குளக்கரை

இந்த இதழில் பல குறிப்புகளை யூரோஸீன் என்கிற வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறோம். பல யூரோப்பிய நாடுகளின் கருத்து வளம் நிறைந்த பத்திரிகைகளின் கூட்டுச் சேமிப்பாக இந்தத் தளம் இயங்குகிறது. வாடிக்கையாக இந்தியரும், தமிழரும் அனேகமாக இங்கிலிஷ் பேசும் நாடுகளின் பத்திரிகைகளையோ, அல்லது அதிக பட்சமாக ஜெர்மன், ஃப்ரெஞ்சு, சில நேரம் ரஷ்யப் பத்திரிகைகளை மட்டும் பார்த்துப் பழகி இருப்போம். சமீப பத்தாண்டுகளாகவோ என்னவோ நமக்கு வேறு சிறு ஜனத்தொகை கொண்ட நாடுகளிலும் தமிழர்களும், இந்தியர்களும் புழங்குவதால் அந்நாட்டுப் பத்திரிகைகள், சினிமா, வர்த்தகம், அரசியல், பண்பாடு ஆகியனவை பற்றி விவரமும், கருத்துகளும் தெரியத் துவங்கி உள்ளன. இந்தப் பத்திரிகை அத்தகைய நாடுகளின் பல மொழிகளைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாத போதும் அவற்றின் ஆழ்ந்த சிந்தனையோட்டம் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு ஒரு அளவு காட்ட உதவும் தளம்.

நம்மில் பலரிடமும், யூரோப்  பெரும் வளப்பமான ஒரு நிலப்பகுதி, பொருளாதாரம், தொழில்துறை, கலைகள், இசை , தத்துவம், அறிவியல் என்று எதைத் தொட்டாலும் இந்தியாவை விடப் பன்மடங்கு மேம்பட்ட நாடுகள் கொண்டது அது, என்றுதான் ஒரு கருத்து பரவலாக ஊறி இருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் ஓரளவுதான் உண்மை. அதாவது இன்றளவில் யூரோப்பின் பெருமளவு பகுதிகள் நல்ல வளம் பெற்ற பகுதிகளாக இருக்கின்றன.

ஆனால் இந்த வளத்தின் பின்னே உள்ள வரலாற்றுப் பின்னணி அத்தனை வளமானதோ நன்மை நிறைந்ததோ இல்லை. இதைப் பற்றிக் கடந்த சில பத்தாண்டுகளில்தான் ஏராளமான புத்தகங்கள், கட்டுரைகள் எல்லாம் நல்ல விமர்சனப் பார்வையோடு வெளியாகி இருக்கின்றன. இவை அதிகம் பொது மக்களிடையே பரவாததற்கு ஒரு காரணம், இவை பெருமளவும் மேலைப் பல்கலை வளாகங்களில் போதனைக்குப் பயன்படும் புத்தகங்களைப் போல எழுதப்பட்டிருக்கின்றன, அல்லது வழக்கமான இடதுசாரிப் புலம்பலாக எழுதப்பட்டுள்ளன, இல்லை உளறலாக உலகப் புரட்சி வந்து உலக மக்களுக்கு விடுதலை கிட்டும் என்ற கனவுக் கொப்புள கோஷங்களால் நிரப்பப்படும் அரசியல் பிரச்சாரக் கையேடுகளாக இருக்கின்றன. யூரோஸீன் போன்ற தளங்கள் மேற்படி கருத்தியல் பிரச்சாரங்களைத் துறந்து விட்டதோடு, ஆய்வுகளால் தகவல்களைச் சோதித்த பின் எழுதப்படும், ஓரளவு நம்பகத்தனம் கூடிய பல பல்கலை வளாகப் புத்தகங்களை நமக்குச் சாறு பிழிந்து கொடுக்கும் வேலையைச் செய்வதால் இந்தத் தளத்திலிருந்து தற்கால யூரோப்பின் நன்மை தீமைகள்  நமக்குப் புலப்படுகின்றன. தவிர அவை பல பக்கங்களிலிருந்து தொடர்ந்து சோதிக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு, உரையாடல்கள் வழியேயும் எழுதப்படுவதால் பொது மக்கள் அணுகும் வகையில் உள்ளன.

