kamagra paypal


முகப்பு » கட்டுரை, நிதி, பொருளாதாரம்

பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி

‘இன்டர்நெட்டில் ஜி மெயில், பேஸ்புக் மற்றும் இதர இணையத்தளங்களில் நான் இன்று மட்டும் ஐநூறு டாலர் சம்பாதித்தேன், ஆயிரம் டாலர் சம்பாதித்தேன்’ என படங்களுடன் விளம்பரம் வருவதைப் பார்த்திருக்கலாம்.

ஆன்லைன் மணி டிரேடிங், ஆன்லைன் கரன்ஸி எக்ஸ்சேஞ் என்ற பெயரில் கவர்ச்சிகரமான வெப்சைட்டுகளில் அரபிகளும், வெள்ளைக்காரர்களும், பணத்தை கம்ப்யூட்டரில் சம்பாதித்துக் கொண்டிருப்பதாக படங்களுடன் வெளியிட்டிருப்பார்கள். இவர்களெல்லாம் வெவ்வேறு நாடுகளின் பணத்தை வாங்கி விற்றதில் லாபம் அடைந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்கள். இவர்களின் அடுத்தகட்ட கொள்ளைதான் பைனரி ஆப்ஷன் எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை. இந்த பணப்பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபத்தில் 80% நமக்கும் 20% கம்பெனிக்கும் என பகிர்ந்தளிப்பதாகவும் அது சராசரியாக நமது முதலீட்டில் மாதத்திற்கு 30% குறையாமல் இருக்குமென்றும் நம்பவைத்து, காசுள்ளவனிடமும், பேராசைக்காரனிடமும் பணத்தைக் கறப்பதே இவர்கள் வேலை.

Binary_options_Average_Return_Deposit_Scores_Broker_Assets_Traders_Invest_Buy_Sell_ROI_Income

பைனரி ஆப்ஷன் என்பதை முழுதும் விவரிக்காவிட்டாலும் சுருங்கக்கூறின் இப்படிச் சொல்லலாம்.

உலகம் முழுக்க பண பரிவர்த்தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் இன்னொரு நாட்டின் கரன்சியினை ஏதோ ஒரு காரணத்திற்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். அதை வாங்கும்போதும், விற்கும்போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிப்பது கடைசியாய் இருக்கும் இரு எண்கள். எடுத்துக்காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. அதனை பண பரிவர்த்தனையின்போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். இந்த கடைசி இரு எண்கள் லட்சணக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனையின்போது பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத்தட்ட சூதாடுதலே “பைனரி ஆப்ஷன்” எனும் முறை. இதை சூதாட்டம் என ஒத்துக்கொள்ள மாட்டார்கள், இந்த துறையில் இருப்போர். இதே பைனரி ஆப்ஷன் வங்கிகளிலும், முறைப்படுத்தப்பட்ட பண பரிவர்த்தனைகளிலும் அர்த்தம் வேறு. அங்கு முறையான வகைப்படுத்தப்பட்ட பல நாட்டு கரன்சிகளை வாங்கினால் இந்த மதிப்பிற்கு எடுத்துக்கொள்வோம், விற்றால் இந்த விலைக்கு விற்போம் என எழுதியே வைத்திருப்பார்கள். பெரும்பாலான விமான நிலையங்களிலும், வங்கிகளிலும் காணலாம்.

இந்த பைனரி டிரேடிங் ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவோ, ஒரு நாள் முழுக்க காத்திருந்து தீர்மானிப்பதாகவோ இருக்கலாம். நாம் அல்லது நமது சார்பாக விளையாடுபவன் ஒரு குறிப்பிட்ட கரன்சியோ, அல்லது கம்பெனிகளின் ஸ்டாக்கோ குறிப்பிட்ட அளவு விலை ஏறும் அல்லது குறையும் எனச் சொல்லி குறிப்பிட்ட தொகையை வைக்கலாம். நாம் சொன்னபடி நடந்தால் போட்ட பணம் இரட்டிப்பாகும். இல்லையெனில் முழுப்பணமும் போகும். பணம் இரட்டிப்பானால் 80% நமக்கும், 20% தளத்தை நடத்துபவனுக்கும் செல்லும். பணம் போனால், தளம் நடத்துபவனுக்கு 20%ம், மீதமுள்ளது நம்மைப்போல பணம் கட்டி சரியாகச் சொன்னவனுக்கும் போய்ச் சேரும் என்பது இம்மாதிரியான தளத்தை நடத்துபவர்கள் சொல்லும் விளக்கம். இதோடு நிறுத்த மாட்டார்கள். எங்கள் டிரேடர்கள் எல்லாம் பல ஆண்டுகள் இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். உங்கள் பணம் 30%க்கு குறையாமல் வளர்வது உறுதி, அதுக்கு நாங்க கியாரண்ட்டி என முகத்தைக்கூட காட்டடாத ஒருவன் சொல்வான்.

