யு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும்

”மெக்சிகோவிலிருந்து வரும் அகதிகள் அனைவரும் வண்புணர்ச்சியாளர்கள்”
“தெற்கில் மிகச்சிறந்த தடுப்புச்சுவரைக் கட்டுவேன். இது மெக்சிகோவிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்கும்”.
“கடவுள் உருவாக்கிய அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகச்சிறந்தவன் நான் ஒருவனே, ஏனென்றால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப் போவதில் சிறந்தவன் நானே!”
“சிரியா அகதிகளை அமெரிக்கா நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது.”
மேற்சொன்னவையெல்லாம் டாஸ்மாக் கடையிலிருந்து வந்தது என்று நீங்கள் நினைத்தால் தப்பு. இதையெல்லாம் சொன்னது 2016-ல் வரப்போகும் யு.எஸ். அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் பல வேட்பாளர்களில் ஒருவரான டொனால்ட் ட்ரம்ப் என்பவரின் சில வரிகள்.

trump

அமெரிக்க அரசியல்

அமெரிக்க அரசியல் இந்திய அரசியலைவிட நாகரீகமானது என்று தைரியமாக சொல்லலாம். இந்திய அரசியலில் எதிர்க் கட்சியினரை அரவணைத்துச் செல்வது என்ற கொள்கை நேரு காலத்தில் கொஞ்சமாவது இருந்தது. தமிழக அரசியல் நாகரீகம் அனைவருக்கும் தெரிந்ததே.
அமெரிக்க அரசியல் என்பது இப்படிச் சொல்லமுடியும்: இரண்டு பெரும் கட்சியினரிடையே நடக்கும் தொழில் பரிவர்த்தனை. பல செயல்பாடுகள் மக்களுக்காக என்றாலும் இறுதியில் தொழில் அதிபர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும். இல்லையென்றால் அரசியலில் காலம் தள்ளமுடியாது.
எப்படியிருப்பினும் அடிப்படை நாகரீகத்தை அரசியலுக்கு வெளியே காப்பாற்றுவார்கள். பல சந்தர்ப்பங்களில், நெருக்கடிகளில் கட்சிபேதமின்றி காரியமாற்றுவார்கள். உதாரணமாக கிளிண்டன் பாலியல் குற்றங்களுக்குப் பதவி விலகக் கோரும் தீர்மானம் வந்தபோது எதிர்க்கட்சியில் 5 செனட்டர்கள் அத்தீர்மானத்தை எதிர்த்துத் தோற்கடித்தார்கள். ஜார்ஜ் புஷ்-ன் “No Child Left Behind” சட்டம் பல ஓட்டைகள் இருந்தாலும், ஜனநாயகக் கட்சியில் 47 செனட்டர்கள் ஆதரித்து ஓட்டளித்தனர். ஓபாமா 2009-ல் பதவியேற்றபோது ஜார்ஜ் புஷ் நியமித்த நாட்டின் பாதுகாப்பு செயலாளரை தன் ஆட்சியிலும் தொடர வைத்தார்.
ட்ரம்ப் குடியரசு வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட முடிவெடுத்தபோது எல்லோரும் ஒரு கேலி சிரிப்புடன் கடந்து சென்றார்கள். ட்ரம்ப் அரசியல் கோமாளி, அரசாங்க இயக்கம் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாது என்பது யு.எஸ்-ல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பெரும் பணக்காரர். கட்டிடங்கள் கட்டும் தொழில்நுட்பம் இவரது ஆதாரம். 1970-80-களில் அமெரிக்க கட்டுமானத் தொழில் செழித்தபோது இவரின் தொழிலும் வளர்ந்தது. குடியரசு கட்சியை ஆதரிப்பவர். வெளியில் பழமைவாதியாகக் காட்டிக்கொள்பவர். 2011-ல் ஓபாமா யு.எஸ்-ல் பிறக்கவில்லை என்று ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைக்க, ஓபாமா அமைதியாக அதைத் தவறு என்று நிரூபித்தார்.
போட்டியில் இறங்கியவுடன் அவர் உதிர்த்த முட்டாள்தனமான, அரசியல் அறிவே இல்லாத கருத்துக்கள் பலரையும் எரிச்சலடைய வைத்தது. முக்கியமாக அனைத்துக் கட்சியினராலும் மரியாதையாக நடத்தப்படும் ஜான் மெக்கெய்ன் பற்றி. மெக்கெய்ன் வியட்நாம் போரில் கைதியாகப் பிடிபட்டு சித்ரவதைகளுக்கு ஆளானவர். ட்ரம்ப் போரில் பிடிபட்டவர்கள் மீது தனக்கு மரியாதை கிடையாது என்று மறைமுகமாக மெக்கெய்னைத் தாக்கி கருத்து உதிர்த்தார். பிறகு ஃபாக்ஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் அதை வழிநடத்திய மேகன் கெல்லி என்ற பெண்மணி தன்னை விவாதத்தில் சிக்கவைத்துவிட்டார் என்பதற்காக மாதவிடாய் தொடர்பான வசவை உதிர்த்தார். பழமைவாதிகளே அதிர்ந்துபோய் அவர்கள் கூடும் கருத்தரங்குக்கு ட்ரம்ப்-ஐ வரக்கூடாது என்று தடுத்துவிட்டனர். ஆனால் இதனாலெல்லாம் ட்ரம்ப் கொஞ்சமும் அசரவில்லை. அவர் வைத்த குறியில் முக்கியமாக ஜெப் புஷ் பலியானார். அதுவரை புஷ்தான் முக்கிய வேட்பாளராக இருந்தவர். ட்ரம்ப் இன்றைய நிலவரப்படி குடியரசு வேட்பாளர்களிடையே 39%-ல் முன்னணியில் இருக்கிறார். மற்ற குடியரசு வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், குடியரசு கட்சி தலைமையும் இந்த நிலையைக் கவலையுடன் கவனித்து வருகிறார்கள். பல மாநிலங்களிலும் உள்ள குடியரசு ஆதரவாளர்கள் இவர்தான் முதன்மை வேட்பாளராக வரவேண்டும் என்று முடிவெடுத்தால் தரமில்லாத அரசியல் யு.எஸ்-லும் நடக்கலாம்.
 

