கருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்

”என்ன சொல்றீங்க, புரியவே இல்லை”
“புதுசா எங்க வீட்ல இணைய ஃப்ரிட்ஜ் வாங்கினோம். அதுல, பொருட்கள் குறைஞ்சா உடனே சூப்பர் மார்கெட்டுக்கு செய்தி அனுப்பிடும். சூப்பர் மார்கெட் வீட்டுக்கு சாமான் எல்லாம் அனுப்பிச்சுடுவாங்க”
“அதுக்கும் எங்க வங்கிக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் எதுக்கு எங்க கிட்ட சொல்றீங்க?”
“தெரியாத்தனமா புது பிரிட்ஜ் செய்த தவறுல, வேண்டாத பொருட்களை சூப்பர் மார்கெட் காரங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அத்தோட கிரெடிட் கார்டிலிருந்து காசையும் எடுத்துக்கிட்டாங்க”
“அதுக்கு நாங்க என்ன செய்யணும்கிறீங்க?”
“புது பிரிட்ஜ் செஞ்ச தவறை மன்னிச்சு, அந்தக் காசை திருப்பிட முடியுமா?”
”இதென்ன வம்பா போச்சு. உங்களுக்கு எங்க வங்கி கிரெடிட் கார்டு குடுத்துச்சா, இல்ல உங்க ஃப்ரிட்ஜுக்கு குடுத்துச்சா?”
“எனக்குத்தான் கொடுத்தீங்க. ஆனால், ஒரு முறை மன்னிக்க மாட்டீங்களா? புதுக் கருவி சின்னத் தப்பு செஞ்சா, பெரிய மனசு பண்ண வேண்டாமா?”
“அதெல்லாம் முடியாது. நீங்களாச்சு, உங்க ஃப்ரிட்ஜாச்சு, உங்க சூப்பர் மார்கெட்டாச்சு. எங்களை ஆளை விடுங்க”

***  ***

உலகின் ஏறக்குறைய 50% ஜனத்தொகை சிறு/பெரு நகரங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் வெறும் உலகின் பரப்பளவில் 2% மட்டுமே.  2015 –ல், நகரங்களில் மட்டும் ஏறக்குறைய 120 கோடி கார்கள் உள்ளன. உலகின் 6 மனிதர்களுக்கு ஒரு கார் என்ற விகிதத்தில், இது ஒரு மிகப் பெரிய காற்று மாசுப் பிரச்னையாக மாறியுள்ளது. அத்துடன், பல வளரும் நாடுகளில், போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்னையாகவும் மாறியுள்ளது. இத்துடன், இது ஒரு ஒலி மாசுப் பிரச்னையாகவும் வளர்ந்து அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.
இதைவிட இன்னும் அச்சுறுத்தும் விஷயம், நகரமயமாதல் குறையவில்லை, இன்னும் அதிக வேகத்துடனே நடந்து வருகிறது.

  • மணிக்கு 7,500 மனிதர்கள், உலகின் ஏதோ ஒரு நகரத்தில் குடிபுகவென இடம்பெயர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்
  • உலகின் 80% கரியமிலவாயு, நகரங்களிலிருந்து வெளியாகிறது
  • உலகின் 75% சக்தியை நகரங்கள் உறிஞ்சுகின்றன

இதனால், நகரங்களின் கட்டமைப்புகள் தாக்கு பிடிக்க முடியாமல் தவிக்கின்றன. எல்லா நகரில் வாழும்  மனிதர்களுக்கும் உள்ள பிரச்னைகள்:

  • போக்குவரத்து நெரிசல்
  • பொதுப் போக்குவரத்துடைய நம்பகத்தன்மை இல்லாமை
  • நகர அரசாங்கச் சேவைகளின் போதாமைகள்
  • சாலைகள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பராமரிப்பு இன்மை
  • சாலை விளக்கொளி பற்றாததும், அதிக ஒளி மாசுபடுதலும்
  • நகரத் துப்புறவு
  • நகர் வாழ் மக்கள் பாதுகாப்பு

IOT part8-pic1

இந்தப் பிரச்னைகள், பல்லாண்டுகளாக இருப்பவை என்று சொன்னாலும், நிலமை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமடைந்து வருகிற ஒன்று. இணையத்தில் இணைக்கப்பட்ட கருவிகள் பல விதங்களிலும் நகரங்களை நுண்ணறி நகரங்களாக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகள் பல மேற்கத்திய நகரங்களில் சோதனை முறையில் இன்றே தொடங்கிவிட்டன. இந்தப் பழம் பிரச்னைகளுக்கு, புதிய தொழில்நுட்பம் வெகுவாக உதவும் என்று பல நகரத் தலைவர்கள் சொல்லுவதோடு நிற்காமல், செயலிலும் இறங்கியுள்ளார்கள். நகரங்களில் நுண்ணறிப்பேசிகளின் வீச்சு அதிகம் இருப்பதால், இதை ஒரு பயனுள்ள கருவியாக நகர வாழ்க்கை மேம்பாட்டிற்காக மாற்றி அமைக்கலாம் என்பது இந்த முயற்சிகளின் அடிப்படை. இந்தப் பகுதியில், இந்தத் துறையில் உள்ள பயன்பாடுகளை ஆராய்வதோடு, சில உலக நகரங்களின் முயற்சிகளையும் ஆராய்வோம்.
நுண்ணறிக் கார்கள் நிறுத்தும் இடங்கள்
நகர மையங்களில் கார்களைச் சில நேரங்களில் பயன் படுத்தக் கூடாது என்ற சிங்கப்பூர் போன்ற நகரங்கள் பல்லாண்டுகளாகச் சட்டம் வைத்துள்ளன. ஆயினும், பல மேற்கத்திய நகர மையங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்னை,  காரை நிறுத்த இடம் இருக்கிறதா என்று தேடும்
ஓட்டுனர்கள் மேலும்  கீழும் பயணிப்பது அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எரிச்சலூட்டும் விஷயம். அத்துடன், தெருவோர கட்டணக் கார் நிறுத்துமிடங்கள் பல இருந்தும், இந்தப் பிரச்னை தீர்ந்ததாக இல்லை. நகரங்களுக்கு வருவாய் தரும் இந்த விஷயம் இப்படித் தலைவலியாக இருப்பது சரியாகத்தான் இல்லை.
நகர மையத்தின் ஒரு கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை எல்ல பெரு நகரங்களிலும் அதிகம். ஆனால், 2 கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை அவ்வளவு அதிகமில்லை. பல ஓட்டுனர்களுக்கு இத்தகைய நிறுத்துமிடங்கள் எங்கிருக்கிறது என்று தெரிவதில்லை. அத்துடன், அப்படியே அந்த நிறுத்துமிடத்தைக் கண்டுபிடித்தாலும், அங்கு காலி இடங்கள் இருப்பதில்லை.  காலை ஏழு மணிக்கெல்லாம் இப்படிப்பட்ட மலிவான நிறுத்துமிடங்கள் நிரம்பி விடுகின்றன.
பல மேற்கத்திய நகரங்களின் செல்ல ப்ராஜக்டாக இத்தகைய கார் நிறுத்துமிடங்களை நுண்ணறி நிறுத்துமிடங்களாக மாற்றும் முயற்சி.

  1. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஓர் உணர்வியை (எடை உணர்வி ஒன்றே இதற்குப் போதும்) நிறுவிவிட்டால், எந்த நிறுத்துமிடத்தில் கார் உள்ளது, எந்த இடத்தில் கார் இல்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம்.
  2. உணர்வியின் நிலையை அந்த நிறுத்துமிட கணினி இத்தனை காலி இடங்கள் உள்ளன என்று நகர அரசாங்க கணினிக்கு செய்தி அனுப்பிய வண்ணம் இருக்கும். பெரும்பாலும், இத்தகைய பயன்பாடுகளுக்குக் கம்பித் தொடர்பு தொழில்நுட்பம் போதுமானது.
  3. நகர அரசாங்க கணினி வழங்கி, தன்னுடைய இணைத்தளத்தில் இத்தனை காலி நிறுத்துமிடங்கள் இத்தனை கட்டணத்தில் உள்ளது என்று வெளியிட்டுக் கொண்டே இருக்கும்
  4. குடிமக்கள், தங்களுடைய நுண்ணறிப்பேசியில் நகர நிறுத்துமிடப் பயன்பாடு ஒன்றை நிறுவினால், எங்குக் காரை நிறுத்த காலி இடம் இருக்கிறது என்று உடன் செய்தியுடன், அவர்களுக்கு இஷ்டப்பட்ட நிறுத்துமிடத்திற்குச் சென்று காரை நிறுத்தலாம். இந்த நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஓட்டுனர்களும் தேவைக்கேற்ப நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மையப் பகுதியில் இந்த முறை இன்று பயன்படுத்தப்படுகிறது.
  5. நகர மையப் போக்குவரத்து நெரிசலை இது குறைப்பதுடன், நகருக்கு வருமானத்தையும் கூட்டுகிறது. மையத்திலிருந்து 2 அல்லது 3 கி.மீ, தொலைவில் உள்ள நிறுத்துமிடங்களும் பயனுக்கு வருவதால், நகருக்கு கூடுதல் வருமானம்

