ஆகவே, ஒருவிதத்தில் எல்லா உயிர்களும், நாமும், நட்சத்திரங்களும் ஒன்றுதான்.  இந்த கருத்தை மிகமிக அழகாக சித்தரிக்கிறது பாரதியாரின் பாடல்.

நான்

Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
………………..
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கும் முதற் சோதி நான்

நுண்துகள்களின் இயக்கத்தையும், மாற்றங்களையும் கணித சமன்பாடுகள் மூலம் க்வான்ட்டம் மெகானிக்ஸ் விவரிக்கிறது.  அதன் முடிபுகள் தினம் காணும் நியுடனின் உலகுக்கு ஆச்சரியமானவை.  மின்னணு பரிமாணங்கள் கொண்ட துகளாகவோ, உருவமற்ற அலையாகவோ இருக்கலாம்.  ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் தோற்றம் தரலாம்.  ஓரிடத்தில் இருந்து இன்னோரு இடத்துக்கு வெவ்வேறு பாதைகளில் நகரலாம்.  அப்படி போகும்போது அதன் வேகத்தையும், இடத்தையும் துல்லியமாக அளக்க இயலாது.  இந்த குணங்கள் விசித்திரமாகப் பட்டாலும் நுண்துகள்கள் இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே இயங்குகின்றன.  (ஒரு கோடி கார்பன்-14 அணுக்கள், தனியாகவோ கூட்டுப்பொருளாகவோ, இருந்தால் அவற்றில் ஒன்று அடுத்த ஒரு நாளில் நைட்ரஜன்-14 ஆக மாறும்.  குறிப்பிட்ட எந்த அணு சிதையும் என்று யாராலும் நிச்சயமாக சொல்ல இயலாது.  ஆனால், ஒன்று ஒரு மின்னணுவை வெளிப்படுத்தும் என்பது நிச்சயம்.  யாரும் அந்த மாற்றத்தை தடுக்க முடியாது.)  இருந்தாலும், அந்த இயற்பியல் துறையை ஆதாரமாக வைத்து பல நவீன நம்பிக்கைகள் எழுந்துள்ளன.

ப்ரார்த்தனைக்கு பரிசளிக்கும் கடவுள் அணுவின் வெற்றிடத்தில் ஒளிந்திருக்கிறார்.
இறந்த காலத்தை மாற்ற முடியும்.
மனத்தின் சக்தியால் தொலைவில் இருக்கும் பொருள்களை இயக்க இயலும்.
தீவிரமாக ஆசைப்பட்டால் மட்டுமே போதும், டிஸ்னி கதைகளைப் போல, கனவு நனவாகும்.
மனித உடலைச் சுற்றிலும் ஜீவசக்தி வியாபித்து இருக்கிறது.
அழிவில்லாத மனித ஆன்மா இறப்புக்குப்பின் உடலில் இருந்து பிரிந்து மாறுபட்ட உலகில் (Multiverse) காலமெல்லாம் சஞ்சரிக்கும்.

இந்த கூற்றுகளில் (statement) எதற்கும் க்வான்ட்டம் மெகானிக்ஸில் ஆதாரம் கிடையாது.  உண்மை அல்ல என்றாலும், இவை ஒருவனின் உபாதைகளை தணித்து, தன்னம்பிக்கையை வளர்த்து, அவனை ஊக்குவிக்கும் என்றால், அது தவறாகுமா?

