kamagra paypal


முகப்பு » இலக்கியம், ரசனை

கோவிந்தன் குழல்வாராய் அக்காக்காய்!

Krishna

சிறுகுழந்தையை எவ்வாறு அவனுடைய பூவுடம்புக்குத் தகுந்தவாறு நீராட்ட வேண்டும் என்பதனைப் பெரியாழ்வார் எனும் தாயின் வாய்மொழியாக அறிந்து கொள்ளலாம். தனது ஆசைச் சிறுமகனை நீராட்ட அன்னை யசோதை என்னவெல்லாமோ பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கள்ளனோ விளையாட்டுப் போக்கில் நீராடவே வரமாட்டேன் என்கிறான். சின்னஞ்சிறு குழந்தையைத் தாய்மார்கள் தங்கள் தொடையில் குப்புறப் படுக்க வைத்து, அப்பிஞ்சு உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்து லேசாக உருவி விட்டு, (இக்காலத்தில் இதனை மஸாஜ், மாலிஷ் என்பார்கள்!) பின்பு, கண்களில் விழுந்து எரியும்படிச் செய்யாத வாசனைப் பொருட்கள் சேர்த்த பயற்றம்பொடியால் தேய்த்துக் குளிப்பாட்டி, மிதமான சூட்டில் வெந்நீர் ஊற்றி, பூத்துவாலையால் உடல் துடைத்துவிடுவார்கள்.

எந்தக் குழந்தையும் குளியல் என்ற அனுபவத்தை முதன்முதலில் ரசித்து மகிழ்வதில்லை. ‘தடதட’வெனத் தன்மீது ஊற்றப்படும் வெந்நீரை ரசித்துக் களிப்பதில்லை. குளியலின்போது கத்தலும் அலறலுமே அவர்களின் வாடிக்கை. இந்த அனுபவத்தைக் குழந்தைகளுக்குச் சுளுவாக்கவே தாய் தன்தொடையில் குழந்தையைப் படுக்க வைத்துக் கொள்கிறாள். மூன்றுமாதம் முதல் பன்னிரண்டு மாதத்துக் குழவியாயின், தாயின் உடல் கொடுக்கும் இந்த அரவணைப்பு, முன்பே நாம் கண்டதுபோல ஒரு பாதுகாப்பு உணர்வை குழந்தையிடம் உண்டு பண்ணுகிறது. வாசனைப் பொருட்களும் உடலுக்கு நன்மை செய்யும் மூலிகைகளும் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயானது சிறுகுழந்தையின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்; உடலுக்கு நன்மைதரும். சிறிது வளர்ந்த, ஊர் முழுதும் சுற்றியலைந்து விளையாடிக் களைத்த குழந்தையாயின் உடலின் அலுப்பைப்  போக்கும்.

~oOo~

ஐந்தாறு வயதுக் குழந்தை நமது கிருஷ்ணன். வீடுவீடாக நண்பர்கள் பட்டாளத்துடன்சென்று வெண்ணெயையும் தயிரையும் எடுத்து உண்டுவிட்டு வருவதால் அவன் உடல், உடை எங்கணும் முடைநாற்றம் வீசுகிறது. போதாத குறைக்குப் பிள்ளைகளுடன் தெருப்புழுதியில் விளையாடியும், காடுமேடு எனச் சுற்றி அலைந்தும் திரிந்ததால் யசோதைக்கு அவனிடம் பெரும்கோபம். ஏன் தெரியுமா? அவன் குளிக்கவில்லை, கைகால்களைச் சுத்தம்செய்து கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் களைப்பினால் படுத்து உறங்கியும் விட்டான். அவனிடமிருந்து, புளித்த தயிர்வாடை வீசுகிறது; உறங்கும்போது உடல் முழுவதும் வந்த தினவால் அங்கும் இங்கும் தேய்த்தபடியும் கைநகங்களால் அரித்துக்கொண்டும் உறங்கும் அலங்கோலத்தைக் கண்டவளுக்கு உள்ளம் பொறுக்கவில்லை. “என்ன குழந்தை இவன்! இப்படி சொல்பேச்சு கேளாமல் பட்டிமேயும் கன்றெனத் திரிந்தபடிக்கு இருக்கிறான்,” எனக் கோபம்கொள்கிறாள்.