இப்படிப்பட்ட வெப்சைட்டுகள், இவர்களின் செயல்பாடுகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். இவர்களின் வெப்சைட்டில் எல்லாமே பக்காவாக இருக்கும். சந்தேகம் வராத அளவுக்கு வடிவமைத்திருப்பார்கள். கஸ்டமர் சப்போர்ட் என்ற பெயரில் இமெயில் ஐடி கொடுத்திருப்பார்கள். லைவ் சாட் இருக்கும். இது நீங்கள் பணம் போடும் வரையிலும் சிறப்பாக செயல்படும். அதன் பின்னர் ஒருபயலும் பதில் சொல்ல மாட்டான்.

இன்டர்நேஷனல் மணி லாண்டரிங் ( அதாவது தவறான வழியில் வந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொள்ள மாட்டோம், முறையாக சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும் ) நடக்கவிட மாட்டோம் என்ற பீலாவெல்லாம் விட்டு நமது எல்லா தகவல்களையும் கறந்து விடுவார்கள்.

கறக்கும் தகவல்களில், குறிப்பாய் அடையாளம் காணும் சான்றிதழ்களில் முக்கியமானது நமது பாஸ்போர்ட். வெளிநாட்டில் வாழ்பவராக இருந்தால் அந்த நாடு வழங்கிய ஐடி கார்டுகள், (இந்தியாவில் இன்னும் நாங்கள் வர்த்தகம் தொடங்கவில்லை என்பார்கள் எல்லாப்பயல்களும்) தொலைபேசி எண் என கிட்டத்தட்ட நம்மைப் பற்றிய எல்லா விபரங்களையும் வாங்கிக் கொள்வார்கள்.
நமக்கு சராசரியாக 30 முதல் 40% வருமானம் மாதாமாதம் கிடைக்கும் என நம்மைச் சேர்த்துவிடுபவர் மூலம் நமக்குச் சொல்வார்கள்.

லாபத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் எனவும் அவர்களின் தளத்தில் எழுதி இருக்கும்.

சேர்த்துவிடுபவர் இப்படிப்பட்ட தளத்தின் விளம்பரங்கள் மூலம் கவரப்பட்டு நேரடியாக சேர்ந்தவராக இருப்பார், அல்லது யார்மூலமாகவோ கேள்விப்பட்டு அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு சேர்ந்தவராக இருப்பார். இதில் நல்ல லாபம் கிடைக்கிறதே, நாம் பெறப்போகும் பணத்தை நண்பர்களும் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தில் சேர்த்து விடுவார்கள்.

குறைந்தபட்ச முதலீடு 100 டாலர் முதல் 250 டாலர் மட்டுமே என இணையத்தளத்துக்குத் தகுந்தாற்போல எழுதி இருக்கும். அது, நீங்கள் பணம் போடக்கூடிய ஆளா என்பதை அளக்கும் கருவி. அந்தப் பணத்தை போட்டதும் அதன் பின்னர் உங்களுக்கென ஒரு தனி ட்ரேடர் இருப்பதாகவும், உங்கள் பணத்தை அவர்தான் தினமும் நம் சார்பாக இணையத்தில் ஆன்லைனில் பண வர்த்தகம் செய்வார் எனவும் சொல்வார்கள். ஒரு ஸ்கைப் ஐடியைக் கொடுத்து இவரிடம் தொடர்பு கொள்ளுங்கள் எனச் சொல்லி விடுவார்கள்.

100 டாலர் முதலீட்டில் உங்களுக்கு 30 டாலர் மாதம் லாபம் கிடைக்கும். 1000 டாலர் முதலீடு செய்தால் 300 டாலர் மாதம் கிடைக்குமே என ஆசைகாட்டுவார்கள்.
உங்கள் கணக்கில் லாகின் செய்து பார்த்தால், தினமும் டிரேடிங் செய்ததாகவும், தினமும் இத்தனை லாபம் ஈட்டியதாகவும், சில நேரம் நஷ்டம் அடைந்ததாகவும், மொத்தத்தில் உங்களுக்கு 30% நிகர லாபம் மாதக்கணக்கில் வந்து சேர்ந்துவிட்டதாகவும் கணினித் திரையில் காண்பிப்பார்கள்.

