kamagra paypal


முகப்பு » புத்தக அறிமுகம், மகரந்தம்

மகரந்தம்


புத்தக விருது

Verve_Magazine_Books_BestSellers_Fiction_Read

2015ல் உங்களின் மனம் கவர்ந்த கதைப் புத்தகம் எதுவென்று ‘வெர்வ்’ பத்திரிகை கேட்டிருக்கிறது. பதில்களில் ரஸ்கின் பாண்ட், சல்மான் ரஷ்டி போன்ற புகழ் பெற்ற பெயர்களும் உண்டு. அனுராதா ராயின் சாமியார் கதையான ’ஸ்லீப்பிங் ஆன் ஜுபிடர்’, 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய போர் வீரர்களின் காதையைச் சொன்ன ரகு கர்னாட், ஒரு டஜன் சிறுகதைகளைக் கோர்க்கும் சந்தீப் ராய், காஷ்மீரையும் ஸ்ரீநகரையும் வரையும் மாலிக் சஜித்தின் ’முன்னு’, மோகன் ராகேஷின் நாடகம், ஆதிஷ் தஸீர் ஆகியோரும் உண்டு. ஏ.கே. ராமானுஜம் முதல் பலரும் ஆங்கிலத்தில் கொணர்ந்த கபீர், மீராபாய், நம்மாழ்வார், துக்காராம், ஆண்டாள், அக்கா மஹாதேவி, பஸவண்ணா ஆகியோரின் பக்தி பாடல்களைத் தொகுத்த அருந்ததி சுப்ரமணியத்தின் புத்தகமும் இடம்பெற்றிருக்கிறது. வாக்களிக்க அழைக்கிறார்கள்

http://www.vervemagazine.in/verve-storytellers


அறிவியலும் கலையும்

Science_art_English_brain1

காலாகாலத்திற்கும் அரங்கேறும் விவாதங்களில் சுவாரசியமானது என்னவென்றால், ஒரு அறிவியலாளருக்குள்ளே ஒளிந்திருக்கும் கலைஞர் வெளிப்பட வேண்டுமா அல்லது கலைஞர்களுக்கு அறிவியல் பார்வை அவசியமா என்பது. இந்தக் கட்டுரை இவ்விரண்டும் வேலையிலும் தொழில்துறையிலும் வடிவமைப்பிலும் எவ்வாறு முக்கியமாகின்றன என்பதை ஆராய்கிறது. மனது சொல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் ஆராய்ச்சிபூர்வமாக நம் முடிவுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனக் கோடிட்டுக் காட்டுகிறது. வெறும் தரவுகளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால், உணர்ச்சிபூர்வமான இயக்கத்தைக் கைவிடும் அபாயம் இருப்பதையும் உணர்த்துகிறது. உணர்ச்சி வழியே உள்ளூகம் என்பது செயல்படும் என்பது எதிர்பார்ப்பு போலும்.

https://goo.gl/0EchaC


சீன கோடீஸ்வரி

சில தினங்கள் முன்பு ஒரு சீன பல்கலையாளரைப் பார்க்க நேர்ந்தது. அவர் இந்திய மொழிகளுக்கும், சீன மொழிக்குமிடையே ஒரு பாலத்தைக் கட்ட முயல்கிறார். சில பத்தாண்டுகளாக இந்தி மொழியைக் கற்று, சீனாவில் ஒரு பல்கலையில் அதைப் போதித்து வரும் இந்தப் பேராசிரியர், தற்போது சீன மொழிக்குப் பல இந்திய மொழிகளில் இருந்து (மொழி பெயர்ப்பு மூலம்) இலக்கியப் படைப்புகளைக் கொண்டு சேர்க்கும் ஒரு திட்டத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். அவர் பேசியவற்றைச் சுருக்கிக் கொடுக்கும் முனைப்பு நமக்கில்லை, ஆனால் அவர் அடிக்கடி தெரிவித்த ஒன்று- சீனாவில் நிறைய முயற்சிகள் அரசுடைய கட்டுப்பாட்டில் இருப்பவை, அரசுதான் தீர்மானிக்கும் அவற்றை எப்படி முன் செலுத்துவது என்று, தான் தன் விருப்பத்தை முன்வைத்தாலும் அந்த முயற்சியை நடத்துவது அரசுதான் என்ற கருத்து. இதைத் தெளிவாக்கப் பல முறை முயன்றார்.