‘இன்றைக்கு அவனை நான் விடப்போவதில்லை; புழுதிபடிந்த உடலோடு அவனைக் கண்டதும் பிடித்திழுத்துக் கொண்டுபோய் குளிப்பாட்டி விட வேண்டும்,’ என எண்ணமிட்டுக் கறுவியவளாய், கிண்ணத்தில் நிரம்பி வழியும் எண்ணெயும், பூசிக்குளிக்க புளியம்பழக் காப்பையும் தயாரித்துக்கொண்டு காத்திருக்கிறாள்.

வெண்ணெய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத்
தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்;
எண்ணெய் புளிப்பழம் கொண்டுஇங்கு
எத்தனை போதும் இருந்தேன்;
நண்ணல் அரிய பிரானே!
நாரணா! நீராட வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)

‘இன்றைக்கு நீ பிறந்த திருவோண நாள்; இன்றாவது நன்றாக நீராட வேண்டுமப்பனே!’ எனக்கெஞ்சுகிறாள் அன்னை! நெல்லிமர இலைகளைப்போட்டுக் காய்ச்சிய நீரை – இது உடலின் களைப்பை நீக்குமாம்!- அகன்ற பாத்திரத்தில் நிரப்பி வைத்துக்கொண்டு ஆசை ஆசையாகக் காத்திருக்கிறாள் அன்னை. இன்னும் மஞ்சள்விழுது, சந்தனக்கலவை ஆகிய வாசனைப்பொருள்களும், சாந்து,மை, மலர்மாலை ஆகியனவற்றையும் வைத்துக்கொண்டு காத்திருக்கிறாள் அவள். இந்த மாயக்கண்ணன் வருவதாகக் காணோம்!

‘மஞ்சளும் செங்கழு நீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
அழகனே! நீராட வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)

ஏற்கெனவே அன்று ஒரு இடைச்சிறுமி இன்னொருத்தியிடம் கூறிச் சிரித்ததனைக் கேட்டிருக்கிறாள் யசோதை; என்னதான் சொன்னாளாம் அவள்?

“அடியே, உனக்குத் தெரியுமா? இந்தக் கிருஷ்ணன் குளிப்பதேயில்லை! அன்று என்னருகே வந்து என் கண்களைப் பொத்தினானடீ! அவன் பக்கத்தில் வந்தால் என்ன முடைநாற்றம் வீசுகிறது தெரியுமாடீ?” என்றாளாம். மற்றபெண்கள் எல்லாரும் ‘கலகல’வென நகைக்கிறார்கள். அதனைகேட்ட தாய்க்குப் பொறுக்கவில்லை! ஊர்ப்பெண்கள் எல்லாரும் அவளுடைய சிங்கக்குட்டி மகனைப் பற்றிப்பேசிச் சிரிக்கிறார்கள்! அவனை எப்படியாவது நன்கு நீராடச்செய்து நல்ல ஆடைகளை உடுத்திவிடவேண்டும், இந்த ஏளனப் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தவிக்கிறது தாயுள்ளம். திரும்பவும் இந்த ‘லஞ்சம்’கொடுக்கும் பேச்சுக்களைப் பேசியழைக்கிறாள். அப்பத்துடன் அக்காரம் கலந்தபாலை ஊற்றிப்பிசைந்து சிற்றுண்டி செய்து வைத்திருக்கிறேனப்பா உனக்கு. நீ அதனைத் தின்னவிரும்பினால், நன்றாக நீராடிவிட்டு வரவேணும்,” என்கிறாள்.

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன்;
தின்னல் உறுதியேல்; நம்பீ!
செப்பு இளமென் முலையார்கள்
சிறுபுறம் பேசிச் சிரிப்பர்;
சொப்பட நீராட வேண்டும்
சோத்தம், பிரான்! இங்கே வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)

“கிருஷ்ணா, நீ செய்யும் குறும்புகள் மிகப்பல. யார்வீட்டிலாவது புகுந்து உறங்கும் குழந்தையைக்கிள்ளி எழுப்பிவிடுகிறாய். நீ பிறந்த நாள்முதல் கறந்தபால், தயிர், உறியில் வைத்த வெண்ணெய் இவற்றைக் கண்ணாலும் கண்டதில்லை. நீயே அவற்றை உன் விருப்பப்படி எடுத்து உண்டு விடுகின்றாய். இவ்வாறெல்லாம் நீ செய்வதனைப்பற்றி யாரிடமும் நான் குறைகூறுவதேயில்லை. நீலவண்ணனே! நீராட வாராய். சுவையான பழங்களை உனக்காக வைத்திருக்கிறேன் கண்ணா!” எனக்கூறுகிறாள்.