1000 டாலர் போட்டோம், 300 டாலர் வந்திருக்கு. ஆஹா என மகிழ்ச்சியாய் இருக்கும் நேரத்தில் உங்களுக்கு இவன் பணத்தை நமக்குக் கொடுப்பானா என்ற லாஜிக்கல் சந்தேகம் வரும். அதை உடனே செயல்படுத்திப் பார்க்க 300 டாலரை எடுக்க ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். உடனே உங்களுக்கெனவே அவதாரம் எடுத்த அந்த ட்ரேடர் ஸ்கைப்பில் உங்களுடன் பேச வேண்டும் என்பான். மிக மரியாதையாக, பணிவாக எப்போது உங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றெல்லாம் கேட்பான். ‘நாம பணத்தை எடுக்க அப்ளை செஞ்சா, நம்ம பேங்க் அக்கவுண்ட்டுக்குப் பணம்தானே வரணும், இவன் ஏன் நம்மகிட்ட பேசுறான்’ என லேசாக, மிக லேசாக ஒரு பொறி தட்டினாலும், ‘இவன்ட்டதான நாம பேசணும், பேசிடுவோம்’ என ‘நமக்கு நாமே’ திட்டத்தில் சமாதானமாகி, அவனிடம் பேசத்தொடங்குவோம்.

ஊர் நிலவரம், மழைதண்ணி உண்டா, குடும்பம் குட்டி என்பனபோன்ற விஷயங்களுக்கிடையில் நாம் பேசும் பேச்சை வைத்து இன்னும் இவனை எத்தனை ஆயிரம் அல்லது நூறு டாலர்களை முதலீடு என்ற பெயரில் கறக்கலாம் எனக் கணக்கு போட்டுக்கொண்டிருப்பான். உரையாடலின் கடைசிவரை ‘வித்ட்ராவல் அப்ளை செய்திருந்தேனே, என்னாச்சி?’ என கேட்கக் கூச்சப்படும் அளவு நெருக்கமான நண்பன் போலப் பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து அவனிடம் ‘ வித்ட்ராவலுக்கு அப்ளை செய்திருந்தேனே, இன்னும் வரவில்லையே’ எனக் கேட்டால், ‘பாத்தீங்களா… சொல்ல மறந்துபோச்சி. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்டுமெண்டுக்கு சொல்லி இருக்கிறேன்.வரும். ஆனால், உங்க பணம் உங்க கணக்கில் எவ்வளவு மீதி இருக்கோ அதுக்குத்தான் நான் டிரேடிங் செய்வேன். இப்ப 300 டாலரை எடுத்துட்டீங்கன்னா நான் 1000 டாலருக்குத்தான் டிரேடிங் செய்ய முடியும். பணம் அடிக்கடி எடுக்குற ஆளுக்கு நாங்க ரெகுலரா டிரேடிங் செய்றதில்லை’ எனச் சொல்லி ‘உங்களுக்கு என்ன, பணம் வருதான்னு செக் செய்யணும், அவ்வளவுதான?’ எனக்கேட்டுவிட்டு, ‘50 டாலரை அனுப்பி வைக்கிறேன் போதுமா?’ என உங்கள் கணக்கிற்கு 50 டாலரை அனுப்பி வைப்பான். நாம் முதலீடு செய்திருப்பது 1000 டாலராக இருக்கும்.

அடுத்த வலையை வீசுவான். ‘நீங்கள் இனிமேல் போடும் பணத்திற்கு நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து 50% கூடுதலாகப் போட்டு (போனஸ்) ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம். அதாவது கூடுதலாக போடும் பணம் உங்களுடையதில்லை. ஆனால் அதில் வரும் லாபம் முற்றிலும் உங்களுடையதே’ என ஆசைகாட்ட ஆரம்பிப்பான். அதாவது நீங்கள் 5000 டாலர் போட்டால் ‘கம்பெனி’ 2500 டாலரை கணக்கில் போடும். ஆக, 7500 டாலருக்கு உங்களுக்கு 30% வருமானம் கிடைக்கும். அசல் அப்படியே இருக்கும், டிரேடிங் கமிஷன் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும். ஆக, அசலும், வட்டியும் சேர்ந்து கிட்டத்தட்ட 3 மாதத்திற்குள் உங்கள் பணம் 100%க்கு வளர்ந்து நிற்கும் – எங்கே? கம்ப்யூட்டர் திரையில்தான்.

