மாற்றங்களின் திருப்புமுனையில்…

Vesaa_Venkat_Saminathan_Vivadhangal_Sarchaigal_Cover_images

1968-1970க்குப் போக வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேல் பின்னோக்கி, எல்லாவற்றையும் பதிந்த நினைவுகளிலிருந்தே அக்காலகட்ட மனப்பதிவுகளை மீட்க வேண்டும். ஆய்வாளனின் காரியமில்லை. அப்படித்தானா என்று சரிபார்த்துக் கொள்ள பழைய இதழ்கள் கூட இல்லை. பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றை யார் எடுத்துப் போய்… சரி, நல்லபடியாகத்தான் நினைப்போமே, திரும்பக் கொடுக்க மறந்துவிட்டார்களோ?
‘எழுத்து’ பத்திரிகையோடு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வலர்ந்தாயிற்று. அது ஒரு புத்துணர்வு தந்து, புதிய பாதைகளைக் காட்டிய பத்திரிகை. கிண்டல்களோடும், எதிர்ப்புகளோடும், வசைகளோடும், எல்லாவற்றிற்கும் மேலாக வறுமையோடும் போராடி வளர்ந்த பத்திரிகை. அது கண்டெடுத்தவர்களை வளர்த்த பத்திரிகை. ‘எழுத்து’ தோன்றியிராவிட்டால் எங்களில் பலர் என்னவாக வளர்ந்திருப்போம் என்று சொல்லமுடியாது. 70-க்குப் பிறகு கேட்கப்பட்ட பெயர்கள், “நாங்கள் பிச்சமூர்த்திக்கு முன்னோடிகளாக்கும்” என்று அதற்கும் வெகு வருடங்கள் பின்னால் தங்களுக்கு முடிசூட்டிக்கொள்ள இருந்தார்கள். இப்படிப் பலர் தங்கள் ஜாதகத்தைத் தாங்களே திரும்பக் கணித்துக் கொண்டார்கள். அன்று எதிர்ப்பும், கண்டனங்களும், ஆதரவின்மையும் மாத்திரமே எழுந்தன. இன்று 80-க்குப் பிறகு, அதில் பார்ப்பனீய எலீட்டிஸமும் இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.
எங்களுக்கும் இவர்களுக்கும் நாங்கள் குரல் எழுப்ப மேடை அமைத்ததும், அமைத்துக் கொள்ளும் வழிகாட்டித் தந்ததும் ‘எழுத்து’. அதற்கு முன்னர், ‘எழுத்து’ மூலமும், அது போன்ற பின் வந்த மேடைகள் மூலமும் கேட்ட குரல்களை, சுட்டிய புதிய பாதைகளை முன்னர் யாரும் கேட்டதில்லை; கண்டதில்லை.
இலக்கியச் சிறுபத்திரிகை, புதுக்கவிதை, விமர்சனம் என இம்மூன்றையும் மரபுகளாக, இன்றைய தமிழுக்கு ‘எழுத்து’தான் தந்தது. அது ஒரு கொடை. இவ்வலவும் நான் முன்னர் சொன்னதுதான். ஆனால் இன்று மறுபடியும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இவ்வளவையும் சொல்லி, அங்கீகரித்துப் பின்னர் மேற்சொல்வதுதான் முறையும் நியாயமும் ஆகும். ‘எழுத்து’ வை செல்லப்பாவை மீறிச் செல்வது, நிராகரிப்பதாகாது.