அதிபர் தேர்தல்

யு.எஸ். அதிபர் தேர்தல் என்பது ஒரு திருவிழா கொண்டாட்டம் என்றால் மிகையில்லை. தேர்தலுக்கு ஏறக்குறைய 18 மாதங்கள் முன்னாலேயே அதைப் பற்றிய பரபரப்பு ஆரம்பமாகும். குடியரசு கட்சியிலிருந்தும், ஜனநாயக கட்சியிலிருந்தும், பல போட்டியாளர்கள் தங்கள் முடிவுகளை அறிவிப்பார்கள். இவர்களுக்குப் பல விவாத மேடைகள் அமைத்துத் தரப்படும். அது அவர்களின் கொள்கைகள், கனவுகள், சார்புகள் கடந்தகால செயல்களை விவரித்து ஏன் தான் தன் சக கட்சி வேட்பாளர்களைவிடப் போட்டிக்கு சிறந்தவர் என்பதை விளக்கும் ஒரு ஊடகமாக அமையும்.
முதலில் ஏறக்குறைய 10-20 பேர் ஒரே கட்சியிலிருந்து போட்டிக்கு வருவார்கள். பின் அவர்களின் திறமையையும், தேர்தல் நிதியையும் பொறுத்து எண்ணிக்கை குறையும். இறுதியாக, primary எனப்படும் பல மாகாணங்களில் நடக்கும் கட்சி சார்புத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் அந்தக் கட்சியின் அதிபர் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
கேட்பதற்கு ஜனநாயக முறைப்படி இருப்பது போல் தோன்றினாலும், இறுதியில் ஜெயிப்பது பணபலமும், 1% பணக்காரர்களுக்கு இந்த வேட்பாளர் கொடுக்கும் வாக்குறுதிகளும்தான் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வைக்கிறது. என்றாலும் பந்தயத்துக்குத் தயாராகும் குதிரை இருப்பதிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிபர் தேர்தலுக்கு போட்டியிட ஆசைப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். பழமைவாதிகள் அவர்களின் கருத்துக்களில் முரட்டுத்தனமான பிடிவாதம் பிடித்தாலும் உள்நாட்டு நலன் என்று வரும்போது அறிவுப்பூர்வமாக வாதம் செய்வதில் கவனம் கொள்வார்கள். அவ்வாறு செய்யவில்லையென்றால் ஊடகங்களின் வாயில் விழுந்து அதோடு அவர்களின் அதிபர் கனவுகள் மூட்டைக் கட்டப்படும்.
இவ்வளவு முக்கியத்துவம் தரும் வேட்பாளர்கள் எல்லாரையும் புத்திசாலிகள் என்று சொல்ல முடியாது. வகுப்பில் எல்லோரும் முதல் வரிசை இருக்கைகளில் அமரமுடியாது என்பதுபோல் இறுதி அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் நெருங்க, நெருங்கப் பல வேட்பாளர்கள் போட்டியிலிருந்து உதிர்வார்கள்.
இவ்வளவு சிரமமான போட்டிக்கு வரும் வேட்பாளர்கள் குறைந்தபட்சம் பொது அறிவில் மேம்பட்டவராகவும், நாகரீகமானவராகவும், உலகம் பற்றிய துல்லிய அறிவுடன் இருக்கவேண்டும். ஆனால் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாத வேட்பாளர்கள் உலகின் மிகப் பலசாலியான/படித்த நாடான யுஎஸ் எப்படி உருவாக்கியது?