சில உதாரணங்களாக, சமீபத்து யூரோஸீன் இதழ்களிலிருந்து சில குறிப்புகளைக் கீழே கொடுத்திருக்கிறோம்.


[stextbox id=”info” caption=”மக்கள் மொழியில் காக்கப்பட்ட தேசியங்கள்- ஃபின்லாந்து, எஸ்டோனியா”]

oksan

இரண்டு நாடுகளைப் பற்றிய கட்டுரை இது. இதில் எஸ்டோனியா, ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் சில நூற்றாண்டு வரலாறும், பண்பாடும், மொழிகளையும் பற்றிய சுருக்க வரைவாக இந்தக் கட்டுரை உள்ளது. இரண்டு நாடுகளும் ஒரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்த இரு மொழிகளைக் கொண்டவை, அந்த மொழிக் குடும்பத்தில் இன்று மூன்று மொழிகளே நன்கு வளம் பெற்றவையாக இலக்கியமும், நாட்டு மொழியாகப் புழங்கும் வலுவும் கொண்டு உள்ளன என்கிறது கட்டுரை. அந்த மூன்று நாடுகள்- எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஹங்கெரி. அந்த மொழிக் குடும்பத்தின் பெயர் ஃபின்னொ-யூக்ரிக்.

இந்த மூன்று நாடுகள்தாம் ரஷ்யாவின் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையைத் தாண்டி தம் மொழியைக் காப்பாற்றி இன்னும் வளத்தோடு உலவச் செய்திருக்கின்றன.

ஃபின்லாந்தில் சோவியத் பிரச்சாரம் எப்படியெல்லாம் மக்களை ஒடுக்க முயன்றது என்பதைப் பற்றியும் இன்னும் கூட அந்தக் கால கட்டத்தின் சிறுமைகளைப் பேசத் தயக்கம் இருக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

[இந்திய ஸ்டாலினியர்கள் வழக்கம்போல ஸ்டாலினிய ரஷ்யாவில் சிறுபான்மை மொழிகள் வளர்ந்தன, ரஷ்யர்கள் அம்மொழிகளை ஊக்குவித்தனர் என்று பெரும் புரட்டலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இந்திய இடதுசாரிகளின் புத்தி வறட்சியை இது சித்திரிக்கிறது என்று நோக்குவதை விட அவர்களின் புத்தி இன்னும் யூரோப்பிய மாயாஜாலத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது, இன்னும் ஒரு நூற்றாண்டுக்குக் கூட அவர்களால் உண்மையைப் பேச முடியாது என்று விட்டு விட வேண்டியதுதான்.] 🙂

இந்த மொழிக் குடும்பத்தில், குறிப்பாக ஃபின்னிஷ் மொழி நிறையவே வளத்துடனும் வலுவுடனும் புழங்குகிறதாம். மேலும் நிறைய அருமையான தகவல்கள் இந்தக் கட்டுரையில் கிட்டுகின்றன. காட்டாக, 19 ஆம் நூற்றாண்டில் நடந்த போரில் ஸ்வீடன் தன் கிழக்குப் பகுதிகளை ரஷ்யப் பேரரசிடம் இழக்கவே, ரஷ்யா ஃபின்லாந்தைத் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தது. அப்போது ரஷ்ய அடக்கு முறையைத் தாண்டி ஃபின்னிஷ் மொழி வளரக் காரணமான ஒரு கவிஞர் யூவான் லூட்விக் ரூனபாரி என்பவர். இவர் ஃபின்னிஷ் தேசியத்துக்குப் பெரிய தூண்டுதலாக இருந்தவர். இவருடைய புத்தகமான ‘தி டேல்ஸ் ஆஃப் என்ஸன் ஸ்டோல்’ என்பது பின்னாளில் ஃபின்னிஷ் தேசிய கீதமாக ஆன கவிதை ஒன்றைக் கொண்டிருந்தது.ஆனால் இவருடைய பெயர் ஸ்வீடிஷ் மொழிப் பெயர். இன்றளவும் ஃபின்னிஷ் மக்கள் இவரது பெயரை போலி ஸ்வீடிஷ் உச்சரிப்பாலேயே அழைக்கின்றனர் என்று கட்டுரை சொல்கிறது.

