எதிர்வினைகள்

dsc_6585-3

அன்புடையீர்
வணக்கம். இன்று காலைதான் சொல்வனம் படித்தேன். அழகான கட்டமைப்பு. ஆர்வமூட்டும் படைப்புகள். திலீப்குமார் பற்றிய கட்டுரையை விரும்பி வாசித்தேன். அவரைப் போன்ற ஆளுமைகள் தமிழ்ப்படைப்புலகுக்கு உரமாக இருப்பவர்கள். அவருடைய சிறுகதை ஒன்றையும் இணைத்து வெளியிட்டுருப்பது நல்ல திட்டம். சுகா எழுதியுள்ள திசை இந்த இதழின் முக்கியமான படைப்பு. அவருடைய விவரணை வரிகளில் பிரித்தறியமுடியாதபடி படர்ந்திருக்கும் நுட்பமான தகவல்களும் நகைச்சுவையும் நான் எப்போதும் விரும்பி கவனிக்கும் முக்கிய அம்சங்கள். அவை இக்கட்டுரையிலும் அடங்கியுள்ளன.

இதழ்க்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
பாவண்ணன்

**************
சொல்வனம் ஆசிரியர் சமூகத்திற்கு,
”திலீப்குமாரின் இலக்கிய உலகம்” படித்தேன். மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது.
கட்டுரையின் சுவையின்முன் மிகச் சிறிய விஷயங்கள் வாசகரின் கவனத்தைச் சிதறடிப்பதில்லை. இருப்பினும், இந்தக் கட்டுரையின் தலைப்பாக ”திலீப்குமார் என்றொரு இலக்கிய ஆளுமை” என்றிருந்தால் மிகப் பொருத்தமானதாக இருக்குமோ என்று ஒரு எண்ணமும் எழுந்தது. ஏனெனில், படைப்புகளைப் பற்றிய அலசலைவிட படைப்பாளியைப் பற்றிய விவரிப்பாகக் கட்டுரை இருக்கிறது. வாசிப்பில் வாழ்க்கையைக் காண்பவர்களுக்கு உற்சாகம் தருகிற ஒரு மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். சொல்வனத்தில் பல்வேறு வண்ணங்கள் வெளிவந்து தமிழறிந்தவரை மகிழ்விக்கட்டும்.
ஆனந்தத்துடன்,
Ananda Ganesh, V

**************

அன்பு நண்பர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சொல்வனம் என்கிற பெயரே மிகவும் அற்புதமாக இருக்கிறது. இதழின் உள்ளடக்கம் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது. டெல்லியில் இருந்து உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் தயங்காது தெரிவியுங்கள்.
சொல்வனத்தை வடக்கு வாசல் மனம் திறந்து வாழ்த்துகிறது.

அன்புடன்
கி.பென்னேஸ்வரன்

http://www.vadakkuvaasal.com/article_r.php?id=324

**************

அன்பு ஆசிரியருக்கு,
நல்லதொரு துவக்கம். சிறிதேயெனினும், தமிழில் வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் களத்தை விரிவாக்கி, அவ்வப்போதைய நடப்புகள் குறித்த தகவல்களையும் அளியுங்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

சரோஜா ரவீந்திரன்(தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது)

**************

சொல்வனம் படித்தேன். திலீப்குமாரின் சிறுகதை மிக அருமையாக இருந்தது. நீண்ட நாட்களாய் என்னுடைய படிக்கும் பழக்கத்தில் விழுந்திருக்கும் இடைவெளியில் இக்கதை மீண்டும் என்னைப் படிக்க வைக்கும் படியாய் இருக்கிறது. இக்கதையில் சொல்லப்பட்டிருக்கும் செளகார்பேட்டை பகுதிகளை எனக்கு மிக நன்றாகத் தெரியும். 4-5 வருடங்களுக்கு முன்பு Marketing executive ஆக வேலை செய்து கொண்டிருந்தபோது அப்பகுதிகளில் நிறைய சுற்றியிருக்கிறேன். சில குஜராத்தி வீடுகளுக்குள்ளும் சென்றிருக்கிறேன். எனக்கு அந்த நினைவுகளை இந்தக்கதை மீட்டுத் தந்தது.

சுகாவின் கட்டுரை அவருடைய பிற கட்டுரைகளைப் போலவே மிக அருமையாக இருந்தது. அருணகிரியின் க்ளோபல் வார்மிங் பற்றிய கட்டுரை ஆச்சரியமூட்டும் பல புதிய தகவல்களைத் தந்தது. தொடரின் அடுத்த பகுதிகளைப் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஸ்ரீயின் இசைக்கட்டுரை நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல் தோன்றியது.

வாழ்த்துகள்.

அன்புடன்,
டில்லிபாபு

**************

அறிவியலை மாணவர்களிடையே கொண்டு செல்லவேண்டும் என்ற கட்டுரையையும், அறிவியல் ஆய்வு முடிவுகளை சந்தேகிக்கும் கட்டுரையையும் அருகருகே வெளியிட்டது நல்ல முரண்நகை.

சுந்தரவடிவேல்

**************

இந்த இதழின் அறிவியல் கட்டுரைகள் இரண்டுமே என்னை வெகுவாகக் கவர்ந்தன. அருணகிரி மிகவும் சிரத்தையாக, ஆய்வுநோக்கில் கட்டுரை எழுதியிருக்கிறார். இருந்தாலும் அவருடைய வாதங்களுக்கு விரிவான பதிலளிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். முழுக்கட்டுரையும் வெளிவரக்காத்திருக்கிறேன். மொழிபெயர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

ராஜசேகரன் (தமிழாக்கம் செய்யப்பட்டது).