kamagra paypal


முகப்பு » கணினித் துறை, தொடர்கள், தொழில்நுட்பம்

மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை

 a

Divine Bovine by Jaideep Mehrotra

 

இதுவரை

கணிமை என்றால் என்ன? கணிமையின் பயனர்கள் யாவர்? கடந்த பல ஆண்டுகளாகக் கணிமை எவ்வித மாற்றங்களை அடைந்திருக்கிறது? சமீபத்தில் கணிமையில் பயன்படக்கூடிய சில தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பார்த்திருக்கிறோம். கூடவே, மேகக்கணிமையின் சில பண்புகளையும் மேலோட்டமாகப் பார்த்திருக்கிறோம்.

இனி

குன்ஸாக ஒரு சில விஷயங்களை இதுவரை உள்வாங்கியிருப்பீர்கள். அவையாவன:

 1. கணிமை உங்கள் கணினியில் மட்டும் நடப்பதில்லை. கணிமை உங்கள் கணினியில் நடக்காமலிருப்பது பலவகைகளில் நல்லது. (ஏன்?)
 2. கணிமையின் செயல்பாட்டில் மாற்றங்கள் தேவைப்படும் போது பயனர்களை பாதிக்காமல் அவற்றைச் செய்ய முடிந்தால் சிறப்பு. (எதற்கு?)
 3. உங்களுக்குத் தேவையான கணிமையை உங்கள்கணினியில் மட்டுமல்லாது வேறு எந்தக் கணினியிலிருந்தும் பெற முடிந்தால் அமோகம்.  (எப்படி?)

இந்தப் புரிதலையும் இதுவரை நாம் பார்த்த தொழில்நுட்பங்களையும் வைத்து மேகக்கணிமையின் பண்புகளை/சிறப்பம்சங்களைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்:

 1. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில்…

உங்களுக்குத் தேவையான கணிமை எங்கும் எப்போதும் கிடைக்கவேண்டும். இது அடிப்படை. நீங்கள் உங்களது மேசைக்கணினியையோ மடிக்கணினியையோ ஒரே ஒரு சர்வரையோ மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை கூடாது. இது எப்படிச் சாத்தியமாகிறது? மேகக்கணிமையில் உங்களது கணிமை ஒரு வலைச்செயலியாக வழங்கப்படுகிறது. அதை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு உலாவி கொண்டு இயக்கலாம். மென்பொருள் ஏதும் நிறுவத் தேவையில்லை. விண்டோஸில் தான் ஓடும், லைனக்ஸில்தான் ஓடும் என்ற இம்சையெல்லாம் இல்லை.

 1. வளங்கள் பகிர். வீணாக்கம் தவிர்.

உங்கள் வலைச்செயலி எங்கோ ஓர் கணினித்துணுக்கில் (அல்லது துணுக்குகளில்) மெய்நிகராக நிறுவப்பட்டிருக்கிறது. எனவே, கணிமை, தரவுத்தளம், வன்பொருள் என அனைத்து வளங்களும் வீணாகாமல் பகிரப்படுகிறது. அதே நேரத்தில், இயன்றவரை உங்கள் செயலியின் கணிமைத்திறனை ஒரு வலைச்சேவையாக வழங்க முடிந்தால், மற்ற வலைச்செயலிகளும் அதன் திறனை ஒரு சேவைசார் கட்டமைப்பின்மூலம் பெறமுடியும்.

 1. வீக்கத்துக்குத் தகுந்த விரல்

வன்பொருள், மென்பொருள் நெருக்கடியால் உங்கள் வலைதளத்துக்கு வரும் பயனர்களை இழக்க வேண்டிய நிலை இல்லை. மேகக்கணிமைத் திறனை வழங்கும் அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் எக்கச்சக்க வளங்களை அவர்களது தரவுமையங்களில் குவித்திருக்கின்றனர். மெய்நிகராக்கம் மூலம் கேட்ட நேரத்தில் கேட்ட அளவுக்கு உங்கள் வன்பொருள், மென்பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சில நிறுவனங்கள் இத்தகைய நெகிழ்வுகளைத் தன்னியக்கமாகவே செய்யும் திறன் பெற்றிருக்கின்றன. அதுபோலவே, பயனர் தேவை குறையும்போது தேவையற்ற வளங்களை விடுவித்து விடவும் இயலும்.

