27 வயதான அமெரிக்கக் குடும்பம்

சென்ற வருடம் சொல்வனத்தில் திரு. சத்தியமூர்த்தி “மேற்கில் சின்னத்திரை” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அக்கட்டுரையின் ஒவ்வொரு வரியுடனும் கருத்தொருமித்தவன் நான் என்பதால், இந்தக்கட்டுரையை அதன் இரண்டாம் பகுதியாக எழுதலாம் என்று தோன்றியது. ஒரு திரைப்படத்தையோ தொலைக்காட்சி தொடரையோ பார்க்கும்போது வெறும் மேம்போக்கான ரசிகனாக மட்டும் இல்லாமல், அதன் படைப்பு நுணுக்கங்களை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. இது ஏதோ நானும் படமெடுக்கிறேன் என்று எதிர்காலத்தில் நான் கிளம்புவதற்கான முன்னேற்பாடல்ல. ஆக்கத்தின் பின்னால் உள்ள செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வது, ஒரு கல்வி ஆய்வு (academic analysis) பின்புலத்துடன் நிகழ்ச்சிகளை நான் ஆழ்ந்து அனுபவிக்க உதவும் என்ற என் எண்ணம்தான் இதற்கு காரணம். என் பொறியாளன் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது இத்தகைய ஞானம் ஏதாவது தேவையற்ற புத்தகங்கள் எழுத உதவுமோ என்னமோ. இப்போதைக்கு Breaking Bad போன்ற சில நல்ல தொடர்களை ஆழ்ந்து அனுபவிக்க முடிவதே எனக்கு போதுமான மகிழ்ச்சி.
அந்த நல்ல தொடர்கள் வரிசையில் சேர வேண்டிய ஆனால் மிகவும் வேறுவகையான புனைவு இருபத்தேழு வருடங்களாக அமெரிக்காவின் ஃபாக்ஸ் தொலைக்காட்சி சேனலில் வந்து கொண்டிருக்கும் The Simpsons சித்திரத்தொடர்!

simpsonsfamily

இந்தத்தொடரை பெரிதாக பார்த்திராத, புரிந்து கொள்ளாத பெரியவர்கள் இது ஏதோ குழந்தைகளுக்கான டாம் & ஜெர்ரி போன்ற கார்ட்டூன் ஷோ என்று அலட்சியமாக ஒதுக்கி விடுவார்கள். 1988-1991களில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் “நான் இது வரை பார்த்ததிலேயே மிகவும் முட்டாள்தனமான ஷோ அது” என்று சொல்லி தனது அறியாமையை உலகுக்கு தெரிவித்தது இந்த அலட்சியத்தின் உச்சம். ஆனால் சிம்சன் தொடரோ அத்தகைய விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டு புஷ் தம்பதிகளையே ஒரு எபிசோடில் கலாய்த்துவிட்டு இன்றும் உற்சாகமாய் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
Breaking Bad, Dexter போன்ற தொலைக்காட்சி தொடர்களில் சொல்லப்படும் கதை ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடிற்கு பிசிரடிக்காமல் தொடரும். ஆனால் சிம்சன் எபிசோட் ஒவ்வொன்றும் sitcom என்று சொல்லப்படும் situation comedy நிகழ்ச்சிகளின் பாணியில் தன்னிறைவான (self-contained) கதைகளுடன் ஒரே எபிசோடில் ஆரம்பித்து முடிந்து விடும். எனவே தொடரை முன் பின் பார்த்திராதவர்கள் கூட ஏதாவதொரு அத்தியாயத்தை மட்டும் பார்த்து ரசிக்க முடியும்.
தொடரின் முக்கிய கதாபாத்திரங்கள் சிம்சன் குடும்பத்தை சேர்ந்த அப்பா, அம்மா மற்றும் மூன்று குழந்தைகள். அவர்கள் வாழ்வது அமெரிக்காவில் எங்கோ இருக்கும் ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்ற ஒரு சிறு நகரத்தில். அந்த நகர் அமெரிக்காவின் எந்த மாநிலத்தில் இருக்கிறது என்பது வேண்டும் என்றே வெளிப்படையாக சொல்லப்படாத, அதனாலேயே பல ஜோக்குகளுக்கு வழி வகுத்த ஒரு விஷயம். ஆர்.கே.நாராயணின் மால்குடி போல ஸ்ப்ரிங்ஃபீல்டும் ஒரு கற்பனை நகரம்தான் என்றாலும், ஷோவின் பல்வேறு எபிசோட்களில் வரும் குறிப்புகளை அலசி ஆராய்ந்து ஊரின் மிக தீர்க்கமான வரைபடத்தை (Map) ரசிகமணிகள் உருவாக்கி உலகிற்கு தந்து மகிழ்த்திருக்கிறார்கள்!

