kamagra paypal


முகப்பு » தத்துவம், மொழிபெயர்ப்பு

தத்துவத்தின் பெறுமானம் என்ன?

Bertrand_Russel

தத்துவ சிக்கல்களைப் பற்றிய இந்த அலசலின்  முடிவில் , நாம் தத்துவத்தின் பெறுமானம் என்ன என்பதையும் அதை ஏன் படிக்க வேண்டும் என்பதையும் பற்றிப் பார்ப்போம். அறிவியல் மற்றும் நடைமுறை விஷயங்களின் தாக்கத்தில் இருப்பவர்கள், தத்துவத்தை  உபயோகமில்லாத, எந்த விதமான நிச்சயமான அறிதலும் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றிய மயிர் பிளக்கும் விவாதங்கள் என்று நம்ப விழைகிறார்கள்.

தத்துவத்தைப் பற்றிய இந்த பார்வை, வாழ்கையைக் குறித்த தவறான கண்ணோட்டங்களாலும், தத்துவம் அடைய நினைப்பவற்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததாலும் எழுபவை.  இயற்பியல் அறிவியல் , தனது கண்டுபிடிப்புகளின் மூலம், அறிவியல் குறித்த எந்தவிதமான அறிவும் இல்லாத  கணக்கிலாத மக்களுக்கு உபயோகமாக இருக்கிறது இதனால் இயற்பியல் அறிவியல்,அதை கற்பவரின் உள்ளே நிகழ்த்தும் விளைவுகளுக்காக அல்லாமல், மனித குலம்  முழுவதற்கும் உள்ள நடைமுறை உபயோகத்தால் முக்கியத்துவம் பெறுகிறது. தத்துவத்திற்கு   இப்படிப்பட்ட உபயோகம் எதுவும் கிடையாது. தத்துவத்திற்கு ஏதாவது பயன்பாடு இருக்குமென்றால் அது மறைமுகமாக அதைப் படிப்பவர்கள் உள்நிகழும் மாற்றத்தின் மூலமே ஆகும்.

மேலும் தத்துவத்தின் பயன்மதிப்பு குறித்த தேடலில்  நமது மனதை நடைமுறைவாதம் என்னும் மனச்சாய்விலிருந்து விடுவிக்க  வேண்டியிருக்கிறது. உடல் சார்ந்த தேவைகளை உணர்ந்து கொள்ளும் ஒரு  நடைமுறை மனிதன், உடலுக்கு அளிக்க வேண்டிய உணவில் காட்டும் கவனத்தை மனதிற்கு அளிக்க வேண்டிய உணவில் காட்டுவதில்லை. உலகத்தின் அனைத்து மக்களுமே வறுமையின் பிடியிலிருந்தும் நோயின் பிடியிலிருந்தும் விடுவித்தப் பின்னரும் ஒரு மேலான சமுதாயத்தை அமைக்க செய்ய வேண்டியவை ஏராளம். இப்பொழுதிருக்கும் இந்த உலகிலேயே மனதிற்கான தேவைகள் குறைந்தபட்சம் உடல் தேவைகளின் அளவே முக்கியமானவை ஆகும். இந்த மனதிற்கான தேவைகளிலேயே நாம் தத்துவத்தின் பயன் மதிப்பை தேட வேண்டும்.  இதை உணர்பவர்களிடத்தேயே நாம் தத்துவம் ஒரு நேர விரயம் அல்ல என்பதையும் எடுத்துச் சொல்ல முடியும்.