யு.எஸ்-ல் காலம் காலமாக நடக்கும் பழமைவாதிகள் vs மிதவாதிகளின் கொள்கைப்போராட்டங்களின் அசிங்கங்கள்தான் ட்ரம்ப் போன்றவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. அதிபர் தேர்தல் என்றால் மிக நாகரீகமாகச் சொல்லப்படும் ஒபாமா vs ஜான் மெக்கெய்ன், க்ளிண்டன் vs பாப் டோல் போன்ற போட்டியாளர்கள் இருந்த தளங்களில் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்கள் போட்டியிட ஊக்குவித்தது எது? எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது? ஏன் பல குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்?
 

The-Grand-Old-Party-us-election

அமெரிக்கக் கட்சிகள் மற்றும் அவற்றின் அரசியல்

முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1796-ல் மூன்றாம் முறையாக வயதின் காரணமாக வாஷிங்டன் போட்டியிடவில்லை. உப அதிபரான ஜான் ஆடம்ஸ் போட்டியிட முடிவு செய்தபோது அவரை எதிர்த்த மிக முக்கியமான வேட்பாளர் தாமஸ் ஜெஃபர்சன். இவர் அமெரிக்கக் குடியரசை உருவாக்கிய தந்தையர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். தொலைநோக்குக் கொண்டவர். இன்றும் இவரது கருத்துக்கள் அமெரிக்காவில் மிக மரியாதையுடன் உச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் இவருக்கு ஈடாக நேருவைச் சொல்லலாம். ஜான் ஆடம்ஸும் அவ்வாறே. ஆனால் அரசியல் நோக்கில் இருவரும் கடுமையாக வேறுபட்டார்கள். ஆடம்ஸ் அதிகாரங்கள் மைய அரசில் இருக்கவேண்டும் என்றவர். ஜெஃபர்சன் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்றவர். இதனால் தேர்தல் போட்டி ஏற்பட்டதில் வியப்பில்லை.
தேர்தலில் ஆடம்ஸ் முதலாவதாகவும், ஜெஃபர்சன் இரண்டாவதாகவும் வர, ஆடம்ஸ் அதிபராகவும், ஜெஃபர்சன் உப அதிபராகவும் பொறுப்பேற்றார்கள். ஆனாலும் இருவருக்கும் நடந்த அரசியல் பனிப்போர் வரலாறு. இந்தப் போர்தான் பின்னாளில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளாக உருவெடுத்தது.
பின்னாளில் ஆப்ரஹாம் லிங்கன் காலத்தில் அடிமைகள் தொடர்பான யு.எஸ் உள்நாட்டுப் போரில் இவ்விரண்டு கட்சிகளின் பிளவு இன்னும் அதிகமானது. வடக்குமுகத்தில் இருக்கும் மாகாணங்கள் அடிமைகளை விடுதலை செய்ய, தெற்கில் இருப்பவர்களோ அடிமைமுறைகளை கொடூரமாகப் பின்பற்றினார்கள். லிங்கன் அவர்கள் மேல் தொடுத்த போர் அவர்களை மைய அரசாங்கத்தின் மேல் தீவிர வெறுப்பை விதைத்தது.
பின் 1960-களில் மார்ட்டின் லூதர் கிங் நடத்திய நிறவெறி எதிர்ப்புப் போராட்டங்கள் தெற்கு மாகாணங்களை இன்னும் அந்நியப்படுத்தின. மைய அரசு நிறவெறியைக் குற்றமாக அறிவித்தாலும் மக்கள் மனது மாறாத வரை அதனால் எந்த உபயோகமும் இல்லை. இதை அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டுக்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள். எப்படி? அதற்கு முன் 1968-லிருந்து நிறவெறியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிலையைப் பார்க்கவேண்டும்.
 