Map_of_Springfield

டாம் & ஜெர்ரி போன்ற சித்திரத்தொடர்களில் பொதுவாக நான்கைந்து பாத்திரங்கள் மட்டுமே இருக்கும். அவர்கள்/அவை இருக்கும் ஊர், குடும்பம் போன்ற விஷயங்கள் சொல்லப்படும் எளிய நகைச்சுவை கதைகளுக்கு முக்கியமாக இருக்காது. இதற்கு மாறாக 60களில் வந்த Jetsons மற்றும் Flintstones சித்திரத்தொடர்களில் அவற்றின் கதைகளமாக பல விஷயங்களை (அலுவலகம், வீடு, சிறிய/பெரிய/முக்கிய கதாபாத்திரங்கள்) உருவாக்க முயன்றிருக்கிறார்கள். சிம்சன் தொடர் அந்த திசையில் வெகுதூரம் பயணித்து ஒரு சிறு பிரபஞ்சத்தையே உருவாக்கி இருக்கிறது. கீழே இருக்கும் படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். அதில் காணப்படும் சுமார் 400 கதாபாத்திரங்கள் தொடரின் பல்வேறு எபிசோட்களில் ஒரு முறையோ சில முறைகளோ அல்லது நூற்று கணக்கான முறைகளோ தலை காட்டி இருக்கிறார்கள்!

The_Simpsons_characters

இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் பல அடுக்குகளை (Layers) கொண்ட படைப்பமைப்பு என்று நிச்சயம் சொல்லலாம். ஐந்தாறு வயதுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் தொடரின் பளிச்சென்று இருக்கும் வண்ணத்தேர்வுகளையும் (bright color palette), அடிக்கடி வந்துபோகும் கோமாளித்தனமான (slapstick) நகைச்சுவை காட்சிகளையும் மட்டும் பார்த்து சிரிக்க முடியும். பதின்வயது குழந்தைகள் ஒவ்வொரு எபிசோடிலும் சொல்லப்படும் இரண்டு மூன்று கதைகள் எப்படி ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைகின்றன என்கிற அழகை ரசிக்கலாம். இன்னும் வயதானவர்கள் ரசிக்க அமெரிக்க கலாச்சாரம், அரசியல், மதங்கள், உலகநடவடிக்கைகள், புத்தம்புது தொழில்நுட்பங்கள், விளையாட்டுகள் பற்றிய பல்வேறு விவரங்கள் மிகவும் வேடிக்கையான முறைகளில் ஷோ முழுதும் தூவப்பட்டிருக்கும்.