எஸ்டோனிய மக்கள் இன்னும் சோவியத் காலத்தின் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட பண்பாட்டின் வேதனைகளை அனுபவிக்கின்றனர். புடினிய ரஷ்யா இன்னமும் எஸ்டோனியரை அடக்கவே முயல்கிறது. ஃபின்லாந்திலும் இன்னும் ரஷ்ய அடிவருடிகள் நிறையவே அதிகாரத்துடன் உலவுகின்றனர் என்பதை வேதனையுடன் இந்தக் கட்டுரையாசிரியர் பதிவு செய்கிறார். இன்றைய ரஷ்ய தேசிய வாதிகள், மொத்த யூரோப்பையே ரஷ்யாவின் பாதிப்புக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றனர் என்பதையும் சுட்டுகிறார். இதற்கு எதிராகச் செயல்படும் ஒரு சக்தியாக, தொடர்ந்து மெலிந்து, நலிந்து வரும் ரஷ்ய ஜனத்தொகை இந்த ஏகாதிபத்தியக் கனவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்பதை நாம் கருதலாம்.

காலனியம் என்பது எத்தனை காலம் தன் சுவடுகளை ஆளப்பட்டு விடுபட்ட பண்பாட்டில் விட்டுச் செல்கிறது, அதைத் தாண்டி புதிதாக சுதந்திரம் பெற்ற மக்கள் தம் பண்பாட்டை வளமாக வைத்திருக்க எத்தனை தூரம் சுய உணர்வுடன் செயல்பட வேண்டும், அன்னிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளை எத்தனை கவனமாக உதறித் தள்ள வேண்டும் என்பதையும் கட்டுரை சுட்டுகிறது.

படித்துப் பார்க்க இங்கே செல்லவும்.
http://www.eurozine.com/articles/2015-06-19-oksanen-en.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”சோவியத் ஏகாதிபத்தியம், யூரோப்பிய தேசியங்கள்- எதிரிடைகள்”]

sienkiewicz_power_468w

இத்தனை சிக்கலான ஒரு அரசியல் கருத்தியல் முடிச்சை எப்படி அவிழ்ப்பது? ஒரு கோணத்தில் உலக நாகரீகங்கள் எல்லாமே ஏகாதிபத்திய/ அடக்குமுறை முயற்சிகளில் துவங்கின என்றுதானே நாம் கருத முடியும்? அரசு என்பதே வன்முறை என்று வாதிடுவது அதிபுத்திசாலித்தனம். அது என்ன மறக்கிறது, மறைக்கிறது என்றால் எந்தத் தனிமனிதரும் சுலபமாகவே எல்லை விஸ்திகரிப்பு, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை ஆகியனவற்றைத் துவங்க முடியும்- அரசு என்பது இல்லாத நிலையில் இந்த முடியும் என்பது வெறும் சாத்தியக் கூறாக இல்லாமல், நடக்கவே செய்யும். பின் நடுவர் இல்லாத விவாத மேடைகள் வெறும் கூச்சலில் முடிவது போல பெரும் கைகலப்பைத் தடுக்க ஒரு இடை நிலைச் சக்தி இல்லாத அரசியல் களம், அதிகார இழுபறியாகவே நிரந்தரமாக அமையும்.