அமைப்பின் பேருருவுக்கு முதலிடம் கொடுத்துத் தன்னை அழித்துக் கொள்ளுதல் என்பதில் சீனர்களுக்கு நிறைய பயிற்சி உண்டு என்பது தெரிந்தது. அதே நேரம் அவர்கள் கூழையாகவும் இல்லை. நிமிர்ந்த நோக்குடன் பழகுகிறார்கள். நம்மவர்கள் அமைப்பை மதிக்காமல் ஒரு புறம் அதைச் சிதைக்க எல்லா நடவடிக்கைகளையும் செய்து கொண்டு, மறுபுறம் அதிகாரத்தில் இருப்பவர்கள் முன் கூழைக் கும்பிடு போடுவதை ஒரு பண்பாடாகவும், ஏன் மரபாகவுமே கொண்டிருக்கிறார்கள். சீனப் பேராசிரியரின் நடத்தையை, பொது வெளியில் நம்மவர்களுடைய நடத்தையுடன் ஒப்பிட்டால் வேறுபாடு தெள்ளத் தெரிகிறது.

ஒரு நபரை அல்லது சில நபர்களைப் பார்த்து விட்டு மொத்தச் சீனப் பண்பாடும் இப்படி என்று கருதுதல் கூடாது என்பது புரிகிறது. ஆனால் வேறுபாடு தெரிந்தது என்பதைச் சொல்ல வேண்டி இருந்த்துடன், அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்ட ஒன்றைச் சுட்டவே மேற்படி சம்பவத்தைப் பற்றி எழுதினேன். அது சீன அரசு எத்தனை தூரம் பொதுவெளியை ஆக்கிரமித்திருக்கிறது என்பது. அன்னியரான நம்மிடம் சிறிதும் கூச்சமின்றி ஒரு பல்கலையாளர் இந்த்த் தகவலைப் பகிர்கிறார். இது தகவல் என்ற அளவிலும், ஆதாரம் என்ற அளவிலும் சரியா தவறா என்பது குறித்து நாம் வாதிட முடியும்.

ஆனால் என்ன ஆதாரம் தேவை இந்தப் பொருள் குறித்து உரையாட என்பது குறித்து ஐயம் இருக்கும். தவிர சீனாவின் அமைப்புகள் பற்றியும் நமக்கு அதிகம் தகவல் கிட்டாத நிலை இருக்கிறது. சீனாவைப் பற்றி அரசியல் பிரச்சாரம் நம்மிடையே பரவி இருக்கும் அளவுக்கு, அந்நாட்டைக் குறித்தோ, அதன் மக்களைப் பற்றியோ நம்மிடம் தகவல்களும் இல்லை, புரிதலும் இல்லை. அப்பேராசிரியரே குறித்தது போல இந்தியரிடம் சீனாவைப் பற்றி அதிகம் ஆர்வம் இல்லை, ஆனால் மேற்கைப் பற்றியே நிறைய யோசித்து அது பற்றியே பேசி, அந்த மொழிகளின் வழியேதான் பிற ஆசிய நாடுகளுடன் உறவு கொள்வதையும் இந்தியர் விரும்புகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை என்று அவர் சொன்னார்.

ஆனால் நாம் தெண்டனிட்டு வழிபடுகிற மேற்கிலோ, தொடர்ந்து சீன அரசு, சீனப் பொருளாதாரம், கல்வி அமைப்பு, தொழில் அமைப்பு போன்றன குறித்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருப்பதை நாம் காண்கிறோம். அத்தனை தூரம் இந்தியாவில் சீன அமைப்புகள் குறித்து சர்ச்சைகள் இருப்பதில்லை.

கடந்த சில பத்தாண்டுகளில் தமிழில் சில புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவை பெருமளவும் பிரச்சாரக் குப்பைகள், குறிப்பாக மார்க்சிய லெனினியக் குப்பைகள். ஒரு சிலவோ, வியாபார உறவுகள், பத்திரிகையாளர்களின் அனுபவங்களை முன்வைத்த கட்டுரைத் தொகுப்புகள் என்று வெளி வந்திருக்கின்றன. அவை கூட தமிழில் எழுதப்பட்டவை அல்ல. ஆங்கிலத்தில் வந்த புத்தகத்தின் மொழி பெயர்ப்புகள். இந்தியர் எழுதியவை என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம். அவற்றின் அணுகல் மறுபடி மேலைப் பார்வையால் செலுத்தப்பட்டதாகத்தான் இருக்கும். இவை எல்லாமே கூட சீனப் பொருளாதாரம், பண்பாடு, சமூக அமைப்பு, அரசியலமைப்பு, தொழில் துறை இயக்க முறைகள் என்று பற்பல கோணங்களில் நமக்குப் போதுமான தகவல்களைத் தருவனவாக இல்லை.