மைய/மாநில அரசுகளின் நிறவெறி எதிர்ப்பு செயல்பாடுகள்

அரசுகளின் முக்கியமான கடமை நிறவெறியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது. அனைவருக்கும் கல்வி, வேலை, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், அவர்களை மைய நீரோட்டத்துக்குக் கொண்டுவருதல் போன்றவை. ஆனால் இவற்றை நிறைவேற்றுவதற்கு அப்போது அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த வெள்ளை இனத்தவர்களின் ஒத்துழைப்பு தேவை. பல இடங்களில் அது எளிதாக இருந்தாலும், பரவலாக எதிர்ப்பு இருந்தது. முதல் பயம் தாங்கள் இதுவரை ஏகபோகமாகக் கோலோச்சிக் கொண்டிருந்த பகுதிகளில் வெள்ளையர் அல்லாதவர்களும் வருவார்கள். செல்வத்தைப் பகிரவேண்டும். இதனால் தன் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். முக்கியமாக ஓட்டுரிமை. வெள்ளையர் அல்லாதவர், மக்கள் தொகை விகிதாசாரப்படி அதிகம். இதனால் வெள்ளையர்களுக்கு வேண்டப்பட்ட வேட்பாளர் தோல்வியுறும் வாய்ப்புகள் அதிகம்.
இந்தப் பயத்தை Ku Klux Klan போன்ற நிறவெறி அமைப்புகள் கிளறிவிட பாமர மக்கள் அப்படியே நம்பினார்கள். அதிபர் லிண்டன் ஜான்ஸன் மைய அரசின் வழியே பல மாகாணங்கள் இயற்றிய நிறவெறி சட்டங்களை உடைத்தார். முக்கியமாக ’ஓட்டுரிமை சட்டம்’. இந்தச் சட்டம் மாகாணங்கள் இயற்றிய தேர்தல் சட்டங்களில் இருக்கும் சட்டவிரோதங்களைத் தடுக்கிறது. ஏற்கெனவே 1860-களில் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட சட்டத்தின்படி அனைவருக்கும் ஓட்டுரிமை இருந்தாலும் தெற்கு மாகாணங்களில் வன்முறை வழியே வெள்ளையர் அல்லாதவரின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதுதவிர ஓட்டுப் போடுபவரின் தகுதியாகப் படிப்பறிவு (அடிமைகளுக்குப் படிப்பறிவு கிட்டியதில்லை), சொத்துரிமை(அடிமைகளுக்குச் சொத்துரிமை கிடையாது) இருக்கவேண்டும் என்று பல கேவலமான சட்டங்களை தெற்கு மாகாணங்கள் இயற்றியிருந்தன. இவை அனைத்தையும் ஜான்ஸன் சட்டம் தகர்த்தது. ஜான்ஸன் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர். இவரின் செயல்பாடுகளினால் தெற்கு மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி தன் செல்வாக்கை இழந்தது. இன்றும் ஏறக்குறைய அதே நிலைதான்.
இதைக் குடியரசு கட்சியில் இருந்த தீவிர பழமைவாதிகள் நன்கு உபயோகப்படுத்திக் கொண்டனர். பழமைவாத தொழில் அதிபர்களின் தாளங்களுக்கு இவர்கள் தலையாட்ட வேண்டும். அவர்களின் முக்கிய உத்தரவான வரிவிகிதங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாகவேண்டும். அதற்கு முக்கிய தேவை சிறிய அல்லது குறைந்தபட்ச மைய அரசாங்கம். ஏறத்தாழ அனைத்தும் தனியார் மயமாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு அரசாங்க உதவி என்பது கடும் சுமை. அதற்கு அரசாங்கம் வரிகள் வழியே வருவாயைத் தேடும். இது எல்லா வழிகளிலும் தடுக்கப்படவேண்டும். இது பழமைவாதிகளின் முக்கியமான வாதம். அதுதவிர அவர்களின் பெண்கள் விரோத மனப்பாங்கு ஏறக்குறைய 17-ம் நூற்றாண்டு அடக்குமுறையைச் சார்ந்தது. முக்கியமாக கருக்கலைப்பு, கருத்தடை போன்றவற்றில் பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் இருக்கக்கூடாது என்பதில் இவர்கள் கிட்டத்தட்ட இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒத்திருப்பார்கள்.
1969-ல் ரிச்சர்ட் நிக்சன் இந்த வலதுசாரி பழமையை இன்னும் தீவிரமாக்கினார். கென்னடி, ஜான்சனின் முற்போக்கான சட்டங்களை உடைப்பேன் என்று சொல்லி ஓட்டு வாங்கினார். ஆனால் அரசியல் சாசனம், மற்றும் மக்கள் சபை அவரைவிடச் சக்தி வாய்ந்தது என்பதை விரைவிலேயே உணர்ந்தார். இதனால் பழமைவாதிகள் அவரை வெறுக்க ஆரம்பித்தனர். 1974-ல் வாட்டர்கேட் ஊழலில் பதவி இறங்கினார். என்றாலும் இவரின் அரசியல் செயல்பாடுகள் ஜனநாயகக் கட்சியையும், குடியரசுக் கட்சியையும் ஒருவரையொருவர் நம்ப முடியாததாக ஆக்கியது.
1976-ல் ஜிம்மி கார்ட்டர் ஜனநாயகக் கட்சியின் அதிபரானார். தெற்கில் இருந்து வந்த முற்போக்காளர். கருத்துமுதலாளராக இருப்பவர். ஆனால் தினசரி அரசியலில் இது செல்லாது. இவரின் காலத்தில் நாட்டில் சாதாரண குடிமகனிடையே அரசைப் பற்றிய அவநம்பிக்கை அதிகமானது. போதாதற்கு இரானிய மற்றும் எண்ணைப் பிரச்சினைகள்.
1980-ல் ரேகன் அதிபரானார். இவர் தொழிலதிபர்களின் செல்லப் பிள்ளை. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இவர் எடுத்த முடிவுகள், ஜனநாயகக் கட்சியை மேலும் எதிர்ப்பரசியல் செய்ய வைத்தது. இன்றும் ரேகனால்தான் அமெரிக்கா, வியட்நாம் போரால் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைந்து வல்லரசானது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். புறவயமாகப் பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. ஆனால் அவராலும், அவருக்குப் பின் வந்தவர்களாலும் வளர்க்கப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதம் 9/11 ஆனது என்பதும் வரலாறு, ரேகனின் பொருளாதாரக் கொள்கைகள் உள்நாட்டை வளர்த்தாலும் நாட்டின் கடன் சுமையை $900 பில்லியனிலிருந்து $2.7 ட்ரில்லியனாக உயர்த்தியது.
ஜார்ஜ் புஷ் 1988-ல் ரேகனின் கொள்கைகளை அப்படியே அடியொற்றினார். பேச்சளவில் பழமைவாதிகளைத் திருப்திப்படுத்தினாலும் செயலில் இவரால் அவர்களின் உத்தரவுகளை நிறைவேற்ற முடியவில்லை. வரிகள் அதிகமாயின. இராக் போரில் வென்றாலும் மக்கள் அடுத்த தேர்தலில் இவரை வீட்டுக்கு அனுப்பினர்.