தத்துவம் பிறத் துறைகளைப் போலவே அறிவை சேகரிப்பதை இலக்காக்குகிறது. தத்துவம் அடைய நினைக்கும் அறிவு பிற அறிவுத் துறைகளுக்கு ஒரு ஒருமையையும் முறைமையையும்  கொடுப்பதாகவும், நமது நம்பிக்கைகள், முன்தீர்மானங்கள் மற்றும் மனச்சாய்வுகள் குறித்த ஒரு விமர்சனபூர்வ ஆய்வில் இருந்து விளைவதாகவும் இருக்கிறது. ஆனால் தத்துவம் அதன் சிக்கல்களுக்கு இறுதியான விடைகளை அடைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நீங்கள் ஒரு கணிதவியல் நிபுணரையோ அல்லது ஒரு வரலாற்றாய்வாளரையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு துறையை சார்ந்த நிபுணரையோ, அவர்கள் அறித்துறை அடைந்த முடிவுகளைப் பற்றி கேட்டால் அவரால் நீங்கள் கேட்கும் மட்டும் விடைகளை சொல்லி கொண்டே இருக்க முடியும். ஆனால் ஒரு தத்துவவாதியிடம் நீங்கள் இதே கேள்வியைக் கேட்டால், அவர் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், பிற அறிவுத் துறைகளைப் போல திடமான முடிவுகளை அடையவில்லை என்றே சொல்வார். இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஒரு பொருளைப் பற்றிய விடைகள் கிடைக்கத் தொடங்கும் போது அது தத்துவத்தில் இருந்து விலகி ஒரு தனிப்பட்ட அறிவியல் துறையாகி விடுகிறது. உதாரணமாக தத்துவத்தின் பொருளாக  இருந்த  வான் உலகைப் பற்றிய அவதானிப்புகள் இன்று வானியல் என்ற ஒரு தனிப்பட்ட அறிவுத் துறையாகி இருக்கிறது. நியூட்டனின் ஒரு புத்தகத்தின் பெயர் ‘இயற்கைத் தத்துவத்தின் கணித விதிகள்’. இதே போல் மனித மனத்தை குறித்த படிப்பு தத்துவத்தில் இருந்து விலகி உளவியல் துறையாகி இருக்கிறது. தீர்மானமான விடைகள் கிடைக்க சாத்தியமான கேள்விகள் அறிவியலில் சேர்க்கப்பட, தற்போது விடைகள் சாத்தியமில்லை என்று கருதப்படுபவை தத்துவத்தின் பரப்பில் இருக்கிறது.

ஆனால் இது தத்துவத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்த பாதி உண்மை தான். நமது ஆன்மீக வாழ்விற்கு அத்தியாவசியமான பல கேள்விகள் மனித அறிவால் உள்வாங்க இயலாததாகவே இருக்கும். அதாவது மனித அறிவு, அதற்கு  தற்போது இருக்கும் சாத்தியங்களில் இருந்து மிக வளர்ந்து வேறு வகையான இயல்பை அடையாத வரை. இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு ஒட்டுமொத்தமான நோக்கம் இருக்கிறதா அல்லது அது வெறும் துகள்களின் ஆட்டத்தில் உருவாகி வரும் ஒரு தற்செயல் மட்டும் தானா? விழிப்புணர்வு நிலை, ஞானத்தின் தொடர் வளர்ச்சிக்கான நம்பிக்கையை அளிக்கும் வகையில் பிரபஞ்சத்தின் ஒரு நிலையான பகுதியாக இருக்கிறதா? அல்லது அது இந்த சின்ன கிரகத்தில் ஏற்ப்பட்டுள்ள ஒரு தற்காலிக விபத்து மட்டும் தானா? நன்மை தீமை என்பதற்கு இந்த பிரபஞ்ச அளவில் ஏதெனும் ஒரு பொருள் உள்ளதா அல்லது அது மனித குலத்திற்கு மட்டுமே பொருள்படும் ஒன்றா?  இந்த கேள்விகள் தத்துவத்தால்  கேட்கப்பட்டு பல தத்துவவாதிகளால் பதிலறுக்கப்பட்டிருக்கின்றன. தத்துவம் இதற்கு அளிக்கும் எந்த பதில்களுமே நிரூபணவாத உண்மைகள் அல்ல.  ஆனாலும் தத்துவத்தின் பணி இந்த கேள்விகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருப்பதும், அதற்கு பதில்களை அடைவதற்கான எல்லா வழிகளையும் பரிட்சித்துப் பார்ப்பதும், இதன் மூலம் பிரபஞ்சம் பற்றிய நமது ஊகங்களை, ஆர்வங்களை தக்கவைப்பதும் ஆகும். நாம் இறுதி விடைகள் அடையக் கூடியவற்றை மட்டும் கருத்தில் கொண்டால் இந்த ஆர்வத்தை இழந்து விடுவோம்.