இப்போது உங்களுக்குள் அபாய மணி வேகமாக அடிக்க ஆரம்பிக்கும். ‘இப்ப நாம போட்ட பணத்த முதல்ல எடுத்திருவோம். லாபமா வந்த பணத்தை வச்சி ஆன்லைன் பண வியாபாரம் செய்வோம்’ என நினைத்து ‘வித்ட்ராவல்’ அப்ளை செய்வீர்கள். முதலில் 50 டாலர் வந்த வேகத்தில் இந்தப் பணம் வராது. மயான அமைதி நிலவும். நமக்கென அவதாரம் எடுத்தவனிடம் ஸ்கைப்பில் பேச ஆரம்பிப்பீர்கள். இதுவரை நம்மை அழைத்து பேசிக்கொண்டிருந்தவன், இனி நாம் அழைத்தால் மட்டும் பதில் சொல்ல ஆரம்பிப்பான். மனசுக்குள், ‘மச்சி கடன் வாங்க இவ்ளோ அலையறோமேன்னு நினைக்காத, அவன் கடனை நம்ம கிட்ட இருந்து வாங்கும்போது அலைவான் பாரு’ என்ற வசனமெல்லாம் ஓடும்.

பொதுவாய் பணம் நம் கணக்குக்கு வர 3 முதல் 4 நாட்கள் எடுக்கலாம் எனச் சொல்வான். அதற்குள் அடுத்த சனி ஞாயிறு வந்துவிடும். எனவே அடுத்து ஒரு 3 நாள் என 10 நாள் ஓடி இருக்கும். மீண்டும் அவனைத் தொடர்புகொண்டு ‘என்னய்யா ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இப்ப ஏன் சார் எடுக்குறீங்க? ஒரு அருமையான திட்டம் வருது, அதுல போட்டீங்கன்னா ஒரே மாசத்துல 80% லாபம் கிடைக்கும், அதுக்குப் பிறகு எடுக்கலாமே’ என ஆரம்பிப்பான். ‘நீங்கள் முழுத்தொகையையும் போட வேண்டாம், அது ஹை ரிஸ்க் என்பதால் நாங்களே பாதிப்பாதியாக பிரித்து வழக்கமான மணி டிரேடிங்கில் 50% பணமும், கோல்ட் இன்வெஸ்ட்மெண்ட்டில் 50% எனவும் இடுவோம். ஒண்ணு போச்சின்னாகூட அசலுக்கு மோசமில்லை’ எனத் திட்டம் வகுத்து கொடுத்து நம் சபலத்தைக் கூட்டுவான்.

‘எப்பய்யா என் பணத்தை நான் எடுக்குறது?’ என நீங்கள் ‘அப்பன் மவனே சிங்கம்டா’ என லேசாக குரலுடைந்து கேட்க ஆரம்பித்திருப்பீர்கள். ‘இந்த கோல்ட் டிரேடிங் முடியட்டும், அப்புறமென்ன, நீங்கள் பெரிய பணக்காரர்தான்’ என்ற அளவில் பணம் போட்டவனை உசுப்பேற்றி விடுவான்.

‘இன்னும் ஒரு மாதம் தங்கத்துல போட்ட காசப்பத்தி மூச் காட்டக்கூடாது. டெய்லி கம்ப்யூட்டர்ல பாத்துக்கங்க. மணி ட்ரெடிங்க்குல போட்ட காசு வளர்றத பாத்துக்கலாம். ஆனா, தங்கத்துல போட்டது ஒரு மாசம் கழிச்சுதான் பாக்க முடியும். அடுத்த ஒரு மாசம் பாத்துட்டே இருந்தா உங்க மணி டிரேடிங் பணமே கிட்டத்தட்ட டபுள் ஆகி இருக்கும்.’
அதாகப்பட்டது, தங்கத்துல போட்ட காசு போனாக்கூட நம்ம காசு தப்பிச்சிருச்சி என்ற எண்ணம் நமக்கு வரும்.
தங்கத்தில் போட்ட பணத்தின் ரிசல்ட் வரும், சர்வ நிச்சயமாய் நீங்கள் போட்ட பணம் டபுள் ஆகி இருக்கும். ஆக, முதலும், வருமானமும் சேர்ந்து கிட்டத்தட்ட போட்ட பணத்தைவிட 3 மடங்கு ஆகி இருக்கும்.

