kamagra paypal


முகப்பு » சிறுகதை

ஒரு சுவர்  குட்டிச்சுவரானது

kuttisuvar

பழமையில் ஊறிய அந்த ஊரின் பிரதான வீதியில் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை 1928ல் இரும்பு கேட் வைத்து கட்டிய ஐந்தறைகளை உள்ளடக்கிய நாற்சதுர முதற்கல் வீடு அது. கேட்டின் இரு பக்கத்திலும், இரு தூண்கள்.. அவ்விரு தூண்களுக்கு மேல்,  கற்களில் செதுக்கிய அழகிய இரு அன்னங்களின் உருவங்கள். அதற்கு உகந்தாற்போல் வீட்டின் ஒரு தூணில்.; பித்தளைத்தகட்டில் “அன்னவாசா” பெயர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மற்றறையை தூண்ல் வீட்டுககு சொந்தக்காரன் பட்டத்தோடு முருகேசம்பிள்ளையின் பெயரை விளம்பரப்படுத்தியது.

அன்னங்களின் ஞாபகமாக கேட் முதலியார் அந்தப் பெயரை வீட்டுக்கு வைக்கவில்லை. அவர் மனைவி அன்னலஷ்மியின் சீதனக் காணியில், சீதனப் பணத்தில் கட்டிய வீடது. அதனால் அந்தப் பெயரை அவ்வீட்டுக்கு வைத்திருக்காவிடில் அவர் மாமனார் வீட்டில் பூகம்பம் வெடித்திருக்கும். வீட்டுக்கு இரும்பு கேட்வைத்து முதலில் கட்டியதால் அவருக்கு கேட் முதலியார் என்ற பெயர் வரவில்லை. எல்லாம் வெள்ளைக்காரனுக்கு முன் கை கட்டிஇ வாய் பொத்தி நின்று அவன் இட்ட வேலைகளைச் செய்ததிற்கும், பல தடவை இளித்து சேர் போட்டதிற்கும், ஊரில் மற்றவர்களை விட தான உயர் சாதி என்று அரசுக்கு நிரூபித்ததற்குமாக கிடைத்த கௌரவப் பதவி கேட் முதலியார். பல நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்ததாலும் மரியாதைக்காக அவருக்கு கிடைத்த பட்டம் அது.  ஒரு காலத்தில் முதலியார் என்ற பட்டம் உள்வர்கள் யாழ்ப்பாணத்தில் உயர்ந்த கௌரவமுள்ள பணக்கார்களாக மதிக்கப்பட்டனர். அதில் முருகேசம் பிள்ளையரும் ஒருவர்.

தூண்களுக்கு இருபக்கத்திலும்; துணையாக வீட்டடின் கௌரவத்தை பாதுகாக்கும் மதில்கள்., அந்த மதிலுக்கு; வயது முப்பதுக்கு மேல் இருக்கும். அதன் அகலம் மட்டும் சுமார் ஆறு அங்குலம.;  உயரம் ஆறடி. கருங் கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு காலத்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதற்கு தான் உயர்ந்தவன், பெலமானவன், முதிர்ந்தவன் , அகண்ட மனம் உள்ளவன் , அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. அவ்வளவு உயரத்துக்கு மதிலை முருகேசம்பிள்ளை கட்டுவதற்கு அவரது வயது வந்த அழகான மகள்களும் ஒரு காரணம். களுசரைப் பெடியன்கள் தன் இரு பெண்களை பார்த்து கண் அடிக்கக் கூடாது என்பதும் அக் காரணங்களில்; ஒன்றாக இருந்திருக்கலாம்.

சுவர் உருவாக்கப்பட்ட போது  பளீச்சென்று வெள்ளையடித்து புது மாப்பிள்ளை போல் அழகாகக் காட்சியளித்தது. தலைமயிர்களைப் போல கூரான கண்ணாடித் துண்டுகள் அதன் மேல் பகுதியை அலங்கரித்தன. “விளம்பரம் ஒட்டப்படாது” என்று கொட்டை எழுத்தில் இரு சுவர்களிலும் ஆரம்பத்தில் எழுதியிருந்தாலும்; யாரோ சில புத்தி ஜீவிகள் “ ஆனால் எழுதலாம்” என்ற சொற்றொடரையும் சேர்த்து எழுதிவிட்டு தமக்குள் தங்கள் கெட்டித்தனத்தை பாராட்டிக் கொண்டார்கள். சுவரில் பிக்காசோவை நினைவுப் படுத்தி கிராப்டி வரைந்தார்கள் சித்திரக் கலைஞர்கள்.