கீழே, லண்டனில் உள்ள இத்தகைய நுண்ணறி நிறுத்துமிட அமைப்பின் விடியோ:

பொதுப் போக்குவரத்து இணையக் கருவிகள்
இதைப் பற்றி, பொதுப் போக்குவரத்துப் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பல நகரப் போக்குவரத்து அமைப்புகள், இன்று பல வித சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இவர்களின், மிகப் பெரிய குறிக்கோள்கள்:

  1. பயணிகள் எங்கிருந்தாலும், அடுத்தப் பேருந்து அல்லது ரயில் எப்பொழுது வரும் என்பதே இவர்களின் தகவல் தேவை. பெரிய நகரங்களில், போக்குவரத்து நெரிசல்களால், பல நேரங்களில் சரியான நேரத்திற்கு ஓர் இடத்தை வந்து சேர முடிவதில்லை
  2. ஜி,பி.எஸ், உதவியால், பஸ் அல்லது ரயிலின் நிலையை அறிந்து, அதன் பயண அட்டவணையை உடனுக்குடன் மாற்றி, பயணிகளின் நுண்ணறிப்பேசியில் துல்லியமாக நேரத்தை அறிவித்தல் இன்று சாத்தியம். இதற்கு, எந்த வித புதிய கருவியும் தேவையில்லை. ஓடும் பஸ் மற்றும் ரயிலில் ஜி.பி.எஸ், இருந்தால் போதுமானது
  3. யூபர் போன்ற சேவைகள் நகரங்களில் இன்று வாடகைக் கார் என்ற தொழிலையே தலைகீழாக்கி விட்டார்கள் இவர்கள் பயன்படுத்துவதெல்லாம் வெறும் ஜி.பி.எஸ், -டன் இணைந்த ஓர் இணையப் பயன்பாடுதான். பயணிகள் தங்களது நுண்ணறிப்பேசி மூலம் அருகில் உள்ள வாடகைக் காரை தங்கள் பயணத்திற்கு எளிதாக அமர்த்திக் கொள்ளலாம். பல நகர அரசாங்கங்கள் யூபருடன் தகராறு என்றிருந்தாலும், இத்தகைய சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது
  4. சற்று மாறுபட்ட இரு சேவைகளைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாவது ஜிப்கார் (zipcar) என்ற சேவை. நகருக்குள் பல நிறுத்துமிடங்களில், சில இடங்களை இவர்கள் கட்டணம் கட்டித் தனதாக்கிக் கொள்கிறார்கள், இந்த அமைப்பில் நீங்கள் உறுப்பினர் ஆகிவிட்டால் (இதற்கு, வருடாந்திர சந்தா உண்டு), நகர மையத்திற்கு, பொதுப் போக்குவரத்தில் வந்தடைந்து, அதன் அருகில் இருக்கும் ஜிப்கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, உங்களது அடுத்தக் கட்ட பயணத்தைத் தொடரலாம். உங்கள் இலக்கு அருகில் இருக்கும் ஜிப்கார் நிறுத்துமிடத்தில் காரை விட்டு விட்டு உங்களது இலக்கிற்கு நீங்கள் நடையைக் கட்டலாம். நீங்கள் பயன்படுத்திய நேரத்திற்கு வாடகை மட்டும் உங்களிடமிருந்து ஜிப்கார் வசூலிக்கும். நகர மைய நிறுத்துமிட கட்டணத்தைவிட இது மிகவும் குறைவு
  5. உங்களது சட்டை, டை கசங்குவதைப் பற்றிக் கவலை இல்லையேல், இன்னொரு முறையை இன்று இணையத்தின் உதவியுடன் பல மேற்குலக நகரங்கள் அமுல்படுத்துகின்றன. இது மாறுபட்ட வாடகை சைக்கிள் முறை. உங்களிடம் ஒரு கருவி ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதற்கும் வருடாந்திர சந்தா வேண்டும். ஜிப்கார் போல, ஆங்காங்கே இவ்வகை சைக்கிள்கள் நகர மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அரை மணி நேரப் பயணம் அல்லது ஒரு மணி நேரப் பயணம் உங்களது சந்தாவுடன் உண்டு, நகர மையத்தில், இத்தகைய சைக்கிள்களை, நகர மையவாசிகளும், பொதுப் போக்குவரத்துப் பயணிகளும் பயன்படுத்துகிறார்கள். சிகாகோ நகரில், இவ்வகை சைக்கிள் நிறுத்துமிடத்தில், குளியலறைகளும் உண்டு. உங்களது நிறுவன தலைவர், சைக்கிளில் வந்து, குளித்துவிட்டு, சூட்டை அணிந்து, காலை மீட்டிங்கிற்கு வந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மாறாக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த முறையின் ஆணிவேர், சந்தாதாரர்களிடம் உள்ள கருவி. கருவியைப் பயன்படுத்தினால்தான் சைக்கிளை விடுவிக்க முடியும். சைக்கிளை விடுவித்தால், உங்களது கருவி, ‘இதோ முருகன் சைக்கிளை 8:20 –க்கு ஏடுத்துள்ளார்’ என்று உடனே ஒரு மின்பரப்பி/வாங்கி மூலம் சொல்லிவிடும். தன்னுடைய இலக்கை அடைந்த முருகன், சைக்கிளை திருப்பியவுடன் ‘இதோ முருகன் 8:45 –க்கு சைக்கிளைத் திருப்பிவிட்டார்’ என்ற நிகழ்வு பதிப்பிக்கப்படும். 25 நிமிடப் பயணத்திற்கு கட்டணம் தனியாக எதுவுமில்லை என்ற முடிவும் உடன் எடுக்கப்படும்.