‘அப்பாடா, இனி அசலை எடுத்துட்டு லாபமா வந்ததுல மீதிக்கதையை பாதுகாப்பாக ஓட்டுவோம்’ என மீண்டும் வித்ட்ராவல் அப்ளை செய்தால், நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டது தெரியும்.

அப்ளை செய்த அன்று கிட்டத்தட்ட 5000 டாலரில் இருந்த உங்க முதலீடு, மறுநாள் டிரேடிங்கில், 15 அல்லது 20 நிமிடங்களில் எல்லாப் பணத்தையும் உங்கள் ட்ரேடர் ஆன்லைன் டிரேடிங்கில் இழந்துவிட்டதாக உங்கள் கம்யுட்டர் திரை சொல்லும். கொஞ்சம் பிபி இல்லாத ஆளாய் இருந்தால் பிழைத்தான். இல்லையெனில் சஹஸ்ரநாமம் போல ‘என்ன, சேர் மார்கெட்டுல போட்ட ஒரு லட்சம் போச்சா?’ எனக் கேட்டக்கொண்டே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியதுதான்.
எந்த முட்டாளாவது முதல் தடவை போட்டு நஷ்டம் அடைந்ததும் அடுத்தடுத்து முழுப்பணத்தையும் தொலைப்பானா? ஆனால், அப்படித் தொலைத்ததாக கணக்கு காண்பித்துவிட்டால், அவன் உங்களை மோசடி செய்யவில்லை, ஆன்லைன் வியாபாரத்தில் நேர்ந்த இழப்பு என்றாகிவிடும். ‘இந்த ரிஸ்க் இதில் இருக்கே. அது தெரிந்துதானே போட்டீர்கள்’ என நம்மைத் திருப்பிக்கேட்க வசதியாக இப்படி கம்ப்யூட்டர் திரையில் காண்பிப்பார்கள்.

உண்மையில் இந்த பைனரி டிரேடிங்காரர்கள் செய்வது, அவர்களின் வலைத்தளத்தில் தினமும் வியாபாரம் நடப்பதாகக் காட்டும் ஒரு மென்பொருளை வைத்துக்கொள்வது மட்டுமே.

பணத்தை நம்மிடம் இருந்து வசூலிக்க ஒரு வங்கிக்கணக்கு. அது சைப்ரஸிலொ, அல்லது பிரிட்டனிலோ, அல்லது ஏதேனும் ஒரு அத்துவான காட்டிலோ இருக்கும். நம்மிடம் பணம் பிடுங்க முடிந்தவரை நம்மிடம் தொடர்பில் இருப்பார்கள். இந்த வியாபாரம் நடக்கும் காலத்தில் சம்பந்தப்பட்ட ஒரு பயலும் தன்னுடைய புகைப்படத்தைக்கூட போட்டுக்கொள்ள மாட்டான். அவர்களின் ‘கம்பெனி’யின் படத்தை மட்டுமே ப்ரொபைல் படமாக வைத்துக்கொள்வார்கள்.
பணம் போனபின்னர் நீங்கள் ஸ்கைப்பில் அவனை 10 முறை அழைத்தால் ஒருமுறை வந்து ‘இன்ஷுரன்ஸ் ஆட்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம், மார்கெட் கிராஷ் ஆகிடுச்சி’ என்பார்கள். ‘எவண்டா ஆன்லைன் மணி ட்ரேடிங்குக்கு இன்ஷுரன்ஸ் தாரான்?’ எனக்கேட்டால் அதற்கும் ஒரு மொக்கை பதில் வைத்திருப்பார்கள். நீங்கள் மெயில் மேல் மெயில் போட்டு ‘ஒழுங்கா நான் போட்ட பணத்தை தரியா, இல்லை இன்டர்போலில் கம்ப்ளெய்ண்ட் செய்யட்டுமா?’ என நாம் எழுதும் மெயில்களை நமக்குத் தெரியாத ஏதோ ஒரு நாட்டில் இருந்து சிரித்துக்கொண்டே படித்துக் கொண்டிருப்பான்.
பேராசை பெரு நஷ்டம் என்பதை சில லட்சங்களை இழந்து கற்றுக்கொண்டிருப்பீர்கள்.

இப்படிப் பணத்தை இழந்தவர்களின் சோகக் கதையை இங்கே (http://www.forexpeacearmy.com/ ) படிக்கலாம். இதைப்பார்த்த பிறகாவது ‘ஆன்லைன் மணி ட்ரேடிங்க்கில் பணம் கொட்டுதாம்ல’ என விட்டில் பூச்சிகளாய் விழாமல் இருக்கலாம்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.