என் ப்ரிய வெ.சா…

Ve.sa- front page
இன்று காலை யதேச்சையாக ஃபேஸ்புக்குக்குள் நுழைந்தால் முதலில் கண்ணிற்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் ப்ரொஃபைல் படமாக வெ.சா இருந்தார். சடாரென்று மனம் ஒரு கணம் துணுக்குற்றது. “கடவுளே, ‘அந்த’ செய்தியாக இருக்கக்கூடாதே” என்று வேண்டிக்கொண்டே பார்த்தேன். ‘அதே’ செய்திதான். இன்று வெ.சா இல்லை. ஒரு நொடி தரையில் கால் பாவவில்லை. வெ.சாவுக்கும் எனக்குமான உறவை வார்த்தைகளில் என்னால் எழுதிப் புரியவைத்துவிடமுடியும் என்று தோன்றவில்லை. என்னாலேயே கூட அதைச் சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ளமுடியுமா என்பது சந்தேகம்தான். இலக்கியம், எழுத்து, கலை, விமர்சனம் இதையெல்லாம் தாண்டி ஒரு ஆத்மார்த்தமான சிநேகம் அவருக்கு என் மீது இருந்தது. அதற்கு நான் தகுதியானவன்தானா என்று தெரியவில்லை. ஆனால் என் மனதில் அவருக்குக் கிட்டத்தட்ட என் தந்தை ஸ்தானத்தைத்தான் வைத்திருந்தேன்; வைத்திருக்கிறேன்.
கசடதபற இதழ்கள், சுந்தர ராமசாமியின் புத்தகங்கள், திலீப்குமாருடனான நேரடி உரையாடல்கள், ’சொல்வனம்’ ரவிசங்கருடனான மின்னஞ்சல்கள் என்று நவீன தமிழ் இலக்கியம் அறிமுகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிகம் அடிபட்ட பெயர் வெங்கட் சாமிநாதன். ‘சரியான சண்டைக்காரர், கோபக்காரர்’ என்றெல்லாம்தான் அந்த அறிமுகங்கள் இருந்தன. படிக்கக் கிடைத்த வெ.சாவின் சில கட்டுரைகளும் அவர் மீது பயமேற்படுத்திய கறாரான விமர்சனக் கட்டுரைகளாகவே இருந்தன. ஒரு புத்தகக் கண்காட்சியில் தொலைவிலிருந்து அவரைப் பார்த்ததுதான் முதல் முறை. அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வரவில்லை.
பிறகு அவர் உறுப்பினராக இருந்த ஒரு மின்னஞ்சல் குழுமத்தில் நானும் எழுத ஆரம்பித்தேன். உண்மையாலுமே நம்மாலும் எழுத முடியும், நாமெடுப்பதும் நல்ல நிழற்படங்கள்தான் என்ற நம்பிக்கை வெ.சாவின் உற்சாகமான மின்னஞ்சல்களுக்குப் பிறகுதான் ஏற்பட்டது. அதுவரை என் மனதிலிருந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைத்து, மிக அன்பான, நகைச்சுவை உணர்வு நிரம்பிய, உற்சாகமான ஒரு வெ.சா அறிமுகமானார். தொடர்ந்து அவருடனான பல மின்னஞ்சல் உரையாடல்களுக்குப் பின் அவரை ரவிசங்கருடன் சேர்ந்து சென்னை மடிப்பாக்கம் வீட்டில் சந்தித்தேன். மின்னஞ்சல்களில் கிடைத்த அதே பிரியமும், நட்பும் நேரிலும் கிடைத்தது – இன்னும் பல மடங்காக.
அதற்குப் பின் பலமுறை தொலைபேசியில் தொடர்ந்து பேச ஆரம்பித்தோம். நான் பழக நேர்ந்த ஆளுமைகளில் படு ரசனையான, குறும்பான ஆசாமிகள் ஒருவர் வெ.சா. அந்தக் கால தில்லி தமிழ் இலக்கிய உலகைக் குறித்து சுவாரசியமாகப் பல விஷயங்கள் சொல்லுவார். குறிப்பாக, தி.ஜானகிராமனைக் குறித்துப் பேசுவதென்றால் பேசும் அவருக்கும் கேட்கும் எனக்கும் அதிவிருப்பம். அவரும், தி.ஜாவும் இன்னபிற நண்பர்களும் காருக்குறிச்சி அருணாசலம், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் இசைத்தட்டுகளின் பின்னணியில் உற்சாகபானத்துடன் பேசியபடி களைகட்டும் கச்சேரிகளைப் பலமுறை வெ.சாவின் வார்த்தைகளில் என் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்.