சொல்லவரும் விஷயத்தை பழைய தமிழ் திரைப்படங்களைப்போல மிக விளக்கமாக ரசிகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக மூன்று முறை விளக்கிவிடும் பழக்கம் இந்த தொடரின் எழுத்தாளர்களுக்கு கிடையாது. தொடரைப்பற்றியும் உலகைப்பற்றியும் உங்களுக்கு எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு ஆழமாக நிகழ்ச்சியில் மறைந்திருக்கும் பல்வேறு அடுக்குகளை உங்களால் கண்டுபிடித்து ரசிக்க முடியும். நாம் எத்தனை கூர்ந்து கவனித்தாலும் இருக்கும் அத்தனை விஷயங்களையும் முதல் முறையாக ஒரு எபிசோடை பார்க்கும்போதே புரிந்து அனுபவித்துவிடுவது இயலாத காரியம்! இந்த உத்தி ரசிகர்களை ஒரே எபிசோடையே பலமுறை பார்த்து முன்னால் கவனிக்காமல் விட்டுப்போன விஷயங்களை கவனித்து வியக்க/சிரிக்கத் தூண்டுகிறது! உத்தி புரிந்த பரம ரசிகர்கள் ஒவ்வொரு எபிசோடிலும் “நீங்கள் கவனித்தீர்களா?” (Did you notice?) என்று மறைந்திருக்கும் விஷயங்களை ஆண்டாண்டு காலமாக பட்டியலிட்டு விவாதித்து வருகிறார்கள்! இரண்டு மூன்று முறை ஒரு எபிசோடை பார்த்து ரசித்துவிட்டு அப்புறம் இந்த வலைதளங்களை தேடிப்படித்தால், நாம் இன்னும் எத்தனை விஷயங்களை கவனிக்காமல் விட்டிருக்கிறோம் என்று தெரிய வரும்!
இந்த தொடரைப்பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக “The Simpsons and Their Mathematical Secrets” என்ற சைமன் சிங்கின் புத்தகம் இத்தொடரின் பல்வேறு எபிசோட்களில் எத்தனை விதங்களில் கணித நுணுக்கங்களும், கோட்பாடுகளும், முரண்பாடுகளும் அலசப்பட்டிருக்கின்றன என்பதை விளக்குகிறது! ஒரு குட்டி உதாரணம். பெரிய புத்திசாலி என்று சொல்லமுடியாத ஹோமர் சிம்சன் (அப்பா) ஒரு எபிசோடில் வாழ்வில் தான் நிறைய எதுவும் சாதிக்கவில்லை என்று மனம் வருந்தி, வெகு விரைவாக எடிசன் போன்ற ஒரு விஞ்ஞானி ஆக முயல்வார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஓரிரண்டு வினாடிகளே வந்து போகும் காட்சி அடுத்த படம்.

