kamagra paypal


முகப்பு » சிறுகதை

குதிரை வட்டம்

sunandobasu_bodhi_Moksha__enlightenment_Dhyana

இதே போல ஒரு சிங்க மாசத்து மழை

காற்றும் குளிரும்

குழித்துறை வழக்கத்துக்கும் முன்னதாகவே கடையடைத்து கிடுக்கைகளுக்குள் கையொடுங்கி கண் மூடிவிட்டது.நான்  வீட்டில் தனியாக இருந்தேன்.மின்சாரம் போய்ப் போய் வந்துகொண்டிருந்தது.தெருவிளக்கின் பொன் மஞ்சள் துணி அறைக்குள் நீட்டப்பட்டு  நீட்டப்பட்டு மடிக்கப்பட்டது .நான் தனியாக மட்டுமல்ல ஆன்மாவில் தனிமையாகவும் இருந்தேன்.என் உடல்நிலை மோசமாகி இருந்தது.என்னால் எதையும் படிக்கமுடியவில்லை.என்னால் எதையும் எழுதமுடியவில்லை.என்னால் எதையும் தொட முடியவில்லை.மழைக்காலங்களுக்கெனவே எழுந்துவரும் சோகங்கள் என்னை இறுகச்சுற்றி  ஒரு பட்டுப்பூச்சிக் கூடு போலப் பின்னி மூடியிருந்தன.நான் சற்று அழுதால் கொள்ளாம்  என்று விரும்பினேன்.ஒரு கடும் தேயிலை குடித்தால் உள்ளமும் சூடுறும் என்று நினைத்தேன்.அடுக்களையில் தேயிலைத்தூள் உண்டு.ஆனால் அதல்ல.தன்கைத் தேநீர் கைவிஷம்.நான் கண்ணாடி தம்ளர் சூடு கை பொக்க வீதிக் கூடுகையில் நின்று மழையில் விரைந்து வீடு திரும்பும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களைப் பார்க்க விரும்பினேன்.அவை எனக்கு எல்லாரும் எல்லாமும் என்னைவிட்டு வேகமாக விலகிப் போவது போன்ற ஒரு சித்திரத்தை அளிக்கும்.அப்படியொரு சித்திரத்தை எனக்கு நானே அளித்துக்கொள்வது கொஞ்ச காலமாக ஒரு போதையாக சொறிபுண் சுகமாக மாறியிருந்தது.

போஸ்ட் ஆபிஸ் கடை/ வீடு பூட்டி இருந்தது.ஏமாற்றத்துடன் விலகும்போது. மூடிய மரப்பலகைகளுக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது ”சார் என்னா ?”வளை கிணுக்கம்

”ஒரு தேயிலை குடிக்கான் வந்தது “‘

”தேயிலை….யோ ?”என்றொரு தயக்கம்.”இங்கே எல்லாரும் தூங்கியாச்சு ”என்றது ”செரி . கொஞ்சம் இருக்கணும் ”

நல்ல -மார்பில் நரை முடியுள்ள-ஆசான்கள் காய்ச்சும் அரிஷ்டத்தின் பிங்கல நிறத்தில் ஒரு சூடு தேயிலை வந்தது..மெல்ல தயக்கத்துடன் படுக்கையை விட்டு எழுந்துபோகும் பெண்ணின் பாவாடை  போல அதன் மீதிருந்து கிளம்பிப் பரவும் புகை

”சார் இனி வீட்டுக்குப் போணும் இன்னா ”என்னை அறிந்த மனதின் ஒரு அறிவுரை.”பார்யா இல்லியோ வீட்டில”

இப்போது ஒரு பீடிஇருமல் அதற்கு பதில் சொன்னது.பீடிக்கு என்னுடைய ‘கிருத்திரமங்கள்’தெரியுமாதலால் ‘’இப்ப மீசை வச்சவன் வக்காதவன் எல்லாருக்கும் பஷீர் ஆவணும். குதிரைவட்டம் போனவனெல்லாம் பஷீர்!’’

நான் எனக்கு எப்படி பஷீர் ஆவதில் ஆசை ஒன்றும் இல்லையென்றும் எப்படி ஒரு எழுத்தாளர் தமிழில் மீசை வைத்து எடுத்து என்று என்று இரண்டு தவணைகளில் பஷீர் ஆக முயன்றார் என்பதையும் விளக்கினேன்.