கிளிண்டன் ஆட்சியைப் பிடித்தது பழமைவாதிகளுக்கு பேரிடி. ஆனால் அவர்கள் சுதாரித்து பல பழமைவாத செனட்டர்களை ஒன்று சேர்த்து அரசாங்கத்துக்குத் தலைவலியைத் தரத் தொடங்கினர். இதன் தலைவராக நியூட் கிங்க்ரிச் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் அரசாங்க நிதிநிலை அமைக்கும்போது பல செலவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர். முக்கியமாக மானியக் கோரிக்கைகள். இவை ஏழைகளுக்குச் சென்றடையாமல் இருக்க அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைப்பது. அரசாங்கம் செலவுக்கு பணம் இல்லாததால், அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து ஏனைய பகுதிகளை மூடிவிடும். பணியாளர்களுக்குச் சம்பளம் கிடைக்காது. இதனால் அரசாங்கத்தைத் தான் நினைத்தபடி ஆட்டிப் படைக்கலாம்.
ஆனால் கிளிண்டன் புத்திசாலி. அரசாங்கத்தை மூடினால் அந்தச் சூழலை உருவாக்கியவர்களுக்குத்தான் மக்களிடையே கெட்ட பெயர் வரும் என்று அவருக்குத் தெரியும். ஆகவே தான் நின்ற நிலையிலிருந்து கீழே வராமல் பிடிவாதம் பிடிக்க, குடியரசு கட்சியினர் கீழிறங்கவேண்டியதாயிற்று. இதனால் அவர்கள் ஜனநாயகக் கட்சியை இன்னும் வெறுத்தனர். பழமைவாதிகள் வாஷிங்டனில் இருக்கும் குடியரசு செனட்டர்கள் உபயோகமற்றவர்கள் என்று முடிவு கட்டினர்.
சர்ச்சைக்குரிய விதத்தில் ஜார்ஜ் W. புஷ் அதிபரான விதம் ஜனநாயகக் கட்சியை அவநம்பிக்கைக் கொள்ளவைத்தது. 9/11 இரண்டு கட்சிகளையும் உணர்ச்சி அளவில் இணைத்தது. ஆனால் ஜனநாயகக் கட்சியில் பெரும்பாலானோர் இராக் போருக்கு ஆதரவாக இல்லை, என்றாலும் ஊரோடு ஓத்து ஊத வேண்டிய நிலை. போர் வேண்டாம் என்று சொன்னால் அன்றைய நிலையில் சொல்பவருக்கு அரசியல் சமாதி கட்டப்பட்டிருக்கும். தேசம் அந்த அளவிற்கு போர்க்கோலம் கொண்டிருந்தது. என்றாலும் இராக் போரை ஆதரித்துவிட்டு இன்றும் அதைச் சங்கடமாக எதிர்கொள்பவர்களில், 2016-ன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவருமான ஹிலரி கிளிண்டன்.
ஜார்ஜ் புஷ் அணியினர் தங்களுக்குக் கிடைத்த ஆதரவில் இரு கட்சிகளையும் பிரித்தாளும் அசிங்க அரசியலை நடத்தினர். 2000-2008 வரை அமெரிக்க நாடாளுமன்றம் மிக மோசமான, பாகுபாடற்ற பிரிவினையில் இருந்தது. பழமைவாதிகளான டிக் சேனி, டான் ரம்ஸ்ஃபீல்ட், ஜான் ஆஷ்க்ராஃப்ட் போன்றவர்களின் ஆதரவாளர்கள் வேரூன்றினார்கள். இவர்கள் விதைத்த விதைதான், 2009-ல் தேநீர் அணி (Tea Party) என்ற பலம் வாய்ந்த குழுவை உருவாக்கியது.