ஆக, எழுத்துவோடு வளர்ந்த பிறகு, ஒரு காலகட்டத்தில், எங்களில் சிலருக்கு, எழுத்து பத்திரிகையில் எல்லை வரையறுப்பில் அதிருப்தி. நாங்கள் யாரும் எக்கருத்தையும் எழுத்துவில் வெளியிடும் சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. செல்லப்பா மிகவும் மதித்த, அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் எழுத்துக்களையே நான் குறை சொல்லி விமர்சித்திருக்கிறேன். என்னையே ‘சாமிநாதன் பதம் பார்த்திருக்கிறார்’ என்று செல்லப்பாவே சொல்லியிருக்கிறார். ஆனால் செல்லப்பாவின் அக்கறை இலக்கியம் என்ற வட்டத்திற்குள்ளேயேதான் இருந்தன. அதிகம் போனால் நாடகம் பற்றி கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம். ஆனால் எனக்கு எழுத, சொல்ல, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள நிறைய விஷயங்கள் இந்த எல்லைகளை மீறி இருந்தன. எனக்குத் தெரியும், சச்சிதானந்தத்தின் ஈடுபாடுகளும் அக்கறைகளும் பரந்த அளவிலானது என்பது. தருமு சிவராமுவின் விஷயத்திலும் அப்படியே. இருப்பினும் என் முதல் கட்டுரையிலேயே, இந்த எல்லைகளை நான் மீறி இருந்தாலும் செல்லப்பா அதற்குத் தடை சொல்லவில்லை என்றாலும், இலக்கியம் மீறிய விஷயங்களுக்கு அதிக இடம் கொடுக்க அவர் விருப்பப்பட்டதில்லை. ஒரு சிறிய பத்திரிகை, இலக்கியம் என்ற எல்லைக்குள்ளேயே செய்ய வேண்டியவை நிறைய இருக்க, அவர் வார்த்தைகளில் “அகலக்கால் வைக்க” அவருக்கு இஷ்டமில்லை. இவ்வளவையும் மீறி நானும் சிவராமுவும் ஒன்றிரண்டு எழுதத்தான் செய்தோம். யூகோஸ்லாவியா க்ராஃபிக்ஸ் பற்றி எழுதியது எனக்கு ஞாபகம் வருகிறது.
vslஎஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார்.
எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால், எதற்கும் ஓர் அளவுக்கு செல்லப்பா பொறுமை காப்பார். வரம்பு மீறிப் போவதாக, தன் இலக்கிய அக்கறைகள் பாதிக்கப்படுவதாக அவருக்குத் தோன்றினால் ஒரே இடுக்கிப் பிடிதான்.
செல்லப்பா வழியில் நாமும் ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன என்று தோன்றிற்று. எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் எழுதினேன். எல்லோரும் சம்மதம் தெரிவித்தார்கள். பத்திரிகை நடத்தப் பணம் கொடுப்பவர்கள் அல்லாத ஒருவர் பொறுப்பேற்க என்று வல்லிக்கண்ணனை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்கக் கேட்டேன். நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆளுக்கு ரூபாய் நூறு முதலில் முதலாகவும், பின்னர் மாதம் பத்து ரூபாய் என பத்திரிகை தானே தன்னை நிறுத்திக் கொள்ளும்வரை கொடுப்பது என்றும் தீர்மானம். பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாகத் தான் பொறுப்பேற்பதாக வல்லிக்கண்ணன் எனக்கெழுதினார். “எல்லா வேலைகளையும் அநேகமாக வல்லிக்கண்ணனே பார்த்துக் கொள்வார். அவ்வப்போது அவர் ஏதாவது உதவி வேண்டினால் செய்யுங்கள் அது போதும்” என்று அசோகமித்திரனுக்கு எழுதினேன். கணையாழி அனுபவம் அவருக்கு உண்டு என்ற நோக்கில். அவர் உடனே எனக்கு மிக விரிவான பதில் எழுதினார். அதன் முக்கிய வாக்கியம், “பின் கழுத்துப் பட்டு சட்டையின் காலர் அழுக்குப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாதம் ரூ.300 தனக்கு தந்தால் உதவுவதாக” அவர் எழுதினார்.
இதற்குப் பிறகு நான் அதிகம் பிரயாசைப்படவில்லை. இது நம்மால் ஆகாது என்று நான் அந்த எண்ணத்தைக் கை விட்டேன். 1967-இல் என் சம்பளமே ஒரு 350-400 என்று தான் ஞாபகம்.
நான் யார் யாருக்கெல்லாம் எழுதினேனோ அவர்களுக்கு ஒரு வேளை ஞாபகமிருக்கலாம். ”‘எழுத்து’வின் எல்லைக் கட்டுப்பாடு அதிருப்தி தருகிறது. நம் எல்லைகளை விஸ்தரித்து நாமே ஏன் ஒரு பத்திரிகை நடத்தக் கூடாது?” என்றுதான் எல்லோருக்கும் எழுதியிருந்தேன்.
இந்த அதிருப்தி எங்களில் பலருக்கு இருந்தது. அதே சமயம் ஆங்காங்கே பலரும் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்பதும் பின்னர் தெரிந்தது. ஒன்றை மாத்திரம் இப்போதும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான சிந்தனைகளுக்கே வழிகாட்டி, க.நா.சு.வின் இரண்டரை வருட ‘இலக்கிய வட்டமும்’, செல்லப்பாவின் ‘எழுத்து’வும்தான்.
