தடம் பதித்த சிற்றிதழ்கள்

Little_Magazines_Small_Magz_Lit_Literature_Read_Library

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, .  இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம், ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம்; ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து,  நவீன தமிழிலக்கிய மரபுப்படி  இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும்  முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.  
நண்பர்  சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர்  எங்கோ எப்போதோ  படித்ததாகச்  அடிக்கடி சொல்வார்:

“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி
அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி
இருவரும் போடவில்லையெனில்
நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி
எல்லோரையும் கிழி ”

 திரு வே. சபா நாயகம் அவர்களின் ’தடம் பதித்த சிற்றிதழ்கள்’ கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது  உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு  சிற்றிதழ் என்பது  தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,   களத்தில் இருக்கிற சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி.  காரணங்கள்  எதுவாயினும்  தரமான சிற்றிதழ்கள் மற்றும்  இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும்  கிடைத்திருக்கின்றன.
சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம்,  தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை  அனைத்துமே அதனதன் பாதையில்  நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.  
இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ  சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்  போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில்  எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,   ஆசிரியரே எத்தனை பெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து,  அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.
கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள்  சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.  புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு  சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது  பிறகு  நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட  இன்றைய  சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது.  இந்தகைய சாமர்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத   சிற்றிதழ்கள்  வீழ்ச்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலகுடன் ஒப்பிடுகிறபோது  சந்தோஷப்படும் நிலையிலில்லை.  இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்.
இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்  திரு வே. சபாநாயகம். சிறுகதைகள்,  நெடுங்கதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும்,  பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை  ஒவியம் ஆகியவற்றிலும்  தேர்ந்தவர்  விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்”  என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன்.  அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.
இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவான கட்டுரைகள். அதென்ன  இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல:
“மணிக்கொடி தொடங்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால்  நின்று போன இலக்கியப் பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.
பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு  சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதுகின்றவரின்  ஞானத்தை முன்னிலைப்படுத்தும்  நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே  நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத்  தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம்  எழுத்து அப்படி அல்ல.  தவிர அவருடைய கட்டுரைகளில்  பாகுபாடுகளில்லை. அவரால்  நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம்  வானம்பாடியென  எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி  சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது.  
முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள்,  எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது?  இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்?  எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன  போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையான பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசடதபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன.  இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட  ஐந்து விடயங்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:
அ. இதற்கு முன்பு வேறொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள்  அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்குகிறார்கள்.
ஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.
இ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில்  எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.
ஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
உ  நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.
நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன.  நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” என்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலான பெயர்களைச் சந்திக்கிறோம்.  கசடதபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதையென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.  
வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது’, கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம்,  நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகருக்கு ‘ விருந்தளித்தது என்கிறார்  வே.சபா நாயகம்.  இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த  குறை இருந்திருக்கிறது.
“இலக்கிய வட்டம் “  முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது.  நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை, கவிதை எழுதியதாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் நம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியோரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன என்கிறார் வே.சபா நாயகம்.
இத்தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று.   ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவியரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம்,  சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.
இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல  ‘சுட்டி’  என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும்  கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ்  ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூடத் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.
இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில்  முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே  நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ  அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக  கசடதபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது.  க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.
சிற்றிதழ்களைப் பற்றிய தகவல்களைக் குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என்கிற போதும் அவற்றால்  நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா  நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட்டத் தவறுவதில்லை.

Ve_Sabanayagam_Sitrithazh_Small_Zines_Tamil“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லலாம் “ (பக்கம் 11)
“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுக்கவிதைக்கு  அது நிறையவே செய்தது” (பக்கம் 16)
“ஆரோக்கியமான அருமையான விஷயங்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)
“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)

திரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை.  ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்தது தான் , தவிர தொடங்கும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த  முடியாமற் போனதற்குக் காரணமாக இருக்கலாம்.  புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள்  இந்த நூலிலிருந்து கற்பதற்கு,  தெரிந்துகொள்வதற்கு  நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும்  சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை  ஒப்பிட்டுப் பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்லச் சாத்தியமெனில் சில சமரசங்களும்  செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை  வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல  ஏதேனும்  செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.
 
 
 
 

One Reply to “தடம் பதித்த சிற்றிதழ்கள்”

  1. நல்லதொரு கட்டுரை. திரு.வே.சபாநாயகம் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்று. இதைப் போல் பிற்காலத்தில் சில நூல்கள் வரக்கூடும். ஆனால் இதன் சிறப்பு என்னவெனில் இந்த இதழ்களை அவற்றின் பிறப்பின் போதும் வளர்ச்சியின் போதும் நின்றுபோன போதும் கவனித்த ஒருவரின் கட்டுரைகள். இலக்கிய உலதத்தை ஐம்பது ஆண்டுக்கும் மேலாக கவனித்தும் தொடர்பிலும் இருப்பவர் என்பதும் இவை வெறும் தகவல் திரட்டு அல்ல என்பதுமே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.