Homer-Inventor

ஹோமர் கரும்பலகையில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருப்பது போல் எண்ண வைக்கும் இந்த படத்தில் இரண்டாம் வரியில் இருக்கும் எண்களை மட்டும் பாருங்கள். கணித உலகில் புகழ் பெற்ற Xn + Yn = Zn என்ற சமன்பாட்டிற்கு ஃபெர்மாவின் கோட்பாட்டின்படி (Fermat’s Theorem), n>2 என்று ஆகும்போது சரியான முழு எண்களால் ஆன விடைகள் கிடையாது என்பது கணித உலகில் பரவலாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். (அந்தக்கோட்பாட்டை நிரூபிப்பதற்குள் 300 வருடங்களில் பலர் தலை சொட்டையானது இன்னொரு பெரிய கதை.) அப்படி இருக்கும்போது ஹோமர் எழுதியிருக்கும் 398712 + 436512 = 447212 என்ற சமன்பாடு ஃபெர்மாவின் கோட்பாட்டை பொய்யாக்கி விடுகிறதே?! நீங்கள் கால்குலேட்டர் ஒன்றில் இந்த எண்களை போட்டு கூட்டிப்பார்த்தால் கூட விடை சரியாக வருவது ஃபெர்மாவின் கோட்பாடு ஹோமரால் முறியடிக்கப்பட்டு விட்டதாக உங்களை எண்ண வைக்கும்! ஆனால் உண்மையில் இது ஒரு near miss. காரணம் சமன்பாட்டின் சரியான விடை 4472.000000007112 என்பதுதான். பொதுவாக நாம் உபயோகிக்கும் எந்த கால்குலேட்டரும் இவ்வளவு துல்லியமாக எண்களை கணக்கிட வல்லது அல்ல! இந்த கரும்பலகை வரிக்கு பின்னால் உள்ள இத்தனை விவரங்கள் தெரிந்தாலொழிய இந்த ஜோக் நம் கண்களிலேயே படாது. அதே போல் முதல்வரியில் ஹிக்ஸ் பொஸன் துகள் பற்றிய இயற்பியல் விவரங்கள் சில அடங்கியுள்ளன! ஒரே வினாடி வந்து மறையும் காட்சியில் எத்தனை வேடிக்கைகள் ஒளிந்திருக்கின்றன பாருங்கள்! இந்த விவரங்கள் உங்களுக்கு கிச்சுக்கிச்சு மூட்டினால், யூட்யூப்பில் உள்ள ஒரு நான்கு நிமிட வீடியோவை பாருங்கள். சைமன் சிங் வேறொரு சிம்சன் எபிசோடில் ஒரு விளையாட்டு மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை என்ன என்று போகிற போக்கில் கேட்கப்படும் ஒரு கேள்விக்குள் ஒளிந்திருக்கும் சில ரகசியங்களை அந்த வீடியோவில் விளக்குகிறார்!
இன்னொரு எபிசோடில் P=NP? என்ற கேள்வி ஒரு பின்னணி காட்சியில் இரண்டு விநாடிகள் தோன்றி மறைவதை பார்த்து பல்கலைகழக நாட்களில் நானும் சில நண்பர்களும் குதூகலித்திருக்கிறோம். உங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் கணினியியல் பேராசிரியர் யாராவது இருந்தால், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப்பாருங்கள். நீங்கள் கம்ப்யூட்டர் துறையில் இல்லாதவர் என்கிறபட்சத்தில் உங்களுக்கு எப்படி P=NP? பற்றித்தெரியும் என்று அவர் ஆச்சரியப்படக்கூடும்! இத்தொடரின் எழுத்தாளர்களில் பலர் கணிதம், இயற்பியல் முதலிய துறைகளில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் என்பது இம்மாதிரி குறிப்புகள் பல ஆங்காங்கே ஒளிந்திருப்பதற்கு ஒரு காரணம்.
இப்படி ஒளிந்திருக்கும் விஷயங்கள் கணிதம், கணினியியல் சம்பந்தப்பட்டவை மட்டுமே என்று நினைக்க வேண்டாம். பண்டைய காலத்து எகிப்திய சம்பிரதாயப்படி ஒரு ராஜாவைப்போன்ற பெரிய மனிதரை, அவர் இறந்த பின் புதைக்கும்போது, அவருக்கு அடுத்த உலகில் தேவையானால் சேவகம் செய்ய, அவரோடு சேர்த்து சில நூறு பொம்மை மனிதர்கள் புதைக்கப்படுவதையும், அந்த பொம்மைகளுக்கு உஷாப்தி என்று பெயர் என்பதையும் இருபது வருடங்களுக்கு முன் ஒரு சிம்சன் எபிசோட் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன்!
நிகழ்ச்சியில் அடிக்கடி தோன்றும் அந்தக்காலத்து மனிதரான மாண்ட்கோமரி பர்ன்ஸ் (ஹோமர் சிம்சனின் முதலாளி) தொலைபேசியை எடுக்கும் போதெல்லாம் “அஹோய் ஹோய்” என்றுதான் முகமன் கூறுவார்! காரணம் தொலைபேசியை உருவாக்கிய அலெக்ஸாண்டர் கிராம்பெல் பரிந்துரைத்த ஒரிஜினல் முகமன் அதுதான். பிற்காலத்தில் உலகெங்கிலும் “ஹலோ” வழக்கிற்கு வந்துவிட்டாலும், பர்ன்ஸ் தன்னை மாற்றிக்கொள்வதாய் இல்லை. இப்படி பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டே போகலாம். பெர்க்லே (Berkeley) முதலிய பல்கலைகழகங்கள் இத்தொடரைச் சுற்றி கல்லூரிப் பாடங்கள் கூட நடத்துகின்றன. உதாரணமாக http://www.sjsu.edu/faculty/wooda/muse/intro.html
இந்த நிகழ்ச்சி 1989ல் இருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதால், வருடத்திற்கு சுமார் 20 எபிசோட் என்ற வீதத்தில் 550க்கு மேற்பட்ட எபிசோட்கள் இன்று இருக்கின்றன. ஒரு முழுநீளத்திரைப்படமும் வெளி வந்திருக்கிறது. கடந்த ஒரு வருடமாக இங்கே இருக்கும் FXX என்ற கேபிள் சேனல் உலகில் இருக்கும் அத்தனை சிம்சன் எபிசோட்களையும் தொடர்ந்து காட்டுவோம் என்று அறிவித்து பல முறை காட்டித்தள்ளி இருக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 21 நிமிடங்கள் ஓடும் என்பதால், எல்லாவற்றையும் தொடர்ந்து விளம்பர இடைவெளி எதுவுமே இல்லாமல் காட்டினால் கூட சுமார் 9 நாட்கள் ஓடி விடும்!

