அளவாய் வேண்டுதல்

worship

ஒரு இருவழிப்பாதையில் நின்று கொண்டிருக்கும் போது , ஒரு பெண் எந்த பாதையில் போவது என தடுமாறினாள். சற்றே பக்கத்தில் இருக்கும் என்னை, அவள் பார்க்கலாமென்று முகத்தை தூக்கும் போது, நானே கேட்டுவிட்டேன் ‘எங்கே போகவேண்டும்’ என்று. கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் பதில் வருமென்று நினைத்து ஏமாந்தபோது, பின்னாடி இருந்து இன்னொரு பெண் குரல் சொல்லை முன்னெடுத்தது ‘இந்த வழி தான்’, பின் வருபவள் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு முன் செல்பவளுடன் சேர்ந்துகொண்டாள்.
இருவரும் இந்த வருடம் பள்ளிப்படிப்பை முடித்த பால் முகங்கள். ஏதோ சில தாள்களும் ஆளுக்கொரு கையில் அளவுகோலும் இருந்தது. அவர்கள் செல்லும் பாதையே என் ஊருக்கும் வழி. வழியெல்லாம் ஒரே புழுக்கோலம். அன்று பெய்த நல்ல கோடைமழையில் மண்ணிலியிருந்து உயிர்பெற்று வந்த மண்புழுக்கள் தான் அவைகள். தார் சாலையை இருபுறமும் கடக்க முயன்று, வரும் போகும் வண்டிகளில் அடிபட்டு அறுத்த நூடுல்ஸ் போல் சின்னாபின்னமாகி கிடந்தன. இந்த கோலத்தை சகிக்கமுடியாமல் தாண்டித் தாண்டி செல்கையில் அவர்கள் பக்கத்திற்கே சென்றுவிட்டேன்.
அவர்கள் இந்த புழுக்களை தாண்டாமல் சரியாக அடியெடுத்து வைத்து நடப்பதையும் பேசுவதையும் தொடர்ந்தே செய்தார்கள். நானும் அவ்வாறே செய்து கொண்டு பேச்சுக்கொடுத்தேன். “யாரும்மா, நீங்க?இங்கிட்டு என்ன விசயமா போறீங்க?” “சின்ன வேலையா போறோம்” என்றாள் சுஜிதா. ஆம் என ஆமோதித்தாள் ரேஷ்மா. எப்படியும் பேரை சொல்லமாட்டார்கள் என்று நானே அவர்களுக்கு பேர் வைத்துக்கொண்டேன். இருவரும் சிறு சிறு முணுமுணுப்புடனும், ஏக்கத்துடனும் பேசிக்கொண்டே சென்றார்கள். “இன்னைக்கும் நல்ல மழை , கம்மாயெல்லாம் நிறைஞ்சிருச்சு” என்றேன். ஆம் அல்லது ஆமா என்ற பதிலே காணோம். தொடர்ந்தேன், “மழங்காட்டுலயும் நல்ல மழை, இன்னும் ரெண்டு மூணு நாள் இந்த மாதிரியே பேய்ஞ்சா நம்ம ஊர் தெப்பக்குளமும் நிறைஞ்சிரும்.” பதில் வராது என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு முன்னோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.
மக்கள் நடமாட்டம் கொஞ்சம் கூடியிருந்தது. மழை சிறிது நேரம் முன்புதான் நின்றிருந்ததால், ஆள் வரத்தொடங்கியிருந்தார்கள். கோடைமழை செடி கொடிகளை பச்சை பசேல் என ஆக்கியிருந்தது. சிறிது நடைக்குப்பின் “அளவு ஆத்தா கோயிலுக்கு எப்படி போறதுண்ணா?” என்று சுஜிதா கேட்ட போது தான் எனக்கு முன் விரியும் இரண்டு சாலையை பார்த்தேன். சரியான சாலையை நோக்கி கை காட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். ‘ஏதோ வேண்டுதல் போல’ என்றெண்ணிக்கொண்டு கொஞ்சம் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிக்கொண்டேன்.