Multiverse_Multiple_Universe_Big_Bang_Theory

ஹைட்ரஜனில் தொடங்கி அணுவின் ப்ரோடான் (எலக்ட்ரான்) எண்ணிக்கை ஒவ்வொன்றாக அதிகரிக்க வெவ்வேறுவிதமான தனிமங்கள் உருவாகின்றன.  ஒன்று பளபளக்கிறது, இன்னொன்று நிலைகொள்ளாமல் நழுவுகிறது, இன்னொன்று ஜடமாக இருக்கிறது.  வைரமாக ஜொலிக்கும் கார்பனில் ஒரேயொரு ப்ரோடான் (அதன் நேர் மின்னூட்டத்தை தணிக்க ஒரு எலக்ட்ரான்), நியுட்ரான் சேர்ந்ததும், அது காற்றில் பெரும்பகுதியாக கலந்திருக்கும் நைட்ரஜனாக மாறுகிறது.  ஏன் இந்த அதிசயம்?
தனிமங்கள் தமக்குள் கூட்டுப்பொருளாக புணரும்போது அவற்றின் தனிப்பட்ட குணங்கள் மறைந்துவிடுகின்றன.  ஹைட்ரஜன் ஆக்ஸிஜனில் எரிந்து நீராக மாறும்போது அதற்கு புதிதான அதிசய குணங்கள்.  நீரில் எரியும் சோடியத்திற்கும், கிருமிகளை அழிக்கும் க்ளோரினுக்கும், அவை இணைந்த சோடியம் க்ளோரைட் என்ற சமையல் உப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிமங்களில் கார்பன் மட்டும் தனி.  அதன் அணுக்கள் தங்களுக்குள் முடிவில்லாமல் இணைந்து நீண்ட கயிறாகவோ, சட்டங்களாகவோ, பின்னப்பட்ட வலையாகவோ, அடுக்குகளாகவோ, கோளங்களாகவோ அமைகின்றன.  அத்துடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், கந்தகம், பாஸ்பரம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, டிஎன்ஏ என்ற விதவிதமான, எண்ணில் அடங்கா பொருட்களை உருவாக்குகின்றன.  கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இவற்றால் கட்டப்பட்டாலும் நெய் மற்றும் சர்க்கரையின் வித்தியாசமான நுண்துகள் அமைப்புகள்.  அதனால், அவற்றின் குணங்களும் வேறு.
மிக சாதாரணமான (சும்மா ஒரு பேச்சுக்கு) அமீபாவில் கோடிக்கணக்கான ஜட நுண்துகள்கள்.  அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு அமீபாவாக கோர்வையுடன் செயல்பட வைப்பது எது?  அமீபாவில் இருந்து, மனிதன் வரை எல்லா உயிர்களுக்கும் சில பொதுவான குணங்கள்.  இருபத்திநான்கு அமினோ ஆசிட்களால் தேவையான ப்ரோட்டீன்களை உருவாக்குகின்றன.  ஆக்ஸிஜனில் மின்னணுவை சேர்த்து சக்தி பெறுகின்றன.  (ஆழ்கடலில் ஒருசில உயிரிகள் விதிவிலக்கு.)  ஒருசில வைரஸ் தவிர, டிஎன்ஏ வழியாக அடுத்த தலைமுறைக்கு தகவல் அனுப்புகின்றன.