The_simpsons-movie

தொடரின் படைப்பாளர்கள் இதில் வரும் கதாபாத்திரங்களுக்கு வயது ஏறாது என்று முடிவெடுத்திருப்பதால், 27 வருடங்களாக அப்பா ஹோமர் சிம்சனுக்கு 38 வயதுதான். அம்மா மார்ஜ் சிம்சனுக்கு வயது அன்றிலிருந்து இன்று வரை 34தான். குழந்தைகள் பார்ட் சிம்சன், லீசா சிம்சன் இருவரும் முறையே நான்காம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும் படித்து வர, கைகுழந்தை மேகி (Maggie) இன்றும் pacifierஐ சப்பும் கைகுழந்தைதான். சொல்லப்படும் கதைகள் இன்றைய தேதியில் நடப்பது போல சொல்லப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றாற்போல் பாத்திரங்கள் பிறந்த தேதி தேவையானால் மாற்றிக்கொள்ளப்படும். மனிதகுலத்திற்கு ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் இருந்தாலும், தர்க்கரீதியாக பார்த்தால் நான்கு விரல்களே (ஒரு கட்டை விரல் + மூன்று விரல்கள்) போதும் என்று பரிணாம உயிரியல் விஞ்ஞானிகளிடையே ஒரு கருத்து உண்டு. அந்த கருத்தின்படி இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கை, காலிலும் நான்கு விரல்கள் மட்டுமே! இவை எல்லாம் வேண்டும் என்றே நிகழ்ச்சியின் படைப்பாளர்கள் தொடரில் புகுத்தி வைத்திருக்கும் வேடிக்கையான ஆனால் மாறவே மாறாத முரண்பாடுகள் (consistent illogical paradoxes)!
Dan Castellaneta, Julie Kavner,Nancy Cartwright, Yeardley Smith, Hank Azaria மற்றும் Harry Shearer போன்றோர் தொடர் ஆரம்பித்த நாட்களில் இருந்து முறையே ஹோமர், மார்ஜ், பார்ட், லிசா, அப்பு முதலிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள். பார்ட்டின் குரலாளரான நான்சி கார்ட்ரைட் என்ற பெண்மணி “ஒரு பத்து வயது பையனாக எனது வாழ்க்கை” என்று புத்தகமே எழுதி இருக்கிறார்.
இந்தியாவிலிருந்து ஆரம்பித்து இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், இஸ்ரேல், ஐஸ்லாந்து, விண்வெளி என்று பல்வேறு கதைகளில் சிம்சன் குடும்பத்தினர் சென்று மீளாத இடங்களே கிடையாது. கிண்டலடிக்காமல் விட்ட திரைப்படங்களோ, கலாச்சார விஷயங்களோ, விளையாட்டுகளோ, அரசியல் தலைவர்களோ நிறைய கிடையாது. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் தொடர்ந்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குட்டி திரைப்பட துணுக்குகளாக வரும் காணொளிகளை (Video Clips) தொகுத்தால் ஒரு கதை வெளிப்படுவது, 3டி போன்ற முறைகளில் வரையப்பட்ட நிகழ்ச்சிகள், அபூர்வமாக நிஜ நடிகர்கள் வரையப்பட்ட சித்திரங்களுடன் சேர்ந்து தோன்றுதல், பாடல்கள், என்று பல பரிச்சார்த்த முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுவது உண்டு!