சில தத்துவவாதிகள், தத்துவத்தின் மூலமாக சில ஆதார கேள்விகளுக்கு விடைகளை நிலைநாட்ட முடியும் என்று கருதுகிறார்கள். அவர்கள் மத நம்பிக்கைகளில் முக்கியமானவற்றை இதன் மூலம் நிரூபிக்க முடியும் என்று கருதுகிறார்கள். இந்த முயற்சிகளை மதிப்பிட நாம் மனித அறிவு குறித்த ஒரு கணக்கெடுப்பும் அதன் வழிமுறைகள் மற்றும் எல்லைகள் குறித்த ஒரு கருத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது போன்ற ஒரு விஷயத்தில் இறுதி தீர்ப்புகள் வழங்குவது முதிர்ச்சியற்ற செயலாகும். நாம் முந்திய அத்தியாயங்களில் பேசிய தத்துவத்தின் சிக்கல்கள் குறித்த  புரிதல் இருக்குமென்றால் நாம் மத நம்பிக்கைகளுக்கு தத்துவ நிரூபணங்கள் தேடும் முயற்சியில் இறங்க மாட்டோம். அதனால் இந்த கேள்விகளுக்கு இறுதி விடை தேடுவதை நாம் தத்துவத்தின் பயனாக கொள்ளல் கூடாது. இன்னுமொரு முறை சொல்வதென்றால், தத்துவத்தின் பயன்மதிப்பு எந்த கேள்விகளுக்கும் திடமான விடைகளை கண்டறிவதில் இல்லை.

தத்துவத்தின் பயனை நாம் அதன் நிச்சயமற்ற தன்மையில் இருந்தே தேட வேண்டும். தத்துவத்தில் எந்த அறிமுகமும் இல்லாத ஒருவன் வாழ்கையை பொது புத்தியில் இருந்து எழும் முன் தீர்மானகளில் இருந்தோ அல்லது தான் வாழும் காலகட்டம் அல்லது நிலபரப்பில் தோன்றும் நம்பிக்கைகளில் இருந்தோ புரிந்து கொள்வான். இதில் அவனது சிந்தனையின், தர்க்கத்தின் எந்த பங்கும் இருப்பதில்லை.இப்படிப் பட்டவனுக்கு இந்த வாழ்க்கை இறுதியான, வரையறுக்கப்பட்ட, வெளிப்படையான ஒன்றாக இருக்கிறது. அன்றாட பொருட்கள் எந்த கேள்விகளையும் எழுப்புவதில்லை. தனக்கு அறிமுகமில்லாத சாத்தியங்கள் உடனே நிராகரிக்கப்படுகின்றன.ஆனால் தத்துவத்தின் பாதையில் செல்லத் தொடங்கும் ஒருவன் அன்றாட விஷயங்களுக்குமே கூட அறுதியிட்ட விடைகளை கண்டுக்கொள்ள முடியாத ஒரு சிக்கலை உணர்ந்து கொள்வான். ஆக தத்துவம், அது எழுப்பும் சந்தேகங்களுக்கு  நிச்சயமான விடைகளை அளிக்க முடியாத போதும் நமது சிந்தனைகளின் வீச்சை அதிகரித்து பழக்கங்களின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்கும் சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு விஷயம் என்னவாக இருக்கிறது என்பதின் நிச்சயத்தன்மையை நீர்க்க செய்து  அது என்னவாக இருக்கலாம் என்பதன் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. அது, விடுதலை அளிக்கும் சந்தேகங்களின் பாதையில் பயணப்படாதவர்களின் இறுமாப்பு நிறைந்த கொள்கைப்பிடிவாதத்தை நீக்குகிறது. பழக்கப்பட்ட விஷயங்களை பழக்கமில்லாத கோணங்களில் காண்பது மூலமாக நம் ஆச்சிரியத்தை தக்கவைக்கிறது.