தனிமங்கள் தங்களுக்குள் இணையும்போதும், உயிரற்ற பொருட்கள் இயங்கும்போதும் அவற்றுக்கு இரண்டு அடிப்படை விதிகள்.  சக்தியின் மிக கீழான நிலையையும், களேபரத்தின் (entropy) உச்சத்தையும் அடைதல்.  இவற்றுக்கு நாம் அறிந்தவரையில் விலக்கே இல்லை.  வர்ணம் பூசாத இரும்பு ஈரமான காற்றில் துருப்பிடிக்கிறது.  மல்லிகையின் வாசம் காற்றில் கலந்து பரவுகிறது.  மலையருவி தரையில் வீழ்ந்து, நதியாக ஓடி கடலில் கலக்கிறது.  ஆனால், கடலின் உப்பு தானகவே ஓரிடத்தில் சேர்வதில்லை.
உயிரிகள் இந்த இரண்டு விதிகளையும் மீறுவதாக தோன்றலாம்.  புவியின் ஈர்ப்பையும் மீறி தாவரங்கள் உயருகின்றன.  இரத்தம் உறையாமல் குழாய்களில் பாய்கிறது.  மயிலின் இறகில் ஒரே சீராக அடுக்கப்பட்ட கண்கள்.  இப்படிச்செய்ய சக்தி தேவை.  இந்த சக்தி சூரியனில் இருந்து வருகிறது.  இலைகள் அந்த ஒளிசக்தியை  சர்க்கரையில் சேர்த்துவைக்காவிட்டால், மயிலின் இறகு மட்டுமல்ல, எண்ணற்ற கனவுகளும் எல்லையில்லா கற்பனையும் கொண்ட மனித மூளையும் இல்லை.
ஒருசில மணிகள் வாழ்ந்து மடிகின்ற பூச்சிகளில் இருந்து, மூவாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் செம்மரங்கள் வரை இயற்பியல் விதிகளை மீறும் விளையாட்டை ஆடுகின்றன.  ஏன்?  பூத்து, பழுத்து, விதைகளை இறைப்பதும், நூற்றுக்கணக்கான முட்டைகளை பரப்புவதும் ஒன்றே ஆட்டத்தின் குறிக்கோள் என நினைக்கலாம்.  ஆனால், மூளையும், நரம்புகளும் விரிவடைந்த பிராணிகளின் உந்துதலை புரிந்துகொள்வது அத்தனை சுலபம் அல்ல.  இதுவும் நான் எழாவது படித்தபோது நடந்தது.  நானும், இன்னும் இரண்டு நண்பர்களும் பள்ளிக்கு போகும்போது ஆற்றுப்பாலத்தின் ஆரம்பத்தில் காத்திருப்போம்.  சரியாக ஒன்பது:பதினைந்துக்கு முன்னாள் இராணுவத்தினர் (எக்ஸ்-சர்விஸ்மென்) நடத்திய எக்ஸ்ப்ரெஸ் பஸ் எங்களை கடந்துசெல்லும்.  கண்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொள்ளும் சாதாரண பஸ் இல்லை.  குளித்தலை, கரூர், திண்டுக்கல் என்று பெரிய ஊர்களில் மட்டுமே நிற்கும் விரைவு வண்டி.  அதற்கென்றே சிறப்பான பார்த்ததும் பரவசமூட்டும் சாக்லேட் நிறம்.  அதன் டிரைவருக்கு நாங்கள் சல்யுட் வைப்போம்.  அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவிப்பார்.  இதற்காகவே அடித்துப்பிடித்து, சாப்பாட்டை அள்ளிப்போட்டு, புத்தகப்பையுடன் ஒன்பதுக்குமுன் வீட்டிலிருந்து கிளம்புவோம்.  எங்கள் திருப்திக்கு என்ன காரணம்?