IMG_2449
 
“வறட்டு ஆளுல்லய்யா ஜானகிராமன். அவர்கிட்ட பேசினேன்னா இலக்கியம் பத்தியோ, எழுத்தாளர்கள் பத்தியோ பேசமுடியாது. சாதாரண மனுஷங்க, குழந்தைங்க, பாட்டிங்க, தூரத்துல ஓடிப்போய் ஒளிஞ்சுக்குற பூனைக்குட்டிங்க, இசைக்கலைஞர்கள் – இவங்களைப் பத்தியெல்லாம்தான் பேசிட்டு இருப்பார். நம்மகிட்ட பேசிட்டே இருப்பார். திடீர்னு பேச்சு நின்னுபோய்டும். ஜன்னலுக்கு வெளியே பாத்து, ‘யோவ் சாமிநாதன், அங்க பாருய்யா அந்த குல்மஹர் மரங்கள் என்ன அழகா இருக்குன்னு’ ஏதோ தியானத்துக்குப் போய்ட்ட மாதிரி இருப்பார்” என்று ஜானகிராமனைக் குறித்துச் சொல்வார் வெ.சா.
கிட்டத்தட்ட அதே மாதிரியான ஆளுமைதான் வெ.சா. என்னிடம் அவர் எழுத்தாளர்கள், இலக்கிய அரசியல்களைக் குறித்துப் பேசியதைக் காட்டிலும் கும்பகோணத்தில் கழித்த அவர் இளமைக்காலங்களையும், அப்போது கேட்க நேர்ந்த தமிழக இசைக்கலைஞர்களையும், தில்லியில் கேட்க நேர்ந்த ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்களையும் குறித்துதான் அதிகம் பேசிக்கொண்டிருப்பார். அக்கால திரையிசைக் கலைஞர்களில் தியாகராஜ பாகவதரைக் காட்டிலும், பி.யூ.சின்னப்பாதான் அவருக்கு அதிகம் விருப்பமான கலைஞர். பி.யூ.சின்னப்பாவின் பாடல்களை ஒரு இசைத்தட்டாக அவருக்குப் பதிந்து கொடுத்தபோது அவர் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. கேசர்பாய் கேர்கரும், படே குலாம் அலிகானும் ஹிந்துஸ்தானி இசையில் அவர் அதிகம் ரசித்த கலைஞர்கள். வெ.சா குறித்து திலீப்குமார் தொகுத்த புத்தக வெளியீட்டு விழாவுக்காக அவரை ரயிலில் சென்னை அழைத்துக்கொண்டு சென்றபோது என் மொபைலில் இருந்த ’ஜாத் கஹான்’ என்ற கேசர்பாய் கேர்கரின் பாடலைக் கிட்டத்தட்ட பத்துமுறை கேட்டுவிட்டார்.
இந்திய சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குநராக கிரீஷ் காசரவளி இருந்தார். லோக்சபா சேனலில் நல்ல இந்தியத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்போதெல்லாம் தவறாமல் எனக்கு அவரிடமிருந்து ஒரு நினைவூட்டல் குறுஞ்செய்தி வந்துவிடும். அவரிடம் நான் பார்த்து வியந்த இன்னொரு அம்சம், அவர் படித்திராத எந்த ஒரு முக்கியமான புத்தகத்தைப் பற்றி நான் குறிப்பிட்டாலும், உடனடியாக ’அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க வேண்டும், அனுப்ப முடியுமா?’ என்பார். புத்தகங்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த உற்சாகம் கடைசிவரை குறையவேயில்லை. அதேபோல அவருக்குப் பிடித்த முக்கியமான புத்தகங்களைக் குறித்துத் தவறாமல் எழுதிவிடவும் செய்வார். அத்தனை வயதுக்கு மேல் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு அதிலும் ஒரு மென்பொருளில் பிரச்சினை வந்தால் அதை நீக்கி இன்னொரு மென்பொருளைப் பயன்படுத்தி எழுதுவதுவரை கற்றுக்கொண்டார். அவர் வயதில் என்னால் அத்தனை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் ஆர்வம் இருந்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே எண்ணிக்கொள்வேன்.
எப்போதுமே உற்சாகமாகப் பேசும் வெ.சாவின் குரலில் தளர்ச்சியை ஒரு சிலமுறைதான் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று கவிஞர் ராஜமார்த்தாண்டன் மறைவின்போது. ‘எனக்குப் பிடிச்சவங்கள்லாம் இப்படி ஒவ்வொருத்தரா போய்ட்டே இருக்காங்க’ என்று ஆற்றாமையோடு சொன்னார். துணைவியாரின் மறைவுக்குப் பின் அவர் பெங்களூரில் மகன் வீட்டுக்குக் குடிபெயர்ந்தபின் முடிந்தபோதெல்லாம் சந்தித்து வந்தேன். ஃபோனில் பேசுவதும் அதிகமானது. சமயங்களில் அவரே ‘யோவ், புதுசா கல்யாணமான மாப்பிள்ளை. பொண்டாட்டியோட பேசாம இப்படி ஒரு கிழத்தோட பேசிண்டு இருந்தா பிரச்சினையாகும். சம்சாரத்தைக் கவனியும்’ என்று கிண்டலாக அதட்டுவார்.