நாம் நினைத்திராத கோணங்களை நமக்கு காட்டித் தருவதோடு மட்டுமல்லாமல் தத்துவத்தின் பெறுமானம் அது ஆராயும்  விஷயங்களின் உன்னதத்திலும், குறுகலான சுயநலமான  நோக்கங்களில் இருந்து அது தரும் விடுதலையிலும் இருக்கிறது. இயல்புணர்ச்சியின் பாற்பட்டு இருப்பவன் தன் சொந்த நலன்களின் எல்லையில் கட்டுண்டு கிடக்கிறான்.  நண்பர்களும் உறவினர்களும் அவனது வரம்பிற்குள் இருக்கக் கூடும்  அதைத் தாண்டிய வெளி உலகு,  அவனது  தனிப்பட்ட ஆர்வங்களுக்கு உதவியாகவோ உபத்திரவமாகவோ இல்லாத பட்சத்தில், அவன் கவனத்தில் வருவதில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒரு குறுகிய தன்மையும் அமைதியற்ற தன்மையும்  இருக்கிறது. மாறாக தத்துவார்த்தமான வாழ்க்கை அமைதியாகவும் எல்லைகளற்றும்  இருக்கிறது. இயல்புணர்ச்சியினால் எழும்  ஆர்வங்களின் உலகு மிகச் சிறியது. அது மிக வலிமையும் விஸ்தீரணமும் உடைய  புற உலகின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த  சிறு உலகம் பெரு உலகத்தின் விதிகளால் எளிதில் கலைக்கப்பட்டுவிடும். நாம் நமது ஆர்வங்களின் எல்லையை மொத்த உலகையும் இணைத்துக் கொள்ளும் அளவுக்கு விரிவுப்படுத்தாவிட்டால்  நாம் எதிரிகளால் சூழப்பட்ட கோட்டையினுள் சிறைவைக்கப்பட்டவர்களாகவே இருப்போம். நாம் சரணடைவது நிச்சயம்.  இப்படிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இருப்பதில்லை. அது எப்போதும் ஆசைகளின் அலைக்கழிப்பிற்க்கும் நம் ஆற்றலின் எல்லைகளுக்குமான ஒரு சமராகவே இருக்கும். ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கை உன்னதமாகவும் விடுதலையடைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றால் நாம் இந்த சிறையையும் சமரையும்  விட்டு வெளியேறுவது அவசியம்.

தத்துவார்த்த சிந்தனை ஒரு வகையான வெளியேறுதல் தான். தத்துவச் சிந்தனை இந்த பிரபஞ்சத்தை நண்பர்கள் Xஎதிரிகள், நன்மைX தீமை, நல்லவர்கள்Xதீயவர்கள் என்ற இருமைகளுக்குள் தள்ளுவதில்லை. அது ஒட்டுமொத்தத்தை சார்புகள் இல்லாமல் பார்க்கிறது. தத்துவச் சிந்தனை வெளி பிரபஞ்சத்தை மனிதனோடு நிகராக்க முயற்சி செய்யாது.  எல்லா வகையான அறிதல்களுமே சுயத்தை விரிவுபடுத்தும். ஆனால் இந்த விரிவாக்கம் அது நேரடியாக நாடப்படாத போதே நிகழ்கிறது. அது அறிவுக்கான தேடல் மட்டுமே இருக்கும் ஒரு இடத்தில், தன்னால் அறியப்படுபவற்றின் தன்மைக்கேற்ப தன சுயத்தை தகவமைத்துக் கொள்ளும் போதே நடக்கிறது.உலகம் சுயத்திலிருந்து வேறுபட்டதில்லை என்ற கருத்தாக்கம், நமக்கு அன்னியமானவற்றை நம்முள் ஏற்றுக்கொள்ளாமல் செய்துவிடுகறது. அது சுய விரிவாக்கத்தின் மிகப் பெரிய தடையாகும். அவ்வாறு இருப்பது ஒரு விதமான சுய-இறுக்கம். அது அக வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாகும். சுய உறுதி உலகத்தை தன் நோக்கங்களுக்கான ஒரு வழியாக மட்டுமே காணும். அதனால் அது உலகத்தை சுயத்தை விட சிறியதாக்கி பார்க்கும். சுயத்தின் இந்த எல்லைகள் அதனினும் மேன்மையானவற்றை அதனுள் அனுமதிக்காமலாகிறது. தத்துவச் சிந்தனையில் நாம் சுயத்திற்கு அப்பாற்ப்பட்டு தான் தொடங்குகிறோம். சிந்திக்கப்படுபவற்றின் மேன்மை சுயத்தையும் விரிவடையச் செய்கிறது. பிரபஞ்சத்தின் முடிவின்மையை அவதானிக்கும் மனம் அந்த எல்லையின்மையின் ஒரு துளியை தன்னுள் அடைகிறது.