இந்த பேட்டியில் பல உருப்படியான கருத்துகள் சர்ச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சோவியத் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் இயல்பும், போலந்தை அது அடக்கி ஆண்ட முறைக்கும், ஜெர்மனி போலந்தை அடக்கி ஆண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகள், சோவியத் ரஷ்யாவால் ஆளப்பட்ட போலந்தில், ரஷ்யா பயிற்றுவித்த போலிஷ் மேலாளர்களின் மனோபாவத்துக்கும், ரஷ்யப் பிடியிலிருந்து போலந்தை விடுவித்த சுதந்திர இயக்கத்துக்கு அடித்தளமாக இருந்த தொழிலாளர் இயக்கக் கட்சியான சாலிடாரிடி கட்சியின் அரசியலாளர்களின் மனோபாவத்துக்கும் இடையே இருந்த எக்கச்சக்கமான இடைவெளி என்று பல இங்கு கருதப்பட்டுப் பேசப்படுகின்றன. சற்றே உற்று நோக்கினால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயிற்றுவித்த மேலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் சுதந்திர இயக்கத்தை நடத்திய அரசியலாளர்கள் பதவிக்கு வந்த போது எத்தனை பத்தாண்டுகள் ஆட்சியை நடத்துவதில் இடையூறுகளை நுழைத்தனர் என்பதை போலிஷ் மக்களின் தற்கால அனுபவங்களோடு ஒப்பிட்டு நாம் பார்க்க முடியும் என்பது புலனாகும்.

http://www.eurozine.com/articles/2015-07-03-sienkiewicz-en.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”மனித உரிமை நிலைமை அறிக்கை என்னும் அமெரிக்க அரசியல் நாடகம்“]

NEWARK, NJ - APRIL 01: Sen. Robert Menendez (D-NJ) speaks at a press conference on April 1, 2015 in Newark, New Jersey. According to reports, Menendez has been indicted on federal corruption charges of conspiracy to commit bribery and wire fraud. (Photo by Kena Betancur/Getty Images)

அமெரிக்க அரசியல் பல ஜனநாயக நாடுகளின் அரசியல் போலவே நிறைய அடுக்குகளும், சதுப்புகளும், புதைமணல் குழிகளும், கொடுமிருகங்களும் நிறைந்த களம். அதிபர் ஓபாமா எந்த சாரி என்று சொல்ல முடியாத ஒரு சாரியைச் சார்ந்தவர். பண்பாட்டு அரசியலில் அவர் இடது போலச் சில நேரம் தோன்றுவார், திடீரென்று பல்டி அடித்து இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் சரணடைந்து விடுவார். ஒரு புறம் இஸ்லாமியப் பயங்கர வாதிகளில் சிலரைக் கொல்ல தானியங்கி வானூர்திகளை அனுப்பிக் குண்டு வீசுவார், இன்னொரு புறம் உலகத்தில் வஹ்ஹாபியம் என்ற புற்று நோயை வளர்க்கும் சௌதி அரேபியாவோடு ஒட்டிக் குலாவுவார். விசித்திரப் பிறவி.

இவர் ஜனநாயகக் கட்சி என்பதன் ஒரு தலைவராகக் கருதப்படுகிறார், ஆனால் இன்று பெருவாரி ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தினர் இவரை நம்புவது இல்லை. சமீபத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் (செனட் என்பது அமெரிக்கப் பெயர்ச்சொல்) ராபர்ட் மெனென்டெஸ் என்பவர் அமெரிக்க அதிபரின் அலுவலகம் அமெரிக்க மனித உரிமைக் கண்காணிப்பு மையத்தின் வருடாந்திர அறிவிப்பில் இடையீடு செய்து அதை அரசியலாக்குகிறது என்று விமர்சித்திருக்கிறார். இதை விட கேலிக் கூத்தான ஒரு விமர்சனம் ஏதும் இருக்குமா என்பது ஐயமே. ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திரம் கிட்டுவதற்காகப் போராடிய பெருந்தகை என்று இந்திய இடது சாரிகள் பெரும் பொய்யைச் சொல்வது போன்ற ஒரு வருணனை, அமெரிக்க மனித உரிமை அறிக்கை என்பது அரசியலில்லாத நடுநிலை அறிக்கை என்று கருதுவது.