அதனால் இந்த வகைத் தகவல்களுக்கு நாம் தொடர்ந்து மேற்கின் ஊடகங்களை நாட வேண்டி வருகிறது. இந்தியாவைக் குறித்து மேற்கில் ஊடகங்களில் நடக்கும் பிரச்சாரங்கள் பலவகைத்தானவை. அந்தந்த நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கருத்தியலை ஒட்டி அந்தந்த நாட்டின் ஊடகங்கள் இந்தியாவைக் கருமை நிறைந்த வெளியாகவோ, அல்லது நாகரீகமற்ற காட்டாள்கள் நிறைந்த நாடகவோ, அல்லது ’இந்து ஃபாசிஸம்’ ஆளும் நாடாகவோ எல்லாம் சித்திரித்து மகிழ்கின்றன. இந்தியா ஒரு முன்னாள் காலனிதானே என்ற ஏளனப் பார்வையும் இன்னும் மேலையர் மனதிலிருந்து, ஏன் அரபுகள் மனதிலிருந்தோ, சீனர்களின் கருத்துகளிலிருந்தோ கூட மறையவில்லை என்றுதான் தோன்றுகிறது. தொடர்ந்து இங்கிலிஷையே எங்கும் நம் மொழியாகக் கொண்டு உலவும் நம் அரசின் நடத்தையும், நம் அறிவு ஆளரின் நடத்தையும் வேறெப்படியும் நம்மைப் பார்க்க இதர மக்களை உந்தவும் இல்லை. மாறாக இங்கிலிஷ் மீது நமக்கு இருக்கும் மோகத்தை ஒரு பெரும் வளம் என்று நாம் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றியே நமக்குத் தெரிவது மிகக் குறைவு என்பது குறித்து நமக்கு ஒரு கசப்பும் இல்லை. ஆனால் மேலைச் சித்திரிப்புகளில் நம்மைப் பற்றி வெளிப்படும் ஏளனமும், காழ்ப்பும், கசப்பும் நம் அறிவு ஜீவிகளுக்கு வெல்லம் போல இனிக்கிறது.

அனேகமாக இந்த வகைச் சித்திரிப்புகளை வெளி நாட்டு ஊடகங்களில் எழுதும் அரும்பணியை இந்திய இட்து சாரிச் ‘சிந்தனை’ ஜோதிகளே கூடச் செய்வதால் இந்த கட்டுமானம் ஏதோ நம்பகமான தகவல் கொண்ட்து என்ற பிரமை மேற்கிலிருப்பவர்களுக்கும் இருக்கிறது, அதை விடக் கொடுமை இந்தியாவில் வாழும் பெருநகரத்துப் படித்த கும்பலின் நடுவேயே இந்தப் பிரமை ஆழமாக இருக்கிறது. தம்மைச் சுற்றிய சமூகத்தை அறிய மேற்கில் எந்நேரமும் பிரச்சாரம் செய்யும் இடது சாரியினரின் அபத்தக் குப்பைகளே நம்பகமானவை என்று கருதும் மூடத்தனம் நம் படித்த மக்களிடம் ஊறி இருப்பதற்கு ஒரு காரணம் நாம் இன்னும் காலனியத்தின் பாதிப்பிலிருந்து விடுபடாதது என்று சொல்லலாம்.

இந்த அனுபவத்தை முன்வைத்து நோக்குகையில் சீனாவைப் பற்றிய சித்திரத்தை மேற்கின் ஊடகங்களில் இருந்து பெறுவது புத்திசாலித்தனமா என்ற கேள்வி நமக்கு முன் எழும். ஆனால் தகவலே இல்லாத இடத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து பெறும் தகவல்களை இணைத்துக் கிட்டும் ஒரு பொதுக் காட்சியை நாம் ஓரளவு நம்பலாமா என்றும் யோசிக்க வேண்டும்.