அறிவு என்பது சுயமும் சுயமல்லாததும் கொள்ளும் ஒரு இணைவு. எல்லா இணைவுகளையும் போலவே இது ஆதிக்கத்தால் சிதையக் கூடியது. பிரபஞ்சத்தை நம் சுயத்திற்க்குள் பொருந்துமாறு குறுக்குவது என்பது ஒரு வகையான ஆதிக்கம் தான். தத்துவத்தின் பரவலான ஒரு தரப்பு மனிதன் மைய பார்வையை முன்னிறுத்துகிறது. உண்மை என்பது மனிதனால் உருவாக்கபடுவது என்றும் காலம் வெளி போன்றவை மனதின் தன்மைகளேயாதலால்  மனத்தால் உருவாக்கப்படாத எதுவும் அறியக்கூடுபவை அல்ல என்றும் அது கருதுகிறது. இந்த தரப்பு உண்மைஎன்றால், தத்துவ  சிந்தனை அதன் எல்லா வகையான பயன்மதிப்பையும் இழந்து விடுகிறது. ஏனென்றால் அது சிந்தனையை  சுயத்துடன் விலங்கிட்டுவிடுகிறது.இந்த தரப்பு, அறிவு என்று அழைப்பது சுயம்,சுயம் அல்லாதவற்றுடன்  உருவாக்கிக் கொள்ளும் இணைவு அல்ல. மாறாக பழக்கங்கள் ஆசைகள் மற்றும் மனச்சாய்வுகளால் நமக்கும் நமக்கு வெளியே இருப்பவற்றிற்கும் ஒரு திரையை உருவாக்கி கொள்வது.  இந்த தரப்பை ஏற்றுக் கொள்ளும் ஒருவன் தன் சொல் செல்லுபடியாகாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியே செல்லாதவனுக்கு ஒப்பாவான் .