அந்த அறிக்கை தொடர்ந்து இந்தியா போன்ற சில நாடுகளைக் குறி வைத்துத் தாக்கும் அறிக்கை, ஆனால் அமெரிக்க அரசுக்கு ஆதரவான பல நாடுகளைப் பற்றி அதில் எதுவும் இராது. ஏன் அமெரிக்காவின் பல மாநில அரசுகளின் அத்து மீறல்கள் பற்றியும் அதில் ஏதும் இராது. சென்ற ஓராண்டில் மட்டும் சுமார் 12000 பேர் அமெரிக்க காவல் துறையினரால் அமெரிக்காவுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மனித உரிமை மீறல் பற்றி இந்த அறிக்கை பேசுமா? இதைத்தான் மெனென்டஸ் கேட்பாரா என்றால் …. அத்தனை நகைச்சுவை உணர்வு நமக்கு இருக்கக் கூடாது என்பது பதிலாக இருக்கும். அல்லது அத்தனை ஏமாளிகளா நாம் என்று கேட்பார்களோ என்னவோ.

இந்த விமர்சனத்தில் நாயகமாக இருக்கும் நாடு மலேசியா. மலேசியாவில் முஸ்லிம் அல்லாதார் எத்தனை விதங்களில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தமிழக முற்போக்குகள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் உலக அரங்கில் அந்தக் கொடுமைகள் அவ்வப்போது கவனிக்கப்பட்டுதான் வருகின்றன. மதச் சிறுபான்மை என்றில்லை, இனச் சிறுபான்மையினரும் தொடர்ந்து உரிமை பறிப்புகளைச் சந்திக்கின்றனர் என்று செய்திகள் சுட்டுகின்றன. மெனென்டெஸ் இந்த விஷயத்தைச் சுட்டிச் சொல்கிறார், அமெரிக்க அதிபர் அலுவலகம், அமெரிக்க மனித உரிமை கண்காணிப்பு அறிக்கையில் மலேசியாவைக் கண்டு கொள்ளாமல் இருக்கும்படிச் சொல்வது ஏற்காதது என்கிறார். ஏன்?

மலேசியாவில் நவீன கால அடிமை முறை பரவலாக உள்ளது என்பது அமெரிக்க அமைப்பின் தகவல். மலேசியாவில் பாலுறவு அடிமைகளாகப் பெண்கள், ஆண்கள், சிறுபிராயத்தினர் ஏராளமாக மிகத் தாழ்மையான நிலையில் உள்ளதாக அமெரிக்க பன்னாட்டு உறவு இலாக்கா சொல்கிறது. மூன்றாம் நிலையில் உள்ள நாடு என்று மலேசியா கருதப்படுகிறது. இந்த மூன்றாம் நிலை என்பது நாடுகளிடையே ஒப்பீட்டில் மிக மோசமான நிலையைக் கொண்ட நாடு என்றாகும். இந்தத் தளத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு மலேசியாவை நகர்த்த அமெரிக்க அதிபர் அலுவலகம் முயன்று வருகிறது. இதே கால கட்டத்தில் மலேசியாவில் நிலைமை மேன்மேலும் மோசமடைந்து வருகிறது என்பது அமெரிக்க அரசின் பிற அமைப்புகளின் கருத்து.