சொல்லப்படும் கதையை பொறுத்து பல சமயம் புதிய கதாபாத்திரங்கள் ஒரே ஒரு எபிசோடில் மட்டும் தலை காட்டிவிட்டு மறைந்து போய் விடுவார்கள். இந்த பாத்திரங்களில் குரல் கொடுத்து நடித்துக்கொடுப்பது உலகெங்கிலும் பல பிரபலங்களால் ஒரு பெரிய கௌரவமாகவே கருதப்படுகிறது. எனவே முன் நாளைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளேர், மிஷல் ஒபாமா, மைக்கேல் ஜாக்சன், விண்வெளி வீரர் பஃஜ் ஆல்ட்ரின் (Buzz Aldrin), பீட்டில்ஸ் புகழ் ரிங்கோ ஸ்டார், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமத் யுனஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஷோவில் தோன்றி இருக்கிறார்கள். எந்த எபிசோடில் யார் குரல் கொடுத்தார்கள் என்ற மிக நீண்ட பட்டியலை இங்கே பார்க்கலாம்! ஆங்காங்கே வந்திருக்கும் பல நகைச்சுவை வசனங்கள் பன்ச் டயலாக் போல் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கின்றன. உதாரணமாக ஹோமரின் வரிகளான “முயற்சிதான் தோல்வியின் முதல் படி”, மற்றும் “மது: மனிதகுலத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் மற்றும் தீர்வு”. இப்படிப்பட்ட பொன்மொழிகளை யார் எந்த எபிசோடில் சொன்னார்கள் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து மகிழ்வதற்கென்றே ஒரு தேடுதளம் (Search Engine) படைக்கப்பட்டிருக்கிறது! ஃப்ரினியாக் என்ற இந்த தளம் இப்போதைக்கு முதல் பதினைந்து வருடங்களில் வந்த அத்தனை எபிசோட் வசனங்களையும் சுமார் முப்பது லட்சம் கூறுகளாக்கி அட்டவணைப்படுத்தி வைத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் வந்த எந்த வார்த்தை அல்லது வசனத்தையும் தேடுவோருக்கு ஒரே வினாடியில் படத்தோடு சான்றாதாரமாக வழங்கி சேவை செய்து கொண்டிருக்கிறது! உள்ளே புகுந்து சும்மா “Jebus” என்று ஒரு தேடல் செய்து பாருங்கள்.
இந்தத்தொடரின் வெற்றியை தொடர்ந்து Fox சேனலிலேயே Family Guy, Futurama, King of the Hill போன்ற பலர் சித்திரத்தொடர்கள் வந்து போய் இருக்கின்றன. சிம்சன் தொடரின் பல படைப்பாளர்கள் Futurama தொடரிலும் பணி புரிந்திருப்பதால், சித்திரங்களின் பாணி, மறைந்திருக்கும் கணித ஜோக்குகள் என்று இரண்டு தொடர்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காமெடி சென்ட்ரல் போன்ற வேறு தொலைக்காட்சி சேனல்கள் Southpark முதலிய சித்திரத்தொடர்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றன. ஆனால் எனக்கு தெரிந்தவரை மற்ற எந்த தொடரிலும் இவ்வளவு ஆழம், நூறு சதவீதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலும் குடும்பத்தோடு பார்க்கும்படியான நகைச்சுவை, தன்னைத்தானே கலாய்த்து பகடி செய்துகொள்ளும் பாணி, தொடரும் தரம், முப்பதாவது ஆண்டை நோக்கி நடை போடும் சாஸ்வதம் போன்ற குணாதிசயங்கள் கிடையாது.