மேலும், “உன் குணங்களைப் பற்றி ஒன்றுமே அறியேன் நாராயணா! நீ பசுக்களை மேய்க்கச் சென்றபோது விளையாட்டாக ஒருகன்றின்வாலில் ஓலையைக்கட்டி அக்கன்றினை விளாமரத்தின்மீது வீசியெறிந்தாய். ‘பலபல’வென மரத்திலிருந்து கனிகள் உதிர்ந்தன. உனது முரட்டுத்தனமான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று என எண்ணினவர்கள் வியக்கும் வண்ணம் அது கன்று உருவில் வந்த அசுரனாகி இறந்தொழிந்ததப்பா! காளிந்தி மடுவில் குதித்து அந்தப் பாம்பைப் பிடித்து அதன் வாலை முறுக்கி, அதன் தலைமீது நடனம் ஆடி அதனைக் கொன்றாய். நீ அசகாயசூரனடா என் குழந்தாய்! இன்று நீ பிறந்த திருநாளாகும். எங்கும் ஓடிவிடாமல் வந்து நன்றாக நீராடப்பா,” எனக் கெஞ்சுகிறாள்.

கன்றினை வால்ஓலை கட்டி
கனிகள் உதிர எறிந்து
பின்தொடர்ந்து ஓடிஓர் பாம்பைப்
பிடித்துக் கொண்டு ஆட்டினாய் போலும்;
நின்திறத்தேன் அல்லேன், நம்பீ!
நீ பிறந்த திருநன்னாள்
நன்றுநீ நீராட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)

கிருஷ்ணன் பசுத்தொழுவத்தில் புகுந்து புறப்பட்டுக் கன்றுகளோடு விளையாடிவிட்டுப் புழுதிபடிந்த உடம்போடு வருகிறான். யசோதைக்கு வயிறெரிகிறது: “அடடா! இந்த என் மாணிக்கம், என் கண்ணன், அழகன், இப்படி அலங்கோலமாகப் புழுதியுடன் நிற்கிறானே,” என வருந்தி, “உன்தோழி நப்பின்னை இந்தப் புழுதிபடிந்த உடலைக் கண்டால் சிரிப்பாளடா. வெட்கமில்லாமல் இப்படி நிற்கிறாயே! வந்து நீராடுவாய்.”

நாண்இத் தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்;
மாணிக்கமே! என்மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்.

(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)

ஒருவழியாகக் கிருஷ்ணனைப் பாடுபட்டு நீராட்டியாயிற்று. இனி அலங்காரம் துவங்குகிறது. அவனது ஈரத்தலையைத் துவட்டிவிட்டு, சுருண்ட கருங்குழலை வாரவேண்டும்.

குழந்தையின் தலையை வாரிப் பின்னுவதென்பது அவன் பிறந்தநாள் முதல் ஆரம்பித்து விடும் ஒரு நிகழ்வு.  நல்ல எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுத்து, உச்சந்தலையிலிட்டுத் தேய்த்து, உடலின் குளிர்ச்சி, கண்களின் கூர்மையான பார்வை, தலைமயிர் நீண்டு வளர வேண்டி, எனப்பலவிதங்களில் குழந்தைகளின் தலைமயிரும், மண்டையும் அன்னையரால் பராமரிக்கப்படுவது மிகப்பழமையான ஒரு வழக்கமாகும். பின்பு அந்த நீராட்டிய தலையைத் துவட்டி, சாம்பிராணி, அகில்புகை காட்டி உலர்த்தி, நறுமண எண்ணெயைத் தடவி, தந்தம், சந்தனம் முதலியவற்றால் செய்யப்பட்ட சீப்பைக்கொண்டு வாரி, விதம்விதமாக முடித்து, அதில் பூச்சரங்களைச் சுற்றி பின் அணிகலன்களையும் கொண்டு அழகுசெய்வதென்பதெல்லாம் தாய்மார்களுக்குக் கைவந்ததொரு கலையாகும். பெண்குழந்தைகளானால் இது இன்னுமே விரிவாகச் செய்யப்படும் தினசரி நிகழ்வாகும்.