அந்த சமயத்தில்தான் நடை என ஒரு காலாண்டு பத்திரிகை தொடங்கப் போவதாக ந. முத்துசாமியும், சச்சிதானந்தமும் எனக்கு எழுதினார்கள் என்று நினைவு.
நடை இரண்டு வருட காலம் நீடித்தது. எட்டு இதழ்கள் சில மெலிந்தும் சில பருத்தும் வெளிவந்தன. இதழ்கள் இல்லாததால் நினைவிலிருந்துதான் நான் பல விஷயங்களைத் தொட்டுப் பேச முடியும்.
கவிதை என்றும் பாடல் என்றும் பன்முக மாயம் செய்யும் திரைப்படப் பாடல்களில் என்ன கவித்துவமோ பாடலோ இருக்கிறது என்று ஒருவர் ஆராய்ந்தார். இது எழுத்துவில் வருவது சந்தேகம்தான். அப்போது காலமாகிவிட்டிருந்த பத்மினி என்னும் ஓவியர் பற்றி, அவரது ஓவியப் பிரதிகளோடு ஒரு கட்டுரை, சச்சிதானந்தம் எழுதியிருந்தார் என்று நினைவு. புதுக்கவிதையில் காணும் யாப்பு மீறல் அத்தனைக்கும் பழம் இலக்கணங்களில், தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, விருத்தி இத்யாதிகளில் விதி அமைத்துக் கொடுத்திருப்பதை ஒரு சிறு புத்தக இணைப்பாகவே, செல்வம் தந்திருந்தார். அதற்கு எந்த பண்டிதரும் இதுவரை மறுப்பு சொன்னதில்லை.
நடையின் முதல் இதழிலேயே ஞானக்கூத்தன் என்னும் ஒரு புதிய குரல் கேட்கத் தொடங்கியது. அக்குரல் எனக்கு அப்போது மிக உற்சாகம் தந்தது. இன்றுவரை தொடரும் தமிழரின் பரிசில் வாழ்க்கை அவர் கவிதை ஒன்றில் நினைவுறுத்தப்பட்டிருந்தது. சி. மணியும், தனது இயல்பான விமர்சன எள்ளலுக்கு புதிய குரல் கொடுத்து வே. மாலி என்று நாமகரணம் கொடுத்தார்.
தாமோதரன், தக்ஷ்ணாமூர்த்தி, ஆதிமூலம் போன்றோரின் கோட்டுச் சித்திரங்கள் ஒவ்வொரு இதழிலும் வெளியாயின. இவைதாம் தமிழ் எழுத்துலகுக்கும் தமிழ் ஓவியர் / சிற்பிகளுக்கும் இடையிலான முதல் பரிச்சயம், பரஸ்பர உறவின் தொடக்கம். இது இன்று 35 வருடங்களுக்குப் பின் என்னவாக வளர்ந்து பெருகியுள்ளது என்பது, இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அதன் எளிய ஆரம்பங்கள் நடையில் என்பதையும், அவர்களுக்குச் சொல்ல வேண்டும், வேதாள உலகமும், மனோகராவும் பம்மல் சம்பந்த முதலியாரிடமிருந்து தொடங்கியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ந. முத்துசாமி, முன்னால் சிறந்த கதைகள் எழுதியவர் என்பதும் பலருக்குத் தெரியாமக் இருக்கலாம். ந. முத்துசாமிக்கேக் கூட அது மறந்து விட்டதோ என்னவோ. “அப்படியா? அப்படியானால் நல்லதாச்சு” என்று நினைக்கும் சிறுகதைக்காரர்கள் இருக்கக்கூடும். இன்று ந. முத்துசாமி இந்தியா அறிந்த சங்கீத நாடக அகாடமி விருது வாங்கிய, கொலம்பியாவில் தன் புகழ்நாட்டிய, கூத்துப்பட்டறையை உருவாக்கியவர் என்று இந்தியா அறிந்த நாடகாசிரியர். அதன் ஆரம்பம் நடை பத்திரிகையில்தான். நாடையில் அவரது இரண்டு நாடகங்கள் பிரசுரமாகியிருந்தன. முதலாக வந்தது காலம் காலமாக. முதல் தடவையாக நாடகம் என்று தமிழில் சொல்லத் தகுந்ததன் தொடக்கம் காலம் காலமாகவிலிருந்துதான் என்று அன்றும் இன்றும் என் அபிப்ராயம். அத்தொடக்கம் கண்ட மகிழ்ச்சியில் அதை நான் மொழிபெயர்த்து, டெல்லியிலிருந்து வெளியான நாடகத்துக்கேயான Enact என்ற பத்திரிகையில் வெளியிடக் கொடுத்தேன். அது வெளியானது. பின்னர் நடந்தவை சரித்திரம். தமிழில் நாடகத் தொடக்கம் நடை பத்திரிகையில்தான்.