சிறுநீர் கழித்துவிட்டு திரும்பி வரும்போது அவர்கள் சரியாக அளவு கோயிலை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். கொஞ்சம் முன்னேறியபோது ரேஷ்மா திரும்பிப்பார்த்தாள். “ஆமா அது தான் அளவு ஆத்தா கோயில்,” என்றேன். அவர்கள் சாமியை நன்றாக கும்பிட்டுவிட்டு சிறுதாளில் வேண்டுதலை எழுதி, அளவுகோல் மீது அதை சுற்றி சிறிய நூலை கொண்டு இரண்டையும் சேர்த்து புளியமரத்தின் கொப்பில் கட்டி ஆளுக்கொன்று தொங்கவிட்டார்கள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வந்த வழி சென்றார்கள். நான் படிக்கும்போதெல்லாம், ஏதாவது கோவிலுக்குள் சென்று சாமி பின்னாடி இருக்கும் கருப்படித்த சுவற்றில் தேவையான மதிப்பெண்களை எழுதிவிட்டு வருவார்கள். ஆனால் அவர்கள் எழுதிய மதிப்பெண் வராது என்பது வேறு. இப்போது அங்கெல்லாம் அந்த சாமிகளுக்குப் பின் பளபளக்கும் டைல்ஸ்,கிரானைட் கற்களை பதித்துவிட்டார்கள் “யாரும் இந்த சுவற்றின் மேல் எழுதக்கூடாது” எனவும் ஒற்றை வாக்கியத்துடன் முடித்துவிட்டார்கள். இந்த வேண்டுதல்கள் மட்டும் காற்றில் ஆடியபடியே உயிரோட்டமாக இருக்கின்றன.
தொங்கிய இரண்டு அளவுகோலில், ஒன்றில் மட்டும் இரண்டு தாள், மற்றொன்றில் ஒரு தாள் என இணைக்கப்பட்டுயிருந்தது. வழக்கமாக ஒரு அளவுகோலுக்கு ஒரு தாள், ஒரு வேண்டுதல் என்பது கணக்கு. ஆனால் இவர்கள் இருவரில் ஒருவர் இரண்டு வேண்டுதலை ஒரு அளவுகோலில் இரு தாளாக இணைத்து தொங்கவிட்டுயிருக்கிறார்கள். இந்த கணக்கை சரி பார்க்க வேண்டும் என் நெஞ்சம் பதைத்தது. சற்று மனக்கணக்குடன் சகதிகளையெல்லாம் மிதித்துக்கொண்டு ஆத்தாவை நோக்கி முன்னேறினேன். ஆத்தாவின் தலைமேல் அளவுகோல்கள் எல்லாம் ஊஞ்சல்களைப் போல ஆடிக்கொண்டியிருந்தது.
ஆத்தாவும் அடித்த மழையில் குளிர்ச்சியாக இருந்தாள். அவள் விழியும், வீரிய கரிய மேனியும் நெற்றியில் உள்ள மஞ்சள் குங்குமத்தால் வழிந்தோடியது. ஒரு சிறிய சரிகை உடையும் நனைந்தும் நனையாமலும் படிந்துபோய் இருந்தது. நான் சற்று கையை உயர்த்தி சாமி கும்பிடுவது போல் பாவனை செய்து இரு தாள் அளவுகோலை இழுத்தேன். ஒன்றை உருவி படித்தேன் “தாயே, எனக்கு எப்படியாவது 10-ஆம் வகுப்பில் 500க்கு 400க்கு மேல் எடுக்கவேண்டும்.அப்படி நடந்தால் உனக்கு ஒரு சிறப்பு வழிபாடு -கன்னிமாதேவி”. இன்னொன்றையும் உருவினேன் “B B  வேண்டும்” என எழுதியிருந்தது. சற்றே குழப்பமடைந்தேன்.10-ஆம் வகுப்புக்கு அப்புறம் ‘B B’ என என்ன படிப்பு உள்ளது. சரி, ஏதோ ஒரு கூடுதல் வேண்டுதல். ஒரு வேண்டுதல் தான் நடக்கும் என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
அடுத்த அளவுகோலில் ஒரு தாளையும் உருவிப்பார்த்தேன் “சாமி, என்னை எப்படியாவது பாஸ் ஆக்கி நல்ல மதிப்பெண் தந்தால் போதும் -சரவணமீனா”. இது கொஞ்சம் ஆத்தாக்கேத்த வேண்டுதல். பலிக்கும் என எதிர்பார்த்தேன். என்னுடைய யூகம் தவறாகிவிட்டது.அவர்களியிருவரும் பன்னியிரண்டாம் வகுப்பு முடித்த  பால் முகங்கள் அல்ல. 10-ஆம் வகுப்பு முடித்த பவள முகங்கள். அதுவும் அவர்கள்  பெயர்களும் வேறு வேறு. இரண்டு அளவுகோல்களையும் அதன் தாள்களையும் சரி செய்துவிட்டு தொங்கவிட்டேன். பெரும்பாலும் இங்கே உள்ள ஒவ்வொரு அளவுகோல் வேண்டுதலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
ஒன்றிரண்டு வித்தியாசமாக இருக்கும். ஒரு முறை ஊரே சேர்ந்து “எங்கள் கிராமத்துக்கு சர்க்கார் நல்ல ரோடு போட்டுத்தர வேண்டும்” என எழுதித் தொங்கவிட்டியிருந்தார்கள். அடுத்து ஒராண்டுகள் பார்த்துவிட்டு அது நடக்காது என ஊரில் உள்ள அனைத்து சாதி மக்களும் “சாலை மறிப்பு போராட்டம்” செய்தார்கள். இப்போராட்டம் ஊடகம் முழுக்க பரவ அது செய்தித்தாள், டி.வி என வந்துவிட்டது. அதற்க்கப்புறம் நல்ல தார்சாலை போட்டுக்கொடுக்கப்பட்டது. மக்களில் பல பேர் அளவு ஆத்தாவை நம்பவில்லை என்றாலும், சில பேர் இவ்வாறு பேசிக்கொண்டார்கள் “என்ன தான், ஆத்தாவால, ரோடு போட்டுக் கொடுக்க முடியலைன்னாலும், ஊர்ல உள்ள எல்லா சாதி மக்களையும் ஒண்ணா சேர்த்து போராட வைச்சிருக்கா. அது போதும்.”