தேநீர் அணி (Tea Party) என்பது அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. அமெரிக்க சுதந்திரம் 18-ம் நூற்றாண்டில் உக்கிரம் அடைந்தபோது, பாஸ்டனில் பல அமெரிக்கர்கள் பிரிட்டிஷ் வரி விதிப்பை எதிர்த்து கப்பலிலிருந்து தேநீர் மூட்டைகளைக் கடலில் வீசியதை நாம் படித்திருக்கிறோம். அதைப் போன்ற ஒரு குழு 2009-ல் ஜனநாயகக் கட்சியின் வரிவிதிப்பு மற்றும் ஒபாமா உறுதியளித்த அரசாங்க மருத்துவ காப்பீட்டை எதிர்த்து உருவானது. வெளிப்பார்வையில் நிறவெறி ஒழிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், பழமைவாதிகளுக்கு ஓபாமா அதிபரானது ஏறக்குறைய மத, நிற, உணர்வு ரீதியாக மிகப்பெரிய அடி. அவர்களுக்குத் தேநீர் அணி ஒரு பெரும் வடிகாலாகவும், அரசாங்கத்தை ஸ்தம்பிக்கவைக்கவும் உதவியது.
குடியரசு கட்சி தேநீர் அணியை ஆதரித்தாலும், அதன் மிதவாதிகள் அணியை தன் அருகில் சேர்க்கத் தயங்கினர். தேநீர் அணியின் சக்தி மிதவாதிகளை ஓரம் கட்டி அதன் ஆதரவாளர்களை வாஷிங்டனுக்கு அனுப்பியது. அவர்கள் ஓபாமா அரசாங்கத்தின் பல திட்டங்களை முடக்கினர். ஓபாமா அவர்களோடு பல நலத் திட்டங்களுக்குப் போராட வேண்டியிருந்தது.
இவ்வாறு அரசாங்க செயல்பாடுகள் இறங்க ஆரம்பிக்க, பொது ஜனம் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார். 2009-ல் பாதாளத்திலிருந்த அமெரிக்க பொருளாதாரம் இப்போது வெகுவாக முன்னேறியிருக்கிறது. வேலையில்லாதோரின் விகிதம் 2009-ல் ஏறத்தாழ 10% என்பதிலிருந்து, இப்போது 5%-ஆகக் குறைந்துள்ளது. ஆனால் மக்களின் பணவரவு என்பது அதற்கேற்ப அதிகரிக்கவில்லை. 2008-க்கு முன்னால் இருந்த பணவிகிதம்தான் இப்போது இருக்கிறது. ஆனால் விலைவாசி நிச்சயம் அதிகரித்திருக்கிறது. இதன் அதிருப்தி கீழ்நடுத்தர, ஏழைக் குடும்பங்களில் எதிரொலிக்கிறது.
இதைத்தான் ட்ரம்ப் போன்றவர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். ட்ரம்ப் அதிபராகவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் பற்றிய விவரம் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும்:
– ஆதரிப்பவர்களில் பெண்கள் ஏறக்குறைய 50% (இவர்களில் சரிபாதியினர் 45-65 வயதுக்குட்பட்டவர்கள்).
– ஆண்/பெண் கல்வியறிவு: உயர்நிலைப் பள்ளி வரை மட்டும் முடித்தவர்கள் அல்லது அதற்கு முன்னே பள்ளியை விட்டு வெளியேறியவர்கள்.
– தேநீர் அணியைச் சேர்ந்தவர்கள்: 30%
மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது. இருபாலரும் ஏறத்தாழ இன்னும் குறைந்தபட்சம் 15-20 வருடங்களாவது உழைக்கவேண்டும். கல்வியறிவு அவ்வளவாக இல்லாததால் அவர்களின் வருமானம் சராசரியாக கீழ்நடுத்தரக் குடும்பத்தின் வருமான வரிசையில் வரும். இவர்கள் பல ஆண்டுகளாக வாஷிங்டனில் நடக்கும் கோமாளித்தனங்களால் அரசாங்கத்தின் மேல் மிக வெறுப்பில் இருக்கிறார்கள். மைய அரசின் பல நல்ல திட்டங்கள் இவர்களைச் சென்றடையவில்லை அல்லது அறியாமையில் இருக்கிறார்கள். 1% பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக கவனம் செலுத்தும் அரசாங்கம், பல நலத்திட்டங்களைக் குறைப்பதால் பலன் இவர்களைச் சென்றடைவதில்லை.