 1. மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை

மேலே சொன்னதுபோல், தேவைக்கேற்ற திறன் பெறமுடிவதால் தோசைக்கேற்ற காசு கொடுத்தால் போதும். பயனீட்டுக் கணிமைத் தொழில்நுட்பத்தின் மூலம் மேகக்கணிமை நிறுவனங்கள் உங்கள் பயன்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் துல்லியமாக அளந்து அதற்கேற்ற கட்டணத்தை மட்டும் வசூலிக்கும்: 200 மணிநேரம் கணிமை, 180 மணி நேரம் மெமரி, 100 மணி நேரம் தரவுத்தளம் என்று எண்ணி எண்ணி பில்போட முடியும். இக்கூறுகள் தெளிவாகத் தெரிந்துவிடுவதால், உங்கள் வலைச்செயலியில் எவ்வளவு பயன்பாடு இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பது தெளிவாகிவிடும். அதனால், அடுத்த மாதம் உங்கள் தளத்தில் தலைவர் பட டிக்கெட் விற்பதாக இருந்தால் இப்போதிருந்தே எவ்வளவு வளங்கள் ஏற்றவேண்டும் என்ற கொள்திறன் திட்டமிடுதல் சாத்தியமாகிறது.

 1. சிரஞ்சீவிக் கணிமை

உங்கள் வலைச்செயலியின் கணினித்துணுக்கில் ஏதேனும் வன்பொருள், மென்பொருள் வில்லங்கத்தால் அத்துணுக்கு மண்டையைப் போட நேரிட்டால் மெய்நிகராக்கத்தின்மூலம் சுலபமாக இன்னொரு துணுக்குசெய்து உடனுக்குடன் உங்கள் செயலிக்கு உயிர் தரலாம். உங்கள் செயலி எவ்வளவு தடவை அடித்தாலும் சாகாத கரப்பான்பூச்சியாக (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனோ?) வலம் வரலாம்.

 1. தரமோ பொலிவு. விலையோ மலிவு.

தேவைக்கேற்ற மீட்டர்தான் என்பதால் உங்கள் செயலியின் பராமரிப்புச் செலவு நன்றாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. வணிகப்பயனர்கள் தங்களுக்குத் தேவையான வன்மென்பொருட்களை மாய்ந்து மாய்ந்து வாங்கிக் குவிக்கத்தேவையில்லை. அவற்றைப் பராமரிக்க ஒரு ஐடி படையையும் நியமிக்கத் தேவையில்லை.

 1. எங்கெங்கு காணினும் செயலியடா!

பொதுவாக உங்கள் சர்வர்கள் ஏதோ ஒரு நாட்டில்தான் ஒட்டுமொத்தமாக இருக்கும். ஒரு பேச்சுக்காக உங்கள் சர்வர் அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதன் அருகிலிருக்கும் பயனர்கள் உங்கள் செயலியை டக்கு டக்கு என்று திறந்து பயன்பெற, வெகுதொலைவில் ஆஸ்திரேலியாவிலிருக்கும் பயனர்கள் ஒரு பட்டனைத் தட்டிவிட்டுத் தேவுடுகாத்துக்கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மேகக்கணிமையில் நீங்கள் விருப்பப்பட்டால் உலகின் பல்வேறு மூலைகளில் உங்கள் கணினித்துணுக்குகளை ஏற்படுத்திக்கொள்ள இயலும். எனவே அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரே டக்கைத் தர இயலும்.