அற்புதமே உந்தன் அழகானகொண்டைக்கு
அரும்பு முடிச்சதாரு?
முத்துக்கொண்டைமேல் முல்லைப்பூ முடித்தாற்போல்
நெற்றியில் ரத்னச்சுட்டி நேராய்ப்பதிந்தாற்போல்
அற்புதமான கிருஷ்ணா திருஷ்டி வைத்தூரார் உன்னைப்
பார்த்தால் என்னடா செய்வேன் பாலகோபால கிருஷ்ணா

எனவொரு பாடல்,

 

முத்துக்கொண்டைமேல் நவரத்னச் சுட்டியும்
முடிதனில் கட்டுறேன் வாடா!
பிச்சிசரத்துடன் பீலிசரம் கட்டுறேன்
பொன்மணியே கிருஷ்ணா வாடா!’

எனும் பாடல் ஆகியவைகளை எனது பாட்டியார் பாடிக் கேட்டிருக்கிறேன்.

குழந்தைக்கு அலங்காரம் செய்து அழகுபார்ப்பது தாய்மார்களின் நித்தியக் கடமைகளில் ஒன்றாகவும், அவர்களின் பெரும்பாலான நேரத்தையும் கவர்ந்துகொண்ட இனியதொரு செயலாகும். ஆண்டாள் கொண்டை, கிருஷ்ணன் கொண்டை எனவெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? கிருஷ்ணன் கொண்டையில் மயில்பீலி கட்டாயம் இருந்தாக வேண்டும்தானே?

மேலும் பலவிதமான அணிகலன்கள்- மகரக்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்றில், குழைக்காதனாகிய திருமால் எனும் குழந்தை – செல்வத் திருப்பேரைவல்லிக்கு மணவாளன்- செங்கீரையாடிய போதில் (தவழ்ந்து வந்தபோது) என்னவென்ன அணிகளெல்லாம் உடன் அசைந்து ஆடின எனப்பட்டியலிடுகின்றது. இத்தனை அணிகலன்களையும் தாய் குழந்தைக்கு அணிவித்து அழகு பார்த்திருக்கிறாள்.

குழந்தை செங்கீரையாடியபடி -தவழ்ந்தாடி வரும்போது தேன்சிந்துகின்ற பசிய துளபமாலை அசைந்தாடுகிறது; நெற்றியிலணிந்த சின்னஞ்சிறிய பொன்சுட்டி ஆடுகிறது; தோளில் அணிவிக்கப்பட்டுள்ள மரகதத்தாலான வலயம் எனும் அணி ஆடுகின்றது; தோள்களும் இவற்றுடன் சேர்ந்தாடுகின்றன; காதிலணிவிக்கப்பட்ட மணிகளாலான மகரக்குண்டலங்கள் ஆடுகின்றன: அழகிய மேனி ஆடுகின்றது; கழுத்திலணிவிக்கப்பட்ட ஒளிவீசும் முத்துவடம் ஆடுகின்றது; இனிய செந்தமிழைக் கற்றவர்கள் போற்றிக் கொண்டாடுகின்றனர்;

துன்பம் விளைவிக்கும் கொடியசேனையைக் கொண்ட இராவணனின் மனவலிமை திண்டாட (தளர்ந்து போக) நெடிய வானிலிருந்து தேவர்கள் துந்துபி எனும் இசைக்கருவியை முழக்கி மகிழ்கின்றனர்; மலர்மாரி பொழிகின்றனர்; சீதரன், முகுந்தன் எனும் ஆயிரம் பெயர்களைக் கொண்டவன் செங்கீரையாடுக; திருப்பேரைவல்லியின் மணவாளன் செங்கீரையாடுக,” என வேண்டுவதாக இப்பாடல் அமைகிறது. (மிக அழகிய இனிமையான இப்பாடலின் முழுமைக்காக முழுப்பொருளும் விளக்கப்பட்டது).

தாதவிழ் பசுந்துளவ மாலையாடச் சிறியதமனியச் சுட்டியாடத்
தருண மரகத வயிர வலையமாடப் பொற்றடந் திருத் தோள்களாடக்
காதுதிரு மணிமகரக் குண்டலமு மாடக்கவின்பொலியு மேனியாடக்
கதிர்முத்து வடமாட மதுரித்த செந்தமிழ்கற்றவர்கள் கொண்டாடவே
வாதுபுரி கொடிய சேனாபதி யிராவணன்மனவலிகள் திண்டாட நீள்
வானத்திருந்து துந்துபியாட மலர்மாரிவானர் பொழிந்தாடவோர்
சீதர முகுந்த பேராயிர முகந்தவர் செங்கீரை யாடி யருளே
செல்வத் திருப்பேரை வல்லிக்கு மணவாள செங்கீரை யாடி யருளே.