இங்கு கொடுக்கப்படும் ஒரு கட்டுரை அப்படி ஒரு பேட்டி. சீனாவில் பெரும் செல்வத்தைக் குவித்திருக்கும் ஒரு பெண் தொழிலதிபர், ஒரு பெரும் நிறுவன மேலாளர், இந்தப் பேட்டியை டெர் ஷ்பீகல் என்ற ஜெர்மன் பத்திரிகைக்குக் கொடுத்திருக்கிறார். இந்தப் பேட்டியில் நாம் பெறும் தகவல்களில் முக்கியமானவை சில. அவற்றில் ஒன்று, சீனா தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று இவர் சொல்வது. மெதுவாகி விட்ட வளர்ச்சியாக இருந்தாலும் உலகின் பெருமளவு நாடுகள் ஏதுமே வளர்ச்சி இல்லாதிருக்கையில் சீனா வளர்வது என்பது குறிப்பிடத் தக்க வேறுபாடு என்கிறார்.

அடுத்து சீனாவிலும் அரசின் அமைப்புகளை விட நிச்சயமாக தனியார் நிறுவனங்களே சக்தி வாய்ந்தனவாகவும், செயல்திறன் மிக்கவையாகவும் உள்ளன என்று தெளிவாகச் சொல்கிறார். சீனா இப்போது பழைய மாதிரி செயல்முறைகளைக் கைவிட்டு முற்றிலும் தற்காலச் செயல் முறைகளுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, அந்த மாறுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறார். அதாவது தனியொரு நாடு தன்னளவில் வளர்ந்து நிறைவுள்ள ஒரு நிலப்பகுதியாக இருக்க முடியாது என்ற புரிதல் சீனாவுக்கு வந்திருப்பதாகவும், அதனால் மேன்மேலும் திறந்த பொருளாதாரமாகவும், டிஜிடல் உலகின் முக்கியப் பகுதியாகவும் சீனா ஆகி வருகிறது என்றும் சொல்கிறார்.

அதற்கு மேலும் இவருடைய பல கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் இவை எல்லாம் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியவையா, இல்லையா? இந்தக் கேள்வியைக் கேட்கையிலேயே அதற்குத் தக்க உரையாடலையும், பதில்களைத் தேடிப் பெறத் தக்க அளவு நம்மைப் பற்றிய சுய புரிதலும் நம்மிடம் (இந்தியரிடம்) உண்டா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

நம் நாட்டைப் பற்றித் தொடர்ந்து வெளிநாடுகளில் போய் கேவலமாகச் சித்திரிப்பதுதான் முற்போக்கு சிந்தனை, அதுதான் ’அறிவுஜீவிதம்’ என்று கருதும் ஒரு பெரும் கூட்டம் இங்கு அதிகாரத்தில் இருக்கிறது, கருத்து வெளியை ஆக்கிரமித்திருக்கிறது, அதுதான் ஜனநாயகம் என்று அது கொக்கரிக்கிறது. சொந்த நாட்டின் பெரும் பண்பாடான இந்து நாகரீகத்தை தினமும் இழிவு செய்து, உலகின் பெரும் ஆக்கிரமிப்பு மதங்கள் இரண்டை புரட்சிகரமான முற்போக்கு வழிகளாகக் காட்டுவதையே தன் கடமை என்று கருதும் ஒரு மந்த புத்திக் கூட்டம் தன்னை அறிவு ஜீவிகளின் உச்சம் என்று கருதுவது ஒரு வினோதம் என்று தள்ளி விட முடியாத அளவு அபத்தம் நிறைந்தது. ஆனால் இந்தக் கூட்டத்திடம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகக் கொடுக்கப்பட்டிருந்த பொருளாதாரம், சமூக அமைப்பு, தொழில் துறைகளை கிட்ட்த்தட்ட ஐம்பதாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சின்னா பின்னமாக்கி சிதைந்திருக்கிறது, இந்திய மக்களை மேன்மேலும் வறியோராகவே ஆக்கி இருக்கிறது.

இன்று, இந்தியா உலக நாடுகளில் ஏழை நாடுகளில் ஒன்றாக ஆவதற்கு இந்தக் கூட்டத்தின் செயல் திறனில்லாமையும், கருத்தியல் மூடத்தனங்களுமே முக்கியக் காரணங்கள். அவை இந்தியாவெங்கும் ஊக்குவித்த பெரும் ஊழலும், வன்முறையும் அணுக்கக் காரணங்கள். இந்தக் கூட்டமே இன்னும் நாடெங்கும் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கையில் நம்மால் இந்தச் சீனரின் பேட்டியைப் புரிந்து கொள்ளக் கூட முடியுமா என்ற கேள்வி எழ வேண்டும். எழுகிறதா?

http://www.spiegel.de/international/world/spiegel-interview-with-chinese-billionaire-zhang-xin-a-1073417.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.