ஞானக்கூத்தன். தன் கவிதைகளை செல்லப்பா ஏற்பதில்லை என்றும் எழுத்துவில் பிரசுரிக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லக் கேட்டதுண்டு. எழுதியுமிருக்கிறாரோ? இருக்கலாம். ஆனால் ஞானக்கூத்தன் கவிதைகள் நடையின் முதல் இதழிலிருந்தே நிறைய பிரசுரமாகியிருக்கின்றன. நடையின் எழுத்து மூலம்தான் அவர் இலக்கிய உலகுக்குத் தெரிய வந்தார் என்று சொல்லவேண்டும். தொடக்கம் நடையில்தான். எழுத்து காலாண்டு இதழாகிய எண் 115 இதழில் செல்லப்பா எழுதுகிறார்: “கவிதைகளில் ஞானக்கூத்தனின் பிரச்னை சிறப்பானது” என்று.
இத்தோடு இன்னொன்றையும் என் கூற்றுக்கு எதிராகச் சொல்லவேண்டும். எழுத்து செல்லப்பாவோடு அதிருப்தி கண்டு அவர் காட்டிய வழியிலேயே பின் கிளை பிரிந்து நடை தொடங்கப்பட்டது. அல்லது அதிருப்தி அடைந்தவர்களின் பத்திரிகையாக நடை இருந்தது – என்று சொன்னேன். க.நா. சுப்பிரமணியமும், ”சி.சு. செல்லப்பா, தன் அச்சிலேயே மற்றவர்களையும் வார்க்கப் பார்க்கிறார். அதிலிருந்து அதிருப்தி கொண்டவர்களால் நடை தொடங்கப்பட்டது” என்று டெல்லி பத்திரிகைகளில் எழுதினார். ஆனால் செல்லப்பா எழுத்து 115-இல் எழுதும்போது, நடை பத்திரிகையை ஆதரவுடனேயே வரவேற்று, அதில் வந்துள்ள ஒவ்வொன்று பற்றியும் உற்சாகமூட்டியே எழுதியிருந்தார்.
இதெல்லாம் அன்றைய சூழல்: நடையின் தோற்றத்திற்கு முன்னும், அதன் ஜீவிய காலத்திலும் நிலவிய போக்குகள்.
எழுத்து நடந்த காலத்தில், க.நா.சு.வும் செல்லப்பாவும் தோற்றுவித்த புதுக்கவிதையையும், விமர்சனத் திருப்பத்தையும் கடுமையாக எதிர்த்த சக்திகளில் முன்னிற்பது அன்றைய தமிழ் முற்போக்கு முகாம். கருத்து வேறுபாடு கொண்டு எதிர்ப்பது பற்றிச் சொல்ல ஏதும் இல்லை. கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டியதுதான். ஆனால் எந்தப் புதிய மாற்றத்தையும் தனது அரசியல் எதிரியாகக் கண்டு வசைபாடுவது முற்றிலும் வேறானது. இதற்கு வலுச்சேர்க்க, முற்போக்குப் பட்டயமும், பண்டிதத்தனமும் ஒருங்கே கொண்ட கைலாசபதியையும் சிவத்தம்பியையும் பெருந்தலைகளாக, இங்குள்ள முற்போக்கு முகாமும் பண்டித உலகமும் தங்கள் பிரச்சாரத்தின் மூலம் கட்டமைக்கத் தொடங்கினார்கள். இதில் அதிகார வேட்கையும், பதவி ஆசையும் கொண்ட கைலாசபதி, மிகக் கேவலமான முறையில், க.நா.சு.வையும் செல்லப்பாவையும் புறந்தள்ளி, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆசை கொண்டு க.நா.சு.வுக்கு சாதிச் சாயம் பூசும் காரியத்தில் இறங்கினார். இலக்கிய சர்ச்சைகளில் சாதிக் குண்டாந்தடியை சுழற்ற ஆரம்பித்ததில் முன்னோடி, கைலாசபதிதான். வேறு யாரும் அன்று இத்தகைய கேவலங்களில் இறங்கவில்லை. இவ்வளவுக்கும் கைலாசபதி வாழ்ந்த வளர்ந்த ஈழத்தில் பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழ எந்தச் சமூகக் காரணமும் கிடையாது. அங்கு நிலவுவது சைவ வேளாள மேலாண்மை. கைலாசபதியின் பிரக்ஞையில் மேலோங்கி இருப்பது, தாழ்த்தப்பட்ட நண்பர் வீட்டுக்கு வந்தால், வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று “நிலவிலே கதைக்கும் முன்னோடி புரட்சியாளர் அவர். இங்கு பார்ப்பன எதிர்ப்பு கோஷம் எழுப்பியது தமிழ் நாட்டில் செலாவணியாகும்” என்ற நோக்கில்.