Carbon_Hydrogen_Oxygen_God_CHON_OH_Molecules_Atoms_Particles_Cells

னித மூளை அறிவியல் ஆராய்ச்சிக்கு எட்டாததாக இருந்தது.  மற்ற உடல் உறுப்புகள் பௌதீக-இரசாயன விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்கினாலும் மனதின் அற்புதங்களுக்கு அறிவியல் தத்துவங்களால் விளக்கம் தரமுடியாது என்ற கொள்கை பரவியிருந்தது.  கடந்த முப்பது ஆண்டுகளாக, அன்டோனியோ டமாஸியோ மற்றும் விலயனூர் ராமச்சந்திரன் நடத்திவரும் ஆராய்ச்சியில் இருந்து மனம் நரம்பணுக்களின் பின்னல்களில் மூளை எழுதி வைக்கும் சித்திரங்களின் தொகுப்பு என்று தெரிகிறது.  நம் உணர்ச்சிகள் மூளையில் நிகழும் வேதியியல் மாற்றங்கள்.  மிக முக்கியமான காதலுறவையும் தாய்மை அன்பையும் ஆக்ஸிடாஸின் என்கிற நியூரோட்ரான்ஸ்மிட்டர் உண்டாக்குகிறது.  பரவசம், நம்பிக்கை, மனச்சோர்வு எல்லாம் டோபமின் மற்றும் செரடோனின்  மண்டலங்களின் கட்டுப்பாட்டில்.  இப்படி பிரித்து அறிவதால் அந்த உணர்ச்சிகள் அர்த்தமோ மதிப்போ இழக்கின்றனவா?  A mid summer night’s dream கதை வளர்வதற்கு முக்கிய காரணம் அதில் வரும் பலருக்கு மூளையில் தாறுமாறாகப் போன வேதியியல் மாற்றங்கள் என்ற விஞ்ஞான அறிவு அந்நாடகத்தை ரசிக்கையில் காணாமல் போய்விடுகிறது.  அதேபோல, வானவில் நீர்த்திவலைகளால் சிதறிய சூரியவொளி என்பதால் அதன் அழகு குறைவதில்லை.
யிரினத்தின் உடலையும் உயிரையும் பிரித்துப் பார்க்கிறோம்.  உயிரை மேவிய உடல், உயிர் மற்றும் மெய் என்று தனித்தனி எழுத்துக்கள் இந்த மனப்பான்மையின் அடையாளங்கள்.  உடலின் பாகங்களை ஒன்று சேர்த்தாலும் அவற்றுக்கும் மீறியது உயிர்.  மனிதன் என்று வரும்போது, ‘நான்’ என்கிற ஆன்மா தன்னிச்சையாக, சக்தி வாய்ந்த மூளையையும், அதன் வழியாக உடலையும் ஆட்டுவித்ததாக நம்பப்பட்டது.  தற்போது, தத்துவம் அறிவியல் இரண்டிலும் விவாதிக்கப்படும் கேள்வி: தன்னிச்சை (free will) இருக்கிறதா?
மூளையின் இயக்கத்தை ஆராயும் விஞ்ஞானிகள் தன்னிச்சைக்கு இடம் தருவதில்லை.  மரபணுக்களின் அடிப்படையில் உருவான இயல்பு, அந்த இயல்பு சூழ்நிலைகளோடு உறவாடியதால் உருவான வாழ்க்கை சரிதம், எதிர்பாராத நிகழ்வுகள் (stochasticism) இவற்றை வைத்து நாம் செயல்படுவதாக நினைக்கிறார்கள்.  ‘ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒருவன் முன்பு எடுத்த தீர்மானத்தை, வாழ்க்கை என்கிற நாடாவை திருப்பி (இது பழைய உவமை, ஒளித்தகடை முந்தைய காட்சிக்கு தள்ளி) அந்த கட்டத்துக்கு போகமுடிந்தால், மறுபடி அதையே செய்வானா?’ என்பது அவர்கள் கேள்வி.
காலன்டரை 1965 ஜுலைக்கு திருப்பி சென்னை கிறித்துவக் கல்லூரியின் வேதியியல் வகுப்புக்கு போனால் (எத்தனை முறை வேண்டுமானாலும்), கல்யாணி, அமர்நாத் என்ற இருவரும் தங்களுக்குள் கவரப்படுவார்கள் என்று நிச்சயமாக சொல்லலாம்.  ஆகவே, அவர்களுக்கும் மற்ற உயிரினங்களைப் போல தன்னிச்சை இல்லை என்று கொள்ளலாமா?
சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கும் இதுமாதிரி ஒரு எண்ணம் இருந்ததாக தெரிகிறது.

….மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்….
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

புறநானூறு 192.