“குட்டிச் சுவர்கள் இதுகள்” என்று சுவர் தனக்குள் எழுதியவர்களைத் திட்டிக்கொண்டது. தானும் ஒரு காலத்தில் குட்டிச் சுவராகப் போகிறோமே என்று அதற்குத் தெரியவாப் போகுது.

கேட் முதலியார் சுவரை உயர்த்தி கட்டியதற்கு அன்னலஷ்மியின் அழகையும் இரு பெண்களையும் காரணம் காட்டினார்கள் ஊர் சனங்கள். ஊர் இளசுகள் அவள் மேல் எங்கே கண்வைத்து விடுவார்களோ என்று பயந்து தான் அவர் மதிலை உயர்த்தி கட்டினார் என்பது பலர் கொடுத்த விளக்கம். உண்மையில் அன்னலஷ்மி அன்னத்தைப் போல் அழகானவள் தான். வீட்டுக்கு வெளியே அவளைக் காண்பது அரிது. கோயிலுக்குக் போவதானாலும் காரில் ; கேட்முதலியாரின் பாதுகாப்புடன் தான் போய் வருவாள். டீரைவரை நம்பி தனியாக விடமாட்டார். முருகேசம்பிள்ளையைத் திருமணம் செய்ய முன், அன்னலஷ்மிக்கு அவளின் மாமன் மகன் மைனர் மணியத்துடன் தொடர்பு இருந்ததாக ஊருக்குள் கதைத்துக் கொண்டார்கள். இதையெல்லாம் அறிந்து தான் மனைவியின் பாதுகாப்பு கருதி; சுவரின் உயரத்துக்கும் இரும்பு கேட்டின் வலிமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் கேட் முதலியார் முருகேசம்பிள்ளை.

“ஆறடி மதில் வீடு,” “அன்ன வாசா” , “கல் வீடு” , “கேட் முதலியார் வீடு”, “பேய் மதில் வீடு” இப்படி அடுக்கடுக்காக வீட்டுக்குப் பல பெயர்கள் அவ்வூர் வாசிகளால் சூட்டப்பட்டது. கேட் முதலியார் மறைந்து சில வருடங்களில் கேட்முதலியார் வீடு என்ற வீட்டுப் பெயர் மறையத் தொடங்கியது. அந்தச் சுவருடன் ஒரு வருஷத்தில் இரு தடவை கார்கள்; மோதி இருவர் அதே இடத்தில் துடிக்கத் துடிக்க இறந்ததினால் பேய் மதில் வீடு என்ற பட்டம் வலு வடைந்தது. மதிலைக் காக்க அதற்கு பக்கத்தில் ஒரு சூலம் வீட்டுக்காரர்களால் நட்டப்பட்டது. மதிலுக்கு செக்கியூரிட்டி வேலை செய்ய சூலம் தோன்றியவுடன் சுவருக்கு தன்னைப்பற்றி தற்பெருமை. இனி ஒருவரும் கண்டபடி தன்னோடு மோதி களங்கத்தை உண்டுபண்ண முடியாது என்ற தைரியம் அதற்கு.

முதலியாரின் மறைவிற்குபின் வீடு அவரின் ஒரே மகள் ஜெயலஷ்மிக்கு 1942ல் சீதனமாக கைமாறியது. முதலியாரின் பிணம் கேட்வழியே எடுத்துச் சென்றால் இன்னொரு பிணம் அதைத் தொடர வேண்டி வரும் என்று முதியோர்கள் ஆலோசனை சொன்னார்கள்.  சுவரின் ஒரு பகுதியை இடித்து, வழி அமைத்து முதலியாhரின் பிணத்தை சுடலைக்கு எடுத்துச் சென்றார்கள். பாவம் சுவர். தன்னை உருவாக்கியவருக்காக தன்னில் ஒரு பகுதியை சிபிச் சக்கரவர்த்தியைப் போல் தியாகம் செய்தது. சிறுது காலம் அங்ககீனமாக சுவர் காட்சியளித்தது. அந்த சுவரின இடைவெளியூடாக சிறுவர்கள் வீட்டு வளவுக்குள் வந்து மல்கோவா மாமரத்தையும,; கொய்யா மரத்தையும், இலந்தை மரத்தையும்  ஒரு கை பார்த்துச் செல்லத் தொடங்கினார்கள். தன்னால் திறமையாக வீட்டைப் பாதுகாக்க முடியாமல் இருக்கிறதே என்று சுவர் மனம் வருந்தியது. அதன் வருத்தத்தை உணர்ந்தோ என்னவோ கேட் முதலியாரின் முதலாம் திவசத்திற்கு முன்னரே சுவரின் சிதைவைப் பிளாஸ்டிக்  சேர்ஜரி செய்யப்பட்டு திருத்தப்பட்டது. சுவரில் படர்ந்திருந்த பாசியையும் விளம்பரங்களையும் சுரண்டி எடுத்து, வெள்ளை அடித்து சுவரைத் துய்மைப் படுத்திவிட்டார்கள். சுவருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏதோ வெகு காலத்துக்குப் பின் குளித்து புது ஆடை அணிந்தது போன்ற ஒரு பிரமை அதற்கு.