key_art_the_simpsons

1990களில் இந்தத்தொடரை ரசித்து பார்க்க ஆரம்பித்த நாட்களில் டி‌வி‌டி, இன்டெர்நெட் எதுவும் கிடையாது. எனவே இந்த நிகழ்ச்சி வரும்போதெல்லாம் VCRஇல் VHS டேப் ஒன்றை போட்டு விளம்பரங்களை தவிர்த்து நிகழ்ச்சியை மட்டும் பதிவு செய்து சேமிக்க ஆரம்பித்தேன். ஒரு இரண்டு மணி நீள கேசெட்டில் SLP வேகத்தில் பதிவு செய்தால் சுமார் பதினெட்டு எபிசோடுகள் கொள்ளும். 2014 வரை இப்படியே 500க்கும் மேற்பட்ட ஷோக்களை அந்தக்காலத்து மனிதரான மாண்ட்கோமரி பர்ன்ஸ் போல 28 VHS கேசட்களில் பதிவு செய்திருந்ததோடு மட்டுமில்லாமல், ஒரு விரிவுத்தாளில் (spreadsheet) எத்தனையாவது கேசட்டில் எந்த நிமிடத்தில் இருந்து எந்த நிமிடம் வரை எந்த எபிசோட் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற அட்டவணை ஒன்றை வேறு பராமரித்து வந்தேன்! It was a labor of love. அதன் பின் டி‌வி‌டி தொகுப்புகள் வந்துவிட்டது மட்டுமின்றி, இணையத்தில் இருந்து தேவையான ஷோவை தேடி பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. பல்கலைகழக நாட்களில் செய்தது போல் ஒரு ஆறு மணி நேர கேசட்டை போட்டு பல எபிசோட்களை நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்றுக்குப்பின் ஒன்றாக பார்த்து ரசித்த காலம் மலையேறி போய்விட, தேவையானபோது தேவையான ஓரிரு நிமிட வீடியோ துண்டை பார்ப்பது, அதனை மின்னஞ்சலில் இணைப்பது போன்ற தேவைகள்தான் நிலைக்கப்போகிறது என்று தோன்றியது. இத்தகைய புதிய தேவைகளைப்பற்றி கூட இணையத்தில் யார்யாரோ கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். எனவே மூன்று வருடங்களுக்கு முன், “என்னிடம் இந்த 28 சிம்சன் கேசட் தொகுப்பு இருக்கிறது, யாருக்காவது இலவசமாக வேண்டுமா?”, என்று எங்கள் ஊர் இணைய தளம் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தேன். உடல் நலம் குன்றிய ஒரு ஏழை வெள்ளைக்காரர் எங்கள் வீட்டுக்கு வந்து அந்த தொகுப்பை பெற்றுச்சென்றார். சில நாட்களுக்குப்பின் அவரிடம் இருந்து இப்படி ஒரு மின்னஞ்சல்:
 

எனக்கு குடும்பம், உறவினர்கள் என்று அருகே யாரும் கிடையாது. பண வசதி குறைவு. ஆனால் நிறைய வியாதி தொந்தரவுகள் உண்டு. இந்த சூழ்நிலையில் நீங்கள் கொடுத்த இந்த சிம்சன் கேசட் தொகுப்பு வெகு நன்றாக எனக்கு துணை கொடுத்து சிரிக்க வைத்து என்னை பார்த்துக்கொள்கிறது. வேறொரு சமயம் சந்தித்திருந்தால், பரஸ்பரம் நல்ல ரசனை உடையவர்கள் என்ற முறையில் நிச்சயம் நாம் நீண்ட நாளைய நண்பர்களாகி இருப்போம் என்று நினைக்கிறேன். உங்கள் நன்கொடைக்கு மிக்க நன்றி.

 
அவரது மின்னஞ்சலை படித்து முடித்தபோது என் கண்களில் நீர் முட்டியது. சிம்சன் தொலைக்காட்சி தொடரால் நம்மை சிரிக்க வைக்க மட்டுமே முடியும் என்று யாராவது சொன்னால் நம்பி விடாதீர்கள்!

–o0o–

One Reply to “27 வயதான அமெரிக்கக் குடும்பம்”

  1. இம்முறை சொல்வனத்தில், சிம்ப்சன், மகரந்தத்தில் ஒற்றைக்கண் மினியான், உலக திரைப்படத்தில் இன்னுமொரு ஒற்றைக்கண் என illuminatiகளின் தாக்கம் அதிகமாக தெரிகிறது. சிம்ப்சன் கூட இல்லுமினாட்டிகளின் தொடர் என்றுதான் நினைக்கிறேன்.முதல் படத்தில் சுவரில் மாட்டியிருக்கும் ஓவியத்தில் மூன்று பிரமிடுகள் உள்ளன,என் அறிவுக்கு அது மட்டும்தான் தெரிகிறது. இந்த ஒற்றைக்கண்ணையும், பிரமிடையும் சென்னையில் ஒரு கிறிஸ்துவ ஆலய்த்தில் பார்த்து அதிர்ந்து போனேன்,அங்கிருபவர்களுக்கு அந்த படம் ஏன் அங்கே வரையப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.