இவர்களுக்குத்தான் ட்ரம்ப் போன்ற தெருவோர அரசியல்வாதிகள் அறிவாளிகளாகத் தெரிகிறார்கள். ட்ரம்ப்-காக இவர்கள் பிரச்சாரம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். குடியரசு கட்சியும், ஜனநாயகக் கட்சியும் விழிப்புடன் இல்லையென்றால் அடுத்த அதிபர் தேர்தல் என்பது தமிழ்நாட்டுத் தேர்தல் நிலைக்குத் தரம் தாழக்கூடும்.
ட்ரம்ப்-ஐ ஓரம் கட்டமுடியுமா? குடியரசு கட்சியின் மற்ற வேட்பாளர்களைப் பார்க்கும்போது அவநம்பிக்கையே எஞ்சுகிறது. ஜெப் புஷ் இன்னும் மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கவில்லை. பென் கார்ஸன் (Ben Carson), மார்க் ரூபியோ, டெட் க்ரூஸ் (Ted Cruz), க்றிஸ் க்றிஸ்டி போன்றவர்களின் அறிவின் எல்லை வெகு சுலபமாக, முக்கியமான கேள்விகளில் தெரிந்துவிடுகிறது. இவர்கள் அதிபரானால் சீனாவுக்குத்தான் இலாபம். விரும்புகிறோமோ, இல்லையோ, யு.எஸ். என்ற தேசம் இன்றும் அறிவுடையவர்களுக்கும், ஜனநாயகத்தை விரும்புபவர்களுக்கும் தேவையாக இருக்கிறது. தேவையில்லை என்று சொல்பவர்கள் அடுத்த வல்லரசான சீனா எப்படி மேன்மையானது என்பதைக் கொஞ்சம் கவனித்தால் போதும். ஆகவே ஒரு நடுநிலையான தலைமை யு.எஸ்-ல் இருக்கவேண்டும். ட்ரம்ப் முதன்மை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஹிலரி க்ளிண்டன் ஜனநாயக வேட்பாளரானால், மிதவாத குடியரசு கட்சி ஆதரவாளர்களில் பலர் ஹிலரியை ஆதரிக்கும் சாத்தியம் அதிகம்.
எனவே ட்ரம்ப்-ஐ அதிபர் தேர்தல் தினம் நிச்சயம் தோற்கடித்துவிடும். தோற்கடிக்கப்படவேண்டும்.
இறுதியாக, குடியரசு கட்சி போட்டியாளர்களைப் பற்றி Jimmy Kimmel சொன்னது:

“The two front-runners: Ben Carson, who doesn’t believe in evolution; and Donald Trump, who kind of proves his point.”

 

உதவியவை

1) John Adams – David McCullough
2) https://en.wikipedia.org/wiki/Voting_Rights_Act_of_1965
3) https://en.wikipedia.org/wiki/Lyndon_B._Johnson
4) http://www.cnn.com/2015/11/16/politics/donald-trump-syrian-refugees/
5) http://politicalhumor.about.com/od/Donald-Trump/a/Donald-Trump-Quotes.htm
6) http://www.rollingstone.com/politics/news/why-the-2016-election-will-be-one-of-the-most-pivotal-moments-of-our-time-20151203

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.