கைலாசபதியின் முற்போக்கு வறட்டு யாந்தீக வாய்பாடுகள் கொண்டது. அச்சமயத்தில் வெளியான அன்று இங்கு பலருக்கும் மயக்கம் தந்த அவரது ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அதன் போலித்தனத்தையும், சிந்தனை வறட்சியையும், இலக்கிய / கலை உணர்வின்மையையும் விரிவாகவே முன் வைத்தேன். இது நடை பத்திரிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. கைலாசபதி உயிரோடிருந்த வரையில் இதற்கு பதில் அளித்ததில்லை. ஒரு முற்போக்கு அணி திரண்டு, கூட்டுச் செயலாக கோஷிப்பதன் மூலம் எந்த போலியையும் பிரபலப்படுத்திவிட முடியும் என்பதற்கு தமிழ்நாட்டு முற்போக்குகளும் கைலாசபதியும் நல்ல உதாரணங்கள்.
நடை எட்டு இதழ்களே வெளிவந்தன. செல்லப்பாவிடம் அதிருப்தி கண்டு தன் வழி சமைக்க வந்தவர்களுக்கு, செல்லப்பாவின் பிடிவாதமும், மனந்தளரா செயலூக்கமும் இருக்கவில்லை.
க.நா.சு. அடிக்கடி சொல்வார். “எந்த இலக்கியச் சிறுபத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் ஜீவிக்கக் கூடாது. அவ்வளவு காலம்தான் அதன் தீவிரமும் செயலூக்கமும் இருக்கும். புத்துணர்வு இருக்கும். பின் பழகிய இடத்தில் நிலத்தி விடும் ஸ்தாபனமாக மந்தித்துப் போகும்” என்பார்.
நடை நின்ற காரணம் எதுவானாலும், பின்வரும் பத்திரிகைகள், எவ்வழிகளில் எல்லாம் பயணிக்க வேண்டும் என்று வழிகாட்டிவிட்டது. அது நின்றதும் உடனே – ஒரு சில மாதங்கள் இடைவெளிக்குள்ளேயே – கசடதபற தொடங்கியது. நடையில் விட்டது, கசடதபறவில் தொடர்ந்தது. இவையெல்லாம் தமிழ் இலக்கிய/ கலைச்சூழலில் ஒவ்வொரு காலகட்டங்கள், பாதை திருப்பங்கள்.
இன்றைய இலக்கிய / கலைப் பத்திரிகைகள், தம்முடைய இன்றைய அக்கறைகள், குணமாற்றங்கள் – இவற்றிற்கு உந்துசக்தியாக இருந்தவற்றின் ஆரம்பங்களை அறியமாட்டார்கள். அன்றைய கால உணர்வையும் அறிய மாட்டார்கள். இவர்கள் ஏதும், சுயம்புவாக திடீரென அவதரித்த பன்முக ஜோதிப் பிரகாசங்கள் இல்லை. இந்த ஜோதிகளின் ஒருமுக ஆரம்பம் எழுத்து பத்திரிகையில். இன்னும் சில முகங்கள் நடையில். இன்னும் சில தொடர்ந்து மற்றவைகளில்.

நடை இதழ் தொகுப்பு – முன்னுரை
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
முதற் பதிப்பு : 2004
தொகுப்பு: கி. அ. சச்சிதானதம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.