சாலைகள் மற்றும் பொது சொத்துக்களில் கருவிகள்
கருவி இணையப் பயன்பாடுகளில் சாலைகளை இரு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும்.

  1. சாலைக் குறிகள் மற்றும் சாலை ஒளியமைப்பு
  2. சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் சிக்னல்கள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும்.  அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறைய வேண்டும்.

IOT part8-pic5

நகர வீதிக் குறிகள் மற்றும் முக்கியச் செய்தி அறிவிப்புப் பலகை என்று ஒரு டிஜிட்டல் கம்பம் எதிர்காலத்தில் சாத்தியம்.
நகரத் துப்புரவுக் கருவிகள்
சொன்னால் நம்ப மாட்டீர்கள் – குப்பை என்பது நகரங்களின் ஒரு பெரும் பிரச்னை. அதுவும் நம்முடைய மறுபயனற்ற தூக்கி எறியும் கலாச்சாரம், இந்தப் பிரச்னையை பூதாகரமாக வளர்த்து விட்டது. இன்று சில பெரிய மேற்கத்திய நகரங்கள், தங்களுடைய குப்பையை லாரிகள் மூலம், 500 கி.மீ.  வரை அனுப்பி, பூமிக்குள் புதைக்கிறார்கள்.
 
எவ்வளவுதான் இதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வர நகர அரசாங்கங்கள் முயற்சித்தாலும், இந்தப் பிரச்னை குறைந்ததாகக் தெரியவில்லை. முற்றிலும் இந்தப் பிரச்னையைக் கருவிகள் கொண்டு தீர்க்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு, மறைமுகமாகக் கருவிகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் புதிய கோண முயற்சிகள் பலவும் இத்துறையில் இருப்பது, பிரச்னையின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டும் விஷயம்.
முதலில் IOT part8-pic7இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹம் நகரம், குப்பைத் தொட்டிகளுடன் (அதுவும், குளிர்பாண அலுமினிய குவளைகளை ஏற்கும் குப்பைத் தொட்டிகள்)  சூரிய ஒளியில் இயங்கும் ஓர் இறுக்கும் எந்திரத்தைக் (compactor) குப்பைத் தொட்டியிலேயே நிறுவியுள்ளது, 150 குவளைகளையே ஏற்றுக் கொள்ளும் தொட்டிகள், 1,500 குவளைகள் வரை இறுக்கும் எந்திரத்தின் துணையால் ஏற்கிறது. நிரம்பியவுடன், அதிலுள்ள உணர்வி, செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. பத்து முறை காலி செய்ய வேண்டிய குப்பைத் தொட்டியை ஒரு முறையே காலி செய்வதால், மனித உழைப்பு விரமாவதைக் குறைக்க முடிகிறது. மேலும், காலி செய்ய வரும் வண்டியின் பெட்ரோல் செலவும் மிச்சமாகிறது.