சொல்வனத்தை ஆரம்பித்தபின் தொடர்ந்து சொல்வனத்தில் எழுதுவார். ஏதாவது கட்டுரை அனுப்புவதாகச் சொன்னால் மிகச்சரியாகச் சொன்ன தேதிக்கு எந்த நினைவூட்டலும் இல்லாமல் அனுப்பிவிடுவார். அப்படி அந்தத் தேதியில் அனுப்ப முடியாது போனால் தொலைபேசியில் அதற்காக வருத்தம் தெரிவிப்பார் – அப்படிச் செய்வதற்கு எந்தத் தேவையும் இல்லாதபோதும். அவர் வாழ்நாள் முழுதும் கொண்டாடிய தி.ஜானகிராமனுக்கு சொல்வனத்தில் ஒரு சிறப்பிதழ் கொண்டுவந்து அதை அவருக்கு சமர்ப்பித்தது ஒரு கொடுப்பினை என்றே சொல்லவேண்டும்.
நான் எழுதிய ஒரு கட்டுரையைக் குறித்து ஒரு நபர் மிக அவதூறாக – அதில் நான் குறிப்பிட்ட புத்தகங்களைப் படிக்காமல் வெறுமனே இணையத்தில் கிடைத்த புத்தகப் பகுதிகளை வைத்தே எழுதிவிட்டேன் – என்று எழுதியிருந்தார். என் வாசிப்பையும், ரசனையையுமே கேள்விக்குள்ளாக்கி என்னை ஆழமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சம்பவம் அது. அந்தப் புத்தகத்தைப் படித்து அதைக் குறித்தும், அதில் குறிப்பிட்டப்பட்டிருந்த பல இசைக்கலைஞர்களைக் குறித்தும் வெ.சாவிடம் நான் விரிவாகப் பேசியிருந்திருக்கிறேன். அவரைத் தொலைபேசியில் அழைத்து, அதையெல்லாம் குறிப்பிட்டு, மனவருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு அவர் சொன்னார், ‘எல்லாம் சரிதான்யா. ஆனா இதையெல்லாம் பர்சனலா எடுத்துக்காத. எழுதற ஒருத்தனைப் பார்த்து, இதையெல்லாம் பர்சனலா எடுத்துக்காதேன்னு சொல்றது – அதையும் நான் சொல்றது உனக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனால் அப்படித்தான் இருக்கனும். அப்படி இருந்தாதான் தொடர்ந்து நீ எழுதமுடியும், படிக்கமுடியும். கசப்பில்லாம இருக்கமுடியும். இல்லாட்டி அந்தக் கசப்பு உன் எழுத்தலயும் வரும். நாளைக்கு அந்த ஆளை நேர்ல பாத்தயானா காஃபி வாங்கிக் குடுத்து சிநேகமா நடத்தனும்.’ என்றார். அவருடனான அந்த உரையாடல்தான் என்னை அந்த மன உளைச்சலிலிருந்து விடுவித்தது.
 
இப்போது நினைத்துப் பார்த்தால் என்னிடம் சொன்னதையேதான் அவர் பெரும்பாலும் தன் வாழ்க்கையிலும் கடைபிடித்திருக்கிறார் என்பது புரிகிறது. எத்தனையோ எழுத்தாளர்களின் படைப்புகளை மிகக் கறாராக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்களில் பெரும்பாலாரானோடு தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல நட்பு இருந்திருக்கிறது. வாழ்நாள் பூராவும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் பெரியவர் தி.க.சி அவரைச் சந்திக்க விரும்புகிறார் என்று சுகா மூலம் தெரியவந்ததும் அவரைத் தன் இயலாத உடல்நிலையிலும் இரண்டு வருடங்களுக்கு முன் திருநெல்வேலிக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசிவிட்டுவந்துவிட்டார். நாஞ்சில்நாடன், பாவண்ணன், பாரதிமணி பாட்டையா என யாரோடு நான் பேச நேரும்போது எங்கள் உரையாடலில் பெரும்பாலும் இடம்பெற்றவர் வெ.சாதான். அதிலும் நாஞ்சில்நாடன் அவர்கள், வெ.சா மீது வைத்திருக்கும் பெருமதிப்பை நான் மிக நன்றாக அறிவேன். நாஞ்சிலுடன் நான் அவர் படைப்புகள், பயணங்களைக் குறித்துப் பேசியதைக் காட்டிலும் வெ.சா குறித்து பேசியதுதான் அதிகம்.
என் வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு முக்கியமான விஷயத்தின்போதும் அவரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசிபெற்றுக் கொள்வது எனக்கு ஒரு மிகமுக்கியமான விஷயமாக இருந்தது. அது நடந்துமுடியும் வரை பதற்றமாகவே இருப்பேன். திருமணமானபின் மனைவியோடு சென்று நமஸ்கரித்தேன். மகள் பிறந்தபின் அவளை அழைத்துக் கொண்டு சென்று ஆசிபெற்றேன். ஃபின்லாந்து பயணமும், ஆஸ்திரேலியப் பயணமும் அவரை நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றபின்பே நடந்திருக்கிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயரும் முன் 2014 மே மாதத்தில் குடும்பத்தோடு சந்தித்து நமஸ்கரித்தேன். விடைபெறும்போது வழக்கத்துக்கு மாறாக அவர் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். நேரடியாக முகத்தைப் பார்க்காமல் தோளைத் தொட்டு ‘நாங்கள்லாம் இங்கே இருக்கோம்னு ஞாபகம் வச்சுக்கோய்யா. வந்துண்டு போயிண்டு இரும்’ என்றார். அவர் கண்களைச் சந்திக்காமல்தான் என்னால் விடைபெற முடிந்தது.
நான்கு மாதங்களுக்கு முன் இரண்டாவது குழந்தை பிறந்தபின் எனக்கு நினைவுக்கு வந்த முதல் சில முகங்களில் ஒன்று வெ.சாவுடையது. ஃபோனில் அழைத்து ’உங்களுக்கு ஒரு பேரன் பொறந்திருக்கான் சார். டிசம்பர்ல இந்தியா வரும்போது பையனோடு வந்து உங்களைப் பாக்கறேன்’ என்றேன். இனி அந்த டிசம்பர் வரவே போவதில்லை.
உண்மையில் இதை எழுதும் மனநிலை இன்று எனக்கில்லை. ஆனால் விடாப்பிடியாக, கண்ணீர் திரையிட எழுதிவிட்டேன். ஏனென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரையைத் தவிர, கிட்டத்தட்ட கடந்த மூன்று நான்கு வருடங்களாக நான் எழுதவேயில்லை. ஒவ்வொரு முறை தொலைபேசியில் பேசும்போதும், ‘என்னய்யா, நீர் ரொம்ப எழுதி நாளாச்சே? உம்ம எழுத்த ஒன்னயுமே காங்கலியே? எழுதறத விட்டுறாதும்யா. விடாம எழுதும். எழுத எதுதத்தான் எழுத்து. என்ன எழுதுவீரா? பாத்துண்டே இருப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். கடைசியாகப் பேசியபோதும் சொன்னார். இந்தக் கட்டுரை அந்த வெ.சாவுக்காக.
ve.sa- text body-first

5 Replies to “என் ப்ரிய வெ.சா…”

  1. நேர்த்தியான அஞ்சலி கட்டுரை. இவ்வளவு பெரிய மனிதர் இருக்கிற குழுமத்தில் ஒருவனாக இருந்தமைக்கு பெருமைப்படுகிறேன். உண்மை, இனி அந்த டிசம்பர் வரவே போவதில்லை.

  2. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு சேது. முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அதுபோக நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் வெ.சா. அவற்றில் கணிசமானவற்றை நாம் படித்திருக்கிறோம். ஆனாலும் இந்தத் தருணத்தில் மீண்டும் மீண்டும் நெஞ்சில் எழுதுவது உற்சாகம் ததும்பும் அந்த முகமும் சொற்களும் சினேகமும் தான். நேற்று வெ.சாவின் இறுதிச் சடங்குக்காக மின் மயானத்தில் நின்று கொண்டிருக்கும் போது, மிகுந்த பரிவுடனும் நட்புடனும் தோளில் கைபோட்டு நடக்கும் அவரது கரத்தின் ஸ்பரிசம் தான் நினைவில் எழுந்தது.
    என் நினைவு சரியென்றால், 2007ம் வருடம் நாமிருவரும் பெங்களூரில் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தது தான் உங்களுக்கும் முதல் சந்திப்பு என்று சொன்னதாக ஞாபகம். மடிப்பாக்கம் சந்திப்பு அனேகமாக அதற்குப் பிந்தையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  3. உங்களது கட்டுரை ஒரு இலக்கியகர்த்தாவுக்கு ஆழமான அஞ்சலி செலுத்துகிறது. ஒரு சிறந்த இலக்கிய-கலை விமரிசகரை தமிழ் மொழி இழந்துவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.