உண்மையான தத்துவச் சிந்தனை சுயமல்லாதவற்றின் விரிவை ஏற்றுக்கொள்ளும். தன்னால் சிந்திக்கபடுபவற்றை விரிவாக்கி நிறைவைக் காணும். சிந்திக்கப்படுவத்தின் விரிவால்  சிந்திப்பதுவும் விரிவை அடைகிறது.  பழக்கம், சுயநலம், ஆசை போன்ற சுயம் சார்ந்த எதுவும் இந்த சிந்தனையை பலவீனப்படுத்தி அறிவு தேடும் அந்த இணைவைத் தடுக்கிறது. அறிபவனுக்கும் அறிபடுபொருளுக்கும் ஒரு பிளவை உண்டாக்கி இந்த சுயம் சார்ந்த பொருட்கள் அறிவை சிறையிட்டு விடுகின்றன. விடுபட்ட அறிவின் பார்வை, கடவுளின் பார்வையைப் போல இடம் பொருள் அற்று, எதிர்பார்ப்புகளும் பயங்களும் அற்று, வழமையான நம்பிக்கைகளும், மரபான முன்தீர்மானங்களும் அற்று, அமைதியாக, பற்றில்லாமல், அறிவுக்கான விழைவு மட்டுமாக, சுயச்சார்பு இல்லாத அறிவாக ,சுத்தமான அறிதலாக மட்டும், மனிதனால் எட்டக்கூடிய அதிகபட்ச  சாத்தியங்களைக் கொண்டதாக இருக்கும்.அதனால் தளைகளற்ற மனம்,புலன்களால் அறியப்படும் புலன் சார்ந்த உண்மைகளை விட  அருவமானதும் பிரபஞ்சப்பொதுமையானதும் ஆன அறிவை தேடும். ஏனென்றால் புலன் சார்ந்த உண்மையில் புலன்களின் ஊடுருவல் நிகழ்ந்து விடுகிறது. அது நமக்கு அளிப்பதை விடவும் திரிப்பது அதிகம்.

விடுபட்ட, சார்புகளற்ற அவதானிப்பிற்கு பழகிய மனம் தனது செயல்களிலும் உணர்ச்சிகளிலும் அந்த சார்பற்ற தன்மையையும் விடுபட்ட தன்மையையும் எடுத்துச் செல்லும்.  தனது நோக்கங்களையும் ஆசைகளையும் உலகத்தில் இருந்து துண்டுபட்ட தனித்த நிகழ்வாக பார்க்காமல் அதை  ஒட்டுமொத்தத்தின் ஒரு பகுதியாக பார்க்கும். அறிதலில் சார்பற்ற தன்மையை பேணும் மனம் செயல்களில் நீதியாகவும், உணர்வுகளில் விரும்பத்தக்கனவற்றிற்கும் போற்றத்தக்கனவற்றிற்கும் ஆன சார்புகளை பேணாமல்,  உலகு தழுவிய அன்பாகவும் பரிணமிக்கிறது. இதனால் தத்துவச் சிந்தனை சிந்திப்பவற்றை மட்டும் பெரிது படுத்துவதில்லை, அது நம் செயல்களையும், பிரியத்தையும் கூட மேன்மைப்படுத்துகிறது. அது நம்மை உலகின் குடிமகன்களாக ஆக்குகிறது. இந்த உலகக்குடியுரிமையில் மனிதனின் உண்மையான சுதந்திரமும், குறுகிய எதிர்ப்பார்ப்புகள் மற்றும் பயங்களில் இருந்து விடுதலையும் அடங்கி இருக்கிறது.

தத்துவத்தின் பெறுமானத்தை குறித்த நமது விவாதத்தை இப்படி தொகுக்கலாம்: தத்துவப் படிப்பு  நிச்சயமான விடைகளுக்காக மேற்கொள்ளப் படுவதில்லை, மாறாக அது எழுப்பும் கேள்விகளுக்காகவே பயிலப்படுகிறது. இந்த கேள்விகள், சாத்தியமானவற்றைக் குறித்த நம் கருத்தாக்கங்களை விரிவாக்குகிறது. நமது  அறிவார்ந்த கற்பனையை வளப்படுத்துகிறது. மனதின் பரீசீலிக்கும் தன்மையை தடுக்கும் மூர்க்கமான தீர்மானங்களை குறைக்கிறது.எல்லாவற்றிற்க்கும் மேலாக பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை சிந்தனை செய்யும் மனதை மேன்மை அடையச் செய்து அது பிரபஞ்சத்தினோடு ஒன்றாகும் தன்மையை நோக்கி நகர்த்துகிறது. இதுவே அதன் ஆகச்சிறந்த பெறுமானமாகும்.

மூலம் : பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின்(Bertrand Russell)  Problems of Philosophy என்ற புத்தகத்தில் உள்ள Value of Philosophy என்ற அத்தியாயத்தின் மொழியாக்கம்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.