இப்படி இருக்கையில் அமெரிக்க அதிபரலுவலகம் ஏன் மலேசியாவுக்கு மேலான நாடு என்று அங்கீகாரம் கொடுக்க முயல்கிறது என்றால், பஸிஃபிக் கடல் எல்லைப் பகுதி நாடுகளிடையே ஒரு பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்க அதிபர் முயன்று வருகிறார். மூன்றாம் நிலையில் உள்ள நாடுகளோடு இப்படி வர்த்தக உறவு கொள்ள தற்போதைய அமெரிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதனால் கள நிலை எப்படி இருந்தாலும் மலேசியாவை மாற்றிய நிலையில் பொருத்தி விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அழைக்க அமெரிக்க அதிபரலுவலகத்தின் திட்டம். இறுதிக் கணக்கில் அமெரிக்க அரசுக்கு வியாபாரம் ஒன்றுதான் முக்கியம். அதற்காக என்ன நெறிகளையும் அந்த அரசு கை விட்டு விடும் என்பதற்கு இது ஒரு நிரூபணம். அடுத்த முறை ஒபாமா இந்தியாவுக்கு தர்மம் குறித்துப் போதனை செய்ய முயலும்போது முதுகெலும்பு இருந்தால் இந்திய அரசு இந்த மாதிரி அமெரிக்க அதிபரலுவலகம் ‘மனித உரிமை’ அறிக்கைகளை அரசியலாக்குவதைச் சுட்டி முதலில் தம் நாட்டைச் சுத்தப்படுத்தி விட்டுப் பிறகு பிற நாடுகளுக்குப் புத்தி சொல்ல அவர் வரலாம் என்று ‘அறிவுறுத்தலாம்.’

http://www.huffingtonpost.com/2015/07/10/malaysia-human-trafficking_n_7771652.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”கிரேக்க நாட்டின் கடன் பிரச்சனை”]

greeks

கிரேக்க நாட்டின் கடன் பிரச்சினைகள் பற்றி இந்திய செய்தித்தாள்களில் நிறைய வெளியாகி இருக்கிறது. பொதுவாக அவை எல்லாம் கிரேக்க மக்களுக்கு ஆதரவாகவும், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற ஓரளவு பணக்கார நாடுகளைப் பழி சொல்லியும் வெளியாகிய செய்திகளாக இருக்கின்றன. கிரேக்கம் இந்தியா அளவு ஏழை நாடாகக் கருதப்படுவதில்லை, வளர்ந்து விட்ட யூரோப்பின் பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது என்றாலும், யூரோப்பில் தேங்கிய பகுதிகளாகக் கருதப்படும் நாடுகளில் ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. தேக்கமுற்ற யூரோப்பியப் பகுதிகள் கூட இந்தியாவை விட வளப்பமானவை என்பதை நாம் நன்கு உணர்வதில்லை.

காலனியத்தால் வீழ்ந்த இந்தியருக்குத் தம் வீழ்ச்சி என்ன அளவு, எத்தனை தீவிரம் என்பது குறித்து இன்னமும் விழிப்புணர்வு எழவில்லை. நேராக 21 ஆம் நூற்றாண்டுக்குத் தாம் பயணித்து விட்டதான மிதப்பு நம்மிடம் பரவி இருக்கிறது.

கிரேக்கத்தின் பிரச்சினைகளைச் சற்று உற்று நோக்கினால் அவை நம் நாட்டில் பரவலாக உள்ள பல பிரச்சினைகளைப் போலவே உள்ளமை உடனே புலப்படும். 2010 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் துணைப் பிரதமர் ஒருவர் ஒரு பேட்டியில் தன் நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி விளக்கும்போது, ஒரு கேள்விக்குப் பதில் சொல்கையில், ‘நாங்கள் எல்லாரும் சேர்ந்து தின்று தீர்த்து விட்டோம்.’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னாராம். சிலர் மட்டும் நாட்டைக் கொள்ளை அடிக்கவில்லை, எல்லாரும் கொள்ளையில் பங்கெடுத்தனர் என்பது அவருடைய குறிப்பு.