கல்லை உருட்டி வேகமாகப் பாயும் ஆற்றின் போக்குக்கு தக்கபடி செல்லும் தெப்பம் போன்ற நம் வாழ்வு.  சூழ்நிலை ஒருவனை செதுக்குகிறது.  சாதனையும் பெரிதில்லை, சாதாரணமும் அற்பமில்லை.  ‘முறை’ என்பதற்கு விதி என்று பொருள் கொள்வதுண்டு.  உளவியல் சொல்லும் இயல்பு (pநசளழயெடவைல) என்று இந்தக்காலத்தில் வைத்துக்கொள்ளலாம்.
கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன், அவற்றால் உருவான ஒரு அமினோ ஆசிட், அமினோ ஆசிட்களை கோர்த்த ப்ரோட்டீன் – நுண்துகளின் பரிமாணம் வளர, குணங்களும் மிகப்பெரிய அளவில் மாறுகின்றன.  அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் தனி மனிதன், ஒரு வீட்டில் வசிக்கும் அங்கத்தினர்களால் ஆன குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த சமுதாயம் என்று விரியும்போது ஆசைகள், திட்டங்கள், பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.  மனித சமுதாயங்களின் அமைப்பை சமூகவியல் விவரிக்கிறது.  அதைவிட சிறப்பாக, தனிநபர்களின் சுதந்தரம், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்கு இரையாகும் மனிதனின் மகிழ்ச்சி, இவற்றை ரஷ்ய, வங்காள, மலையாள எழுத்தாளர்கள் அலசியிருப்பதாக தோன்றுகிறது.

Elements_of_the_Human_Body)2_Carbon_Oxygen_H2_Hydrogen_OH_CHO

ல்லா உயிரினங்களும் சேர்ந்து உயிர் மண்டலம்.  அதன் முயற்சி விரிவடைதல், வேறுபடுதல், நிலைத்தல்.  உயிர்கள் பொதுவாக இருந்தாலும் ஒன்றுபோல் இயங்குவதில்லை.  காலப்போக்கில், உயிரினங்களாக (species) பிரிந்து வாழ்கின்றன.  ஒரு இனத்தின் உயிரிகளும் ஒன்றுபோல இருப்பதில்லை.  காரணம், உலகின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதம் என்பதுடன் எல்லா பகுதிகளும் சதாகாலம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  சூழ்நிலையில் ஏற்படும் பௌதீக மாறுதல்களைத் தவிர உயிரனத்தொகுதியும் மாறுகிறது.  இதுவரை மனித வரலாறு காணாத எய்ட்ஸ் வைரஸ், காற்றில் 500 பிபிஎம் (0.05 சதம்) கார்பன் டைஆக்ஸைட், இவற்றுடன் வாழ நாம் பழகித்தான் ஆக வேண்டும்.  சூழல் மாறும்போது ஒரு இனத்தில் ஒருசில மடிந்தாலும், இல்லை இனம் முழுவதுமே அழிந்தாலும் மற்றவை பிழைக்கும் என்பது இயற்கையின் திட்டம்.  DDT-யில் நசிந்த கோடிக்கணக்கான கொசுக்கள், ஒட்டுமொத்தமாக மறைந்த டைனஸார் இனம் எதற்கும் அது கண்ணீர் விடுவதில்லை.  இரக்கமின்றி இயற்கை செய்வது சரியா?
மற்ற இனங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று நினைப்பதாக தெரியவில்லை.  ஆனால், மனிதனுக்கு மட்டும் உலகம் பிறந்தது தனக்காகவும், அது உள்ளவரை தானும் நிலைக்கப் போவதாகவும் ஒரு அசட்டு நம்பிக்கை.  மகாபாரதத்தின் உரையாடல் (சிறு மாற்றத்துடன்) நினைவுக்கு வருகிறது.

உலகில் அதிசயம் எது?
உயிரினங்கள் காலப்போக்கில் பலமுறை மாறுபட்டும் (நஎழடஎந) அழிந்தும் (evolve) வந்திருப்பதை பார்த்தும் தன்குலம் நிரந்தரமாக இருக்கும் என மனிதன் நினைக்கிறான்.  இதைவிட வேறு என்ன அதிசயம் இருக்க முடியும்?