எல்லாம் நல்ல விஷயங்களாகவே சொல்லிக்கொண்டு வந்தால் எப்படி! இதோ, மேகக்கணிமையின் சில பிரச்னைகள்:

 1. தரவுப் பாதுகாப்பு

உங்கள் தரவுகளை உங்கள் முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் சேமிப்பது பலருக்கும் பிரச்னையாகப் படுகிறது. என்னதான் அந்நிறுவனம் பிஸ்தாவாக இருந்தாலும் இடர்காப்பு விஷயத்தில் பலரும் தயங்கவே செய்கிறார்கள். குறிப்பாக உங்கள் தொழில் ரகசியங்கள் போன்ற முக்கியமான விஷயங்களை மேகத்தில் வைப்பது கொஞ்சம் யோசித்துச் செய்யவேண்டிய விஷயம்.

 1. துணுக்குக் கணக்கு. தவறினால் பிணக்கு.

பராமரிப்புச் செலவு குறையும் என்று மேலே சொல்லியிருந்தேன். ஆனால், அதை வெற்றிகரமாகச் செய்ய தெளிவான திட்டமிடலும் கூர்ந்த கவனிப்பும் தேவை. இல்லாவிட்டால் கையையும் காலையும் விற்று பில் கட்டவேண்டியிருக்கும். குறிப்பாக வளங்களை அதிகப்படுத்திய பிறகு பயனர் தேவை சார்ந்து அதை மீண்டும் குறைக்க மறந்து விடுவது ஒரு பொதுவான தவறு.

 1. உன் வாழ்வு உன் கையில். இல்லை.

அமேசானின் தரவுமையத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை வந்து அவர்களின் அனைத்துத் துணுக்குகளும் படுத்துவிட்டால்? இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றாலும் ஒருசில முறை இது நடந்திருக்கிறதுதான். அப்போது உங்கள் நிறுவனத்தில் எத்தனை அசகாய சூரர்கள் இருந்தாலும் அவர்களால் ஆணிகள் ஏதும் பிடுங்க இயலாது. அமேசான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரையில் நீங்கள் தலைசொறிந்து கிடக்கவேண்டியதுதான். அவ்வாறு நடக்கும்போது அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் துணுக்கு செயல்படவில்லையோ அதற்கேற்ற அபராதத்தைக் கட்ட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்நேரத்தில் நீங்கள் பெரியதோர் வணிகத்தை இழந்திருந்தால் அதற்கான நஷ்ட ஈடு என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்.

மேகக்கணிமையின் அடிப்படை சங்கதிகள் இப்போது ஓரளவு தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன். அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் என்று மேகக்கணிமை நிறுவனங்கள் பல இருக்கின்றன. இவை அடிப்படையில் ஒத்த சேவைகளைத் தந்தாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சேவை அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அது என்ன சேவை அமைப்பு? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

இப்பகுதியில் வரும் கலைச்சொற்கள்

 • கணிமை: Computing
 • வன்பொருள்: Hardware
 • மென்பொருள்: Software
 • தரவு: Data
 • தரவுத்தளம்: Database
 • தரவுமையம்: Data Center
 • உலாவி: Browser
 • செயலி: Application
 • வலைதளம்: Web Site
 • வலைச்செயலி: Web Application
 • வலைச்சேவை: Web Service
 • வணிகப்பயனர்: Business User
 • மெய்நிகராக்கம்: Virtualization
 • கணினித் துணுக்கு: Computing Instance / Droplet
 • சேவைசார் கட்டமைப்பு: Service-Oriented Architecture
 • பயனீட்டுக் கணிமை: Utility Computing
 • வளங்கள்: Resources
 • நெகிழ்வு: Elasticity, flexibility, adjustment
 • தன்னியக்கமாக: automated
 • கொள்திறன் திட்டமிடுதல்: Capacity planning
 • தரவுப் பாதுகாப்பு: Data Security
 • இடர்காப்பு: Risk Management
 • சேவை அமைப்பு: Service model
Series Navigationகொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் – 2மேகக் கணிமை (Cloud Computing) – 4

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.