ஜேம்ஸ் ஆங்கிலோஸ் என்ற கிரேக்க-அமெரிக்கரின் புத்தகம் ஒன்று இதைப் பற்றி விரிவாக அலசுகிறது என்று கட்டுரை சொல்கிறது. யூரோப்பிய கமிஷன் ஒன்றின் கண்டு பிடிப்புப்படி, நுகர்வு வரி என்பது கிரேக்கத்தில் அரசால் அனேகமாக வசூல் செய்யப்படுவதே இல்லை. 28000 மிலியன் யூரோக்கள் வருடந்தோறும் வசூலிக்கப்படாமல் கை விடப்படும் வரித்தொகை என்பது அந்தக் கமிஷனின் கருத்து. இதைத் தவிர பொய்யான தகவல்கள் கொடுத்து ஓய்வூதியம் பெறுவோரும், அரசு இறந்தவர்களுக்குக் கூட உதவித் தொகை கொடுப்பதும், பணக்காரர்களின் வீடுகளில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களுக்குக் கூட வரி வசூலிக்காமல் அரசு இருப்பதும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றார் தம் வருமானத்தை மிகக் குறைவாகக் காட்டுவதும் என்று பரவலான ஊழலும் ஏமாற்றுதலும் உள்ளதைக் காட்டுகிறது. அரசு அத்தனை தூரம் செயல் திறன் இன்றி இருப்பதோடு, மக்களும் மிக முனைந்து அரசை ஏமாற்றுவதையே சாதாரணப் பழக்கமாக வைத்திருக்கின்றனர்.

கிரேக்கத்தின் பிரச்சினை ஒரு பக்கத்தினரைக் குற்றம் சொல்வதால் மட்டும் தீராது என்கிறாராம் ஆங்கிலோஸ். மக்களின் ஏமாற்றும் பழக்கம் ஒரு புறம் இருக்கையில் இன்னொரு புறம் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடிகளும் பிரச்சினையை ஆழப்படுத்துகின்றன என்கிறார்.
ஊழல் கிரேக்கத்தில் பரவலாக இருக்கக் காரணம் என்னவென்று யோசிக்கும் ஆங்கிலோஸ், கிரேக்கம் ஆட்டமான் அரசின் (துருக்கிய) ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்ட போது மக்கள் துருக்கி சுல்தானின் ஆட்சியில் அபரிமிதமாக விதிக்கப்பட்ட வரிகளைக் கொடுக்காமல் ஏமாற்றுவதை ஒரு பண்பாடாக, அரசியல் எதிர்ப்பாக ஆக்கிக் கொண்டிருந்தனர், அதே பழக்கம் இன்னும் தொடர்கிறது. அரசு என்பதை ஏமாற்றுவது ஒரு ஏற்கப்பட்ட பண்பாடு இன்று என்று சுட்டுகிறார்.

[இதை இந்தியாவுக்கும் நாம் பொருத்திப் பார்க்கலாம்.]

அன்று துருக்கியின் சுல்தான்களை எதிர்ப்பதற்கு கிரேக்கர்கள் கடைப்பிடித்த சில வழிமுறைகள், பிற்காலத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனியின் கீழ் கிரேக்கம் வீழ்ந்த போது தொடர்ந்தன. இதன் விளைவாகவே இன்றளவும் அன்னியக் கடன் என்பதை ஏகாதிபத்தியச் சூழ்ச்சி என்று சித்திரிப்பது கிரேக்கருக்கு ஏற்கப்பட்ட அரசியல் கருத்தியலாக உள்ளது என்கிறாராம் ஆங்கிலோஸ்.

கிரேக்கரில் சிலருக்காவது தம் நாட்டின், மக்களின் பிரச்சினைகள் அன்னியரைப் பழி சாட்டுவதால் தீராது என்று புரிந்திருக்கிறது. ஒரு கிரேக்கக் கேலிச் சித்திரம் சொல்வது இது- ‘உலகுக்கு நாம் ஒளி கொடுத்தோம், நமக்கு இருட்டை வைத்துக் கொண்டோம்’.

இந்தக் கருத்து இந்தியாவுக்கு எத்தனை தூரம் பொருந்தும்? நம்மிடமும் இப்படிச் சில கருத்துகள் உலவுகின்றன இல்லையா? ஒரு தமிழ்ப் புதுக்கவிதை நினைவுக்கு வரலாம்.

இந்திய சுதந்திரம் குறித்த கவிதை அது. ‘இரவிலே வாங்கினோம், விடியவே இல்லை!’

http://www.thedailybeast.com/articles/2015/07/03/how-the-greeks-ate-their-way-to-ruin.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.