மனிதனின் முடிவு எப்படி எப்போது வரும்?  இயற்கையில் ஒரு உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்தபட்ச எல்லைக்கு கீழே இறங்கினால், தன்னை புதுப்பிக்க இயலாமல் மறைந்துவிடும் என்பதை சமீபத்தில் அழிந்த பறவை, மீன் இனங்கள் நிரூபிக்கின்றன.  மனிதன் வித்தியாசமானவன்.  அவன் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பை (அது எது?) மீறுவதால் மறைவு நிகழும் என்பது என் கணிப்பு.  இந்த நூற்றாண்டு முடிவதற்குள் கானகங்களில் கட்டுப்பாடின்றி திரியும் பெரிய விலங்குகள் அனைத்தும் அல்லற்பட்டு அழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அப்படி நேர்ந்தால், தியடோர் பாஸ்கர் சொன்னது போல, நகரங்களில் வாழும் மனிதனுக்கும் அதே கதிதான் காத்திருக்கிறது.
ம் ‘இல்லமான’ பாலவீதியில் (Milky Way) சூரியனைப்போல் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள்.  விண்வெளியில் பால்வீதியைப்போல் இன்னும் பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நட்சத்திர குடும்பங்கள்.  ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமைத் தத்துவத்தை நிரூபிக்கும் வகையில் பிரபஞ்சமும், விண்வெளியும் விரிந்துகொண்டே செல்வதாக அறிகிறோம்.  நட்சத்திர குடும்பங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று விலகிக்கொண்டே எதை நோக்கி வேகமாகப் போகின்றன?  இப்படியே விரிந்து சென்றால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, நட்சத்திரங்களும், கோள்களும் மறைந்து எல்லாம் வெறும் வெற்றிடமாக முடிந்துவிடுமா?

oOo

2 Replies to “நெய்யும் சர்க்கரையும்”

  1. அருமையான கட்டுரை. முதல் வாக்கியத்தில் இருந்து கடைசி வரை கைப்பிடித்து கூடவே அழைத்து சென்றது உங்கள் எழுத்து. ஆங்காங்கே இடையில் வந்த ஆர்வமூட்டும் உதாரணங்கள் புது எண்ணங்களையும்.. நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் அசைப்போட்ட படியே தொடர வைத்தது.
    நாளை முதல் ஒவ்வொரு கணமும் தனிமங்களின் கூட்டு நிகழ்வின் அம்சங்களை கூர்ந்து நோக்கும்படி செய்துவிட்டது உங்கள் எழுத்து… கீழே நகல் எடுத்த உங்கள் பத்திகள் மனதை மிகவும் கவர்ந்தது..
    ++++
    தனிமங்கள் தமக்குள் கூட்டுப்பொருளாக புணரும்போது அவற்றின் தனிப்பட்ட குணங்கள் மறைந்துவிடுகின்றன. ஹைட்ரஜன் ஆக்ஸிஜனில் எரிந்து நீராக மாறும்போது அதற்கு புதிதான அதிசய குணங்கள். நீரில் எரியும் சோடியத்திற்கும், கிருமிகளை அழிக்கும் க்ளோரினுக்கும், அவை இணைந்த சோடியம் க்ளோரைட் என்ற சமையல் உப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
    தனிமங்களில் கார்பன் மட்டும் தனி. அதன் அணுக்கள் தங்களுக்குள் முடிவில்லாமல் இணைந்து நீண்ட கயிறாகவோ, சட்டங்களாகவோ, பின்னப்பட்ட வலையாகவோ, அடுக்குகளாகவோ, கோளங்களாகவோ அமைகின்றன. அத்துடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், கந்தகம், பாஸ்பரம் போன்ற பிற தனிமங்களுடன் சேர்ந்து ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்பு, டிஎன்ஏ என்ற விதவிதமான, எண்ணில் அடங்கா பொருட்களை உருவாக்குகின்றன. கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இவற்றால் கட்டப்பட்டாலும் நெய் மற்றும் சர்க்கரையின் வித்தியாசமான நுண்துகள் அமைப்புகள். அதனால், அவற்றின் குணங்களும் வேறு.
    ++++

    வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.