எல்லாம் மூடிய கதவுக்குத்தான்

நான் வயிற்றில் கடும் தேயிலையின் கசப்பு தந்த வெம்மையோடு விலகினேன்.இப்போது மழை உரக்க ஆரம்பித்தது.ம்ம்ம் என்று தன்னை உலுப்பிக்கொண்டு ஓங்கியது.நான் கடைசி திருப்பு வரை -அறிவுரையின்படி -சரியாகத்தான் போனேன்.ஆனால் இப்லீஸ் எப்போதும் கடைசி வாசலில்தான் நிற்பான் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.எப்படியோ கால் தெட்டி தாமிரபரணியின் மடிக்கரைக்கு வந்திருந்தேன்.படித்துறையில் ஆருமில்லை.பெரிய கல் படிகளின் நிசப்தம்.பக்கத்தில் ஓங்கியிருக்கும் மகாதேவர் அம்பலத்தின் தெய்வ மவுனம்.கோவிலுக்குப் போகும் இடைகழிக் கதவு பூட்டியிருந்தது.ஆனால் மழை அதை அவிழ்த்துவிடுவேன் என்பது போல உலுக்கி பயமுறுத்தியது.ஒற்றை சோடியம் வேப்பர் விளக்கு நள்ளிரவில் விழித்து விழித்து அழும் குழந்தை போல நதியின் மேலே விழுந்தது.

மழை மிகுந்த ஆக்ரோஷமாக நதியைப் புணர்ந்து கொண்டிருந்தது.நதி விம்மி படித்துறையின் முதல் வரைவரை ஏறி வந்துவிட்டிருப்பதை பார்த்தேன்.நான் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.பிறகு என் ஆடைகளை உரிந்து விட்டு நதியில் இறங்கினேன்.

காத்திருந்தது போல் இன்னும் பலத்த மழை ஓம் என்ற பெரும் சப்தத்துடன் நதி ஓடிவரும் கணவாயிலிருந்து கிளம்பிவந்தது

விளக்கு அணைந்தது

இருள்.

ஓம் ஓம் ஓம்

மின்னல் ஒரு பலத்த அறை போல வானைக் கிழித்த போதுதான் அவளைப் பார்த்தேன்.படித்துறையின் அந்தப் பக்க மறைவில் மாரோடு ஒட்டிய பாவாடையைப் பிடித்தவாறு நடுங்கிக் கொண்டு

அவள் ”குளிக்கான் வந்தது வந்தவிடத்திலே மழை”என்றாள் பதறி

நான் பேசவில்லை.அவள் அச்சம் கண்டு அசூயை அடைந்து ”பின்னே குளிக்கான் ”என்று திரும்பிக்கொண்டேன்.சற்றுநேரம் கண்மூடி மழையின் தாக்குதலை தலையில் உணர்ந்தவாறே நின்றேன்.விழித்தபோது அவளைக் காணவில்லை .சற்று ஏமாற்றமாக இருந்தது என்பதை மறைப்பானேன்?

வானம் பொட்டிக் குமுறியது.மின்னல்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டன.நதிப்பரப்பு முழுவதும் ஒரு வயலட் நிறம் பரவியது.தென்னை மட்டைகள் நடுங்கி நதிக்குள் வீழ்ந்தன.நதி அவற்றை என் முகத்தருகே நீட்டி ”பார் ”என்றது

இன்னும் ஒரு மின்னலில் அவளை மீண்டும் பார்த்தேன்.அவள் குளித்துக்கொண்டிருந்தாள் மூழ்கி கூந்தல் ஒழுக என்னருகே எழுந்து என்னைப் பார்த்துச் சிரித்தாள் .அவள் உடலிலிருந்து நாற்றமெனவோ சுகந்தமெனவோ சொலிவிட முடியாத ஆனால் விருப்புக்குரிய ஒரு மணம் புகைந்து வந்தது

ஒரு மின்னல் ஏறக்குறைய படுக்கை வசத்தில் ஒரு நீண்ட வெள்ளி அரவம்  போல நதியைத் தொட்டு எங்களைச் சுற்றிக்கொண்டு பாலத்தைத் தாண்டிப் போனதை நாங்கள் பார்த்தோம்

”அய்யோ! என்ன சவுந்தர்யம் !”என்று அவள் அலறினாள்

சற்றுநேரம் மின்னல்கள் நதிப்பரப்பில் சிறுபிள்ளைகள் போல ஒன்றையொன்று துரத்திப் பிடிப்பதைப் பார்த்தவாறு நாங்கள் நின்றிருந்தோம்.கடைசியில் ஒரு பெரிய சட்டாம்பி மின்னல் வந்து எல்லாரையும் விரட்டியடித்தது அதன்பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்ட ஒரு விளையாட்டரங்கம் போல வானம் அமைதியுற்றது.மழை சொட்டித் தீர்ந்தது.சிறிய ஓடைகளின் கொலுசுச் சப்தம் கேட்க ஆரம்பித்தது.சோடியம் வேபர் விளக்கு திடுமென்று ”இனி நான் பணி நோக்கட்டே ?”என்பது போல எரிந்தது

நாங்கள் கூசி விலகினோம்

நான் வெகு நாட்கள் அந்த இரவை நினைத்திருந்தேன்.சில தருணங்களை கவிதையாய் மாற்ற முயன்றேன்.அந்தப் பெண் யாரென்று பகல்களில் குழித்துறையைத் துழாவினேன். பின்  ஒரு பெரிய அடுக்கு மாடி வீடு போல நம் மீது சரிந்துவீழும் நாட்களின் பளுவில் மறந்து போனேன்.