அதில் இன்னொரு சம்பவம் இது, ஊரில் உள்ள பெருந்தலைகள் மட்டும் “மழை வேண்டும்” என எழுதி வைத்தார்கள். கடந்த ஏழு வருடங்களாக பருவ மழை இல்லை. எங்கள் ஊரே கந்தக பூமியாக மாறிவிட்டியிருந்தது. அனல் காற்று தாறுமாறாக அடிக்கும். வெளியில் நடந்தால் யாரோ அனலை கைமுழுதும் அப்பிக்கொண்டு வந்து நம் மேல் எறிந்துவிட்டு ஓடிவிடுவது போல் இருக்கும். மழை கண்டிப்பாக வேண்டும். இதை எழுதி வைத்த ஐந்தே மாதத்தில் நடந்தது. அதுவும் இந்த கோடையில் நடந்தது. நல்ல மழை பெய்தது. ஆனால் பருவம் தான் தவறிவிட்டது. ஆனால் யாரோ ஒருவன் இவ்வாறு எழுதி வைத்திருந்தான் “ஆத்தா ஊர்ல மழை தண்ணி ஒண்ணும் இல்லை. எல்லாம் வறண்டு கருவாடா கிடக்கு. இதுக்கு முக்கிய காரணமே அந்த ஆந்திராக்காரர்கள் செய்த யாகம் தான். ஏழு வருடத்திற்கு முன்பு அவர்கள் குடும்ப நலத்திற்க்காக இங்கு வந்து அழகர் கோவிலில் யாகம் செய்யத் தொடங்கிய போது, மழை வரக்கூடாது என மந்திரங்களால் நிறுத்திவிட்டார்கள். பல நாள் நடந்த யாகத்தில் மழை இடையில் வந்தால் யாகம் நின்றுவிடும் என இப்படிச் செய்தவர்கள், பிறகு யாகம் முடித்துவிட்டு போகும் போது அந்த மந்திரத்தை திரும்பப்பெறவில்லை. இதனால் தான் மழை வரத்தே நின்றுவிட்டது. இதை நீ எப்படியாவது சா¢செய்ய வேண்டும்”.
இதில் எந்த செய்தியை ஆத்தா முதலில் படித்தாள் என்று தெரியவில்லை. ஊருக்கு நல்லது நடந்தது. இது மாதிரி சில வேண்டுதல்கள் அரசாங்க அலுவலகத்தில் மனு போடுவது போலவே இருக்கும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் வேண்டுதல்கள் தான் அதிகம் இருக்கும். அதில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவை:
 

  1. நல்ல மதிப்பெண் வேண்டும்.
  2. நல்ல வரன் வேண்டும்.
  3. ஆண் குழந்தை வேண்டும்.

 
இந்த “நல்ல வரன் வேண்டும்” என்பதில் “இன்ஜினியரிங் படித்த, வாட்ட சாட்டமான, அதிக சம்பளம் வாங்கக்கூடிய அழகான பையன் வேண்டும்,” நான் பெரும்பாலும் வாசித்த வாசகங்கள் இவை தான். இதில் “நல்ல” என்ற வார்த்தையே இல்லை.