அட்டைப் பெட்டிகள், காகிதம், கண்ணாடி போன்ற பொருட்களை உலகின் எல்லா நகரங்களும் மறுபயன்பாட்டிற்காகப் பிரித்து, ஒன்றாகச் சேகரித்து, உற்பத்தியாளர்களுக்கு விற்கின்றன. இத்தகைய மறுபயன்பாட்டுத் தொட்டிகளில் அளவு உணர்வி ஒன்றை நிறுவிவிட்டால், அத்துடன் தொடர்புடைய கணினிக்கு 90% நிரம்பும் தருணத்தில் செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. 90% நிரம்பியத் தொட்டிகளை மட்டும் காலி செய்ய லாரிகள் அனுப்பி மறு பயன்பாட்டுப் பொருட்களை எடுத்து வருவது பல விதங்களிலும் நகரங்களுக்குப் பொருளாதார உதவியாக இருக்கும். இதை ஒரு சிண்டெலூர் என்ற சிறிய நிறுவனம் செய்து காட்டியுள்ளது. இதன் விடியோ கீழே:

நகரப் பாதுகாப்புக் கருவிகள்
விடியோ கண்காணிப்பு பல ஆண்டுகளாக உலகின் பெரு நகரங்களில் நடக்கும் ஒன்று. ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்திலும், ஊருக்குள் உள்ள நெடுஞ்சாலைகளின் முக்கியப் பிரிவுகள், சில முக்கிய சிக்னல்கள் என்று  விடியோ காமிராக்கள் நகரவாசிகள் யாவருக்கும் பரிச்சயமான விஷயம். பெரிய நகரங்களில் நடக்கும் குற்றங்களைக் குறைக்க இவ்வகைக் காமிராக்கள் மிகவும் உதவுகின்றன. இன்று, இந்தத் தொழில்நுட்பம், அசைவு உணர்வியுடன் இணைத்து, நடமாட்டம் இருந்தால், மனிதர்களைத் தொடரும் அளவு வளர்ந்து விட்டது. இவ்வகைக் காமிராக்கள் பாதுகாப்பிற்கு மிகவும் பயன்படுகிறது. இத்துடன், இன்றைய காமிராக்கள் இரவிலும் தெளிவாகப் படம் பிடிக்கும் நுட்பம் கொண்டவை.
பல யூரோப்பிய நகரங்கள், (குறிப்பாக ஸ்பெயின், ஃப்ரான்ஸ்) காற்றில் உள்ள மாசு, தண்ணீரில் உள்ள பிராணவாயு போன்ற அளவுகளைக் கண்காணிக்க, பல உணர்விகள், கருவிகளை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுவி சோதனை முறையில் நகரச் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இப்படிச் சிலப் பயன்பாடுகள் உடனே சில நகரங்களில் பயனளிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், பல பயன்பாடுகள் ஒரு சோதனை அளவில் உள்ளது, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில், உணர்விகள் மற்றும் கருவிகளின் விலை குறையக் குறைய, மேலும் புதிய கருவி இணைய முயற்சிகள் கட்டமைப்பு உலகில் நிச்சயமாகப் பயனில் இருக்கும். ஏனென்றால், கட்டமைப்பு உலகில் உள்ள பிரச்னைகள் மிகப் பெரியவை. சின்ன முன்னேற்றமும் வரிப் பணத்தைச் சரியான வழியில் நகரவாசிகளுக்குப்  பயன் தருமேயானால், நகரங்கள் இதில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.