போயிற்று சில ஆண்டுகள்.சில சிங்க மாதத்து மழை இரவுகள் .மழை இரவுகளில் படித்துறைகளில் நனைய அமர்ந்திருக்கும் மன நிலையும் .சாதனம் இப்போது மேலும் சில திருகுகள் முடுக்கப்பட்டு உத்தேசிக்கப்பட்ட நாட்களில் உபதேசிக்கப்பட்ட இடங்களில் இருக்கிறது

”இப்போ எவ்வளவோ பரவாயில்லை ”ஒருநாள் பார்யாள் என்னைப் பற்றி தோழியிடம் போனில் முன்னேற்ற அறிக்கை பகிர்ந்தாள்

ஆனாலும் பழைய குதிரைக்கு புதிய மூக்கு மாட்டுவது அத்தனை எளிதில்லை தானே ?

நான் மீண்டுமொருமுறை மழை அதட்டிஊர் ஒடுங்கிவிட்ட மழைநாளில் கடுத்த தேயிலை வேண்டி மரப்பலகையைத் தட்டினேன். இம்முறை அது திறக்கவில்லை

”சார் போணும் .காலை வா”

படித்துறையில் இப்போதும் ஆருமில்லை

நானும் நதியும் முணுமுணுக்கும் மழையும் மட்டும்.மழை ஒரு சங்கீத வித்துவான் போல தனது சுருதிப்பெட்டியைத் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்தது .மின்னல்கள் தங்கள் மடிவலையை வீசி வீசி சுருக்கின.

இம்முறை எதனாலோ எனக்கு மழையோடு லயம் கூடவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு எரிச்சலோடு எழுந்து நடந்தேன்.

கோவிலுக்குப் போகும் இடைகழி கதவை உதைத்தேன்

நெஞ்சில் குற்றால முண்டு  சில்லிட  சிறிதுநேரம் அப்படியே நின்றிருந்தேன்

ஆலமரத்தின் விழுதுகள் வழியே மழை சொட்டி என் மரத் தலையை துளையிட முயன்றது.அட்டைகள் வெளியே வரத் துவங்கியிருப்பதைக் கவனித்தேன்.அவை என் தலைக்குள்ளிருந்துதான் வருகின்றன என்றொரு சந்தேகம் எனக்கு வரத் துவங்கியிருந்தது

படியேறினேன் ஒருமுறை பாசி வழுக்கி விழுந்தேன்.சிள்மூக்கு உடைந்து ரத்தம் கோடு போல ஒழுகியது .அதில் பாசியின் பச்சை  நாற்றம் அடித்தது நான் பிறகு ”இப்ப எவ்வளவோ பரவாயில்லை”களை  நினைத்துக்கொண்டு விடுவிடுவென்று நடந்தேன். அட… இதுவென்ன சம்பவம். எவ்வளவு திருத்தியும் நேராகாத நாய்வால் என்று என் மேலேயே ஒரு கசப்பு ஏற்பட்டது.

இந்த கயிற்றிழுப்புகள் எதையும் காணாததுபோல மகாதேவர் தனது இருட்டறைக்குள் மகா மவுனமாய் இருந்தார்.நான் அவரை மழை தீண்டாப் பாலை என்று சபித்தேன். நிர்விகல்பத்தின் ஒக்கலில் இருந்து கொஞ்சம் இறங்கி  நீ படைத்த பிரபஞ்சத்தின் அழகும் அசிங்கமும் பார் மகாதேவா என்று சொன்னேன். அதன் பாசிப் படிகளில் விழுந்து மூக்குடைத்து சொந்த ரத்தத்தை ஒருதடவை ருசித்துப் பார்

ஆனால் மூப்பருக்கு காது செவிடு கண்ணும் இரவில் மங்கல்.அதனாலன்றோ தீபாராதனையும் கொட்டும் ?

ஒரு வேசியின் வீட்டிலிருந்து திரும்புகிறவன் போன்ற குற்ற உணர்வுடன் நான் நதியிலிருந்து திரும்பினேன். எதிரே ஒரு நாய்க்குஞ்சு கூட  இல்லை.

அம்மன் கோவிலைக் கடக்கையில்தான்  ஒரு நிழல் எதிராக என்னைத் தாண்டியது

”கொஞ்சம் சமயமாயிட்டது” என்றது அது.

 

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.