(மகரக்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்)

சிலகுழந்தைகளுக்கு- அதுவும் அடர்த்தியான சுருட்டைமயிர் கொண்ட குழந்தைகளுக்கு தங்கள் தலைவாரப்படுவது பிடிக்காத ஒருசெய்கை எனலாம். சீப்பு தலைமயிரில் மாட்டிக்கொண்டு, மயிர் அதனால் இழுபட்டு வேதனை தரும். குழந்தைகள் வலியால் கத்துவார்கள். விளையாட்டுக் குழந்தைகளானால், தலைவாரிக்கொள்ளவே வரமாட்டார்கள்!

நமது கிருஷ்ணனும் அப்படித்தான்! அன்னை சீப்பை எடுக்குமுன்பே அவன் அன்னையின் பிடியிலிருந்து விடுபட்டு ஓட எத்தனிக்கிறான்.

குழந்தைகளுக்கு நாயும், காக்கையும், நிலாவும் தான் முதல் தோழர்கள்; அன்னையால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள்; வேண்டியபொழுதெல்லாம் அவள் இவர்களை விளித்து, குழந்தையுடன் விளையாடவோ, அல்லது, அவனை மகிழ்விக்கவோ வேண்டுவாள்.

இவற்றுள் அண்டிப்பிழைக்கும் காக்கை குழந்தையின் வளர்ச்சியில் பெரும் இடம் வகிக்கிறது! குழந்தையின் கையிலுள்ள தின்பண்டத்தில் பங்குகோரியும், அவன் உண்ணாமல் மீந்த உணவை ஏற்றுக்கொள்ளவும் தயாராகக் காத்துக்கொண்டிருப்பது காக்கை. நாயும் இதில் சேர்த்திதான்! அதன் இந்தத் திருட்டுத்தனங்களைப் பொருட்படுத்தாது, குழந்தையும் காக்கையைத் தன் விளையாட்டுத் தோழனாக ஏற்றுக்கொண்டுவிடுவதால், இப்போது தாய் குழந்தைக்குத் தலைவாரிவிடக் காக்கையைக் கூப்பிடுகிறாள்!

காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி கொண்டைக்குப் பூகொண்டுவா
கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டுவா
கிளியே கிண்ணத்தில் பால்கொண்டுவா

அடிக்கடி வீடுகளில்  தாய்மார்கள் பாடிக்கேட்ட பாட்டல்லவா இது?

சிறு குழந்தை வளர்ந்து வரும்போதில் அவனது சிந்தையும் எண்ணங்களும் புதுப்புதுச் செயல்களை நோக்கிச் செல்கின்றன. அறிந்துகொள்ளும் ஆர்வமும், தெரிந்துகொள்ளும் ஆவலும் மிதமிஞ்சி நிற்கின்றன. தாய் இந்த சந்தர்ப்பங்களை மிகுந்த சாமர்த்தியத்துடன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். காக்கையைப்பற்றிக் கூறி, குருவிகளின் குடும்ப அமைப்பைக் காட்டிக் கதைகள் கூறுகிறாள். கூடவே சோறூட்டி, நீராட்டி, தலைவாரிவிட்டு, அலங்கரித்து என எல்லாவற்றையும் தன் எண்ணப்படி தன்குட்டனுக்காகச் செய்தும்விடுகிறாள்.

‘என் குட்டனின் குழலை வார வா காக்காய்,’ என்கிறாள் யசோதை. “இவன் நப்பின்னைக்கு மணாளன்; திருப்பேர் எனும் ஊரில் பள்ளிகிடந்தவன்; அமரர்களுக்கெல்லாம் முதல்வன்; என்னையும் எங்கள் குடிமுழுவதினையும் ஆட்கொண்டவன். இப்பேர்ப்பட்ட எங்கள் கண்ணனின் குழலை வார நீ வருவாயாக காக்காய்,” எனக்கூப்பிடுகிறாள்.

பின்னை மணாளனை, பேரிற் கிடந்தானை
முன்னை அமரர் முதல்தனி வித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுது ஆட்கொண்ட
மன்னனை, வந்து குழல்வாராய் அக்கக்காய்!
மாதவன்தன் குழல்வாராய் அக்கக்காய்!