சில நாட்களில் சுவருடன் சேர்த்து இரு வாழை மரங்கள் நடப்பட்டு, மாவிலைத் தோரணம் கட்டி மேளமும் நாதஸ்வரமும் கேட்ட போது தான் சுவருக்கு விஷயம் புரிந்தது. முதலியாரின பேத்தி பாக்கியலஷ்மிக்கு கலியாணம் என்று. சுவர் ஓரத்தில் கிடந்த கலியாணவீட்டுச் சாப்பாட்டை உள்ளுர் சொரி நாய்களும் காகங்களும் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் கண்ட சுவருக்கு ஏதோ தான் இனாமாக சாப்பாடு போடுவது போன்ற உணர்வு. ஆனால் அந்த சொறிநாய்கள் சாப்பாட்டுக்குப்பின் தன் மேல் மலசலம் கழித்துவிட்டு போன போது சுவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “நன்றி கெட்ட நாய்கள்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டது.

பாக்கியலஷ்மியின் கணவன் ஒரு கட்டிடக்கலைஞர். அவருக்கு சீதனமாக கிடைத்த வீட்டைத் திருத்தியமைக்கத் திட்டம் போட்டார்;;. சுவரை இடித்து புதுமையான வடிவத்தில் கட்டவேண்டும் என்று பிளான்; போட்டார். தனது விருப்பத்தை மனைவிக்கு எடுத்துவிளக்கினார். பாக்கியலஷ்மி எதையும் தாயிடமும் பேத்தியார் அன்னஷ்மியிடமும் பேசி முடிவெடுப்பவள். சுவரை புதுப்பிக்கும் திட்டம்; பாக்கியலஷ்மியின் தாயுக்குத் தெரியவேண்டி வந்தவுடன் அவள் கண்தெரியாத, தொன்னூறு வயதாகியும் ஆனால் காது கூர்மையாக கேட்கக் கூடிய தன் தாய் அன்னலஷ்மியிடம் விஷயத்தைக் கக்கினாள்.

“என்ன பிள்ளை கதை கதைக்கிறாய். இந்த வீடு உன் அப்பாவால் வாஸ்துசாஸ்திர முறைப்படி கட்டப்பட்டது. அந்தச் சுவரைப் பார். அது கூட நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து அத்திவாரமிட்டு கட்டப்பட்டது. எங்கள் குடும்ப கௌரவத்தின் சி;ன்னம்..  எங்கடை வீட்டு கூரைஇ பக்கத்து வீட்டுக் கூரையிலும் பார்க்க ஒரு முழம் உயரம். ஆதனால் தான் இந்த வீட்டிலை நடக்கிறதெல்லாம் நல்லதாக நடக்குது. அந்த மதில் ஓரத்தில் இருக்கிற சூலம் கூட வீட்டைக் காக்கிறதிற்காக உன் அப்பாவால் வைக்கப்பட்டது. தம்பிக்குச் சொல்லு நான் உயிரோடை இருக்கும் மட்டும் வீட்டையும்; மதிலையும் மாற்றி அமைக்க விடமாட்டன் என்று.” அன்னலஷ்மி  மகளுக்கும் பேத்திக்கும் சொன்னதைக் கேட்டு, தன் மேல் அவர்கள் வைத்திருந்த பாசத்தைக் அறிந்து சுவர் பூரிப்படைந்தது.

சுவரை இடித்து புதுப்பிக்க முடியாததையிட்டு பாக்கியலஷ்மியின் கணவனுக்கு மனதுக்குள் கோபம். “ என்ன கேடு கெட்டுப் போகட்டும், என்று சுவரைப் பராமரிக்காமல் விட்டான் பாக்கியலஷ்மின் கணவன். அதனால் சுவரை சினிமா போஸ்டர்களும், அரசியல் பிரச்சாரங்களும், தூஷண வார்த்தைகளும் அலங்கரித்தன.