நல்ல பையன் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்கள் போலியிருக்கிறது.நல்ல வேளை நான் கொஞ்சம் முன்னாடியே கல்யாணம் செய்துவிட்டேன். எனக்கு இதில் ஒரு அம்சமும் பொருந்தாது, கல்யாணமும் நடந்திருக்காது. ஒரே ஒரு பெண் மட்டும் இப்படி எழுதியிருந்தாள் “என் அப்பாவை போல் இல்லாமல் நல்ல பையனாக வேண்டும்” அழகில் சொல்கிறாளா? இல்லை படிப்பிலா? வேறு எதில் சொல்கிறாள்?  மேலும் படித்தேன் “என் அப்பாவை போல் குடிக்காமல், சிகரெட் பிடிக்காமல், சதா பேசிக்கொண்டே இருக்காமல், எதற்கெடுத்தாலும் சண்டை பிடிக்காமல் என்னை அன்பாக பார்த்துக் கொள்ளக்கூடிய பையன் வேண்டும்” என்றிருந்தது. இது கொஞ்சம் வாஸ்தவமான வேண்டுதல் தான். நானும் வாழ்த்தினேன்.
இப்படி அப்ப அப்ப வந்து யாரும் இல்லாத நேரத்தில் இந்த வேண்டுதல்களை படிப்பது என் வேலையல்ல. இதில் கன்னிமாதேவி, சரவணமீனா வேண்டுதல் மட்டும் விதிவிலக்கு. குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இந்த வேண்டுதல் அளவுகோல்கள் எல்லாம் கீழே விழுந்துவிடும். அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதுதான் என் வேலை. சுத்தம் செய்யும்போது தான் இந்த வேண்டுதல்களையெல்லாம் படிப்பேன். நான் படித்தால் என்ன? ஆத்தா படித்தால் என்ன? ஆத்தா கோபித்துக் கொள்ளமாட்டாள். அதை எழுதியவர்களுக்கு தெரிந்தால்தான் கோபித்துக் கொள்வார்கள்.
இந்த கன்னிமாதேவியின் வேண்டுதல்தான் ரொம்ப சுருக்கமாக உள்ளது. அதென்ன “B B” வேண்டும்?”. சரி, ஏதோ மிகவும் சுருக்கமான ரகசியமான வேண்டுதல் போல.
சரியாக ஒரு மாதத்துக்கு அப்புறம் கன்னிமாதேவியையும் அவள் அருகில் ஒரு பையனையும் சிரித்த முகங்களாக பக்கத்து ஊரில் உள்ள கல்யாண மண்டபவ பேனரில் பார்த்தேன். அதிர்ச்சி அடையவில்லை. 18 வயது நிரம்பாத பெண்ணை கல்யாணக் கோலத்தில் பார்க்க சகிக்கவில்லை. அவளது “பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன?”, “B B வேண்டும்” நிறைவேறியதா, என எனக்குள் இரண்டே கேள்விகள். சரி, அங்கே இருப்பவர்களிடம் கேட்டுவிடலாம் என விரைந்தேன். அன்று தான் கல்யாணம். மணப்பெண்ணையும் மணப்பையனையும் மணக்கோலத்தில் பார்த்துவிட்டு கொஞ்சம் போதையான ஆளாகப் பார்த்துக் கேட்டேன் “ஏம்ப்பா, சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க இந்த  பிள்ளைக்கு?” “இப்ப முடிக்கலைன்னா அவங்க குடும்ப மானமே இன்னும் நாலு மாசத்துல சந்தி சிரிச்சிடும்” என்றார்.
ஒரு விதத்தில் ஊகம் செய்ய முடிந்தது. அந்த பேனரையும் அடுத்த ஆறு மாதத்தில் கண்டேன். “Baby Boy Naming Ceremony” (ஆண் மகனுக்கு பெயர் சூட்டும் விழா) என மெயின் ரோட்டில் தொங்கவிட்டியிருந்தார்கள். தம்பதியர் இருவரும் இரண்டு மாத குழந்தையுடன் படு பந்தாவாக நின்றார்கள். ஒகோ, இது தான் அந்த “B B வேண்டும்” வேண்டுதலா? நிறைவேறிவிட்டது. பெரும்பாலும் அளவு ஆத்தாவை எங்கள் ஊரில் யாரும் இப்போதெல்லாம் வேண்டி அளவுகோலை சரமாரியாகத் தொங்கவிடுவதில்லை. கன்னிமாதேவி போல அக்கம் பக்கத்து ஊர் மக்கள்தான் அதிகமாக நம்பினார்கள். இந்த சம்பவத்தினால் மேலும் ஆத்தாவுக்கு பக்தர்கள் கூட வாய்ப்புள்ளது.
ஒன்று நிறைவேறிவிட்டது. இன்னொன்று? மதிப்பெண் நானூறைத் தாண்டிவிட்டாளா? வேகமாக விழா நடக்கும் இடத்தை நோக்கி ஒட ஆரம்பித்தேன். தலை தூக்காத இரண்டு மாத பாலகன் எல்லா இளநடிகர்களின் கெட்டப்பிலும் தெரு முழுக்க நின்று வரவேற்றான்.

0 Replies to “அளவாய் வேண்டுதல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.