குழந்தைகளைக் கொஞ்சும்போது, “அவன் அப்படிப்பட்டவன்; இப்படிப் பெரும்செயல் செய்தவன்,” என்றெல்லாம் பெருமை பெறப்பேசுவது தாய்மார்களின் வழக்கம். “என் கண்ணனா? நொடியில் இந்த வேலையை முடித்துவிடுவானே!”, “அவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை,” என்பதெல்லாம் உலகத்துத் தாய்மார்களின் வழமையான பேச்சு. யசோதையும் தாய் தானே! கிருஷ்ணன் செய்த விந்தைச்செயல்களுக்கு அவளும்தானே சாட்சி! குழந்தையும் தெய்வமும் ஒன்று என ஒரு கருத்து நமது நாட்டில் நிலவுவது. போற்றிக் கொண்டாடி மகிழும் விதத்தில் இரண்டும் ஒன்றுதான்! இவன், தன் மகன் எனப்படும் இந்தக் கிருஷ்ணக்குட்டன் ‘தெய்வமா அல்லது குழந்தையா’ எனும் குழப்பம் அவளுக்கு ஏன் எழவில்லை?அதுவும் அந்த கிருஷ்ணனின் மாயையினால்தான். அவளை எல்லாம் தெரிந்தும் தெரியாதவள் போலாக்கி விடுகிறான். இவளும் மற்ற தாய்கள் போல் அவனிடம் சினந்தும், கெஞ்சியும், கொஞ்சியும் நடந்துகொள்கிறாள்.

பேயின்முலை உண்ட பிள்ளைஇவன், முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர் வண்ணன்; கண்ணன் கருங்குழல்
தூய்துஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!
தூமணி வண்ணன் குழல்வாராய், அக்காக்காய்.

இப்பாசுரங்களின் ஊடே தவழும் அழகு யாதெனில், ‘என் குழந்தை இதையெல்லாம் செய்தவன் காக்கையே! அதனால் அவன் பெருமைகளை உணர்ந்து இங்குவந்து அவனுக்கு அழகாகத் தலைவாரி விடு,’ எனக்கூறுவதாக அமைவதுதான்.

“கொக்கு வடிவில் வந்த அசுரனை, கிருஷ்ணன் சாதாரணப்பறவை போல அதன் வாயைக்கிழித்துக் கொன்றான். பூதனைப் பேயின் முலை உண்டவன் இவன். நரகாசுரனைக் கொன்றவன்,” எனவெல்லாம் பட்டியலிட்டுக்கொண்டு போகும் தாய் நினைக்கிறாள்: ‘இங்கு இப்பெருமைகளைக் கூறினால் மட்டுமே போதாது. இப்படிப்பட்ட என் மகனுக்குக் குழல்வாரும் பேறு கிடைத்ததைச் சுட்டிக்காட்டவும் செய்யலாம்,’ என்று எண்ணிக்கூறுகிறாள்: “இறந்த முன்னோர்களுக்கு இடும் பிண்டச்சோற்றையும், பேய்பிசாசுகளுக்கு இடும் நீர்ச்சோற்றையும் நீ ஓடியோடி உண்டுதிரிய வேண்டாம். இங்குவந்து அமரர் பெருமானான என்மகனின் கருங்குழலை வாருவாய் காக்காய்,” என்கிறாள்:

பிண்டத் திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டி நீயோடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்!

“அக்காக்காய்! நான்முகனைப்படைத்த பிரானின் திருமுடியில் நெருங்கிய கருங்குழலை இந்தத் தந்தச்சீப்பினால் வார வருவாயாக, மகாபலியினிடத்திருந்து மூவடி அளந்துபெற்று உலகையே அளந்த பிரானின் அழகிய திருமுடியைப் பூப்போன்ற மெத்தையில் வைத்து அவனுக்கு நோகாமல், அவன் பின்புறத்தில் நின்றுகொண்டு  மயிர்த்தொகுதியை வாருவாய்; ஆயிரம் திருநாமங்கள் கொண்ட இந்தப்பிரானின் குழலை வாரவருவாய்,” என்கிறாள்.

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்இவ் வுலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூவணைமேல் வைத்துப்
பின்னே இருந்து குழல்வாராய் அக்கக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்!

குழந்தை கிருஷ்ணனின் வளர்ச்சியையும் அதுதொடர்பான சம்பவங்களையும் மிக அருமையாகக் கொண்டாடும் பெரியாழ்வார் எனும் பெரும் அடியாரின் பாசுரங்களான இவற்றைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கவைக்கின்றன.

 

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

Series Navigationகிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.