“சைக்கிளுக்குப் புள்ளடி யானைக்குப் பொல்லடி”, “அம்மன் கோயில் பூசாரி அம்மன் நகையைத் திருடாதே” “பாரளுமன்ற உறுப்பினரா? பாதாளக் குழுக்களின் தலைவனா?”. இப்படி சுவையான பத்திரிகைத் தலையங்கங்கள் மதிலில் தோன்றின. வீதியில் நடப்போருக்கு சுவர் பத்திரிகையாயிற்று.  கடவுளே என் உடம்பை எதற்காக இவர்கள் தீய காரியங்களுக்குப் பாவிக்கிறார்கள் என்று மனம் நொந்தது சுவர். பலர் சுவரில் உள்ள வாசகங்களை வாசிக்க தன் முன் கூடி நிற்பதைக்கண்டு அவர்களை திட்டவேண்டும் போலிருந்தது சுவருக்கு.

அந்தக் காலக் கட்டத்தில் ஈழத்துப் போர் உச்சக் கட்டத்தை அடைந்தது. இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகளை வேட்டையாடி திரிந்த காலமது. பாக்கியலஷ்மி குடும்பம். பயத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தற்காலிகமாக வெகு தூரத்துக்கு சென்றுவிட்டார்கள். அன்னலஷ்மிக்கோ வீட்டை அனாதையாக விட்டு போக விருப்பமில்லை.

ஒரு அமாவாசை இரவன்று. மூன்று போராளிகள் தனக்கருகே எதையோ தோண்டுவதைக் கண்ட சுவருக்கு மனதுக்குள் பயம் வந்துவிட்டது. ஏதாவது செய்வினை சூனியம் செய்கிறார்களோ என யோசித்தது சுவர். ஆனால் நடந்தது வேறு. அடுத்த நாள் காலை அவ்வழியே இராணுவ வாகனத்தில் சென்ற ஐந்து இந்திய அமைதிப்படை வீரர்கள் கண்ணி வெடிக்குப் பலியானார்கள். அவர்கள் உடல்கள் சிதறித் தெறித்தது. சுவரும் வெடியில் சிதைந்து குட்டிச்சவராயிற்று. கேட் முதலியார் போட்ட இரும்பு கேட், உருமாறி சுவர் கற் குவியலாய.;; பரிதாபமாகக் கிடந்தது. வீட்டுக் கூரையின் ஒரு பகுதிக்குப் பலத்த சேதம். இந்திய இராணுவ வீரர்களி;ன் சதைகளும் இரத்தமும் கலந்து, குட்டிச்சுவரான சுவரில் தெறித்து கிடந்தன. எங்கிருந்தோ பறந்து வந்த காகம் ஒன்று சுவரில் ஒட்டிக் கிடந்த சதைத் துண்டொன்றை கொத்திக் கொண்டு பறந்து சென்றது. சொரி நாய்களும் தங்கள் பங்கை இடிந்த சுவரின் கற்குவியலைக் கிளரிச் சுவைக்கத் தயங்கவில்லை. ஒரு காலத்தில் உயர்ந்து கம்பீரத்துடன் நின்ற சுவர் குட்டிச்சுவராகி. உருமாறி, மயானமாகத் தோற்றமளித்தது. அடுத்தது தன் நிலை என்ன? என்று சிந்தித்தது. மனிதனின் வாழ்க்கையுடன் தன்னையும் ஒப்பிட்டுக்கொண்டது. கண்ணிவெடியில் இடிந்து குட்டிச்சுவரான சுவரை மேலும் தரைமட்டமாக்கும் நோக்கத்துடன் தூரத்தில் வந்துகொண்டிருந்த இந்திய இராணுவத்தைச் சேர்ந்த புல்டோசர் வாகனத்தின் இரைச்சல் சத்தம் கேட்டு இடிந்த மதில் பெருமூச்சுவிட்டது,  இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறோமே என்று.

One Comment »

  • Radhakrishnan Chellappan said:

    அருமை! ஒரு 40 ஆண்டு வரலாற்றை ஒரு சுவரின் உணர்வாக இக்கதை பயணிப்பது எனக்கு புது வாசிப்பு அனுபவம்!

    “….இடிந்த மதில் பெருமூச்சுவிட்டது, இருந்த இடம் தெரியாமல் போகப் போகிறோமே என்று. ” இக்கடைசி வரியின் மூலம் எதையோ சொல்ல வருகிறார், எனக்குதான் விளக்கவில்லை… அது சரி “What lies beneath the iceberg” என வாசிப்பாளனை சிந்திக்க வைப்பதுதானே எழத்தாழனுக்கு அழகு, கர்வம்!

    # 28 May 2016 at 7:54 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.